Tuesday, July 19, 2011

இலைதுளிர் காலத்து உதிர்வுகள்.......08


ரலாற்றில் நியாயமான உணர்வுகள் ஒவ்வொன்றுக்கும் மாறான தீர்வுகள் கிடைத்ததில்லை. ஒரு வகையில் உலகமும், நியதியும், இயற்கையும் நியாயத்தின் பக்கங்களே நிற்றுபோனதாகவே உலக வரலாறுகளும், அதன் சுவடுகளும் குறிகாட்டிச்சென்றுள்ளன.
ஈழத்தில் தமிழர்களின் வலிகள், ரணங்களுக்கான வலிநிவாரணியாக ஒரு தீர்மானமான முடிவு கிடைத்துவிடும், முக்கிமாக மதத்தாலும், உணர்வாலும், சம்பிரதாய கலாசார விழுமியங்களாலும் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா எம் விடயத்தில் ஒரு போதும் எந்தவித விட்டுக்கொடுப்பையும் செய்துவிடாது, நிச்சயம் பாரதம் நமக்கொரு மகுடம் வழங்கும் என்ற பேதலிப்புடனேயே விடியல் நோக்கிய விழிகளாக ஈழத்தில் ஒவ்வொரு தமிழனும் வடக்குநோக்கிய தமது பார்வைகளாக வடக்கிருந்தனர்.

வழமைபோலவே அகாஷவானியின் செய்திகள் குறித்த நேரத்தில் ஒலிபரப்பாகின்றன. டில்லியில் இடம்பெற்ற இந்திய அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான உயர்மட்ட பேச்சுக்களில் பல முக்கிய விடங்களில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும், கூடியவிரைவில் இந்த இரண்டு தரப்புக்கும் இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும் அந்த செய்திகள் தெரிவித்தன.

ஆனால் அழைத்துச்செல்லப்பட்ட போராளிக்குழப்பிரதிநிதிகள், அங்கே சுதந்திரமாக கருத்துக்கள் வெளியிட முடியாதபடி தங்கக்கூண்டில் அடைக்கப்பட்டதற்கு ஒப்பான ஒரு தோற்றப்பாட்டை தாய் நாட்டு மக்கள் ஏதோ ஒரு உணர்வில் நன்றாக அறிந்தே வைத்திருந்தனர்.
இந்தக்கட்டத்தில்த்தான் ஈழ மக்களுக்கு முதன்முறையாக இந்தியாமீது சிறு சந்தேகக்கண் விழத்தொடங்கிய கட்டமாகும்.
'ஏன் இவை வேண்டும் என்றால் எங்கட பிள்ளைகளை எங்கட இடத்தில், எங்களுக்கு மத்தியில் வைத்து பேசி இணக்கப்பாட்டுக்கு கொண்டுவரலாம்தானே' அதென்ன கௌரவமாக பேசப்போவதாக சொல்லி கொண்டுபோய் அடைத்துவைப்பது' என்ற கேள்விகள் ஒவ்வொரு சாதாரண பொதுமகனிடம் இருந்தும் அந்த சூழ்நிலையில் வந்துகொண்டே இருந்தது.

ஆகாஷவானியின் செய்திகளின் போக்கும், இந்தவிடயத்தில் இந்திய அரசாங்கத்தின் தொனியும் செய்தி நேரத்திற்கு நேரம் கொஞ்சம் கொஞ்சமாக தொளி மாறிக்கொண்டே சென்றுகொண்டிருப்பதை அவதானிக்கமுடியாத முட்டாள்களாக இல்லை அன்றைய நிலையில் ஈழத்தமிழர்கள்.

எனக்கு நன்றாக நினைவில் உள்ளது, இந்த நேரத்தில் தமிழ் மக்களின் நியாயமான தீர்வுக்காகவும், நிரந்தர அமைதிக்காவும், பல கோவில்களில் வரிசையாக விசேட வழியாடுகள் ஆராதனைகளை பல அமைப்புக்கள் முன்னின்று நடத்திக்கொண்டிருந்தன. திக்கற்றுப்போன இந்த காலகட்டத்தில் தெய்வந்தான் துணை என்று அந்த மக்கள் நினைத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லைத்தானே!

இந்த நேரத்தில் 'சோல்ட்' எனப்படும் மாணவர்களைக்கொண்ட அமைப்பு பொதுமக்களை அசுவாசப்படுத்தும் நோக்கில் இன்றைய காலகட்டத்தில் எம் வரலாற்றுக்கடமையும், எமது பாதையும் என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து மக்களுக்கு நிலை விளக்கங்களையும், அசுவாசப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
அதேவேளை சிறிது சிறிதாக பொதுமக்களுக்கான கூட்டங்களும் இடம்பெற்றுக்கொண்டிருந்தன.

வரலாறு ஒன்று எதர்பாராதவிதமாக புரள்வாகும் ஆரம்ப நிலைகள், அல்லது திசைமாறி பயணிக்கப்போகும் திருப்பமாக இந்த சூழ்நிலை ஈழத்தில் ஒரு இனந்தெரியாத இறுக்கத்தை வலுக்கட்டாயமாக கொண்டு வந்திருந்தது.
மாலை மங்கும்நேரம் மேகம்முழுவதும் கடுமையான கருமுகில்களாக காணும் ஒரு நிலை அந்தநேரத்தில் காணப்பட்டது.
இந்த கருமுகில்கள் தரப்போவது பூமழையா, அல்லது பெரும் அனர்த்தமா என்பது அற்றைப்பொழுதுகளில் ஈழவர் ஒவ்வொருவர் முகத்திலும் தொற்றிக்கொண்ட கேள்விக்குறிகளாக தொக்கி நின்றது.

- இலைகள் உதிரும் -

Thursday, July 7, 2011

ஹொக்ரெயில் - 07.07.2011

எங்க தலை டோனிக்கு பெரிய கேக் வெட்டுங்க...

