Wednesday, March 24, 2010

ஹப்பி பேத்டே


தேச பிதா சேனாநாயக்க தோற்றுவித்த கட்சி
தேசத்து மக்கள் தரம் உயர்த்தியதொரு காலம்
காலமெல்லாம் செங்கோலுடன் இதுதான் என்றெண்ணி
காத்திரமாய் அரசமைப்பு சட்டம்போட்டார்
ஜூலியன் ரிச்சர்ட் ஜெயவர்த்தன…
உண்மையும் அதுதான்.. மறுப்பதற்கில்லை
ஜேஆர் போல சாணக்கியன் வரலாற்றில் இல்லை
அவர்போல் வெற்றி என்பது இனி எப்போதும் இல்லை.
என்ன செய்ய??? கணிப்புகள் சில தவறுமே..
ஆனைக்குத்தான் கட்டாயம் அடி சறுக்குமே??

அரசியலில் அவர் வாரிசே..தொடர்ந்தும்
அலட்சியப்பணமாகின்றார்…
கஜினி முஹம்மது பற்றியும் கேள்விப்பட்டிருக்கின்றோம்..
13 இலோ…16 ஆவதிலயோ அவர் வென்றார் அல்வா???

சுதேச பல்கலைக்கழகத்தில் பயின்ற
உண்மையான கல்விமான், வழக்கறிஞன்
இளவயதிலேயே அமைச்சரவையில் அந்தஸ்து.
இளைஞர் விவகார துறையில் சகரம் தொட்டர்
தேடல்கள் மூலம் பூரண அறிவுகள் பெற்றவர்..
மேலைநாட்டு நடைமுறைகளை நன்றாக அறிந்தவர்..
வல்லவர், நல்லவர், கனவானெனப்பல பெயர்கள் பெற்றவர்!!

முப்பதுகள் தாண்டிய அரசியல் அனுபவம்!!
முப்பரிமானமாக நோக்கும் வல்லமை
இத்தனை இருந்தும், வெற்றிகள் தூரப்போனமை ஏன்???
யோதிடத்தில் நம்பிக்கை இல்லை
இருப்பினும் நன்றாக பார்க்கவேண்டும் இவர் யாதகத்தை..

யானை கொஞ்சம் படுத்தாலே சுண்டெலிகள் ஏறிவிளையாடும்!
யானை மயங்கியே விழுந்துவிட்டால் நிலைமைகள் இப்போ நிதர்சனம்..
இருந்தாலும் பறவாய் இல்லை!! அடுத்து பொதுத்தேர்தல்
ஏழுவருடத்தின் பின் ஜனாதிபதித்தேர்தல் வரும்தானே!!
அதைவிடுவோம்…
ஹப்பி பேத்டே சேர்…

Friday, March 19, 2010

எல்லோரும் ராஜான்னா! பொதுமக்கள் யாரு??


எதிர்வரும் ஏப்ரல் 08ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தேர்தல் இடம்பெறவுள்ளது பச்சைக்குழந்தைக்குக்கூட தெரிந்த விடயம்தான். இருந்தபோதிலும் இந்த முறை இடம்பெறவுள்ளதேர்தல் எங்கள் அரசியல்வாதிகள் ஒவ்வொரு தடவையும் சொல்லுகின்றதுபோல முக்கியமான ஒரு தேர்தல்தானாம். இருந்தபோதிலும் இந்தமுறையாவது நடைமுறைகளை உன்னிப்பாக கவனித்து மக்கள் யதார்த்த ரீதியில் வாக்களிப்பார்களோ என்பது இன்னும் சந்தேகம்தான்.

சரி விடயத்திற்கு வருவோம். யாழ்ப்பாணத்திலும் தேர்தல் படு சூடு பிடித்து வருகின்றது. ஓவ்வொரு கட்சி காரர்களும், ஏராளமான சுயேட்சைக்காரர்களும் சனங்கள் புதிதாக கட்டி பெயின்ட் அடித்திருக்கும் மதில்களை மேலும் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றார்கள், (தங்கள் திருமுகங்களை அதில் ஒட்டி.) குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் தாய்மார்கள்… அந்த தேர்தல் விளம்பரங்களைக்காட்டி … இந்தா…வடிவா, ஒழுங்கா சாப்பிடு ! இல்லாட்டி அந்த பூதம் வந்து பிடித்துக்கொண்டு போகும் என்று அந்த விளம்பரங்களைக்காட்டியே பிள்ளைகளை பயம்காட்டி சாப்பிட வைக்கின்றார்கள்.

