Tuesday, March 8, 2011

ஹொக்ரெயில் - 08.03.2011

பெண் எனப்படுபவள்!

பெண்மை போற்றும் நபர்களும், பெண்ணியம் கண்ட தேசங்களும் எப்போதும் உயர்வான நிலையில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கும்.
ஒருவகையில் இன்றைய நாகரீக உலகில் ஆண், பெண் என்ற சொற்பத பேதமே தவறானது, தடை செய்யப்படவேண்டியதாக இருக்க வேண்டும் என்பது முற்போக்குச்சிந்தனையாளர்களின் வாதமும்கூட.
இந்த நிலையில் இந்த உலகத்தில் ஒரு ஜீவன் கருத்தரிக்கும்போதில் இருந்தே அந்த ஜீவனின் இறுதி மூச்சுவரை பெண் எனப்பட்டவள், பல வடிவங்களில் அந்த ஜீவனுடன் ஒன்றித்து இருக்கின்றாள்.
தாயாய், குருவாய், பாட்டியாய், சகோதரியாய், பெரியன்னையாய், சிற்றன்னையாய், அத்தையாய், மாமியாய், மைத்துனியாய், நண்பியாய், காதலியாய், மனைவியாய், மகளாய், மருமகளாய், பேர்த்தியாய் என்று ஒரு ஜீவின் அத்தனை செல்வாக்குச்செலுத்தும் உறவுகளிலும் பாசத்துடன் கூடிய முதன்மையானவளாய் அவளின் பங்கு நிறைந்திருக்கும்.

பெண் என்ற பதத்தையே போகப்பொருளாயும், காம நினைவாகவும் சிந்திக்கும் வக்கிரமான சிந்தனைகளை இன்றைய உலகின் சினிமாக்களும், இன்னபிறவும் விசங்களாக தூவி விட்டிருக்கின்றன.
பாராளுவதில் இருந்து, மண்டலப்பயணங்கள்வரை இன்று பெண்கள் தங்களை நிரூபித்துக்காட்டியுள்ளது இத்தகைய சிந்தினைகளுக்கு வைக்கப்படும் தீயாக இருக்கட்டும்.
“ஆண், பெண் என்ற பேதங்கள் பொது இடங்களில் கழிப்பறைகளில் மட்டும் இருக்கட்டும்”
சகோதரிகள் அனைவருக்கும் ஹொக்ரெயிலின் மகளிர் தின வாழ்த்துக்கள்.

பதிவர் மதி.சுதாவின் பிறந்தநாள்.

இன்று பதிவர் மதி.சுதாவின் பிறந்தநாள். (எத்தனையாவது என்று அடித்தும் கேட்பாங்க சொல்லிடாதீங்கண்ணே! என்று சொல்லியுள்ளதால் அதை சொல்லலை)
குழந்தை மனம் உள்ள அவர் என்றும் குழந்தையாகவே குணத்தில் இருந்து, வாழ்வில் ஜெயித்துக்காட்டவேண்டும். நிச்சயம் ஜெயிப்பார்.

இன்றைய அவரது பிறந்த நாளினை முன்னிட்டு, அனைத்து பதிவர்கள் சார்பாகவும்,
பதிவுப் புயல்” என்ற சிறப்பு பட்டத்தை சுடச்சுட அவருக்கு வழங்குவதில் ஹொக்ரெயில் பெருமைப் பட்டுக்கொள்கின்றது.

இந்தவாரக் குறும்படம்

கண்டிப்பாக பாருங்க..அம்மாவை மிஸ் பண்ணிடாதீங்க..

வடக்கின் பெரும்சமர்!

“பட்டில் ஒவ் த நோர்த்” என்று இலங்கையில் சிறப்பிக்கப்படும், வடக்கின் பெரும்போரான மாபெரும் துடுப்பாட்டப்போட்டி எதிர்வரும் 10,11,12ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அதாவது.. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் பரி.யோவான் கல்லூரிக்கும் இடையிலான பாரம்பரியமிக்க “பிக் மச்” என்று சிறப்பிக்கப்படும் துடுப்பாட்டப்போட்டியே இது.
105ஆவது தடவையாக இம்முறை இடம்பெறும் இந்தப்போட்டிகளை சிறப்பாக நடாத்துவதற்கு சகல தரப்பினரும் தயார் செய்யப்பட்டுள்ளனர்.
இருந்தபோதிலும், முன்னைய காலங்களைப்போல இந்தப்போட்டிக்கான மாணவர்களின் எழுச்சிகளை தற்போது காணமுடிவதில்லை. முன்னைய காலங்களில் இந்தப்போட்டிகள் ஆரம்பிபதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் தங்கள் தங்கள் கல்லூரி கொடிகளை பல வாகனங்களில் ஏந்திய வண்ணம், எழுச்சியுடன் வீதி வலம் வருவதை அவதானிக்கலாம். இத்தகைய நிலை தற்போது அடியோடு மறைந்துபோயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை 11ஆம் தேதி மிக நீண்ட கால இடைவெளிக்குப்பின்னர் யாழ்ப்பாண மத்திய கல்லூரி பழைய மாணவர்களுக்கான அழைக்கப்பட்ட “சென்றல் நைட்ஸ்” இரவு விருந்து இம்முறை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்தவார வாசிப்பு
தாளப்பறக்காத பரத்தையர் கொடி

