தமிழின் சொல்லாட்சி நாவரப்பெற்றவர்கள் தமிழ் செய்யுள்களில் புகுந்துவிளையாடியிருப்பார்கள்.
கேட்பதற்கும் அவை தித்திப்பாக இருக்கும்.
இதில் சிலேடை செய்யுள்கள், என்றும் தெவிட்டாத சுவையுடையவையாக இருக்கும்.
அண்மைக்காலங்களாக தமிழ்த்திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர் பாஸ்கரன் அவர்கள் இவ்வாறான பல செய்யுள்களை திரைப்படங்களில் தெரிவித்துவருவதை அவதானித்துவருகின்றேன். கண்டிப்பாக அவர் தமிழை ஆழமாகக்கற்றவராகவோ அல்லது தமிழை நேசிப்பவராகவோ இருக்கவேண்டும்.
சரி..அங்கங்கே தமிழ்தேடி மேயும்போது நான் மேய்ந்து பெற்ற சில சுவையான தமிழ் செய்யுள்களை உங்களுக்கு தருகின்றன்.

மரமது மரத்தில் ஏறி
மரமதைத் தோளிற் சாய்த்து
மரமது மரத்தைக் கண்டு
மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று
வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாந்தர்
மரமொடு மரம் எடுத்தார் . . .
இந்தப்பாடலின் விளக்கம்
மரமது மரத்தில் ஏறி (அரசன்,குதிரை)
மரமதைத் தோளிற் சாய்த்து(வேல்)
மரமது மரத்தைக் கண்டு (அரசன் வேங்கை)
மரத்தினால் மரத்தைக் குத்தி(வேல், வேங்கை)
மரமது வழியே சென்று(அரசன்)
வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாந்தர்(அரசன்)
மரமொடு மரம் எடுத்தார் . . .(ஆல், அத்தி)
பொருள் - ஒரு அரசனானவன் மரம் ஒன்றில் ஏறி, மரத்தில் நிலையெடுத்து நின்று, தனது ஆயுதமான வேலை தோழில் சார்த்தி, அந்தப்பகுதியால் வரும் புலியை கண்ணுற்று, அந்தப்புலியின் மேல் தனது வேலினால் குற்றி புலியை வீழ்த்தி, பின்னர் அந்த மரத்தை விட்டு இறங்கினான். இதை பாhத்திருந்த மக்கள், அவனுக்கு (அரசனுக்கு) ஆரத்தி எடுத்தனர்.
அதாவது குறிப்பிட்ட ஊர் ஒன்றில் காட்டில் வாழும்புலி ஒன்று கிராமத்தினுள் நுளைந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இந்ததை அந்த ஊர் மக்கள் முறையிட்டதையடுத்து அங்கு வந்து அரசன் மேற்படி புலியை வதைத்தான் என்பதை நாம் விளங்கிக்கொளலாம்.
(இதைவேறுபலவிதமான கருத்துக்களில் கூறுபவர்களும் உண்டு)
000000000000000000000000000000000

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்
- கம்பா.
பால காண்டம் . ஆற்றுப் படலம் 10 வது பாடல்
இப்பாடலில் இடம்பெறும் “அஞ்சிலே" எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வௌ;வேறானவை.
முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவன் அனுமன் என்பதனைக் குறிக்கும்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி அனுமன் இலங்கை சென்றான் என்று பொருள்படும்.
அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்து,
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது. (ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்காக பூமியைத் தோண்டும் போது தோன்றியவள் சீதை)
கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் - இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.
இப்பேற்பட்ட ராமபக்தனான அனுமன் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து - அளித்து காப்பான் என்பதே இந்த 4 வரி துதிப்பாடலின் பொருள்.
