Wednesday, July 28, 2010

யாழ்ப்பாணத்தில் மீண்டும் பரவிவரும் மிருக பலி வேள்வி வழிபாடுகள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பல ஊர்களிலும் இன்று வேள்வி என்று அழைக்கப்படும் ஆடு, கோழிபோன்ற உயிரினங்களை பலியிட்டு வழிபாடு செய்யும் முறை ஒன்று என்றும் இல்லாத அளவுக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது. ஓவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஊர்க்கோவில்கள் என்ற கணக்கில் இவ்வாறான வேள்வி வழிபாடுகள் நடந்துகொண்டு இருக்கின்றன.
இன்று இந்தக்கோவிலில் வேள்வியாம் உங்களுக்கு எத்தனை பங்கு வேண்டும்? என்ற கேள்வியுடன் ஒரு பெரிய கூட்டமே, இறச்சித்தரகர்களாக உலாவிக்கொண்டு திரிகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் புதியதா? என்றால் அதன் விடை இல்லை. ஆனால் தற்போது இந்த நடவடிக்கைகள், பூஜைகள், வேள்விகள் அதிகரித்தவண்ணம் உள்ளன.
இவ்வாறான வழிபாடுகள் யாழ்ப்பாணத்தில் உள்ள கிராமங்களில், உள்ள காட்டுவைரவர் கோவில்கள், வீரபாகு கோவில்கள், முனீஸ்வரர் கோவில்கள், சுடலை வைரவர் கோவில்கள், பிடாரி அம்மன் கோவில்கள், காளி கோவில்கள் போன்றவற்றில் தொன்று தொட்டு இடம்பெற்றுவருகின்றது.
இன்று பெரிய கோவில்களாக ஆகம முறைப்படி வழியாடு நடைபெறும் சில அம்பாள் கோவில்களிலும் இத்தகய நடைமுறைகள் முன்னர் இருந்ததாக வரலாற்றுத்தகவல்கள் உள்ளன.

இருந்தபோதிலும் நல்லை ஆறுமுக நாவலர் அவர்களின் காலத்தில், சைவ சமய விழிப்புணர்வை ஏற்படுத்தி இவ்வாறான பலிபூஜைகள் நிறுத்தப்படவேண்டும் என்று அணித்தரமாக அவர் செயற்பட்டுவந்தமையின் காரணமாக பல கோவில்களில் இத்தகய நடவடிக்கைகள் வழக்கொழிந்துபோயிருந்தன.
இருந்த போதிலும் தற்போது அதிகரித்துள்ள இந்த பூஜை நடவடிக்கைகள் போலல்லாது இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒரு சில இடங்களில் இந்த பலிபூஜைகள் நடந்துகொண்டுதான் இருந்திருக்கின்றன.

எனினும் 1983 ஆம் ஆண்டுகளின் பின்னர் உருவான போராட்டகாலங்களில் மிருகங்களுக்குப்பதிலாக மனிதர்கள் பலியெடுக்கப்பட்டதாலோ, அல்லது மனித பலிகள் சர்வ சாதாரணமாக நிகழத்தொடங்கியதாலோ என்னமோ இத்தகைய நடவடிக்கைகள் பாரிய அளவில் குறைந்துகொண்டு சென்றன. குறிப்பாக 1992 தொடக்கம் 1995 வரை அப்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகையின்கீழ் யாழ்ப்பாணம் இருந்தபோது இவ்வாறான மிருகபலி பூஜை வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டதும் குறிப்படத்தக்க ஒரு விடயமே.
எது எப்படியோ, கடந்த ஆண்டு மே மாதத்துடன் இலங்கையில் யுத்த நடவடிக்கைகள் முற்றுப்பெற்றதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து, இவ்வாறான பூஜை வழியாடுகள் மட்டும் இன்றி யாழ்ப்பாணத்தில் பல பல விடயங்களிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

பஞ்சமா பாதகங்கள் அற்ற சமுகம், கொல்லாமை, உயிரினங்களின்மேல் அன்பு, அன்பே இறைவன், அன்பே சிவம் என்றும் அன்பு வழியையே இறைவனை அடையும் பக்தி வழியாக கொண்டு, சகல ஜீவராசிகளும் சமனானதே, ஜீவகாருண்யம் சமய கடமை, உண்ணும்போது ஒருபிடி வாயில்லா ஜீவனுக்கு வை, போடும் கோலத்தில்க்கூட அந்த அழகில் உள்ள மா எறும்புக்கு பசிபோக்கட்டும், இறைவன் அனைத்து உயிர்க்கும் பொதுவானவன் அதனாலேயே அவன் மிருகங்களை தனது வாகனங்களாக வைத்திருக்கின்றான் என்றெல்லாம் உன்னதமான அன்பைப்போதிக்கும் மதத்தின் பேரால், கடவுள்களின் பெயரால் இந்த இரத்தப்பூஜைகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் பெரும்வேடிக்கை என்வென்றால், இந்த நடவடிக்கைகளை இந்து காலாசார அமைச்சும், இந்து குருமார் ஒன்றமும், இந்து மகா சபையும், இந்து ஆர்வலர்களும், குருமகா சன்னிதானங்களும் கண்டும் காணாததுபோல இருப்பதே.
அதைவிடப்பெரிய கவலை என்னவென்றால், யாழ்ப்பாணத்தில் எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து எழுதும் ஊடகங்கள் சிலவும் இந்த நடவடிக்கைகளை மௌமாகப்பார்த்துக்கொண்டிருப்பதுதான்.
இலட்சக்கணக்கில சனங்கள் செததுப்போச்சாம் அதைப்பற்றி ஒருவரும் கதைக்கேல்ல! ஆடு, கோழியளுக்கு கதைக்கிறதோ என்ற எண்ணமோ தெரியாது.

இதை எழுதுதாறே இவர் என்ன செய்தார் என்று உங்கள் மனது கேட்கும்..
எனக்கு நடந்த அனுபவம் ஒன்றை அப்படியே தருகின்றேன்.
இந்தவகை பூஜைகளுக்கு மிக விசேடமான இடம் கௌனாவத்தை என்ற இடத்தில் உள்ள கோவில். கீரிமலைக்கு கிட்ட இருக்கின்றது. இங்கு இத்தகய நடவடிக்கைகள் இடம்பெறுவற்கு சற்று முன்னர் இந்த இடத்திற்கு நானும், இன்னும் இந்த வதைகளை நிறுத்தவேண்டும் என்ற பெரியவர்கள் சிலரும், நண்பர்களும் சென்று சேர்ந்திருந்தோம். அங்கே அந்தநேரத்திலேயே காலை 7.30 ஆடுகள் கொண்டுவரப்படத்தொங்கிவிட்டன. அங்கு கோவலில் முக்கிமானவர் என்று ஒரு ஐயாவை தேடிப்பிடித்து எங்களுடன் வந்த பெரியவர்கள், மிருகவதை குறித்தும், சமயம் குறித்து வாதாடினார்கள், நானும்தான்.

என்ன நினைத்தாரோ தெரியாது… அந்தப்பெரிவர்களை எல்லாம் பேசித்துரத்தி விட்ட ஐயா, தம்பி நீர் மட்டும் கொஞ்சம் நில்லும் என்று விட்டு, பக்கத்தில் நின்ற பெரிய மரத்தடிப்பக்கம் என்னை அழைத்து சென்றார்.
“தம்பி உங்களுக்கு சொன்னால் விளங்காது. இது கடவுள் சம்பந்தப்பட்ட விடயம். கடந்த 30 வருடமாக முத்தினதுகள், பிஞ்சுகள் என்று எல்லாத்தையும் நாங்கள் பறி கொடுத்தது காணாதே ஐயா!” சில சடங்குகள் சில விசியங்களுக்காகத்தான் வச்சிருக்கினம் பெரியவ, அதை விளங்காம இதுகளை தடை பண்ணித்தான் எங்களுக்கு பெரிய அழிவுகள், இனியும் அப்படி நடக்கக்கூடாது என்றுதான் இந்த பலிகள் பூசைகள் என்று பெரிய உபதேசமே செய்தார்.
அடடா…ஒரு இலட்சம் பெரியார் இல்லையப்பா… ஆளுக்கு ஒரு பெரியார் வீதம் வந்தாலும் இது சரிவராது என்று விட்டு, மேலதிகமாக நான் பேசினா ஆட்டுக்கு நடப்பது எனக்கும் நடக்கும் என்ற பயத்தில் வந்துவிட்டேன்.

சில சில தவறான நம்பிக்கைகள், சில தொழில்கள், சிலரின் கொண்டாட்டங்களுக்கான கேழிக்கைகளுக்காக ஒரு மதத்தின் கோட்பாட்டையே மிதித்தல், அறியாமை, ஜீவகாருண்யம் இன்மை, சிறந்த சமய வழிகாட்டிகள் இன்மை, மதத்தின் பெருமைகள் அற்றிருத்தல், இன்ன பிற காரணிகளே இவ்வாறான நடவடிக்கைகளுக்கு காரணமாக இருக்கின்றன.
உண்மையில் மிருக வதை என்பது முற்றுமுழுதாக தடைசெய்யப்படவேண்டும்.
ஒரு சமய கோட்பாட்டிற்கு சேறுபூசும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக எடுக்கவேண்டியது கட்டாயமாகும்.

Sunday, July 25, 2010

ஞாயிறு ஹொக்ரெயில் (25.07.2010)

மறக்கமுடியாத கறுப்பு ஜூலை

ஈழத்தமிழர்களின் வாழ்வில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் இறுதி வாரம் என்றும் மறக்கப்படமுடியாதவாறான பாரிய தாக்கம் ஒன்றையும், பல முடிவுகளை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஒன்றையும் அவர்கள்மேல் திணித்துவிட்டுப்போனது என்பதுதான் உண்மை.

முதன் முதலாக இந்தியாவின் பார்வை மட்டும் இன்றி, உலகநாடுகளின் பார்வையும் அவர்கள்மீது பட ஆரம்பித்த கட்டம் அது. அந்த வடுவின் தொடக்கமாக தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
போராட்டத்தின் காரணத்தை புரிந்து அதை நிவர்த்திசெய்யாத, எப்போதுமே செய்யப்போகாத ஒரு இனத்தின் அரசு, அந்தப்போராட்டத்தையும், வன்முறையால் அடக்க பெரும்பாடு பட்டுப்போராடி, கடந்த வருடம் தமிழர்களின் போராட்ட வலுவினை மொத்தமாக நசுக்கிவிட்ட இறுமாப்பில் இன்று நிற்கின்றது.

கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டு என்றாலும் அதன் பின்னர் வந்த ஒவ்வொரு ஆண்டுகளும் மாதங்களும் வடக்கு கிழக்கு தமிழர்களின் கறுப்பு ஆண்டுகளாகவும், கறுப்பு மாதங்களுமாகவே இருந்துவந்தன.
தமிழர்களின் போராட்டவலுவை எப்படியாவது நசுக்கவேண்டும் என்பதில் முனைப்புடன் செயற்பட்ட மாறும் அரசாங்கங்கள், அவர்களுக்கான தீர்வை வைப்பதில் இழுத்தடிப்பினையே மேற்கொள்கின்றன, இது ஒரு தொடர்ச்சி மாயம்.
இனவாதம் கழையப்படும்வரை அது என்றும் நடக்கப்போவதில்லை என்பதே யதார்த்தமும் கூட. சரி.. இதற்கு முடிவுதான் என்ன? விடை தெரியாத புதிருடன் ஒவ்வொரு தமிழனும் பயணித்துக்கொண்டிருக்கின்றான்..
“எளியதை வலியது கொன்றால்! வலியதை தெய்வம் கொல்லும்!!” பார்ப்போம்.

சுஜாதாவின் பேசும் பொம்மைகள்

நீண்ட நாட்களின் பின்னர் இரண்டாவது தடவையாக சுஜாதாவின் “பேசும் பொம்மைகள்” படித்தேன். டாக்டர். சாரங்கபாணியும், டாக்டர்.நரேந்திரநாத்தும் மாயாவை மட்டும் அல்ல வாசிக்கும் என்னையும் மிரட்டிக்கொண்டிருந்தார்கள்.
ஒரு மனித மனத்தின் நினைவு தெரியும் நாளில் இருந்து உருவான அத்தனை எண்ணங்களையும், ஒரு இயந்திரத்திற்கு மாற்றி புகட்டும் கருவில் பிரமிக்க வைத்த ஒரு கதை.
நாவலை முழுமையாக படித்து முடித்தபின்னர் மீண்டும் சுஜாதாவின் முன்னுரையை படிக்கும்போது அதன் யதார்த்தம் புரிந்தது.
“நீண்ட பல ஆண்டுகாலம் கழித்து மீண்டும் படித்தாலும் இதன் சுவாரஸ்யம் குன்றாமைக்கு காரணம் இதில் கூறப்பட்டுள்ள அறிவியல் சாத்திரியங்கள் இன்னும் நடைமுறைக்கு வராமல் உள்ளமையே. சைன்ஸ்ஃபிக்ஷன் என்னும் அறிவியல் புனைகதையில் இந்த சௌகரியம் முக்கியமானது. விருப்பப்படி எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கலாம். ஒரே ஒரு தேவை அதன் ஆரம்பங்கள் நிகழ்காலத்தில் இருந்தாகவேண்டும்”

The Nightshifters


திருஷ்டி முகமும், கமல் முகமும்.

