Saturday, October 31, 2009

2012 இன் பயங்கரம்?


2012 இல் உலகம் அழிந்துவிடும், ஒரு ஈ கூட மிஞ்சாது, எல்லாப்பயலுகளும் செத்துப்போகப்போறீங்களடா, அதுவரை ஆடுங்கள் என்று ஆளாளுக்கு அள்ளி விட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இதல் உண்மை எது, பொய் எது என்று அந்த வருடம்தான் பதிலளிக்கவேண்டும்.
இது தொடர்பாக பல உலக சஞ்சிகைகளும், இணையதளங்களும் தங்கள் பாட்டிற்கு பீதியை கிளப்பிக்கொண்டிக்கின்றார்கள். இதில் உலகில் அனேகமானோர் விஜயம் செய்யும் இணையம் ஒன்று “2012 இல் உலகத்தின் முடிவு” என்ற பெயரில் குறிப்பிட்ட தினம் வரும் தினத்தில் இருந்து ஒவ்வொரு செக்கனாக கவுண்டவுண்வேறு போட்டுக்கொண்டிருக்கின்றது.


இந்த நிலையில் உலகமே உன்னிப்பாக பார்க்கும் ஒருவிடயத்தை ஹாலிவூட் உலகம் சும்மா பார்த்துக்கொண்டிருக்குமா? அனைவரும் எதிர்பார்த்ததுபோலவே 2012 என்ற பெயரில் மிகப்பிரமாண்டமாக உலக முடிவினை காட்ட எடுக்கப்பட்ட படம் எதிர்வரும் நவம்பர் 13ஆம் நாள் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படம் பற்றியும் பல இணையங்கள், பல சஞ்சிகைகள், பல வலைப்பதிவுகளில் தகவல்கள் வந்துவிட்டதால், மீண்டும் அதை சொல்லவேண்டிய தேவை இல்லை. இருந்தபோதிலும் நவம்பர் 13ஆம் நாள் உங்களுக்கும் ஆர்வத்தை உருவாக்கவேண்டாமா? அதற்காகத்தான் இந்தப்பதிவு.


அந்த திரைப்படத்தின் ஸ்டில்களை அடுக்கிவிடுகின்றேன். திரையில் அந்தக்காட்சிகளை கண்டிப்பாக பாருங்கள், பார்ப்போம்..
“டே ஆவ்ரர் ருமாறோ” என்ற திரைப்படம் வெளிவந்து அதை பார்த்துவிட்டு, இப்படி எல்லாம் தண்ணீர் வந்து ஊர்மனைகளை அழிக்குமா என்ன? என்று ஏழனம் செய்தவர்கள் எல்லாம் 2004ஆம் ஆண்டு வாயை முடிக்கொண்டோம்; அல்லவா?
எதற்கும் 2012 திரைப்படத்தையும் பார்த்துவைப்போமே..















Friday, October 30, 2009

மெல்லத் தமிழ் இனி...???


இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முதலில் வெளிவந்தது "தொல்காப்பியம் எனும் தமிழ் நூல்" . தமிழ் மொழியின் சான்றினை நிரூபிப்பதற்கு தமிழர்களின் கையில் கிடைத்துள்ள நூல் அதுவே.
இது ஒரு இலக்கண நூல் என்பதனால் இதற்கு முன்னரே பல தமிழ் இலக்கிய நூல்கள் வெளிவந்திருக்கலாம் என எண்ணத்தோன்றுவதிலும் எந்தவித பிழையோ அல்லது மெருகூட்டலோ இருந்துவிடுவதற்கு இடமில்லை.
இதனால்த்தான் தமிழின் தொன்மை பற்றி எழுதவிளைந்த தமிழர்கள் "மனித இனம் வேட்டையாடித்திரிந்த கற்கால நாகரிகம், மற்றும் அவர்கள் ஆற்றுவெளியினை அடைந்து நிலத்தை அடிப்படையாகக்கொண்டு வாழ முனைந்த (மந்தை மேய்த்தல், விவசாயம்) காலங்களுக்கு முற்பட்ட தொன்மையினை குறிப்பதற்காக "கல்தோன்றா, மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ் என கூறிக்கொண்டனர்.

அடுத்துவந்த சங்க கால இலக்கியங்களும், மிக மகோன்னதாமாக உள்ளது. தமிழர்களின் வாழ்க்கை முறைமைகளும், கலை எழுச்சி, ஏனைய துறை அறிவுகள் என்பவை அந்த இலக்கியங்களை படிக்கும்போது எங்களை பிரமிக்க வைக்கின்றது.
ஏனெனில் அன்று வாழ்ந்த தமிழர்கள் உலகலாவிய ரீதியில் சகலகாலா வல்லவர்களாக தமக்கேயான அறத்துடனும், காதலுடனும், நேரம் ஏற்படும்போது வீரத்தை காட்டியும் சீரிய வாழ்க்கை முறை ஒன்றை வாழ்ந்துள்ளனர்.

நிற்க! விடயத்திற்கு வருவோம்…
பழம்பெருமை பேசிச் சாவதே தமிழனின் பழக்கமாகிவிட்ட இந்தக்கால கட்டத்தில் நாங்கள் எங்கள் பழம்பெருமைகளை இத்தோடு விட்டுவிட்டு இன்று எமது மொழிமூலம் தமிழர்களை எப்படி வழர்த்துக்கொள்ளலாம் என்பதை மட்டும் கருத்தில் எடுத்துக்கொள்வோம்.
தமிழை வளர்க்கிறோம் என இன்று பலர் கிளம்பி, தமது வியாபாரத்திற்கு அடைமானமாக தமிழை வைப்பதை இனி எந்த தமிழனும் அனுமதிக்கப்போவதில்லை. அனுமதிக்கவும் மாட்டான் என்பதில் பெரு நம்பிக்கை உண்டு.
சரி! ஆரம்ப காலத்தில் இந்த வேக எழுச்சி ஆரம்பப்பாய்ச்சல் பாய்ந்த எமது தமிழ் மொழியும், தமிழர்களும் நாளடைவில் ஏன் பின்தங்கினர்? அன்னியப்படையெடுப்பு, அடக்குமுறை, மொழிக்கலப்பு என்று தமிழர்களின் குணமாகிய மற்றவனை காரணம் காட்டுவதை விட்டுவிட்டு அந்த பிளையினையும் எங்கள் சீரியத்தமிழர்களுக்கு அடுத்துவந்த தமிழ் பரம்பரையினரே விட்டுள்ளனர் என்பதை ஒத்துக்கொண்டு எமது காலத்தில் மொழிக்கு நாம் என்ன செய்தோம்.. தற்போது எமது மொழி மற்றும் இன முன்னேற்றத்திற்கு ஏதுவான காரணிகள் என்ன? பாதகமான காரணிகள் என்ன என்பதை ஒரு ஆராய்ச்சியினை செய்வோமானால் அது ஆரோக்கியமானதொன்றே.

பல்வேறு பட்ட இனங்களுக்கிடையில் இடம்பெறும் அஞ்சல் ஓட்டமே, உலக ஓட்டம். அவர் அவர்கள், அவரவர்களுக்கான கோடுகளில் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். இதில் தமிழன் எங்கே ஓடிக்கொண்டிருக்கின்றான்? எத்தனை தரம் அஞ்சல் கோல்கள் பரிமாற்றப்பட்டுள்ளன?
ஆரம்பத்தில் ஓட்டம் தொடங்கிய உடனேயே தமிழன் ஏனையவர்களைவிட மிக வேகமாக (ஏன் பாய்ச்சலாக என்று சொன்னாலும் தப்பில்லை) மற்றவர்கள் இரண்டு அடி எடுத்து வைப்பதற்கு முன்னரே அடுத்த தலைமுறைக்கு சுற்றிவந்து கோலை கொடுத்துவிட்டான். பின்னர் ஓடிய தமிழர்கள் ஆமை முயல் கதையில் வரும் முயலாக மாறிவிட்டனரோ என்னமோ தெரியவிலை.
இடைக்கிடை தமிழர்களின் வானில் பிரகாச உடுக்களாக பல கவிஞர்கள், புலவர்கள் வரவில்லை என்றும் சொல்லி விடமுடியாது தான். எனினும் அது இலக்கியங்களுடன் மட்டுமே முற்றுப்பெற்றுக்கொண்டது.