ஒன்று தசம் இருபத்து ஒரு பில்லியன் மக்களின் மக்களின் ஒரு மித்த கனவு நிறைவேறிவிடும்... இதோ நிறைவேறப்போகின்றது என்ற நிலையில், வெல்வதற்கு இன்னும்.. ஒரு சில ஓட்டங்களே உள்ளன இதோ.. களத்தில் இருந்த இந்திய அணித்தலைவன் மகேந்திர சிங் தோனி இலட்சியம் நிறைவேறும் தருணம் பார்த்து மிடுக்குடன் துடுப்பை பிடித்துக்கொண்டு இருக்கின்றார்.
மிக உறுதியாகவும், அதீத நம்பிக்கையுடனும், காத்திருந்து அந்த அருமையான வின்னிங் சாட், மிக உயரமாக ஆறு என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருப்பதை, உறுதியான பார்வையுடன் முகத்தில், ஆனந்தம், பெருமிதம், சந்தோசம், தேசத்திற்கு பெருமை தேடினேன் என்ற பண்பு என அத்தனை உணர்வோடும் மேலாக போகின்ற பந்து சென்று விழும்வரை கூர்ந்து பார்க்கின்றது அந்த விழி.
28 வருடங்களின் பின்னர் இந்தியாவுக்கு கிடைத்த அடுத்த பெருமை இது.
1983 இல் கபில் தேவின் கரங்களில் வந்துசேர்ந்த கிண்ணம், இப்போது மீண்டும் வந்து சேர்ந்தது டோனியிடம்.
இந்தப்பெருமைகளின் சொந்தக்காரன் டோனிக்கு இன்று பிறந்த தினம்.
ஹப்பி பேர்த்டே டோனி...

இன்றைய காட்சி..

அறிவொளி ஒன்று அணைந்து போனது..

1932 மே மாதம் 10ஆம் நாள், பண்டிதரும், சைவப்புலவரும் யோகர்சுவாமிமீது பெரும் பற்றும், பக்தியும் கொண்டவருமான கார்த்திகேசு, கரவெட்டியில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர், அப்படியே யோகர் சுவாமியை சந்தித்துப்போகலாம் என்று யோகர் சுவாமிகளின் இருப்பிடம் நோக்கி உள் வருகின்றார்.
உள்ளே இருந்து யோகர் சுவாமிகளின் குரல்,
காத்திகேசு..! பெண்டாட்டி முழுமாத கர்ப்பிணியாக இருக்கும்போது உனக்கென்ன வீண் சோலிகள் வேண்டி இருக்குது.
அங்கேயே நில்.. உள்ளே வராதே.. உடன வீட்டுக்குப்போ.. உனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கின்றான், அறிவிலும், தமிழிலும் முதன்மையானவன் அவன்,
போய் 'சிவத்தம்பி' என்று பெயர்வை.. அவன் தானாக வளர்வான், அவனுடன் அறிவும் வளரும். என்று சொல்கின்றார்.
யோகிகளின், சித்தர்களின் வாக்ககள் பொய்யானது உண்டா! நிகழ்கால அறிவுச்சரித்திரமாக எம்மத்தியில் வாழ்ந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.

இதே ஹொக்ரெயில் பல தடவைகள் பேராசிரியர் பற்றி பல விடயங்களை எழுதியிருக்கின்றேன். நான் நேரடியாகப்பார்த்து பிரமித்துப்போனவர்களில் பேராசிரியர் அவர்களும் ஒருவர்.
நுடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடர்பான முழுமையான டாக்குமென்ரி ஒன்றை எடுக்கவேண்டும் என்ற ஒரு ஆசையுடன், திட்டத்துடன், (இளையதம்பி தயானந்தா) தயா அண்ணாவுடன் சில வருடங்களின் முன்னால் அவரது இல்லம் சென்றிருக்கின்றேன்.
சிவாஜி கணேசன் பற்றிய பல்வேறு பார்வைகளை ஒரே நாளில் அவரிடம் பேசி, ஷூட் பண்ணுவதாக திட்டமிட்டிருந்தோம்.
அப்பா... மடை திறந்த அருவிபோல, நினைத்தே பார்க்கமுடியாத கோணங்களில் பல விடையங்களை, அனால் சுவாரஸ்யத்துடன் அவர் பேசிக்கொண்டே சென்றபோது.
நான் அப்படியே ஸ்தம்பித்துப்போனதே உண்மை. இமைகள் ஆடினவா? அல்லது அவ்வளவு நேரமும் நான் ஸ்வாசித்தேனா என்பதுகூட எனக்கு தெரியாது.
உண்மையை சொல்லப்போனால் வல்லாளர்களைப்பற்றி பேசவோ எழுதவோ முடியாது. அவர்களின் பெயர்களை எழுதவே எமது சிற்ரறிவு போதாது.
ஒரே வசனம் 'ஹி இஸ் எ ஜீனியஸ்'

இன்றைய புகைப்படம்

மியூஸிக் கபே.

'தவிக்கமுடியாத காரணத்தால் இன்றய ஹொக்ரெயிலில் போதை கம்மிதான். மன்னிக்கவும்.'

Monday, July 4, 2011

காமவெறி ஓநாய்களின் பிடிக்குள் பேதலிக்கும் மென்மையான பெண்மை!

பெண் எனப்படுபவள் பூவினைப்போன்றவள், மென்மையானவள், ஆண்களின் சேவைக்காகவே பிறந்தவள் என்ற எங்கள் எரித்துப்போடவேண்டிய கொள்கைளும், சில இலக்கியங்களும், பாடல்களும், இன்றும் பெண்மை பேதலித்துப்போய் ஓரிடத்தில் உற்காரவைக்கப்படுவதற்கு காரணங்களாக அமைந்துள்ளன போலும்.
ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தால் அந்த குடும்பத்திற்கு அது தேவதையின் பரிசாகவும், தங்கள் குடும்ப குல விளக்காகவுமே பெற்றவர்களும், உறவினர்களும் அந்த பெண்ணை கண்ணும் கருத்துமாக வளர்த்துவருகின்றனர்.
தாய், தந்தை, பெரியதந்தை, சிறிய தந்தை, மாமன், என்ற உறவுகள் அவளின் வளர்ச்சியிலும், அவளின் பாதுகாப்பிலும் பங்குகொண்டு அவளை சீரிய குணங்கள் உடைய ஒரு நற்குணவதியாக சமுகத்திற்கு தர தம்மாலான அத்தனையினையும் அவளுக்கு தந்து அவளை சமுகத்தில் உயர்ந்தவளாக்குகின்றனர்.

முன்பொரு காலத்தில், பாரதி கண்ட புதுமைப்பெண் என்ன? அதைவிட மேலே சென்று புதிய வரலாறுகள் பலவற்றையும் இந்த எம்மினப்பெண்கள் படைத்த வரலாறுகளை நாம் அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிட்டோமா என்ன?
சில வருடங்களுக்கு முன்னர்கூட நட்டநிசி மட்டுமல்ல நள்ளிரவு தாண்டியும், எம்மினப்பெண்கள் தங்கள் அண்ணன்மார்கள் உள்ளனர் எம் பாதுகாப்புக்கு என்று எங்குமில்லா பெண் விடுதலை கண்டுநின்ற சரித்தரங்களும் அவ்வளவு சீக்கிரமாக மறைந்துபோகினவோ?