கடவுளின் தரிசனத்திற்காக
தவமிருக்கும் மனிதர்கள்போல
உன்னைத் தரிசிப்பதற்காக
ஒரே இடத்தில் உட்கார்ந்து
தவமெல்லாம் இருக்கமாட்டேன்
நீ எந்த மலையின் உச்சியில்
இருக்கின்றாய் என்று சொல்
ஒரு மலையேறும் வீரனைப் போல்
உன்னைத்தேடி வருகின்றேன் நான்.

அய்யோ..
நீ கொடுத்த
பறக்கும் முத்தங்களைக்
காற்று தூக்கிக்கொண்டு ஓடிவிட்டதே!

உங்கள் எதிர் வீட்டு வாசலின்
திருஷ்டிப் பூசணிக்காய்க்கு
உன்மேல் ஒரு கண்போல!
உன்னைப் பார்க்கும்போது
அது தன்மீது வரைந்திருக்கும்
கர்ணகொரூரமான முகத்தை
கமல்ஹாசன் முகம்போல் மாற்றிக்கொள்கின்றதே!
-தபு.சங்கரின் தேவதைகளின் தேவதையில் இருந்து

கவனிக்க மறந்த நல்லபாடல்..

புகைப்படம் திரைப்படத்தில் வந்த ஒரு ரம்மியமான பாடல் இது. ஆனால் ஏனோ தெரியவில்லை கவனிக்கப்படவில்லை.
வெங்கட்பிரபுவின் குரல் இதில் மதுபாலகிருஸ்ணனை ஞாபகப்படுத்துகின்றது.


ஷர்தாஜி ஜோக்.
குடியியல் பற்றிய ஒரு கலந்துரையாடலுக்கு நம்ம ஷர்தாஜி சென்றிருந்தார்.
அங்கே உலக சனத்தொகை பற்றியதொரு கலந்துரையாடல் நடந்துகொண்டிருந்தது.
அங்கு கருத்து வெளியிட்டுக்கொண்டிருந்த ஒரு பேராசிரியர் இன்னும் 10 வருடங்களில் இந்தியா சீனாவை உலக சனத்தொகை கூடிய நாடு என்ற பெருமையில் இருந்து முந்திவிடும் என்றார்.
தொடர்ந்தும் அவர், இந்தியாவில் ஒவ்வொரு 10 செக்கனிலும் ஒரு தாய் ஒரு குழந்தையினை பெற்றெடுக்கின்றாள் என்றார்.
உடனே எழுந்து நின்ற ஷர்தாஜி
அட அப்படியா? நாங்கள் இங்கிருந்து பேசிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு உடனடியாக அந்த தாயை கண்டுபிடித்து அவரது செயற்பாட்டை நிறுத்தவேண்டும் என்றார்.

Friday, July 23, 2010

அவள் வருவாளா….முதல் Stole My Heart வரை



சூர்யா… தமிழ்த்திரையுலகத்தில் மறக்கப்படமுடியாத ஒரு பெயர். அதேபோல இனிவரும் காலங்களில் தமிழ் சினிமாவின் போக்கை தன்னகத்தே ஈர்த்து வைத்திருக்கப்போகின்ற ஈர்ப்பு அந்தப்பெயர்.

“இவன் எல்லாம் ஏன் நடிக்கவந்தான்? சிவகுமாரின் பெயரையே கெடுக்கத்தான் வந்திருக்கின்றான்!, டான்ஸ் பண்ணத்தெரியுமா? கையைக்காட்டி அழைத்தவண்ணம் அதற்கு பெயர் டான்ஸ் என்கின்றான்!!, ஹிட் சோங் ஒன்றுக்கு ஆடமுடியாமல் பாடல் முடியும் மட்டும் ஓடிக்கொண்டே இருக்கின்றான், ஒரு சென்டிமென்டா நடிக்க முடியுமா?, ஜோக்காவது பண்ணத்தெரியுதா?, வாரிசுகளின் தொல்லை தாங்க முடியலைப்பா!”

இவைதான் சூர்யா நேருக்கு நேர் வெள்ளித்திரையில் தோன்றியபோது, பெரும்பாலானவர்களின் விமர்சனங்களாக இருந்தது. அதன் பின்னர் உடடியாக சூர்யா ஒன்றும் விஸ்வரூபம் எடுத்து இந்த நிலைக்கு வந்துவிடவில்லை.
தன் மீதான விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் ஆறுதலாக, ஒவ்வொரு படங்களிலும் அன்று தான் படு வீக்காக இருந்த ஒவ்வொன்றையும் சிறப்பாக செய்து காட்டினார்.
தூற்றியவர்கள்கூட மூக்கின்மேல் விரலை வைத்தனர்.
ஆடத்தெரியாது என்றனரே…மௌனம்பேசியதே திரைப்படத்தில் அவர்களுக்கு ஆடிக்காட்டினார், ஜோக் வராது என்றார்களே…பேரழகன், பிதாமகன், மாயாவி படங்களில் அதை உடைத்துக்காட்டினார். சென்டிமென்ட்??? நந்தா மூலம் வெர்க்கவுட் ஆகியது. காக்க காக்க..பெண்களை மட்டும் அல்ல, ஆண்களையும் சேர்த்து அவர் பால் ஈர்த்துச்சென்றது. கட்டம் கட்டமாகத்தான் தன் நடிப்பையும், தன்னையும் மெருகேற்றி உச்சத்திற்கு வந்தார் சூர்யா.

சிவாஜி என்ற அந்த உன்னதமான நடிப்புலகச்சிகரத்தின் பின்னர், அந்த இடத்தை நிரப்பக்கூடியவர்கள் என்று யாரும் இல்லை இதுதான் உண்மை, இதுவே யதார்த்தம். ஆனால் தமிழ் சினிமாவில் சிவாஜிக்குப்பின்னர் ஒரே ஒரு ஆறுதல், உலகநாயகன் கமல்ஹாசனே என்பதிலும் எந்தவிதமான சந்தேகமோ, மாற்றுக்கருத்தோ இல்லை. அதன் பின்னரான வரப்போகும் அந்தப்பாத்திரத்தில், அருமையாக வடிகட்டப்பட்டு சூர்யா வார்க்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்.
ஒரு தலைமுறையின் ஜீன்கள் ஒன்றுவிட்ட தலைமுறைக்கு கடத்தப்படும் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது அல்லவா? குறிப்பாக ஒன்றைக்கவனித்துப்பாருங்கள், சிவாஜிபோல சில திரைப்படக்கட்டங்களில் நடிக்கவேண்டி வரும்போது “சூர்யா அப்படியே பின்னி எடுகின்றார்”. பிரபுவிடம்கூட அந்த தன்மை இல்லை.

சூர்யா கஜினியில் காட்டும் மெனாரிஸம் அற்புதமானது, புதிய பறவை “பார்த்த ஞாபகம் இல்லையோ” பாடலுக்கு சிவாஜி காட்டும் மெனாரிஸத்துக்கு நீண்டகாலம் பின்னால் காட்டும் ஒரு அற்புதமான மெனாரிஸம்.. கஜினியில் சூரியாவிடம் இருந்தது. காக்க காக்கவில் காட்டும் கம்பீரத்தையும், தங்கப்பதக்கத்தின் பின்னரான ஒரு மிடுக்கு என்று சொன்னால் பிழை இல்லை.
உணர்ச்சி வசப்பட்டு நடிக்கும்போது அவர் தந்தைபோலவே சூர்யாவுக்கும் குரல் தளதளப்பது இயல்பானதே. தற்போது வரும் அவரது திரைப்படங்களில் அவர் கூடுதலாக முகபாவத்திலும், உடல்அசை மொழியிலும் கூடிய கவனம் காட்டி நடிப்பாற்றலை வெளிப்படுத்த துடிப்பதை துல்லியமாகக்காணலாம்.


கமல்ஹாசனை தனது குருவாக, தனது நாயகனாக மதிக்கும் சூர்யா, தான் பல விடயங்களில் கமல்ஹாசனை பின்பற்றுவதாக தெரிவித்திருந்தார். அதேவேளை அவரது நடிப்பு, தோற்றம் என்பன கமல்போல உள்ளன என்று விமர்சனம் வந்தாலே சிலிர்த்துவிடும் தன்மை அவரிடம் உண்டு. உன்னிப்பாக கவனித்தால் ஆய்த எழுத்து திரைப்படத்தில் நாயகன் கமலையும், பேரழகன் சின்னாவில் 16 வயதினிலே சப்பாணியையும், அயன் தேவாவில் விக்ரம் படத்தில் விக்ரத்தையும் காணமுடியும்.

தனது நடிப்பின் முதலாவது விமர்சகர், ஆலோசகராக நடிகர் ரகுவரனைக்குறிப்பிடும் சூர்யா, ஆரம்பத்தில் தனது முதலாவது திரைப்படமான நேருக்கு நேர், திரையாக்கல் சமய சம்பவத்தை நினைவு கோரியுள்ளார். தான் அப்போது எந்தவித பொறுப்புணர்வும் இல்லாமல் ஏதோ நடித்துவிட்டு, ஜாலியாக இருந்தபோது, தன்னிடம் நடிகர் ரகுவன் நடிப்பு என்பது ஒரு உன்னதமான கலை, தெய்வம் என்று புரியவைத்ததையும், தனக்கு பொறுப்புணர்வை அன்றே அவர் ஏற்படுத்தியிருந்ததையும் ஒரு செவ்வியில் தெரிவித்திருந்தார்.
சூர்யாவிடம் தன் முன்னவர்களை மதிக்கும் நற்குணம் அதிகமாகவே உள்ளது. அவை பல மேடைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

குடும்பவாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் தந்தையாரின் வழிகாட்டலில் கண்ணியமாக வாழ்ந்துவரும் சூர்யா ஆகிய சரவணன், மனைவி சாதனாவுடனும் (ஜோதிகா), தனது இரண்டு குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகின்றார்.
இனிவரும் காலங்கள் இவருக்கு இன்னும் பல மைல்கல்களை கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

இதேவேளை “அகரம் பவுண்டேசன்” என்ற அமைப்பை தமிழ்நாட்டு கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுத்திவருகின்றார். இதன்மூலம் கல்வியை தொடரமுடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கும், வறுமைவாட்டும் மாணவர்களுக்கும் தொடர்ந்தும் தமது கல்வியை பெற்றுக்கொடுக்கும் முகமான ஒரு உன்னதமான பணியினை இந்த அகரம் பவுண்டேசன் மூலம் செய்துவருகின்றார்.

ஆக..ஆரம்பத்தில் வாரிசு நடிகராக அறிமுகமானாலும்கூட, இதன்மூலம் நிலைத்து நிற்கமுடியாது, அரைத்த மாக்களை திரும்பத்திருபத்திரும்ப அரைக்கமுடியாது என்பதை ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டு, ஒரு கட்டத்தில் இயக்குனர் பாலா தூக்கிவிட, அதன் பின்னர் தன்னைத்தானே செதுக்கி இன்று ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருக்கின்றார் சூர்யா.
ஒரு சிறந்த நடிகனாக மட்டும் இன்றி ஒரு சிறந்த மனிதனாகவும், பாசமான குடும்பத் தலைவனாகவும் இருந்துவருகின்றார் சூர்யா.
இன்று உச்சத்தை நோக்கி விரைந்து சென்றுகொண்டிருக்கும் இந்தச்சூரியன்
He Stole My Heart…….

Wish You Many more Happy Returns of the day Surya

Monday, July 19, 2010

வேற்றுமொழிக்கதைகள்>>>>02.தெருப்பாடகன்..


