Monday, November 4, 2013

மணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............


சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத விஞ்ஞான பூர்வ திரைக்கதையாகவும் மணிரட்னத்தினால் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது இந்த திரைப்படம். 3014 ஆம் ஆண்டு நடப்பதாக சித்தரிக்கப்படும் இந்த திரைப்படம் வெளிவந்தால் சரியாக ஆயிரம் ஆண்டுகளின் பின்னரான உலகம், விஞ்ஞானம் என்பன பற்றிய மணிரத்னத்தின் சாத்தியமான அசாத்திய கற்பனையை எண்ணி அனைவரும் பேராச்சரியப்படுவர், அதேவேளை தமிழிலும் ஒரே வேளையில் இந்த படம் எடுக்கப்படுவதால் தமிழ் எழுத்துத்துறையில் விஞ்ஞான பூர்வக்கதைகளின் முன்னோடி அமரர் சுஜாதா என்பதுபோல, திரையிலே மணிரட்னம் மிளிர்வார் என  திருமதி சுஹாசினி மணிரட்னம் தெரிவித்துள்ளார்.
அரசல் புரசலாக உலாவரும் கதை இதுதானாம்.........

3014ஆம் ஆண்டு உலகம் விஞ்ஞானத்தின் உச்சக்கட்டத்தில் நிற்கின்றது, தமது எண்ணப்படி நட்சத்திர தொகுதியின் வடிவமைப்பினை, பாதையினை மாற்றிப்போடும் வல்லமையினையே முக்கிய விஞ்ஞானிகள் பெற்றிருக்கின்றார்களாம்.
அதிலும் குறிப்பாக இந்தியாவே அன்றைய நாளில் விஞ்ஞானம் மற்றும் சக்தி மிக்க நாடாக விளங்குகின்றது!
உலகிலேயே மிக அதி உச்ச விஞ்ஞானியாக 'சிவ் சங்கர்' என்ற பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிவ்சங்கர் விஞ்ஞானத்தின் உச்சத்தையே கடந்தவராக உருவகிக்கப்படுகின்றாராம். புதிய பிளனட்களை உருவாக்கவும், பாதுகாக்கவும், அவற்றுக்குத்தேவையான வாயுக்களை கொண்டு சென்று உயிரியல் பரினாமத்துக்கு உதவவும், அதை அழிக்கவும், பின்னர் பிரபஞ்சத்தில் இருந்தே அதை மறைத்துவிடவும் அவரால் முடியுமாம்.

நீண்டகாலமாக அவரது உதவியாளராக அவருடன் இருந்து அறிவியல் கற்றவராக இந்த திரைப்படத்தின் வில்லன் 'பத்மசூர்' என்ற பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாம். 
ஒரு கட்டத்தில் விஞ்ஞானி சிவ்சங்கரிடமிருந்து பிரிந்து, அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விஞ்ஞானத்தை வைத்தே அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றராம் வில்லன்.
பல இயற்கை தத்துவங்களையே மீறி பிரபஞ்ச அமைப்புக்கே பேராபத்தை உண்டாக்க தனது செயற்பாடுகளில் இறங்குவாராம் வில்லன் பத்மசூர்.

இந்தவேளை இயற்கை தத்துவத்தை காப்பாற்ற பல வழிகளில் முயற்சிகளை மேற்கொள்ளும் விஞ்ஞானி சிவ்சங்கர் இறுதியில் வில்லன் பத்மசூரை அழிப்பதாக பிரமானம் எடுக்கின்றார்.
பால்வீதிக்கு அப்பால் உள்ள சூனியப்பிரதேசமொன்றில் உள்ள தனது இரகசிய ஆய்வுகூடம் ஒன்றில் தனது நம்பிக்கையான விஞ்ஞானத்திற்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்த ஆறு பெண்களுடன் ஆராட்சியில் ஈடுபடுகின்றார்.
இறுதியில் வில்லனை அழிக்கவல்ல சக்திவாய்ந்த ஒருவனை உருவாக்க முடிவு செய்கின்றார் குளோனிங் முறையில்.

தனது புருவ மேட்டில் இருந்து ஆறு சக்திவாய்ந்த செல்களை கண்டறிந்து அவற்றை அக்கினி சக்தியுடன் ஒரு சக்தி பீடத்திற்கு கடத்துகின்றார், பின்னர் பிரபஞ்வெளிக்கு கொண்டு செல்கின்றார், அதன் பின்னர் சக்தி மிக்க பிரபஞ்ச காற்றுக்களால் அதை மேலும் வலுவூட்டி இறுதியாக நீரிலே அந்த சக்திகளை மிதக்கவிட்டு ஒன்றாக்கின்றார். 
ஓளிபடைத்த நாயன் ஒளிர்கின்றான்......... அவனுக்கு இந்த ஆறு விஞ்ஞானிப் பெண்களும் அனைத்தையும் கற்றுக்கொடுக்கின்றனர்.....
இயற்கையை இயல்பாக்க அவன் தயாராகின்றான் பெரும் பிரபஞ்சவெளிப்போருக்கு.... அவனுக்காக பிரத்தியேகமாக வடிவமைத்திருந்த பீக்கொக் என்ற பிரபஞ்ச 'வோர் ஸ்பேஸ் ஸிப்பை' அவனுக்கு கொடுக்கின்றார் விஞ்ஞானி சிவ்சங்கர். அப்புறம் என்ன நாயகன் வில்லனுக்கடையிலான பிரபஞ்ச சமர்தான் கிளைமாக்ஸ்.....

அட இன்னும் இது கடவுள் முருகனுடைய கதை என்பது புரியாவிட்டால் நான் என்ன செய்ய........ சும்மா கந்தர் சஸ்டி காலத்திலை வித்தியாசமாக சிந்தித்தால் இப்படி ஒரு பதிவு. எல்லாம் ஒரு தமாசுக்குத்தான். மணி சார் உட்பட அனைவரும் மன்னிச்சுடுங்கடா சாமி...

LinkWithin

Related Posts with Thumbnails