Sunday, May 31, 2009

அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா முன்னேற்றப்பாதையில் செல்கின்றாரா?

அமெரிக்கத் தேர்தல்கள் இடம்பெற்ற காலத்தில் பாரக் ஒபாமா பற்றி உலகம் முழுவதும், ஒரு உற்சாகத்துடனான பரபரப்பு காணப்பட்டது. அனைவரும் ஆரூடம் கூறியதுபோல பாராக் ஒபாமாவே ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸின் நிர்வாகத்தின் உச்சக்கட்டப்பயனாக, அமெரிக்கா பாரிய பொருளாதார சிக்கலை எதிர்கொண்டிருந்தது.
ஜோர்ஜ் புஷ் - பொருளாதார வீழ்ச்சி - கடன் நெருக்கடி என்று எல்லாமாகச் சேர்ந்து ஒபாமாவுடன் போட்டியிட்ட மெக்கெய்னை வீழ்த்தியுள்ளது என்று ரீபப்ளிகன் கட்சி உறுப்பினர்களே ஒப்புதல் அளிக்கும் அளவுக்கு அன்று அமெரிக்காவின் பொருளாதாரம் சரிந்திருந்தது.

இத்தனை நெருக்கடிகளையும் வெறும் 48 வயதுடைய (04.08.1961) அனுபவங்களிலும் குறைந்தவரான ஒபாமா எப்படி முறியடித்து முன்னேற்றப்பாதைக்கு செல்லப்போகின்றார்? எல்லோரும் நினைக்கும் அளவுக்கு ஒபாமா ஒன்றும் திறமையானவர் கிடையாது, ஒரு வித கவர்ச்சி, வித்தியாசத்தின் நிமித்தமும், ரீபப்ளிகன் கட்சிமீதான அமெரிக்கர்களின் வெறுப்பின்மூலமாகவுமே அவர் இந்த உயர்ந்த இடத்திற்கு வந்தார் எனவும் பல குரல்கள் அவருக்கு எதிராக ஒலிக்காமல் இருந்ததில்லை.

இந்த நிலையில் அவர் பதவி ஏற்று எதிர்வரும் ஜூன் 09 ஆம் திகதியுடன் வெறும் 150 நாட்கள்தான் கடக்கவுள்ளது. அதற்குள் அவரது நடவடிக்கைகள் எப்படி சென்று கொண்டிக்கின்றன, அவர் என்ன நடவடிக்களை எடுக்கின்றார் என்பது குறித்து இரகசியமாக ஒன்றும் இல்லை. அவர் தமது தேர்தல் பிரச்சாரங்களின்போது கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை வீதத்தை தற்போது செய்துகொண்டிருக்கின்றார் ஏன்பனபற்றி பார்ப்பதன் முன்னர்.

அமெரிக்கா பற்றி தமிழர்கள், தமிழ் ஊடகங்கள் என்ன நிலை கொணடுள்ளன! என்பதை நாம் கவனிக்கவேண்டும், தமிழில் பிரபலமான எழுத்தாளர்களில் 99 சதவீதமான எழுத்தாளர்கள் தங்களை கொம்யூனிஸ்ட்டுக்களாக காட்டவே முற்படும் காரணத்தால் தமது ஒவ்வொரு எழுத்துக்களிலும் அமெரிக்கா மீதான பிழைகளை அடுக்கிக்கொண்டு போவதை அவதானிக்கமுடியும். அதுபோலவே ஊடகங்களும், ஒரு பிரமாண்டத்துக்காகவே அமெரிக்காவை முதன்மைப்படுத்தி செய்திகளை வெளியிட்டாலும், எல்லோருடைய எண்ணமும், அமெரிக்காவால் உலகில் சுபிட்சம் நிலவுமோ இல்லையோ, அமெரிக்காவால் உலகையே அழிக்கமுடியும். அந்த ஒரு காரணத்துக்காகவாவது அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்பது அவசியம் என்பது பொலவாகவே இருக்கின்றது.
சிலவேளைகளில் அது உண்மையாகவும் இருக்கலாம் அதைவிட்டுவிடுவோம்.
ஆனால் அமெரிக்காவை வெறும் சந்தேகக்கண்கொண்டும் சுயநலவாதிகள் என்றும் விமர்சிப்பதை ஒருபக்கத்திற்கு வைத்து விட்டு அமெரிக்காவின் சிறந்த பண்புகள். அங்குள்ள சட்டங்கள் பற்றி பார்ப்போமானால், அமெரிக்கா தனது கொள்கைகளாக குடியாட்சி முறை, தாராளமயப் பொருளாதாரம், தனியார் நிறுவனங்கள் முன்னெடுத்துச் செல்லும் தொழில்மயம், கல்விக்கு முக்கியத்துவம், தனி நபர் சுதந்தரத்துக்கு மதிப்பு, மரியாதை ஆகியவற்றை முன்னிறுத்தியது. Life, Liberty, Pursuit of Happiness ஆகியவற்றை அடிப்படை உரிமைகளாக அமெரிக்க சுதந்தரப் பிரகடனம் முன்வைத்திருக்கின்றது. வெறும் வாழும் உரிமை மட்டுமல்ல, சுதந்தரமாக வாழும் உரிமை, மகிழ்ச்சியைத் தேடிச் சென்று அடையும் உரிமை ஆகியவையும் மனிதனுக்கு அவசியம் என்பதை முன்வைத்த சாசனம் இது.
ஆனால் இவை அமெரிக்கர்களுக்கு மட்டுமன்றி, உலக மக்கள் அனைவருக்குமே பொதுவானவை என்பதை அமெரிக்க ஆட்சியாளர்கள் உணரவில்லை என்பது வேறுகதை.
சரி விடயத்திற்கு வருவோம், தனது வாழ்க்கைப்பாதையில், ஒரு வணிக பல்நாட்டு நிறுவனத்தின் ஊiழியனாக, சமுதாய ஒருங்கிணைப்பு அமைப்பின் நிர்வாகியாக, ஹார்வர்ட் சட்ட விமர்சனம் (Harvard Law Review) என்ற புகழ்பெற்ற சட்ட தொடர்பான இதழின் பதிப்பாசிரியராக, மனித உரிமை தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞராக, ஒரு சட்டதுறைப் பேராசிரியராக இருந்தவர் ஒரு உலகின் முதல்நிலை நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று இன்று வரை (141 நாட்கள்) என்னென்ன திட்டங்களை எடுத்துள்ளார், எந்தப்பாதையில் செல்கின்றார் எனப்பார்ப்போம்.