அறுபதுகளின் அந்திம நேரத்தில் ரஷ்யாவின் பிறயஷினோ நகரத்தின் அங்காடித்தொகுதிகள் கழிந்து வரும் குடியிருப்பு பகுதியில் உள்ள தெருக்களில் இராக்காலங்களில் இருளை ஊடறுத்து வரும் ரம்மியமான பாடல்கள்.
அந்தப்பாடல்களில், ரஷ்யதேசத்தின் அன்றைய பொழுதுகள், மக்களின் நாளாந்த வாழ்க்கைச்சுமை, விரத்தி, தகிப்பு, நம்பிக்கை, சோகம், குதூகலம் என வரையறுக்கப்படமுடியாதபடி மாறிமாறி எந்த பாடல்வேண்டுமானாலும் வரும்.

ஆனால் அந்தப்பாடல்கள் பாடுபவனின் குரலில் ஒரு கம்பீரமும், கேக்கத்தூண்டும் ஒரு சுருதியும் கலந்திருக்கும். நள்ளிரவுதாண்டியும் அந்தக்குரல் ஒலித்துக்கொண்டிருக்கும். தனிமையில் இருக்கும் பலருக்கு அந்தக்குரல் ஒரு பாதுகாப்பாளனாகவும், சிலருக்கு தாலாட்டாகவும்கூட அமைந்துவிடுகின்றது.
அப்படி ஒலிக்கும் பாடல்களில் எந்த கணத்திலும் சுருதிமட்டும் எல்லைமீறுவதில்லை என்பதுடன், அந்த பாடல்வரிகளின் தன்மைகளும் ஒருபோதும் எல்லை மீறியதாக இல்லை. 

ஹஷிமிர்!! இவன்தான் அந்தக்குரலுக்குச்சொந்தத்காரன். நாற்பதுகளை கடந்துபோய்விட்ட வயது. மழிக்கப்படாத தாடி, சாம்பல்பூத்துப்போன கண்கள், எதையோ எதிர்பார்த்திருக்கும் பாவனை. 
இவன் இந்த இடத்தை பூர்வீகமாக்கொண்டவன் இல்லை. சுமார் நான்காண்டுகளுக்கு முன்னர் இந்த இடத்திற்கு வந்தான். காலையில் இருந்து, முன்னிரவு வரை, பிறயஷினோவில் உள்ள அங்காடிகளில், பொருட்களை சுமந்து செல்வது, அடுக்குவது, வாகனங்களில் ஏற்றுவது என அத்தனை வேலைகளையும் அலுப்பில்லாமல் சுறு சுறுப்பாக செய்வான். இவ்வளவுதான் வேண்டும் என்று கேட்பது கிடையாது.  அங்காடிக்காரர்கள் கொடுக்கும் ரூபிள்களை எண்ணிக்கூடப்பார்க்கமாட்டான். அப்படியே மடித்து தன் கோர்ட் பையில் போட்டுக்கொள்வான். 

அப்போதைய அவனது தேவைகள் சாப்பாடு, இராத்திரிக்கு கொஞ்சம் வொட்கா, குளிரைப்போக்க பற்றவைக்க சில சுருட்டுக்கள். 
சில பொழுதுகளில் வேலை நிமித்தம் அவனது குரல் அந்த வீதிகளில் கேட்க முடியாதுவிட்டாலும், அங்காடிக்குடியிருப்பாளர்களுக்கு ஒரு வழமைவிரோதம் தலைதூக்கிவிடும். அந்த அளவுக்கு அங்கிருக்கும் ஒவ்வொருவரினதும் இராக்காலங்களுடனும் அவனது குரல் பரீட்சியப்பட்டிருந்தது.  

அவனது பாடல்கள் அப்போதைய ஆட்சியினரை சவுக்கால் அடிப்பதுபோல இருக்கும்.
“முதலாளித்துவர்களாக இருந்தோம்
எங்களில் நான்கு வீடுகளில் ஒரு கார் இருந்தது
கொமினிஸ்ட்டுகளாக மாறினோம்
நடப்பதற்கே எங்கள் கால்களுக்கு வலுவில்லை”

“கொமினிசம் என்றது உணர்வுதானே???
சட்டம்போட்டு பிள்ளை பெற்றுவிடுவாயா?”

என்பதுபோன்ற அன்றைய கட்டாயக் கொமினிசியத்திற்கு எதிரான பாடல்களும் இவனது வாயிலிருந்துவந்து கொண்டிருந்தது. இவன் அமெரிக்க உளவாளியோ என்ற சந்தேகத்தையும் ஊட்டிக்கொண்டிருந்தது. 


இத்தனைக்கும் அவன் பாடல்களை இரசிப்பவர்கள், அவனது குரலை தமது பெட்ரூம்வரை வர அனுமதிப்பவர்கள் எவருக்கும் அவனுடன், பேசவேண்டும் என்றோ, அவனுக்கு ஏதாவது உதவவேண்டும் என்றோ என்றைக்கும் எண்ணம் வந்ததில்லை.
அவனும் அப்படி நினைத்ததும் இல்லை, எதிர்பார்த்ததும் இல்லை.
காலைவேளையில் அந்த தெருவில் உள்ள அத்தனைபேருக்கும் மனது நிறைந்த புன்னகையினை பரிசளித்துவிட்டுப்போவான், பதில்புன்கைக்கு அவன் காத்திருப்பதில்லை. குழந்தைகளை கண்டால் வாஞ்சையுடன் பார்ப்பான், அந்தப்பூக்களுக்கு பூக்களையே பரிசளித்துவிட்டுப்போவான்.

பசி என்று எவன் முகம் சுருங்கின்றாலும், தன் பணத்தை சுருக்கி, அவர்களின் முகச்சுருக்கத்தை நீக்குவான். ஒருமுறை பிறயஷினோ நகரையே பிளேக் நோய் தாக்கியபோது, பாரமரிப்பற்ற முதியவர்களை தன் பெற்றவர்கள்போல் பராமரித்துக்காப்பாற்றினான். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக ஒரு குறிப்பட்டதொகையினை சங்கம் ஒன்றுக்கு மாதம் மாதம் தன் உழைப்பினால் மிச்சம்பிடித்துக்கொடுத்தான். 
முதியவர்களுக்கோ தம்மை காப்பாற்றியது இவன் என்று தெரியாது, குழந்தைகளுக்கோ தம் கல்வியில் இவன் பங்கும் உள்ளதெனத்தெரியாது, பசித்தவனுக்கும் தனக்கு உணவு வழங்கியவன் இவன் என்று தெரியாது அனால், இராக்காலங்களில் தெருப்பாடகனாகத்தெரியும் இவன், பகல்காலங்களில், வாடல்கள் கண்டு, மலர்ச்சி கொடுக்கும் கண்ணுக்குத்தெரியாதவனாகவே இவன் வாழ்ந்துவந்தான்.

ஒருநாள் இராத்திரிநேரம், நள்ளிரவு தாண்டும் வேளை, வழமைபோல பிறயஷினோ அங்காடித்தெருமக்கள் இவனின் அடக்குமுறைக் கொமினீசியத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்ட இனிய பாடல்களை கேட்டவண்ணமே கண்ணயர்ந்துகொண்டு இருந்தார்கள்..
திடீர் என்று வாகன இரைச்சல் ஒன்று கேட்டது. சப்பாத்து ஓசைகள் ஒலித்துக்கொண்டிருந்தன. தொடர்சியாக இருளின் நிசப்தத்தை கிழிக்கும் நான்கு வெடியோசைகள் கேட்டன. மீளவும் சப்பாத்து ஒலிகள் கேட்டு அடங்கி, வாகன சப்தம் கேட்டு… எங்கோ தூரமாக தொலைந்துபோகும் சத்தம் போய் மறைந்தது.

வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும், வீதிக்கு வந்து பார்த்தார்கள், வீதி ஓரம்…
இரத்த வெள்ளத்தில் அவன் துடித்தக்கொண்டு கிடந்தான். 
“சே.. இவர்கள் எல்லாம் ஒரு மனிதர்களா?”, அநியாயம்…அநியாம்…, போன்ற அந்த மக்களின் பரிதாபச்சொற்களை கேட்டுக்கொண்டே அவன் செத்துக்கொண்டிருந்தான்.
அவன் கிடந்த இடத்திலிருந்து சற்று தொலைவாக இருந்த ஒரு இடத்தில் கம்பத்தில், ஏற்றிவைக்கப்பட்டிருந்த கொம்மினீசிய செங்கொடி ஒன்று பெருங்காற்றில் கம்பத்தில் இருந்து அகன்று பறந்துவந்து, மரணித்துக்கொண்டிருக்கும் அவன்மீது படர்கின்றது..

Sunday, July 18, 2010

ஞாயிறு ஹொக்ரெயில் (18.07.2010)

மீண்டும் மீண்டும் வரலாற்றுத்தவறு!
ஈழப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் பார்வை மீண்டும், மீண்டும் தவறான பார்வையிலேயே சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு முக்கியமான காரணம், ஈழப்பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு இந்தியா நியமிக்கும் ஆட்கள் அப்படிப்பட்டவர்களே.
இந்தியா, பார்த்தசாரதிக்குப்பின்னர் நியமித்த அதிகாரிகள் அத்தனைபேருமே இந்தியாவை தவறான பாதைக்கும், தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் பாதைக்குமே இட்டுச்சென்றுகொண்டிருக்கின்றனர்.
இதனாலேயே இந்தியா மீண்டும் மீண்டும் ஈழத்தமிழர்களின் முதுகில்க்குத்தி இறுதியாக நெஞ்சிலும் குத்திவிட்டு தற்போது ஒன்றுமே தெரியாது போல கபடநாடகம் போட்டுக்கொண்டிருக்கின்றது.
இதன் தொடர்சியாகத்தான் தற்போது இந்தியப்பிரதமர் ஈழப்பிரச்சினை தொடர்பாக மு.கருணாநிதியின் ஆலோசனையினை கேட்பதும் அமையும்.
இவ்வாறான தவறான வழிகாட்டலின் மூலமாகவே தற்போது ஈழத்தமிழன் ஒவ்வொருவனும் இந்தியாமீது பாகிஸ்தானியர்களைவிட கடும் கோபமும், குரோதமும், கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

குருக்கள் செய்தா குத்தமில்லை!!

வழி மாசடைகின்றது, உலகம் வெப்பமாகின்றது, காடுகள் அழிகின்றன, கடல் மாசடைகின்றது என்று பல காரணங்களை காட்டி, பெரும் கண்டிப்புடன் மூன்றாம் உலக நாடுகளை நிர்ப்பந்தப்படுத்தி பல ஒப்பந்தங்களில் கையொப்பமிட பிரயத்தனம் எடுக்கும் வல்லரசுகள், தம்மை சூழலின் பாதுகாவலர்களாக காட்டிவருகின்றனர்.
ஏற்கனவே அவர்களால்த்தான் சூழல் இத்தனை ஆபத்துகளையும் சந்தித்தது என்பது வேறுகதை.
இந்த நிலையித்தான் இப்போது மெக்ஸிகோ வளைகுடாவின் கடற்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க்கசிவு பெரும் சர்ச்சைக்கு உட்பட்டுள்ளது.
இந்த எண்ணெய்க்கசிவினால் நாளாந்தம் பாதிக்கப்படும் கடல் எல்லைகளின் தூரம் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. எண்ணெய் கசிவை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 90 நாட்களாவது தேவைப்படுமாம்.
ஏற்கனவே எண்ணை கடலிலே தீவுகள் போல படிந்து மெல்ல மெல்ல வேறு இடங்களுக்கு நகர்ந்துகொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கான முழுப்பொறுப்பையும், பிரித்தானிய பெற்றோலிய நிறுவனமும், அமெரிக்காவுமே ஏற்கவேண்டும், எனினும் இந்த பாரிய அனர்த்தம் ஒன்றுமே இல்லாதபடி அமுக்கப்பட்டுவிடும்.. குருக்கள் செய்தாத்தான் குத்தமில்லையே!!


Unnoticed Love (காதல்???)