தமிழ் சமுதாயத்தின் சமகால நிலை என்ன? தமிழ்ச் சங்கள் பல இன்றும் கம்பராமாயணத்திலும், கந்தபுராணத்திலும் இருந்து முற்றுமுழுதாக இன்னும் வெளிவரமுடியாமல் குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.
மற்ற மொழி இலக்கியங்களும், சமுகங்களும் நாங்கள் எட்டிக்கூட பிடிக்கமுடியாத அளவுக்கு சென்று விட்டார்கள்! இப்போது நாம் என்ன செய்வது??????
ஆங்கில மொழி ஆதிக்கம் ஒரு புறம், தமிழ் பேசுவதை தவிர்த்து ஆங்கிலத்தில் பேசுவதை பெருமை என்று நினைக்கும் மேதாவித் தமிழர்கள் ஒருபுறம், இந்த நிலையில் மற்ற மொழிகளின் நிலைக்கு வரமுடியாது தமிழ் ஆமைவேகம் போட்டு "முதுகில் பாரிய சுமைகளுடன்" வந்துகொண்டிருப்பது மறுபுறம்!! இவற்றுக்கெல்லாம் உச்சமாக " மெல்லத் தமிழ் இனிச்சாகும்" என பரிதாப்படும் யோக்கியவான்கள் ஒருபுறம் …. சொல்லுங்கள் இப்போது நாங்கள் என்ன செய்வது??????

நிறைய யோசித்து குழம்பவேண்டாம். இளைஞர்களே … உறுதி மொழி எடுத்துக்கொள்ளுங்கள்.. சுமார் 5000 கால இடைவெளிக்கு பின்னர் தமிழ் அன்னையினை அழகு படுத்த இதோ … இந்தக்காலம் உங்களுக்காக மட்டுமே சிறப்பான ஒரு இடத்தை தந்துவிட்டுள்ளது.
"யூதர்கள் தங்களுக்கு என்று ஒரு நிலம் இல்லாமல் எப்படி உலகெல்லாம் பரந்து சென்று பல பல விடயங்களை அறிந்து அவை முழுவதையுமே எப்படி தங்கள் இன வளர்ச்சிக்காக பின்னரான காலப்பகுதியில் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதை ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள்.
அதே சந்தர்ப்பம் இன்று " ஈழத்தமிழர்களாகிய" உங்களிடம் மட்டுமே வந்துள்ளது. தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் எங்கள் இனம் மேலும் ஒரு வருடம் பின்சென்று கொண்டிருக்கின்றது என எண்ணிக்கொள்ளுங்கள்.

இன்று ஈழத்தமிழர்கள் இல்லா நாடு இல்லை என்று சொல்லுமளவுக்கு உலகமெல்லாம் பரந்து வாழ்வது, கூடிழந்து அந்நிய கூடுகளில் கிடைத்துள்ள அடைக்கலம் " எனக் கூறிக்கொண்டாலும், கெட்டதிலும் ஒரு நன்மையினை ஆக்கிக்கொள்ளுங்கள்.
இன்று ஈழத்தவர்களுக்கு மேலைநாட்டு முக்கிய மொழிகளான ஆங்கிலம், பிரன்சு, டொச்மொழி, டனிஸ், ஸ்பனிஸ் என எத்தனையோ மொழிகள் எழுதவும் படிக்கவும் தெரியும் என்ற நிலை வந்துவிட்டது.
உடனடியாக அங்கிருக்கும், அந்தந்த மொழியில் இருக்கும் அறிவியல், நவீனத்துவ, விஞ்ஞான, கல்வி, மற்றும் சமகால நடப்பு, என தமிழர்களை முன்னேற்றத் தேவையான நூல்கள் எந்த மொழியில் இருந்தாலும் அவற்றை தமிழுக்கு மொழிமாற்றம் செய்யுங்கள்.
ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் " மரபுகள் உடைக்கப்படும்போதுதான் புதியதொன்று உதயமாகின்றது" அதற்கேற்றால்ப்போல் தமிழுக்கும், தமிழர்களுக்குமான எனது காணிக்கை, நான் பிறந்த பலன் இது என எண்ணிக்கொண்டு மொழிபெயருங்கள்.
மரபுகள் உடைக்கப்படும்போது தான் புதியவைகள் உதயமாகின்றன என்பது உண்மைதான், அனால் உடைபடும் மரபுகள் எம் கலாசார அத்திவாரங்களை அசைத்துவிடாத அளவுக்கு மிகுந்த அவதானத்துடன் செயற்படுங்கள்.

உங்கள், மொழிமாற்றத்தகவல்கள், புத்த வடிவிலும், கணனி ஏற்றத்திலும் முன்னெடுக்கப்படட்டும். எங்கே என்ன புதிய அறிமகமோ அடுத்த சில நாட்களில் தமிழனுக்கு அவைகள் ஐயம் திரிபுற புரிந்துகொண்டு அவனும் அதை பரீட்சார்தித்துப்பார்க்க வகை செய்யுங்கள்.
மெல்ல தமிழ் இனிச்சாகும் என்று சொன்னவர்கள் எல்லோரும், தமிழை வாழ வைத்த உங்களைப்பார்த்து, உங்கள் பிரவாகங்களைக்கண்டு வாயடைத்து, தமிழும், தமிழனும் அழிக்கப்படமுடியாதவன் என புரிந்துகொள்ளட்டும்.
உங்களால் முடியாது என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள், நிச்சயம் முடியும். இமயம் ஏறி கொடிநட்டுத்திரும்பியவர்களையே, சறுக்கிவிழவைத்தவர்கள் நீங்கள் என்பதை மட்டும் மறந்தவிடாதீர்கள் ….
இனி …மெல்ல தமிழ் அச்சாகும்.
(மீள்பதிவு...)

Thursday, October 29, 2009

ஹோலிவூட்டை கலக்கப்போகும் “The Expendables”


ஹோலிவூட் திரைப்படங்களின் இரசிகரா நீங்கள்? அப்படி என்றால் அடுத்த ஆண்டு (2010) ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிவரை நீங்கள் பற்களைக்கடித்துக்கொண்டிருந்து காத்திருக்கவே வேண்டும்.
ஏன் என்றால் உலக திரைப்பட பிரியர்களின் கனவுகளில் மட்டுமே நடக்கும் அதிசயம் ஹோலிவூட்டை கலக்கப்போகும் “The Expendables” திரைப்படம்மூலம் நிறைவேறப்போகின்றது.


ஹாலிவூட் அக்ஸன் திரைப்படங்களை இரசித்து பார்ப்பவர்களின் கனவு நாயகர்களாக ஆனோல்ட் சிவாஷினேகர், ஷில்வஸ்ரர் ஸ்ராலோன், ஜெட் லீ, ஆகியோர் மறக்கமுடியாத அக்ஸன் சிகரங்களாக உள்ளனர் என்பது எவரும் மறுக்கமுடியாத உண்மை ஆகும். இந்த நிலையில் இவர்கள் மூவரும் இணைந்து நடித்தால் அது இரசிகர்களுக்கு பெரு விருந்துதானே.
இந்த விருந்து போதாதென்று மேலும் ஹோலிவூட் முன்னணி நட்சத்திரங்களான மிக்கி ரொக்கி, ஜோன்ஸன் ஷதாம், டொல்ப் டன்ஹிரன், எரிக் ரொபேட்ஸ், ரெர்றி கிறியூஸ், ஸ்ரீவ் ஒஸ்ரின் ஆகியோரும் இணைந்து கலக்கினால் இரசிகர்களின் களிப்புக்கும், கொண்டாட்டத்திற்கும் அர்த்தம் இல்லையா என்ன?


அறுபதுகள் கடந்தும் இன்றும் உடல்வாகுவை முப்பதுகள் போலவே கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஷில்வஸ்ரர் ஸ்ராலோனே இந்த திரைப்படத்தை இயக்குவதும், தயாரிப்பதும் மேலும் ஒரு சிறப்பான விடயமாகும் என்பதுடன் இந்த திரைப்படத்தின் பிராதான பாத்தித்தில் அவரே நடித்தும் வருகின்றார்.
ஷில்வஸ்ரர் ஸ்ராலோன் தலைமையிலான அசைக்கமுடியாத கில்லாடி குழுவொன்று தென்னமெரிக்காவில் நடத்தும் ஒப்பரேசன் நடவடிக்கையினை மையமாக வைத்தே இந்த திரைப்படம் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த திரைப்படத்தின் அந்த நடிகர்கள்குழுவானது ஒரு கனவு அணி எனவும், இதுபோல இந்த நூற்றாண்டில் திரைப்படங்கள் வந்ததில்லை என பல பத்திரிகைகள் இப்போதே “The Expendables” இன் புகழ்பாட ஆரம்பித்துள்ளன.
இந்த திரைப்படத்திற்காக நடிகர்களின் சம்பளங்கள், மிகப்பிரமாண்டமான காட்சிகள் என்பவற்றிற்காக பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொட்டப்படுவதாகவும் அறியமுடிகின்றது. இதேவேளை பல திரையரங்குகள் இந்த திரைப்பட படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட உடனேயே தங்கள் திரையரங்கங்களில் இந்த படத்தை வெளியிடுவதற்கு போட்டி போட்டுக்கொண்டதாகவும் பத்திரிகை செய்திகள் குறிப்பிட்டு காட்டுகின்றன.