00000000000000000000000000000000
சிலேடை
ஒரே சொல்லைப் பல பொருள் கொள்ளும்படி தமிழ்ச் செய்யுளில் கையாளுவதைச் சிலேடை அணி என்று சிறப்பித்துச் சொல்வார்கள். இந்த 'அணி'யில் 'புகுந்து விளையாடிய' சிலேடை மன்னன் காளமேகப் புலவரைப் பற்றி எல்லோரும் கேள்விபட்டிருக்கிறோம். சுவையானதும் எளிதானதுமான அவரது பாடல்கள் பல உங்களில் பலருக்கு மனப்பாடமாகக் கூட ஆகியிருக்கும்! அவரும் பிற புலவர்களும் தங்களுடைய சிலேடைக் கவிதைகளை மிகவும் சாமர்த்தியமாக அமைத்திருப்பதைக் காணலாம். அப்பாடல்களில் காணும் சிலேடைச் சொற்கள் யாவும், ஒரு வகையில் பொருள் கொண்டால் ஒரு கருத்தையும் இன்னொரு வகையில் பொருள் கொண்டால் இன்னொரு கருத்தையும் வெளிப்படுத்தி இரண்டு முற்றிலும் மாறான குணங்களைக் கொண்ட ஆட்களையோ பொருள்களையோ குறிப்பிட்டு நம்மை வியக்க வைக்கும். காளமேகத்தின் சிலேடைப் பாடல் ஒன்றில் பாம்பையும் வாழைப்பழத்தையும் ஒப்பிட்டு 'முடிச்சுப் போடும்' நகைச் சுவையைக் காணலாம். வேறெந்த மொழியிலும் இத்தகைய கவிதைகள் இருப்பதாக (என் சிற்றறிவுக்குத்) தெரியவில்லை.
கவிதையில் மட்டுமல்லாமல் உரைநடை இலக்கியத்திலும் நடைமுறைப் பேச்சிலுங் கூடச் சிலேடை ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றது. 'நவீன காளமேகம்' என்று அழைக்கப்பட்ட தமிழ்ப் பேரறிஞர் (காலம் சென்ற) கி.வா. ஜகந்நாதன் சிலேடையைத் திறம்படப் பேச்சில் கலப்பதில் பெயர்பெற்றவர். கண்ணதாசன் போன்ற கவிஞர்களும் சிலேடைச் சுவையைத் தம் பாடல்கள் வழியே மக்களுக்குப் புகட்டியிருக்கிறார்கள். அவருடைய, "பார்த்தேன் சிரித்தேன்", "அத்திக்காய் காய் காய்" போன்ற பாடல்களைப் பலரும் இரசித்திருக்கிறார்கள்.
அந்தவகையில் நண்பர் ஆனந்த் எழுதியுள்ள புதிய சிலேடைகள்.
1. கணபதியும் கணினியும்

தட்டில் மெதுபண்டம் ஏற்பதால் தாரணியைச்
சட்டென்(று) எலியோடு சுற்றுவதால் - மட்டில்லாப்
பாரதத்தில் மேன்மையுற்றுப் பாரோர் வினைக்குதவும்
வாரண மாம்கணினி காண்.
இங்குள்ள பல சொற்கள் விநாயகருக்கும் கணினிக்கும் ஒருங்கே பொருந்துமாறு அமைக்கப்பட்டுள்ளன. முதலில், கணபதியைக் கூறும் விதத்தைப் பார்ப்போம்.
அவர், அன்பர்கள் தட்டில் படைக்கும் மிருதுவான கொழுக்கட்டைப் பண்டத்தை விரும்பி ஏற்பார்; தம் வாகனமான எலியில் (மூஞ்சூறு) ஏறி உலகெலாம் விரைவில் சுற்றுவார்; அளவிட இயலாத பெரிய நூலான மகாபாரதத்தை (வியாசர் சொல்லிவர, தாம் தம் கொம்பை எழுத்தாணியாகக் கொண்டு) எழுதிப் புகழ் பெற்றவர்; உலகத்தோர் வினைகள் இடையூறின்றி நடக்க உதவிபுரிபவர்
இப்போது பாடலைக் கணினியின் பெருமையைக் கூறுவதாகப் பார்த்தால் அது, குறுந்தகட்டில் உள்ள மென்பண்டத்தை (ளழகவ றயசந) ஏற்கும்; 'மவுஸ்' என்னும் எலிப் பொறியோடு இணையம் வழியாக உலகைச் சுற்றிவரும்; கணினித்துறையில் அளவிட இயலா ஆற்றலுடையவர்களைக் கொண்ட இந்தியாவில் அது மேல்நிலை எய்தும்; வீட்டிலும், அலுவலிலும் நாம் செய்யும் பணிகளுக்கு உதவும்.
