Tuesday, August 24, 2010

Coming soon - உடை உதிர்காலம்



சிரித்து வயிறு புண்ணாவதை தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும் இந்த முழு நகைச்சுவைக்கதை. 

ஆவி ஒன்றின் அட்டகாசத்தை கண்டறிந்து ஆவி துரத்தப்போகின்றனர் இரண்டு பதிவர்கள். அத்தோடு ரைம் மிஸின் ஒன்றின் கண்டுபிடிப்பும் பிரமிப்பும் உங்களை நகைச்சுவையின் உச்சத்திற்கு கொண்டு செல்லவுள்ளது.
எதிர்பார்த்திருங்கள்...
மிக மிக..விரைவில்...
உடை உதிர் காலம்....

சுஜாதாவின் நாவல்களைப்போன்று இங்கும் கணேசாக சுபாங்கனும், வசந்தாக கூல்போயும் இணைந்து கலக்கவுள்ளனர்...

திகில், விஞ்ஞானம், அமானுசம், ரைம் மிஸின், வீடியோகிராபி, எல்லாவற்றிலும் உச்சக்கட்ட நகைச்சுவை..

உடை உதிர் காலம்....விரைவில்...

Monday, August 23, 2010

இந்தப்பாடல்களின் முதல்வரிகள் தெரியுமா? – ஒரு திறந்தபோட்டி

நீங்கள் இசையினை மட்டும் இன்றி வரிகளையும் இரசிப்பவர்களா? பழைய, இடைக்கால பாடல்வரிகளில் படங்கள், அல்லது கவிதைகள் வரும்போது அடடே..இது ஒரு பாடல் வரியாச்சே என்று புத்திசாலித்தனமாக கண்டுபிடிப்பவர்களா?
சில பாடல்களின் உள்வரும் கவித்துவங்களை கண்டு இரசிப்பவர்களா? அப்படி என்றால் இந்த சுவாரகசியமான போட்டிக்கு வாருங்கள்.

பொதுவாக இளையராஜாவின் இசையினையும் பாடல்களையும் எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் அவரின் மெலடிகளையும் அந்த மெலடிப்பாடல்களில் வரும் வரிகளையும் யாரும் மறந்தவிடுவார்களா என்ன?
எனவே குறிப்பிட்ட இடைக்காலத்தில் வந்த இளையராஜாவின் மெலடிகளின் பாடல் உள் வரிகள் சிலவற்றை தந்துள்ளேன். புத்திசாலிகளாயின் இந்த பாடல்களின் முதல் வரிகளை நம்பர்படி வரிக்கிரமமாக பின்னூட்டத்தில் இடுங்கள் பார்ப்போம்..
10 பாடல்களையும் கண்டுபிடித்தால் நீங்கள் பாடல்களில் முதல்வன், ஏழு பாடல்களுக்கு மேல் கண்டு பிடித்துவிட்டால் நல்ல ரசிகன், ஐந்துக்கு மேலே என்றால் பறவாய் இல்லை.. ஐந்துக்கும் கீழே என்றால் சுத்தமோசம் போங்க..

சரி..இந்த பாடல் இடைவரிகளை வடிவாகப்பாருங்கள்..

01.எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம்வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாப்பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிகுக்குது
ஓடை நீரோடை இந்த உலகம் அதுபோல
ஓடும் அதுஓடும் இந்தக்காலம் அதுபோல…


02.இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி
இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி
இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை
கொண்டிறைவர் வலிய நெஞ்சை நலம்
கொண்ட நலம் கொண்ட நாயகி நல்லிரவின்
படங் கொண்ட அல்குல் பனிமொழி
வேதப் பரிபுரையே! வேதப் பரிபுரையே!

03.எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்க்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்

04.தாமரைப்பூவுக்கு தாலியும் கட்டி தாங்கிப்புடிச்சேன் நானே
வாலிபக்கூத்துக்கு நேரமும் வந்தது வெக்கம் இனி என்ன மானே
போங்கிவந்த இந்த தங்ககுடம் உங்களுக்குத்தான் மாமா
ஆந்தரங்க சுக சொந்தம்மட்டும் அப்புறம் அப்புறம் ஆமா
ஆடி இது என்ன பேச்சு அனலாச்சு மூச்சு…

05. இரவுகள் எனை வாட்டும்
இடையினில் அனல் மூட்டும்
நீயின்றி நான் இங்கு பாய்போடும் மாது
பிரிவுகள் இனி ஏது? பிறவியில் கிடையாது
நீதானே நான் வந்து பூச்சூடும் மாது
அன்றாடம் பூங்காற்று உன் பேரை என் காதில் ஓதுது


06. வானரதம் ஏறி மண்ணுலகம் தாண்டி
வைபோக ஊர்வலமாய் போய்வரலாம் வா..
சௌர்க்கபுரி சேர்ந்து இந்திரனைப்பார்த்து
வாங்காத வரங்கள் எல்லாம் வாங்கிடலாம் வா..
மைபூசிடும் கண்பார்வை வாடி நின்றதோ..
மந்தாரப்பூ பொன் வண்டை தேடி நின்றதோ?

07. மாஞ்சிட்டு மேடைபோட்டு மைக்செட்டு மாட்டினா
மாமாவை வழைச்சப்போட புதுத்திட்டம் தீட்டினா
ஆளான காலம் தொட்டு உனக்காக ஏங்கினா
அன்றாடம் தூக்கம் கெட்டு அனல்மூச்சு வாங்கினா
பச்சைக்கிளியே தன்னந்தனியே இன்னும் என்னாச்சு?
உச்சந்தலையில் வச்சமலரில் வெப்பம் உண்டாச்சு


08.நீ நடந்த பாதையில் நான் பூவானேன்
நீ மித்தித்துபோனதனால் சருகானேன்
உன் முகமோ ரோசாப்பூ
உள்; மனமோ தாமரைப்பூ
என்னாளும் ஆகாயம் ஒன்று அல்லவா?
என் நெஞ்சில் எப்போதும் நீயே அல்லவா?

09. தென்பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா
தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா என்னாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா நீ தீண்டும் கையிலா
பார்ப்போமே ஆவலாய் வா வா...

10. ராகத்தில் தோடி தாளத்தில் ஆதி ஒன்று கூடும்
ரஸ்யாவை போலே உண்டாவதில்லை எந்த நாளும்
நூலாடை சூடி கொள்ளும் கோலாரின் தங்க பாலம் நீதான்
மேலாக தட்டி தட்டி மெருகேற்றும் ஆளும் இன்று நான்தான்
பயம் விட்டு ... புது புரட்சிகரமாக

Sunday, August 22, 2010

ஞாயிறு ஹொக்ரெயில் (22.08.2010)

விழித்துக்கொண்டுவிட்ட ராட்சதன்.

ஹையாஸ் தியரி எவை எவற்றுக்கு பொருந்திக்கொள்ளுதோ இல்லையோ, பல நாடுகளின் நீண்டநாட்கள் திட்டம், யுத்தம், போராட்ட அமைப்பு ஒன்று இல்லாமற்போதல் போன்றவற்றில் பக்காவாக பிரதிபலிக்கும்.

இந்தியா, மற்றும் படு முட்டாள்த்தனமாக எந்தவித தூரநோக்கும் இல்லாமல் தான் நினைத்த பாட்டுக்கு எதையும் செய்யும் சிறி லங்கா ஆகிவற்றின் இன்றைய போக்கு நாளை தென்னாசியப்பிரதேசத்தையே சூனியமாக்கிவிடக்கூடிய வாய்ப்புக்கள் பெருமளவில் உள்ளன என்பது தெளிவாக தெரிகின்றது.
ஆசியாவில் முக்கியமான சக்திகளாக சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இதில் ஜப்பானை தவிர்த்து வல்லாதிக்கப்போட்டி இந்தியா, சீனாவிடமே அதிகம் உண்டு. இந்த நிலையில் மிகத்தெளிவான ஒரு நீண்டகாலத்திட்டத்துடன் 70களின் ஆரம்பங்களிலிருந்து வகுக்கப்பட்ட ஒரு திட்டத்தில் 40 ஆண்டுகளின் பின்னர் சீனா முழுவெற்றி பெற்றுள்ளது.

ஆம்.. முத்துமாலை நடவடிக்கை. இந்தியாவைச்சுற்றி முத்துமாலையைப்போல தனது வல்லாதிக்கத்தை நிலைநாட்டும் சீனாவின் நீண்டகாலத்திட்டம் 2010 முதற்பாகத்துடன் முழுமையாக வெற்றிபெற்றுள்ளது.
மனிதவலுநிலை, தொழில் முன்னேற்றம், தொழிநுட்ப உச்சம், சர்வதேச சந்தை, சர்வதேச வர்த்தகம், வீட்டோ அதிகாரம் என சீனா இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது. சீனாவின் இந்த எழுச்சியும் தென்னாசியா மீதான பார்வையும் தென்னாசியப்பிரதேசத்தில் வாழும் எமக்கு பெரும் பாதிப்பே. சார்க் நாடுகள் சீனாவின் சாக்குக்குள் போகாதவண்ணம் இராஜதந்திரமாக இனியாவது நடந்துகொண்டால் எதிர்காலத்தில் நன்மை கிடைக்கலாம்.