இருந்தபோதிலும் ஷில்வஸ்ரர் மீண்டும் 80ஆம் ஆண்டுக்கால பாணியில் ஒரு திரைப்படத்தை எடுத்துவருவதாகவும், இதில் பல நடிகர்கள் உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், இங்கு சில்வஸ்டர் மற்றும் ஜோன்ஸன் ஷதாம் அகியோரின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் எனவும், 80ஆம் ஆண்டுகால இரசனைகள் தற்போது முற்றிலுமாக மாறிவிட்டதை ஷில்வஸ்டர் மறந்துவிட்டார் எனவும் இது முற்றுமுழுதான பக்கா வசூலைக்குவிப்பதற்கான ஒரு திட்டமே எனவும் விமர்சித்துள்ள பத்திரிகைகளும் உண்டு.

இதேவேளை “The Expendables” என்ற தலைப்புடன். 1989ஆம் ஆண்டு ஒரு திரைப்படமும், 2000 ஆம் ஆண்டு ஒருதிரைப்படமும் வெளியாகியுள்ளன. எது எப்படி இருந்தாலும் இந்த “The Expendables” (2010) உலக மட்டத்தில் பாரியதொரு எதிர்பார்;பினை உருவாக்கியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மைமே.

பிரமிக்கவைக்கும் “The Expendables” திரைப்படத்தின் ஸ்ரில்கள் சில….












Wednesday, October 28, 2009

மேய்ந்துபெற்ற தமிழ் சிலேடைகள் சில...

தமிழ் மொழியின் அழகுகள் பல உண்டு. அதில் சொல்விளையாட்டும் ஒன்று.
தமிழின் சொல்லாட்சி நாவரப்பெற்றவர்கள் தமிழ் செய்யுள்களில் புகுந்துவிளையாடியிருப்பார்கள்.
கேட்பதற்கும் அவை தித்திப்பாக இருக்கும்.
இதில் சிலேடை செய்யுள்கள், என்றும் தெவிட்டாத சுவையுடையவையாக இருக்கும்.

அண்மைக்காலங்களாக தமிழ்த்திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர் பாஸ்கரன் அவர்கள் இவ்வாறான பல செய்யுள்களை திரைப்படங்களில் தெரிவித்துவருவதை அவதானித்துவருகின்றேன். கண்டிப்பாக அவர் தமிழை ஆழமாகக்கற்றவராகவோ அல்லது தமிழை நேசிப்பவராகவோ இருக்கவேண்டும்.
சரி..அங்கங்கே தமிழ்தேடி மேயும்போது நான் மேய்ந்து பெற்ற சில சுவையான தமிழ் செய்யுள்களை உங்களுக்கு தருகின்றன்.


மரமது மரத்தில் ஏறி
மரமதைத் தோளிற் சாய்த்து
மரமது மரத்தைக் கண்டு
மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று
வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாந்தர்
மரமொடு மரம் எடுத்தார் . . .

இந்தப்பாடலின் விளக்கம்
மரமது மரத்தில் ஏறி (அரசன்,குதிரை)
மரமதைத் தோளிற் சாய்த்து(வேல்)
மரமது மரத்தைக் கண்டு (அரசன் வேங்கை)
மரத்தினால் மரத்தைக் குத்தி(வேல், வேங்கை)
மரமது வழியே சென்று(அரசன்)
வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாந்தர்(அரசன்)
மரமொடு மரம் எடுத்தார் . . .(ஆல், அத்தி)

பொருள் - ஒரு அரசனானவன் மரம் ஒன்றில் ஏறி, மரத்தில் நிலையெடுத்து நின்று, தனது ஆயுதமான வேலை தோழில் சார்த்தி, அந்தப்பகுதியால் வரும் புலியை கண்ணுற்று, அந்தப்புலியின் மேல் தனது வேலினால் குற்றி புலியை வீழ்த்தி, பின்னர் அந்த மரத்தை விட்டு இறங்கினான். இதை பாhத்திருந்த மக்கள், அவனுக்கு (அரசனுக்கு) ஆரத்தி எடுத்தனர்.
அதாவது குறிப்பிட்ட ஊர் ஒன்றில் காட்டில் வாழும்புலி ஒன்று கிராமத்தினுள் நுளைந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இந்ததை அந்த ஊர் மக்கள் முறையிட்டதையடுத்து அங்கு வந்து அரசன் மேற்படி புலியை வதைத்தான் என்பதை நாம் விளங்கிக்கொளலாம்.
(இதைவேறுபலவிதமான கருத்துக்களில் கூறுபவர்களும் உண்டு)
000000000000000000000000000000000


அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்
- கம்பா.
பால காண்டம் . ஆற்றுப் படலம் 10 வது பாடல்

இப்பாடலில் இடம்பெறும் “அஞ்சிலே" எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வௌ;வேறானவை.
முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவன் அனுமன் என்பதனைக் குறிக்கும்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி அனுமன் இலங்கை சென்றான் என்று பொருள்படும்.
அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்து,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது. (ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்காக பூமியைத் தோண்டும் போது தோன்றியவள் சீதை)
கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் - இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.
இப்பேற்பட்ட ராமபக்தனான அனுமன் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து - அளித்து காப்பான் என்பதே இந்த 4 வரி துதிப்பாடலின் பொருள்.
00000000000000000000000000000000

சிலேடை
ஒரே சொல்லைப் பல பொருள் கொள்ளும்படி தமிழ்ச் செய்யுளில் கையாளுவதைச் சிலேடை அணி என்று சிறப்பித்துச் சொல்வார்கள். இந்த 'அணி'யில் 'புகுந்து விளையாடிய' சிலேடை மன்னன் காளமேகப் புலவரைப் பற்றி எல்லோரும் கேள்விபட்டிருக்கிறோம். சுவையானதும் எளிதானதுமான அவரது பாடல்கள் பல உங்களில் பலருக்கு மனப்பாடமாகக் கூட ஆகியிருக்கும்! அவரும் பிற புலவர்களும் தங்களுடைய சிலேடைக் கவிதைகளை மிகவும் சாமர்த்தியமாக அமைத்திருப்பதைக் காணலாம். அப்பாடல்களில் காணும் சிலேடைச் சொற்கள் யாவும், ஒரு வகையில் பொருள் கொண்டால் ஒரு கருத்தையும் இன்னொரு வகையில் பொருள் கொண்டால் இன்னொரு கருத்தையும் வெளிப்படுத்தி இரண்டு முற்றிலும் மாறான குணங்களைக் கொண்ட ஆட்களையோ பொருள்களையோ குறிப்பிட்டு நம்மை வியக்க வைக்கும். காளமேகத்தின் சிலேடைப் பாடல் ஒன்றில் பாம்பையும் வாழைப்பழத்தையும் ஒப்பிட்டு 'முடிச்சுப் போடும்' நகைச் சுவையைக் காணலாம். வேறெந்த மொழியிலும் இத்தகைய கவிதைகள் இருப்பதாக (என் சிற்றறிவுக்குத்) தெரியவில்லை.

கவிதையில் மட்டுமல்லாமல் உரைநடை இலக்கியத்திலும் நடைமுறைப் பேச்சிலுங் கூடச் சிலேடை ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றது. 'நவீன காளமேகம்' என்று அழைக்கப்பட்ட தமிழ்ப் பேரறிஞர் (காலம் சென்ற) கி.வா. ஜகந்நாதன் சிலேடையைத் திறம்படப் பேச்சில் கலப்பதில் பெயர்பெற்றவர். கண்ணதாசன் போன்ற கவிஞர்களும் சிலேடைச் சுவையைத் தம் பாடல்கள் வழியே மக்களுக்குப் புகட்டியிருக்கிறார்கள். அவருடைய, "பார்த்தேன் சிரித்தேன்", "அத்திக்காய் காய் காய்" போன்ற பாடல்களைப் பலரும் இரசித்திருக்கிறார்கள்.

அந்தவகையில் நண்பர் ஆனந்த் எழுதியுள்ள புதிய சிலேடைகள்.
1. கணபதியும் கணினியும்

தட்டில் மெதுபண்டம் ஏற்பதால் தாரணியைச்
சட்டென்(று) எலியோடு சுற்றுவதால் - மட்டில்லாப்
பாரதத்தில் மேன்மையுற்றுப் பாரோர் வினைக்குதவும்
வாரண மாம்கணினி காண்.

