Thursday, April 28, 2011

இலை துளிர் காலத்து உதிர்வுகள்…. 04


அந்த பேரிரைச்சல் தமிழர்களின் போராட்ட வலுவின் புதியதொரு உத்வேக பரினாமமாக கேட்டு, தென்னிலங்கையை நடுங்கவைத்தது. ஜூலை மாதம் 05ஆம் நாள் 1987ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தின் மூலம் ஈழத்தமிழரின் போராட்ட வலு உச்சம் கண்டுள்ளது என உலகம் வியந்துபார்த்தது எவரும் மறுக்கமுடியாத உண்மை ஒன்றே.

மறுமுனையில் இந்தியா, இலங்கையினை தனது வலைக்குள் விழவைப்பதற்கான திட்டங்களை செவ்வனே தீட்டிக்கொண்டிருந்தது. அதேவேளை அரசியல் தந்திர சாலியான ஜூலியன் ரிச்சர்ட் ஜெயவர்த்தன என்ற இயற்பெயர் கொண்ட அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அந்த வலையினை வெட்டி தன் வலைக்குள் இந்தியாவையும், தமிழ் போராட்ட குழுவையையும் ஒருமிக்க முடிய சதித்திட்டங்களை தீட்டிக்கொண்டிருந்தார்.

சரி… என் பார்வைக்கு வருகின்றேன்…
இந்த சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கும்போது திடீர் என மாலை மங்கும் பொழுதில் ஒருநாள் யாழ்நகரின் கிழக்கு பகுதியில் போர் விமானங்கள், ஹெலி கொப்ரர்களின் சஞ்சாரம் திடீர் என்று அதிகரித்தது. இரண்டு தரப்பினரிடையிலான துப்பாக்கிச் சூட்டு பரஸ்பர வேட்டுக்கள் அந்த பகுதியில் இருந்து ஒலித்துக்கொண்டிருந்தது. அதே பிரதேசத்தை நோக்கி சியாமா செட்டி விமானங்கள், அவ்ரோ விமானங்கள், இரண்டு ஹெலிகொப்ரர்கள் என அதே பரப்பினை மையமிட்டே இடைக்கிடை தாக்குதல் நடத்தி அந்த பகுதியில் சஞ்சரித்துக்கொண்டே இருந்தது.

அந்த பகுதியில் அப்போது இருந்த ஸ்ரீ லங்கா இராணுவத்தின் நாவற்குளி இராணுவ முகாமை அண்டிய பகுதியில் துருப்பு காவி விமானம் ஒன்று பழுதடைந்த நிலையில் தரைதட்டியுள்ளதாகவும், அதை அழிப்பதற்கு போராளிகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், அதை எதிர்த்தே இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் செய்திகள் கசிந்தவண்ணம் இருந்தன.
அந்த நாளில் இருளின் மையத்தில் விமானங்களின் விளக்குகளின் அணிவகுப்பு இப்போதும் என் கண்களுக்குள் நிற்கின்றன.
இருந்த போதிலும், வான்படையினரின் உதவியுடன், இராணுவத்தினர் போராளிகளின் எதிர்த்த தாக்குதல்களை சமாளித்தவண்ணம் விமானத்தை பாதுகாப்பாக நாவற்குளி முகாமுக்குள் இழுத்து சென்றுவிட்டனர்.

இவ்வாறான சம்பவங்களுடனேயே ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் கறுப்பாகவே இருக்கும் ஜூலை மாத முற்பகுதி சென்றுகொண்டிருந்தது.
இந்த நிலையில் மறுமுனையில் இந்தியாவுடன் முரண்டு பிடித்துக்கொண்டிருந்த இலங்கை அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவைநோக்கி பல் இழிக்க ஆரம்பித்தது. இந்த வேளையில் அப்போதைய செய்திகளில் முதற்கட்டமாக இந்தியாவின் சிறப்பு தூதுவர்கள் வருகை தரவுள்ளதாக செய்திகள் வரத்தொடங்கின.

பூரி, குப்தா வருகை
இந்தியாவின் உதவிப்பொருட்களை இப்போது இலங்கை அரசின் உதவியுடன் யாழ்ப்பாணம் கொண்டுவருவதாகவும், அதேவேளை இந்தியாவின் முதற்கட்ட தூதுவர்களாகவும், போராளிகள், மற்றும் அரச தரப்பினருடன் பேச்சுக்களை நடத்த
கர்த்தீப் பூரி, கப்டன் குப்தா அகியோர் இந்தியாவால் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் சென்று மக்கள் கருத்துக்களை கேட்டனர் என இந்திய செய்திகள் சொல்லின.