அருகிவரும் தாளலயம்.
தாளலயம் என்பது நாடகம், கூத்து இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நாடக வடிவம் என்று கூறிக்கொள்ளலாம் என நினைக்கின்றேன். முன்னைய காலங்களில் சொல்லவந்த கருத்துக்களை மிகச்சுவாரகசியமாக சொல்லிவிடவும், பார்வையாளர்களின் முழு கவனத்தையும் ஒருங்கு குவிக்கவும் இவ்வாறான தாளலயங்கள் ஏதுவாக இருந்தன.
அன்றைய நாட்களில் என் காட்சட்டை பருவங்களில் இலங்கைவானொலியில் தாளலயங்கள், நகைச்சுவையுடன் கூடிய தாளலயங்கள் என்பவை ஒலிபரப்பட்டு வந்தன. அவற்றில் சில இன்றும் மனதில் பதிவுகளாக உள்ளன.
பொதுவாக யாழ்ப்பாண, மட்டக்களப்பு பாசை வழக்கிலேயே தாளக்கட்டுக்கள் இயற்கையாக இருப்பதால் இந்தப்பிரதேசத்தவர்களது தாளலயங்கள் பெரிதும் இரசிகப்பட்டன. இன்று இந்தவடிவம் அழிந்துபோகும் நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது என்பது பெரிய வருத்தம் தரும் விடயமாகும்.

நல்லூர் முன்றலில் தினம் கூடும் பதிவர்கள்.

தற்போது நல்லூர் பெருந்திருவிழா இடம்பெற்று வருவதாலும், திருவிழாக்காலம் வெளிவீதிக்கு 5-45ற்கே வருவதாலும், இந்த நேரத்திற்கு பொதுவாகவே எந்த நாழும் அனைவரும் கூடுவது சாத்தியமான ஒருவிடயமாக போய்விட்டது.
எனது வீடு நல்லூரிலேயே உள்ளதனால் எனக்கு சாதகங்கள் அதிகமாகவே போய்விட்டன. இந்த வகையில் நீண்டதொரு விடுப்பில் யாழ்ப்பாணம் வந்திருக்கும் பதிவர் சுபாங்கன், எப்போதுமே சந்தித்துக்கொள்ளும் பதிவர் பாலவாசகன், இடத்தையே கலகலக்கவைக்கும் “கொக்குவில் சிகரம்” என்று அவரது நண்பர்களால் அழைக்கப்படும் கூல்போய், ஆர்வம் வலையைத் தொடங்கி இப்போது எழுத ஆர்வமின்றி இருக்கும் பதிவர் மகேஸ் பிரசாத், புதிதாக இந்த வட்டத்திற்குள் இணைந்துகொண்டுள்ள பதிவர் மதிசுதா என்று பதிவர்களின் அட்டகாசம் நல்லைச்சூழலில் கூடித்தான் போய்விட்டது.
இருந்தாலும் ஒவ்வொருநாளும் ஆன்மீகம், இலக்கியம், கலாசாரம், சிறுகதை ஆராட்சிகள், சுஜாதாவின் புத்தகங்கள் பரிமாற்றம், அனுபங்கள் என்று கதைகளும் படு சுவாரகசியமாகத்தான் போகின்றது.
வெகுவிரைவில் வந்து இணைந்துகொள்வதாக பதிவர் மருதமூரானும், பதிவர் பிரேமும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை

இன்று குறும்படம் இல்லை. ஆனால் சாதனைகளுக்கும், மகிழ்ச்சிக்கும் எதுவுமே தடையாக இல்லை என்பதற்கு உதாரணமாக வாழ்ந்துகாட்டும் நிக் மனதில் நிற்கின்றார்.

கூல்போய் கிருத்திகனின் பிறந்தநாள்.

கடந்த திங்கட்கிழமை அதுதாங்க 16ஆம் திகதி. தமது வீட்டிற்கு வரச்சொல்லி கூல்போய் அழைத்திருந்தார். விசாரித்தால் பிறந்தநாள் என்று சொன்னார்.
கூல் போய் 7ஆம் நம்பர் என்று சுபாங்கனுக்கு சந்தோசம் இரண்டுபேருக்கும் நல்லா ஒத்துப்போகுமாம். ரைமிங் ஜோக்குகளால் கூல்போய் சுபாங்கனை திணறடித்துக்கொண்டிருக்கின்றார் என்பது வேறுகதை.
மருத்துவர் பிஸி, சுதா வருவது தூரம் என்பதால், மாலை 7.30 மணியளவில் நானும் பதிவர் சுபாங்கனுமே கூல் வீடு சென்றிருந்தோம்.
அங்கே வீட்டு மேல் சீலிங்கில் இருந்து கொக்காகோலாக்கள் வழிந்துகொண்டிருந்தன. கூல்போய் பூனைக்குட்டிக்கு கேக் ஊட்டிக்கொண்டிருந்தார்.
நல்லூர் மஹோட்சவம் என்பதால் எல்லாமே “வெஜ்”தான். கூல்போயின் வீடு என்பதால் சுபாங்கனும் கூல்போயும் பேசிக்கொண்டவையும் “வெஜ்”தான்.

இதயம் இராத்திரியில் இசையால் அமைதிபெறும்.

என் குளத்தில் கல் எறிந்தவர்கள் நூலில் வைரமுத்து கூறியிருப்பது எத்தனை உண்மை என்பதை இராக்காலங்களில் இந்தப்பாடலை கேட்டுக்கொண்டே படுக்கையில் இருக்கும்போது புரிந்துகொள்ளலாம்.
வைரமுத்துவுக்கு மட்டும் அல்ல, எப்போதெல்லாம் தூக்கம் தள்ளிப்போகின்றதோ, மனம் அமைதிகொள்ள மறுகின்றதோ, துன்பங்கள் மனதை வருத்துகின்றதோ, அப்போதெல்லாம், எனக்கும் தேவை ஒரு காற்றோட்டமான படுக்கை, ஜன்னல்களின் ஊடே முழுமையானதோ, குறையானதோ என்றில்லாமல் நிலா, ஒரு ஐப்பொட், அதில் ஜேசுதாஸின் பாடல்கள்.

ஈகோ வரமா சாபமா?

"Get the EGO Advantage" என்ற அஞ்சனா சென்னின் ஆங்கில நூலின் தமிழ் வடிவமே இந்த ஈகோ வரமா சாபமா என்ற இந்த நூல். தமிழில் ஐஷ்வர்யன் மிக அழகாக இலகுவான தமிழில் புரியும்படி எழுதியிருக்கின்றார்.
நெகட்டிவ்வான விசியங்களை எப்படி பொஷிட்டிவ்வாக மாற்றி வெற்றி பெறுவது?
என்பதை ஈகோவை வைத்தே விளங்கப்படுத்துவது சிறப்பு.
அருமையான ஒரு நூல். எனக்கே தெரியாமல் எனக்குள் இருந்த ஈகோக்களைக்கூட கண்டுபிடிக்க ஏதுவாக இருந்தது. கண்டிப்பாக அனைவரும் படிக்கவேண்டிய நூல்.

கருத்துப்படம்

அனேகமாக மணல்களில் சிறுவர்கள், வீடுகட்டி விளையாடுவார்கள் அல்லது கோவில் கட்டி விளையாடுவார்கள் ஆனால் நல்லூர் முன்றலில் இந்த சிறுவர்கள் கட்டி விளையாடுவது விகாரை.
நல்லூரிலும் சங்கமித்திரை வந்து ஓய்வெடுத்த இடம் என்று இந்த இடத்திலும் ஒரு விகாரை கட்டப்படலாம் என்ற தூரநோக்கத்துடன்தான் சிறுவர்கள் முதலே கட்டிவிளையாடுகின்றார்களோ என்னவோ?

ஷர்தாஜி ஜோக்.
உலகிலேயே அதிக வாடிக்கையாளர்களைக்கொண்ட கையடக்க தொலைபேசிச்சேவை எயார்ரெல் என்ற ஒரு அறிக்கை நம்ம ஷர்தாஜியின் ஆர்வத்தை கிளப்பிடிச்சு.
எப்படியாவது அந்த கொம்பனியில தானும் சேர்ந்திடனும் என்ற அவாவுடன், எயார்டெல் நிறுவன வேலையாட்கள் விண்ணப்பப்படிவம் ஒன்றை வாங்கிவந்து ஒரு இரவு முழுவதும் நித்திரை விழித்து அந்த விண்ணப்பத்தை நிரப்பிக்கொண்டிருந்தார் நம்ம ஷர்தாஜி.
"Salary Expected". என்ற கொலம் மட்டும் ஷர்தாஜிக்கு எப்படி நிரப்புவது என்று புரியவில்லை. இறுதியில் ஒரு முடிவெடுத்தவராக நம்மாள் நிரப்பிய விதம் Salary Expected – Yes

Saturday, August 21, 2010

அன்புள்ள சந்தியா - 03


இந்தக்கதையை படிப்பதற்கு முன்னர் - இதன் முதல் கதையை ஒருபதிவரும், அடுத்த கதையினை வெறு ஒரு பதிவரும் பதிவிட்டிருக்கின்றார்கள். இப்போ மூன்றாவது ஆளாக கதையினை தொடக்கியவரின் அனுமதியுடன் நான்.

பெரும்பாலும் மற்ற இரண்டு கதைகளையும் படித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். படித்தவர்கள் அதே தொடர்ச்சியாக இதை படியுங்கள்.
முதல் கதையினை படிக்காதவர்கள்
கதையின் முதற்பாகத்திற்கு இங்கே
இரண்டாம் பாகத்திற்கு இங்கே
களிக் பண்ணி படித்துவிட்டு தொடருங்கள்.