சரி விடயத்திற்கு வருவோம்…இந்த முறை யாழ்ப்பாணத்தில் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கும் நபர்களின் எண்ணிக்கை ….அடேயப்பா.. இந்திய லோட்சபா அங்கத்துவர்களின் எண்ணிக்கைக்கு சமனாக இருக்கின்றது.
ஒரு ஜனநாயக நாட்டில் அந்த நாட்டின் குடிமகனாக பிறந்து உரிய வயதையுடைய சித்தசுவாதீனம் உள்ள எவரும் போட்டியிடலாம்தான் அதில் பிழை என்று சொல்வதுக்கும் ஒன்றும் இல்லைத்தான். ஆனால் அதற்காக இப்படியா??? தண்ணீர் ஊற்றியா வளர்த்தோம் சர்வேசா….!!!

பிரபலமான முன்னணி ஆசிரியர்கள், பிரபலத்தை இன்னும் தேடிக்கொள்ள விரும்பும் வர்த்தகர்கள், பென்சன் வாங்கிய சில பேராசிரியர்கள், இளைப்பாறிய சில அரசாங்க உத்தியோகத்தர்கள், அங்கங்கை வால்பிடித்தவர்கள், முன்னாள் சிலபேருடைய குடும்ப அங்கத்தவர்கள், தமிழில பொங்கி ஆடிப்பாடி படையல் வைத்து, ஐந்து நூற்றாண்டுகள் சென்றன …. என்று பாட்டுபாடிவிட்டு, இப்போது , அதிகாரவர்க்கத்தின் நேரடிவழிகாட்டலில் களம் இறங்கியிருக்கும் சிலர், பாராளுமன்றத்தில் 22 சீட் எடுத்து விட்டு , மிக முக்கியமான நேரங்களில் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டு மூன்று மூன்று மாத இடைவெளிகளுக்குள் நாட்டுக்கு வந்துபோன வீணாப்போனவர்கள்… சும்மா இருந்த மாணவர்களை உசுப்பேத்தி உடுக்கடித்து உருவேற்றிவிட்டு, அந்த இளைஞர்களின் வாழ்க்கையினையே பறித்துவிட்டு, வெளிநாடுகளில் உல்லாசமாக வாழ்ந்துவிட்டு வந்துநின்று, இன்றும் பல்கலைக்கழகத்தை இழுக்கப்பார்க்கும் ஈனப்பிறவிகள்……இன்னும் சில கோமாளிகள் என்று பலபேர் வெளிக்கிட்டிருக்கின்றநார்கள் ஜனநாயகத்தின் பெறாமக்கள்.

இதற்குள் வேலைவாய்ப்பு தருவோம், தொழில்த்துறையினை முன்னேற்றுவோம், கல்வியை மேம்படுத்துவோம் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சொல்வது படு காமடியாக இருக்கின்றது.

என்னதான் பிரச்சினைகள் இருந்தபோதிலும், இலங்கை பாராளுமன்றம் என்றால் அதற்கென்றொரு கௌரவம் பேணப்பட்டுவந்தது. இலங்கை அரசியலிலும் அந்த கொளரவம் கொஞ்சம் இருந்துதான் வந்தது. ஆனால் இன்று!!! மெல்ல மெல்ல , இந்திய அரசியலைப்போலவே இங்கும் நிலை சென்றுகொண்டிருப்பது மிகவும் தேனைதருகின்ற சம்பவமாகும். அதுகும் யாழ்ப்பாணத்தில் பலர் குட்டி ராஜாக்களாவதற்கு பேராசை கொண்டிருப்பது, அழுவதா சிரிப்பதா என்ற நிலைக்கு மட்டுமே கொண்டு செல்கின்றது.

எது எப்படியோ….வாக்கு சீட்டு மக்களின் கைகளில்த்தானே!!! இருக்கின்றது !!மக்களே சிந்தித்து தங்கள் தலைவிதிகளை நிர்ணகித்துக்கொள்வார்கள். தேர்தல் முடிவுகள் அவற்றை வெளிக்காட்டும். ஆனால் நெஞ்சில் நிற்கும் ஒரே கேள்வி? எல்லோருமே “ சஞ்சை ராமசாமி ஆகிவிட்டார்களா”??? எல்லாமே மறந்துபோச்சா???? சுயநலங்கள் மட்டும்தான் உங்கள் நோக்கமா??????