ஒரு நாடு முன்னேறுகின்றது என்றால் அந்த நாட்டில் பெண்களின் கல்வித்தரம், பணியிடங்களில் அவர்களின் தலைமைத்துவம், பல்துறைகளிலும் பெண்களின் முன்னேற்றம் என்பனவே பிரதான காரணிகளாக இருக்கும்.
ஆனால் இன்று எம்போன்ற நாடுகளில் இத்தனையினையும் எட்டிப்பிடிக்க பெண்கள் அனுபவிக்கும் வக்கிரகங்கள், கொடுமைகள் எத்தனை! எத்தனை!!

முன்னேறத்துடிக்கும் பெண்களுக்கு பெரும் சவாலாக இன்று இருப்பது காமவெறி, சதைப்பசி கொண்ட சில ஓநாய்களின் பாலியல் ரீதியான அதிகார துஸ்பிரயோகமே என்று கூறலாம்.
அன்றாடம் இது பற்றி பல தகவல்கள் வெளிவரும்போது, நெஞ்சம் திடுக்கிடுகின்றது. சமுகத்தில் தம்மை உயர்ந்தவர்களாகவும், வல்லவர்களாகவும் காட்டிக்கொள்ளும் சிலர் கேவலமான தமது காம இச்சைகளுக்காக கீழ்த்தரமாக நடந்துகொள்வது சமுகத்தின்மேல் அக்கறைகொண்டுள்ளவர்களின் நெஞ்சங்களில் பெரும் இடியாகவே விழுகின்றது எனலாம்.
இந்த அதிகாரம், அபிமானங்களை வைத்து கரட்டி ஓணான் பாணியில் பெண்களை வெருட்டி அல்லது ராச்சர் கொடுத்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நடவடிக்கைகள் இன்று பரவலாக எல்லா இடங்களிலும் அதிகரித்து சென்றுகொண்டிருக்கின்றது.
கல்விநிலையங்களில் இருந்து பல்கலைக்கழகம் வரையும், சிறிய வியாபாரநிறுவனங்களில் இருந்து பெரிய பெரிய நிறுவனங்கள், திணைக்களங்களிலும் ஒரு சில அதிகாரிகளால் இந்த பெண்கள்மீதான பாலியல் ரீதியான அதிகார துஸ்பிரயோகங்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.

பெரும்பாலும் இப்படியான காட்சிகளை திரைப்படங்கள், நாடகங்களிலே காணும்போதுகூட மென்மையான மனம் படைத்தவர்களால் அதையே தாங்கமுடியாது உள்ளது. இந்த நிலையில் அந்த நிழல்கள் எம் சமுகத்தில் நிஜமாகவே நடக்கும்போது அவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை.

எம் சமுகத்தில் இன்று தொழில்புரியும், உயர்கல்வி கற்கும் பெண்களின் ஒரு சில தற்கொலை நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. ஆனால் அவை பற்றிய தீரமான விசாரணைகள் முழுமையாக நடத்தப்படுவதில்லை. அந்த தற்கொலைகளின் பின்னால் இது போன்ற சில அதிகாரத்தைப்பயன்படுத்தி பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுக்கப்பட்ட தகவல்கள் கூடத்தொழில் புரிபவர்கள், அல்லது கூட கல்வி கற்பவர்களால் கதை வழியாக காதுகளை எட்டுகின்றன.
ஆனால் அவற்றுக்கு காரணமானவர்கள் சர்வ சாதாரணமாக வழமைபோலவே பகட்டாக சமுகத்திற்கு தங்கள் அப்பாவி முகத்தை காட்டிக்கொண்டுதான் உள்ளனர்.

இதிலும் பெரும் கேவலாமான விடயம் என்னவென்றால் இப்படி அதிகார ரீதியில் தமது பாலியல் வக்கிரத்தை திணிப்பவர்கள் 45 வயதினை தாண்டியவர்களாக இருப்பதே. அவர்களுக்குகூட பருவமடைந்த பெண் பிள்ளைகள் இருப்பார்கள்.
இந்து சமய முறைப்படி இல்லறம் தாண்டி வனப்பிரஸ்தத்திற்கு செல்லும் வயதில் இவர்களுக்கு இளமை திரும்பி, பாலியல் வக்கரிப்பு ஏற்படுவது ஆச்சரியமாகவும், வேதனையாகவுமே இருக்கின்றன.
இதிலும் ஒரு சில நிறுவனங்கள், வங்கிகளின் மேதிகாரிகளின் நடவடிக்கைகளை பாராட்டியே ஆகவேண்டும், சில நிறுவனங்கள், வங்கிகளில் இப்படியான சில பெண்கள் மீதான அதிகார ரீதியான பாலியல் தொல்லைகள் மேலிடங்களுக்கு அறிவிக்கப்பட்டு குறிப்பிடப்பட்டவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான தண்டனைகள் ஒரு முன்னுதாரணமாக இருப்பதுடன், இப்படியாக பாலியல் ரீதியில் அதிகார துஸ்பிரயோகம் செய்பவர்களை மற்றய நிறுவனங்கள், கல்வி நிலையங்களும் கடுமையான தண்டனைகள் வழங்கவேண்டும் என்பதுடன், அவர்கள் சட்டத்தின் முன்னாலும் நிறுத்தப்படவேண்டும்.

இப்படியான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட பெண்கள் தம்மை ஒருபோதும் பலவீனர்களாக காட்டிக்கொள்ளக்கூடாது, துணிந்து நின்று எதிர்க்கவேண்டும், முதல்கட்டமாக சக அலுவர்களிடமோ, அல்லது கூட கல்வி கற்பவர்களிடமோ இது பற்றி கூறிவிடுவது அவர்களின் பாதுகாப்புக்கு முதற்கட்ட அஸ்திவாரமாக இருக்கும்.
அதேபோல குறிப்பிட்ட அதிகாரியின் (அங்கிளின்) பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகரித்தால், அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதை ஆதாரபூர்வமானதாக்கி கொள்ளவேண்டும், (தொலைபேசி அழைப்புக்கள், எஸ்.எம்.எஸ்கள், மின்-அஞ்சல்கள்) தற்போது மின் - அஞ்சல், தொலைபேசி வசதிகள் அனைத்து இடத்திலும் உள்ளபடியால் அந்த அங்கிளின் (மேலதிகாரியின்) லொள்ளு அதிகரித்து செல்லும் சந்தர்ப்பத்தில் தலைமை அலுவலகத்திடமோ, டிரக்டரிடமோ, முறைப்பாடாக செய்துவிடலாம்.
இன்றைய நிலையில் நான் அறிந்த மட்டில் புத்திசாலித்தனமாக சில பெண்கள் இவ்வாறான நடவடிக்கைகளை சாதுரியமாக செய்தே இந்த கேவலர்களுக்கான தண்டனைகளை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