அன்புள்ள சந்தியா - 03


“ஐயோ அம்மா. அண்ணா மயங்கி விழுந்துவிட்டார்” என்ற என் தங்கையின் குரல் ஏதோ பாதாளத்தில் இருந்து கேட்பதுபோல எனது செவிகளில் விழுந்து சென்றது.
நான் இந்த அளவுக்கு பலகீனமானவனா? என்று என்னைநானே கேட்கவும் என்னால் அப்போது முடிந்தது. விழிப்புலனும் மங்கிக்கொண்டு சென்ற வேளையில்
வானொலியில் ஒலித்த “அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்” என்ற பாடல்…
ஜெஸ்.. அப்ஸலூட்லி “மியூஸிக் தெரப்பியாக” என்னை உடனடியாக அசுவாசப்படுத்திக்கொண்டு விர் என்று எழுந்து போன் ரிசீவரை மீண்டும் கையில் எடுக்கவைத்தது.

ஹலோ..எனித்திங் பிரோபிளம்? எதிர்முனையில் சந்தியா, பதட்டத்துடன்; கேட்டாள்.
“இல்லை…இல்..லை சந்தியா ஐயாம் ஓகே.. ஜஸ்ட் லெக் சிலீப் ஆகிவிட்டது என்றான். மூக்குக்குக்கீழே தொட்டுப்பார்த்தான் “மண் ஒட்டுப்படவில்லை” மீசை இருந்தால்த்தானே!!

ச..ரி.. சரி சந்தியா எத்தனையாம் திகதி கல்யாணம்? என்றான். “கல்யாணம்” என்ற வார்த்தையை சொல்லும்போதே நெஞ்சுக்குள் யாரோ சம்மட்டியால் ஓங்கி அடித்ததுபோன்ற ஒரு உணர்வு வந்தது அவனுக்கு.

மறுமுனையில் ரெலிபோனிலேயே ரெலிபோன் மணியைப்போல் சிரித்தாள் சந்தியா.
“என்ன?? கல்யாணம் என்றதுமே நம்பிட்டீங்களா? உண்மையிலேயே கல்யாணம்தான் பட் எனக்கு இல்லை என் அண்ணாவுக்கு வருகின்ற 29ஆம் திகதி அதற்காகத்தான் உங்களிடம் சொல்ல, அப்படியே உங்கள் அட்ரஸையும் கேட்க போன் பண்ணினேன்..என்று விட்டு மீண்டும் சிரித்தாள் சந்தியா…

என்ன!!! எதிர்முனையில் இருப்பவளுக்குத்தெரியாமல், அழுதுகொண்டே சிரிப்பதற்கு மார்லின் பிரேண்டோ, சிவாஜி கணேசனுக்கு மட்டும் அல்ல இயற்கையாகவே எனக்கும் வருகின்றதே என வியந்துகொண்டேன்.
ஒரு நிமிடத்திற்குள் மிக பயங்கரமான சோகம், அடுத்த சில நொடிகளில் பயங்கரமான சந்தோசம்…இப்படி ஏற்பட்டால் நான் என்னவெல்லாம் செய்திருப்பேன் என்று எழுத்துக்களால் சொல்லமாட்டேன்.
அது ஹீனோ பாக்கியம், சொல்லமாட்டேன் சுயநலம்!!

அவள் மீண்டும் கேக்கவே படபடவென்று எங்கள் வீட்டு அட்ரஸை சொன்னேன். கண்டிப்பாக வருவோம் என்றேன். “உங்கள் வருங்கால அண்ணி உங்களைவிட அழகா? என்றேன்!!” ஆம்..ஆனால் பொறாமை இல்லை என்றாள்.
சரி..கல்யாண வேலைகள் தலைக்குமேல் இருக்கு வெளியில் போகவேண்டும். அம்மாவிடமும், தங்கையிடமும் ஈவினிங் கோல் எடுத்து பேசுவதாக சொல்லச்சொல்லிவிட்டு ரிசீவரை வைத்தாள்.

ஒரு சாம்ராட்சியத்தையே அழிக்கவந்த புயல், தென்றலான சம்பவத்தை நினைத்து வியந்தபடியே ரேடியோவை பார்த்தான் அதில்…

“தாயைக்கண்டால் தன்னாலே ஓடும்
பிள்ளைபோல என்காதல் ஆகும்
அன்பே அதை உன் கண்கள் அறியாதா?
என்றோ யாரோ உன் கையைத்தொடுவான்
இன்பம் துன்பம் எல்லாமே அறிவான்
அன்பே அது நானாகக்கூடாதா?”

என்று அன்புள்ள சந்தியா பாடல் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆச்சரியமாகப்பார்த்த அம்மாவுக்கும் தங்கைக்கும் விடயத்தை சொல்லிவிட்டு வெளியால் சென்றுவிட்டேன்.

ஐந்துநாள் கடந்துபோய்விட்டது. நான் வீட்டில் இல்லாத வேளையில் மூன்றுமுறை சந்தியா அம்மாவுடனும், தங்கையுடனும் கதைத்திருக்கின்றாள். அன்றைக்கு இருந்த ரென்ஸனிலை என் மொபைல் நம்பரை இன்னும் கொடுக்காதது வாஸ்தவம்தான் என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன்.
காதலித்துப்பார்த்தால் தபாற்காரன் தெய்வமாவான் என்றார்களே! அவள் வெடிங் காட் போட அட்ரஸ் வாங்கியிருந்தாலும், அது தபாற்காரன்மூலம்தானே வரும் என்பதை நான் ஏதோ மறந்துதான் போயிருந்தேன்.

தபாற்காரன் வந்து ஒரு தபாலை தங்கையிடம் கொடுக்கும்போதுதான் அது உறைத்தது. ஜெஸ்.. அது சந்தியா அனுப்பிய வெடிங் காட்தான். தங்கையிடமிருந்து அதை பறித்துகொண்டு என் அறைக்கு சென்றேன்.
“உன் பெரியப்பாவின் மகள் பிரியா அக்காவுக்கும் 29ஆம் திகதி தானே கல்யாணம் முற்றாய் இருக்கு என்று அம்மா சொன்னது காதில் பெரிதாய் வாங்கவில்லை. அக்காவின் கல்யாணத்தைவிட வருங்கால மச்சானின் கல்யாணம்தான் அவனுக்கு முக்கியம்.

அந்த வெடிங் காட்டை பிரிக்க ஆயத்தமாகும்போது, வாசலில் ஒரு நிசான் சணி,? வந்து நின்றது பெரியப்பாவும், பெரியம்மாவும், தம்பியும் வந்துகொண்டிருந்தார்கள்.
பெரியம்மா என்னைத்தான் கூப்பிட்டுக்கொண்டு வந்தா! வெடிங் காட்டை அப்படியே போட்டுவிட்டு ஹோலுக்கு ஓடிவந்தேன்.
பெரியப்பா, ம்ம்ம்…என்ன என்ர தம்பியின்ட வீட்டுக்கும் காட் தரவேணுமே. இந்தக்காலம் இப்படி மாறிப்போச்சு. எண்டுவிட்டு அம்மாவிடம் வெற்றிலை தட்டில் வைத்து காட்டை கொடுத்தார். சரி..எங்களுக்கும் சேர்த்து சாப்பாடை செய்யுங்கள், இங்க இருக்கிற மற்றவர்களுக்கும் காட் கொடுக்க போட்டுவாறம். என்று புறப்பட்டனர் பெரியப்பாவும் பெரிம்மாவும். தம்பி வரவில்லை என்றுவிட்டு எனக்கு பக்கத்தில் வந்து இருந்துகொண்டான்.

அம்மா அந்த வெடிங் காட்டை காட்டுங்கோ என்றுவாங்கி பார்த்தேன்…எமது சிரேஸ்ர புத்திரன் சத்தியனுக்கும், சிரேஸ்ட புத்திரி பிரியாவுக்கும் …என்று திருமாங்கல்ய ..பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால், இருவீட்டார் அழைப்பு என்று மேலோட்டமாக படித்துவிட்டு, நினைவு வர ஓடிப்போய் சந்தியா அனுப்பிய கல்யாண காட்டை பிரித்தான் …அதுவும் அதே..
உண்மையிலேயே உச்ச சந்தோசத்தில் அவனுக்கு மயக்கம் வந்தது...அப்படியே சரிந்தான்…சித்தி ஓடிவாங்கோ அண்ணா விழுந்துவிட்டார் என்று தம்பி கத்துவது கேட்டு மறைந்தது.

தொடர்ந்து தொடரலாம்…

Wednesday, August 18, 2010

ஓவ்வொரு ஆணின் வெற்றிகளுக்கு பின்னாலும்


ஓவ்வொரு ஆணின் வெற்றிகளுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கின்றாள், அதாவது அவனின் வாழ்க்கைத்துணைநலமான மனைவி இருக்கின்றாள், அவனது இன்பங்களிலும், துன்பங்களிலும் ஒன்றாக பங்கேற்று, அவன் துவண்டு விழும்போது தன் தோழ்களில் தாங்கி, அவனை தேற்றி, அவனது வெற்றிகளில், உலகமே அவனைப்பாராட்டும்போது ஓதோ ஒரு மூலையில் இருந்து விழிகளில் வழியும் தனது ஆனந்தக்கண்ணீரால், கணவன் அந்த நிலையினை அடைவதற்காக பட்ட கஸ்டங்களை எல்லாம் நினைத்து பார்க்கின்றாள்.
என்றெல்லாம் நாம் படித்திருக்கின்றோம், அனுபவித்திருக்கின்றோம், கேள்விப்பட்டும் இருக்கின்றோம்.