பிரபஞ்சன் என்ற படைப்பாளியின் எழுத்துக்கள் அறிமுகமாவதற்கு முன்னமே, அந்தப்படைப்பாளியே எனக்கு அறிமுகமாயிருந்தார். சென்னையில் இருந்த காலத்தில் “தமிழ் ஸ்ரூடியோ டாட் காம்” அமைப்பினரின் குறும்பட வட்டம் நடத்திய குறும்பட, இலக்கிய கூட்டம் ஒன்றில் அவர் அறிமுகம் கிடைத்தது.
அதன் பின்னராகவே அவரது எழுத்துக்களை தேடிவாசிக்கத்தொடங்கினேன்.
இப்போது வந்திறங்கிய புத்தகங்களில் இரண்டாவதாக நான் கைவைத்திருக்கும் புத்தகம் பிரபஞ்சனின் தாளப்பறக்காத பரத்தையர் கொடி.
எனக்கு பிரபஞ்சனிடம் இருக்கும் பெரும் ஆச்சரியம் என்ன என்றால், ஒரு விடையத்தின் மேல் எல்லைகடந்த அறிவும், விடையப்பரப்பும் எழுத்துக்களில் காணப்படுவதும், அவற்றை மிக இயல்பான நடையில் கொண்டு செல்வதுமே.
சில கட்டுரைகளில் நாம் அறிந்த, படித்த சில விடையங்களைக்கூட நாம் சிந்திக்காத ஓர் கோணத்தை நோக்கி எம்மை பிரமிக்க வைத்துவிடுகின்றார் பிரபஞ்சன்.
அன்றாடம் நாம் கற்ற அறிந்த, அனுபவ ரீதியான கட்புல, செவிப்புல நுகர்வுகளைக்கூட எழுத்துக்களில் எப்படி இலாவகமாக கொண்டுவருவது என்பதை கண்டிப்பாக பிரபஞ்சனிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.


மியூஸிக் கபே
புத்தம் புது மலர்கள் நாங்கள் அதை கிள்ள நினைக்கக்கூடாது!
மகளிர் தின சிறப்பு பாடல்.

ஜோக் பொக்ஸ்
ஒரு ஊரில் ஒரு பூசகர் இருந்திருக்கின்றார். அந்த ஊரில் அவர் மட்டும்தான் பூசகர் என்பதனால் அவர் படு பிஸியான ஆள். பல கோவில்களிலும் அவரே பூசகராகவேறு இருந்திருக்கின்றார். குறிப்பிட்ட ஒரு கோவிலில் மட்டும் தர்மகத்தா படு ஸ்ரிக்ட்டான ஆள். நேரம் தவறக்கூடாது. ஒரு கிருத்திகம் செய்ய பூசகர் சென்றிருக்கின்றார், குறிப்பட்ட அந்த கோவிலுக்கு பூசைக்கு செல்லவேண்டிய நேரம் அண்மித்து விட்டது. உடனடியாக வீடுவந்து அவசரமாக குளித்துவிட்டு வேட்டியை உடுத்திக்கொண்டார் பூசகர், வேண்டிக்கரை பின்பக்கமாக அமைந்துவிட்டது. நேரம் போய்க்கொண்டிருந்தபடியால் பறவாய் இல்லை என்று மனதுக்குள் நினைத்துவிட்டு ஜிப்பாவை அணிந்துகொண்டார் அவசரமாக. அதுவும் பின்பக்கமாக போய்விட்டது. பறவாய் இல்லை முதலில் கோவிலுக்கு சென்றுவிடவேண்டும் என்ற அவசரத்தில் ஓடிவந்து, தனது “லம்பிரட்டா” ஸ்கூட்டரை உதைந்துகொண்டு உச்ச வேகத்தில் சென்றுகொண்டிருந்தார் பூசகர். ஒரு வளைவில் ஒரு பெரிய பஸ் வர, பலன்ஸ் தவறி அருகில் இருந்த வயல் வரம்புடன் மோதி அதிர்ச்சியில் மயக்கமடைந்துவிட்டார் அவர்.
இதை கண்டு வயலிலே வேலை செய்துகொண்டிருந்த ஊர்மக்கள் கூடிவிட்டனர். பூசகரை ஓடிவந்து பார்த்த மக்கள்! பெருங்குழப்பத்துடன் பார்த்தனர்.
அதில் ஒருவர் “அடி பட்டதும் ஐயாவின் தலை திரும்பிவிட்டது” என்று சொல்லி, பூசகரின் தலையை மற்றப்பக்கம் திருப்பிவிட்டார்.. அட..பேப்பயலுகளா என்றவாரே பூசகர் வானத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார் ஆவியாக.