* அரசு செய்யும் தேவையற்ற செலவை ஒரேயடியாகக் குறைத்துக்கொண்டார். இராணுவம், அந்நிய நாட்டின்மீது படையெடுத்தல் போன்றவற்றை பதவி ஏற்றத்திலிருந்து நடைமுறைப்படுத்தவில்லை.
* பொதுமக்கள் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியைக் கட்டாயமாகச் சேமிக்கவேண்டும் என்று கூறி, அதற்கான நடைமுறைகளை அமுல்ப்படுத்தியுள்ளார்;.
* வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைத்து, டொலரை நிலையாக இருக்குமாறு செய்ய பாரிய அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார். அதற்காக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க என்ன வேண்டுமோ அதனைச் செயகின்றார். குறைந்த விலை இறக்குமதிகளைக் சிறிது தடுத்து அதற்காக சில பொருள்களின்மீது டாரிஃப் வரி சுமத்துகின்றார்.
* சப்-பிரைம் கடன்களால் வீடுகளை இழந்துள்ளவர்களுக்கு உதவிகள் மாற்றுத்திட்ங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
* ஏழை மக்களுக்கு ஹெல்த்கேர், இன்ஷ_ரன்ஸ் ஆகியவற்றில் பெரும் உதவிகளைச் செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
* சமுக பாதுகாப்பு, ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வுகளை முன்வைத்துள்ளார்.
* அமெரிக்காவில் சிறுபான்மையினர் - கறுப்பினத்தவர், செவ்விந்தியர்களில் எஞ்சியவர்கள், ஆகியோர் முன்னேற, அவர்களை பிறர் சமூக அளவில் சமமாக நடத்த வேண்டியவற்றைச் செய்தவருகின்றார்.
* அமெரிக்கர்கள் பெட்ரோலைக் குடிக்கும் கார்களை ஒழித்துக்கட்ட, கடுமையான வரிகளைக் கொண்டுவந்துள்ளார்;. பொதுவாகவே அமெரிக்காவில் வீணாகும் எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றைச் சேமிக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
* வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை இப்போது அதிகமாகிக்கொண்டு வருகிறது. பொருளாதாரம் ஆட்டம் காணும் நேரத்தில் இவ்வாறு இருப்பது இயல்பே. எனினும் வேலைவாய்ப்புக்கு சாதகமான வழிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார்.
* கல்வியில் நிறைய முதலீடுகளை செய்கின்றார்.
* வெளியுறவுக் கொள்கையில் பாரிய மாற்றங்கள் தெரியவில்லை என்றாலும், அடாவடித்தனம் செய்யாமல் தன்மையோடு நடந்துவருகின்றார்.
* உலக நாடுகளுடன் ஒத்திசைந்து தமது நடவடிக்கைகளை மிக நிதானமாக எடுத்துவருகின்றார். கியோட்டோ புரோட்டோகால் முதல் உலக வர்த்தக நிறுவனம் வரையில் எதற்கெடுத்தாலும் தான் சொல்வதே சரியானது என்று முன்னாள் ஜனாதிபதி போல் ஒற்றைக்காலில் நிற்காமல் நிதானமாக அனைவரதும் கருத்துக்களை கேடடுவருகின்றார்.

இன்னும் நாஸா, வீட்டீன் போன்ற வெளித்தெரியாத அமெரிக்க கட்டமைப்புக்களையும் முன்கொண்டுசெல்வார் என்றே தெரிகின்றது. அமெரிக்க சஞ்சிகை ஒன்று நடத்திய ஆய்வுகளின்படி ஜனாதிபதி பாரக் ஒபாமா தான் பதவி ஏற்று நூறு நாட்களினுள் தான் வாக்குறுதியளித்திருந்த வேலைத்திட்டங்களில் 72 சதவீதமானவற்றை தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. அதேபோல அமெரிக்கர்களில் 70 வீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்த நூறு நாட்களில் ஒபாமாமேல் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கபட்டுள்ளது.
சரிங்க…நாங்க ஒபாமாவுக்கு எத்தனை புள்ளிகளை வழங்கலாம்?

Saturday, May 30, 2009

38 ஆம் அட்சக்கோடும், அடுத்தடுத்த ஏவுகணை பரிசோதனைகளும்.