இல்லாதபிரதேசவாதம், மதவாதம் பேசுவோர், பதிவிடுவோர்களே!!
அண்மைக்காலமாக தோற்றுப்போன பிரதேசவாதத்தை மீண்டும் தோண்டியெடுத்து, அறிக்கைவிடுத்து, பதிவிட்டு வரும் செயலைக்காணக்கூடியதாக இருக்கின்றது.
இல்லாத ஒன்றை இருக்கிறது என்று தொடர்ந்தும் பேசாதீர்கள்.
காரணங்களும், மூலமும் உள்ளது எனச்சொல்லி விசங்களை தூவாதீர்கள்.
நாங்கள் அனைவரும் தமிழர்களே..பேசும் மொழிதான் இனம். ஒரு இனத்திற்கு வடக்கோ, கிழக்கோ தெற்கோ, பிரிவுகள் என்றால் அந்த திசைகளையே கொழுத்தி எறிவோம்.
யாழ்ப்பாணம் வந்துதான் பாருங்கள்… பல பாகங்களிலும் எத்தனை முஸ்லிம் கடைகள் முளைத்துள்ளன, கிழக்கு பிரதேசத்தோர் எத்தனைபேர் பல தொழில்களை தொடங்கியுள்ளனர்.
யாழ்ப்பாண மக்கள் என்ன அடித்து விரட்டியா விட்டார்கள்? இல்லையே.. ஆதரவு வழங்குகின்றார்கள்.
ஆக பிரதேச வாதம், மதவாதம் எல்லாம் மக்களிடம் இல்லை. ஒரு சிலபேரின் அரசியல் நலன்களிலும், அவர்களின் நரித்தனமான மனங்களிலும் உள்ளன.

திருமயூரனின் கவிதை ஒன்று..
..................................
..................................
கடல் இல்லாமல்
அலை!
தலை இல்லாமல்
தவம்!
வரங்களுக்காக அல்ல - உங்கள்
சிரங்களுக்காக!!

தறித்துவிட்டு சென்றவனே
இது கேள்..
ஒளித்தொகுக்க -என்னில்
பச்சையம் இல்லை -இருந்தும்
வீச்செறிந்து விரையும் விதைகளுக்கு -நான்
கர்ப்பப்பை!

இங்கே - நீ
பறித்தது
கொப்புகளை அல்ல- உன்
வரும்காலத்தின் வேர்களை!
நான் வளர்விப்பது
செடிகள் அல்லஇ சந்ததிகள்!

உறுப்பில்லை என்ற கவலையில்
உலகு வெறுத்திருக்கும் உறவுகளே - இங்கே
உயிர் இல்லாமல் தொடரும்
பிரசவம் பார்த்திர்களா?

இது..
அழித்தவனை
காக்கும் கடும் தவம்,
எரித்த நெருப்பையே,
குளிர்விக்கும் பிரயத்தனம்!
முடிந்த வரலாற்றுக்கு -மீண்டும்
எழுதும் முன்னுரை!!
.....................................


சிகரம்.

எஸ்.பி.பி. சித்திரா என்றாலே பாடல்களில் ஒரு ரம்மியம் இருக்கும். அதிலும் எஸ்.பி.பியே தன் குரலுக்கு எற்றதுபோல் இசையமைத்துப்பாடினால்?? என்ன சொல்லவும் வேண்டுமா?

"என் வானமெங்கும் பௌளர்ணமி இது என்ன மாயமோ
என் காதலா உன் காதலா நான் காணும் கோலமோ
என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ
பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ"

என்ற வைரமுத்துவின் வரிகள் அற்புதம். எப்போதுவேண்டும் என்றாலும் இந்தப்படாலைக்கேட்கலாம். சலிக்காது…


ஷர்தாஜி ஜோக்
ஷர்தாஜி மிப்பெரிய ஆன்மிக மகான் ஒருவரை சந்திக்க சென்றார். மகானும் சர்தாஜியை ஆசீர்வதித்து “நீ சிரஞ்சீவியாக இரு” என்றார்.
அதற்கு நம்ம ஷர்தாஜி ஐயோ..மகானே எனக்கு தெலுங்கு அறவே தெரியாது என்றார்.

Wednesday, July 14, 2010

அசத்தப்போகும் “எந்திரன்” திரைப்படப்பாடல்கள்…




“எந்திரன்”!!! முழுத் திரைப்பட இரசிகர்களும் ஒருமித்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் திரைப்படம் இது. மிகைப்பட்ட பிரமாண்டங்கள், தமிழில் முதல்தடவையாக அதி நவீன தொழிநுட்பங்கள் புகுத்தப்பட்டு (பல படங்களுக்கும் முதலில் இதைத்தான் சொல்லியிருக்காங்கப்பா) சுப்பர் ஸ்ரார், சங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் இரண்டாவது தடவையாக, மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் திரைக்கதையுடன் தமிழ் சினிமா வயல்களுக்கு பாய்ச்சப்படவுள்ளது இந்த திரைப்படம்.

நிற்க…
கடந்த 07ஆம் திகதியுடன் (ஜூலை 07) படப்பிடிப்புக்கள் முற்றாக முடிவடைந்துள்ளதாக இயக்குனர் சங்கர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்.
அதேவேளை ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இதில் சிலிர்க்கவும், பிரமிக்கவும் வைத்துள்ளதாக கூறியிருக்கும் சங்கர், கோடிக்கணக்கான இரசிகர்களின் ஆவலை பூர்த்திசெய்யும் வகையில், மிகப்பிரமாண்டமாக இந்த மாதம் (ஜூலை) இறுதிவாரத்தில் ஒரு நாளில் “எந்திரன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவினை நடத்த முடிவெடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளமை, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இரசிகர்களுக்கும், சுப்பர் ஸ்ராரின் இரசிகர்களுக்கும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விரிவாக தனது இணையத்தளத்தில் அறிவித்திருக்கும் சங்கர்…
இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் ஒன்றுக்கு நடன இயக்குனர் ரெமோ நடனமொன்றை முழுமையாக முடித்துக்கொடுக்க எந்திரன் திரைப்பட படப்பிடிப்பு கடந்த 07ஆம் திகதியுடன் இனிதே நிறைவடைந்துள்ளது.
படமுடிவை இட்டு எல்லோரும் எங்கள் மகிழ்ச்சிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டோம். சுப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உட்பட முழு படக்குழுவினரும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் முதல் முதலாக நான் முழுப்புசினிக்காயை உடைத்தேன்.

எல்லோருக்கும், கிரிக்கட்டின் கடைசி ஓவரை முகம்கொடுக்கும் உணர்வு, ஒரு கல்லூரியில் மகிழ்ச்சியாக இரண்டு ஆண்டுகளை ஒன்றாக இருந்து கொண்டாடிவிட்டு பிரிந்து செல்லும் உணர்வு இது என்றும் அவர் கூறியிருக்கின்றார்…

எந்திரன் திரைப்படப்பாடல்கள் பற்றிய பிரத்தியேக தகவல்கள்..
மொத்தமாக ஆறு பாடல்களை கொண்டதான பாடல்கள் அனைத்தும், முன்னர் வந்த ரஜினி படங்களின் ரஹ்மான் இசையமைப்பில் இருந்து வித்தியாசமாக உள்ளதாகவும், இதில் பல இசை நுட்பங்களையும் ரஹ்மான புகுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த பாடல்களின் ஹைலைட்டாக ரஹ்மான் பாடிய பாடல் ஒன்றே இருக்கும் என பரவலாக பேசப்படுகின்றது.
அதேவேளை பாடல்களைவிட இந்த படத்தில் தொடர்ந்து ஒலிக்கப்போகும் “தீம் மியூசிக்கே” இரசிகர்களின் மனங்களில் புகுந்து விளையாடப்போகின்றது என்றெல்லாம் கூறப்படுகின்றது.

இந்தவகை பில்டப்புக்களை எல்லாம் கடந்து…பொதுவாகவே ரஹ்மான் பாடல்களை அவரது இசை இரசிகர்கள் கோடான கோடிப்பேர் எப்போதும் ஆர்வமாகவே எதிர்பார்க்கின்றார்கள். அவருக்கு நிகர் அவரே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
என் மனதில் இருக்கும் ஒரு ஏக்கம்…அந்த காதலன் போல…மறக்கமுடியாத ஒரு இசை!!

இயக்குனர் சங்கரின் உத்தியோக பூர்வ தளத்திற்கு இதுவரை செல்லாதவங்க இங்கே கிளிக்குங்க..

Sunday, July 11, 2010

ஞாயிறு ஹொக்ரெயில் (11.07.2010)

ஸ்பெயினா.. நெதர்லாந்தா…
கடந்த ஒருமாத காலமாக நள்ளிரவுத்தூக்கத்தை கலைத்த உதைபந்தாட்ட பெருவிழா இன்றுடன் முற்றுப்பெறுகின்றது. ஸ்பெயினுக்கு ஆதரவாகவும், நெதர்லாந்திற்கு ஆதரவாகவும், இம்முறை உதைபந்தாட்ட ஹைலைட் “ஒட்டோபஸ்” உடன் சேர்ந்து நம்ம பதிவர்களும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.
ஸ்பெயினே இந்தமுறை உலகக்கிண்ணத்தை தூக்கும் என்பது பெரும்பாலானவர்களின் அபிப்பிராயம்.
ஸ்பெயினின் ஆடுகளத்தில் இறுதிமட்டும் வீரர்களின் சுறுசுறுப்பு, சூழலுக்கு ஏற்றதுபோல உடனடியாக மாறும் களவியூகங்கள், பந்து கடத்தும் தன்மைகள், இம்முறை பிரமிக்கவைக்கின்றன. இந்த விதத்தில் ஸ்பெயினே உலகக்கோப்பை சம்பியனாகும் என பலரும் நம்பிக்கை வெளியிட்டுவருகின்றனர்.
எது எப்படியோ இன்று நள்ளிரவு, இறுதிவிருந்து காத்திருக்கினறது. இந்த இறுதிவிருந்து, லேசாக ஒரு அணி வென்றதாக இருக்காமல், இறுதிவரை பரபரப்பான போட்டியாக இருந்தால், பார்க்கும் எங்களுக்கு ஹப்பி…பார்ப்போம்..

இயக்குனர் பாலாவுக்கு இன்று 44
2008ஆம் ஆண்டு நான் கடவுள் படத்தை இயக்கியதற்காக, இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவுக்கு இன்று வயது 44 ஆகின்றது.
1966 ஆம் ஆண்டு இதே நாள் மதுரை மாவட்டம் தேனியில் உள்ள போடி என்ற ஊரில் பிறந்தவர் இயக்குனர் பாலா.
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என வித்தியாசமான கோணத்தில் சினிமாவை கொண்டு சென்றுகொண்டிருப்பவர் பாலா.
தற்போது “அவன் இவன்” என்ற திரைப்படத்தை இயக்கிவருகின்றார்.
ஒரு சிறந்த இயக்குனர் என்பது மட்டும் இன்றி பாலா ஒரு கவிஞராகவும், ஒரு எழுத்தாளராகவும், பாடசாலைக்காலத்தில் இருந்து ஒளிர்ந்திருக்கின்றார்.
எழுத்துக்களாலும், கவிதையாலும், தமிழேற்றும் பாலாவுக்கு, மேடைப்பேச்சு அறவே வராது என்பது பெரும் ஆச்சரியம்.

அவரது “இவன்தான் பாலா” தொடரில் அவர் தனது கல்லூரி இறுதிநாள் பற்றி எழுதிய எழுத்துக்கள் நான் பிரமித்தப்போய் பல தடவைகள் மீண்டும் மீண்டும் வாசித்த சிறப்பான எழுத்தாக அமைந்தது…
அதில்…
“கல்லூரி இறுதிநாள்!!
எத்தனை சாத்தான்களால் நாம் சபிக்கப்பட்டாலும், இன்று எங்களை அத்தனை தேவதைகளும் ஆசீர்வதிக்கும் நாள்” என எழுதியிருப்பார்.
ஒரு படத்தை எடுப்பதற்காக அதுவே தானாக மாறி, பல பிரச்சினைகளையும் தாண்டி, அந்த துறையிலேயே ஊறிப்போய், திரையில் தனது அற்புதங்களைக் காட்டுவார்..
ம்ம்ம்…உண்மைதான் இவன்தான் பாலா!



Not an every day story (Iranian short film)



நான் ரசித்த நண்பன் திருக்குமரனின் கவிதை ஒன்று

ஏன் இறைவா ?


உணர்ச்சிக் குரியவளை நல்ல
உட்கிடை கொண்ட ஓர் உத்தமியை
புணர்ச்சிக் கென்று கட்டி, விழற்
பொன்னையன் கையிற் கொடுப்பதுவோ?

என்னை ஏன் நீ படைத்தாய்? உள்ளே
ஒரு சிறு சிந்தையை ஏன் அமைத்தாய் ?
திண்ணிய மனபலத்தைப் பல
திக்குகள் சொல்லினும் குனிவறியா
சென்னியை, முதுகடி எலும்பமைப்பை எனைச்
சிக்கலில் மாட்டிட ஏன் கொடுத்தாய்?