இங்குள்ள பல சொற்கள் விநாயகருக்கும் கணினிக்கும் ஒருங்கே பொருந்துமாறு அமைக்கப்பட்டுள்ளன. முதலில், கணபதியைக் கூறும் விதத்தைப் பார்ப்போம்.
அவர், அன்பர்கள் தட்டில் படைக்கும் மிருதுவான கொழுக்கட்டைப் பண்டத்தை விரும்பி ஏற்பார்; தம் வாகனமான எலியில் (மூஞ்சூறு) ஏறி உலகெலாம் விரைவில் சுற்றுவார்; அளவிட இயலாத பெரிய நூலான மகாபாரதத்தை (வியாசர் சொல்லிவர, தாம் தம் கொம்பை எழுத்தாணியாகக் கொண்டு) எழுதிப் புகழ் பெற்றவர்; உலகத்தோர் வினைகள் இடையூறின்றி நடக்க உதவிபுரிபவர்

இப்போது பாடலைக் கணினியின் பெருமையைக் கூறுவதாகப் பார்த்தால் அது, குறுந்தகட்டில் உள்ள மென்பண்டத்தை (ளழகவ றயசந) ஏற்கும்; 'மவுஸ்' என்னும் எலிப் பொறியோடு இணையம் வழியாக உலகைச் சுற்றிவரும்; கணினித்துறையில் அளவிட இயலா ஆற்றலுடையவர்களைக் கொண்ட இந்தியாவில் அது மேல்நிலை எய்தும்; வீட்டிலும், அலுவலிலும் நாம் செய்யும் பணிகளுக்கு உதவும்.

2. சிற்றுந்தும் மேகமும்

மண்ணீர் குடித்திடும் மாந்தர் மனந்தோன்றும்
எண்ணங்கள் போல்விரைந் தோடிடும்- வண்ணங்கள்
பூணும் புழுதியுற வாரி யிறைத்திடும்
காணுமின் சிற்றுந்தாம் கார்.

சிற்றுந்து ('கார்'): மண்ணிலிருந்து எடுக்கப்படும் 'பெட்ரோலை'ப் பயன்படுத்தும்; மனிதர் மனத்திலெழும் விருப்பங்களுக்கேற்ப அவர்கள் நினைக்குமிடத்திற்கு விரைவில் கொண்டு சேர்க்கும் (அல்லது, மனிதரின் மனோ வேகத்திற்கொப்பான வேகத்துடன் ஓடும்); பல வண்ணங்களில் கிடைக்கும்; நம்மேல் புழுதி படியுமாறு அதை வாரி இறைத்துக்கொண்டு ஓடும்.

மேகம்: நிலத்தில் உள்ள நீரைச் சுமந்து இருக்கும்; மனிதர்களின் மனத்திலெழும் நினைவுகளைப் போல மாறி மாறி உருவங்களுடன் வானில் விரையும்; பல வண்ணங்களில் எழிலுடன் தோன்றும்; புழுதியைக் கிளப்பிக்கொண்டு விழும் மழை நீரைக் (வாரியைக்) கொட்டும்.

Tuesday, October 27, 2009

பொறுக்கி எடுத்த பொக்கிசங்கள்..

தலைவன்.

தமிழில் காப்பியங்கள் வாயிலாகவும் புலவர்களின் நாவன்மையினாலும் தலைவர்களுக்கான தமிழ் வரைபிலக்கணம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
"அன்னியத்தலையெடுப்புக்களை, திணிப்புக்களை அடக்கியாளும் மதிநுட்பம், உடல் வலிமை உடையவனும் அஞ்சாத சக்தி கொண்டவனும், தனது மண்ணையும் மக்களையும் நசுக்க முற்படும் எதிரிகளை புறமுதுகிடச்செய்து விரட்டக்கூடிய போர்க்குணம் கொண்டவனும், தனது மொழி கலாசாரம், கலை ஆகியவற்றை தனது வீரத்திற்கொப்ப போற்றி வளர்ப்பவனும் "எல்லா வகையிலும் தங்களை பாதுகாக்கக் கூடியவன் என்ற நம்பிக்கையினை சகல தரப்பு மக்கள் மீதும் ஊட்டியவனே சிறந்த தலைவன் ஆனான்.
அவன் தவைன் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்ற கேள்விக்கே தன் இனிய செயல்களினால் இடம்விட்டு வைப்பதில்லை.

தமிழின் அரசு சின்னங்கள்.

தமிழரின் அரசு, அரசாங்கத்திற்குரிய சின்னங்களாக இருபது சின்னங்களை தமிழறிஞர்கள் மன்னர் காலத்திலேயே வரையறை செய்துள்ளனர். அவையாவன
முடி குடை ஆசனம் கவரி தோடி முரசு சக்கரம்
யானை கொடிமதில் தோரணம் பூரணநீர்க்குடம் பூமாலை
சங்கு கடல் மகரம் ஆமை இணைக்கயல் இடபம்
சிங்கம் தீபம் என்பனவாகும்.

மொழிக்கையாட்சி.

நவீனகால தமிழ் இலக்கியத்தில் மொழிக்கையாட்சி கைவரப்பெற்றவர்கள், பாரதி, அதன்பின்னர் பாரதிதாசன் அகியோரே. ஆனால் இவர்களின் பின்னர் தமிழ் மொழிக்கையாட்சி "அரசியல் அரங்குகளில்" எதிரொலிக்கத்தொடங்கின பேரறிஞர் அண்ணாத்துரையின் திருவாயிலிருந்து.

சுதந்திரப்போராட்ட காலங்களிலும் அதன்பின்னர் கொங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் மேடைகளில் கோலூன்றித் தடுமாறிய தமிழ், அண்ணாத்துரை என்ற அறிஞர் அண்ணாவின் மேடையேற்றத்தின் பின்னர் தங்கு தடையின்று பிரவாகம் எடுத்து ஓடி மாற்றுக்கருத்துடையோரையும் மறைவாக நின்று கவனித்து கேட்கும்படி செய்தது.
தமிழில் மட்டும் இன்றி ஆங்கிலத்திலும் புலமை படைத்தவர் அறிஞர் அண்ணா. இக்காலத்தில்த்தான் அண்ணாவின் பேச்சுக்களில் அடுக்குச் சொல் அலங்காரம் (Alliteration) ஒப்பேற்றப்பட்டது.

நவீன தமிழில் கவித்துவத்தை விட்டு, மொழிக்கையாட்சி, மற்றும் கவிசார்ந்த பேச்சு ஆகியவை கொண்ட "மொழிக்கையாட்சியில்" பேரறிஞர் அண்ணாவே பிதாமகர் ஆவார்.
அண்ணா ஒலிபெருக்கியைத் தொட்டதன் பின்னர்தான் பிரசங்கம் என்ற பழமைவாதச்சொல் மாறி சொற்பொழிவு என்ற தூயதமிழ்ச்சொல் அரங்கேறியது.

தமிழ் சினிமாவில் மிகப்பழைய செய்திக்குறிப்புகள்.

* தமிழ் திரை உலகில் முதல் பேசும் படமாக " காளிதாஸ்" திரைப்படம் 31.08.1931 அன்று வெளிவந்தது. தியாகராஜபாகவதர் கதாநாயகனாக நடித்த இந்த படத்தை ஏச்.எம்.ரெட்டி அவர்கள் இயக்கியிருந்தார்.

* ஏச்.எம்.ரெட்டி இயக்கத்தில் 1936ஆம் ஆண்டு வெளிவந்து பெருவெற்றிபெற்ற திரைப்படம் " மாத்ரு பூமி" இதில் பி.யு.சின்னப்பா அவர்கள் கதாநாயகனாகவும் ரி.வி.குமுதினி அவர்கள் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.

* தமிழக திரைத்துறை வரலாற்றில் " நடிக மன்னன்" " தவநடிக பூபதி" ஆகிய பட்டங்களால் பி.யு.சின்னப்பா போற்றப்பட்டார்.

* 1939ஆம் ஆண்டு வெளியாகி சுயமரியாதை, சுதந்திர உணர்வு என்ற கொள்கைகளை சினிமா மூலம் பரப்பும் நடவடிக்கைக்கு வித்திட்ட திரைப்படம் கே.சுப்பிரமணியம் இயக்கி தயாரித்த "தியாக பூமி" ஆகும்.