தமிழை பொறுத்தவரையில் “ஈன்றபொழுதில் பெருதுவக்கும்” என்று தாயினையும், தந்தை மகற்காற்றும்” என தந்தை பற்றியுமே அவன் சான்றோன் ஆனால் அவர்களின் உவப்பினை சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் எங்கிருந்தோ தனது இரத்த சொந்தங்கள் அத்தனையினையும் விட்டுவிட்டு, தாய் 10 மாதம் சுமந்த அவனை, தனது நெஞ்சில் ஆயுள் முழுவதும் சுமக்கும் மனைவி பற்றி பெரிதாக யாரும் சொன்னதாக இல்லை.
எமனுடன் வாதிட்டு தனது கணவன் சந்தியவானை மீட்ட சாவித்திரியுடன் அது சரியாகிவிட்டது.


சரி, இன்றைய நிலையில், ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் அவனது மனைவி எப்படி இருக்கின்றாள் என்பது பற்றி சிறிது அலசுவோம்.
பொதுவாக இன்றைய நிலையை எடுத்துக்கொண்டால், கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கின்றனர். இந்த நிலையில், இருவருமே சந்தித்துக்கொள்ளும் நேரங்கள் வெகுவாக குறைந்துவிட்டன என்பதே உண்மை. முன்னைய காலங்களில், சிறு குழந்தைகள், தாத்தா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி, அத்தை, மாமா, என ஒரு உறவு வட்டத்தினுள் இருந்து வழர்ந்தன. ஆனால் பாவம், இன்று அந்தப்பிள்ளைகள் தமது தாய் தந்தையரையே சந்திப்பது இரவாகத்தான் இருக்கும். காரணம் இன்றைய உலகமயமாதலின் விளைவு. இதனால்த்தான் பேசாத உறவுகள் பக்கத்தில் இல்லாததனால், குழந்தைகளுக்காக கார்ட்ரூன் சனல்களில், மிருகங்கள் அவர்களுடன் பேசுகின்றனவோ என்னமோ?


சரி, விடயத்திற்கு வருவோம், இன்று முன்னர்போல அல்ல, போட்டிகள் நிறைந்த உலகமாக இது இருக்கின்றது. எனவே பாரிய வேலைச்சுமையுடன் வீடுவரும் கணவனுக்கு மனைவி ஆறுதலாக இருக்கவேண்டும். ஆனால் இன்று மனைவியும் தொழிலுக்கு செல்வதனால் அவளும் பெரும் மன அளுத்தத்துடனே வீட்டுக்குவருபவளாக இருப்பாள். பணிமனையிலும், மனஅழுத்தம், வேலைப்பழு, வீட்டிற்கு வந்தாலும் நின்மதி இல்லை என்றால் அந்த ஆணினால் சாதிக்கமுடியுமா?
பெரும்பாலும் வேலைப்பழு அதன்மூலமான மன ஆழுத்தத்தினால் ஆத்திரமும், எரிச்சலும் தன்னை அறியாமலே அவர்களுக்குள் குடிகொண்டுவிடும். இந்தச்சூழ்நிலைகளிலேயே கணவன் மனைவியரிடம் ஒரு சிறு பிரச்சினைகூட பூதாகரமாக வெடித்துவிடும். இவ்வாறான சூழ்நிலைகளே இன்று பெரும்பாலாக நடப்பதை நாம் அவதானிக்கலாம்.
“ஓவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண இருக்கின்றாள், இவர் ஒன்றும் பெரிதாக சொல்லும்படியான வெற்றியாளர் அல்ல! என்று சொல்லிக்கொண்டு” என்று ஒரு நகைச்சுவையினை அண்மையில் படிக்கக்கிடைத்தது. அது நகைச்சுவையாக மட்டும் அன்றி சிந்திக்கவைத்தது.
காரணம் ஒரு ஆணின் சகலத்துக்கும் உரிமையானவள், அவனது மனைவியே, கண்டிப்பாக, வெளியில் கணவன் பற்றி தெரியாத பல விடயங்கள் அவனின் மனைவிக்கு தெரியவரும். வெளியில் சண்டியர்களாக இருக்கும் பலர் தமது மனைவிக்கு பயந்தவர்களாகவே இருப்பர்.


ஒருவனிடம் இன்றைய நிலையில் அவனது மனைவி எதிர்பார்ப்பது, தனக்கு கணவனால் வழங்கப்படும் ஒரு கௌரவம், தனக்காக அவன் ஒதுக்கும் நேரம், அன்பான பேச்சு இவை மட்டுமே. ஆனால் இவற்றை கொடுப்பதற்குக்கூட இன்றைய உலக கணவன்மார்களால் இயலாமல் உள்ளது.
ஓவ்வொரு அணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் உள்ளால் என்று அவளை சிறப்பிப்பது. அவனது துறையில் அவளுடைய பங்கும் உள்ளது என்பதல்ல. சிறந்த ஒரு இல்லாளாக இருந்து கணவனை அனுசரித்து, அவனை முழுமையாக புரிந்துகொண்டு, அவனுக்கு வீட்டிலோ குடும்பத்திலோ எந்தப்பிரச்சினைகளும் வராது, வீட்டின் நிர்வாகத்தை தான் கவனித்து வீடும் வரும் கணவனுக்கு ஆறுதலை அளித்தாள் என்றால் அவள் கண்டிப்பாக அவளது கணவனின் வெற்றியில் பெரும் பங்கு எடுத்துக்கொள்கின்றாள் என்றே கூறமுடியும். நிச்சயமாக அவளது கணவன் வெற்றிபெறுவான். மாறாக எதிரும் புதிருமாக இருந்தால் நிலைமைகள் தலைகீழாவே மாறும்.



உதாரமாக இன்றைய வெற்றியாளர்கள் என்று நீங்கள், கருதும் நபர்களையும் அவர்களது மனைவிகளையும் உற்றுப்பாருங்கள், அவர்களிடம் எவ்வளவு, அந்நியோன்னியம், புரிந்துணர்வுகள் இருக்கும் என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
இவ்வாறான மனைவியரே தனது கணவனின் வெற்றிப்பாதைகளில் இருக்கும் முட்களை அகற்றி, அவனின் முன்னேறத்திற்கு பின்னால் நிற்கின்றனர்.
வெற்றிபெற்று பெரியமனிதர்கள் ஆகிவிட்டாலும், உலகின் கண்கள் முழுவதும் அவர்களை உற்றுநோக்கினாலும், எங்கு சென்றபோதிலும், போன அலுவல்களை உடனடியாக முடித்துக்கொண்டு தமது மனைவியை நாடி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஓடிவந்துவிடுவார்கள். உதாரணங்கள் நிறைய பிரபலங்களைச் சொல்லலாம். அதற்காக அவர்களை பொண்டாட்டி தாசர்கள் என்று நினைத்துவிடக்கூடாது, அவர்கள் வாழ்க்கையின் அர்தத்தையும் வாழ்வியலையும், தூய்மையான அன்பையும் புரிந்துகொண்டவர்கள் என்பதே அதன் அர்த்தம்.

குறிப்பு இது ஒரு மீள்பதிவு. இன்னும் இந்தப்பதிவை வாசிக்காத என் மனைவிக்கும். இப்போது புதிதாக காதல் தேசத்திற்குள் நுளைந்து அசேலம் கேட்டுக்கொண்டிருக்கும் பதிவுலக நண்பர்கள் இருவருக்கும் இந்த மீள் பதிவு சமர்ப்பணம்"

Tuesday, August 10, 2010

ஆகஸ்ட் 13 இல் திரைக்குவருகின்றது “The Expendables”


எதிர்வரும் 13 ஆம் நாள் - ஆகஸ்ட் 13, வெள்ளிக்கிழமை (ஷில்வஸ்ரனுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லைப்போல) உலகத்திரைகளில் மிக..மிக மிக பிராமண்டமாக வெளியிடப்படுகின்றது
“The Expendables” ஹொலிவூட் திரைப்படம்.



ஆர்னோல்ட், ஷில்வஸ்ரன் ஸ்ராலோன், ஜெட் லீ, ஆகியோருக்கு உலக சினிமாவில் தனித்தனியே மாஸ் உண்டு. ஆனால் இந்த மூவரும் இணைந்து நடித்து போதாத குறைக்கு
மிக்கி ரொக்கி, ஜோன்ஸன் ஷதாம், டொல்ப் டன்ஹிரன், எரிக் ரொபேட்ஸ், ரெர்றி கிறியூஸ், ஸ்ரீவ் ஒஸ்ரின் ஆகியோரும் ஒன்றிணைந்து ஒரு படத்தில் மிகப்பிரமாண்டாக தயாரிக்கப்பட்ட படத்தில் இணைந்து கலக்கினால் அது பற்றி சொல்லவும் வேண்டுமா? ஷில்வஸ்ரனுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் இது ஒரு கனவு அணியாகவே உள்ளது.

முன்னர் 2010 ஏப்பரல் 30 ஆம் தேதி வெளியடப்படுவதாக இருந்து, பின்னர் உச்சக்கட்ட படப்பிடிப்புக்களை இன்னும் பிரமாண்டமாக எடுத்ததனால் நாட்கள் பின்னகர்ந்து ஜூலை 20ஆம் நாள் வெளியடப்படுவதாக இருந்து தற்போது எதிர்வரும் 13ஆம் தேதி திரைக்கு வருகின்றது “The Expendables”.

