Thursday, May 2, 2013

நதியா ஸ்கேட் முதல் நதியா கச்சான் வரை.



ஆம் அது ஒரு காலம்....... யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப்படை அமைதி காக்கத்தான் வந்திருக்குது, எங்கட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்று கனக்கக்கப்பேர் அவையை பூப்போட்டு வரவேற்ற காலம்.
அதாவது 1987 ஆம் ஆண்டு ஜூலை, ஓகஸ்ட் மிஞ்சி மிஞ்சிப்போனால் வெறும் இரண்டு மாத்களே. அதற்குள் என்றுமில்லாத விமர்சையாக வந்து போன நல்லூர்த்திருவிழா!

சும்மா சொல்லக்கூடாது இந்த இரண்டு மாதங்களும் யாழ்ப்;பாணத்தைப் பொறுத்தவரை ஒரு ஜொலிபுள் மாதங்கள் தான். அப்ப விடலை கண்ட அண்ணை அக்கா மார், ரியூசனுகளுக்கும் சாலியில (ஒரு வகை மோட்டார் சைக்கிள்) போய் இறங்கினது இப்பவும் என் கண்ணில் நிற்கிறது.
ஜி ரென் டெக்குகளும், சொனி ரீவிகளும் ஒவ்வொரு வீட்டுக்கும் வந்திறங்கி வீடியோ வாடைக்கு விடுறவைபாடு படு பிஸியாக இருந்த காலகட்டம் அது.

இந்தியாவில இருந்து பாஸ்போட் இல்லாம வந்திறங்கிய அமைதி காக்கும் படையுடன், யாழ்ப்பாணத்திற்கு அந்த நதியா மோகமும் வந்திறங்கியதாகவே இப்பவும் நான் நினைத்துக்கொள்வதுண்டு.
தமிழ்நாட்டுக்காரார் முக்கியமாக ஒன்றை கவனிக்கவேண்டும், அங்க முதல் முதல் ஒரு நடிகைக்கு கோவில் கட்டினதென்டால் அது குஸ்புக்கு என்றுதான் அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பார்கள்...... ஆனால் யாழ்ப்பாணத்திலை அந்தநேரம் நதியாக்கு இருந்த மார்க்கட்டே தனி ரகம்.

அந்த நாட்களில் பூக்கும் பூக்கள் எல்லாம் நதியாவாகவே பல அண்ணன்மாருக்கு பூத்தன, தலை வெட்டிலிருந்து பாவாடை வெட்டுவரை நதியாவாகவே பல அக்காமார் மாற முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்.
நதியாவின் வகை வகையான புகைப்படங்கள் சேர்ப்பதிலே பல அண்ணன்மாருக்கு போட்டி நடந்துகொண்டிருந்தது. 
நதியாவின் புண்ணியத்தில் பான்ஸி கடைகள் எல்லாம் வீறுகொண்டு எழுந்து கூட்டத்தில் சிக்கித்தவித்தன. பல பான்ஸி கடைக்காரர்களின் யாழ்ப்பாண பீக் ரைம் இதுதான் என்று இன்றும் பல மூத்த பான்ஸி கடைக்காரார்கள் சொல்லிக்கொண்டிருகின்றார்கள்.

புடவைக்கடைகளில் நதியா புரொக், நதியா ஸ்கேட், நதியா புளவுஸ், நதியா பெல்ட், நதியா பியாமா என்று நிறைய, பன்ஸி கடைகளில் நதியா தோடு, நதியா வளையல், நதியா ஹேர் பான்ட், நதியா கம்மல், நதியா பட்டன் என ஏராளமான நதியா ஐட்டங்கள் வெளியில் எடுத்து 15 நமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தன.
மறு புறம் நதியா செருப்பு, நதியா சைக்கிள், நதியா பொட்டு, நதியா ஹான்ட் பாக் என குவிந்துகொண்டிருந்தன.
இவற்றில் இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இவை எல்லாம் நதியா திரைப்படங்களில் உடுத்து, அணிந்து நடித்த பார்க்கக்கூடிய ஐட்டங்கள்தான்.
ஆனால் அதே நேரத்தில் நதியா சென்ட் என்று ஒரு ஜஸ்மின் நறுமண சென்ட் வகை அப்போது பெண்கள் பெரும்பாலானவர்கள் பாவித்த ஒன்று!

சரி........ இவ்வாறு வாங்கிக்குவித்தவற்றை போட்டுக்காட்டுவதற்கான களம் ஒன்று வேண்டாமா? கணக்காக வந்தது நல்லூர் கந்தன் திருவிழா. அப்பா அந்த 25 நாட்களையும் வேற எந்த வருட 25 நாட்களுடனும் ஒப்பிட முடியுமா என்ன?
நதியா ஹாவ்சாறிகள் நிறைந்து நின்றன நல்லூர் வீதிகள் எங்கும்.

மேற்சொன்ன நதியா வகையறாக்களை விட மேலும் பல நதியா ஐட்டங்கள் வந்து குவிந்தன இதைப்பார்த்து வேறு விற்பனையாளர்கள் கூட தமது பொருட்களையும் நதியா என்ற அடைமொழியுடனே விற்கத்தொடங்கினர்.
நதியா ஐஸ்கிறீமில் இருந்து நதியா கச்சான் வரை சென்றது.

உண்மைதான் என்னைப்பொறுத்தவரை நதியா, மற்றும் நதியா கோஸ்மட்டிக் பொருட்களுக்கு அப்போதைய யாழ்ப்பாண இளைஞர்கள் கொடுத்த வரவேற்பை அதன் முன்போ, அதன் பின்போ வேறு யாருக்கும் தரவில்லை.
யாழ்ப்பாணம் ஜொலிபுள்ளாக இருந்த அந்த 1987 ஜூலை, ஓகஸ்ட்டு மாதங்களில் அடித்த நதியாப்புயல் அதை நினைத்துப்பார்க்காத அளவுக்கு கரைபுரண்டு சென்றது அடுத்தடுத்து நிகழ்ந்த யுத்தங்களால்.

1 comment:

தனிமரம் said...

உண்மையில் அந்தக்காலம் ஒரு பொற்காலம் எனலாம் இன்னும் நதியாவின் மார்க்கட் அந்த புயல் எந்தக்காலத்திலும் மீண்டும் யாழில் வருமா என்பதே?? மீண்டும் 87 ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி ஜனா!

LinkWithin

Related Posts with Thumbnails