Thursday, February 9, 2012

அவன்... அவள்... அது...



அவன்...
தொலைவாகிப்போன தூர ங்களும், ஆர்முடுகலான உணர்வுகளும் அப்பப்போ சுவாசத்தை ரணமாக்கிக்கொண்டுதான் இருக்கின்றன. வறண்டுபோன உதடுகளில் இடைக்கிடை எச்சில் தொடும் நாவின் இதம்போல சில நினைவுகள்.
கடந்தகாலங்கள், கசப்பானவை, அவையே சிலவேளைகளில் இனிய நினைவானவை, சில சமயம் ஏக்கமானவை ஏன் சில சமயங்கள் தித்திப்பானவை, இதயம் நாறிப்போகும் அளவுக்கு சில சமயம் அருவருப்பானவைகளும் கூடத்தான்.

எத்தனை சித்தார்த்தங்கள் கற்று தெளிந்துநின்றாலும், ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கை புதிதாக சில சித்தார்ந்தங்களை போதித்துப்போவதையும் கவனிக்கத்தவறுவதில்லை. இப்போதெல்லாம் நிகழ்வுகளை கண்டு ஞானிகளின் மௌப்புன்னகையின் அர்த்தங்கள் புரிகின்றன அதே மௌனப்புன்னகையூடாக.

காலந்தின்ற எச்சமாகவே வந்துவிழுந்தேன் பூமியிலே, பஞ்சபூதம் தந்த உடல் இதனை அவ்வாறே அழிக்கின்றேன், நிலத்திற்காகவும், காற்றுக்காகவும், உதட்டில் தீ கொழுத்தி, வயிறுமுழுவதும் மது என்னும் நீர் நிரப்பி வான் பார்த்து நிற்கின்றேன்.

கண்முன்னே ஏராளமான ஞாபகங்கள். தன்னிலை மறந்து முதன்மை மறந்து இப்போதெல்லாம் இவன் அவனாகிப்போனான். நிற்சயமாக அவள் நினைவுகளுடன்.

அவள்...
என்னை மயக்கி வேற்றான் கையில் ஏறிய தாலி என் கழுத்தில், யுகமுடிவில் வருமென்றாலும், விழித்த நிமிடம், அறுத்தெறிந்துவிட்டு, மறுநிமிடம் உன் மடிவந்து சேர்வேன் எனக் கவி எழுதியவள் இவள்தான்.
சோன்னாங்கையா... இளமைக்காதல் 30 நாள் என்று அனுபவம் முதிர்ந்தவர்கள் சொன்னாங்கையா! மோகமயக்கதில் அகிலமே அணுவாகும் முனிவர்க்கே என்றாங்க, அப்படி என்றால் மடப்பெண் நான் மட்டும் எம்மாந்திரம்.

காதலிக்கும்போது இருக்கும் வீரமும், பற்றுக்களும் இப்போது சில வேளை பைத்தியமாகத்தோன்றுகின்றது. பெண்ணிவளால் என்ன செய்யமுடியும் என பேதைக்கதை சொல்ல நான் தயாரில்லை.
காதலித்தவன் ஒருவன் கரம்பிடிப்பது இன்னொருவன், என்ற எழுதாமறையில் நானும் குடமுழுக்காட்டப்பட்டது இப்போதும் எனக்கு ஆச்சரியமானது என நினைக்கும் பெண்ணாகத்தான் இப்போதும் அப்போதும்.

முறந்துவிடு மன்னித்துவிடு என்று உன்னிடம் கூற மறந்துவிட்டவள் நான் அல்ல.. அப்படி என்றும் உன்னிடம் கேட்காத கர்வக்காரிதான் நான்.
'நல்லாயிரு என்றுமட்டும் எப்போதும் உன்னைக்கேட்டுக்கொள்கின்றேன் நீயாவது!'
முதற்காதல் மறக்காதாம் எத்தனையோ சினிமாவின் டயலக் அது என்று கல்யாணம்முதல் இதயத்தை இறுக்கிப்பார்த்தேன். இறுதியில் என்னை சினிமா டயலாக்குகள் வென்றுவிட்டது குற்ற உணர்வுதான்.
இங்கே இவளாகவே வாழ்ந்திறக்கத்துடிக்கும் அவள்.

பெருமிடியெனச்சிரிக்கின்றது, திடீர் என அழுகின்றது, மௌனமாகப்புன்னகைக்க நினைத்து தோற்றுப்போய் கதறுகின்றது.
வயிறு புரட்டி வாந்தியெடுத்துவிட வேண்டும் என்றாலும், அவன். அவளின் வசனங்கள் கேட்டு, இறந்தே விடுவதென்று முடிவுகட்டுகின்றது

காதல் என்ற

அது.

Monday, February 6, 2012

மத்தியின் சாட்சியாக....


பெரும் அதிர்வு கொண்டு காதுபிளக்கும் எறிகணை சத்தங்களும், இடைவிடாது தொடர்ச்சியாக கோர்வையாக கேட்கும் துப்பாக்கி ரவை சத்தங்களுக்கும், யாழ்ப்பாண கோட்டையை சூழவுள்ள முழுமையான பிரதேசங்களே சுடுகாடாக காட்சி தந்தபோதும், இங்கு மட்டும் கல்விச்சத்தம் நின்றது கிடையாது.
கூரைஇல்லாத கட்டடமுகடுகளில் சுவர் உடைந்த பிசிறல்களுக்கு இடையிலும் சரஸ்வதி குடிகொள்வாள் என்று அப்போது கண்டுகொண்டது என்னமோ இந்த இடத்தில்த்தான்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி.

முற்றுப்புள்ளி என சிலர் . இப்படி இட்ட புள்ளிகளைக்கூட அதே முற்றுப்புள்ளியில் இருந்து ...... இப்படி கோடிட்டு எழுந்து நின்று காட்டிய பெருமை பெற்ற கல்லூரி அது என்பதை எவரும் மறுத்துவிடமுடியாது.
பீனிக்ஸ் பறவைக்கு ஜப்பானையும், ஜப்பான் மக்களையும் பலர் உவமானங்களாக காட்டுவார்கள். அதேபோல சாம்பலில் இருந்து மீண்டெழுந்து இன்று மீண்டும் யாழ்ப்பாணத்தின் தலைமை, நகர, பட்டிண கல்லூரி நான்தான் என்று வீறுகொண்டு எழுந்திருக்கின்றது இந்தக்கல்லூரி.