Sunday, March 6, 2011

இந்தவாரப் பதிவர் - திரு.அனுதினன்

பதிவர் அனுதினன் இலங்கைப்பதிவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர் என்றுதான் சொல்லிக்கொள்ளத்தோன்றும். அதாவது யதார்த்தபூர்வமான ஒரு ஆழமான பார்வையும், முக்கிமான விடையங்களை நாசுக்காக உறைக்கும் விதம் சொல்லும் தரமும் இவரது எழுத்துக்களில் வெளிப்படையாக தெரிந்து கொள்ளலாம்;.
தன்னைச்சுற்றியுள்ள சமுகத்தை மிக நிதானமாக அதேவேளை மிக ஆழமாக உற்றுநோக்கும், ஒரு கல்வி சார் இளைஞனின் எண்ணங்களை பார்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக அனுதினனின் தளத்திற்கு ஒருமுறை சென்றுவரவேண்டும்.

இலங்கையின் உதிக்கும் திசையில் உள்ள திருகோணமலையினை சொந்த இடமாகக்கொண்ட சுதந்திரநாதன் அனுதினன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மாணவன். நாளைகள் என்ற பாதையினை வளமானதாக்க இன்றே அந்தப்பாதைக்கு நிதானமான அத்திவாரங்களை முறையாக போட்டுக்கொண்டு முன்னேறிச்செல்ல திட்டமிடும் பண்புகளை அவரிடம் காணக்கூடியதாக உள்ளது.
அதேவேளை பழகுவதற்கு மிக இயல்பானவர்.

வலையுலகில் வந்து சிக்கல்களை எதிர்கொண்டவர்களின் பட்டியலில் அனுதினனுக்கும் இடம் உண்டு. ஆம்… அவரது வலைப்பதிவுகூட கையப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இருந்தாலும் தொடர்ந்தும் மீண்டும் தனக்கான வலைமனையினை உருவாக்கி இன்றும் தொடர்ந்தும் எழுதிவருகின்றார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலகலப்பு, விளையாட்டுக்கள், கவிதை, சிறுகதை, சில மாறுதல் சிறுகதைகள், சினிமா விமர்சனங்கள், இசை, இசை விமர்சனங்கள், அவதானிப்புக்கள், தகவல்கள், என்று பயணித்துக்கொண்டிருந்த அனுதினனின் எழுத்துக்கள் அவரது பல்கலைக்கழக ஆரம்பத்தை தொடர்ந்து சமுகத்தை நோக்கிய ஆழமான பார்வையினை உள்ளடக்கத்தொடங்கிய புதிய பாதை ஒன்றை எடுத்துக்கொண்டதை நன்றாக அவதானிக்க முடிகின்றது.

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றபோதிலும், சில சமுக பதிவுகளில் அவரது கருத்துக்கள் ஆணித்தரமானவையாக இருப்பதும், வரவேற்ககக்கூடியதாக இருப்பதும் பாராட்டப்படவேண்டிய ஒன்றாகவே உள்ளது.
அதேவேளை கடந்த வருட இறுதிப்பகுதியில் வெற்றிகரமாக இடம்பெற்ற இலங்கை பதிவர்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டி, மற்றும் பதிவர் சந்திப்பு என்பவற்றின் ஏற்பாட்டு குழுவின் பிரதானமானவராக இருந்து மிகத்துடிப்புடன் அனுதினன் செயற்பட்டு அனைத்து தரப்பினரையும் கவர்ந்து கொண்டது அவரின் ஆளுமையின் ஒரு எடுத்துக்காட்டே.