இந்த திரைப்படம் பற்றி கடந்த ஆண்டே நான் இரண்டு பதிவுகளை இட்டுள்ளபடியால் இந்த திரைப்படம் பற்றி மேலதிக தகவல்கள், ஸ்ரில்களை பார்க்க ஒரு தடவை என் முன்னைய பதிவையும் பார்த்துவிடுங்கள்.
இங்கே கிளிக்குங்கள்...

Saturday, August 7, 2010

ஞாயிறு ஹொக்ரெயில் (08.08.2010)

காஷ்மீர், திபெத், ஈழம்

ஆசியாவில் உள்ள பெரிய பிரச்சினைகளாக இந்த மூன்று பிரதேசங்களிலும் வாழும் மக்களின் நிலையினை கூறிக்கொள்ளலாம். மூன்று பிரதேசமுமே தங்களுக்கென தனித்துவத்தைப்பேணி, கலாசார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் தம்மைத்தாமே ஆண்டுவந்த இனங்கள், குழுக்களாகும்.
ஆனால் இன்று இந்த மூன்று பிரதேசங்களும் முறையே இந்தியா, சீனா, இலங்கை ஆகிய ஆக்கிரமிப்பாளர்களால் அடக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டு இருண்ட யுகங்களுக்குள் தள்ளப்பட்டுள்ளன. ஆண்ட இனங்கள், ஆள நினைப்பதை தமது வல்லாதிக்கம், இனவாதம், நில ஆசைகளால் இந்தியா, சீனா, இலங்கை ஆகிய அரசுகள் வன்கரங்கள் கொண்டு ஒடுக்கிக்கொண்டிருக்கின்றன.
இதை அன்றிலிருந்து இன்றுவரை சர்வதேசம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது பெரும் ஆச்சரியத்தையே ஏற்படுத்துகின்றது.

ஒரு பேச்சுக்கு ஐக்கியநாடுகள் சபை என்பது இருந்துவருகின்றது. இன்றைய நிலையில் சிரிப்பு பொலிஸ் என்பதுபோலவே சிரிப்பு ஐக்கிய நாடுகள் சபை என்றே அதை கொள்ளவேண்டும். இலங்கை போன்ற ஜூஜூப்பி நாடுகளே ஐக்கிய நாடுகள் சபையினை வெருட்டுகின்றன என்றால் ஐக்கிய நாடுகள் சபையை சிரிப்பு பொலிஸ் என்று கூறாமல் வேறு என்ன பெயரில்த்தான் அழைப்பதாம்!

மாவிட்டபுரம் கந்தசுவாமிகோவில் தேர் திருவிழா.

யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயம், தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலயம், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் என்பன மிக முக்கியமான வரலாற்று புகழ்மிக்க முருகன் ஆலயங்களாகும்.
தென்னிந்திய இளவரசியான மாருதப்புரவல்லி என்ற இளவரசிக்கு குதிரைபோன்ற முகம் இருந்ததாகவும், அவள் யாழ்ப்பாணம் வந்து, இந்த ஆலயத்தில் நோன்பிருந்து வழிபட்டுவந்ததால் அவள் குதிரைமுகம் நீங்கி அழகு பெற்றவளாக மாறியதாகவும் தல வரலாறு கூறுகின்றது. இதனாலேயே மாவிட்டபுரம் (மா –குதிரை, விட்ட – அகன்ற, புரம் - ஊர்) என்று இந்த ஆலயம் சிறப்பிக்கப்படுகின்றது.
ஈழத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளாலும், அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலயம் என அறிவித்து பொதுமக்கள் இந்த இடங்களை பயன்படுத்த தடை விதித்ததாலும், பல வருடங்களாக இந்த கோவிலுக்கு மக்கள் வழிபாட்டுக்கு செல்லவே இல்லை என்பது ஈழத்தமிழர்களின் அவலங்களின் ஒன்றாகிப்போனது.
வெக்கத்தை விட்டுச்சொல்வதென்றால் இந்தக்கோவிலுக்கு முதல் முதலாக நானே இன்றுதான் சென்றுள்ளேன்.
“குதிரை முகம் போக அருள் செய்த கந்தா! தமிழர்களின் அவலமுகம் போக எப்போது அருள்வாயடா கடம்பா!!”

மனிதனும் மர்மங்களும்.

பொதுவாகவே ஆவிகள் அமானுசங்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் என்றால் அனைவரும் உன்னிப்பாக கவனமெடுத்து, ஆவலுடன் படிப்பார்கள் என்பது இயல்புதான்.
ஆனால் ஆவிகள், அமானுசங்கள், விநோதங்கள், மர்மங்கள், பறக்கும்தட்டுக்கள், இவைபோன்றவற்றை விஞ்ஞானப்பார்வை கொண்டும், மிக நேர்த்தியாகவும் எழுதக்கூடிய ஒருவர் எழுதினால் அதன் சுவை கூடும் என்பதற்கு இந்த புத்தகம் ஒரு எடுத்துக்காட்டு.
நான் பிரமிப்புடன் பார்ப்பவர்களின் மதனும் ஒருவர். “அன்பே சிவம்” வசனங்களில் தனது திறமையினை மேலும் புடம்போட்டவரல்லவா மதன்.
மதனுடைய எழுததுக்களில் எப்போதும் எனக்கு ஒரு மயக்கம் உண்டு.(வந்தார்கள் வென்றார்கள்)
பெரிய விடயத்தைக்கூட மிக சிம்பிளான விளக்கத்துடன், இலகுநடையில் புரியவைப்பதில் மதன் கில்லாடி.
சொன்னால் நம்பமாட்டீர்கள், தனிமை இரவுகளில் உங்களுக்கும் இப்படியெல்லாம் சில வேளைகளில் நடந்திருக்கலாம் என்று மதன் கூறியுள்ளவற்றில் ஒரு சில எனக்கும் நடந்துள்ளன. படிக்காதவர்கள் ஒருமுறை படித்துப்பாருங்கள்.

Black Button - Short Film

குறிப்பு - அகோரங்களை பார்க்க முடியாதவர்கள் இதை பார்க்கவேண்டாம்.

மீண்டும் எழுவேன்

தடைகளை மீறியும்
தொடரும்
துளிர்வும் ஒளிர்வும்..

இலைகளை இழந்ததற்கே,
தலை போனதாய்
துவளும் மனிதர்களே..
இங்கே;
மண்ணும்இ விண்ணும்
மறுக்கப்பட்ட
மரம் ஒன்று,
வடிந்த ஒளியிலும் -தன்
விடியலை,
வேரில் இருந்தே
விரையும்
வேகத்தை பார்தீர்களா ?

பெயர்வுகள்..
பிரிவுகள் -பின்னும்
மின்னும்
மீதமுள்ள நம்பிக்கைகளை,
முதலிட்டு,
மீண்டெழும் செடியின் கதை
உங்கள்..
முளையாத
உறங்கு நிலை
வித்துக்களுள்- புகும்
நீராகிடட்டும்!!

நண்பர் திருமயூரனின் கவிதைகளின் ஒன்று.
--அங்கொடை மன நல வைத்தியசலை நோயாளர் விடுதி மூலை ஒன்றில்
துளிர்வை பேசும் இந்தச் செடி..(20.03.2010 )


தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி

சில பாடல்கள் மிக அற்புதமானவையாக இருக்கும் ஆனால் அதற்கான விஸ_வல் நேர்த்தியானதாக இருக்காது. அந்த பாடலின் தன்மையினையே அது கெடுத்துவிடுவதாக இருந்துவிடுவதும் உண்டு.
ஆனால் பாடல்வரிகள், குரல், விஸ_வலைசன் அனைத்தும் மிகப்பிரமாதமாக வந்த பாடல் இது.
பாடலைக்கேட்டுக்கொண்டே பாடல்காட்சிகளை பார்க்கும்போது, உடலை ஒரு தூக்கு தூக்கிப்போடுகின்றது. நாம் ஒவ்வொருவரும் சந்திக்கப்போகும் தருணம் அது. வரிகளை எழுதி அந்தப்பாடலின் தனித்துவத்தை கெடுக்கவிரும்பவில்லை. ஒருமுறை கேட்டு, பார்த்து சொல்லுங்கள். இப்போ உங்கள் மனதில் தோன்றுவது என்ன?
(பாலுமகேந்திரா என்றால் என்ன சும்மாவா?)

ஷர்தாஜி ஜோக்
நம்ம ஷர்தாஜி ஒருநாள் அவசரமாக சந்தைக்குப்போய்கொண்டிருந்தார். வழியில் அவர் வீட்டிற்கு அருகில் முன்னர் வசித்துவந்த இளம் பெண் ஒருவரை சந்தித்தார். அப்போது தான் ஒரு புதிய கார் வாங்கியுள்ளதாக அந்தப்பெண் தெரிவித்தாள்.
அதைக்கேட்ட நம்ம ஆள்…ஓ…நைஸ்..என்ன பிரான்ட் கார் வாங்கியிருக்கிறீங்க? எனக்கேட்டார்…அதற்கு அந்தப்பெண்.. பெயர் சரியாக எனக்கு நினைவு இல்லை அனால் அது T இல தான் ஸ்ரார்ட் பண்ணுது என்றாள்.
உடனே நம்ம ஷர்தாஜி..ஓ….பெற்றோலுக்கு பதிலாக இப்ப TEA இல கார் ஓடுதா என்று வாய் பிழந்தார்.

Friday, August 6, 2010

வேற்றுமொழிக்கதைகள்>>>>03. மொஸ்கோத் திருடன்.