எண்பதுகளின் ஆரம்பம் முதல் தொண்ணூறுகளின் இறுதிவரை இந்தக்கல்லூரி ரணத்தோடு நடந்துவந்த சரித்திரம் ஆச்சரியமானது.
இலங்கைக்கு முதன் முதல் சர்வதேச ரீதியாக தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்த எதிர்வீரசிங்கம், அதை பெற்றது இந்தக்கல்லூரி மாணவனாகத்தான், பாதிரியார்கள் அதிபர்களாக இருந்த கிறிஸ்தவ பாடசாலை இது என்றாலும், சைவமும், தமிழும் போற்றும் ஆறுமுகநாவலரை உருவாக்கியதும், இந்த கல்லூரிதான், கிஸ்தவ சமயத்தின் வேதாகமமான பைபிளை தமிழுக்கு தந்ததும் இந்த பாடசாலைதான், அதேபோல காலகலமாக எத்தனையோ பொறியிலாளர்கள், மேலாளர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், முகாமையாளர்கள் என சமுகமட்டத்தில் உயர்ந்தவர்கள் பலரையும் தந்ததுடன், யாழ்ப்பாணத்தில் விளையாட்டு என்றால் சென்றல்தான் என்று விளையாட்டுக்கு அன்று தொட்டு இன்றுவரை முக்கியத்துவமளித்துவருவதும் இந்தக்கல்லூரியே.
அதற்குச்சான்றாக எந்த கல்லூரிக்கீதத்திலும் இல்லாத வகையில், இந்தக்கல்லூரியின் கீதத்தில் ஒரு உதைபந்தாட்டத்தை மையப்படுத்தியும், நேரம், மற்றும், ஒழுங்கை கொண்டாதவும் இசைக்கப்படுகின்றது.
இதேபோல வட மாகாணத்தில், உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கொக்கி, ரக்பி, வலைப்பந்தாட்டம், என சகல விளையாட்டுக்களையும் முதன்முதல் அறிமுகம் செய்த பெருமையும் இந்தக்கல்லூரியை சார்ந்ததே.

எல்லாவற்றுக்கும் மேலாக நூற்றாண்டுகள் கடந்து சென்றாலும் சில பாரம்பரியங்களை எந்த இடர்பாடுகளுக்கு மத்தியிலும் கைக்கொண்டுவருவது இந்த கல்லூரியின் மற்றும் ஒரு சிறப்பு.
இதில் முக்கியமானது இந்தக்கல்லூரிபோலவே நூற்றாண்டு கடந்தும் கரம்கோர்த்து அந்தப்பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் இணைந்து பயணிக்கும் பரி.ஜோவான் கல்லூரி. சென்றல் என்றால் அடுத்தது நிற்சயமாக சென்.ஜோன்ஸ் இருக்கும் என்ற அளவிற்கு இருகல்லூரிகளும் ஒன்றை ஒன்று அணைத்து சகாவாக பயணிப்பது பெரும் ஆச்சரியமே!

சரி... இந்த நாள் இந்தக்கட்டுரையை ஏன் நான் வரைய நினைத்தேன், என்பதற்கு உணர்வுபூர்வமான சம்பந்தம் உள்ளதால் இனி.. விடயத்திற்கு வருகின்றேன்.

இந்தக்கல்லூரி வெறும் சுவர்களையும், அத்திவாரங்களையும் மட்டும் இழந்து, இன்று வீறுகொண்டெழுந்து சர்வதேச பாடசாலைகளுக்கு ஒப்பான அளவுக்கு வீறு கொண்டு எழுந்திருக்கவில்லை. பெரும் ரணத்தோடு பயணித்தே இந்த இமாலயத்தை தொட்டுள்ளது.
கல்லூரி வேளையில், கல்லூரியில் கடமையில் ஈடுபட்டிருந்த மாணவர் தலைவன் பொன்.விபுலானந்தன், சாதாரண தரத்தில் எட்டு அதிசிறப்பு பெறுபேறுகளை தந்துவிட்டு, மீண்டும் உயர்தரத்தில் 4 அதிசிறப்பு பெறுபேறை தந்த சதீஸ்காந்தன் என பல உயிர்களையும் விலைகொடுத்துள்ளது.

1983 ஆம் ஆண்டுமுதல் முதற்பாதி கோட்டைப்பகுதியில் நிலவிய அசதாரண £ழ்நிலை கல்லூரியை பிடுங்கி எறிந்த நிலையை தந்தது. பின்னர் இந்திய இராணுவகாலங்களின் பின்னர் 1990 – 1993 வரையான கால கட்டங்களில் நிர்மூலமாக்கப்பட்ட நிலையிலும் கல்வி தொடர்ந்ததும், மாணவர்கள் தைரியத்த்டன், உயிரைப் பயணம் வைத்து கல்வி கற்றதும் மிகப்பெரும் ஆச்சரியமே.
இப்போதும் எனக்கு நினைவு இருக்கின்றது, உடைந்த கட்டடத்தின் முன்னால் ஒன்றுகூடும் நாம், அப்போதைய எமது அதிபர் திரு. நா.க.சண்கநாதபிள்ளை எழுதிய பாடலை உற்சாகமாகப்படிப்போம்.
'எங்கள் அரும் கல்லூரியை வளர்க்கப்போகின்றோம், இடிந்தவற்றை கட்டி மீள எழுப்பபோகின்றோம்' எனத்தொடங்கும் அந்தப்பாடல் கண்களில் கண்ணீருடன் ஆனால் மனம் முழுவதும் தைரியத்தையும் உற்சாகத்தையும் அப்போது எமக்குள் விதைத்தது.

எமது கல்லூரியின் பாராம்பரியம், விழுமியங்கள், முன்னைய சாதனையாளர்கள் பற்றி இடைவிடாது எமக்கு கற்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கும். அப்போதெல்லாம் எமது கல்லூரி மீண்டும் எழும், யாழ்ப்பாணத்தில் இதுபோல ஒரு கல்லூரி இல்லை என்ற நிலைக்கு வரும் என்று கனவு காண்போம்.
அந்த கனவு இன்று யாழ்ப்பாணம் மட்டும் அல்ல இலங்கையில் என்று சொல்லும் அளவுக்கு பெருவிருட்சமென கண்முன் நிற்கின்றது.

1991ஆம் ஆண்டு கோட்டை இராணுவ முகாமைச்சுற்றியுள்ள பிரதேசங்களில் எறிகணை சத்தங்கள், விமானத்தாக்குதல்கள் என பல இடம்பெறுகின்றன.
ஏல்லாமே எமக்கு இசைவாக்கம் அடைந்துவிட்டதனால், எமது கல்லூரியின் பழைய மாணவர் விடுதி உள்ள பிரதேசத்தில் நானும் இரண்டு நண்பர்களும் ஆவலாக மண்ணைஆழமாக வெட்டி அதன் மேல் பொலித்தீன் பைகைளை வைத்து தண்ணீர் விட்டு நீச்சல் தடகாம் கட்டி மகிழ்ந்தோம்.
எமது கல்லூரிக்கான நீச்சல் தடாகம் அது எனவும், 12 அடிக்கு மேலே ஆழம் எனவும், பல கதைகள் சொல்லி சிரித்து மகிழ்ந்தோம். அப்போது என் அருகில் நின்ற ஜனகன் என்ற மாணவன் இந்த நீச்சல் தடாகத்தை எமது ஜனாதிபதி டிங்கிரி பண்டார விஜேதுங்க (அப்போது அவர்தான் ஜனாதிபதி) திறந்துவைப்பார் என்று சொன்னது இன்னும் நினைவு.