2. சிற்றுந்தும் மேகமும்

மண்ணீர் குடித்திடும் மாந்தர் மனந்தோன்றும்
எண்ணங்கள் போல்விரைந் தோடிடும்- வண்ணங்கள்
பூணும் புழுதியுற வாரி யிறைத்திடும்
காணுமின் சிற்றுந்தாம் கார்.
சிற்றுந்து ('கார்'): மண்ணிலிருந்து எடுக்கப்படும் 'பெட்ரோலை'ப் பயன்படுத்தும்; மனிதர் மனத்திலெழும் விருப்பங்களுக்கேற்ப அவர்கள் நினைக்குமிடத்திற்கு விரைவில் கொண்டு சேர்க்கும் (அல்லது, மனிதரின் மனோ வேகத்திற்கொப்பான வேகத்துடன் ஓடும்); பல வண்ணங்களில் கிடைக்கும்; நம்மேல் புழுதி படியுமாறு அதை வாரி இறைத்துக்கொண்டு ஓடும்.
மேகம்: நிலத்தில் உள்ள நீரைச் சுமந்து இருக்கும்; மனிதர்களின் மனத்திலெழும் நினைவுகளைப் போல மாறி மாறி உருவங்களுடன் வானில் விரையும்; பல வண்ணங்களில் எழிலுடன் தோன்றும்; புழுதியைக் கிளப்பிக்கொண்டு விழும் மழை நீரைக் (வாரியைக்) கொட்டும்.
7 comments:
தமிழ்மேச்சல் நல்லாத்தான் இருக்கு. "முக்காலை ஊன்றி மூவிரண்டைக் கடக்கையிலே" என்ற செய்யுளை விட்டுவிட்டீர்களே??? அதுவும் சுவையான ஒரு சிலேடை கவிதை அல்லவா???
சுவாரஸ்யம்.
நமக்கு சிலேடையெல்லாம் அவ்வளவாகத் தெரியாது. ஆனால், இது படிக்கும்போது “குட்டிச்சுவர்... மண்ணாங்கட்டி” என வரும் பாடல் படித்த ஞாபகம் வருகிறது. ஔவையார் பாடல் என நினைக்கிறேன்.
பின், 23ம் புலிகேசியில் வரும் “மாமா மன்னா” காமெடியும் ஞாபகத்துக்கு வருகிறது.
உண்மைதான் நண்பரே, எம்.எஸ்.பாஸ்கர் அவர்கள் பல திரைப்படங்களில் இவ்வாறான தமிழ் செய்யுள்களை தமது பாத்திரத்தின்ஊடாக சொல்லியவற்றை நானும் அவதானித்திருக்கின்றேன். மிகவும் சுவாரகசியமான பகுதிக்குள் மேய்ந்திருக்கின்றீர்கள்..நன்றாக உள்ளது. தமிழுக்கு அமுதென்றுபெயர் என்று சும்மாவா சொன்னார்கள்.
பதில்:ஆமாம் மருத்துவரே..அந்த "முக்காலை ஊன்றி" செய்யுளை நான் முதலே பதிவிட்டுவிட்டேன் என்ற காரணத்தினால் அதை தரவில்லை. நன்றி மருத்துவர்.பிரதீப்
பதில்:எவனோ ஒருவன்
நன்றி எவனோ ஒருவன். உண்மையில் ஒளவையாரும் சிலேடைக்கவி பாடுவதில் வல்லவரே. ஞாபகப்படுத்தினீர்கள் ஏனா ஒனா. நன்றிகள்
பதில்:சயந்தன்
நன்றி சயந்தன். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
கிட்ட தட்ட சரிவரும்...
Post a Comment