எனக்குல கீந்தவன் நீ, எனை
இவ்வளவு தூரமும் கொண்டுவந்து பலர்
கணக்கிலே வைத்தவன் நீ, அது
கல் எழுத்தாவணம் ஆகுமுன்பே
இடக்கிடை தடக்கமிடல், எனை
இழிந்தோர் கைகளால் அளவிடுதல்,
அடுக்குமோ உனக்கிறைவா? ''சுயம்
அமைத்தவா'' தகுதியை அமுக்கிடுதல்
படைப்பிலே பாரிய குற்றமடா - 'திறன்
இருக்கு தென்றால் உடன் தீர்வுகொடு',
இல்லை யெனில் 'எனைத்தீர்த்துவிடு'.


அவள் அப்படித்தான்

எத்தனை பாடல்கள் காலப்போக்கில் வந்துசென்றாலும், நெஞ்சில் நிற்கும் இராகங்கள் ஒரு சிலவே அப்படி என் நெஞ்சில் நினைவுதெரிந்த நாள்முதல் நிற்கும்பாடல்களில் இந்தப்பாடலுக்கு என்று என்னிடம் தனி மரியதை உண்டு.
ஜேசுதாஸிடமிருந்து வருவது குரல் இல்லை சுகம். அதை கேட்பது ஒரு தவம்.

“நீ கண்டதோ துன்பம்
இனிவாழ்வெலாம் இன்னம்
சுகராகமே ஆனந்தம்
நதியிலே புதுப்புனல்
கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது
இனிமை பிறந்தது” எத்தனை தடைவ வேண்டும் என்றாலும் கண்களைமூடிக் கேட்டுக்கொண்டே இருந்துவிடலாம்…இனி எல்லாம் சுகமே…

ஷர்தாஜி ஜோக்
ஷர்தாஜிக்கு வந்த பார்ஸல் ஒன்றை கொண்டுவந்து ஷர்தாஜியிடம் கொடுத்த தபால்க்காரர்…உங்களுக்காக நான் இந்தப்பார்சலை சுமார் 5 கிலேமீற்றர் தூரம் தூக்கிக்கொண்டு வந்திருக்கின்றேன் என்றார்…பாசலை வாங்கிவிட்டு …ஏன் நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு 5 கிலோமீற்றர்கள் வரவேண்டும் பேசாமல் இதை போஸ்ட் பண்ணி இருக்கலாமே என்றார் நம்ம ஷர்தாஜி.

Thursday, July 8, 2010

“ஸ்பெயின் வொன் த வேர்ள்ட் கப்” - நகைச்சுவை சிறுகதை


நாள் 11.07.2010 ஞாயிற்றுக்கிழமை
நிறைந்த அமாவாசை

இன்று என்னமோ தெரியவில்லை, மனதுக்குள் ஒரு பட்டாம்பூச்சி பறந்துகொண்டே இருக்கின்றது. சாப்பாடுகூட காலையில் இருந்து ஒரு அவசரத்துடன்தான் சாப்பிடத்தோன்றுகின்றது. மனது முழுக்க ஸ்பெயின் கோல்க்கீப்பர் ஹஷில்லாஸ் தவிர மற்ற பத்துபேரும் ரொனால்ட்டோவின் மனதிற்குள் கோல் போட்டுக்கொண்டே இருந்தார்கள்.

ரொனால்ட்டோ!! ஆச்சரியம் வேண்டாம். காற்பந்தாட்டத்தில் இவனுக்கு இருக்கும் ஆர்வக்கோளாறு காரணமாக அவனது ஊரே அவனுக்கு வைத்த பெயர் ரொனால்ட்டோ.. அவனது நியப்பெயர் வெங்கட். ஆக நாம் அவனை ரொனால்ட்டோ வெங்கட் என்று அறிந்துகொள்வதே பொருத்தம்.
எப்போதுமே பிரேஸில்தான் அவனது ஆதர்ஸன அணி. இந்தமுறை பிரேசில் தோற்றுப்போனதை ஒருநாள் முழுதும் சாப்பிடாமல் நோன்பிருந்து ஆற்றிக்கொண்டு, அடுத்து தனது அபிமான அணியாக ஸ்பெயினை தேர்ந்தெடுத்துக்கொண்டான்.
தான் எப்போதும் அணியும், பிரேஸிலின் மஞ்சள்கலர் ஜேசியைக்கூட கழட்டிவிட்டு, ஸ்பெயின் ஜேசியை தேடிப்பிடித்து வாங்கி அணிந்துகொண்டுவிட்டான் ரொனால்ட்டோ வெங்கட்.

இந்த பிஃபா உலக்கோப்பை 2010 தொடங்கியதில் இருந்து ஊரில் உள்ள கேபிள்காரனுக்கும் அவனுக்கும் இடையில் பெரும்போரே வெடித்துவிட்டது. இவனது ஸ்கட் ஏவுகணைகளை தாங்காமல் கேபிள் காரரும் எந்த சனல் தெளிவாக இருக்குதோ இல்லையோ, ஈ.எஸ்.பி.என் மட்டும் கண்ணாடிபோல தெரியவேண்டும் என்று பகீரதப்பிரயத்தனம் செய்துகொண்டிருக்கின்றார்.

சரி..இன்று இறுதிப்போட்டி அல்லவா? காலையில் இருந்து ரொனால்ட்டோ வெங்கட்டிற்கு காலும் ஓடவில்லை கையும் ஓடவில்லை. ஏதோ ஸ்பெயின் அணிக்கே தான்தான் அறிவிக்கப்பட்ட இரசிகன் என்பதுபோல துடித்துக்கொண்டிருந்தான். எப்போதுமே தான் இரசிப்பதை மற்றவர்களும் சேர்ந்து இரசிக்கவேண்டும், என எண்ணுபவன் அவன். அதற்காக தான் பார்த்த படங்களைக்கூட வேண்டும் என்றே நண்பர்களை ஒற்றைக்காலில் நின்று அழைத்துக்கொண்டுபோய் இரண்டாம்முறையும் இரசிப்பான் இந்த ஆர்வக்கோளாறு.

அதன் பிரகாரம் இன்று இறுதியாட்டத்தை 16அடி திரையில் போடுவதாக உத்தேசம். வீட்டில் இருந்து சற்று தள்ளியிருக்கும் சனசமுக நிலைய மைதானத்தில் ஸ்கிரீன், புரொஜக்டர் என்பன வாங்கிவைத்து, ஊரே பார்க்கவைத்து தானும் இரசிக்கவேண்டும் என்ற திட்டத்தில்த்தான் காலையில் இருந்து காலில் சக்கரத்தை மாட்டிக்கொண்டு ஓடித்திரிகின்றான் ரொனால்ட்டோ வெங்கட்.

ஒருவாறு 12 ஆயிரத்திற்கு அவற்றை வாடகைக்கு எடுத்து, எலக்ரோனிக் விற்பன்னான கோபியிடம் அதை கொண்டு சேர்த்து…இந்தா.. மச்சான்… சரியா ஆறு மணிக்கே வாசிகசாலையில் வைத்து ரெஸ்ட் பண்ணிப்போடனும்..இறுதியாட்டம் சும்மா யமாய்க்கவேண்டும்.. ஸ்கீனில பாக்கேக்க பார்க்கவாறவைக்கு, றிங்ஸ்சும், பிஸ்கட்டும் தருவதாக கடைக்கார அண்ணை ஒத்துக்கொண்டுவிட்டார், ஒருக்கா வாசிகசாலை கிரௌண்டையும் துப்பரவாக்கவேண்டும், பெடியள் வருவாங்கள் என்று விட்டு ஓடியே விட்டான்..

ஒருவாறு மாலை 6 மணிக்கே புரொஜக்டரை, 16அடி ஸ்கீனில விழுத்தி, கேபிள் கொடுத்து எல்லாம் பார்த்தாகிற்று. எதற்கும் முன்னேற்பாடாய், மின்சார சபைக்கும்…!
அண்ணை எல்லாம் சரி..நீங்கள் அந்த நேரத்தில் சொதப்பக்கூடாது என்று வோனிங் கோலும் கொடுத்துவிட்டான் ரொனால்ட்டோ வெங்கட்.

நேரம் 8.30 வீட்டுக்கு ஓடிப்போய் அவசர அவசரமாக அம்மா தட்டில் போட்டுவைத்திருந்த என்னத்தையோ வாய்க்குள் திணித்து தண்ணீர் குடித்துவிட்டு வெளியால் வந்தான்… நேரம் 9 மணி. 11.30ற்கு எல்லாத்தையும் தொடங்கினால் சரி..கால் கையெல்லாம் காலையிருந்து ஓடித்திரிந்ததில் அலுப்பாய் இருக்கிறது..கொஞ்ச நேரம் படுப்பம்! இன்றும் ஒன்னரை மணித்தியாலம் சின்ன நித்திரை கொண்டுவிட்டு ஓடவேண்டும் என்று நினைத்துக்கொண்டு கட்டிலில் விழுந்தான் ரொனால்ட்டோ வெங்கட்.

இதோ ஆட்டம் தொடங்கிவிட்டது ஆட்டம் தொடங்கி முதல் பதினைந்தாவது நிமிடத்திலேயே கோனல் கிக் மூலம் தமது முதலாவது கோலைப்போட்டே விட்டது நெதர்லாந்து…ஐயோ..என கையை அடித்தான் ரொனாட்டோ வெங்கட்..
அப்புறம் இதோ டேவிட் வில்லா லாபகமாக பந்தைக்கொண்டு சென்று கர்லஸிடம் தட்ட, கார்லஸ் பந்தை மேலால் அடிக்க ஆம்..அதோ அழகான ஒரு கோல்..துள்ளிக்குதித்தான் ரொனால்ட்டோ டேவிட். அப்பறம் இரண்டு அணியும் இரண்டாவது கோல்.. யார்போடுவது என்று செமப்போட்டி போட்டார்கள்.
எதிர்பாராத நேரத்தில் இதோ பப்ரிகேஸ் அடித்த கிக் கோலாகின்றது..ஸ்பெயின் இரண்டுகோல்கள்..அனந்தத்தில் அழுதே விட்டான் ரொனால்ட்டோ வெங்கட்.

ஆட்டம் முடிகின்றது. மக்கள் ஸ்பெயின் கொடிகளுடன் ஆரவாரம் செய்கின்றர்.
இதோ ஸ்பெயின் அணி வரிசையாக வருகின்றது…அணித்தலைவர் ஹஷில்லாஸ்
ஆரவாரத்திற்கு மத்தியில் மேலே ஏறி உலகக்கோப்பையை பெற்று கத்திக்கொண்டே கோப்பையை மேலே தூக்குகின்றார்..பேப்பர்கள் பறக்கின்றன. ஆரவார ஒலியின் மைதானமே அலறுகின்றது…


ஷாமினாமினா..ஏ..ஏ...
வக்கா வக்கா..ஏ..ஏ..
ஷாமினாமினா...
ஷாமினாமினா..க்லைவா..
திஸ்ரைம் போர் அப்ரிகா


என ஷஹிரா பாடிக்கொண்டே ஆடுகின்றார்…திரும்பத்திரும்ப அதேபாடல்!!!!
நினைவுக்கு வருகின்றது அது தற்போதைய அவனது செல்போனின் ரிங்டோன்..
திடுக்கிட்டு எழும்புகின்றான் ரொனால்ட்டோ டேவிட்.. அழைப்பு கோபியிடம் இருந்து
நேரம் அதிகாலை 2 மணி.

“மச்சான் எங்டா திடீர் என்று உன்னைக்காணவில்லை. மச் முடிந்து பார்க்கவந்த ஆட்கள் எல்லாம் போய்ட்டார்கள். புரொஜக்டரையும், ஸ்கிரீனையும் வந்து எடுத்திட்டுப்போடா!!

என்ன????? திடுகிட்டான்…ரொனால்ட்டோ டேவிட்…
இந்த இரவிலேயே அவனுக்கு மேலும் இருட்டிக்கொண்டுவந்தது..மென்று விழுங்கிக்கொண்டு

மச்சான் ஸ்பெயின்தானே வென்றது??? என்று கேட்டான்

இல்லை மச்சான் நெதர்லாந்து 2-1 என்றான்..கோபி
கட்டிலில் தொப் என்றொதொரு சத்தம் கேட்டது…

16 அடி திரை ஒரே இருட்டாக இருந்தது.