அட... என்ன ஆச்சரியம் நாம் அப்படி கட்டி விளையாடும்போது எந்த தேவதை மேலால் கடக்கும்போது, இது அப்படியே பலிக்கட்டும் என்றுவிட்டு போனதோ தெரியாது.
இன்று அதே இடத்தில் பாரிய நீச்சல் தடாகம் ஒன்று இப்போதைய ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அப்போது இதை சொன்ன அந்த ஜனகன் என்ற மாணவன் இப்போது இல்லை. ம்ம்ம்.... 1995 முதல் அவனது பெயரும் காணமற்போனோர் பட்டியலில்த்தான்.

சில ஊடகங்களின் கவனத்திற்கு – யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு நீச்சல் தடாகம் என்பது சில தமிழ் ஊடகங்களுக்கு என்னவிதத்திலோ ஒருவித சலிப்பை, வெறுப்பை தருவதை சில தினங்களாகவே கவனித்தே வருகின்றேன்.
ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் எதையும் அரசியல் பார்வை பார்க்கும் சிறு சுற்று சிந்தனையுடையவர்களாகவே அப்போது பார்க்கமுடிகின்றது.
அன்று ஒரு பத்திரிகையில் மிக ஆடம்பரமான மத்திய கல்லூரியின் நீச்சல் தடாக படத்தையும், அருகில் தகரம் அடித்த ஒரு பாடசாலையையும் காட்டி ஒரு பத்திரிகை தனது முதலாவது பக்கத்தில் செய்தி வெளியட்டிருந்தது.
வாஸ்தவம்தான், நகரம் மட்டுமன்றி கிராமப்புறத்தில் உள்ள பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படவேண்டும். மறுக்கவில்லை.
ஆனால் அத்திவாரம் தெரியும் நிலையில் எமது கல்லூரி தகர்ந்து நின்றபோது, நாமே நம்மை அசுவாசப்படுத்தி எழுந்தபோதெல்லாம் உங்கள் கண்ணுக்கு ஏன் படவில்லை? அது பற்றி எமது நிலை பற்றி ஒரு செய்தியாவது போட்டிருந்தீர்களா?

இதே நீச்சல் தடாகம் இவர்கள் எதிர்பார்க்கும் இன்னும் ஒரு கல்லூரிக்கு சென்றிருந்தால், எந்தவித கதையும், செய்தியும், படமும், கேலிச்சித்திரமும் வந்திருக்காது.

ஒரு பிரபல கல்லூரிக்கு, தேசிய கல்லூரிக்கு, அதுவும் முக்கிமான மாவட்டம் ஒன்றின் நகரத்தில் உள்ள பாடசாலைக்கு உடனயடியான தரமுயர்த்தல்கள் அபிவிருத்திகள் தேவை அவையே இப்போது நடைபெறுவதாகத்தோன்றுகின்றது.

Saturday, January 21, 2012

டாக்டர் வாசகனின் மயக்கம் என்ன? கட்டுமஸ்தானனாக மாறும் டிலான்!




வருடத்தின் ஆரம்பமே கூதிர்க்காலத்துடன் ஆரம்பித்துவிட்டதோ என்னமோ! இலங்கையில் வெப்பவலய பிரதேசங்களிலேயே அப்படி ஒரு குளிர்.
இது இப்படி இருந்தால், இலங்கையின் மத்திய பிரதேசத்தில் இருக்கும் நாவலப்பிட்டியின் குளிரின் அளவை சொல்லித்தெரியத்தேவையில்லை!

நேரம் நள்ளிரவைத்தாண்டிய பின்னும்கூட, அந்த நகரின் வீதிகளின் பரிணாமங்கள், அங்கே ஊர்வன, பறப்பன, நடப்பன, விழுவன என்பவை எவையாக இருந்தாலும் கிளிக்... கிளிக் என்று ஒரு டியிட்டல் சிங்கிள் லென்ஸ் ரிபிளக்ஸ் கமரா ஒன்று உருவச்சிறைப்பiடுத்திக்கொண்டிருந்தது.
அந்த கிளிக்கில் அகப்படும் பொருள் நிலையில் இருந்து கொஞ்சம் சூம் போட்டுப்பார்த்தால் அங்கே கமராவுடன் சிரித்துக்கொண்டு இருப்பவர் டாக்டர் வாசகன்.

குறிப்பிட்ட ஒரு துறையில் மட்டுமன்றி இன்னுமொரு விடையத்தை பொழுதுபோக்காக அன்றி அதிலும் தேர்ச்சியாளனாக வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் வெற்றியாளர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். அந்த ஒரு வெற்றியாளனாக மாறிக்கொண்டிருக்கின்றார் டாக்டர் பாலவாசகன் அவர்கள்.

அண்மைக்காலமாக பேஸ்புக், மற்றும் பிளிக்கரில் முகத்தை ஆச்சரியமாக்கத்தக்க பாலவாசகனால் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் வெளிவந்திருந்தன. அவை நண்பர்கள் உட்பட பல்வேறு தரப்பட்டடோரினதும் பாராட்டுக்களையும் பெற்றவகையாகவே இருந்தன...

அவரால் பிடிக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே உங்கள் கண்ணுக்கு விருந்தாக....
இந்த புகைப்படங்களில் ஒரு தவளையின் படம் இருக்கும் கவனமாகப்பாருங்கள். இந்த புகைப்படம் டாக்டர் பயணித்த ஆட்டோவில் தவளை நின்றபோது உடனடியாக டாக்டர் எடுத்த புகைப்படம்.
எனினும் சில செட்டிங்சை செய்து இன்னும் உருவொழுக்கு, மறுபிரதிப்பு என்பவை, மற்றும் கோணங்களை செட்செய்து தரமான படம் ஒன்றைபெற டாக்டர் முயற்சித்துக்கொண்டிருந்தவேளை ஆட்டோக்காரார் விவரம் தெரியாமல் தவளையை அடித்து ஓடவைத்துவிட்டாராம்.






2012 ஞாயிற்றுக்கிழமை 22 தேதி தனது பிறந்தநாளை நாவலப்பட்டியில் கொண்டாடும் அன்புத்தம்பி டாக்டர் பாலவாசகனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

உடலினை உறுதி செய்....

டிலானை இப்போது பேஸ்புக்கிலோ, ஸ்கைப்பிலோகூட பிடிப்பது மிகக்கஸ்டமான காரியமாக இருக்கின்றது. பிஸி பிஸி என்றே அழைப்புக்கள் எடுத்தாலும் நிலமை உள்ளது.
இருந்தாலும்கூட பேஸ்புக்கிலே பல்வேறு உடற்பயிற்சிகளை டிலான் மேற்கொள்ளும் புகைப்படங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.
புறவாய் இல்லை பயபுள்ளைகள், தங்கள் பிரபொஸனல்களைவிட போட்டோ கிராபியிலும், ஜிம்மிலும் பொழுதை கழிப்பது பாராட்டக்கூடியதாகவே உள்ளது.

நான் டிலானை சந்தித்தபொழுதுகளில் எல்லாம் சொல்லிக்கொள்வது, எப்போதும் ஸ்போட்ஸ் மற்றும் உடல்மீது கவனம் கொண்டிருக்கும் நீ... வெளியே போனால் இதெற்கெல்லாம் டைம் கிடைக்காமல் நம்மளைப்போல ஆகிவிடுவாய் பார் என்று.. இருந்தாலும்கூட அண்ணே! ஒருபோதும் இல்லை எனக்கு எதிலை கொன்ரோல் இருக்கோ இல்லையோ ஜிம் விடயத்தில் வேற கிரகத்திற்கு போனாலும் ஜிம்முக்கு போவேன் என்பான்.
அதைப்போல வேற தேசம்போனாலும் ஜிம்முக்கு போவது சந்தோசமே.
வெகு விரைவில் மங்களகரமாக இலங்கைவருவேன் என்ற டிலானுடைய அறிவித்தலை ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றேன்.

பதிவுலகில் பதிவர்கள் என்று பலர் நண்பர்களாக வந்தாலும், இருந்தாலும் எப்போதும் அத்தனையையும் தாண்டி என் சகோதரர்களாக இருப்பவர்கள் இந்த இருவர். எங்களுக்குள்ளான அதி உச்ச தொடர்பு என்ன வென்று அனைவருக்கும் தெரியவேண்டும் என்றால், என் பதிவுலகம் சம்பந்தமான சகல கடவுச்சொற்களும் பாலவாசகனுக்கு தெரியும், ஆதேபோல டிலானுக்கும் தெரியும், அதேபோல அவர்களுடையதும் எனக்கும் தெரியும் 

2012 ஞாயிற்றுக்கிழமை 22 ஆம் தேதி ஜிம்மிலேயே தனது பிறந்தநாளை கொண்டாடும் டிலானுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஒரே ஆண்டு, ஒரே தேதி, ஒரே மாதத்தில் பிறந்து, என் இதயத்திற்கு மிக நெருக்காமாக உக்காந்திருக்கும் இரண்டு தம்பியருக்கும் எனது பிறந்ததின வாழ்த்துக்கள்.

Wednesday, January 4, 2012

மீண்டும் கொஞ்சநேரம் பேசலாமா???


நாம் கதைகேட்டு அதை கற்பனையாக மனத்திரையில் விழுத்தி, அதில் சுவைகண்ட வேளைகளில் எம் உணர்வுகள் எப்படி?
“சினோவைட்” மீள எழுந்திருக்கவேண்டும் என்று கதைகேட்டபோதே எம் மனம் பிரார்த்தித்தலில்லையா? எத்தனை இரவுகள் ஈசாப்கதைகளில் வரும் பாத்திரங்களுடன் நாமும் ரொட்டியும், பேரிச்சம்பழமும் சாப்பிட்டுள்ளோம் இல்லையா? ஆயிரத்தோர் இரவு கதைகளில் தாலிவிற்;க்கு தன் தையபாதான் கிளி என்பது தெரியவேண்டும் என்று தையபாவைவிட தவிர்தவர்கள் நாம் இல்லையா?
ஆக மொத்தத்தில் ஆரம்பத்தில் பிஞ்சு மனத்தில் நாம் கேட்ட கதைகள்தான் நமக்கு உணர்வுகளையும், கற்பனைகளையும் ஊட்டிவிட்டது என்பதை என்றாவது சிந்தித்துள்ளோமா?

இன்று நம் கண்களால் ஆயிரம் புத்தகங்களை வாசித்து இறுதிப்பக்கத்தை மூடினாலும், அவற்றில் சில மட்டும், வாசித்து மூடும்போதே மனதிற்குள் ஏதாவது ஒரு உணர்வின் நெருடலை தந்ததாக அனுபவித்துள்ளோம் அல்லவா?
ஆகவே எம் அடி மனத்தில் உள்ள அந்த உன்னதமான உணர்வுகள், அன்பு, பாசம், ஏக்கங்கள் என்பவற்றை மிக இலாவகமாக தட்டிக்கொடுக்கும் எழுத்துக்கள், காட்சிகள் பார்த்துமுடியும்போது நாம் அதில் ஒன்றி இலகித்துப்போய் நிற்கின்றோம்.

அத்தோடு நின்றுவிடாது அவை எம்மை குறிப்பிட்ட சில நேரத்திற்கு தன்னகத்தே ஆட்கொண்டு விட்ட நிலையில் எம் மனம் சஞ்சரித்து நிற்பதையும் என்றாவது அனுபவித்து பார்த்திருக்கின்றீர்களா?

தேர்ச்சி பெற்ற ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களோ அல்லது, மிகப்பிரமாண்டமாக திரைப்படம் எடுக்கும் இயக்குனரோ தான் அதை செய்யமுடியும் என்று இல்லை.
இந்த உணர்வுகளின் உந்துதல்களை எம் மனத்திரைக்கு கொண்டுவரும் சாமான்ய ஒரு எழுத்தாளனும், அல்லது ஒரு குறும்பட இயக்குனனும்கூட பிரமாக்களே.
ஆக..உணாவுகளை தட்டியெழுப்பும் உன்னத படைப்புக்கள் கதைகேட்கும் நாட்களில் இருந்து இன்றுவரை எம் மனதை வருடிச்செல்வதை உணர்கின்றோம் இல்லையா?

சில நாவல்கள் படித்து இந்த உணர்வுகளை நீங்கள் அடைந்திருப்பீர்கள், அனால் பின்னர் அதேநாவல் திரையில் வரும்போது, அது நாவல்போல் இல்லாமல் அந்த உணர்வை தராமல் ஏமாற்றிய சந்தர்ப்பங்களையும் சந்தித்திருப்பீர்கள்! அதேபோல வாசிக்கும்போது சுமாராக இருந்த நாவல்கூட, திரைக்காட்சியாகவரும்போது உணர்வுகளை தட்டிவிட்டு செல்லும் சந்தர்ப்பங்களும் உண்டுதானே!!

சில வாசிப்புக்கள், திரைக்காட்சிகள், எம் மனதை வருடிவிடுகின்றன ஆனால் அந்த உணர்வு எத்தகயதாக இருக்கும் என்பது வரையறுத்து சொல்வது கொஞ்சம் கஸ்டமாக இருக்கும்.

கீழே ஒரு திரைக்காட்சி…கண்டிப்பாக முழுவதையும் பாருங்கள்..
அந்த ஏதோ ஒரு உணர்வு கண்டிப்பாக கிடைக்கும்.
அதேவேளை இந்தக்கதை வாசிப்பதாக இருந்தாலும் அதே உணர்வை தந்திருக்கும்.
பார்த்துவிட்டு கண்டிப்பாக நீங்களும் என்னுடன் பேசிவிட்டுபோங்கள்…

Monday, January 2, 2012

வாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்.

உலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன்? அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா மொழிப் புலவன் ஐயன் வள்ளுவன்.
திருக்குறள்... சொல்லியபொருளின் பொருள் உணர்ந்தார்க்கு உச்சி முதல் உள்ளம்கால்வரை சிலிர்ப்பை எற்படுத்தும். தமிழகனாகப்பிறந்துவிட்டு இன்னும் திருக்குறள் பாடி வாய்மணக்காமல் இருப்பவர்கள் எத்தனை பேர்?
'தமிழனாக அதிலும் தமிழ் மொழி படிக்கத்தெரிந்தும், திருக்குறளை படித்து இரசிக்காதவன் ஒவ்வொருவனும் இனிமேல் இவள்போல் பிறப்பதற்கு இல்லை என்று அறிவிக்கப்பட்ட உலக அழகியைசொந்தமாக அடைந்துவிட்டும், இன்னும் அவளை தொட்டுக்கூடப்பார்க்காமல் இருக்கும் பேடியர். என்று ஒரு இளங்கவிஞன் சொன்னபோது அந்த உவமானம் என்னை சிலிர்க்க வைத்தது உண்மையும் அதுதானே?

திருவள்ளுவர் இன்றைய எம்.பி.ஏ கற்றவரா? என்று கேட்கும் அளவுக்கு தொழில் நிபுணத்துவம் பற்றிய அத்தனை குறிப்புக்களையும் தந்திருக்கின்றமை ஆச்சரியப்பட மட்டும் அல்ல அதிசயிக்கவும் வைக்கின்றது. தலைமைத்துவம், முடிவெடுக்கும் தன்மை, ஆளுமை விருத்தி, கூட்டுச்செயற்பாடு, பங்கு, நிதி முகாமைத்துவம், நிதியியல், நிர்வாகம், அபிவிருத்தி, வியாபாராம், சுயமரியாதை, சுய கௌரவம் என எத்தனை குறள்கள் அன்றே ஒவ்வொன்றாக தித்திப்பாக தந்திருப்பது அபரிதமானதே.
திருக்குறளில் பொதுவுடமை கருத்துக்கள் 60, 70களில் எடுத்து மேடைகளில் முழங்கப்பட்டன, அதை விட்டுவிடவோம். முன்னேறத்துடிக்கும் பக்கா முதலாளித்துவ வாதிகள் மட்டும் இந்தக்கோணத்தில் திருக்குறளைப்பார்ப்போமா?

பருவத்தோடு ஒட்ட ஒழுகுதல் - திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு (காலம் அறிதல் -02)

ஒருவரின் சாதுரியத்தால் இவர் சாதுரியர் என்று சொல்ல கேள்விப்பட்டுள்ளோம், இவர் ஒரு 'சதுரா'; என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றோமா? தமிழில் சதுரர் என்ற பதம் உண்டு.
ஒரு பிரச்சினை தோன்றிய இறந்தகாலம், இப்போதைய அதன் பரிணாமம், அதை நிவர்த்தி செய்வதால் எதிர்காலத்தில் வரும் நன்மைகள், ஒன்றும் செய்யாதுவிடின் ஏற்படும் நட்டங்கள் என நான்கு கோணங்களிலும், காலங்களை போட்டு சிந்தித்து தெளிவான முடிவெடுப்பவர்களே சதுரர்கள்.

பொருள் - காலத்துடன் பொருந்துமாறு முழுமையாக ஆராய்ந்து நடத்தல், ஓரிடத்தில் நில்லாத இயல்புகொண்ட செல்வத்தை, ஓரிடத்தில் இருந்து நீங்காமல் கட்டும் கயிறாகும்.

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் எனும் செருக்கு (ஊக்கம் உடமை -08)

ஊக்கத்தால் ஒருவர் அபரிதமான முன்னேற்றத்தை அடைந்தாலும், அதே ஊக்கத்தால் முன்னேறும் முயற்சியில் அவர் தோல்விகண்டாலும், அவர்கள் அந்த வெற்றியையோ தோல்வியையோ பெரிதாக எண்ணி அதில் தம்மை இழந்துவிடக்கூடாது.
அதேபோல எத்தனை சங்கடங்கள் வந்தாலும், இடையூறுகள் வந்தாலும் தம் இலட்சியங்களை அடைந்து உலகத்தை திரும்பிப்பாhக்க வைத்தவர்கள் அனைவருக்கும் வெற்றியின் இரகசியமாக பின்னால் நிற்பது அவர்களது ஊக்கமே. ஒருவேளை தோல்விகளை கண்டு அவர்கள் தங்கள் ஊக்கத்தை கைவிட்டு, விரக்தியில் நின்றிருந்தால் உலகம் இவர்களை பார்த்து பெருமைப்படும் சந்தாப்பம் இல்லாமற்போயிருக்கும்.

பொருள் - ஊக்கம் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் நாம் வல்லவர்கள் ஆகிவிட்டோம் என்று தனக்கு தான் திருப்தியுடன் பெருமைப்பட்டு மகிழ்வுறும் உச்ச மகிழ்ச்சிகளை அடைய மாட்டார்கள்.