* 1945 முதல் 1952 வரையான காலப்பகுதிக்குள் அறிஞர் அண்ணாத்துரையின் " வேலைக்காரி", " சொர்க்கவாசல்", "ஓர் இரவு" ஆகிய படங்களும் மு.கருணாநிதியின் "ராஜகுமாரி ", "அபிமன்யு ",
"மந்திரிகுமாரி ", "பராசக்தி" ஆகியபடங்களும் வெளியாகி பெரு வெற்றி பெற்றன.
அண்ணா, கருணாநிதி ஆகிய இருவரினதும் பேனாக்களின் முனைகளிலிருந்து இந்த ஏழு படங்களும் முதன்முதலாக தமிழ்திரைப்பட வயல்களில் அரசியல் விதைகளை தூவிவிட்டன.

அண்ணாவின் பதில்கள்.

இந்திய சுதந்திரத்தின் பின்னர் தமிழ்நாட்டை ஆண்டுவந்த கொங்கிரஸ் கட்சியினரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி சுதேச கட்சியான அண்ணாத்துரை தலைமையிலான "திராவிட முன்னேற்றக் கழகம் " ஆட்சி அமைத்தது.
சுமார் 1,1/2 வருடங்ளே அண்ணா முதலமைச்சராக ஆட்சி செய்தாலும் இன்றும் போற்றப்படும் வகையில் அவர் ஆட்சியும், அவரது பேச்சுக்களும் இருந்தன.

தனது பேச்சுக்களால் தன்னவர்களை மட்டும் அல்ல, எதிர்க்கட்சிக்காரர்களையும் கட்டிப்போடும் வல்லமை உள்ளவர் அண்ணா. அவரது பதில்கள் மிகச்சுவையானதாகவும், ஆனால் கேட்பவரை காயப்படுத்தாதவையாகவும் நகைச்சுவையானதாகவுமே இருக்கும். உதாரணமாக ஒரு சம்பவம்.

தமிழகச் சட்டமன்றத்தில் அன்றைய பேச்சாளரும், முதுகலை பட்டதாhரியும், வழக்கறிஞருமாகிய தீவிர கொங்கிரஸ்காரர் கே.விநாயகம் ஒருநாள் சட்டமன்றத்தில் வாக்குவதத்தில் மிகக்கோபமாக ஒருநாள் அண்ணாவைப்பார்த்து,
Mr.Anna Your Days are counted! எனத்தெரிவித்தார்.
ஆதற்கு உடனடியாக பேரறிஞர் அண்ணா மிக நிதானமாக
Mr.Vinayagam… My Steps are measured! எனப்பதிலளித்தார்.
அதைக்கேட்டதும் கே.விநாயகம் வியப்பு கலந்த புன்னகையுடன் கோபம் பறந்துபோனது தெரியாமல் தனது இருக்கையில் அமர்ந்துகொண்டாராம்.

Monday, October 26, 2009

கொடுக்கின்ற தேவதை….


கொடுக்கின்ற தேவதை கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்குமாம் (நம்பிக்கை இன்மையால் கொடுக்கின்ற தெய்வம் என்று எழுதவில்லை) என்று சொல்வார்கள் அல்லவா அது என்னமோ இந்த மாதத்தில் எனக்கு நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.
அடுத்தடுத்து சந்தோசமான செய்திகள் கிடைத்து திக்குமுக்காடச்செய்கின்றது.
யார் என்ன சொன்னாலும் இதை கிரகநிலை மாற்றம் என்றோ அல்லது அதிஸ்டம் என்றோ ஒரு போதும் ஒத்துக்கொள்ளமாட்டேன். ஏனென்றால் மிகவும் நிதானமாக, தினை விதைத்து கொத்துக்கொத்தாக அந்த தினையினை அறுபடை செய்கின்றேன் என்றுதான் என் மனம் சொல்கின்றது.

வலைப்பதிவை எழுதத்தொங்கியபோதே, எனக்குள் பல பிரமாணங்களை எடுத்துக்கொண்டே எழுதத்தொடங்கினேன், ஒவ்வொரு பதிவும் வாசிக்கும் யாராவது நாலுபேருக்கு, எந்த விதத்திலாவது உபயோகமுள்ளதாக இருக்கவேண்டும்.
மனதிலிருக்கும் வலிகளை, உண்மைகளை, உணவுர்களை பதியத்துடிக்கும் கைகளை கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும், முக்கியமாக உலகத்தரமான பதிவுகளை தமிழுக்கு கொண்டுவரவேண்டும், உலக அசைவுகளை உடனுக்குடன் பதியவேண்டும்,
மறந்துபோயும் உள்ளுர் அரசியல்கள் நுளைந்துவிடக்கூடாது என பல பிரமாணங்கள். ஒருவகையில் அவற்றை ஓரளவுக்காவது இன்றுவரை என்னால் பதியமுடிந்துள்ளமை சந்தோசமே.

இது இப்படி இருக்க இந்த மாதமே எனக்கு வசந்தங்களை அள்ளிக்கொண்வந்த மாதமாக மாறியது பிரமிப்பாகவே உள்ளது.
இந்த மாதத்தின் முதலாம் நாளே, எனக்கு அழகான ஒளி பொருந்தியவளாக தேவதை போன்ற ஒரு மகள் பிறந்தாள். என் வாழ்நாளில் மிக முக்கியமான நாள் அது. அன்று நானும் புதிதாக பிறந்தேன் என்பது மறுக்கமுடியாத உண்மை.
அடுத்து நான் சமர்ப்பித்திருந்த பல்கலைக்கழகத்திற்கான ஆராட்சிக்கட்டுரை (A+) முதன் நிலைபுள்ளிகளை பெற்றிருந்ததாக எனக்கு அறிவிக்கப்பட்டது.

அடுத்து எனது யூதர்கள் - தமிழர்கள் தொடரினைப்பற்றி நான் மதிக்கும் பல பல பிரபலங்களிடமிருந்தும் வந்த மின் அஞ்சல்கள் உண்மையிலேயே என்னை திக்குமுக்காடச்செய்தன. உண்மையில் நான் இதை எதிர்பார்த்திருக்கவில்லை.
அந்த தொடர் யாழ்இணையம் உட்பட பல பிரபலமான இணையங்களில் இணைக்கப்பட்டதும், சில ஊடகங்கள், பத்திரிகைகள் அதை ஒலிபரப்பி பிரசுரம் செய்ததும் அதற்கு ஏதுவாக அமைந்திருக்கலாம்.
இதேவேளை “இருக்கிறம்” சங்சிகையிலும் முதலில் நான் வலையேற்றிய “யாழ்ப்பாண தனியார் ஒளிபரப்புக்கள்” என்ற பதிவும், பின்னர் இருக்கிறம் தீபாவளி மலரில் “திருடர்கள் பலவிதம்” என்ற எனது சொந்த அனுபவமும் அச்சேற்றப்பட்டிருந்தமையை அறியமுடிந்தது.

அடுத்து இந்த வலைப்பூவின் மூலம் பல பிரபலமான வலைப்பதிவர்கள் தமிழ்நாட்டில் எனக்கு மிக நெருங்கிய நண்பர்களாகியமை எனக்;கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.

நட்சத்திரப்பதிவராக்கிய யாழ்தேவி.

வலைப்பதிவர்களின் திரட்டியாகவும், அதேவேளை வலைப்பதிவர்களுக்கு ஒரு களமாகவும், ஊன்றுகோலாகவும் செயற்பட்டு, அதேபெயரில் சஞ்சிகை ஒன்றையும் வெளியிட்டுவருகின்றது யாழ்தேவி.
இந்த யாழ்தேவி இணையம் இன்றுமுதல் ஒரு வாரகாலத்திற்கு என்னை நட்சத்திரப்பதிவாளராக அறிவித்திருக்கின்றதை நேற்று அறிந்துகொண்டேன். அந்த நட்சத்திர அந்தஸ்த்திற்கு எனது நன்றிகள்.
ஆனால் என்னைப்பொறுத்தவரையில் அனைத்துப்பதிவர்களுமே ஒவ்வொரு விதத்திலும் சிறந்தவர்களாகவே இருப்பார்கள். அனைவருமே என்பார்வையில் நட்சத்திரப்பதிவர்களே, இதில் எனக்கு எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை.

இலங்கையில் இருந்து இன்று சில நூறுகளாக இருக்கும் பதிவர்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கானதாக உருவாகவேண்டும், அதன்மூலம் ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
நான் முன்பு சொன்னதுபோல வேலைப்பழுக்கள் காரணமாக இலங்கையில் சிறந்த பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், இந்த எழுத்துக்களில் இருந்து சற்று வலகியிருக்கின்றார்கள் கண்டிப்பாக அவர்களும் இதற்காக ஒரு சிறுநேரம் ஒதுக்கி வலையுலகில் பரவேசிக்கவேண்டும் என்பதும் எனது அவா.
என்னை நட்சத்திரப்பதிவாளராக்கி அழகுபார்க்கும் யாழ்தேவிக்கு இந்தவேளையில் எனது நன்றிகள்.