உண்மையில் அவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் சென்றனர்தான். ரீயூசன் முடிந்து வீட்ட போகும்போது நல்லூருக்கு முன்னால் என்னடா சனம் என்று தண்ணி தொட்டியில் ஏறி நின்று எனது கண்களால் இந்த புண்ணியவான்களை பார்த்திருகின்றேன்.
யார் வந்தாலும் நம்பி வளவளக்கிறதுதானே எங்கட சனத்தின்ட பழக்கம், சில அம்மாமார், மொழிதெரியாதை இவையிட்ட, “அப்பனே ராசா நீங்கள்தான் எங்களை காப்பாத்தவேணும்!!! ஷெல்லால அடித்து சாக்கொல்லுறாங்கள், பொம்மறாலை வானத்திலை நிண்டு அடித்து கொல்லுறாங்கள், கடலிலை வந்து நின்று அடிக்கிறாங்கள், பட்டினி போடுறாங்கள், எத்தனை பேர ராசா நாங்கள் காவு கொடுத்துவிட்டு நிற்கிறம் என்று சொல்லி ஆழதிச்சினம்”.

பூரியும், குப்தாவையும் சும்மா சொல்லக்கூடாது, சீரியஸாக படு சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு அந்த அம்மா மாரை ஆறுதல் படுத்திவிட்டு லான்ஸர் காரிலை ஏறி கிழம்பினார்கள்.

மறுநாள் இலங்கை இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்ய சம்மதித்துள்ளதாகவும், இந்திய பிரதமர் ராஜீவின் பணிப்பின்பேரில் போராட்டக்குழுத்தலைவரை டில்லிக்குவர அவர் அழைத்துள்ளதாக இவர்கள் இரண்டுபேரும் தெரிவித்துள்ளதாகவும் செய்தி இதழ்கள் தெரிவித்தன.

சிங்களவன் பயந்திட்டான் கண்டியோ! இந்தியா எண்டால் சும்மாவே!! பாரான் என்ன நடக்கப்போகுதென்று, ஏதோ இந்தியா நல்ல ஒரு முடிவை தரப்போகுது எண்டது சந்தோசம்தான்..என்று இப்போது போல அப்போதும் எங்கட பேய்த்தரவழிகள் கதைச்சுக்கொண்டுதான் இருந்திச்சுதுகள்…

இலைகள் உதிரும்…

9 comments:

ம.தி.சுதா said...

அப்போது ஆரம்பித்த ஓட்டம் இன்னும் விடுவாதாயில்லையே.. அண்ணா..

shanmugavel said...

சிறப்பாக செல்கிறது ஜனா! தொடருங்கள்.

சக்தி கல்வி மையம் said...

கரக்டா சொல்லறீங்க ஜனா .. தொடருங்கள்..

Unknown said...

மதி சொன்னது சரிதான்..ம்ம்
பதிவுலகுக்கு வரவேற்கிறேன் மீளவும் ஹிஹி

உணவு உலகம் said...

தமிழ் மணத்தில் ஏழாவது ஓட்டை போட்டுட்டேன். தொடருங்கள்.

நிரூபன் said...

என் கமெண்ட்ஸ் எல்லாம் ஸ்பாம் பெட்டியினுள் போய் விட்டது சகோ.
அதனை வெளியே எடுத்து போடுங்க சகோ.

தனிமரம் said...

இந்தக்கால கட்டம் எம் வாழ்வின் ரணங்களை புரட்டிப்போட்ட வடுக்கள் தூதுவர்கள் மக்களிடம் கேட்டவையை  மந்திர ஆலோசனையில் செவிமடுத்திருந்தால் எத்தனை இழப்புக்களை தமிழர் தாயகம் தவிர்த்திருக்கும்! தொடருங்கள் கூடவருகிரோம் !

Unknown said...

வரலாற்று நிகழ்வுகளை தெரியவைத்திருக்கிறீர்கள். நிகழ்காலத்தில் என்ன சூழ்நிலை என்ற எதார்த்தம் முகத்தில் அறைவதால் வருத்தம் தான் மேலிடுகிறது.

maadhumai said...

Hi Jana, these four parts of your memories and experiences are truly worthy and well placed. Recollection of our memories in Eelam is really a concern and poignant. Truly written memory is a literature. Publishing our experiences in Eelam as well in English is a need. Pl continue writing these ninaivukal. Good luck.

LinkWithin

Related Posts with Thumbnails