தலைநகர் பியொங்யாங் உட்பட நாட்டில் எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது, தனியுடமை என்று அங்கு ஒன்றும் கிடையாது. அனைத்தும் அரசுடமையாகவே ஆக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பவர்கள் எல்லாம் வெருட்டி அடக்கப்பட்டனர், படுகின்றனர், அதற்கும் அடங்காதவர்கள் இல்லாமற்போகின்றார்கள். அடுத்தவேளை உணவுக்காக மக்கள் அல்லல்ப்படுகின்றார்கள். ஆனால் மாதத்திற்கு இரண்டு ஏவுகணைப்பரிசோதனைகளையும், அணுகுண்டுப் பரிசோதனையினையும் வெற்றிகரமாக நடத்தியதாக பெருமைப்பட்டுக்கொள்கின்றது வட கொரியா.

தென்கொரியப் படைகள் ஒருபுறமும் வடகொரியப்படைகள் மறுபுறமும் என 241 கி.மீ. நீளமுள்ள எல்லையை இராப்பகலாய்ப் பாதுகாத்துவருகின்றன. 38ஆம் அட்சக்கோடு உலகின் அதிகப் பாதுகாப்பு மிக்க எல்லைக் கோடாய்த் தொடர்கிறது. உலகின் கிழக்கு எல்லையில் இருந்து வடகொரியாவின் இந்த வீம்பு விளையாட்டுக்கள் உண்மையில் அமெரிக்காவுக்கும் பெரிய தலையிடியாகவே உள்ளன.

கொரியாக்களின் தோற்றம்.


சீன - ரஸ்ய எல்லையில் கிழக்கு மூலையில் உள்ள பழமைவாய்ந்த மெஞ்சூரிப்பிரதேசத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் வட பகுதியிலிருந்து சீனர்கள் குடியேறியதிலிருந்து கொரியாவின் வரலாறு தொடங்குகிறது. பல்வேறு சாம்ராஜ்யங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பிறகு 1910இல் ஜப்பானிய ஏகாதிபத்தியம் கொரியாவைக் கைப்பற்றியது. ஜப்பானின் பிடி, 1945இல் இரண்டாம் உலகப் போரில் அது தோல்வியுறும் வரை நீடித்தது. போரில் வெற்றி ஈட்டிய 'நேச நாடுகளான” அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கொரியாவைத் தத்தமது செல்வாக்குப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டன. 38 ஆம் அட்சக் கோட்டின் வடபுறம் சோவியத் யூனியனின் ஆதரவுடன் கிம் இல் சுங்கின் தலைமையில் கொம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியும் தென்புறம் அமெரிக்க ஆதரவு முதலாளித்துவ ஆட்சியும் அமைந்தன. வடபுறம் வடகொரியா என்றும் தென்புறம் தென்கொரியா என்று இரு நாடுகளாக ஆனது.

தென்கொரியாவின் அபிவிருத்தியும் வடகொரியாவின் பட்டினியும்.
தென் கொரியா சுதந்திர சந்தை பொருளாதாரத்தையும், ஏற்றுமதிக்கான தொழில்களையும் வெற்றிகரமாக பயன்படுத்தி, சில ஆண்டுகளில் பெரும் பொருளாதார வளர்ச்சியையும், வாழ்க்கை தரத்தையும் பெற்றது. அரசியல் ரீதியாக, படிப்படியாக ஜனனாயக அமைப்பை அடைந்தது. கிட்டத்தட்ட மேலைநாட்டு கலாச்சாரங்களுடனும், வசதிகளுடனும் அந்த மக்கள் உள்ளனர் என்பது உண்மையே. 1988 இல் சியோலில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தக்கூடிய அளவுக்கு அமெரிக்காவின் ஆதரவுடன் அந்த நாடு முன்னேறியிருந்தது.ஆனால் வட கொரியா கிம் என்னும் கம்யூனிச சர்வாதிகாரியின் இரும்பு பிடியில் சிக்கி, மெதுவான வளர்ச்சியை அடைந்தது. 70கள் முதல் பொருளாதாரம் தேக்கமடைந்தது. நாட்டின் வருமானத்தில் பெரும் பகுதி இராணுவ செலவிற்;காக ஒதுக்கப்பட்டது. தனியுடைமையே இல்லாதால், உற்பத்தி திறன் மிக மிக குறைவாகவும், நவீனமாகாமலும் குறைவாக இருந்தது.

வடகொரியாவில் கிம் இல் சுங்கின் ஆட்சி, 1994 இல் அவர் மரணம்வரை நீடித்தது. தொடர்ந்து அவரது மகன், இப்போதைய தலைவர் கிம் ஜாங் இல் பதவியேற்றார். தந்தை 'பெருந்தலைவர்' என்றும் மகன் 'அன்புத் தலைவர்' என்றும் அரசின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களால் அழைக்கப்படுகின்றனர். தலைவர்களால் மக்களுக்கு அவசியமான உணவுப் பொருட்கள் கிடைக்க வகைசெய்ய முடியவில்லை. 1950களில் விவசாயத்தில் அமல்படுத்தப்பட்ட கூட்டு கம்யூன் முறையும் ரேஷன் பங்கீடும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்கிறார் அரசியல் விமர்சகர் சாரா பக்லி. மிகுதியும் மலைப்பாங்கான நாட்டில் 18 வீதம் நிலமே விவசாயத்திற்கு ஏற்றதாக இருப்பதும் ஒரு காரணம். மின்சக்தி மற்றும் உரப் பற்றாக்குறைப் பிரச்சினைகள் வேறு. தவிர, வறட்சியும் வெள்ளமும் மாறி மாறித் தாக்குகின்றன. 1990இல் நாடு கடும் பஞ்சத்திற்கு உள்ளானது. பட்டினியால் மாண்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சம் வரை இருக்கும் என்கிறார் 'டைம்' செய்தியாளர் டொனால்ட் மெக்கின்டயர்.

1994 இல் கிம் இறந்தவுடன், அவரின் மகன் கிம் ஜாங் இல் சர்வாதிகாரியானர். மிக மிக கொடுங்கோலனான இவர், ‘எதிரிகள்’ பலரையும் கொன்றழித்தார். வட கொரியா விவசாயம் மிக மிக நலிவடைந்து, பஞ்சம் உருவானது. இறக்குமதி செய்ய அன்னிய செலவாணி இல்லாததால், அரசாங்கமே “கடத்தல்” மூலம் அன்னிய செலவாணியை பெற முயன்றது.பஞ்சம் தலைவிருத்தாடி, பட்டினிச்சாவுகள் நடக்கும் போதும், ஆட்சியாளர்கள், அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் உருவாக்கி குவிக்கின்றனர்.தம் மக்களை கண்டே பயந்த அரசு இது. அவர்களை முற்றாக அடிமைகளாக வைத்திருக்க மிக மிக அதிக பலம் கொண்ட இராணுவம். தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள், தம் மீது படை எடுத்துவிடும் என்று ஒரு பூச்சாண்டி காட்டியே இராணுவ செலவை குறைக்க மறுக்கும் அரசு.

வடகொரியாவின் ஏவுகணைப்பரிசோதனைகள்.

வட கொரியா அணு ஆயுதங்களை கொண்டள்ளது என்று அறிந்தகொண்ட மேலை நாடகளும் ஜப்பானும் மிகந்த எச்சரிக்கை அடைந்தன. எனினும் அவற்றைச் செலுத்த வல்ல ஏவுகணைகள் அதனிடம் இல்லை எனவும், விமானங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை ஓரளவிற்கு முன்னதாகக் கண்டறிந்துவிட முடியும். ஆனால் இந்தத் தொழில் நுட்பத்தையும் ஆயுதங்களையும் வடகொரியா யாருக்கும் வழங்கலாம் என்னும் அச்சம் பல நாடுகளுக்கும் இருந்தது. அதுவே ஐ.நா.வின் தண்டனைத் தடைகளுக்குக் காரணமாகவும் இருந்தது. சர்வதேச சமுகம் இந்த நிலைப்பாட்டில் இருந்து நேரத்தில்த்தான் வட கொரியா அடுத்தடுத்து கடலின் அடியில் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையினையினையும், அமெரிக்காவின் அலாஸ்காவரை பாயக்கூடிய ஏவுகணைகளையும் வெற்றிகரமாக ஏவி அனைவரின் வயிற்றிலும் புளியை கரைத்தது.

அணுகுண்டுப்பரிசோதனைகளும் தடைகளும்.

வடகொரியா பூமிக்கடியில் நிகழ்த்திய அணு ஆயுதச் சோதனை எழுப்பிய அதிர்வு ரிக்டர் அளவீட்டில் 4.2ஆக இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது அமெரிக்காவின் நில அமைப்பியல் துறை. இதை வைத்து வடகொரியா சோதித்த அணுகுண்டு, 1945இல் ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டைவிட 20 மடங்கு சிறியதாக இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இது ஒப்பீட்டளவில் பலவீனமானதுதான்.
ஆனால் இந்தச் சோதனை வடகிழக்காசியாவின் பாதுகாப்பிலும் அமெரிக்காவின் செல்வாக்கிலும் சர்வதேச அணு ஆயுதக் கொள்கைகளிலும் உண்டாக்கிய பாதிப்புகள் பலமானவை. வோஷிங்டனில், பெய்ஜிங்கில், அதற்கப்பால் உலகெங்கிலும் அது உண்டாக்கிய அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை. இதை ஒரு 'வரலாற்று நிகழ்வு' என்று வர்ணித்த வடகொரியா, 'கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்புக்காக நடத்தப்பட்ட சோதனை இது' என்றும் கூறியது. ஆனால் இந்தச் சோதனையால் உலக நாடுகள் கடும் அதிருப்தியடைந்தன.
வடகொரியாவின் ஒரே சகாவான சீனாவிற்கும் இது உவக்கவில்லை போலும். மனித குலத்தைப் பெருந்திரளாய் அழிக்க வல்ல ஆயுதம் இரகசியமான ஆட்சியாளர்களிடம் இருக்குமானால், அது பேரழிவிற்கு வழிவகுக்கும் எனும் கவலை எல்லோருக்கும் இருக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு மன்றம் ஒருமனதாகவும் உடனடியாகவும் வடகொரியாவின் மீது பல தண்டனைத் தடைகளை நிறைவேற்றியது. 'ரகசிய தேசம்', 'ரவுடி ராஜ்ஜியம்' என்றெல்லாம் வர்ணிக்கப்படும் வடகொரியாவை, அதன் அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடச் செய்வதுதான் தடைகளின் நோக்கம். ஆனால் அது அத்தனை சுலபமில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது. இதற்கு முன்பும் இப்போதும் வடகொரியா எதிர்கொண்டுவரும் சர்வதேசத் தடைகளால் அதைப் பணியவைக்க முடியவில்லை. வட கொரியா மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகள்.1985இலேயே அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் (Nuclear Non-Proliferation Treaty - NPT) ஒப்பமிட்டது வடகொரியா. ஆனால் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வுகளுக்கு 1992 இல் தான் இணங்கியது. காரணம், அதுவரை அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் தென்கொரியாவில் இருந்தன.
அமெரிக்கா - வடகொரியா இடையே பரஸ்பர அவநம்பிக்கை தொடர்ந்தது. 1999 இல் பில் கிளின்டனின் அரசு ஒரு இணக்கமான சூழலுக்கு முயற்சித்தது. பொருளாதாரத் தடைகள் சிலவற்றை விலக்கிக்கொண்டது மின் உற்பத்திக்கு வழிவகுக்கும் மென்னீர் அணு உலைகள் அமைத்துத் தரவும் முன்வந்தது.
ஆனால் 2001இல் ஜோர்ஜ் புஷ் பதவியேற்றதும் அணுகுமுறை மாறியது. ஜனவரி 2002இல், வடகொரியா, ஈரான், ஈராக் ஆகியவை 'தீமையின் அச்சில் சுழலும்' நாடுகள் என்று சாடினார் புஷ். வடகொரியாவுடனான எல்லா நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டன. அவ்வாண்டு இறுதியில் போங்பியான் என்னுமிடத்திலுள்ள அணு உலையில் உற்பத்தி நடப்பது தெரியவந்தது. வடகொரியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அதிகரித்தபோது, அது சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வாளர்களை வெளியேற்றியது.

அடுத்த கட்டமாக 2003 இல் வெளியேறியது. இதே ஆண்டு தென்கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடற்பரப்பில் இரண்டு ஏவுகணைகளைச் செலுத்தியது. இந்தச் சூழலில்தான் சீனாவின் முன் முயற்சியில் 2003 ஆகஸ்டில் ஆறு நாடுகளின் முதல் சுற்றுப் பேச்சு வார்த்தை பெய்ஜிங்கில் நடந்தது. இடைவெளிகள் நீடித்தபோதும் இது புதிய தொடக்கத்தைக் குறித்தது. 2004 பிப்ரவரியில் இரண்டாம் சுற்றும் ஜூனில் மூன்றாம் சுற்றும் 2005 ஜூலையில் நான்காம் சுற்றும் செப்டம்பரில் ஐந்தாம் சுற்றும் தொடர்ந்தன. ஐந்தாம் சுற்றின் முடிவில் அணு ஆயுதங்களைக் கைவிட வட கொரியா ஒப்புக்கொண்டது. ஆனால் அடுத்த சில தினங்களிலேயே கிளின்டன் அரசு வாக்களித்த மென்னீர் உலைகள் நிறுவப்பட வேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக வைத்தது. 2005 நவம்பரில் வடகொரியாவின் சில வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை அமெரிக்கா முடக்கியபோது பேச்சுவார்த்தைகள் முறிந்தன.

ஓபாமா நிர்வாகம்?

எதையும் காலமறிந்து நிதானமாக அனால் ஆழமாக இறங்கவேண்டும் என்பதில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பாரக் ஒபாமா உறுதியாக உள்ளவர் என்பது அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளின்மூலமும் வெளிப்படுகின்றது.இந்த நிலையிலேயே வடகொரியாவின் அண்மைய பரிசோதனைகள் குறித்தும், சற்று காரசாரமாகவே அவரும் விமர்ச்சித்துள்ளார். இதற்கான முழுப்பொறுப்பினையும் அவர் சி.ஐ.ஏயிடம் ஒப்படைப்பார் என அமெரிக்க வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் தடைகள், உலகநாடுகளின் தடைகள் அனைத்தும் வடகொரியா விடயத்தில் வீணான நிலையில், வடகொரியாவினுள்ளே அந்த நாட்டு மக்களின் வறுமை, வெறுப்புக்களை வைத்து ஒரு கிளர்ச்சியை ஆரம்பிக்க சி.ஐ.ஏ செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பல தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன. எது எப்படியோ. இங்கேயும் வட கொரியாவுக்கு பின்னாலே மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவிகளையும், ஆதரவையும் வழங்குவது சீனாவே என்பதை யாராலும் மறுக்கமுடியாது. தற்போதைய நிலையில் அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக எந்தவித அச்சமும் இன்றி சீனா சில நடவடிக்கைகளை தொடங்கியுள்ளமையினை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் அமெரிக்கா இதை கவனித்தாலும் கவனிக்காததுபோலவே காட்டிவருகின்றது. அனால் எதிர்வரும் காலங்களிலும் இப்படியே நடந்துகொள்ள அமெரிக்காவாலும் முடியாமற்போய்விடும். உண்மையை சொல்லப்போனால் நேரடியாகத் தெரிவது வட கொரியா என்றாலும் அங்கே உள்ளே இருப்பது சீனா தான் என பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதும் யோசிக்கவேண்டியதே.

ஒரு ஜனநாயகத்திற்கான பத்தொன்பது வருட தவம் ஆங் சான் சூ கீ.


இந்த உலகம் நாகரிகம் அடைந்துவிட்டதா? உலகில் எந்த நாட்டிலாவது உண்மையான ஜனநாயகம் காணப்படுகின்றதா? என்ற கேள்விகளை கேட்டால் அதன் உண்மையான பதிலாக இருக்கப்போவது, இல்லை.. என்ற அழுத்தமான குரலே. ஒரு இனத்தின் அழிவு, பல இனங்களின் உரிமைப்போர் என்பவற்றையே தங்கள் சுய இலாபங்களுக்காக மறுதலித்துவிட்டு, மனித உரிமைகள் என்பவற்றையே தங்கள் எண்ணபடி வழைத்துப்போடுவதுமாக உள்ள இந்த உலகம் உண்மையில் நாகரிகத்தை எட்ட ஒருபோதும் முடியாது.

உலகநடப்புக்கள் சில விநோதங்களை உடையதாகவும், ஏன்? எதற்கு? எப்படி? என்ற சிந்தனைகளுக்கு அப்பாலும் சென்று நடந்துவருகின்றன. சில வர்க்கத்திற்கும், சில நாடுகளுக்கும், சில கொள்கைகளுக்கும் ஒத்து ஊதுபவர்கள், உலகமே தலையில் வைத்து கொண்டாடப்படும் நபர்களாக, உலகம் முழுவதும் காட்டப்படுகின்றனர். உண்மையான கதாநாயகர்களோ, பயங்கரவாதி, தீவிரவாதி, கைதி, கிளர்ச்சியாளன், சதிகாரன் என இன்னோரன்ன பெயர்களை சுமந்து நிற்கின்றார்கள்.

ஓரு நாட்டின் ஜனநாயகத்திற்காக பத்தொன்பது வருடங்களாக, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு பெண், அதுவும் ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் பேராதரவு பெற்று பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட பெண், உலகின் அதி கொளரவ முக்கிய விருதான உலகமே திரும்பிப்பார்க்கும் நோபல்பரிசை ஜனநாயகத்திற்காக பெற்ற பெண், இத்தனை இருந்தும் அவளின் விடுதலைக்காகவும், அவள் நாட்டின் ஜனநாயகத்திற்காகவும் இன்றுவரை எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது இந்த உலகம்.சரி…இது பற்றி சற்று ஆழமாகப்பார்ப்போம்…

இரண்டாம் உலகப்போரின் பின்னர் பிரித்தானியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டமைக்கு அமைவாக 1948 ஆம் ஆண்டு பர்மாவுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது. அனால் அந்த நாடு பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம்பெற்று 14 அண்டுகள்தான் அங்கு கொஞ்சமாவது ஜனநாயகம் இருந்ததாக கொள்ளமுடியும். 1962 ஆம் ஆண்டு பர்மாவில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அன்றிலிருந்து இன்றைய தினம் வரை பர்மாவின் தலையெழுத்தே இராணுவத்திடம்தான் இருந்துவருகின்றது.இருந்தபோதிலும் நீண்டகாலத்தின் பின்னர் திடீர் ஞானோதயம் போல, 1990 அம் ஆண்டு ஜனநாயக முறைப்படி ஆட்சி நடக்க தேர்தல் நடத்துவோம் என அறிவித்து, அதன்பிரகாரம், ஆங் சான் சூ கீயின் கட்சி இந்தத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்றது.இருந்தபோதிலும் இந்தத் தேர்தல் செல்லாது என அறிவித்த இராணுவம் தேர்தலையும், ஜனநாயக ஆட்சி முறையினையும் நிராகரித்ததுடன், ஆங் சான் சூ கீயை வீட்டுக்காவலில் வைத்தது.அதே ஆண்டிலேயே பர்மா இராணுவம் தனது நாட்டை மியான்மர் எனப் பெயர்மாற்றியது. நாட்டின் தலைநகர் ரங்கூன் - யாங்கூன் என மாற்றப்பட்டது.

ஆங் சான் சூ கீ.

பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியில் பதவியில் இருந்த ஜெனரல் அங் சானுக்கு மூன்றாவது புதல்வியாக 1945 அம் அண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி பிறந்தவர் ஆங் சான் சூ கீ. இவருக்கு இரண்டு அண்ணன்மார்கள். இவரது பெயரிலேயே அவரது பெற்றோர் மற்றும் பாட்டியின் பெயர் அடங்குவதாகவே இவருக்கு பெயர் சூட்டினார் ஜெனரல் ஆங் சான். ஆங் சான் என்பது அவரது தந்தையின் பெயர், கீ என்பது (கின் கீ) அவரது தயாருடைய பெயர், சூ என்பது அவரது பாட்டியாரின் பெயர். சிறுவயத்தில் தமது ஆரம்பக்கல்வியினை ரங்கூனில் உள்ள ஆங்கில கத்தோலிக்கப் பாடசாலையில் கல்விகற்றார் ஆங் சான் சூ கீ.


பின்னர் தனது பட்டப்படிப்பை இந்தியாவின் தலைநகர் டில்லியில் உள்ள லேடி சிறி ராம் கல்லூரியில் கற்ற அவர், பட்டமேற்படிப்பை ஹக்ஸ் கல்லூரி ஒக்ஸ்போர்ட்டிலும், பின்னர் தமது கலாநிதி ஆய்வினை லண்டன் பல்கலைக்கழகத்திலும் முடித்துக்கொண்டார்.
1972ஆம் அண்டு பிரித்தானியரான டொக்ரர்.மைக்கல்; எரிஸ் என்பரை மணந்த ஆங் சான் சூ கீ. சிறிது காலம் லண்டனில் வசித்து வந்தார். அதே சமயம் இரண்டு அண் குழந்தைகளுக்கும் தாயாராக அவர் வாழ்க்கையினை நடத்தினார்.இந்த வேளையில் 1988 அம் ஆண்டு ஆங் சான் சூ கீ பர்மாவுக்கு திரும்பியிருந்தார்.சிறுவயதில் இருந்தே ஜனநாயகத்தின் மீது அதீத பற்றுக்கொண்டவராக இருந்த ஆங் சான் சூ கீ, தனது தாய் நாட்டில் ஜனநாயகம் ஏற்படவேண்டும். அதற்கு தம்மாலான எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ண ஓட்டத்திலேயே இருந்தார். 1988 ஆம் அண்டு பர்மா வந்த அவர் அங்கு பல மக்கள் பிரதிநிதிகள், ஜனநாயக பிரதிநிதிகள் என்பவர்களை சந்தித்து ஜனநாயக அவசியம் பற்றி விவாதித்து வந்தார். இதன்காரணமாக ஆரம்பம் முதலே இராணுவ ஆட்சியாளர்கள் இவரை நாட்டில் வைத்திருக்க விரும்பவில்லை. அவரை நாட்டில் இருந்து வெளியேற்ற பல நடவடிக்கைகளையும் எடுத்தார்கள். குறிப்பாக வெளிநாட்டு நபர்களை மணந்தவர்கள் இந்த நாட்டின் சொந்தமானவர்கள் அல்ல, பர்மா நாட்டினர் வெளிநாட்டினரை மணப்பதற்கு எதிரான சட்டம் என அவரை மையப்படுத்தி சட்டங்களை அவர்கள் பிறப்பித்து வந்தனர்.


இந்த நிலையிலேயே 1990 ஆம் அண்டு தேர்தல் என இராணுவ அட்சியாhளர்கள் அறிவித்தபோது, ஆங் சான் சூ கீ தலைமையில் ஜனநாயகத்திற்கான தேசிய அமைப்பு அந்தத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. பிரதமராக ஜனநாயக ரீதியாக ஆங் சான் சூ கீ தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆனால் அங்கு நடந்ததுவோ ஆங் சான் சூ கீயே எதிர்பார்க்காத வகையில், இந்தத் தேர்தல் செல்லாது எனத்தெரிவித்த இராணுவம், தேர்தலை நிராகரித்ததுடன், ஆங் சான் சூ கீயையும் வீட்டுக்காவலில் வைத்தது.


1990 இல் ராஃப்டோ பரிசு, சாகரோவ் பரிசு, மற்றும் நோபல் பரிசு (1991) ஆகியவற்றைப் ஆங் சான் சூ கீ பெற்றார். 1992 இல் இந்திய அரசின் ஜவகர்லால் நேரு அமைதிப் பரிசைப் பெற்றார்.


ஆங் சான் சூ கீயின் கணவர் மைக்கல் எரிஸ் அவர்கள் 1999 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இறுதியில் அவரைக்கூடக்காணமுடியாது, தன் மகன்களையும் பிரிந்து அந்த நாட்டின் ஜனநாயக சுதந்திரத்திற்காக 1990 இல் இருந்து இன்றுவரை தவம் இருக்கின்றார் ஆங் சான் சூ கீ.


சரி, மியான்மரில் ஜனநாயகத்தை குழிதோண்டிப்புதைத்துவிட்டு இத்தனை வருடங்கள் தைரியமாக இராணுவ ஆட்சி அமைக்க உலகம் கைகட்டி வேடிக்கை பார்க்க யார் காரணம்? மியான்மருக்கு சுற்ற உள்ள நாடுகளை உற்று நோக்கினால் அது தெளிவாக புரிகின்றது. ஆம் மியான்மரிலும், ஒரு வீடு, இரண்டு திருடர்கள்தான், சீனா மற்றும் இந்தியாவே அந்த திருடர்கள்.


சீனாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அங்கு நடப்பது ஒரு கட்சியின் ஆட்சி. அவர்களுக்கும் குடியாட்சி முறைக்கும் சம்பந்தமே இல்லை. நேபாளம் மன்னராட்சியிலிருந்து குடியாட்சி முறைக்கான நிலையில் உள்ளது.இந்தியா ஒன்றுதான் மியான்மாரை அடுத்துள்ள ஒரே குடியாட்சி நாடு - இப்பொழுதைக்கு.இப்பொழுதைய மியான்மார் இராணுவ ஆட்சிக்கு முழு ஆதரவு தருவது சீனா. மியான்மாரின் இராணுவ ஆட்சியைக் குறைகூறினால், மியான்மார் முழுவதுமாக சீனாவின் பக்கம் சென்றுவிடும் என்று இந்தியா பயப்படுகிறது. மியான்மாரின் எண்ணெய் வளங்கள், பிற கனிம வளங்களுக்கு ஆசைப்பட்டு இந்தியா இவ்வாறு எண்ணுகிறது. அதேபோல சீனா, மியான்மாருடன் முழுவதுமாக ஒப்பந்தம் செய்துகொண்டால் இந்தியாவின் எல்லையை ஒட்டி கடல் முழுவதும் சீனாவின் ஆதிக்கம் இருக்கும் என்றும் இந்தியா பயப்படுகிறது.ஆனால் இராணுவ ஆட்சி மியான்மாரின் என்றுமே இருக்கும் என்று சொல்லமுடியாது. அனைத்து நாடுகளிலும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சர்வாதிகாரம் ஒழிந்து குடியாட்சி முறை வந்துதான் தீரும். மியான்மாரின் அந்தத் தருணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.நமது அண்டை நாடுகளில் நடக்கும் பிரச்னைகளில் மூக்கை நுழைக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் அடுத்த நாட்டு மக்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, எனக்குக் கொஞ்சம் பெட்ரோல் கிடைக்கிறது என்று நடந்துகொள்பவர்கள் கேவலமானவர்களே.

இருந்தபோதிலும் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா, ஆங் சான் சூ கீ விடுதலை செய்யப்படவேண்டும் என நேரடியாகவே தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கதொருவிடயமாகும். தென்னாபிரிக்காவில் இடம்பெற்றதைப்போல இனிவரும் நாட்களில் பர்மாவிலும் மாற்றங்கள் உருவாகலாம், நெல்சன் மண்டேலா போல ஆங் சான் சூ கீயும் மியான்மரில் உண்மையான மக்களாட்சியினை மலரச்செய்யலாம்.அதர்மம் நீண்டநாட்களாக ஊழிக்கூத்தாடும் அந்த தேசத்தில் ஜனநாயகத்தை எற்படுத்த, ஜனநாயக மணம் பரப்பும் உன்னத பூவான ஆங் சான் சூ கீயின் தியாங்களும். உறுதிகளும் வெற்றிபெற்று மியான்மரில் மக்களாட்சி மலரும் என நாங்களும் எதிர்பார்ப்போம்.

Friday, May 29, 2009

வணக்கம் அன்பு நெஞ்சங்களே..


தேசத்தின் எல்லைகளைக் கடந்து உலகலாவிய ரீதியில் தமிழ் நெஞ்சங்கள் பரந்துபட்டு வாழ்ந்துவரும் இந்த நிலையில் தமிழ் நண்பர்கள் பலரும் வலைப்பதிவு உலகில் காற்தடம் பதித்து தமது எண்ணக்கருத்துக்களை பதிந்துவருகின்றனர்.இந்த நிலையில் இந்த தமிழ் இணைய உலகில் நானும் தடம்பதிக்கின்றேன்.


எப்போதாவது இருந்துவிட்டு வரும் நல்ல சிந்தனைகள், நாம் மட்டுமே மனதுக்குள் தர்க்கம் செய்து எமக்குள்ளேயே செத்துப்போகும் எண்ணங்கள், செய்யவேண்டும் என நினைத்தாலும் அடடே மறந்துவிட்டேனே என எண்ணங்கள் வீணாகிப்போதல், என பல விடயங்களை நாங்களே கர்ப்பந்தரித்து, அடுத்த கணமே, கருக்கலைப்பும் செய்துவிடுகின்றோம்.


இந்த நிலையில் இந்த இடுகைகள், நம் எண்ணங்கள் சிந்தனைகளை மற்றவர்களுடன் பகிரவும், எமக்கு தெரியாதவற்றை மற்றவர்களிடமிருந்து பெறவும். சுவையான செய்திகளை மற்றவர்களுடன் பகிரவும் வகை செய்யும் என்பதில் சிறு சந்தேகமும் இல்லை.


எமக்குள்ளேயே கருக்கலைப்பு செய்யப்படும் எமது சிந்தனைகளை சுகமாக பிரசவிக்க இந்த இணையப்பதிவுகள் உதவுகின்றன. எமது சிந்தனைகள், எமது கருத்துக்களால் மறுமலர்ச்சி ஏற்படப்போகின்றது, புரட்சி வெடிக்கப்போகின்றது என்று சொல்லவரவில்லை. ஒரு சின்னவிடயம் என்றால்க்கூட, அடடா…. நான் இதை இப்படி யோசிக்கவில்லையே என எம் நண்பர்கள் எமது கருத்தினை தட்டிக்கொடுத்தாலே போதுமே…


யார்கண்டது எந்த ஆலம் வித்தில் எந்த ஆலவிருட்சம் உள்ளது என்பதை! யாராலும் சொல்லிவிடமுடியுமா என்ன?சரி…என்பதிவுகள் இதை சம்பந்தப்படுத்தி, இதை அடிப்படையாகக்கொண்டு வரும் என என்னாலேயே சொல்லமுடியாது. நேரம் கிடைக்கும்போது அந்த நேரத்தில், என்ன எண்ண ஓட்டம் மூளைக்கு கடத்தப்படுகின்றதோ அதை என் தட்டச்சு பிரசவிக்கும்….அது சிலவேளைகளில் சாகீர் ஹ_சைனின் தபேலாவாகவும் கேட்கும், சிலவேளைகளில். முதலாம்வகுப்பு பையனின் மேசைத் தட்டலாகவும் இருக்கும்.

பெரியவர் நீவிர் பொறுப்பது உம் கடன்… தொடர்ந்து பயணிப்போம்
என்றும் தோழமையுடன்
உங்கள் நண்பன் ஜனா.

LinkWithin

Related Posts with Thumbnails