அதிகாலைநேரமே ரூஷா நகர வர்த்தக தொகுதியில் பரபரப்பு தொடங்கிவிட்டது.
பாரிய இரும்பு விற்பனை கடை ஒன்றில் பல இலட்சம் ரூபிள்கள் கொள்ளைபோய் இருந்தது. கடையின் வலதுபுற ஓரமாக கன்னமிடப்பட்டு துணிகரமாக அதேநேரம் மிகச்சாதுரியமாக கொள்ளையிடப்பட்டிருந்தது.
உடனடியாக யாரும் உள்நுளைய அனுமதிக்கப்படவில்லை. மொஸ்கோ நகரப் போலீஸார் இரும்புக்கடையினைச்சுற்றி தடைவேலிகளை அமைத்திருந்தனர்.

சற்று நேரத்திற்கெல்லாம் காவற்துறை அதிகாரி ஜோர்ஜிலி அந்த இடத்திற்கு விரைவாக வந்து, சற்று நிதானமாக நின்று அந்த கடையை ஆழமாக நோட்டமிட்டார். பின்னர் கன்னமிடப்பட்ட வாசல்வழியாக உள்நுளைந்து மெதுவாக ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்தார். பணம் இரும்பு பெட்டகத்தினுள்ளே வைக்கட்டு பூட்டப்பட்டிருந்ததாக கடையின் உரிமையாளர் கூறியிருந்தார்.
இரும்பு பெட்டகமோ எந்தவித சேதங்களும் இன்றி மிக இலாவகமாக திறக்கப்பட்டு, பணம் அத்தனையும் திருடப்பட்டிருந்தது. ஜோர்ஜிலி அதிசயத்துடன் நெற்றியை சுருக்கிக்கொண்டார்.

தனது வழமையான பாணியிலேயே கடையினை முழுதாக ஆராய்ந்தார். ஏதாவது துப்பு கிடைக்கின்றதா என்று பார்த்தார். அதிசயம்!! கால் அடையாளம்கூட நிலத்தில் பதியப்பட்டிருக்கவில்லை. பிரிஸ்வெட், இஸ்ரா நகரங்களில் இடம்பெற்ற களவுப்பாணியினை இது ஒத்திருந்ததை அவர் குறிப்பெடுத்துக்கொண்டார்.
சட்டென்று பொறி தட்டவே விரைந்துசென்று காசாளர் மேசைமீது நோட்டமிட்டார்.
ஆம்..அவர் எதிர்பார்த்தது கிடைத்தது.

ஒரு ரூபிள் நாணையத்தில் மூன்று ஓட்டைகள் இடப்பட்டிருந்தன. ஆம்..இது அவர்கள்தான் அல்லது அவன்தான் என தனக்குள் சொல்லிக்கொண்டார்.
ஜோர்ஜிலியின் கோபம் கண்களில் தெரிந்தது.
அவருக்கு இந்த சம்பவங்கள் மனதில் பெரும் சவாலகவே இருந்தது.

காவல் நிலையம் வந்து, தனது இருக்கையில் இருந்த வண்ணம் அந்த மூன்று ரூபிள் நாணையங்களையும் எடுத்து எதையோ ஆழமாக யோசித்துக்கொண்டிருந்தார்.
ஒருபக்கம் கவர்ணரின் நச்சரிப்பு, மறுபக்கம் எத்தனை சிறமைகள் கொண்டு, பல கலவரங்களையே அடக்கி, எத்தனை பெரிய கொள்ளை, கொலைக்காரக்கும்பல்களையே சில நாட்கணக்கில் அடக்கிவிட்ட தனக்கு இது பெரும் சவாலாக வந்துவிட்டதே என்று மனம் பேதலித்துக்கொண்டிருந்தது.

மூன்று கொள்ளைக்கும் எதாவது தொடர்பு உள்ளதா என்று ஆராய்ந்துபார்த்தார்.
ஓன்று மெடிக்கல் சொப், அடுத்தது ஒரு ட்ரஸ்ட், மூன்றாவதாக இப்போது இரும்புக்கடை. வர்த்தக ரீதியிலும் ஒருவருக்கு ஒருவர் அவர்களிடம் தொடர்பு கொண்டிருக்கவில்லை. ஆனால் கொள்ளை நடந்த இடங்களில் காவற்துறையினரை கோபப்படுத்தும்படியாக ஒவ்வொரு களவுக்கும் ஒவ்வொரு துளைகளாக ரூபிள் நாணயத்தில் ஓட்டைபோட்டுச்செல்வது அவருக்கு பல கேள்விகளை மனதிற்குள் கொண்டுவந்துகொண்டிருந்தது. ஆனால் மூன்று கொள்ளைகளுக்கும் இடையில் உள்ள ஒரு சிறிய தொடர்பை கவனிக்காமலேயே நகர்களை கண்காணிப்பதற்கும், துப்புக்கள் துலக்குவதற்கும் அதிகாரிகளை பணித்துவிட்டு அன்றாட கடமைகளில் ஈடுபடத்தொடங்கினார்…முடியவில்லை அந்த ரூபிள் நாணையங்கள் அவர் மனதை குமுறிக்கொண்டிருந்தன.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரொயிட்ஸ்க் நகரம் கலவரப்பட்டுக்கொண்டிருந்தது. ஆம்..அரச வங்கி ஒன்றில் கொள்ளை போய் இருந்தது. இம்முறை கன்னமிடப்பட்டிருக்கவில்லை. வங்கியின் பின்புற கதவு உடைகப்பட்டு உள்ளே மேலும் நான்கு கதவுகள் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் 10 இலட்சம் ரூபிள்கள் மட்டுமே திருட்டு போயிருந்தன. அங்கே இங்கே பார்த்து நேரத்தை வீணடிக்காமல் நேரே காசாளர் கவுண்டர்களில் நாணையத்தை தேடினார் ஜோர்ஜிலி.
எதிர்பார்த்ததுபோலவே ஒரு ரூபிள் நாணயம் இருந்தது.
அதில் ஐந்து துளைகள் போடப்பட்டிருந்தன. ஓ…அசிங்க வார்த்தை ஒன்றை பேசி தன் துடையில் அடித்துக்கொண்டார் ஜோர்ஜிலி.

உடனடியாக வேறு எங்காவது களவுபோனதாக தகவல்கள் வந்துள்ளனவா என்று சக அதிகாரிகளிடம் வினவினார் ஜோர்ஜிலி. அதேநேரம் உள்ளே வந்த அவரின் உதவி அதிகாரி ஒருவர் இதே நகரத்தில் உள்ள முக்கிய பிரபலம் ஒருவரின் வீட்டில் களவு போயிருந்ததாக தெரிவித்தார். விசாரணைகளுக்கு வங்கியில் சில அதிகாரிகைளை பணித்துவிட்டு குறிப்பிட்ட அந்த வீட்டை அடைந்தார் ஜோர்ஜிலி.
அந்தப்பிரபலமோ கொள்ளையர்கள் வந்து போனதே தமக்கு தெரியவில்லை, காலையில் எழுந்து பார்த்தால் களவு போனவிடயம் தெரிந்தது என்றார் என்றார்.
சற்று முற்றும் தேடிப்பார்த்தில் அங்கிருந்த மேசைமீது இருந்தது நான்கு துளைகளுடன் ஒரு ரூபிள் நாணயம்.

-அடுத்த பதிவில் மொஸ்கோ திருடன் வருவான்.

Tuesday, August 3, 2010

சங்க இலக்கிய காதல்..


சங்க காலம்!!!! இந்தக்காலம் கூட முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று காலங்களை கொண்டது. சங்க கால மக்கள் வாழ்க்கைமுறையினை எடுத்துக்கொண்டால் எந்தவொரு மொழிக்கலப்பும், இனக்கலப்பும் இல்லாமல் தமிழ் தமிழாக இருந்த காலம் என்று கூறிக்கொள்ளலாம்.
சங்ககாலம் பற்றி எழுதப்போனால் அதற்கே இருபது, முப்பது பதிவுகள் தேவைப்படும். அதுகுறித்து ஆழமாக போகாமல் சங்க காலத்தில் காதல் ரசம் சொட்டும் பாடல்கள் சிலவற்றை எடுத்து அந்த காதல் ரசத்தை கொஞ்சம் நாக்கில் விட்டு தித்திப்பில் இலகிக்கலாம் வாருங்கள்.

பொதுவாகவே அன்றிலிருந்து இன்றுவரை தமிழில் வந்த இலக்கிய வகைகள், இலக்கியம் கடந்து காலவோட்டத்தில் வந்த இன்றைய சினிமாவரையான பகுதிவரை (அதுக்காக சினிமாவையும் இலக்கியம் ஆக்கிப்புடலாமா என்று கேட்கக்கூடாது) காதல், வீரம் என்ற இரண்டு கருப்பொருட்கள் எல்லாவற்றிலும் புகுந்துவிட்டது.
உண்மையை சொல்லப்போனால் இந்த காதல், வீரம் ஆகிய இரண்டும் சங்க கால மக்களின் பெரு வாழ்க்கைமுறையில் அவர்களின் வாழ்வியங்களாகவே இருந்துவந்தமையும், அவற்றையே இலக்கியங்களும் பாடியமையினாலேயே இந்த மரபணுப்பாய்ச்சல் இற்றைவரை எமக்குள்ளும் பாய்ந்துகொண்டிருக்கின்றது.

சரி…காதலை சொல்லமுதல் அந்த வாழ்க்கைமுறைபற்றி கொஞ்சம் தொட்டுவிட்டு போவோமே! சங்ககாலத்தில் ஆண்களும் பெண்களும் சம அந்தஸ்துடனேயே நோக்கப்பட்டார்கள் என்பதுடன், இலக்கியம் வாயிலாக ஆழநோக்கினால் இந்தக்காலத்தில் பெண் அடிமைத்தனம், அபரிதமான பெண்மைக் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. அனைவருக்கும் உரிய சுதந்திரம் கொடுக்கப்பட்டது. ஆண்களுடன் பெண்கள் சகஜமாகப்பழகினார்கள், ஆனால் அவர்கள் அந்த சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யவில்லை. கற்புநெறியில் சீரிய வாழ்க்கைமுறையை கொண்டவர்களாகவே இருந்தார்கள். ஆண் என்றால் அவன் வீரனாக இருக்கவேண்டும் என்பதே பெண்ணின் எதிர் பார்ப்பாக இருந்தது.

நிலத்தின் தன்மைகளைக்கொண்டு அவர்கள் வாழ்ந்துவந்த இடத்தை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாக வகுத்து வாழ்ந்துவந்தார்கள். நிலத்தின் தன்மைகள், அவற்றின்மேலான தொழில், அவற்றின் மூலம் உண்டாகும் இயல்புகள் என்பன இலக்கியங்களில் தாக்கத்தை செலுத்தின.
பொதுவாகவே சங்க கால காதல் இலக்கியங்களுக்கு ஆழமான ஒரு வரையறை உண்டு. அந்த வரையறை உடைபட்டால் அது காதல் இலக்கியமாக (அகம்) ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தம்முள் கூடும் இன்னம் இன்தென்று சொல்லாமை, பெயர்சுட்டாமை, ஒவ்வாத காதல், முரணான காதல்கள் (பொருந்தாக்காமம்) அகம் என்று கொள்ளல் ஆகாது.
இப்படி நிறைய விதிகளும் உண்டு. இதுகுறித்து ஆழமாக போனாலும் பக்கங்கள் நிறைந்துவிடும் சரி..விடயத்திற்கு வருவோம் தேர்ந்தெடுத்த காதல் தேன் சொட்டும் செய்யுள்கள் சிலவற்றை பார்ப்போம்…


*மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தில் உண்டான காதல் இது
ஒரு பெண் காதலினால் படும் இன்பவலியை அழகாக எடுத்துரைக்கின்றார் இந்த செய்யுளை இயற்றிய கபிலர்.


“வேரல் வேலி வேர் கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யார் அஃது அறிந்திசினோரே சாரல்
சிறு கொட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே..”


சிறிய ஒரு கிளையில் பாரம் தாங்காமல் தொங்கும் பெரிய பலாப்பழம்போல,
காதல் வியப்பட்டு நிற்கும் இவளது காதல் மிகப்பெரியது, அனால் அதை தாங்கும் அளவுக்கு அவள் உயிர் பெரியதாகத் தெரியவில்லை. அது மிகச்சிறியது.
இந்த வேதனையினையும் விரக தாபத்தையும் யார்தான் அறிவார்களோ!
வேர்ப்பாலாக்களுக்கு மூங்கில் வேலியிட்டு பாதுகாக்கும் மலைநாட்டின் தலைவனே!!
என விழிக்கின்றது.

*அடுத்து இது கொஞ்சம் படு செக்ஸியான செய்யுள்தான். அப்படியே பொருளை சொல்லிவிடமுடியாது. பட்டும்படாமலும்தான் சொல்லவேண்டும் கடைசிவரி பொருளை அப்படியே கண்டுபிடிப்பவர்களுக்கு முழுவதும் விளங்கும். வேண்டுமென்றால் முயன்றுபாருங்களேன்.
இது ஒரு பெண்ணின் உச்சக்கட்ட விரகாத உணர்வு. நீண்டநாள் பிரிவின் ஏக்கம்.
பாலைநிலத்து பெண் ஒருவள் விரகதாப உச்சத்தில் பிதற்றுவதாக கொல்லன் அழிசி என்ற புலவனின் செய்யுள்.


“கன்றும் உண்ணாது கலத்தினுள் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்தில் உக்கா அங்கு
எனக்கு அகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே.”


கன்றும் குடிக்காமல், பாத்திரத்திலும் கறக்காமல், நிலத்தில் வீணே வழிந்துபோகும் பசுவின் பாலைப்போல, எனக்கும் உதவாமல், என் தலைவனுக்கும் இல்லாமல் என் அழகும் விணாகிக்கொண்டிருக்கின்றதே (இப்படித்தான் கொஞ்சம் மறைச்சு பொருள் விளக்கம் தரமுடியும்)

*ஒரு பெண்ணுக்கு காதல் வந்துவிட்டால் முதலில் கெடுவதென்ன தூக்கம்தானே?
அப்படி காதல் வயப்பட்ட பெண்கள், தாங்கள் தூங்காது அடிச்சுப்போட்டதுபோல தூங்கும் ஊரைப்பாhர்த்து பொறமாமைப்படுவதும், ஆத்திரப்படுவதும் கொஞ்சம் ஓவர்தான்.
நெய்தல் நிலப்பெண் காதல் வயப்பட்டு தூக்கம் தொலைத்து நின்ற உணர்வை பதுமனார் என்ற புலர் சொல்கின்றார் இப்படி

“நள்ளென்றன்றே, யாமம் சொல் அவித்து,
இனிது அடங்கினரே, மாக்கள் முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மற்ற துஞ்சாதேனே”



நள்ளிரவு நிசப்தம் நலவுகின்றதே.. தமது சத்தங்களை எல்லாம் தொலைத்து மக்கள் தூங்குகின்றனரே, அடடா உலகமே தூங்குகின்றதே என்னைத்தவிர!
(மக்களும் உலகமுமா சொன்னார்கள் இவளை காதல் செய்யச்சொல்லி?)

*அடடா கால் என்று சொன்னால் அது பெண்ணுக்குத்தானா? ஆண் காதல் தாபத்தில் தவிக்கமாட்டானா? என்று எண்ணுகின்றோம் அல்லவா?
ஆணுக்கு நாணம் வந்தால் அதைவிட அவஸ்தை வேறு இல்லை என்பதை சரியாக்குவதுபோல குறிஞ்சி நிலத்து தலைவன் ஒருவன் வெக்கப்படுகின்றான் ஏன் என்று புலவர் தொல்கபிலர் சொல்கின்றார் இப்படி

“அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த
வார்த்து இலக்கு வை எயிற்றுச் சில் மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு
அறிகதில் அம்ம இவ் ஊரே மறுகில்,
நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூற, யா அம் நாணுகம் சிறிதே”


நன்றாக சிவந்துபோன நாக்கு, அணிசேர்ந்ததுபோல அழகான சிறிய பற்கள்,
குறைவான பேச்சு உள்ள இந்தப்பெண்ணை தான் அடைந்தபோது, அந்த ஊரே தன்னை இந்த “நல்லவன்தான்” இவளின் கணவன் என்று சொல்லும்போது தான் கொஞ்சம் வெக்கப்படுவாராம் இவர். (அப்பவே வடிவேலுவின் காமடிகள் ரிலீஸ் ஆகிட்டோ)

*காதலிச்சா கண்ணின் நிறம்மாறுமா? மாறும்தான் என்கின்றனர் அனுபவ சாலிகள்.
ஒருவகையில் நித்திரை இன்றி கண் நிறம்மாறும், ஆழுது அழுது கண்ணின் நிறம் மாறும், துரத்திக்கொண்டு வெயிலில் திரிந்தால் கண்ணின் நிறம் மாறும், அடி வாங்கிக்கூட கண்ணின் நிறம்மாறும்.
அட போங்க ஆளே மாறும்போது கண்ணின் நிறம் மாறாத என்ன?
குறிஞ்சி நிலத்தைச்சேந்த தலைவி ஒருத்தி காதலித்து தன் கண்களின் நிறம்மாறியது என்பதுபோல எழுதியுள்ளார் புலவர் கபிலர்.

“மாசு அறக் கழீஇய யானை போலப்
பெரும் பெயல் உழந்த இரும் பிணர் துறுகல்
பைதல் ஒரு தலைச்சேக்கும் நாடன்
நோய் தந்தனனே தோழி
பசலை ஆர்ந்தன, நம் குவளை அம் கண்ணே”


அழுக்குப்போக சுத்தமாக கழுவப்பட்ட யானையினைப்போலவும், பெரும் மழையினால் நிலமெல்லாம் கழுவப்பட்டு சுத்தமான நாட்டைச்சேர்ந்தவன் எனக்கு தந்த காதல் நோயால் கறுப்பான என் கண்கள் இப்போ பச்சையாக போய்விட்டது என்கின்றாள்.
மஞ்சளாய்ப்போயிருந்தாலாவது மஞ்சள் காமலை என்று மருந்தெடுத்திருக்கலாம். பசுமைக்கு ஏங்கியதாலோ என்னமோ இவளது கண்கள் பச்சையாகிவிட்டனவோ தெரியாது.