இதேபோல இப்படியான அதிகாரரீதியான பாலியல் தொந்தரவுக்கு ஒரு பெண் ஆளாகின்றமையினை அவதானித்தால் சக ஊழியர்கள், சுற்றியுள்ள சமுகத்தினர்கள் என்பவர்கள் அவளுக்கு பக்கபலாமாக இருந்து சம்பந்தப்பட்ட நபருக்கு தக்கபாடத்தை படிப்பித்தால் நாளை மற்றவர்கள் இதுபோன்ற கேவலமான விடயங்களில் இறங்க பயப்படுவார்கள்.
தமது அதிகாரத்தையும், அபிமானத்தையும் இப்படியான கேவலமான நோக்கத்திற்கு பயன்படுத்த எத்தனிப்பது ஒரு வகையான மனோவியாதி என்று உளவியல் சொல்கின்றது. ஆனால் இப்படியான செயல்களில் ஈடுபடுபவர்கள் சமுகத்தின் முன்னால் துயிலுரியப்படுவதே இந்த மனோவியாதிக்கு சிறந்த தெரப்பியாக இருக்கும் என்பதே என் எண்ணம்.

Saturday, July 2, 2011

எனக்கு நடந்த அமானுஸ்ய, தெய்வீக அனுபவங்கள்.

மனதில் எப்போதும் ஒரு அதிசயமாக தொக்கி நிற்கும் சில விடையங்கள் வரையறைக்குள் அடங்கும் சிந்தனைக்கு அப்பாற்பட்ட விடையங்களாகவே இருக்கின்றன. எப்போதும் நினைத்து அதிசயிக்கும் ஒருவிடையங்களாகவும் விடைதெரியாத ஒரு புதிர்களாகவுமே அவை உள்ளன.
எப்போதும் பகுத்தறிவு சிந்தனையை முதன்மைப்படுத்தி சிந்திப்பது எனது வழமை என்றாலும்கூட இவற்றின் அர்த்தங்கள் என்ன என்ற கேள்வி எப்போதும் மனதை குடைந்தவண்ணமே உள்ளன.
இது பற்றி எழுத வேண்டும் என பல முறை முயன்றும், பகுத்தறிவு சிந்தனையும், நான் சொல்வது சித்தரிக்கப்பட்டது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிடுமோ என்ற பயத்தின் காரணமாக அப்பப்போ என் கைகளை கட்டிப்போட்டுக்கொண்ட விடையங்கள் இவை.
இருந்தபோதிலும் விடை தெரியாத இந்த புதிர்களை ஆயிரக்கணக்கானவர்களுடனும், பதிவுலக நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்வது என்ற முடிவுடன் அவற்றை ஒரு பதிவாகவே இங்கே இடுகின்றேன்.
எனக்கு நடந்த இந்த அமானுஸ்யங்கள், தெய்வீக நிகழ்வுகள்! உங்களில் சிலருக்கு புதிராகவும், சிலருக்கு ஒரு ஆர்வமாகவும், சிலருக்கு ஒரு தகவலாகவும், ஏன் சிரிப்பாகவும்கூட இருக்கும் என்பது எனக்கு தெரியும்.

1991 களில் நடந்த ஒரு சம்பவம். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலம். மார்கழி மாதம் சோ... என்று மழை கொட்டிக்கொண்டிருக்கும் பொழுதுகள் அவை.
அந்த வேளையில்தான் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் பெருங்கதை அல்லது விநாயகர் சஸ்டி பூஜைகள் 21 நாட்களுக்கு நடப்பது வழக்கம்.
அந்தக்காலங்களில் என் செயற்பாடுகள், பாடசாலை, தனியார் வகுப்புக்கள், அவையை அடுத்து அந்த விநாயகர் ஆலயம் என்ற வட்டத்திற்குள்ளேயே சுழன்றுகொண்டிருந்தது. காரணம் நாட்டு சூழ்நிலை அப்படி.
வானத்தில் இருந்து நாள் தவறாது குண்டுகள் உருவத்தில் உயிர்ப்பலி நடந்துகொண்டிருந்த காலங்கள் அவை.

அன்றும் அப்படியே, ஒரு வியாழக்கிழமை அது என்பது நினைவில் உள்ளது. பிற்பகல் மூன்று மணி இருக்கும், இலட்சார்ச்சனைக்கு தேவையான இலைகளை ஒடித்துவந்து ஆலயத்தில் வைப்பது அப்போது என் வழமை. அதுபோலவே மழை கொட்டிக்கொண்டிருந்த அந்தநாளும் ஐந்துவகை இலைகளை மழையில் ஒடித்துக்கொண்டு கோவிலுக்கு சென்றேன்.
அங்கே பூசகர் மட்டுமே இருந்தார். மூலஸ்தானத்திற்கு சற்று முன்பாக உச்சியில் இருந்த முகட்டு ஓடு உடைந்து மழைநீர் அருவி கொட்டுவதுபோல வீழ்ந்துகொண்டிருப்பதை பூசகர் எனக்கு காட்னார். பெரியவர்கள் யாரையாவது அழைத்துவந்து புதிய ஓடு போட சொல்லும்படி என்னிடம் தெரிவித்தார்.
அதைப்பார்த்த நான், மனதில் ஏதோ ஒரு உணர்வு உந்துதலில், புதிய முகட்டோடு ஒன்றை எடுத்து ஒரு கயிற்றினால் கட்டி என் முதுகுப்பக்கம் நிற்குமாறு வைத்துக்கொண்டு கொட்டும் மழையில் நனையாமல் இருக்க தலையில் ஒரு ரபர் சீட்டை போட்டுக்கொண்டு, பூசகருக்கும் தெரியாமல் கோவில் ஓட்டில் ஏறத்தொடங்கினேன்.

ஒரு ஓரத்தில் உச்சி முகட்டோடை அடையும் வண்ணம் இரும்பு ஏணி சரிவாக இருந்தது. அதை பிடித்து மெல்ல மெல்ல ஏறினேன். சாதாரண விட்டு ஓட்டு சாய்வு போல கோவில் ஓட்டுச்சாய்வு இருக்காது அது சற்று குவிய அமைப்பில் இருக்கும் ஏறுவது மிகக்கடினம், அதுவும் கொட்டும் மழையில் ஏறுவது அதைவிடக்கடினம்.
இளம்கன்று பயமறியாது என்பதுபோல மெல்லமெல்ல ஏறி முகட்டோடை அடைந்து முகட்டோடுகளில் இருந்து, இருபக்கமும் கால்களைப்போட்டுக்கொண்டு உந்தி உந்தி மெதுவாக உடைந்த முகட்டோட்டினை அடைகின்றேன். அந்த முகட்டோட்டை கழற்றி எறிந்துவிட்டு, தலையில் போட்டிருந்த ரபர் சீட்டை அதில் நன்றாக விரித்து அதற்கு மேலாக புதிய முகட்டோட்டை கச்சிதமாக பொருத்தினேன்.