Tuesday, March 16, 2010

பங்குனித்திங்களும் பண்டித்தளச்சியும்


யாழ்ப்பாண சைவத்தமிழ் மரபில் சில தினங்களில் சில தலங்கள் மிகப்பிரசித்தமானதாகவும் குறிப்பிட்ட சில நாட்களில் யாழ்ப்பாணமே திரண்டு ஒரு இடத்தில் ஒன்றுகூடி விழா எடுப்பதும் ஒரு சிறப்பான அம்சமாகும்.தெய்வபக்தி, ஆன்மிகம் என்பவற்றைத்தாண்டி, காலகாலமாக ஒரு சமுதாய மரபு பல பரம்பரையினரிடையே கொண்டு செல்லப்பட்டு இன்றும் தொடர்ந்து கைக்கொள்ளப்படுவது இங்கு மிகச்சிறப்பான ஒரு அம்சமாகும்.

அந்த வகையில், யாழ்ப்பாண நகரில் இருந்து வட கிழக்காக தென்மராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமமே மட்டுவில் என்னும் மருதநிலம் சார் ஊராகும். அங்கு சிறப்பம்சம் பொருந்திய ஒரு தலமாக உள்ளது மட்டுவில் பண்டித்தளச்சி கண்ணகை அம்மன் தேவஸ்தானமாகும்.
தமிழில் பங்குனி மாதம் தொடங்கியவுடன், வரும் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும், யாழ்ப்பாணத்தின் மற்ற அனைத்து ஊர்களில் இருந்து ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் பெருந்தொகையான மக்கள் இங்கு வந்து குவிவது சிறப்பான ஒரு அம்சமாகும்.

பெரும்பாலும் உற்றாரும் சுற்றத்தாரும் தமது ஊர்களில் இருந்து பெரிய பொங்கல்பானைகள், பாளைகள் என்பவற்றை வாகனத்தில் எடுத்துவந்து, காலைவேளையே இங்குவந்து ஒன்றுகூடி இங்குள்ள தேவஸ்தான கேணியில் நிராடிவிட்டு, அம்பாள் தரிசத்தை முடித்துவிட்டு, பொங்கல்வைத்து, மடைவைத்து வணங்கி அனைவருடனும் பகிர்ந்து உண்டு மகிழ்வது சிறப்பான ஒரு அம்சமாக இன்றும் தொடர்ந்து இடம்பெற்றுவருவது சிறப்பம்சமாகும்.

இங்கு முக்கிமானதாக ஒன்றினை குறிப்பிடவேண்டும், ஆம் அதுதான் இந்த ஊரான மட்டுவில் என்ற ஊரினையே அடைமொழியாக வைத்து இங்கு மட்டுமே பயிரடப்பட்டு, சந்தைக்கு வரும் மட்டுவில் கத்தரிக்காய். நல்ல உறுண்டையாக வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்தக்கத்தரிக்கயை, தேங்காய்ப்பால் நிறையவிட்டு, கறிசமைத்து, வெண்பொங்கல் பொங்கி இங்கு உண்பதே பெரும்பான்மையான மக்களின் வழக்கமாக இருந்தது. இருந்தபோதிலும், இந்த இன கத்தரிக்காய்கள் இப்போது அறவே அழிந்துபோய்விட்டமை மிக மிக வேதனையான ஒரு விடயமே.

யாழ்ப்பாணத்தில் அருகிவரும், அழிந்து சென்ற பயிரினங்கள், மரங்கள்!! என்பவை பற்றி முன்னர் ஒருதடவை எழுதிய சக பதிவர் நண்பர் தங்கமுகுந்தன் அவர்கள் இது குறித்து அப்போது தகவல்களை தந்திருந்தமையினை இங்கு நினைவு படுத்துகின்றேன்.