யூத்ஃபுள் விகடன் குட்பிளாக்கில் எனது வலைப்பதிவு

அடுத்து இளமை ததும்பும், இனிமை கொண்டாடும், விகடனின் பிரிவுகளில் ஒன்றான யூத்ஃபுள் விகடன் குட்பிளாக (Good blog) பட்டியலில் எனது வலைப்பூவும் இடம்பிடித்துக்கொண்டது என்ற செய்தி. இன்று நண்பர் பதிவர் வண்ணத்துப்பூச்சியாரின் ஒரு தொடுப்பில் அவரது பதிவு யுத் விகடன் பட்டியலில் வந்துள்ளதாக அறிந்து அவருக்கு வாழ்த்து எழுதிவிட்டு, அந்த தொடுப்பில் சென்று பார்த்தால் எனக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. அங்கு எனது வலைப்பூவும் பட்டியல் இடப்பட்டிருந்தது.
எனது வலைப்பூவையும் தமது குட்பிளாக்கில் இணைத்துக்கொண்டதற்காக யுத்விகடனுக்கும், அங்கிருந்து வருகை தரும் அனைவருக்கும் என் நன்றிகள்.

விரைவில் வெளிவரும் குறும்படம்.
தற்போது இரண்டாவதாக நான் தயாரித்து, இயக்கிவரும் குறும்படம் வெகுவிரைவில் வெளிவரும் என்பதை நண்பர்களுக்கு சொல்லிக்கொள்ளவிரும்புகின்றேன்.
இயகத்தில் உள்ளபோதே அது பற்றிய நண்பர்களின் எதிர்பார்ப்புக்கள் என் வேலைகளையும், இயக்கத்தையும் இன்னும் சிரத்தை எடுக்கவைத்துள்ளன.
மிகவும் உணர்வோட்டமான இந்த கதைக்கருவை வைத்து தயாரிக்கும் இந்த குறும்படம் வெளிவந்ததும் பெரிதும் பேசப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
மேலும் இந்த குறும்படம் வெளிவர எனக்கு பல நண்பர்களும் தம் உதவிகளை புரிவதாக தெரிவித்திருக்கின்றமை மேலும் தைரியத்தை வரவழைத்துள்ளது.

எனவே இந்த வேளையில் இந்த வலைப்பதிவுமூலம் எனக்கு உண்டான மகிழ்சிகளில் எனது வலைப்பதிவுக்கு வருகை தரும் ஒவ்வொருவரையும், அதேவேளை, என்னை பின்பற்றும் நண்பர்கள், பின்னூட்டல் இடும் நண்பர்கள், பின்னூட்டல் இடவேண்டும் என நினைத்துவிட்டு இடாமல்போகும் நண்பர்கள், எனது வலைப்பதிவுகளை தமது நண்பர்களுக்கு சிபாரிசு செய்துவைக்கும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது கரம்கூப்பிய நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேவேளை, எனக்கு ஏடுதொடங்கி பிஞ்சுவிரல் பிடித்து அகரம் எழுதவைத்த எழுத்தாளர் சொக்கன் அவர்களையும், எனக்கு ஆண்டு 01இல் கற்பித்த வகுப்பாசிரியை எனது பாட்டியார் (அம்மம்மா – யாருக்கு இந்தப்பேறு கிடைக்கும்!)
குணரட்ணம் அவர்களையும், மரபணுவிலேயே கலைகளை என்னுள் புகுத்திய எனது பாட்டனார் கலாநிதி கணபதிப்பிள்ளை கந்தையா அவர்களையும், இலக்கிய உலகத்திற்கு என்னை வழிநடத்திய என் தமிழாசிரியை திருமதி. பாலசுந்தரம்பிள்ளை அவர்களையும் இந்தவேளையில் நெஞ்சார நினைத்துபார்க்கின்றேன்.

Sunday, October 25, 2009

ஞாயிறு ஹொக்ரெயில் (25.10.2009)

பாராட்டிறம்

அச்சுவலை பதிவுகளாக இன்று உருப்பெற்றிருக்கும் வலைப்பதிவுகள், அச்சுப்பதிப்புகளாக வெளிவருவது பாராட்டப்படவேண்டியதே. ஏனென்றால் அச்சுவலை ஊடகங்கள் உயர்மட்ட வகுப்பினரையே சென்றடையக்கூடியதாக இருக்கும். அத்தோடு இணையத்தை பயன்படுத்துபவர்கள் பலர் என்றாலும் வலைப்பதிவுகளை ஆறுதலாக பார்ப்பதற்கு சொந்தமாக இணைய இணைப்பு உள்ளவர்களால்த்தான் முடியும்.

எனவே இந்தக்கால கட்டத்தில் அச்சுவலை பதிவர்களின் எழுத்துக்கள் அனைத்து மட்டத்தினரிடமும் சென்றடைய அச்சு ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானதொன்றாகவே இருக்கின்றது. அந்த வகையில் வலைப்பதிவர்களின் சிறந்த ஆக்கங்களை தெரிந்தெடுத்து அதை சகல தரப்பினருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் பணியில் இருக்கிறம் சஞ்சிகை, வலைப்பதிவர்களின் பின்னால் நான் இருக்கின்றேன் என்று இயங்குகின்றது. இதற்காக நாங்களும் இருக்கிறமை பாராட்டிறம்.

ராணி ஜோசப்பிற்கு அஞ்சலிகள்.

ஒரு பாடகியாக, ஒரு மேடைக்கலைஞராக, ஒரு தொலைக்காட்சி, நாடக நடிகையாக, ஒரு அறிவிப்பாளராக என பல பாத்திரங்களை ஒரே நேரத்தில், தான் சென்ற அத்தனை துறைகளிலும் தனது மென்மையான அணுகுமுறையால் முத்திரை பதித்தவர் ராணி ஜோசப். 1980 களில் இருந்து கலைத்துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தவர் ராணி ஜோசப். இலங்கையின் பகழ்பெற்ற இசைக்குழுவான அப்ஸராசில் இவர் ஒரு பாடகியாக அறிமுகமாகி பலராலும் பாராட்டப்பட்ட பாடகியாக உருவெடுத்தார்.

1999ஆம் ஆண்டில் கொழும்பில் உடகப்பயிற்சி கற்கை நெறி ஒன்றில் இவர் எனக்கு அறிமுகமானார். அத்தனை பிரபல்யமான ஒரு நபராக இருந்தாலும் எப்போதும் குழந்தைகள் போல மிக மென்மையாகவும் பண்பாகவும், அவர் பேசும் சுபாவம். நாங்கள் பேசுபவற்றைக்கூட மிக நிதானமாக ஆளமாக உள்வாங்கிக்கொள்ளும், அவரது பெருந்தன்மைகள் என்பன.. அன்றே என்னை அதிசயிக்கவைத்தன. அந்தவேளைகளில் நண்பர்களின் உசுப்பேற்றலால் நான் முன்னின்று பல விவாதங்கள், பேச்சு மற்றும் பேட்டி நிகழ்ச்சிகளை நடத்தும்போது முதலாவது நபராக ஓடிவந்து பாராட்டும் அந்தப்பண்புகள் என, அவருடன் பழகிய ஒரு வருடத்தினுள் அவர் மறக்கப்படாத நபராகிவிட்டார். எப்போதும் தெய்வபக்தி மிக்கவராகவும், குழந்தைகளிடம் அதீத அன்பு கொண்டவராகவும், ஒரு கவிஞையாகவும் அவர் இருந்தார்.

புற்றுநோயின் காரணமாக கடந்த 22.10.2009 அன்று அவர் இயற்கையுடன் ஒன்றிப்போனதாக அறிந்து மிகவும் மனம் வருந்தினேன். என்பாசத்திற்குரிய, நான் மதிககும் பலரை இந்தப்புற்றுநோய் காவுகொண்டுவிடுகின்றது.

பசி
வாழ்வியல் மறுதலிக்கப்பட்ட நிலத்தில், அகோரமானதொரு சூழலில் தனிமையில் வாழ்ந்து, முரணான வாழ்வியலுடன் மல்லுக்கட்டி நிற்கும் ஒரு சிறுவனின் பசி இது.