சரி.. இனி இறங்கலாம் என்று, வந்ததுபோலவே மெதுவாக பின்பக்கமாக உந்திச்சென்று அந்த இரும்பு ஏணிமூலம் இறங்கிவிடலாம் என்ற நோக்கோடு அங்காலும் இங்காலும் காலைப்போட்டுக்கொண்டு பின் பக்கமாக மெதுவாகச்சென்று கொண்டிருந்தேன், சரி பின்பக்கமாக ஏணியை பிடிக்கமுடியாது என்று எண்ணி மற்றப்பக்கம் திரும்ப முயற்சித்தபோதுதான் அந்த விபரீதம் நடந்தது.
சமநிலை தவறிய நான் திடீர் எனச்சரிந்து ஓடு வழியே வழுக்கி சென்று கொண்டிருந்தேன். ஓடுகளின் முடிவிடத்தில் இருந்தே தரை தூரமாக தெரிந்துகொண்டிருந்தது. அது மட்டுமின்றி கோவில் வேலைகளுக்காக கொட்டப்பட்டிருந்த பெருங்கற்கள் நான் விழும் தரையில் குவிக்கப்பட்டும் இருந்தன.
இதோ இறுதியோட்டில் இருந்து நான்காவது ஓடுவரை வழுக்கிக்கொண்டு வந்திருப்பேன். இனி கதை சரி என்ற நிலையில், ஒரு அதிசயம்..
ஆம்... வேகமாக சறுக்கிவந்த நான் அந்த நான்காம் அடுக்கு ஓட்டிலேயே நின்றேன் அல்லது நிறுத்தப்பட்டேன்.
மழைக்குளிரிலும், உடலெல்லாம் புல்லரித்துக்கொண்டது. உராய்வு நிறுத்தியிருக்காலம் என்று சிந்தித்தாலும் மழை கொட்டிக்கொண்டிருக்கும்வேளை, உராய்வு நிலை அதிகமான அழவு குறைந்திருக்கும் நேரம், வேகமாக சறுக்கிவந்துகொண்டிருந்த நான், விழும் தறுவாயில் நிறுத்தப்பட்டது எப்படி?
இது தெய்வீகமான செயலா? அல்லது அந்த கணத்தில் ஏற்பட்டதொரு தற்செயலான விடயமா?

1997 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைகளுக்காக விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்த காலம். எனது இரவு நேர கற்றல் நேரசுசி கொஞ்சம் வித்தியாசமானது பொதுவாகவே நான் மாலை 7 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை படிப்பேன், பின்னர் 12 மணிவரை தூங்கிவிட்டு அலாரம் வைத்து 12 மணிக்கு படிக்கத்தொடங்கி அதிகாலை 3 மணிவரை படிப்பேன், பின்னர் அதிகாலை 5 மணிக்கு அலாரம் வைத்து ஐந்திலிருந்து 8 மணிவரை படிப்பதே அந்தநேர என் கற்றல் நேரசுசி.
அந்தநேரத்தில் மாலை 7 மணிதொடக்கம் இரவு 10 மணிவரை வரையறுக்கப்பட்ட மின்சாரமே எமக்கு கிடைத்தது. அதன் பின்னர் சிமினி விளக்கில்த்தான் படிப்பு.
இப்படி ஒரு நாள் நடந்த அதிசயமான சம்பத்தையே நான் சொல்லவருகின்றேன்.

ஒரு நாள் அதிகாலை மூன்றுமணிவரை படித்துவிட்டு, வழக்கப்படி ஐந்து மணிக்கு அலாரம் வைத்துவிட்டு, விளக்கை அணைத்துவிட்டு படுத்து தூங்கிவிட்டேன்.
அன்று அந்த இரண்டு மணித்தியலாலத்திற்குள் ஆழ்ந்த ஒரு உறக்கம் என்னை ஆழ்க்கொண்டது என நினைக்கின்றேன்.
திடீர் என அலாரம் அடிக்கவே வழித்து எழுந்த நான் இருளில் அன்றாடம் பழக்கப்பட்ட மேசைமீது வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டியை எடுத்து பற்ற வைக்கின்றேன், தீப்பெட்டி தட்டப்படும் சத்தம், தீக்குச்சி எரியும் சத்தம் என அனைத்தும் கேட்கின்றது. ஆனால் கையில் தீக்குச்சி எரிவதை உணரமுடிந்தபோதிலும் எவ்வளவு முயற்சி செய்தும் ஒரு சிறு வெளிச்சத்தினைக்கூட என்னால் பார்க்கமுடியவில்லை. இறுதியில் தீக்குச்சி எரிந்து அடிப்பகுதி எரிவதால் என் கை சுட்டு என் கையினை உதறுகின்றேன்.
அடுத்த கணம் நான் படுக்கையில் படுத்திருப்பதை உணர்ந்து திடுக்கிட்டேன்.
பின்னர் எழுந்து இருளில் தீப்பெட்டி இருந்த இடத்தை தேடுகின்றேன் அது அங்கே இல்லை.இருளில் தடவித்தடவித்தேடி கீழே கிடந்த தீப்பெட்டியை எடுத்து, விளக்கை ஏற்றிப்பார்த்தால், ஒரு தீக்குச்சி முழுமையாக எரிந்து வீசப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தது.
அன்று எனக்கு நடந்த அந்த விநோதமான சம்பவம் என்ன? இதுவரை அதற்கு விடை இல்லை.