அனுதினன் இலங்கை பதிவர்கள் மட்டத்தில் அனைவருடனும் நல்லுறவை பேணிவருபவர் என்பதும், அனைத்து தரப்பினரும் அனுதினன்மேல் ஒரு சிறப்பான மதிப்பு வைத்திருப்பதும் இன்றைவரை ஆச்சரியமாகவே உள்ளது.

தற்போது உலகக்கிண்ணப்போட்டிகள் பற்றிய பதிவுகள் இப்போது அனுதினனை மீண்டும் ஒருமுறை அதிசயமாக பார்க்க வைக்கின்றது.
ஒருவகையில், ஒரு சிறப்பான ஆரூடம் கூறுபவராகவும், ஆட்டநிர்ணயவாளராகவும்!
அவர் உள்ளதும், பெரும்பாலும் அவரது ஆரூடங்கள் பலித்துக்கொண்டிருப்பதையும் கண்டு பலர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

அனுதினனின் எழுத்துக்களில் சில ரணங்களும் உண்டு. கொஞ்சம் அவர் எழுதிய பதிவுகளில் ஒன்றான இதை படித்துப்பாருங்கள்.

நான் ஒரு விற்பனைப்பொருள்


நான் ஒரு இலங்கைத்தமிழன்.




இந்த உலகத்தின் மிகக்கிராக்கி உடைய விற்பனைப்பொருள் நான்தான்.
என்றுமே நான் ஒரு விற்பனை பொருளாக இருப்பதை நினைத்து கவலை கொண்டதே இல்லை.




ஆனால், நான் எங்கே நாடப் பண்டமாக போவேனோ! என்று என் விற்பனையாளர்கள்தான் கவலை கொள்ளுவது உண்டு!
என் விற்பனையாளர்களும், கொள்வனவாளர்களும் உலகெங்கும் இருக்கிறார்கள்.




என்றுமே, இதற்க்காக நான் கவலைப்பட்டதே இல்லை ஒன்றை தவிர,
அது, என்னை சாந்த சிலரே வெளிநாட்டு இலங்கைத் தமிழர் என்று என்னை விற்பனை செய்வதைத்தான்.


ஆனால், இன்று அதையும் சகித்து கொள்ள பழகி கொண்டேன். ஆனால், எனது எல்லா விற்பனையாளர்களுக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்:-






“என்னிடம் இப்போது எதுவுமே இல்லை. நீங்கள் எனக்காக என்ற போர்வையில் கேட்பது இனியும் கிடைக்கும் என்ற எண்ணமும் இல்லை! அதனால், இப்படி கேட்டு கேட்டே இருக்கின்ற ஒன்றையும் இழக்க வைத்து விடாதீர்கள்.”



ஆனால்,





என்றாவது ஒருநாள் இந்த நிலை மாறும், அப்போது என்னையும் ஒரு விற்பனையாளனாக மாற்றிவிடாதீர்கள்!!

சரி..இந்த வாரப்பதிவராக கொலுவீற்றிருக்கும் பதிவர் அனுதினனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் புதியவை அல்ல.. பதிவர்கள், மருதமூரான், வரோ ஆகியோரிடம் கேட்கப்பட்ட அதே மூன்று கேள்விகள்தான்.
அந்த மூன்று கேள்விகளையும், அதற்கான அவரது பதிலையும் பார்ப்போம்.

கேள்வி :உங்களின் பதிவுலகப் பயணம் எப்படி ஆரம்பித்தது?

அனுதினன் :வாசகனாக இருந்து பிறகு பதிவுலகை எழுதுபவனாக மாறினேன். உயர்தர கல்வி பயிலும் காலங்களில் இணையத் தேடலில் ஈடுபடும்போது வலைப்பதிவுகள் எனது தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு ஊடகமாக இருந்தது. பிறகு, எம்மவர்கள் பலரும் எழுதும் வலைபதிவுகளை பார்த்து எழுதும் எண்ணம இருந்தாலும், உயர்தர கல்வியை முடித்து நீண்ட நாட்களின் பின்பு சக வலையுலக நண்பர் எரியாத சுவடிகள் பவனின் உதவியிடோன் வலையுலக வாழ்வு ஆரம்பித்தது. ஆரம்பத்தில், எழுதுவதில் இருந்த ஆர்வம் அதிலும் குறிப்பாக எனக்கு இருந்த அதிகளவிலான ஓய்வு நேரங்கள் என்பவை காரணமாக பதிவுகளை எழுதி இருந்தாலும், இடையில் என்ன காரணம் என்றே தெரியாமல் என் வலைத்தளம் திருடபட்டு அளிக்கபட்ட பின்பு, எழுதுவதில் இருந்த ஆர்வம முன்பு போல வருவது இல்லை. பிறகு ஓய்வு நேரங்களும் குறைந்த காரனத்தினால் பதிவுகளும், குறைந்து விட்டன. ஆனாலும், பதிவுகளை வாசிக்கும் ஒரு வாசகனாக எண்ணமும் இருக்கிறேன்.