நான்கு பதிவர்களின் நான்குமணிநேர சந்திப்பு

கவிதைகளால் சுவாசித்து. கவிதைகளால் வாழ்ந்து. கவிதைகளுடன் ஜீவிக்கும் பதிவர் நிலா இரசிகன், சிந்தனைகளைக்கிளறிவிடும் கவிதைகளாலும், இலக்கிய கண்ணோட்ட பதிவுகளாலும், திக்குமுக்காடச்செய்யும், யுத் விகடன் புகழ் பதிவர் அடலேறு. எவனோ ஒருவன் என்று பெயரை மட்டும் வைத்துவிட்டு எழுத்துக்களால் எல்லோருக்கும் அறிமுகமான பதிவர் எவனோ ஒருவன், மற்றும் இவற்றை வலையேற்றும் சாத்ஜாத் இந்த ஜனாவும் சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் கடற்கரையில் சந்தித்து நான்கு மணிநேரம் உரையாடினோம்.

சுவையான இலக்கிய கண்ணோட்டங்கள், சிறுகதைகளின் போக்குகள், ரஷ்யச்சிறுகதைகளின் பார்வை, எழுத்துக்களின் இன்றைய நிலை என பேச்சுக்கள் சூடுபிடித்தன. ரஷ்யக்கதைகளே தெரியாமல், ஒரு ரஷ்யக்கதையைக்கூடப் படிக்காமல் ரஷ்யக்கதைகளின் சாயலில் மூன்று கதைகளை எழுதிவிட்டு ஒன்றுமே தெரியாது என்று இருந்த எவனோ ஒருவனை பார்க்க வியப்பாக இருந்தது. கரு ஒன்று கோணங்கள் வேறு (விறுமாண்டி படம்போல) என்ற கோணத்தில் ஒரு கருவை வைத்து சிறுகதை புனைவதாக நால்வரும் முடிவெடுத்தோம். விரைவில் அந்தக்கருவில் நான்கு சிறுகதைகள் வரும் என நினைக்கின்றேன். நான் எழுதும்கதை முடிக்கப்பட்டு அது குறும்படம் ஆவதற்கும் ஆயத்தமாகின்றது நண்பர்களே…

இலங்கை திரை இசையின் கதை

தம்பிஐயா தேவதாஸ் அவர்களால் “இலங்கைத் திரை இசையின் கதை” என்ற தொடர் கட்டுரைகள் வீரகேசரி நாளிதழில் பிரதி சனிகிழமை தோறும் வரும் சங்கமத்தில் வெளிவருகின்றது. ஈழத்து இசை பற்றிய முக்கிமான ஆவணப்படுத்தலாக இதைக்கொள்ளமுடியும். நேர்த்தியான தனது எழுத்துக்களாலும், தேடல்கள் மூலம் கிடைத்த அரிய தகவல்கள், செவி வழியாக முறையாக தெரிந்திராத சம்பவங்கள், கலைஞர்கள் ஆகியோரை பற்றி முழுமையாக அறிய இந்த தொடர் உதவுகின்று. கடந்த 10 வாரங்களாக வெளிவரும் இந்தத்தொடர் பலரது கவனத்தையும் பெற்றுள்ளதுடன், பாராட்டப்படவேண்டியதொன்றாகவும் மாறியுள்ளது.

பேராசிரியர் கா.சிவத்தம்பியின் புறக்கணிப்பு

தமிழக அரசினால் நடத்தப்படவுள்ள உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என ஈழத்தமிழ் அறிவியலாளரும், ஆய்வாளருமான பேராசிரியர் காத்திகேசு சிவத்தம்பி அவர்கள் தெரிவித்துள்ளார். உலகத்தமிழ் தலைவராக தன்னைக்கொள்ளவேண்டும் என ஆசைப்படும் ஒருவர் ஈழத்தமிழர்கள் விடயத்தில் திட்டவட்டமான ஒரு நிலைப்பாட்டினை எடுக்க மறந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அட..பேராசியர் சிவத்தம்பி அவர்கள் கல்வியால் உயர்ந்தவர், உண்மையில் ஒரு எழுத்தாளர். அவருக்கும் வயது போய்விட்டது அனால் இன்றுவரை அவர் தனக்குத்தானே விருது கொடுக்க விரும்பியதில்லை, உண்மையாக தேடிவரும் விருதுகளைக்கூட வாங்க மறுப்பவர், அவர் இன்றுவரை தனக்கேற்றதுபோல தன் கொள்கைகளை புரட்டிபோட்டவரும் இல்லை…

ஒரு சர்தாஜி ஜோக்
பன்டாசிங் திருமணத்திற்கு முதல் நடந்த சம்பவம் இது அவரது மனைவியை அப்போது (அவரது காதலி) அவர் காதலித்துக்கொண்டிருந்தகாலம். ஒருநாள் மாலை ஆத்திரத்துடன் போன்போட்டு அவரது காதலியை ஷர்தாஜி பேசிய வார்த்தைகள் இவை “நீ ஒரு ஏமாற்றுக்காரி….மோசக்காரி…என்னை நீ முட்டாளாக்கிவிட்டாய்… இன்று பதிவுத்திருமணம் செய்துகொள்வோம் என்று நீதானே சொன்னாய்…இன்று அதிகாலையில் இருந்து மாலை வரை தபால்நிலையத்தில் நீவருவாய் என எவ்வளவு நேரம் காத்திருந்தேன்..

Saturday, October 24, 2009

ஈழத்து குறும்படங்கள்.


உணர்வுகளையும், வலிகளையும் மற்றவர்களுக்கு உறையச்செய்ய குறும்படங்கள் இன்று ஒரு முக்கியமான கருவியாக கொள்ளப்படுகின்றது. சொல்லவந்த செய்திகளை அதே வலியோடு மற்றவர்களுக்கும் உணர்த்திவிட நேர்த்தியான குறும்படங்களால் முடிந்துவிடுகின்றது. பல கோடிகளை கொட்டி பிரமாண்டமாக தயாரிக்கப்படும், வர்த்தக திரைப்படங்களைவிட, சோமாலியாவில் ஒருவேளை உணவுக்கு ஏங்கும் குழந்தை ஒன்றை பற்றிய குறும்படம் ஒன்று உலகத்தை தனது பக்கம் ஈர்த்துவிடும்.

ஆக..கோடிகளிலும், பிரமாண்டங்களிலும் ஒரு படைப்பு வெற்றி பெறுவதில்லை மாறாக உணர்வுகளின் அடிப்படையில், உணர்வுகளை உறையவைத்த திரைப்படங்களே உலக அளவில் வெற்றிகளை பெறுகின்றன. ஈரானியத் திரைப்படங்களை இதற்கு சிறந்ததொரு உதாரணமாக கொள்ளலாம். இந்த வகையில், நயவஞ்சமாக அடக்கி, ஒடுக்கப்படும் சமுதாயமாக இன்று உள்ள ஈழத்தமிழர்களின் வாழ்வியலை குறும்படமாக கொண்டுவந்து அவர்களின் வலியினை ஓரளவுக்காவது மற்றவர்களுக்கு புரிய வைக்க இத்தகைய குறும்படங்கள் ஏதுவாக இருக்கும்.

ஆனால் அவலத்தின் மேல் அவலங்கள் நடந்து, நடந்துகொண்டிருக்கும் இந்த நிலத்தில், உணவுண்ணும் உரிமைகள் கூட மறுக்கப்படும் இடத்தில் அவர்களின் உணர்வுகளை வெளிக்கொணரும் குறும்படங்களை தயாரிக்கமுடிமா என்றால் அது முடிவே முடியாது. எனவே இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ இருந்து அவர்களின் உண்மையான உணர்வுகளை பிரதிபலிக்கும் குறும்படங்களையோ, அல்லது ஒளி ஆவணத்தொகுப்புக்களையோ தயாரிக்கவோ எடுக்கவோ முடியாது. ஏனென்றால், அவர் தம்பி என்றால், இவர் அண்ணன் என்ற நிலைமைகளே இரண்டு இடத்திலும் காணப்படுகின்றது.

அதேவேளை இந்தியாவில் உள்ளவர்கள் ஈழத்தமிழர் விடயங்களை குறும்படமாக எடுப்பது என்பது அறவே முடியாத காரியம் என்பதை நான் ஆணித்தரமாக கூறுவேன். ஒரு குறும்பட வெளியீட்டு ஒன்றுகூடல் நிகழ்வொன்றின் மேடையிலும் இதை நான் ஆணித்தரமாக கூறியிருந்தேன். எல்லோருக்கும் பொதுவான வலி என்பது வேறு, குறிப்பிட்ட இனம்மட்டும் 30ஆண்டுகளாக அனுபவிக்கும் கொடுமைகள் வலிகள் என்பவை வேறு. “நெருப்பு எப்படி சுடும் என்பதை சூடுபட்டவனால்த்தான் கூறமுடியும். முற்றவர்களால் நெருப்பு இப்படி சுடுமாம் என்றுதான் கூறமுடியும்.”