அதே 1997 ஆம் ஆண்டு, உயர்தரப்பரீட்சைகளை வெற்றிகரமாக எழுதி முடித்துவிட்டு, முழுநேரமும் கிரிக்கட் விளையாடிக்கொண்டு திரிந்த பொழுதுகள் அவை. இந்த சம்பவம் நடந்தது நள்ளிரவோ, பெரும் இருளிலோ அல்ல.
மாலை சுமாராக ஒரு 6.30 மணியிருக்கும்,
காலையில் படிக்காதுவிட்ட, தினப்பத்திரிகை ஒன்றை வீட்டு ஹோலில் இருந்து அந்தநேரம் படித்துக்கொண்டிருந்தேன். அந்தநேரம் வாசலால் உள்ளே வந்து வீட்டின் உள்பக்கமாக எனது அண்ணா சென்றுகொண்டிருந்தார்.
ஆனால் அவர் பின்னால் யாரோ வந்தது போல எனக்கு உள் உணர்வு உந்தவே பத்திரிகையில் நிலைத்திருந்த என் கண்கள், வாசலை நோக்கின.
ஈரக்குலை நடுங்கும் என்று சொல்வார்களே அதை சத்தியமாக அன்றுதான் நான் முழுமையாக உணர்ந்தேன்.
வாசலில் இடையில் இருந்த பகுதியால் உற்றுப்பார்த்தேன், அங்கே தந்தையாக இருந்து என்னை உருவாக்கிய எனது பெரிய தந்தையார் நின்றுகொண்டிருந்தார்.
என்னையறியாமல் என் உடல் நடுங்கத்தொடங்கியது, மனது என்றும் இல்லாத உணர்வையும், உடல் சமநிலை குழம்புவதுபோல ஒரு உணர்வும் ஏற்பட்டது.
ஏன் என்றால் எனது பெரிய தந்தையார் 1991ஆம் ஆண்டு காலமாகியிருந்தார்.
குறிப்பிட்ட நேரம்வரை அவரை என்னால் பார்க்கமுடிந்தது. அவரது பார்வையில், என்றுமில்லாத ஒரு பரிதாப உணர்வும், அன்பும் இருந்ததை அவதானித்தேன்.

சரி... சாவு நெருங்கியவர்களுக்குத்தான் இறந்தவர்கள் கண்ணில் தெரிவார்களாம் என்ற கதை அப்போது திரும்ப திரும்ப மனதுக்குள் வந்தது. சீக்கிரமே நான் இறந்துபோய்விவேன் என்று நான் முடிவே கட்டியிருந்தேன் அப்போது.
என்ன நடந்தாலும் அடுத்த இரண்டு நாட்கள் நான் வீட்டை விட்டு எங்கும் கிழம்பவில்லை. அனைவருடனும் தீடீர் என்று பெரும் பாசத்துடனும், அன்போடும் பழகினேன். நண்பர்கள் என்னை பார்த்து ஆச்சரியப்பட்டாலும் பயத்தில் அவர்களுக்குக்கூட நான் இந்த சம்பவத்தை கூறவில்லை. ஆனால் நான் நினைத்ததுபோல பிறகு ஒன்றும் நடக்கவில்லை.

அடுத்ததும் அதே ஆண்டுதான் 1997ஆம் ஆண்டு. கந்தர் சஷ்டி ஆறுநாளும் நல்லூர் ஆலயத்திற்கு சென்று வந்துகொண்டிருந்தேன். ஏன் என்றால் உயர்தரப்பரீட்சையில் நல்ல ரிசல்ட் வரவேண்டும் என்றுதான்.
ஏன் என்றால் சாதாரணதரப்பரீட்சையில் எனக்கு நல்ல பாடமாக இருந்தது.
அந்த பரீட்சையில் எனக்கு 4 டி மற்றும் 4 சீ வரும் என்று உறுதியுடன் நான் நம்பினாலும், யாரும் எடுக்காத ஒரு புதிரான ரிஸல்ட்டே எனக்கு கிடைத்தது.
எட்டு பாடமும் சீ.
ஆகவே என்னதான் படிச்சு ஒழுங்காக எழுதினாலும் எங்களுக்கு அப்பால் செயற்பாடுகள் உள்ளன என்ற நோக்கோடு உயர்தரப்பரீட்சை மிக முக்கிமானது என்பதால் கடவுளே நான் செய்திருக்கிறதுபோல, என் நம்பிக்கைபோல எனக்கு ரிஷல்ட் வரணும் குறைத்துவிட்டுடாதையப்பா என்ற கனவான் ஒப்பந்தத்தோடைதான் கந்தர் சஷ்டிக்கு கோவிலுக்கு போய் வந்தேன்.

அங்கே புதுமையான ஒருவரை இரண்டுநாட்களாக அவதானித்துவந்தேன். நோத் இன்டியன் சாயலில் இதற்கு முன் நான் அவரை கண்டுகொண்டதே இல்லை. பட்டு வேட்டியும், தங்க செயினும் போட்டு, நல்ல ரிச்சான லுக்கில்த்தான் இருந்தார்.
சுவாமி வலம்வரும்போது அனைவரும் சுவாமியுடன் வலம் வந்தாலும் இவர், சுவாமிக்கு நேரெதிராக சுவாமியை தியானித்தபடி பின்னாலேயே காலை வைத்து செல்வதை வித்தியாசமாக அவதானித்தேன்.
பொதுவாக சுவாமிவலம் வந்து பூசை முடிந்தபின்னர், நல்லூர் கேணிப்படியில் இருந்து கந்தர் சஷ்டி கவசம் படிப்பது அப்போதைய என் வழமை.
அப்படி படித்துக்கொண்டிருந்து படித்துமுடித்த நான் திடுக்கிட்டேன் ஏன் என்றால் அந்த நபர் எனக்கு முன்னால் இருந்து என்னை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார்.

'வித் யுவர் பர்மிஸன்.. ஐ வோன் ரூ ஸ்பீக் வித் யு சம்திங்' இந்த வசனம்தான் அவர் என்னுடன் முதன்முதல்பேசியது. அவரது நோத் இன்டியன் ரிச் லுக்கும், ஸ்ரைலான ஆங்கில உச்சரிப்பும் என்னை ஆச்சரியப்படுத்தின.
என்ன பேசவேண்டும் என்று கேட்டேன்.
அந்தநேரம் எனக்கு நடந்துகொண்டிருந்த சம்பவம் ஒன்றைச்சொல்லி மனிதர் என்னை திக்குமுக்காடச்செய்தார். மடை திறந்த வெள்ளம்போல பல விடையங்களைப்பேசினார். என் வாழ்வு எப்படி இருக்கும் என்று கட்டம் கட்டமாக சொன்னார். (இன்றுவரைக்கும் அவை சத்தியமான உண்மைகளாகவே உள்ளன.)
முற்பிறவியில் நான் ஒரு பிரித்தானிய வெள்ளை இனத்தவன் என்றார். (மனதுக்குள் விழுந்து விழுந்து சிரித்தேன்) ஆள்த்தான் ரிச்லுக், கிறம்மட்டிக்கல் இங்கிலீஸிலை தெரியிறார் மறை கழண்ட கேஸோ? என்றுகூட சந்தேகப்பட்டேன்.
நீ அப்படித்தானே நினைக்கிறாய் என்று அதையும் கேட்டார் அந்த ஆள்.