இப்படியே விரக தபாங்கள், பொய்க்கோபங்கள், நாணங்கள், கூடலின் பின் ஊடல்கள், பழியை காதலிமீதும், காதலன்மீதும் மாறி மாறி போடும் தன்மைகள், தங்கள் காதலை உலகமே கவனிக்கவேண்டும், அதுவே மிகப்பெரிய விடயம் என்ற எண்ணங்கள், விரகதாபத்தின் உச்சத்தில் வரும் சுய கோபங்கள் என்று காதலர்களின் பல்வேறு உணர்வுகளையும் சங்க இலக்கிய காதல்கள் தொட்டு நிற்கின்றன.
எத்தனையோ அற்புதமான செய்யுள்கள்! தமிழ்; பக்தி மொழி என்பது தவறு.
தமிழ் உணர்வுகளின் மொழி என்று சொல்லுங்கள்.
தமிழுக்கு உருகி உருகி கும்பிடவும் தெரிந்திருக்கின்றது.
அதைவிட உருகி உருகி காதலிக்கவும் தெரிந்துள்ளது.

Sunday, August 1, 2010

ஞாயிறு ஹொக்ரெயில் (01.08.2010)

எந்திரன் பாடல்கள் ஏமாற்றவில்லை.

எப்போதுமே ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வெளிவருகின்றன என்றால் அவரது இரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் தூண்டிவிட்டு, எப்படியாவது அதை கேட்டுவிடவேண்டும் என்ற ஆர்வம் வந்துவிடும்.
பெரும்பாலான அவரது இசைப்பாடல்கள் கேட்கக்கேட்கத்தான் இன்னும் இலகிப்பாக இருப்பது உண்மை. பாடல்கள், பாடல்களுடன் சேர்ந்துபோகும் அற்புதமான இசை, இவற்றையும் கடந்து கேட்கும் “உள் இசை என்று ஒன்றும்” உன்னிப்பாக கேட்டால் நம் ஒவ்வொரு செல்லையும் சிலிர்க்க வைத்துவிடும்.
எந்திரன்…இன்னும் ஒரு படி மேல்த்தான என்று கூறவேண்டும். காரணம் ரஜினி, சங்கர், ரஹ்மான், வைரமுத்து என்ற சிகரங்களின் சந்திப்பு அல்லவா?
பாடல் வெளியீட்டுவிழா நேற்று கோலாலம்பூரில் மிக பிரமாண்டமாக இடம்பெற்றுள்ளது.
விடயத்திற்கு வருவோம்…புதிய மனிதா, காதல் அணுக்கள், அரிமா அரிமா, கிளிமஞ்சாரோ, இரும்பிலே ஒரு உதயம், பூம் பூம் ரோபோடா, சிட்டி டான்ஸ் ஸோகேஸ் என ஏழு பாடல்கள் உள்ளன.
இதில் புதிய மனிதா, காதல் அணுக்கள், அரிமா அரிமா, ஆகிய மூன்று பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கின்றார்.
கிளிமஞ்சாரோவை பா.விஜய்யும், பூம் பூம் ரோபாடா என்ற பாடலை கார்க்கியும் எழுதியுள்ளனர்.
எனக்கு இப்போது உடனடியாக அரிமா அரிமா ரொம்ப பிடித்திருக்கின்றது.

"சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்
சற்றென்று மோகம் பொங்கிற்றே...
ராட்ஷசன் வேண்டாம் ரசிகன் வேண்டும்
பெண் உள்ளம் உன்னை கெஞ்சிற்றே...

நான் மனிதன் அல்ல
அக்கினியின் அரசன் நான்
காமூட்ட கணினி நான்
சின்னம் சிறுசின் இதயம் தின்னும் சிலிக்கான் சிங்கம் நான்..."
வசனங்கள் சூப்பர்..

194 ஆவது அகவையில் மத்திய அன்னை.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணத்தில் கல்வி வரலாற்றில் பெரும் செல்வாக்கு செலுத்திய, செலுத்திக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உயர்தரக்கல்லூரி. யாழ்ப்பாண நகரப்பட்டினத்தில் நடு மத்தியில் உள்ளதனால் அதன் காரணப்பெயர்கூட மிகப்பொருத்தமாகவே உள்ளது.
யாழ்ப்பாணத்தில் வெள்ளையரின் ஆட்சி நினைவை பறைசாற்றும் உயர்ந்த மணிக்கூட்டுக்கோபுரம், ஒல்லாந்தரின் ஆட்சியை நினைவு படுத்தும் யாழ்ப்பாணக் கோட்டை, வரலாற்றில் பல தடங்களையும், கறைகளையும் சந்தித்து சற்று நிமிர்ந்து நிற்கும் யாழ்ப்பாண நூலகம், யாழ்ப்பாணத்திலேயே பெரிய மைதானம், கல்லூரியை சுற்றிவர பல கேந்திர நிலையங்கள் என இன்று பூரிப்புடன் நிற்கின்றாள் மத்திய கல்லூரி என்னும் அந்த தாய்.
கல்வியாளர்களை மட்டும் இன்றி பெரும் விளையாட்டு வீரர்களையும் நாட்டுக்கு வழங்கியது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி. முதன் முதலாக இலங்கைக்கு ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று கொடுத்த எதிர்வீரசிங்கம் இந்த கல்லூரியின் மாணவனாக இருக்கும்போதே அதை சாதித்திருந்தார்.
நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்களர் என மூவினங்களிலும் உள்ளவர்களும் இங்கு கல்வி கற்றுள்ளனர்.

துடுப்பாட்டம், காற்பந்தாட்டம், கொக்கி, கூடைப்பந்து, சாரணர் இயக்கம், ஆகியவற்றை யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்து வைத்த பெருமையினை இந்த கல்லூரியே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
யுத்த காலத்தில் பெரும் சேதங்களுக்கு உள்ளான இந்த கல்லூரி, அதே உறுதியுடன் இன்றும் அதே இடத்தில் புதுப்பொலிவு பெற்று நிமிர்ந்து நிற்பதே மத்திய அன்னையின் உறுதிக்கு எடுத்துக்காட்டு.
அவளின் விழுதுகளில் ஆடி சுரம்பாடிய குயில்களின் குரல்களின் என் குரலும் உள்ளமையில் உவகை கொள்கின்றேன்.
மத்திய மைந்தன் என்பதில் இன்றும் நான் பெருமை கொள்கின்றேன்.
(கல்லூரியின் தோற்றத்தை panorama இல் வித்தியாசமான கோணத்தில் எடுத்தவர் மத்தியின் மைந்தன் - பதிவர் கன்-கொன்)
காட்சிப்பிழை


ஜனநாயகம்

வண்ண வண்ணமாய்
நிறைந்துகொண்டிருக்கிறது சுவர்கள்!
எங்கள் வயிறுகள் மட்டும்.........

சுவர்களில் இருந்து
பார்த்துக்கொண்டிருங்கள்
சுடலையாகிறது எங்கள் வாழ்வு!

உங்களை உயர்விக்க
வண்ணங்கள் கொடுத்தனுப்பும் நீங்கள்
எங்களை உயிர்விக்கும்
கிண்ணங்களை மறந்ததேன்?

ஜனங்கள் அல்ல
"நாயகர்களே"
ஆள்வதாக
ஆகியிருக்கிறது - எங்களின்
ஜனநாயகம்!

...............................................

-நண்பர் திருமயூரனின் கவிதை.

ஆண் பற்றிய பெண்ணின் வர்ணனை

ஹீரோயிசம் நிறைந்தது தமிழ் சினிமா என்றாலும், காதலை மையமாக வைத்துத்தான் எந்தவொரு அக்க்ஷன் படமும் எடுக்கப்படும் என்றாலும், காதல் உணர்வுடன், காதலியின் பார்வையின் அவனின் ஆண்மை, அவனின் வர்ணனைகள் என்பவை தமிழ் சினிமாவில் பெரும் பஞ்சமாகவே இருந்தன. பெண் வர்ணனையும், பெண் பற்றிய ஒரு ஆணில் வர்ணனைகளுமே மலிந்து கிடந்தன.
அந்த வகையில் அந்த மரபுகளை உடைத்து பெண்ணின் பார்வையின் அவளது காதலின் பற்றிய வர்ணனைகளை தமிழ் சினிமாக்கு அற்புதமாக அரங்கேற்றியவர் கவிதாகினி தாமரை.

"சந்தியாக் கால மேகங்கள்
பொன் வானில் ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே
உன் நடையின் சாயலே தோணுதே
நதிகளிலே நீராடும் சூரியனை நான் கண்டேன்
வேர்வைகளின் துளிவழியே நீ வருவாய் என நின்றேன்
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மணம்
நான் உன் சொந்தம் என்ற எண்ணம் தரும்
மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே
......சாகத்தோன்றுதே"

எத்தனை அற்புதமான வசனங்கள் பாருங்கள்.. ஒரு பெண்ணின் உணர்வுகள் எப்படி வெளிப்படுகின்றது.
அந்த அணைப்பு..அவள் அவனுக்கே சொந்தம் என்ற முடிவு, உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வேறு என்ன சாவதற்கு தோன்றுதே என்கின்றாள் பெண்..
அற்புதம்.

ஷர்தாஜி ஜோக்
மும்பையில் உள்ள வங்கி ஒன்றில் தனக்கு சேமிப்பு கணக்கு ஒன்றை அரம்பிப்பதற்காக சென்ற ஷர்தாஜி வங்கியால் வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை நிரப்ப ஆயத்தமாகி விட்டு உடனடியாக டில்லிக்குபோய் அங்கிருந்து நிரப்பிக்கொண்டு மீண்டும் வந்தார் ஏன் தெரியுமா? அந்த விண்ணப்பப்படிவத்தில் இருந்தது இப்படி
" FILL UP IN CAPITAL ".

LinkWithin

Related Posts with Thumbnails