Tuesday, July 6, 2010

சில பதிவர்களின் வலையுலக முதல் எழுத்துக்கள்

வந்தியத்தேவன்

அறிமுகம்
என்னுடைய சில மனப் பதிவுகளை இங்கே பதிவு செய்ய உள்ளேன். வலைப்பூக்களில் நானே ராஜா நானே மந்திரி என்பதால் என் விருப்புக்கேற்ற வகையில் பதிவுசெய்யலாம். என் உளறல்கள் என பெயரிட்டிருப்பதன் காரணம் பலருக்கு எனது பதிவுகள் உளறலாகவே தோன்றும். ஆனாலும் சில உளறல்கள் உங்களைக் கவர்ந்தால் பின்னூட்டம் இடுங்கள்.அத்துடன் உங்கள் ஆலோசனைகள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பதிவுகள் யாருடைய மனதையோ அல்லது எந்த மதத்தையோ இனத்தையோ பாதிக்காது எனபதுக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

ஊக்கம் அளித்த இனிய நண்பர்கள் லெ.பொன்னுசாமிக்கும் கிருஸ்ணாவுக்கும் நன்றிகள்.
எனக்கு பிடித்த விடயங்கள் இனிமேல் ...

கேபிள் சங்கர்

குறும்படம்ன்னா என்ன?
இந்த கேள்விக்கு பல பேர் பல பதில் சொன்னாங்க. அதுலேயும் சில பேர் குறும்படம்ன்னு சொன்னதுமே "என்ன கான்செப்ட்?"ன்னு கேட்கிறாங்க..
எனக்கென்னமோ குறும்படம்னா ஏதாவது விஷயமோ அல்லது ஏதாவது கருத்து சொல்லணும்ணோ தோணல. குறும்பட்ம்றது ஓரு பிளாக் மாதிரி நம்ம மனசுல தோணிய விஷயங்களை எல்லாம் எழுதறமாதிரி... அது ஒரு விதமான வெளிப்பாடுன்னு என் கருத்து.
சங்கர் நாராயண்

Loshan -லோசன்
வணக்கம்

வணக்கம் அனைவருக்கும்.... வானலைகளில் ஒவ்வொரு நாளும் உங்களை சந்திக்கும் நான் இன்று முதல் உங்களை என் இந்த வலைப்பூவினூடாகவும் சந்திக்க எண்ணம் கொண்டுள்ளேன்..

எப்போதோ எனக்கு இந்த வலைப்பூ எண்ணம் உதித்தாலும் பிறவியிலேயே என்னோடு தொற்றி கொண்ட சோம்பலும் என்னுடைய வானொலி வேலைப்பளுவும் என்னை வலைப்பூ எழுத்தாளனாக வர முடியாமலேயே செய்திருந்தன. இன்று முதல் ஏதோ என்னால் முடிந்ததை எழுதிக் கிழித்து எழுத்துப் பணி செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.
தமிழுலகம் & வலைப் பதிவுலகம் வரவேற்குமா அல்லது வேண்டாமப்பா என்று சொல்லுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்

கானா பிரபா

வணக்கம்! வாருங்கோ...!

கானா பிரபாவின் "மடத்து வாசல் பிள்ளையாரடி" தளத்திற்கு வந்ததற்கு முதல்ல என்ர நன்றிகள்.
பதின்ம வயதுகளின் விளிம்பில்
இணுவில் மடத்து வாசல் பிள்ளையாரடியில் பின்னேரம் முதல் சாமம் தெரியாமல், கூட்டாளிமாருடன் அரட்டையும், சண்டையும், பிள்ளையாரடிப்பொங்கலும், காதல் கதைகளுமாகக் கழிந்த நாட்களின் நினைவுகளோட
இயந்திரமான, எங்கேயோ ஓடிக்கொண்டு,நட்புக்கும் விலைபோடும் இந்த வெளிநாட்டில மீண்டும் என்னைப் புதுப்பிக்க, என்ர மனசைப் பாதிச்ச, காயப்படுத்திய, ஒத்தடம் தந்த நினைவுகளை இதில பதியிறன், பாருங்கோ

தங்கமுகுந்தன்

அறிமுகம்: வலையுலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறேன் !

ஏகனாகவும் அனேகனாகவும் எங்கும் எதிலும் எல்லாமாகவும் வியாபித்திருக்கும் பரம்பொருளின் திருவருளுடனும் குருவருளின் துணையுடனும் "கிருத்தியம்" என்ற வலைத்தளத்தை ஆரம்பிக்கின்றேன்

பாலவாசகன்

சபிக்கப்பட்ட தமிழர்கள்

8/10/2009 நேரம் பத்து மணி நாற்பது நிமிடம் நான்கு விநாடிகள் இந்த கணமே வேண்டுமானாலும் உலகம் அழிந்து போகட்டும் .....................

ஆதிரை

வலைப்பதிவுக்குள் நான்
வணக்கம்!

நீண்டநாள் கனவொன்று நனவாகும் வேளையில் உங்களுடன் வலைப்பூவின் வழியே பேசுவதில் ரொம்ப மகிழ்ச்சி..!

என் உணர்வுகள், நான் கடந்து வந்த பாதைகள், அதில் விதைத்துவிடப்பட்ட முட்கள், என் சுற்றம், என் தாய்நாடு இவைகள் பற்றி என் உள்ளக்கிடக்கையில் குடிகொண்டிருக்கும் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள ரொம்பநாள் ஆசை. ஆனால், என் எண்ணங்கள் எல்லாம் உள்ளன உள்ளவாறு வெளியிட என்னைச்சூழ்ந்துள்ள சில இனந்தெரியாதவைகள் அனுமதிக்காது என்பதும் நான் உணர்வேன். அதை எல்லாம் மீறி நான்கு சுவருக்குள் என் மீதிக்காலத்தை கழிப்பதற்கும் நான் தயாரில்லை. அத்துடன் உயிராசை துறந்தவனுமல்ல... என்றாலும் பேசவேண்டிய சிலதுகள் பேசப்பட்டேயாக வேண்டுமல்லவா? அவை இங்கு பேசப்படும்.

**** அடுத்து சுபாங்கனின் முதலாவது அறிமுகப்பதிவுக்கு சென்றேன். அங்கே ஒரே வெள்ளமாக இருக்கின்றது. நம்ம மருதமூரான் பக்கம் போவோம் என்றால் அவரும் தான் ஒரு செய்தியாளன் என்பதை தனது முதலாவது பதிவிலேயே காட்டியிருக்கின்றார். அவரது முதலாவது பதிவே அப்போதைய current affairs தான்.

கனககோபி

தமிழின் மீள் எழுச்சிக்காக ஒரு தமிழனின் ஆதங்கமே இது.
தமிழுக்கு அமுதென்று பெயர்.(?)

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதொன்று அறியேன் என்றார் ‘பாரதி பித்தன்’ பாரதிதாசன்.
இதே கருத்தை இன்றைய (பெரும்பாலான) தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களிடமும், சினிமா தயாரிப்பாளர்களிடமும் சொல்லி பாருங்கள். அவர்கள் சொல்வார்கள், “.Bharathithasan doesn’t know the English language. That’s why he said like that. (பாரதிதாசனுக்கு ஆங்கில மொழி தெரியாது. அதனால் தான் அப்படி சொன்னார்)” என்று. நீங்கள் ‘மன்டாரின்’ மொழியில் ஏதாவது கேட்டால் கூட அவர்களுக்கு விளங்கினாலென்ன, விளங்காவிட்டாலென்ன அவர்கள் ஆங்கிலத்தில் அல்லது தமிழ் சிறிது கலந்த ஆங்கிலத்தில் தான் விடையளிப்பார்கள் போலும். (கவனிக்கவும்! ஆங்கிலம் கலந்த தமிழ் வேறு, தமிழ் கலந்த ஆங்கிலம் என்பது வேறு.)

(முக்கிய குறிப்பு இவருக்கும் கன்கொன் என்பவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அப்படி கி.கு அண்ணாவுக்கும், கோ அண்ணாவுக்கும் நான் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்.)

பதிவர்களின் அறிமுகப்பதிவுகளை எழுதியாச்சே எதோ ஒன்று குறையுதே!!!
ஓ.....என் அறிமுக பதிவு!!!!!

CHEERS WITH JANA
(இதற்கு லிங்க் கொடுக்கவில்லை. காரணம் நீங்கள் தற்போது இருப்பது அந்த தளத்தில்த்தான்)

வணக்கம் அன்பு நெஞ்சங்களே.


தேசத்தின் எல்லைகளைக் கடந்து உலகலாவிய ரீதியில் தமிழ் நெஞ்சங்கள் பரந்துபட்டு வாழ்ந்துவரும் இந்த நிலையில் தமிழ் நண்பர்கள் பலரும் வலைப்பதிவு உலகில் காற்தடம் பதித்து தமது எண்ணக்கருத்துக்களை பதிந்துவருகின்றனர்.இந்த நிலையில் இந்த தமிழ் இணைய உலகில் நானும் தடம்பதிக்கின்றேன்.


எப்போதாவது இருந்துவிட்டு வரும் நல்ல சிந்தனைகள், நாம் மட்டுமே மனதுக்குள் தர்க்கம் செய்து எமக்குள்ளேயே செத்துப்போகும் எண்ணங்கள், செய்யவேண்டும் என நினைத்தாலும் அடடே மறந்துவிட்டேனே என எண்ணங்கள் வீணாகிப்போதல், என பல விடயங்களை நாங்களே கர்ப்பந்தரித்து, அடுத்த கணமே, கருக்கலைப்பும் செய்துவிடுகின்றோம்.


இந்த நிலையில் இந்த இடுகைகள், நம் எண்ணங்கள் சிந்தனைகளை மற்றவர்களுடன் பகிரவும், எமக்கு தெரியாதவற்றை மற்றவர்களிடமிருந்து பெறவும். சுவையான செய்திகளை மற்றவர்களுடன் பகிரவும் வகை செய்யும் என்பதில் சிறு சந்தேகமும் இல்லை.


எமக்குள்ளேயே கருக்கலைப்பு செய்யப்படும் எமது சிந்தனைகளை சுகமாக பிரசவிக்க இந்த இணையப்பதிவுகள் உதவுகின்றன. எமது சிந்தனைகள், எமது கருத்துக்களால் மறுமலர்ச்சி ஏற்படப்போகின்றது, புரட்சி வெடிக்கப்போகின்றது என்று சொல்லவரவில்லை. ஒரு சின்னவிடயம் என்றால்க்கூட, அடடா…. நான் இதை இப்படி யோசிக்கவில்லையே என எம் நண்பர்கள் எமது கருத்தினை தட்டிக்கொடுத்தாலே போதுமே…


யார்கண்டது எந்த ஆலம் வித்தில் எந்த ஆலவிருட்சம் உள்ளது என்பதை! யாராலும் சொல்லிவிடமுடியுமா என்ன?சரி…என்பதிவுகள் இதை சம்பந்தப்படுத்தி, இதை அடிப்படையாகக்கொண்டு வரும் என என்னாலேயே சொல்லமுடியாது. நேரம் கிடைக்கும்போது அந்த நேரத்தில், என்ன எண்ண ஓட்டம் மூளைக்கு கடத்தப்படுகின்றதோ அதை என் தட்டச்சு பிரசவிக்கும்….அது சிலவேளைகளில் சாகீர் ஹ_சைனின் தபேலாவாகவும் கேட்கும், சிலவேளைகளில். முதலாம்வகுப்பு பையனின் மேசைத் தட்டலாகவும் இருக்கும்.

பெரியவர் நீவிர் பொறுப்பது உம் கடன்… தொடர்ந்து பயணிப்போம்

Monday, July 5, 2010

ஓராயிரம் யானை கொன்றால் பரணி!!


மாபெரும் யுத்தம் ஒன்று இடம்பெற்றதன் பின்னர், அதாவது கிட்டத்தட்ட ஒரு ஊழிக்கூத்தே அடங்கிய பின்னர், அந்த போரிலே வெற்றிபெற்ற தலைவனை வாழ்த்திப்பாடும் ஒரு பாடல் வடிவமே பரணி என தமிழ் இலக்கியத்தால் சிறப்பிக்கப்படுகின்றது.அந்தக் மாபெரும் யுத்தத்தில் பல சேனைகளை அழித்து, எதிரிகளின் பிணக்குவியல்களின் மீது, அவர்களின் பெரும்படையான யானைப்படையில் ஓராயிரம் யானைகளை கொன்ற தலைவன்மீதே இந்த பரணி பாடப்படுவதாக பல இலக்கியங்கள் வகை செய்துள்ளன.