அப்படியே போராட்டம் அரசியல், என்று என்ன என்ன நடக்கும் என்று சொன்னார்.
எனது வலைப்பதிவு சத்தியமாக அத்தனையும் அப்படியே நடந்துவிட்டது.
அவர் சொன்னவகையறாக்கள் முடிய சில கட்டங்களே உள்ளதை என்னால் புரிந்துகொள்ளமுடிகின்றது.
இறுதியாக அவர் சொன்ன வசனம், 'இத்தனையும் நடந்த பின்னர் போனவன் திரும்பி வருவான், அதன் மூலமே நிரந்தரமான அமைதி திரும்பும்'
1948 களில போன வெள்ளையனா? 1990களில போன இந்தியனா? என்பதே இப்போது அது சம்பந்தமாக என் மனதில் உள்ள கேள்வி.
இறுதியாக அவர் எனக்கு சொன்னவைகள், நீ இன்றின் பின் என்னைக்காணமாட்டாய், எல்லாமே ஒரு கணிப்பில் நடப்பதுவே, இன்னும் பதினோர் வருடம் கழித்து என்போல் ஒருவர் உன்னிடம் பேசுவார் என்றார்.

ஜென்ரில்மனாக இருக்கும் ஒரு லூசிடம் மாட்டிக்கொண்டேனோ என்ற சந்தேகத்திலேதான் நான் கோவிலிலிருந்து புறப்பட்டேன். இது குறித்து மாலை என் நண்பர்களிடம் சொல்லி சிரித்தும் கொண்டேன். ஆனால் உண்மையாகவே அதன் பின்னால் அவரைக்காணவில்லை. ஆனையிறவு, கட்டுநாயக்கா, சமாதான பேச்சு, ஒருவரின் திடீர் மாற்றம், என்று அவர் சொன்னது ஒவ்வொன்றாக நடக்கும்போது இருதயம் படபடத்தது. பல நடந்துமுடிந்துவிட்டன சில நடக்க இருக்கின்றன.

2008 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், என் மனைவியின் தயாரின் கிருத்தியம் செய்வதற்காக இராமேஸ்வரம் சென்றிருந்தேன். இராமேஸ்வரம் கோவில் வீதியை தனிமையில் ஏதேட்சையாக சுற்றி வருகையில் ஒரு பெண், என்னைப்பார்த்து சிரித்து, அம்மாக்கு பசிக்குதையா ஒரு சாப்பாடு பார்சல் வாங்கிவா.. அடுத்த வருசம் உனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்குமய்யா என்றார்.
ஒரு பார்சலை வாங்கி வந்து கொடுத்தேன். சாப்பிட்டுக்கொண்டே பக்கத்தில் இரு ஐயா என்றார். புரியாமல் அவரைப்பார்த்து குழம்பினேன்.
ஆமா ராஜா..நல்லூர் ஐயா சொன்னது நெசந்தான் என்றார்.

Friday, July 1, 2011

ஹொக்ரெயில் - 01.07.2011

டயானா இறக்காமல் இருந்திருந்தால்...

பிரித்தானிய இளவரசியாக இருந்த டயானா இறக்காமல் இன்று இருந்திருந்தால் இன்று தனது 50ஆவது பிறந்ததினத்தினை கொண்டாடியிருப்பார்.
ஆனால் விடயம் அதுவல்ல.
இளவரசி டயானா இறக்காமல் இருந்திருந்தால் என்னென்ன நிகழ்வுகள் அவர் வாழ்வில் நடந்திருக்கும், அவர் எப்படி செயற்பட்டிருப்பார் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல்; பற்றியும், நியூஸ்வீக் பத்திரிகை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அட்டைப்படமும்தான் இப்போது பேச்சு.
பங்களாதேசத்தை பூர்வீகமாகக்கொண்ட பெண் எழுத்தாளரான மொனிக்கா அலி என்ற பெண்மணியே இந்த நாவலை எழுதியுள்ளார். ஏற்கனவே இவர் எழுதிய 'பிரிக் லேன்' என்ற நாவலுக்கு 2003 ஆம் ஆண்டு பிரிட்டனின் சிறந்த ஆங்கில நாவல்களுக்கான விருதினையும் இவர் பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த நாவலில் 31ஆம் நாள் ஆகஸ்ட்மாதம் 1997ஆம் ஆண்டு, விபத்துக்குள்ளான அந்த கார் பயணத்தில் டயானா ஈடுபடாமல் இருந்திருந்தால்... என்ற கோணத்தில் கதை ஆரம்பிக்கின்றது.
அத்தோடு டயானாவின் செயற்பாடுகள் சில எவரும் நினைத்துப்பார்க்காத விதத்தில் அமைந்தும் உள்ளதை அவதானிக்கமுடிகின்றது.
இதேவேளை புதிதாக திருமணம் செய்திருக்கும் டயானாவின் மூத்த மருமகள் ஹேட் மீது டயானா சிறிது பொறாமை கொண்டவராக சித்தரிக்கப்பட்டிருக்கின்றார்,
அதேபோல் இந்த நாவலில் டயானா என்ற மக்கள் விம்பத்தை நொருக்கும்படி டயானாவின் சில நடவடிக்கைகளை நாவலாசிரியை எழுதியுள்ளமை பெரும் சர்;சைகளை உருவாக்கியும் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
அதேபோல பிரபலமான சமூக இணையதளங்களான பேஸ்புக், ருவிட்டர் என்பவற்றில் டயானவை பின்பற்றுவோர் 10 மில்லியனை தாண்டிருப்பதாகவும், சமுக இணையத்தளங்களில் டயானாவின் கருத்துக்கள் எப்படி எழுதப்பட்டிருக்கும் என்றும் இந்த நாவலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற ரீதியில் தான் இந்த நாவலை எழுதவில்லை எனவும், டயானா பற்றிய முழுவிபரங்களையும், அவர் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை அவரது குணாம்சங்களை ஆராய்ந்து, அவரது உளவியலை அறிந்தே இந்த நாவலை எழுதியுள்ளதாகவும் மொனிக்கா அலி தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ... இந்த நாவல் உலகில் உள்ள மற்ற பிரபலங்கள், தலைவர்கள் மரணிக்காமல் இருந்திருந்தால் எப்படி உலகம் இருந்திருக்கும் என்றகோணத்தில் பல நாவல்களை எழுத முன்னோடியாக உள்ளது என்பது மட்டும் உண்மை.
நான் கூட எப்போதும் 2ஆம் உலகப்போரில் ஹிட்லரின் கீழ் உலகம் சென்றிருந்தால், ஜெர்மன் வெற்றி பெற்றிருந்தால் இந்த உலகின்போக்கு எப்படி இருந்திருக்கும் என்று அடிக்கடி சிந்திப்பது உண்டு.