சீரினும் சீரல்ல செய்யாரே சிரோடு
பேராண்மை வேண்டு பவர் (குறள் -மானம் -02)

வெற்றி வெற்றி வெற்றி... இந்த வெற்றி மட்மே குறிக்கோள், அந்த வெற்றியை எந்தவழிகளில் வேண்டமானாலும் அடைவோம் என்று நினைப்பவர்கள் சிலரை நாம் கண்டிருக்கின்றோம் அல்லவா? இவர்களுக்கு குறுக்கு வழியில் வெற்றி கிடைத்துவிடலாம், அனால் அந்த வெற்றி ஒருபோதும் நிரந்தரமானதாக இருக்காது. மற்றவர்கள் உளமார அதை பாராட்டவும் போவதில்லை. இந்த வெற்றிக்குப்பின்னால் அது கொடுக்கப்போகும் அவமானங்கள் கண்டிப்பாக இருக்கும். அதேவேளை வெற்றி நேரன வழியில், போராடிக்கிடைத்த வெற்றி, பல தோல்விகள், கஸ்டங்கள், நேர்மைகளின்மேல் கட்டப்பட்ட வெற்றி என்றால் அந்த வெற்றி அவர்களை விட்டு எப்போதும் போகாது. உண்மையான வெற்றியை தேடுபவர்கள் குறுக்கு வழிகளை நாடமாட்டார்கள்.

பொருள் - புகழ் அதனுடன் பெரும் தலைமை என்பவற்றை விரும்புவர்கள் புகழ், தேடும் வழியிலும்கூட குடிப்பெருமைக்கு ஒவ்வாத எந்தச்செயல்களையும் செய்யமாட்டார்கள்.

கானமுயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது (படைச்செருக்கு -02)

ஒரு பெரிய இலட்சியத்திற்காக நேரியபாதையில், பல அர்பணிப்புகளுடனும், முறையான திட்டம், நேர்மையுடனும் உழைத்தும் அல்லது போராடியும் அந்த உழைப்பு வெற்றிபெறாதுவிட்டாலோ, அல்லது போராட்டம் தோற்றுவிட்டாலோ ஏளனமாக சிரிப்பவர்கள்தான் ஏளனமானவர்கள்.
ஏனெனில் இலட்சியவாதிகள் ஒருபோதும் அற்ப விடயங்களுக்கு செவிசாய்ப்பதில்லை. அவர்களின் உன்னதமான உழைப்பு, தியாகம், போராட்டம் என்பன தோற்றாலும் அவர்கள் மேன்மையுற்றவர்களே. அற்பர்களுக்கு வேண்டுமானால் அது மகிழ்வை கொடுக்கலாம்.

பொருள் - காட்டில் ஓடும் முயலின்மீது பாய்ந்து அதை கொன்ற அம்பைவிட, வெட்ட வெளியில் நேருக்கு நேர்நின்று நேராக குறிவைத்து தவறிய ஈட்டி மிக மேலானது.

'ஊளையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் (ஆய்வினை உடைமை -10)

சில தோல்விகள் எம்மை சலிப்படையச்செய்யும் என்பது உண்மைதான். ஏனென்றால் பல தியாகங்களை புரிந்து, பல்வேறுபட்ட நேர்த்தியான திட்டங்களை வகுத்து, பலநேரத்தை செலவு செய்து, ஒன்றிப்புடன், அர்ப்பணிப்புடன் செய்யப்பட்ட செயல்கள்கூட சிலவேளைகளில் தோற்றுப்போகும்.
என்ன செய்வது தலைவதி அப்படி என்று பலர் சலித்திருப்பதை நாம் அனுபவங்களுடாக கண்டிருக்கின்றோம்.
அதிலும் தோல்விகளில் விழிம்புத்தோல்வி அதாவது ஆங்கிலத்தில் slip between cup and lip வகை தோல்விகள் ஒருவனை அப்படியே சோர்வின் உச்சிக்கே கொண்டுசென்றுவிடும்.
இருந்தபோதிலும் அந்த தோல்வியிலும் சோர்வுறாது சிலித்துக்கொண்டு மீண்டும் முயற்சியில் இறங்கிவிட்டவன், அப்படி ஒரு விதி இருந்தால் அதையும் மாற்றுபவன் ஆகிவிடுவான்.

பொருள் - சோர்வடையாது முயற்சியில் குறைவு இல்லாமல் தொடர்ந்தும் முயற்சி செய்பவன், வெற்றிக்கு இடையூறாக வரும் ஊழ்வினையினையும் ஒரு காலத்தில் வெற்றி பெறுவான்.

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கம் அறிவுடை யார் - (தெரிந்து செயல்வகை -03)

சிந்தனை முன்னோக்கியும், அறிவு பின்னோக்கியும் எப்போதும் செல்வதாக அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள். நம்மில் சிலருக்கு பின் முதுகு மட்டும்தான் கவலையினைத்தரும் ஏனெனில் நம்மால் அதைப்பார்க்கமுடியாது. இவர்கள் மின்மினிப்பூச்சிகளைப்போன்றவர்கள். மின் மினப்பூச்சிகளின் விளக்குகள் எப்போதும் அவற்றின் பின் பக்கமே இருக்கும்.
ஒருவன் தன் தினசரிக்கடமைகளை ஆற்றும்போது அவனுக்கு நினைவாற்றல் மட்டும் இருந்தால்ப்போதும், ஆனால் முக்கிமான முடிவு ஒன்றை எடுக்கவேண்டும் என்னும்போது அனுபவங்கள் கை கொடுக்கலாம் ஆனால் அறிவு மட்டுமே பயன்கொடுக்கும்.

உதாரணமாக ஒன்றைப்பார்ப்போம் சிறு வியாபாரி ஒருவன் அன்றாடம் காச்சியாக இருந்து ஒரு தொகை பணத்தை சேர்த்து, பணத்தை வங்கியில் தன் குடும்ப அவசர, விசேசங்களுக்காக போட்டு வைத்திருந்தான். ஆனால் பத்திரிகையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் விற்கப்படுவதாக அவனது நண்பனின், இப்ப வாங்கினால், இன்னும் நாலுவருடத்தில் பங்கு பெரும் இலாபமென்னும் அரைகுறை கதையை நம்பி அந்தப்பணத்தில் நிறுவன பங்குகளை வாங்கினான். அவனது சேமிப்பு அத்தனையும் போனது, பங்குகள் வாங்கியதைவிட சரிந்தன.

பொருள் - பின் விளையும் ஒரு ஊதியத்தை கருத்தில்க்கொண்டு இப்போது கையில் இருக்கும் முதலை இழக்க காரணமான செயலை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.

-தொடரும்....

Saturday, December 31, 2011

அடுத்த விநாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்!


இதோ இன்றுடன் எம் வாழ்வுத்தடங்களில் இன்னும் ஒரு ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெற்றுப்போகின்றது. மனிதன் ஒரு சமுகப்பிராணி என்பதை முழுமையாக நிரூபித்துக்காட்டுவது வருட இறுதிக்கணங்கள்தானோ என்று அப்பப்போ பெரும் சந்தேகங்கள் எழுந்துமறைவதுண்டு.