குறிப்பிட்ட ஒரு யுத்தம் முடிந்ததன் பின்னர், அடுத்துவரும் பரணி நட்சித்திரத்தில் யுத்தம் இடம்பெற்ற இடத்தில் கூடும் பேய்களும், இராட்சத ஜந்துக்களும், போரில் இறந்துபோன உடல்கள், இரத்தங்கள் என்பவற்றை அளவில் பெரிய ஒரு பானையில் இட்டு, இரத்தத்தை தண்ணீராய் விட்டு, போர்த் தெய்வமான காளிக்கு இவற்றையே கூழாக காய்ச்சிப்படைத்து, வெற்றிபெற்ற தலைவன், மன்னன், ஆகியோரின் வீரப்பிரதாபங்களை சொல்லி தாமும் உண்டு மகிழ்வதாகவே இந்த பரணி உள்ளது.

இந்தப்பரணி என்பது தமிழில் உள்ள தொன்னூற்று ஆறு பிரபந்த வகைகளில் ஒன்றாகும். பொதுவாக பரணிப்பாடல்கள்கடவுள்

வாழ்த்து
கடை திறப்பு
காடு பாடியது
கோயில் பாடியது
தேவியைப் பாடியது
பேய்ப்பாடியது
இந்திரசாலம்
இராச பாரம்பரியம்
பேய் முறைப்பாடு
அவதாரம்
காளிக்குக் கூளி கூறியது
போர் பாடியது
களம் பாடியது
கூழ் அடுதல்

ஆகிய பகுதிகளைக்கொண்டிருக்கும். பெரும்பாலும் போரிற் தோற்ற அரசன் நாட்டில் போர்க்களம் அமைத்துப் போர் செய்து, வெற்றி பெறுவதால் தோற்ற நாட்டுப் பெயரால் நூலை வழங்குவது மரபு.

செயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது கலிங்கத்துப்பரணி. அனந்தவர்மன் என்னும் வட கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112 ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே இந்த பரணியின் பொருள். பரணி நூல்களுக்குத் தோற்றவர் பெயரிலேயே தலைப்புத் தரும் வழமைக்கு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின் பெயரை வைத்து, இந்த நூல் கலிங்கத்துப் பரணி என அழைக்கப்படுவதாயிற்று.

தமிழில் முதன் முதலில் எழுந்த பரணி கலிங்கத்துப் பரணியே ஆகும். இது தாழிசையாற் பாடப்பெற்றது. 599 தாழிசைகளை உடையது. கடவுள் வாழ்த்தில் உமபதி துதி என்று ஆரம்பிக்கும் இந்த

1.புயல்வண்ணன் புனல்வார்க்கப் பூமிசையோன்தொழில்காட்டப் புவன வாழ்க்கைச்செயல்வண்ண நிலைநிறுத்த மலைமகளைப்புணர்ந்தவனைச் சிந்தை செய்வாம்.
ஏனத் தொடங்கும் பரணி கூழ் அவிழ்தல் எனும் பகுதியில் உள்ள பேய்கள் கழிப்பு மிகுதியால் கூத்தாடல், என்ற பகுதியில் வரும்,
வேத நன்னெறி பரக்க வேஅ பயன் வென்ற வெங்கலிக ரக்கவேபூத லம்புகழ்ப ரக்க வேபுவி நிலைக்க வேபுயல்சு ரக்கவே.
எனும் படாலுடன் முற்றுப்பெறுகின்றது.

அதேபோல தமிழில் உள்ள பரணிப்பாடல்களில் மற்றும் ஒரு பரணியாக அமைந்தது தக்கயாகப்பரணி ஆகும். தக்கயாகப் பரணி ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பட்டது. இந்நூல் தமிழ் நாட்டில் சோழர் ஆட்சி நிலவிய 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த நூலின் வழியாக அக்காலச் சைவம் பற்றிய பல தகவல்களை அறிய முடிகிறது. சிவபெருமானுக்காகப் பாடப்பட்ட இந்நூலில், பிள்ளையார் பெயரில் காப்புச் செய்யுள் பாடும் மரபுக்கு மாறாக வைரவர் பெயரில் காப்புச் செய்யுள் உள்ளது.


சரி…தமிழ் புலவர்கள், மறத்தமிழர்கள் பலர், மதங்கொண்ட யானையினை அடக்குவதும், அதை வதம் செய்வதும் பெரும் வீரத்தின் எடுத்துக்காட்டாகவே கொண்டுள்ளனர். தமிழ் இலக்கியங்களில் யானையினை அடக்கிய வீரர்கள், விராங்கனைகள் பற்றியும், அதன் உச்சமாக பேரில் ஆயிரம் யானைகளை கொண்றவன் என்ற சிறப்புடன் பரணியும் உருவாகியது எனலாம்.

தமிழ் இலங்கியம் யானையை அடக்கிய அரியாத்தையினை கண்டுள்ளது, அயிரம் யானைகளைக்கொன்றவன்மேல் பாடப்படும் பரணியினை கண்டுள்ளது, தமிழனின் குணமே காதலும், விரமும் கலந்த வாழ்வுக்குணமே என சங்கத்துப்புலவர்கள் அடிததுக்கூறியுள்ளனர்.
இந்த வகையில் கீழ்வரும் பாடல்களை கவனித்துப்பாருங்கள்.

ஈன்று புறந்தருதல் தாயின் கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!
இந்தப் பாடலில் தாய் பெற்றெடுக்கிறாள். தந்தை அவனை சான்றோன் ஆக்குகிறான். சான்றோன் ஆன அம்மகனுக்கு... என்ன கடன் என்று பொன்முடியார் உரைத்திருக்கிறார்? அறிஞர்கள் அவையில் அறிஞன் என்று பெயர் வாங்க வேண்டும் என்றா? இல்லையே... அந்தத் தாய் பெற்ற பிள்ளையைத்தான் காளை என்று குறிப்பிடுகிறார். அந்தக் காளையின் கடமை ஒளிர்கின்ற வாளைப் பயன்படுத்தி, அரிய போரை நடத்தி அதில் யானையை வீழ்த்தி மீண்டு வருதல் என்பதுதானே சொல்லப்பட்டுள்ளது.
அடுத்த புறனாநூற்றுப் பாடல்: சோழனுக்கும் நிகழ்ந்த போர் பற்றி அவைக்களத்தில் பரணர் பாடுகிறார்:

..... யானையு மம்பொடு துலங்கி விலைக்கும் வினையின்றி படையொழிந்தனவே. விறல்புகல் மாண்ட புரவியெல்லாம் மறத்தகை மைந்தரோடு மாண்டு பட்டனவே. தேர்தர வந்த சான்றோரெல்லாம் தோள் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே.
பொருள்: யனைகள் அம்புகளினால் வீழ்த்தப்பட்டு மாண்டு ஒழிந்தன. குதிரைப் படை குதிரைகளெல்லாம் அதில் இருந்த வீரருடன் மாண்டன. தேரில் வந்து போரிட்ட சான்றோர்கள் மொத்தமாக மாய்ந்தனர் என்பதாகும்.


ஆண்டாள் அருளிய “நாச்சியார் திருமொழியில்” இச்சொல்லை பயன்படுத்தியிருக்கிறார். திருமால் தன்னை திருமணம் செய்வது போல் தான் கண்ட கனவை கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்துநாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்”திருமால் ஆயிரம் யானைகள் புடைசூழ வருகிறார், அக்காட்சியைக் கண்ட மக்கள் யாவரும் பொன்குடங்களை வைத்து, தம் சுற்றுப்புறங்களில் தோரணங்கள் கட்டி வரவேற்பதை தன் கனவில் கண்டதாக தோழியிடம் கூறுவதாகக் கூறப்படுகிறது.
ஆக…பரணியில் மட்டும் இன்றி தமிழ் இலங்கியங்கள் பலவற்றிலும் யானையினை அடக்கவது, யானையினை நேரில் நின்று கொல்வது, இவையே தமிழில் ஆண்மை, வீரம் என போற்றப்படுகின்றது. தமிழ் மறவன்கள் மட்டுமின்றி தமிழ் வீரம் நிறைந்த பெண்ணான அரியாத்தை எனும் வீர மறப்பெண் ஒருவருள் யானையினை அடக்கியுள்ளதாக பதிவுகள் உண்டு.

ஆக…தமிழனின் வீரமும், ஆண்மையும் நேற்று வந்ததல்ல, அது தமிழ் எனும் மொழி தோன்றியபோதே அவனுடன் கலந்து வந்துவிட்டது. தன் பலம் அறியா அனுமன்பொல அவன் இன்று சில தேச எல்லைகளாலும், சில சதிகளாலும், தந்திரங்களாலும் கட்டுப்பட்டிருக்கின்றான். என்றோ ஒருநாள் கங்கை, யவனம், கடாரம் வென்ற சோழன் மீண்டும் வருவது உறுதி

Sunday, July 4, 2010

ஞாயிறு ஹொக்ரெயில் (27.06.2010)

மண்ணாங்கட்டி ஆர்ஜென்ரீனா

நேற்று என்னால்த்தூங்கக்கூட முடியவில்லை. எத்தனை நம்பிக்கையாக, எத்தனை ஆவலோடு, எத்தனை அவசரமாக ஓடிப்போய் தொலைக்காட்சிப்பெட்டிக்கு முன்னால் இருந்தேன். என் அபிமானத்திற்குரிய அணி ஆர்ஜென்ரீனா வெல்லவேண்டும் என்பது ஒரு பக்கம் உச்சக்கட்ட நம்பிக்கையில் ஜெர்மன் அணியை நேசிக்கும் ஒரு நண்பனுடன் 5000 ரூபாய்க்கு பெட்கூட கட்டியிருந்தேன். அத்தனை நம்பிக்கை!! அத்தனை அபிமானம்!!! எல்லாமே போய்விட்டதே.
குறைந்தது ஒரு கோலாவது? ஒரு கோல் போட்டாங்கதான், அது ஓவ்கோல்!!
என் பாடு பறவாய் இல்லை பக்கத்தில்!!, வாத்தியாராக இருந்துவிட்டு தற்போது ஓய்வுபெற்றுவிட்டு இருக்கும் மாஸ்டர் ஒருவரும் என்னுடன் இருந்து மச் பார்த்தார். நானாவது ஆர்ஜென்ரீனாவின் தீவிர ரசிகன். அவரோ ஆர்ஜென்ரீனாவின் தீவிர வெறியன்.
கடைசிமட்டும் நம்பிக்கையுடன்தான் இருந்தார் மனுசன். ஜெர்மனி அணி மூன்றாவது கோல்போட்டதும் முன்னால் இருந்த கதிரையையும் உதைந்துதள்ளிவிட்டு மண்ணாங்கட்டி ஆர்ஜென்ரீனா என்று உதடுகள் துடிக்கப்பேசிவிட்டு, என் கையில் அந்த மெச்ஸி பயல்மட்டும் கிடைத்தான்…என்று பல்லையும் நெருமிவிட்டுப்போனார்.
ஆனால் யதார்த்மாக ஒன்றை சொல்லித்தான் ஆகவேண்டும், நேற்றைய ஜெர்மனி அணியின் ஆட்டம் ஆபாரம்..

அரசியல் காமடிகள்

இலங்கை தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துகள், செயற்பாடுகள் எல்லாம் இப்ப கேட்க படு காமடியாக இருக்குது. சிலபேருக்கு இப்ப திடீர் ஞான உதயங்கள் எல்லாம் பிறந்திருக்கு. உதிக்கும் பக்கத்தில் மீண்டும் சிலபேர் முதலில் தோற்றுப்போன பிரதேச வாத மிட்டாயை திரும்ப தயாரிச்சு சனங்களிட்ட காட்டி திரும்ப தங்கட இருப்பை உறுதி செய்ய நினைத்திருக்கின்றார்கள் போல தெரிகின்றது. வடக்கே இருந்து வந்தபடையோடை ஐக்கியமாகி, அவை போகும்போது ராமபஜனை பாடி சேர்ந்துபோன ஆக்கள் எல்லாம் திரும்பி வந்திருக்கிறார்கள். தெற்கில் இருந்து கடிதம் எழுதுவதில் துறைதேர்ந்த சந்தோச சம்காரங்கள் எல்லாம் இப்போ படு காமடியான அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். தாங்கள் முன்பு நிகழ்த்தியருளிய திருவிளையாடல் காட்சிகளையும், தங்கள் திருவாய்களில் அற்றைப்பொழுதுகளில் வந்த வார்த்தைகளையும் எங்கட சனங்கள் மறந்திருப்பார்கள் என்று முழுதாக நம்பி விட்டார்கள்போல இருக்கு…அப்ப சொல்லுறது ஒரு வாய் கேட்கிறது பல காதுகள் என்ற விடயத்தை அடிக்கடி இவர்கள் மறந்துபோய்விடுகின்றனர்.
எது எப்படியோ..பத்திரிகையில் இந்த கூத்துக்களை எல்லாம் படிக்கும்போது, சிரிப்புடன் ஒரு பாட்டுத்தான் நினைவுக்கு வருகின்றது…
அந்தப்பாட்டு இதுதாங்கண்ணா….
போடு ஆட்டம்போடு..நம்மை தடுக்க எவரும் இல்லை….