இதோ இதுதான் அந்த ஜர்ஸகும்ப...(சரச கும்பம்)

இமாலையப்பகுதியல் நேபாள சரிவோரம் 4000 மீட்டர் உயரத்தில் ஒரு விதமான மூலிகைகள் தன் பாட்டுக்கு வளர்கின்றன. குறிப்பிட்ட ஒரு பருவகாலத்தில் அவை பெருகுவது அதிகமாக உள்ளது. இந்த நிலையில் அந்தப்பருவகாலத்தில் அந்த குறிப்பிட்ட மூலிகையினை உண்பதற்காக அந்த இடத்தில் நம்ம ஊர் மயிர்க்கொட்டிகளை போல ஒரு வகைப்பூச்சிகள் இந்த மூலிகைகளை உண்டு வருகின்றன. மஞ்சள் நிறமான இந்த பூச்சி இனங்கள் குளிர்காலத்தில் ஒரு தேக்கநிலையினை அடைகின்றன அந்தவேளையில் அனிச்சை செயலாக இந்த பூச்சியினங்கள்மேல், தாவர ஒட்டுண்ணியான காளான் வளரத்தொடங்குகின்றன. ஒரு கட்டத்தில் காளானின் அதிக ஆதிக்கத்தினால் பூச்சி காளானால் சுவீகரிக்கப்ட்டுவிடும்.
இதன் பின்னர் குறிப்பிட்ட சில நாட்களின் பின்னர் இந்த காளான்கள் பறிக்கப்படுகின்றன.
இவற்றில் இருந்து பெறப்படுவதே இந்த சரச கும்பம்.
மூலிகை, பூச்சி, காளான் என்பவற்றின் சக்திகள் இதில் அடங்கியுள்ளதால், இது பெரும் சக்தி வாய்ந்த வீரியமான மருந்தாக கூறப்படுகின்றது.
ஆண்மையை அதீதமாக பெருக்குவதாகவும், அதேபோல வாதம், இருதயநோய், உடல் நோக்களை இல்லாது செய்யும் சக்தி இந்த சரச கும்பத்திற்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இமாலைய வயகரா அல்லது இயற்கை வயகரா என்று சொல்லப்படும் இது குறிப்பிட்ட ஒரு காலத்தில் பல இலட்சம் டொலர்களை வருமானமாக தருவதாக இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய காட்சி



ஷீ தமிழ் தொலைக்காட்சியில் நாகதேவதை

ஷீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணியில் இருந்து 10 மணிவரை வார நாட்களில் நாகதேவதை என்ற தொடர் ஒளிபரப்பாகிவருகின்றது. இது தற்போது பெரும்பாலானவர்கள் பார்க்கும் ஒரு வித்தியாசமான தொடராக இருக்கின்றது.
(நான் உட்பட)
இச்சாதாரி பாம்பு, நாகமாணிக்கம், மாணிக்கத்தை வைத்து நகரும் கதை என்ற பழைய அரைத்தமாதான் என்றாலும் தொடர் சென்றுகொண்டிருக்கும் விறுவிறுப்பும் சுவாரகஸயமும் சிறப்பாகவே உள்ளது.
இச்சாதாரி பாம்பு, ஆண்பாம்பின் இறப்பு, பெண்பாம்பு பழிவாங்கத்துடிக்கும் தன்மை என்பனவற்றை பார்த்து ஆஹா... இதென்ன 'நீயா' புதுகோணத்தில் வருதுபோல என்று தோன்றினாலும் இப்போது பாம்புகளுக்குள்ளேயே பகைமைகள் இருப்பதும், பாம்புகள் மனிதருக்குள் வந்து மனிதராக வாழ்வதும் சுவாரஸ்யமாகவே உள்ளன.
அட.. நைட் டைம் வன் ஹவர்தானே.. எத்தனை காதிலை பூசுத்துற படங்களையே பார்த்திட்டம், பொழுதுபோக்கா இதை பார்த்தால் என்ன குறைந்தா போகப்போகின்றது?

மியூஸிக் கபே
தமது குடும்பத்தில் ஒரு புதிய உதயத்திற்காக காத்திருக்கும், மகிழ்ந்திருக்கும் இந்தக்குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்.ஹஜிராரே...ஹஜிராரே ஹஜிராரே தெரே ஹாரே ஹாரே நய்நா...

இந்தவார வாசிப்பு..ரஷ்ய சிறுகதைகள்

எப்போதுமே வேற்றுமொழிக்கதைகள்மேல் எனக்கு அப்படியொரு அலாதியான ஈடுபாடு உண்டு. அந்த வகையில் கடந்தவாரம் என் கைகளில் கிடைத்த புத்தகம் பாவை பப்ளிகேசன் வெளியீடான பசுமைக்குமாரின் மொழிபெயர்ப்பில் வந்த தேர்ந்தெடுத்த சில ரஷ்ய சிறுகதைகள் கொண்ட தொகுப்பு புத்தகமான ரஷ்ய சிறுகதைகள்.
இரண்டு குளிர்காலங்களும் மூன்று கோடைக்காலங்களும், வியத்தகு சம்பவம், இலட்சிய மனைவி, தொலை உணர்வில் ஒரு பாடம், சோதனை மிகுந்த நேரம், மந்திரவயலின், அரங்கேற்றம், பிளையரி 'எஸ்', குப்பையில் கடந்த டயரி, ஓநாயும் பட்டினியும், ஒரு கணித மேதையின் விசத்திர உயில், மணல் நகரம், மகிழ்ச்சி தரும் விபத்து, ககாரின் கதைகள் போன்ற கதைகள் உள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆசிரியர்கள் எழுதிய ரஷ்ய சிறுகதைகளை மொழிபெயர்ப்பாளர் பசுமைக்குமார் இதில் தந்துள்ளமை சிறப்பு.
வௌ;வேறுபட்ட உணர்வுடைய, வௌ;வேறு பட்ட வர்க்க, இட, காலங்களைக்கொண்ட கதைகள் இவற்றில் கலந்து தரப்பட்டிருப்பது இதில் மற்றும் ஒரு சிறப்பாக உள்ளது.
பொதுவான ரஷ்யக்கதைகளின் முத்திரைகள் விழாத கதைகளாக இவை இருப்பது கொஞ்சம் ஏமாற்றமும்தான்.


ஜோக் பொக்ஸ்
இது நகைச்சுவை மட்டுமல்ல யதாதத்தமும் கூட..

LinkWithin

Related Posts with Thumbnails