ஒவ்வொரு ஆண்டுகளும் எமக்குப்பருவகாலங்கள்போல கொடுத்துவிட்டுப்போகும் அனுபவங்களும் வேறு வேறானவையே. ஓவ்வொரு ஆண்டின் இறுதி நாட்களிலும் ஒவ்வொருவருக்குள்ளும் இனம்புரியாது தொற்றிக்கொள்ளும், ஒரு சிறு சோகமும், அடுத்த புதுவருடத்தை வரவேற்கும் குதூகலமும் எமக்குச்சொல்லிக்கொள்ளும் உளவியல்ப்பாடங்களாகவும் இருக்கலாம்.

நாம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதை நின்று நிதானித்து சற்று எம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும், சுயவிமர்சனம் செய்துகொள்ளவும், அடுத்த படியை எப்படி வைப்பது என்பதை தீர்மானிக்கவும் இந்த வருட இறுதிநாட்கள் சிறந்தவை என எல்லுனர்கள் வரையறுக்கின்றனர்.
இந்தவருடம் உலகுக்கு உரக்கச்சொன்ன விடயங்கள், மக்கள் கிளர்ச்சிகள், ஆட்சியார்களுக்கு எதிரான போராட்டங்கள், ஒசாமா பின் லேடனின் மரணம், ஜப்பான் சுனாமி, என ஏராளம். அதேபோல ஒவ்வொருவரினதும் சுய வாழ்;கையிலும், சந்தோசங்கள், ஏற்றங்கள், இறக்கங்கள், இணைவுகள், இழப்புக்கள் என பல பல...

நாம் திட்டமிட்டு வாழ்ந்துவந்தாலும், உலக ஓட்டம் எவ்வாறு நகரும் என்று கணித்தாலும், உண்மையில் அடுத்த நொடி எமக்கு வைத்திருக்கும் ஆச்சரியங்கள் புதிர்கள் ஏராளம்... ஏராளம்....

இதோ வழமைபோலவே எமை நோக்கி வாசல்வரை வந்துவிட்டது 2012 என்ற ஆண்டு. (உலக அழிவு நிச்சயம் என்ற பீடிகையுடன் அதுவேறு)
எதிர்வரும் ஆண்டு வாசகர்களான உங்களுக்கு வசந்தங்கள் மட்டுமே கொடுக்கட்டும், எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என இயற்கையினை பணிந்து அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.



ஸியேஸ்....
என்றும் அன்புடன்
உங்கள் ஜனா

Thursday, December 15, 2011

உன்னாலும் முடியும் தம்பி! - தொடர்ச்சி

ஓன்றை நிதானமாகக்கவனித்திருக்கின்றீர்களா? மழைகாலம் வரப்போகும் அறிகுறிகள் தெரிந்தவுடன் எறும்புக்கூட்டங்கள் விரைவாக தாம் வைத்திருந்த தமது உணவுக்கான பண்டங்களை தூக்கிக்கொண்டு தரையில் இருந்து மேல் இருக்கும் பகுதிகளுக்கு விரைவாக ஊர்ந்து சென்கொண்டிருக்கும்.
அதேபோல தேனீ இருக்கின்றது அல்லவா, நாளாந்தம் பல இலட்சம் பூக்கள் பூக்கின்றது தானே நாளை தேன் கிடைக்காமலா போய்விடப்போகின்றது என்று அது ஒரு போதும் அலுத்து படுத்திருந்ததில்லை. மாறாக எத்தனையோ கிலோ மீற்றர் தாரம் பறந்து சென்று தேன் உண்டுவிட்டு, நாளைகளுக்கான தேனை தனது இருப்பிடத்திற்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.
அதேபோலத்தான் வயல் வெளிகளில் வாழும் அகளான் என்ற எலி இனம், தன் வளைகளில் மூட்டைக்கணக்கான நெற்கதிர்களை சேர்த்துவைத்திருந்து விதைப்பு அற்ற காலங்கள், மழைக்காலங்களில் தான் சேமித்தவற்றை உண்டு உயிர்வாழ்கின்றது.

இந்த எறும்பு, தேனீ. அகளான் என்று மூன்றறிவு. நான்கறிவு உயிரினங்களுக்கே நாளைகளுக்கான சேமிப்பு பற்றிய அறிவு மிகச்சரியாகத்தெரிகின்றது என்றால்
எல்லாம் தெரிந்தவர்களான மனிதர்களான நாங்கள் எப்படி இருக்கவேண்டும்?

சில வங்கிகள் சேமிப்பு வாரம் என்று குறிப்பிட்ட ஒரு வாரத்தை அறிமுகப்படுத்தி சேமிப்பினை ஊக்கப்படுத்தி வருவதை கவனித்திருப்பீர்கள்.
முக்கிமாக ஒன்றை கவனித்திருப்பீர்கள் என்றால் முதலாம் உலக நாடுகளில் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வங்கியில் வைத்திருக்க நீங்கள் தான் குறிப்பிட்டளவு பணத்தை செலுத்தவேண்டிய தன்மை காணப்படுகின்றது. ஆனால் நம் போன்ற மூன்றாம் உலக நாடுகளிலேயே எமது சேமிப்புக்கு வட்டியும் தந்து, மேலதிகமாக பரிசுக்குலுக்கல்களையும் தருகின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

திட்டம் 02 – பொற்சேமிப்பு
1990 ஆம் ஆண்டு ஒரு பவுண் தங்கத்தின் பெறுமதி என்ன என்பதையும் 21 ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்று அதே ஒரு பவுண் தங்கத்தின் பெறுமதி எத்தனை மடங்காக உயர்ந்துள்ளது என்பதையும் நினைத்துப்பாருங்கள்.
இன்னும் ஐந்து வருடங்களில் இன்றைய விலையில் குறைந்தது ஐந்து மடங்காவது தங்கத்தின் விலை உயர்வடையும் என்பது திண்ணம்.
எனவே உங்கள் நாளை முன்னேற்றம் சேமிப்பு என்பதற்கான பொற்சேமிப்புத்திட்டத்தை சிறிதாக தொடங்குங்கள்.
மாதாந்தம் அரை கிறாம் தங்கம்வீதம் வாங்க ஒரு மஸ்தீப்பு எடுத்துக்கொள்ளுங்கள். ஒருபோதும் இது கஸ்டம் என்று எழுந்தமானமாக நினைத்துவிடாதீர்கள். முயற்சிசெய்தவர்கள் பலர் வெற்றிபெற்றுள்ளார்கள்.
மாதாந்தம் அரை கிராம் தங்கம் உங்கள் சேமிப்பு பெட்டகத்தினுள் சென்று கொண்டிருக்கட்டும். (வருமானம் குறைந்தவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு அரை கிராம் பவுண் வீதம் என வாங்கிக்கொள்ளலாம்) எப்படி வாங்குவது என்று நினைக்கவேண்டும் பிரபலமான நகைக்கடைகளில் ஒரு கிராம், அரைக்கிராம் டாலர்கள் விற்பனைக்கு வைத்திருக்கின்றார்கள்.

ஒவ்வொரு மழைத்துழிகளும்தான் பெருவெள்ளமாக மாறிவிடுவதுபோல மாதாந்த உங்கள் தங்கச்சேமிப்பு நாளடைவில் தங்கப்புதையலாகவே உங்களுக்கு காட்சிதரும்.
நாளை எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளின் திருமணவேளைகளில் இது பாரிய ஒரு உதவியாக உங்களுக்கு நிற்சயமாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
சுமார் ஒரு வருடம் கஸ்டப்பட்டு சேர்த்தீர்களே அனால் அதன் பின்னர் அந்த பெட்டகம் தங்கத்தால் நிறைவேண்டும் என்று நீங்களே முண்டியடித்து ஒவ்வொருமாதமும் ஒரு கடமையாக ஒவ்வொரு அரை கிராமையும் போட தொடங்கிவிடுவீர்கள். குறிப்பிட்டளவு டாலர்கள் சேர்ந்தவுடன், சிறப்பான வங்கி ஒன்றின் சிறு லொக்கரை வாடகைக்கு பெற்று பாதுகாப்பு நிமித்தம் மாதாந்தம் அதற்குள் உங்கள் டாலர்களை போட்டுவரலாம்.
புதையல் தங்ககாசுகள் என்றெல்லாம் கற்பனை கதைகளில் வரலாம், அனால் இங்கே உங்களுக்கான புதையலை நீங்களே தேடிக்கொள்ளுங்கள்.

திட்டம் 03 – காப்புறுதி
எங்கள் சேமிப்பு, மேம்பாடு, முயற்சிகள் எல்லாமே நாளைய என்ற ஒன்றுக்காகவே, அனால் துரதிஸ்டவசமாக நாளை என்ற ஒன்று எமது கைகளில் இல்லை.
ஆனால் எம்மில் பெரும்பாலானோருக்கு காப்புறுதி என்றவுடன், இறந்தவுடன் காசு என்ற எண்ணமே எற்படும் அதில் தவறும் பெரிய அளவில் இல்லை. ஆனால் மறு பக்கத்தில் பார்க்கப்போனால் காப்புறுதியே ஒருவரின் நின்மதியான அதேநேரம், பாதுகாப்பான முதலீடாகவும் இருக்கின்றது.
ஏன் என்றால் குறிப்பிட்ட ஒரு தொகைக்காக குறிப்பிட்ட காலத்திற்கு நாம் எமக்கான ஆயுள் காப்புறுதி ஒன்றை பெற விளைகின்றோம், ஒப்பந்தகாலம் முடிந்தால் அதன் முதிர்வையும் கட்டிய பணத்திற்கான போஸையும் பெறுகின்றோம் அனால் திடீர் என்று எமக்கு ஒன்று நேர்ந்தால் எம் குடும்பத்தாரின் கதி! என்ற அச்சத்திற்கு ஆறுதலான முதலீடே காப்புறுதி.

ஆனால் இன்று காப்புறுதியில் பல புதிய புதிய திட்டங்கள் ஒவ்வொருவருக்கும் எற்றவாறாக வந்துள்ளமை சிறப்பான ஒரு அம்சமாகும்.
அத்துடன் முக்கியமான ஒருவிடயம் காப்புறுதிக்கு அரசாங்கத்தில் வரி விலக்கு இருப்பதை மறந்துவிடக்கூடாது.
இதேவேளை சாதாரணமாக நாம் வைத்தருக்கும் வாகனத்திற்கே காப்புறுதி என்பது மிக முக்கிமானதாக்கப்பட்டிருக்கின்றது, ஆனால் அதை ஓட்டும் நாங்கள் எங்களுக்கு ஒரு காப்புறுதியை பெற்றுள்ளோமா என்று நினைக்கவேண்டும்.

தோழில் செய்யும் ஒருவரும் குறைந்தது ஒரு மில்லியன் கவர் தரும் காப்புறுதியை பெற்றிருக்கவேண்டியுள்ளது இன்றைய காலத்தில்.
காப்புறுதியை பெறும்போது முக்கிமாக செய்யவேண்டிய ஒன்று காப்புறுதிப்பணம் கட்டப்படாமல் அது செயலிழக்க செய்வதை தவிர்க்க, எம் சம்பளத்தில் இருந்து தானாக அந்த கட்டுப்பணம் செத்தும் முறையினையோ, அல்லது வங்கி நிலையியல் கூற்றின் படியோ காப்புறுதிப்பணம் செலுத்துவதே ஆகும்.
இதன் மூலம் தேவையில்லாத அசௌகரியங்களை முழுமையாகத் தவிர்த்துக்கொள்ளமுடியும்.


திட்டம் 04 – கடன்களை தவிர்த்தல்.
'கடன் கொடுப்பதும் தப்பு, கடன் வாங்குவதும் தப்பு' என்று கேள்விப்பட்டிருக்கின்றோம் அல்லவா. ஆனால் ஒருவகையில் இதுவே சிறப்பான ஒரு தத்துவமாகவும் இருக்கின்றது. இராமாணயத்திலே கூட போரிலே தோற்ற இராவணனின் நிலையினை பாட எத்தனித்த கம்பர், 'கடன் பட்டார் நெஞ்சம்போல கலங்கி நின்றான் இலங்கை வேந்தன்' என்று குறிப்பிட்டுள்ளதை நினைத்துப்பாருங்கள். கடன் என்பது ஒரு திடீர் நிவாரணியாகத்தெரியலாம் ஆனால் அதுவே பாரிய சுமையாகவும், முன்னேற்றத்தடையாகவும் இருந்துவிடுகின்றது.
அதனால் கூடுமானவரையில் கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்த்துக்கொள்ளவேண்டும். கட்டாய சேமிப்பு பழக்கம் உங்களுக்கு இருந்தால் யாரிடமும் கடன் பெறவேண்டிய தேவை உங்களுக்க இல்லை என்பதுடன் யாருக்கும் கடன் கொடுக்கவும் முடியாது என்பதவே உண்மை.

சரி....... இந்த நான்கு திட்டத்தையும் கடைப்பிடித்துப்பாருங்கள், சகல வெற்றிகளும் அடுத்தடுத்து உங்கள் கைகளை வந்தடைவது சத்தியம் என்று சொல்கின்றேன். இந்த திட்டங்களை இதை படித்த யாரோ ஒருவராவது கடைப்பிடித்து வாழ்வில் வெற்றிபெற்றால் முதலில் சந்தோசப்படுவது நானாகத்தான் இருப்பேன்.
முற்கூட்டிய வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

LinkWithin

Related Posts with Thumbnails