நண்பன் திருமயூரனின் என் மனம் கவர்ந்த கவிதை ஒன்று

என்னை நினைவிருக்கிறதா?
நீங்கள்...
சுமைப்படும் போதும்,
சுகப்படும் போதும் -என்னில்
பகிர்ந்து கொட்டிய
எண்ணங்கள் பற்றி
எனக்குத்தான் தெரியும்!

உங்கள் ஆதங்கங்களை -என்
வாயில் திணித்துவிட்டு செல்வீர்கள்,
செரிமானம் ஆகாத வலியில் - நான்
திறக்க வரும்
தபால் காரனுக்காக
தவமிருந்த காலங்கள் - உங்கள்
பிரசவ நாட்களை விட
பெறுமதியானவை!

வெளிநாட்டில்,
உறவுகளை உதிர்த்து விட்டு...
என்னிடம் வந்து,
மடல்களை அல்ல - மனங்களை அல்லவா
நிரப்பி சென்றனர்!
தம்பள பூசசியாய் -என்னை
தடவிச்செல்லும்
காதலர்களை பற்றி
என்ன சொல்ல?
அடிக்கடி இடம் பெயரும்
ஈழ தமிழர் போல் - அவர்கள்
இதயம் பெயர்ந்த கதைகளும்
எனக்கு தெரியும்!

உங்கள் உணர்வுகளை காவ
ஒற்றை காலில்
தவமிருந்த எனக்கு - இப்போ
இணையம் என்ற இயமன்
ஈமெயிலிலும், பேஸ் புக் இலும்
பாசக் கயிறு எறியும்
பாவம் பற்றி - எங்கு
பேச?

விரிந்த வலைக்குள்
விழுந்து விழுந்து
"அளவுங்கள்" -ஒருநாள்
உங்கள் அன் கொன்ஸெஸ்,
சப் கொன்ஸெஸ், எல்லாம்
தவணை முறையில்
சந்தைப்படும் போது
என்னை நினைத்து
அழுவுங்கள்!!

--ஆற்றாமையால் அழக் கண்ட
மண்டைதீவு தபால் பெட்டி --
This was taken a week ago in Mandativu, Jaffna

வசந்தத்தில் ஓர் நாள்.

பொதுவாகவே வாணி ஜெயராமினுடைய குரலுக்கு எப்போதும் என் இதய சபையில் மரியாதை கலந்த வணக்கம் இருக்கும். ஒரு இசையை அனுபவித்திருக்கின்றீர்களா? என கவிஞர்கள் கேட்கும் முரண்பாடான கேள்விகளின் யதார்த்தமான பதில் வாணிஜெயராமின் குரலில் உண்டு. பொதுவாகவே வாணி ஜெயராமின் பாடல்கள் ஹசல் கலந்தவையாக இருக்கும். ஊதாரணமாக மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடல், நானா…நாணுவது நானா என்றபாடல்.
அத்தோடு மனதில் இருந்து எடுக்கமுடியாத பல பல பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த வரிசையில்த்தான் இந்தப்பாடலும்…

தோன்றும் இளமை தொடர்ந்திடவேண்டும்
தொடர்ந்திடும்மாலை வளர்ந்திடவேண்டும்
நான்கு இதழ்கள் கலந்திடவேண்டும்
நாளை என்பதே மறந்திடவேண்டும்..
என்ன ஒரு அருமையான வரிகள்…..

முடிவுக்குப்பின்.


ஷர்தாஜி ஜோக்
ஒரு அமெரிக்க உல்லாசப்பயணி டெல்லி, மற்றும் ஆக்ராவை சுற்றிக்காட்ட நம்ம ஷர்தாஜியை விழிகாட்டியாக எற்பாடு செய்துகொண்டார். செங்கோட்டைக்கு சென்றபோது அதைப்பார்த்து வியந்த அமெரிக்கர் நம்ம ஷர்தாஜியிடம் இதைக்கட்டுவதற்கு எவ்வளவு வருடங்கள் சென்றன என்று கேட்டார். ம்ம்ம்…இருவது வருடங்கள் என்று ஷர்தாஜி பதில் தந்தார்…
ப்பூ….இந்தியர்கள் அவ்வளவு சொம்பேறிகளா? அமெரிக்கர்கள் இதை வெறும் இரண்டுவருடங்களில் கட்டிமுடித்திருப்பார்கள் என்றார் அமெரிக்கர்.
தாஜ் மஹாலைப்பார்த்து லயித்துப்போன அமெரிக்கர் சரி…இதைக்கட்ட உங்களுக்கு எவ்வளவு காலம் எடுத்தது என்று கேட்டார்…சர்தாஜி வேண்டும் என்றே வருடங்களைக்குறைத்து வெறும் 10 ஆண்டுகள்தான் சென்றன என்றார்… அதற்கும் அந்த அமெரிக்கர்…இதை நாங்கள் ஒருவருடத்தில் கட்டிமுடித்திருப்போம் என்றார்.
சென்ற இடமெங்கும் காலங்களைக்கேட்பதும், ஷர்தாஜி பதிலளித்தவுடன்…அமெரிக்கர்கள் இதை குறுகிய காலத்தில் முடித்திருப்பார்கள் என பெருமை பேசுவதுமே அமெரிக்கரின் வழக்கமாயிருந்தது…
ஷர்தாஜிக்கு கடும் எரிச்சல் எற்பட்டது…போகும் வழியில் “சகாரா” தொலைக்காட்சி கோபுரத்தைக்கண்ட அமெரிக்கர் அது என்ன கோபுரம் என்று கேட்டார்…அதற்கு பதிலளித்த நம்ம ஷர்தாஜி அங்கே போய்த்தான் நாங்கள் அதை விசாரிக்கவேண்டும் இன்றுகாலை நான் இந்தப்பக்கமாக வந்தபோது இந்தக்கோபுரம் இங்கு இருக்கவில்லை என்றார்.

Friday, July 2, 2010

வேற்றுமொழிக்கதைகள்>>>01.கதகதப்பு…


இந்த கல்லினோவ்கா கிராமமே இருண்டுவிட்டதுபோல ஒரு தீர்க்கமுடியாத பிரமை சிறுவன் வஷிலியின் மனதை மெல்ல மெல்ல ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் அவனுக்கு தனிமை சரியான தெரிவு அல்ல என்று அவனை தங்கள் அணைப்பிலேயே வைத்திருக்கவிரும்பிய அவனது அப்பா, அம்மாவை ஒருவாறு போக்கு காட்டிவிட்டு, ஏரிக்கரையோரம் வந்து, ஏரியில் முத்துக்குளிக்க தத்தளிக்கும் கரையோரக்கற்களை தனது பிஞ்சு விரல்களால் ஒரு வெறித்தனத்தோடு ஏரியை நோக்கி எறிந்துகொண்டிருந்தான் அந்தச்சிறுவன்.
அவனது மனதில் தற்போது எந்த எண்ணங்களும் இல்லை..வெறுமையும், காலத்தின் மீதான வெறுப்பும் அன்றி அவனால் அதற்கும்மேல் எதனையும் யோசிக்கமுடியாதவனான நிலைக்கு சென்றிருந்தான் அவன்.

நேற்று இந்தப்பொழுதுகளில் அவனின் தந்தையின் தாயான இவனது பிரியத்திற்குரிய பாட்டியின் இறுதிச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தன..
பாட்டி…வஷிலியின் அனைத்தும், அனைத்து சந்தோசமும், அவனுக்கான முழு உலகமுமே அவளேதான். தன்மேல் இந்த அவளவுக்கு அன்பு செலுத்தும் எந்தவொரு பொருளையும், உயிரையும் அவன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

அவன் சந்தோசத்தில் துள்ளிக்குதிக்கும்போது தானும் அவன் வயதிற்கு வந்து அவனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவதும், அவனுக்கு ஒரு தலைவலி என்றாலே தாங்கமுடியாமல் பதறி அவனது அனுங்கல்கள் முடிந்து அவன் சுகமாக தூங்கும்வரை அவனை அன்பாகத்தடவிக்கொடுத்து விடுவதும,; அவள் அன்புகளின் பல வெளிப்பாடுகளில் சிலவாக இவன் குறிப்பெடுத்துவைத்திருக்கின்றான்.
தன் பாட்டியின் சுருக்கம்கொண்ட கைகளின் கதகதப்பும் எப்போதும் அவனுக்கு வேண்டும்.. பாட்டியின் முதுமையையும் அடிக்கடி அவளுக்குவரும் சுகயீனத்தையும் கண்டு பாட்டி இறந்துவிட்டால் என்ற நினைப்பே அவன் இருதயத்தை நிறுத்திவிடும்போன்று இருக்கும் அவனுக்கு. மறைவாகப்போய் விக்கி விக்கி அழுத்திருக்கின்றான் வஷிலி.

மாலைவேளையில் மணற்தரையில் இருந்து மணல்குவித்து பல விடயங்களையும் அவனுக்கு வரைந்துகாட்டுவதையும், மழைக்காலங்களில் தூறல் உள்ளே வரும்போது தன் பேரனை தன் போர்வையாலேயே மூடி அணைத்து தன் மடியில் வைத்திருப்பதையும் இந்த ஜென்மத்து மகிழ்ச்சியாக திரும்பத்திரும்ப கேட்பான் வஷிலி.

இத்தனை இருந்தும், இறுதி நேரத்தில் அறிவு அற்றுப்போகும்போது கூட, தன்பேரனையே வாஞ்சையுடன் பார்த்து, ஒரு மௌனப்புன்னகையுடன் கண்மூடியபாட்டியை நினைத்து, அவள் உயிரற்ற உடலினைப்பார்த்து ஏன் இன்னும் தனக்கு அழுகை வரவில்லை?? என்று திரும்பத்திரும்ப தன் மனத்தையே கேட்டுக்கொண்டிருக்கின்றான் வஷிலி. இனி பாட்டி தன்னிடம் வரப்போவதில்லை என்ற யதார்தத்தத்தை அவனால் ஏற்றுக்கொள்ளமுடியவே இல்லை. ஏரியை நோக்கி மிக ஆக்கிரோசமாக கற்களை எறிந்துகொண்டிருக்கின்றான் அவன்.

அந்த இடத்தில் ஆள்அரவம் கேட்கவே திடுக்கிட்டுப்பார்க்கின்றான், அங்கே அவனது தந்தையும், சிறிய தந்தையாரும் அவனை அழைத்துக்கொண்டு வீடுசெல்கின்றார்கள். ஏன் எனக்கு அழுகை வரவிலை? ஏன் எனக்கு அழுகை வரவில்லை??? திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தான் வஷிலி.
இரவு வந்தததும் அவனை யோசிக்கவிடக்கூடாது என்ற திர்மானத்தில் அவனது தாயும், தந்தையும், சிறிய தந்தையும் தொடர்ந்து அவனுக்குப்பேச்சுக்கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் பேசசுக்கள் எல்லாம் அவனுக்கு கேட்கவில்லை. தூங்கப்போவதாக சொல்லிவிட்டுப்போய் படுத்துக்கொள்கின்றான்.

ஈரப்பதனான காற்று அவனை சிலிர்க்வைக்கின்றது. காற்றும் திடீரென அடிக்க பலத்த மழை சோவெனப் பெய்யத்தொடங்குகின்றது. ஜன்னல்கள் ஊடாகத்தூறல் அவன் உடலில் விழுகின்றது. மெதுவாக எழுந்துசென்று ஜன்னலைத்திறந்து பார்கின்றான். பாட்டி போர்த்துக்கொள்ளும் போர்வை ஜன்னலின் அருகில் இருப்பதை கண்டு அதை வாஞ்சையுடன் தொட்டுப்பார்கின்றான்..அவன் உடல் பாட்டியின் அணைப்பின் கதகதப்பை தேடுகின்றது…கண்களில் சிறிது சிறிதாக நீர் கசிய இதயம் பொரும…ஓ வென்று அவன் அழுகின்றான்…மழையின் சத்தத்தினையும் மீறி அவன் குரல் கேட்கின்றது.

***இது ஒரு ரஷ்யக்கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு – ஆங்கிலத்தில் இருந்து என்னால் முடிந்தவரை தமிழில் (Vashily)

LinkWithin

Related Posts with Thumbnails