எது எப்படியோ, பெரும்பாலான மக்கள் இன்றும் தமது மரபு மாறாது பங்குனித் திங்களுக்கு இங்கு வந்து ஒன்று கூடுவது இன்றும் தொடர்வது மனதுக்குள் சந்தோசமே. பல வகையான நேத்திக்கடன்களும் இங்கு நடைபெற்றுவருவது வழமை. காவடி, முடி எடுத்தல், குழந்தைகளுக்கு காது குத்தல், புது வாகனங்களை பூசை செய்தல் என்பவை இந்த தினங்களில் அதிகமாக இடம்பெற்றுவருகின்றன.

கடந்த பல வருடங்களாக யாழ்ப்பாணத்திற்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் இடையிலான தரைவழிப்பாதை தடை செய்யப்பட்டிந்தது. எனினும் இந்த தடவை இந்தப்பாதை 24 மணிநேரமும் திறக்கப்பட்டு, மக்கள் சுதந்திரமாக ஏனைய பிரதேசங்களுக்கும் சென்றுவருவதனால் இம்முறை அதிகமான மக்கள் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கலாம். நேற்றைய தினமே அதிகளவிலான மக்கள் வரத்தொடங்கியுள்ளமையும், தென்னிலங்கை வர்த்தகர்கள் கோவில் சுற்றாடல்களில் தமது வர்த்தக நிலையங்களை கொண்டுவந்து மடை விரித்துள்ளமையினையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

தற்போது புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் வாழ்ந்துவரும் ஈழத்து இதயங்கள் பலவற்றிலும், இந்த பங்குனித்திங்களும், பண்டத்தளச்சி கண்ணகை அம்மன் கோவில் பொங்கலும் பசுமையான ஒரு நினைவாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. நேற்றைய தினம்தான் முலாவது திங்கள் என்பதால், இன்னும் நான்கு பங்குனித்திங்கள் வர இருப்பதனாலும் மேலும் சிறப்பான தகவல்களையும் உங்களுடன் பகிர தயாராக உள்ளேன்.

Monday, March 15, 2010

யாழிலிருந்து..மீண்டும் பதிவுகளை தொடரும் உங்கள் நண்பன்…


ஒரு நாள் பதிவு எதனையும் இடாது இருந்தாலே மனதுக்குள் ஏதோ உறுத்துவதுபோல இருக்கும்.. கொழும்பு, சென்னை போன்ற இடங்களில் வேலைப்பழுக்கள் மற்றும் கற்றல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் இடையிலும் கிடைக்கும் நேரத்திற்குள் பதிவுலக நண்பர்கள், பதிவுகள் மூலம் கிடைத்த நண்பர்கள், நலன் விரும்பிகள் என அத்தனை நண்பர்கள், ஆதரவாளர்களின் ஒத்துளைப்புடன் பதிவுகளை தொடர முடிந்தது. இருந்தபோதிலும்…கடந்த இரு மாத காலமாக பதிவுகளின் பக்கம் மட்டும் அல்ல, கணினியின் முன்னாள் இருப்பதற்கே நேரம் கிடைக்காமற்போனது என்னையும் மீறிய செயலாகிவிட்டது.

இருந்தபோதிலும், நிரந்தரமான, அதேவேளை ஒரு கௌரவமான தொழில் ஒன்றுடன் சொந்த மண்ணிலேயே (யாழ்ப்பாணம்) பணியாற்றி வாழும் பாக்கியம் தற்போது எனக்கு கிடைத்துள்ளமையினை பதிவுலக நண்பர்கள் அனைவருடனும் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இனிவரும் காலங்களிலும், எனக்கு கிடைத்த புலம்பெயர் நாட்டு பதிவுக நண்பர்கள், தமிழக, குறிப்பாக சென்னை பதிவுலக நண்பர்கள் மற்றும் என் சக இலங்கைப்பதிவர்கள் ஆகியோருடன் ஒன்றாக கைகோத்து பதிவுலத்தில் மீண்டும் புதுவித உத்வேகத்துடன் வலம் வருவேன் என்ற நம்பிக்கை மனதுக்குள் ஆணித்தரமானதாக உள்ளது.
அடடா..நண்பர்களே..எத்தனை ஞாயிற்றுநக்கிழமை ஹொக்ரெயில்கள் இன்னும் பென்டிங்கில் உள்ளது… கவலைப்படாதீர்கள்.. நிரம்ப நிரம்ப ஊற்றிக்கொடுக்க இப்போ நான் தயார்…

ஸியேஸ்……

--வித் ஜனா

LinkWithin

Related Posts with Thumbnails