கேள்வி: இலங்கை பதிவர்களுக்கும் உங்களுக்குமிடையிலான உறவு எப்படியிருக்கிறது. ஏதாவது முக்கியமாக குறிப்பிட விருப்புகிறீர்களா?

அனுதினன் : ஓ.... நிறைய நண்பர்களை உருவாக்கி தந்த இடம் இது. தோழமையையும் தாண்டி அண்ணா என்ற உரிமையில் அழைக்க கூடிய வகையில் பதிவுலகத்தில் இருக்கும் பதிவர்களுடன் என் உறவு நெருக்கமானது. ஆனாலும், பல புதிய பதிவர்களுடன் எனக்கு அவ்வளவு பெரிய நெருக்கம் அல்லது அறிமுகம் இல்லை என்பதை வெளிப்படையாகவே சொல்லி கொள்ளுகிறேன். அதற்கு காரணம், அவர்கள் பதிவுகளை வாசிப்பதுடன் நிறுத்தி கொள்ளுவதும் ஒரு காரணம், அடுத்து கடந்த காலத்தில்
சக பல பதிவர்களுக்கு ஏற்பட்ட அனுபவகளை கொண்டு, நான் எனக்கான ஒரு சில எல்லைகளிலேயே இருக்க விரும்பியமையும் ஒரு காரணமாகும்.ஆனால், அறிமுகமான நண்பர்களுடன் பழக தவறுவதுமில்லை.

புதிய அனுபவகளை தந்த இந்த பதிவுலகத்தில் இருப்பவர்களுக்குள் இருக்கும் சண்டைகள் படிப்படியாக குறைந்து நான் அறிமுகாமான சமயத்தில் பதிவுலகம் எப்படி இருந்ததோ, அப்படியான பரஸ்பர நிலைக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

கேள்வி: பதிவுலகம் தவிர்ந்து ஓய்வுநேரங்களில் எவற்றில் ஆர்வம் காட்டுகின்றீர்கள்?

அனுதினன் : பதிவுலகமே இருக்கின்ற ஓய்வு நேரத்தில்தான் செலவு செய்கிறேன். அதையும் தாண்டி, அடுத்தது என்றால், விளையாட்டு + சினிமா தான். எனது ஓய்வு நேரங்கள் ஏனையோரை போல எனக்கு பயனுள்ளதா? என்று எனக்கே தெரிவது இல்லை. கிடைக்கும் போது எல்லாம் கிரிக்கெட், சினிமா என்று இருக்க விரும்பும் சராசரி மனிதன் நான். இந்த கிரிக்கெட், சினிமா இது எதிலுமே வரையறை வைத்து கொண்டது இல்லை. கனடா போன்ற சிறிய அணிகள விளையாடினாலும் ரசிப்பேன். புதுமுக நாயகர் படங்களுக்கும் செல்வேன். இதை எல்லாம் விட, நேரம் என்று இருந்தால் அதில் நம் பதிவுலக நண்பர்களுடன் கடலை!


என்னையும் வலைத்தளம் எழுதுபவன் என்று ஏற்று, உங்கள் பதிவர் பகுதியில் என்னை பிரசுரிப்பதுக்கு நன்றிகள் அண்ணா!. யாரும் எனது வலைதளத்தை வந்து பார்த்து, உங்களுக்கு ஏதும் ஆபத்து நேரும் என்றால், அது என்னுடைய பொறுப்பல்ல!!!

Tuesday, March 1, 2011

ஹொக்ரெயில் - 01.03.2011

ரஜினியின் ராணா எப்படியான படம்?

எந்திரனின் இயந்திரத்தனமான ஆர்பரிப்பை தொடர்ந்து கே.எஸ்.ஆரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ளதாக எல்லோருக்கும் தெரிந்த செய்தி சொல்கின்றது அல்லவா. அந்த திரைப்படத்தின் பெயர் ராணா என்றும், இதில் ரஜினிகாந்த் மூன்று வேடங்கள் ஏற்று நடிப்பதாகவும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆகிய மொழிகளில் நேரடியாகவே இந்த திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளதாகவும் பல செய்திகள் அடிபட்டன.
அசின், திரிஷா, என்று பலபெயர்கள் இந்த திரைப்படத்தின் நாயகிகள் என்று சொல்லப்பட்டு, இப்போது தீப்பிகா படுகோன், சோனு ஷ_ட் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும், அதேவேளை வயதான ரஜினியின் ஜோடியாக ஹிந்தி நடிகை ரேக்கா நடிக்கவுள்ளதாகவும் உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன.
சௌந்தர்யா ரஜினி தயாரித்த சுல்த்தான் திவாரி என்ற அனிமேஷன் படத்தின் தொடர்ச்சி இது என்றும், பின்னர் இல்லை, இது ஒரு வித்தியாசமான கதை அதற்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் ரஜினி ரசிகர்களுக்கு குழப்பமான தகவல்களே இதுவரை கிடைத்துக்கொண்டிருக்கின்றன.
எது எப்படியோ சித்திரை மாதம் இடம்பெறும் புத்தாண்டு தினத்திற்கு பின்னர் படப்பிடிப்புக்கள் ஆரம்பித்துவிடும் என்று இப்போது உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன.
பொதுவாகவே ரஜினி நடிக்கும் படங்கள் பற்றிய அறிவிப்பு வந்தவுடன், ஊடகங்கள், ஆளாளுக்கு தங்களுக்கு தோன்றும் பில்டப்புக்களை அவிட்டு விட்டு வருவது இயல்பான விடயம்தான். எனவே கொஞ்ச காலம் பொறுத்திருந்து பார்த்தாலத்;தான் புரியும், இது அனிமேஷனின் தொடர்ச்சியா, அல்லது புதிய கதையா? என்பதெல்லாம்.

ப்பிளக் ஸ்வான்…

யார் இந்த கறுப்பு அன்னம்! என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். நேற்று ஆஸ்கார் விருது பெற்று கௌரவம் பெற்றுக்கொண்ட ஒரு நடிகைதான் இந்த நட்ராலி போர்ட்மன் என்ற இந்தப்பெண்.
பிளக் ஸ்வான் திரைப்படத்தில் சிறப்பான ஆற்றுகைக்காக இவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடிப்படையில் ஒரு யூதவழிவந்த பெண் இவர். 1981ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 09ஆம் நாள் பிறந்த இவர், புகழ்பெற்ற ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய, அமெரிக்க திரைப்படங்களில் நடித்து தனது பக்கம் இரசிகர்களை பெருமளவில் திரும்ப வைத்துக்கொண்ட இவர், 1994ஆம் ஆண்டளவில் நடிப்பு துறைக்கு வந்தார். பிரஞ்சு திரைப்படமான லியோனே இவரது அரங்கேற்றம் என்று கூறிக்கொள்ளலாம்.
இதேபோல இன்று வரை தன் நடிப்பாற்றலால் பல விருதுகளை பெற்று வந்துள்ள இவர், சொந்த வாழ்க்கையிலும் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் ஒரு லெஸ்பியன் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இப்போது அந்த குற்றச்சாட்டு தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது. காரணம் கடந்த வருடம் நடன இயக்குனராக இருக்கும் பென்ஷமின் மில்லிபேட்டை காதலித்துவரும் இவர், தற்போது ஒரு கற்பவதியாக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது :)

இந்தவாரக் குறும்படம்

நம்ம நாட்டில் இன்று வானத்தில ஒரு அக்ஸிடன்ட்

ஸ்ரீ லங்கா வான் படை ஆரம்பிக்கப்பட்டு வைரவிழாக்கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளதால் அந்த நிகழ்வில் விமான சாகசம் புரிவதற்கான ஒத்திகையில் இன்று ஈடுபட்டிருந்த இரண்டு கஃபிர் விமானங்கள் (நம்மட ஆக்கள் இதை கிபிர் எண்டும் சொல்லுவினம்) ஒன்றுடன் ஒன்று மோதலுக்குள்ளாகி நொருங்கி விழுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது பலருக்கு சோகமான செய்தியாகவும், மேலும் பலருக்கு மகிழ்வான செய்தியாகவும் இருக்கலாம்.
ஆனால் நான் சொல்ல வந்த விடயம் அதுவல்ல! அதாவது விமான சாகச ஒத்திகைகளின்போது ஆபத்துக்கள், விமானத்தைவிட வேகமாக வரும் என்பது இயல்பான ஒன்றே. இதுபோலவே ரஷ்யாவில் இடம்பெற்ற சாகச நிகழ்வொன்றில் சில விமானங்கள் ஒரேயடியாக விழுந்த சம்பவங்கள் நினைவுக்கு வரலாம்.
ஆனால் ஒத்திகைகள், பெரும்பாலும், வெளியான பிரதேசங்கள், அல்லது கடல் பிரதேசங்களிலேயே நடத்தப்படவேண்டும் என்பது அறிவார்ந்த நாடுகளில் கடைப்பிடிக்கபடும் ஒரு நடைமுறை.
இன்று இடம்பெற்ற இந்த அனர்த்தம், குடிமனைகள் உள்ள இடத்திலேயே இடம்பெற்றுள்ளது. பாரிய சேதங்கள் பொதுமக்களுக்கு இல்லை என்றபோதிலும், இது பாரதூரமான ஒரு விடயமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஓலியைவிட வேகமாக இவை பயணிப்பதால், இவற்றை மிகைஒலிகாரி வானூர்த்திகள் என்று தமிழ்படுத்தியுள்ளனர்.
இந்த விமானங்கள், கடந்த யுத்த காலத்தில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டவை என்பதும், ம்ம்ம்…ம்ம்ம்…எல்லாத்திலும் இந்த விமானத்தின் பங்கு உள்ளது என்பதும் அனைவரும் அறிந்தவிடயம்தான் என்பதால், அதை எல்லாம் பின்னூட்டம்போட்டு நம்மளை சங்கடப்படுத்தப்படாது ஆமா!

இந்த வாரவாசிப்பு
என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருக்கின்றார்கள்.
இம்முறை சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்த நண்பர்களிடம் நான் சொல்லிவிட்டிருந்த பல புத்தகங்கள் இப்போதுதான் தொகையாக வந்து சேர்ந்திருக்கின்றன. பெரும்பாலானவை, நான் வாங்கவேண்டும் என்ற ஏக்கத்துடன் பல காலங்களாக தவித்த புத்தகங்கள். குறிப்பாக வொல்காவில் இருந்து கங்கைவரை, செந்நிலம், மஞ்சள் வெயில், தாய், போன்ற பெரிய புத்தகங்கள் வந்து சேர்ந்துள்ளன.
அதோடு இன்னும் சில புத்தகங்கள் வந்தன. அவற்றில் முதலாவதாக நான் எடுத்து படித்து முடித்துள்ள கவிதைப்புத்தகம் மனுஷபுத்திரனின் “என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருக்கின்றார்கள்”.
கால்களின் ஆல்பங்கள் என்ற கவிதையை முதல்முதல் படித்து நெஞ்சம் பொருமி, கண்ணீர் கரைகட்டியபோதே மனுஷபுத்திரன்மேல் அப்படியொரு பிரியம் என் நெஞ்சில் சேர்ந்துகொண்டது. 2009ஆம் ஆண்டு புத்தக கண்காட்சியில் அவரை நேரில் சந்தித்து பேசியபோது, அந்த அன்பான பேச்சுக்கள், அக்கறையான விசாரிப்புக்கள், குழந்தைபோன்ற பார்வைகள் இப்போதும் நினைவில் பத்திரமாக உள்ளன.
அலட்டல்கள் இல்லாமல், இதயத்தின் அருகில் வந்து மெதுவாக, கௌரவமாகப்பேசும், அந்த ஒவ்வொரு கவிதையும் நயமாகவே உள்ளன.
மென்மையாக மேன்மையாக கவிதை எழுத நினைப்பவர்கள் ஒருமுறை கண்டிப்பாக படித்துப்பாருங்கள்.

வடக்கு கிழக்கில் மெல்ல மெல்ல பெருகும் சிறுவர் தொழிலாளிகள்.
யுத்தம் அது நடக்கும் காலத்தில்த்தான் கொடுமைகளை நிகழ்த்தும், ஓய்ந்தபின் கொஞ்சம் நின்மதி கிடைக்கும் என்பது அவ்வளவு உண்மையாக இருக்காது.
அந்த யுத்தத்தின் பின்னரான தாக்கங்கள், தூரல்கள் அதன் பின்னதான காலத்தில்த்தான் இன்னும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிக்கும்.
இன்று இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில், யுத்தத்தின் பின்னதான தாக்கங்களை உன்னிப்பாக கவனிக்க கூடியதாக இருக்கின்றது. பிறரிடம் உதவிக்காக ஏங்கும் மனோநிலை, பிச்சை எடுக்கும் மனோநிலை, அவற்றையும் தாண்டி ஏமாற்றுவது, திருடுவதற்கான மனோநிலைகளையும், அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதே யுத்தம் இன்றும் மறைந்திருந்து தொடர்ந்து வெருட்டிக்கொண்டுள்ளதை காணலாம்.
இந்த வகையில் இன்று யாழ்ப்பாண நகர்ப்பகுதிகளிலேயே பெரும்பாலான சிறுவர் தொழிலாளிகளை, உணவகங்கள், மக்கானிக் சென்டர்கள், அலுவலகங்கள், என்பவற்றில் சாதாரணமாக காணக்கூடியதாக உள்ளது.
எழுமாந்த ரீதியாக இங்க பார்! நீ சிறுவன்!! வேலை செய்யக்கூடாது என்று சொல்லிவிடலாம், அனால் அவர்களுடன் கொஞ்சம் பேசினால், அன்றாடம் அவனுக்கு கிடைக்கும் சிறுதொகையிலேயே அவனது குடும்பத்தின் வாழ்வாதாரமும், தம்பி, தங்கைகளின் கற்றல் நடவடிக்கைகளும் இடம்பெறுவதை அறியமுடிகின்றது.
வினை விதைத்தவர்கள், மேலும்மேலும் வினைக்கு இரத்தப் பசளை போட்டவர்கள் எல்லோரும் யார்யாரோ..அனால் ஒன்றுமே செய்யாத இந்த பிஞ்சுகளல்லவா இன்று அந்த வினைக்கான அறுபடைகளை பெறுகின்றன!

மியூஸிக் கபே
ஒரே வசனம்.. எல்.ஆர்.ஈஸ்வரி…காதோடு மட்டுமல்ல இதயத்தோடும் பாடிவிட்டார்.

ஜோக் பொக்ஸ்
புதிதாக கல்யாணம் கட்டியயோகம் ஒரு கிராமத்தில் உள்ள குடியானவருக்கு நகரத்தில் குவாட்டசுடன் வேலை கிடைத்தது. எனவே புது மனைவியுடன் குவாட்டசில் வந்து குடியேறினார். சாப்பாட்டு விடயத்தில்த்தான் அவருக்கு வந்திச்சு சனி. முதலாவது நாள் மனைவி காலை உப்மா கிண்டி கொடுத்தாள். சுவையாக இருந்திச்சு. மதியம் வந்தார் மீண்டும் உப்மா, இரவு மீண்டும் உப்மா, இப்படியே 3 நாளாக தொடந்திச்சு சாப்பாடு. மனுசனுக்கு உப்மாவே வெறுத்துப்போச்சு.
ஏன்டி உனக்கு வேறு சமைக்கதெரியாதா என்று கேட்க! மனைவியோ எதையும் மறைக்காமல் தெரியாதுங்க என்றாள்.
பிறகென்ன ஒரு 7 நாளாக அவருக்கு 21 வேளையும் உப்மாதான் சாப்பாடு.
முடியாத நிலையில் ஒரு ஹோட்டலுக்குள் நுளைந்தார், அது ஒரு ஹிந்தி ஹோட்டல் மனுவில் எல்லாமே ஹிந்தியிலே இருந்திச்சு, எனவே 15ஆவதாக இருந்தை ரிக் பண்ணிவிட்டு பார்த்திருந்தார், ஆவிபறக்க சர்வர் கொண்டுவைத்த சாப்பாட்டை ஆவலுடன் உற்றுப்பார்த்தார். அந்தோ பரிதாபம், அங்கே இருந்ததும் உப்மாதான். முன்னால் பார்த்தார் ஒருவர் பானிப்பூரி வாங்கி சப்பிட்டுகொண்டிருந்தார், நம்மாளுக்கு எச்சில் ஊறியது, முன்னால் இருந்த நபர் றிப்பீட்டு என்றார், மீண்டும் அவருக்கு பாணிப்பூர் வரவே, அதைப்பார்த்து ஆவலுடன் சர்வரைப்பார்த்து இவரும் ரிப்பீட்டு சொன்னர்.
மீண்டும் சூடாகவே வந்து சேர்ந்தது உப்மா.

LinkWithin

Related Posts with Thumbnails