இந்த நிலையில் ஈழத்தில் முன்னர் தமிழர் சுதந்திரப்பிரதேசம் இருந்த வேளையில் தயாரிக்கப்பட்ட மூன்று குறும்படங்களை காணும்வாய்ப்பு இன்று கிடைத்து. வேலி, பசி, மௌனம்.. ஆகிய மூன்று குறும்படங்களும் ஏதோ ஒரு விதத்தில் நெஞ்சின் உணர்வுகளை தொட்டு நிற்கின்றன. ஒரு கோர யுத்தம் திணிக்கப்பட்ட நிலையில் தொழிநுட்ப கருவிகள் எதுமற்ற, தட்டுப்பாடான நிலையில், பல்வேறுபட்ட அவல, துன்பியல் நிகழ்வுகளுக்கு மத்தியிலும் இத்தகய குறும்படங்களை தயாரித்து. இயக்கி இன்று உலகத்தின் கண்முன் கொண்டுவந்துள்ள அத்தனை கலைஞர்களும் மன, மொழி, மெய்களால் பாராட்டப்படவேண்டியவர்களே.

சாம்பிளாக உங்களுக்கு ஒரு குறும்படம் இதோ….

வேலி
கதை :ஆதிலட்சுமி சிவகுமார்
இசை : ராஜா
ஓளிப்பதிவு : அகல்விழி
படத்தொகுப்பு
திரைக்கதை : நிமலா
இயக்கம்
நேரம் - 20 மணித்துளிகள்.


கணவனை இழந்து கைக்குழந்தையுடன், வாழ்ந்துவரும் ஒரு விதவைப்பெண் லச்சுமி. சொந்தங்கள் அனைத்தும் கைவிட்ட நிலையில், சில சொந்தங்கள் வசைபாடித்தூற்றிய நிலையில், தோட்டத்தில் வேலை செய்து, வசதியுடையவர்களின் வீட்டுவேலைகள் பார்த்து, பத்து பாத்திரம் தேய்த்து, மாவிடித்துக்கொடுத்து என பல்வேறுப்பட்ட வேலைகளையும் செய்து தனதும் தனது பிள்ளையினதும் வயிற்றுக்கு உழைத்துக்கொண்டிருக்கின்றாள் அவள்.


தோட்டத்தில் அவள் வேலைபார்க்கும்போது தோட்டக்காரனாக இருக்கும் முத்துவிற்கு இவள்மேல் உள்ள இரக்கம் காதலாக மாறிவிடுகின்றது. லட்சுமியின் மகள் சுபிகூட எப்போதும் அவனையே சுற்றிவருவாள். அவனும் எப்போதும் அந்த பிஞ்சுக்குழந்தைமேல் அளவுகடந்த பாசம் பாராட்டிவருவான். ஆனால் லட்சுமி மட்டும் அவனுடன் எந்தப்பேச்சுவார்த்தைகளும் வைத்துக்கொள்ளமாட்டாள்.


லட்சுமி வீட்டில் கிணறு இல்லை என்பதனால் அருகில் உள்ள வீடு ஒன்றிலேயே அவள் தண்ணீர்பிடிப்பது வழமை. அன்று ஒருநாள் இவள் தண்ணீர் பிடிக்க செல்லும்போது எங்கேயோ புறப்பட தயாரான அந்த வீட்டுக்காரர் இவள் வருவதை கண்டு மறுபடி வீட்டிற்குள் சென்றுவிடுகின்றார். இவள் தண்ணீர் பிடித்துக்கொண்டிருக்கும்போது இவளை அழைக்கும் அந்த வீட்டுக்காரி, இனி நீ காலை வேளையில் தண்ணீர் பிடிக்க வரவேண்டாம், மாலை வேளைகளில் வந்து தண்ணீர் பிடித்துக்கொள். உன் முழுவியளத்தினால் (சகுனம்) அவர் வெளியில் செல்லாமல் மறுபடியும் வீட்டிற்குள் வந்துவிட்டார் என்று கூறுகின்றாள்.


அடுத்த காட்சியாக இவள் வீட்டுவேலை செய்துகொடுக்க செல்லும் பாட்டிவீட்டில், இவளது முகத்தைக்கண்டு நல்ல இதயம் கொண்ட அந்தப்பாட்டி, இவளது முகச்சோர்வைக்கண்டு என்ன என வினாவுகின்றாள். யாரையுமே குறைகூறிப் பழக்கமில்லாத லட்சுமி ஏதோ சொல்லி சமாளித்துவிட்டு, தன் வீட்டில் கிணறுவெட்டுவதற்கு நிலையமெடுக்கவேண்டும் ஐயாவிடம் சொல்லுங்கள் என்கின்றாள்.


கிணற்றினைக்கூட கூலி கொடுத்துவெட்ட முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவளே வெட்டுகின்றாள். இத்தனை கஸ்டங்கள் பட்டு, பலவீடுகளில் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் அவளை சில பெண்கள் குழுமியிருந்து பரிகாசிக்கின்றனர். ஜாடைமாடையாக அவளைக் குத்திக்காட்டி பல பேச்சுக்களையும் பேசுகின்றனர். அனால் வழமையான மௌனமான தன் இயல்பால் அவை எதையும் காதில் விழுத்தாமல் சென்றுவிடுகின்றாள் அவள்.


பின்னர் ஒருநாள் தோட்டத்தில் இவள் வேலை செய்துகொண்டிருக்கும்போது இவளருகில் வரும் முத்து, ஏன் நீ இப்படி கஸ்டப்படவேண்டும், நான் சுபியை எனது பிள்ளையாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கின்றேன், என தன் மனதில் உள்ளதை இவளிடம் வெளிப்படுத்துகின்றான். இவள் எதுவும் சொல்லாமல் அவசரமாக அங்கிருந்து சென்றுவிடுகின்றாள். பின்னர் இவள் வீட்டுவேலை செய்யும், அந்த நல்ல பாட்டியும் இவளிடம் தோட்டக்கார முத்து நல்லபிள்ளை, அவனை திருமணம் செய்துகொள் என்று சொல்கின்றாள். இவளுக்கு அறிவுரை சொல்லுகின்றாள். எனினும் இப்போதும் இலட்சுமி எதுவும் பேசவில்லை.


பின்னர் இவளது கணவனின் நினைவு திதி வருகின்றது. இவளது கணவனை இராணுவத்தினர் கொன்றதும், அவனது எலும்புத்துண்டும், உடையின் எச்சங்களுமே மிச்சமாக கிடைத்தமையும் முன்னரே நினைவாக காட்டப்பட்டுவிடுகின்றது. இவளது கணவனின் திதிக்கு முத்துவும் வருகின்றான். இவள் உணவு பரிமாற சுபி அவனை உணவருந்த சொல்கின்றாள். அவன் சுபிக்கும் ஊட்டிவிட்டு தான் போய்வருவதாக சுபியிடம் சொல்லிவிட்டு, அம்மாவிடமும் சொல்லும்படி சொல்லிவிட்டு செல்கின்றான்.


லட்மியிடம் ஓடிவந்து அவளை அணைத்துக்கொள்ளும் சுபி, அம்மா மாமா போய்ட்டுவாறதாக உன்னிடம் சொல்லச்சொன்னார், என்கின்றாள்.. இவள் கண்களில் ஒரு உற்சாக மிகுதி ஏற்படும்போது மீண்டும் அம்மா, மாமா போய்ட்டுவாறதாக உன்கிட்ட சொல்லச்சொன்னார் என்கின்றாள்….
அட மாமா என்று சொல்லாதே இனி அவரை உன் அப்பா என்று சொல்லவேண்டும் என லட்சுமி குழந்தைக்கு சொல்லவேண்டும் என நாம் நினைக்கும்போதும், வழமைபோல இலட்சுமி எதுவுமே சொல்லாமல் வேலி மீண்டும் தடுக்க இந்த படம் முடிவடைகின்றது.

உண்மையில் பின்னணி இசையினை இந்த குறும்படத்தில் பாராட்டவேண்டும், அடுத்து இந்த குறும்படத்திற்கு சரியான கதாநாயகியாக லட்சுமிப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகையின் மௌனமான நடிப்பம். பார்வைகளால் கதைபேசுவதும் கச்சிதம். லட்சுமிக்கு அறிவரைகூறி அவளுக்கு ஆறுதலளிக்கும் நல்ல பாட்டியாக வரும் அம்மா, தனது இயல்பான நடிப்பினால் சும்மா புகுந்துவிளையாடியுள்ளார். நீங்களும் என்ற இந்த இணைப்பின்மூலம்
http://www.tamilkathir.com/news/1784/57/.aspx
இந்தக்குறும்படத்தை பார்க்கலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails