Saturday, September 14, 2013

வடமாகாணசபை தேர்தலும் நாம் சிந்திக்கவேண்டியவையும்! -01



காலப்பெருவெளியில் சமுக ஓட்டகளின் மத்தியில் அடிபட்டு ஒதுங்கிநிற்கும் சமுதாயம் நாம் என்ற மிரட்சியுடன், உலகியலின் ஓட்டத்திற்கு இயல்பானதாக மட்டும் அல்லாமல் ஏதோ ஒரு திசைக்கு இழுத்துச்செயல்லப்படும் சமுதாயமாகவே நாம் உள்ளோம் என்பது வெக்கப்படாமல் நாம் ஒத்துக்கொள்ளவேண்டிய தொனியாகவே உள்ளது.
எமது தலைவிதியை நிர்ணயிக்க நாம் ஒவ்வொரு கட்டங்களிலும் யார் யாரையோ பரிதவிப்புடன் பார்த்து ஏங்கிநிற்கும் பிச்சைக்காரத்தனம் எம்மிடம் எந்தப்புள்ளியில் இருந்து வந்தது! 
எம்மை நாம் ஆண்டவர்கள், இலங்கையில் வாழும் மற்ற இனத்தவருடன் எப்போதும் ஒன்றாக வாழ்ந்தவர்கள் அல்லர், மாற்றார்களால் ஒன்றாக வாழ வைக்கப்பட்டோம், நான்கு நூற்றாண்டுகள் இடைவந்த மாற்றார்களின் ஆட்சிமுறைமைகளே எமக்கு இன்று பெரும் சிக்கல்களை தந்துவிட்டன என்பது ஒருபுறம், பின் நோக்கி வரலாற்றையும், முன்னோக்கி தொலைநோக்கத்தையும் அடைய வல்ல தலைமைத்துவம் இல்லாமை மற்றொரு புறம் என ஒரு முடிவின்றி இழுபடும் சமுதாயமாக நாம்.

இலங்கை சுதந்திரம் அடைந்த தினத்தில் இருந்து ஒரு தசாப்தத்தின் உள்ளேயே, சேர்ந்துவாழ்தல் என்பதற்கான ஆழமான கேள்விக்குறிகள் விழ ஆரம்பித்ததுதான் வரலாறு. பிரித்தானியா தனது பிரித்தாளும் தந்திரத்தில் 'சிறுபான்மைத்தமிழரை தமது அதிகாரிகளாகவும், பெரும்பான்மை சிங்களவர்களை சாதாரணர்களாகவும் வைத்திருந்துவிட்டு, தான்போகும்போது, பெரும்பான்மை சாதாரணர்களிடம் அதிகாரத்தை கையளித்துப் போனமைதான்' கொடிதிலும் கொடிது.
இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது தமிழ்த்தரப்பில் ஒரு ஆணித்தரமான தலைமை அன்றைய 1940 களில் இல்லாமையே. சேர்.பொன். இராமநாதன் அவர்கள் பிரித்தானியரிடம் மட்டும் அன்றி மகாராணியிடமே செல்வாக்கு உள்ளவராக இருந்தாலும்கூட 1930 ஆண்டு அவரது இறப்புக்கு பின்னரும், பின்னர் 50 களின் நடுப்பகுதிகளில் மிளிரத்தொடங்கிய தந்தை செல்வா, ஜீ.ஜீ.பி என்போரின் வருகைக்கும் இடையில் ஏற்பட்ட வெற்றிடம் தமிழருக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தியது என்பதை பலர் கவனிக்கத்தவறுகின்றனர்.

எமது வரலாற்றை முறைப்படுத்தி அதைக்கையில் எடுத்து, எமது உரிமைகள் பற்றி சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த நாம் தவறிவிட்டோம் என்பது மறுக்கமுடியாத உண்மை. இன்றும் வரலாற்றைக் கையில் எடுத்து தமிழ்ச்சார்பு கட்சிகள் செயற்படவில்லை, வரலாறு மிக முக்கியமானது என்பதையும் இந்த வரலாற்றினை வைத்தே பல காய்களை நகர்த்த முடியும் என்பதையும் தமிழ்த்தரப்பு முதலில் அறிந்துகொள்ளவேண்டும்.

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக தமிழர் தரப்பு சொல்வதுபோல அவர்களது அகிம்சைவழி, மற்றும் அரசியல்வழி, ஆயுத வழிப்போராட்டங்கள் என அனைத்து அஸ்திரங்களும் பாவிக்கப்பட்டதும், ஆனால் இன்று வரை அவர்களுக்கான தீர்வு என்பது கேள்விக்குறியாகவே இருப்பதும் அனைவரும் அறிந்த விடயமே. 
காலம் காலமாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும், பேச்சுவார்த்தைகளும் குப்பையில் போடப்பட்டு இந்த சமுதாயத்தின் முன்னால் நடாத்தப்படும் நாடகத்தின் ஒரு அங்கமாக இப்போது வந்து நிற்கின்றது வடமாகாணசபைத் தேர்தல்.

வடமாகாணசபைத்தேர்தலும் மக்களும்
1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பயனாக உருவானதே இந்த மாகாணசபை மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் ஆனால் பெரிய விந்தை என்னவென்றால் வடகிழக்கு மாகாண தமிழ் மக்களின் பொருட்டு கொண்டுவரப்பட்ட இந்த மாகாணசபை முறமையை வடகிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்கள் இதுவரைகாலமும் முறையாக அனுபவித்து வந்தன என்பதே.
யுத்த வெற்றியின் பின்னதாக எல்லா மகாணங்களிலும் வெற்றிக்கொடி ஏற்றிவரும் ஆளும் தரப்பு ஆரம்பத்தில் வட மாகாணசபை தமக்கு கிடைக்காது என்ற யதார்த்தத்தினை உணர்ந்து அங்கு தேர்தலை நடத்த பின்னடித்தே வந்தது என்பதும் முற்றிலும் உண்மையே. அதேவேளை இன்றைய நிலையில் தேர்;தலை அங்கு நடத்தியே தீரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட ஆளும்தரப்பு, வடக்கிலே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து தனது பங்காளிக்கட்சியான ஈ.பி.டி.பியையும் தனது சின்னத்திலேயே போட்டியிட இணைத்து தேர்தல் களத்தில் களம் இறங்கியுள்ளது. மறுபுறம் ஒரு ஊரைமட்டும் நம்பி தானும் தேர்தல்களத்தில் களமிறக்கியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி! இவையே இங்கு பிரதானம் மற்றக்கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் என்பன வேறு!!

மக்களை பொறுத்தவரையில் மிக நீண்ட நாட்களின் பின்னால் தேர்தலில் வாக்களிக்க ஒவ்வொருவரும் ஆர்வம் கொண்டிருப்பது ஒரு கவனிக்கப்படவேண்டிய விடயம். இந்த வடமாகாணத் தேர்தலில் குறைந்தது 75 வீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்பது கணிப்பீடு. இத்தோடு முதல் முதல் வாக்களிக்க உள்ளோரின் வீதமும் மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீடு, வெற்றிலை, யானை இந்த மூன்றுக்கும் வாக்குகள் இந்த மக்களிடம் இருந்து பிரதானமாக கிடைக்கும், மற்றக்கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கு விழும் வாக்கு வீதம் கண்டிப்பாக மிக மிக குறைவானதாகவே அமையும்.

வடபகுதி மக்களின் இன்றைய வாழ்வியல்
வடபகுதியில் வாழும் இன்றைய சராசரி மக்களின் வாழ்க்கையினை யதார்த்தமான பார்வையில் கவனித்தோமாயின், நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர்களின் வாழ்வியலில் பல மாற்றங்கள் உருவாகியுள்ளன என்பது உண்மை.
யுத்தத்தின் பின்னான காலத்தின் ஆரம்பத்தில் திடு திடுப்பென மாற்றமெடுத்த வாழ்வியல் மாற்ற நிலை இன்று மெதுவான ஒரு ஓட்டத்திற்கு வந்துள்ளதெனினும் சீராகவில்லை. இந்த வாழ்வியல் மாற்றங்கள் பல எதிர்மாறான பலன்களையும் அவர்களுக்கு தந்துள்ளது என்பதை மறுக்கமுடியாது.
அடுத்து முக்கியமாக ஒரு சமுதாயத்தின் வாழ்வியலில் தாக்கம் செலுத்தும் காரணி தலைமுறைகள், எமக்கான உரிமையினைப்பெறும் போராட்டத்தின் விடை கிடைக்கும் முன்னதாகவே நான்கு தலைமுறைகள் கடந்துவிட்டன என்பதே உண்மை. இந்த கால தேச வர்த்த மானங்களால் எழுந்துள்ள தலைமுறை இடைவெளி வடபகுதி வாழ்வியிலில் பெரும் முரண்பாடு ஒன்றை கொண்டுள்ளது.

பொதுவாகச்சொன்னால் ஆயதப்போராட்டத்திற்கு முன்னர் பிறந்தவர்களின் மனநிலை, ஆயுதப்போராட்டத்தின்போது பிறந்தவர்களின் மனநிலை, 1990களின் பின்னர் பிறந்தவர்களின் மனநிலை என்பன முற்றிலும் முரண்பாடுகளை கொண்டதாகவே கருத்திலும், செயலிலும் உள்ளதை ஒரு உளவியல் கண்ணேட்டததின் ஊடாக கண்டு கொள்ளமுடியும்.

வளப்பயன்பாட்டை எடுத்துக்கொண்டால் மறைமுகமாக யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வடபகுதி வளங்கள் சுரண்டப்பட்டு, ஏமாற்றப்பட்டு அல்லது அத்துமீறப்பட்டு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
கடல் உணவில் இருந்து இரும்பு, மரங்கள் வரை தொடர்சியாக தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

வர்த்தகம்.
உழைத்தலுக்கும் சேமிப்புக்கும் பெயர் பெற்றது வடபுலம். கட்டைவில் நோண்டும்போது தண்ணீர் பீச்சி வேளான்மை செய்யும் கூட்டமல்ல இவர்கள். உடல்வருத்தி வான்பார்த்து பயிரிட்டு நலக்கீழ்நீரை துலாமித்து வருந்தி உழைத்து முன்னேறிய சமுகப்பாரம்பரியம் கொண்டவர்கள் இவர்கள். 
வெள்ளையர்காலத்தில் இருந்தே கல்விநிலையில் உயர்வு பெற்று உயர்தொழில்களும்புரிந்து மெல்ல மெல்ல வர்த்தகத்திலும் கொடி நட்டு, முழு இலங்கையிலும் பெரு வர்தகர்களாக கோலாச்சியவர்கள் இவர்கள்.

இன்று.........
யுத்தம் முடிவடைந்தது என்ற அரசர்கத்தின் அறிவிப்பையும், பாதை திறப்பையும் அடுத்து தென்னிலங்கை நிறுவனங்கள் பல போட்டிபோட்டுக்கொண்டு ஓடிவந்து தங்கள் மடைகளை திறந்தன, திறந்து கொண்டு இருக்கின்றன.
'ஆசியாவின் சந்தை இலங்கை! இலங்கையின் சந்தை யாழ்ப்பாணம்!!' என்பதுதான் உண்மை. 
'நீங்கள் எதுவும் உற்பத்தி செய்யவும் வேண்டாம், விற்பனை செய்யவும் வேண்டாம், நாங்கள் தருவதை வாங்குபவர்களாக மட்டும் இருங்கள் போதும்' என நேரடியாகவே வட புலத்தாரை தென்னிலங்கை சொல்வதுபோலவே வடபுல வர்த்தகத்தின் இன்றைய நிலை உள்ளது.
முன்னொரு காலத்தில் பெருமளவு பணத்தினை சேமிப்பில் போட்டு பணமிருக்கு பொருள் இல்லை என்று சொல்லிவந்த வடபுல வர்த்தகர்களின் இன்றைய நிலை, பல நிதி நிறுவனங்களால் பரிதாபகராமாக்கப்பட்டுவிட்டது.

சாதாரணமாக மருதானார்மடம், திருநெல்வேலிச்சந்தைகளில் மரக்கறி விலைகளை தம்புள்ள மரக்கறிகளின் வரவே தீர்மானிக்கும் நிலை வந்துவிட்டது.
ஏந்தவொரு கைத்தொழில் நிலையமோ, பக்டரியோ இங்கு இல்லை, இயங்கவும் முடியாது என்ற நிலைக்கு யாழ்ப்பாண வர்த்தகம் மறைமுகமாக திட்டமிட்டு கொண்டுவரப்பட்டுவிட்டது.

தொடரும்.....

5 comments:

தனிமரம் said...

பேரினவாததுக்கு துணைபோன நம் தமிழர் நிலையினால்த்தான் இன்றைய நிலை அதே நேரம் தூரநோக்கற்ற யாழ்ப்பாண வர்த்தகர்களின் தன் நல போட்டிநிலைதான் இப்படி தென்னகச்சக்திகள் சந்தையை நிரம்பல் செய்யும் நிலைக்கு காரணம் என்பதை மறுப்பதுக்கு இல்லை! தொடரட்டும் தொடர்கின்றேன் ஐயா!

தனிமரம் said...

வீடு நிழல் தராது என்பது நிதர்சனம் ஜால்ரா கூட்டமாச்சே !என்பது என் கருத்து!

Anonymous said...

மிக நல்ல பதிவு, வடக்கின் யதார்த்த நிலவரங்களை அறிய தொடர்கின்றேன்,

Unknown said...

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, சுதந்திரக்கட்சி கூட்டணி, காரைநகரை நம்பும் ஐ.தே.க மூவருக்குத்தான் வாக்கு பலம் என்பது யதார்த்தம். தாங்கள் குறிப்பிட்ட அந்த முதல் முதல் வாககுப்போடவுள்ள இளவட்டங்களின் வாக்குகள்தான் பலவற்றை தீர்மானிக்கப்போகின்றன. காலத்திற்கு ஏற்ற பதிவு தொடருங்கள்.

ம.தி.சுதா said...

யாரப்பு இந்த கிழட்டுப் பொடியன்...

LinkWithin

Related Posts with Thumbnails