
தலைநகர் பியொங்யாங் உட்பட நாட்டில் எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது, தனியுடமை என்று அங்கு ஒன்றும் கிடையாது. அனைத்தும் அரசுடமையாகவே ஆக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பவர்கள் எல்லாம் வெருட்டி அடக்கப்பட்டனர், படுகின்றனர், அதற்கும் அடங்காதவர்கள் இல்லாமற்போகின்றார்கள். அடுத்தவேளை உணவுக்காக மக்கள் அல்லல்ப்படுகின்றார்கள். ஆனால் மாதத்திற்கு இரண்டு ஏவுகணைப்பரிசோதனைகளையும், அணுகுண்டுப் பரிசோதனையினையும் வெற்றிகரமாக நடத்தியதாக பெருமைப்பட்டுக்கொள்கின்றது வட கொரியா.
தென்கொரியப் படைகள் ஒருபுறமும் வடகொரியப்படைகள் மறுபுறமும் என 241 கி.மீ. நீளமுள்ள எல்லையை இராப்பகலாய்ப் பாதுகாத்துவருகின்றன. 38ஆம் அட்சக்கோடு உலகின் அதிகப் பாதுகாப்பு மிக்க எல்லைக் கோடாய்த் தொடர்கிறது. உலகின் கிழக்கு எல்லையில் இருந்து வடகொரியாவின் இந்த வீம்பு விளையாட்டுக்கள் உண்மையில் அமெரிக்காவுக்கும் பெரிய தலையிடியாகவே உள்ளன.
கொரியாக்களின் தோற்றம்.

சீன - ரஸ்ய எல்லையில் கிழக்கு மூலையில் உள்ள பழமைவாய்ந்த மெஞ்சூரிப்பிரதேசத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் வட பகுதியிலிருந்து சீனர்கள் குடியேறியதிலிருந்து கொரியாவின் வரலாறு தொடங்குகிறது. பல்வேறு சாம்ராஜ்யங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பிறகு 1910இல் ஜப்பானிய ஏகாதிபத்தியம் கொரியாவைக் கைப்பற்றியது. ஜப்பானின் பிடி, 1945இல் இரண்டாம் உலகப் போரில் அது தோல்வியுறும் வரை நீடித்தது. போரில் வெற்றி ஈட்டிய 'நேச நாடுகளான” அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கொரியாவைத் தத்தமது செல்வாக்குப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டன. 38 ஆம் அட்சக் கோட்டின் வடபுறம் சோவியத் யூனியனின் ஆதரவுடன் கிம் இல் சுங்கின் தலைமையில் கொம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியும் தென்புறம் அமெரிக்க ஆதரவு முதலாளித்துவ ஆட்சியும் அமைந்தன. வடபுறம் வடகொரியா என்றும் தென்புறம் தென்கொரியா என்று இரு நாடுகளாக ஆனது.
தென்கொரியாவின் அபிவிருத்தியும் வடகொரியாவின் பட்டினியும்.
தென் கொரியா சுதந்திர சந்தை பொருளாதாரத்தையும், ஏற்றுமதிக்கான தொழில்களையும் வெற்றிகரமாக பயன்படுத்தி, சில ஆண்டுகளில் பெரும் பொருளாதார வளர்ச்சியையும், வாழ்க்கை தரத்தையும் பெற்றது. அரசியல் ரீதியாக, படிப்படியாக ஜனனாயக அமைப்பை அடைந்தது. கிட்டத்தட்ட மேலைநாட்டு கலாச்சாரங்களுடனும், வசதிகளுடனும் அந்த மக்கள் உள்ளனர் என்பது உண்மையே. 1988 இல் சியோலில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தக்கூடிய அளவுக்கு அமெரிக்காவின் ஆதரவுடன் அந்த நாடு முன்னேறியிருந்தது.ஆனால் வட கொரியா கிம் என்னும் கம்யூனிச சர்வாதிகாரியின் இரும்பு பிடியில் சிக்கி, மெதுவான வளர்ச்சியை அடைந்தது. 70கள் முதல் பொருளாதாரம் தேக்கமடைந்தது. நாட்டின் வருமானத்தில் பெரும் பகுதி இராணுவ செலவிற்;காக ஒதுக்கப்பட்டது. தனியுடைமையே இல்லாதால், உற்பத்தி திறன் மிக மிக குறைவாகவும், நவீனமாகாமலும் குறைவாக இருந்தது.
வடகொரியாவில் கிம் இல் சுங்கின் ஆட்சி, 1994 இல் அவர் மரணம்வரை நீடித்தது. தொடர்ந்து அவரது மகன், இப்போதைய தலைவர் கிம் ஜாங் இல் பதவியேற்றார். தந்தை 'பெருந்தலைவர்' என்றும் மகன் 'அன்புத் தலைவர்' என்றும் அரசின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களால் அழைக்கப்படுகின்றனர். தலைவர்களால் மக்களுக்கு அவசியமான உணவுப் பொருட்கள் கிடைக்க வகைசெய்ய முடியவில்லை. 1950களில் விவசாயத்தில் அமல்படுத்தப்பட்ட கூட்டு கம்யூன் முறையும் ரேஷன் பங்கீடும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்கிறார் அரசியல் விமர்சகர் சாரா பக்லி. மிகுதியும் மலைப்பாங்கான நாட்டில் 18 வீதம் நிலமே விவசாயத்திற்கு ஏற்றதாக இருப்பதும் ஒரு காரணம். மின்சக்தி மற்றும் உரப் பற்றாக்குறைப் பிரச்சினைகள் வேறு. தவிர, வறட்சியும் வெள்ளமும் மாறி மாறித் தாக்குகின்றன. 1990இல் நாடு கடும் பஞ்சத்திற்கு உள்ளானது. பட்டினியால் மாண்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சம் வரை இருக்கும் என்கிறார் 'டைம்' செய்தியாளர் டொனால்ட் மெக்கின்டயர்.
1994 இல் கிம் இறந்தவுடன், அவரின் மகன் கிம் ஜாங் இல் சர்வாதிகாரியானர். மிக மிக கொடுங்கோலனான இவர், ‘எதிரிகள்’ பலரையும் கொன்றழித்தார். வட கொரியா விவசாயம் மிக மிக நலிவடைந்து, பஞ்சம் உருவானது. இறக்குமதி செய்ய அன்னிய செலவாணி இல்லாததால், அரசாங்கமே “கடத்தல்” மூலம் அன்னிய செலவாணியை பெற முயன்றது.பஞ்சம் தலைவிருத்தாடி, பட்டினிச்சாவுகள் நடக்கும் போதும், ஆட்சியாளர்கள், அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் உருவாக்கி குவிக்கின்றனர்.தம் மக்களை கண்டே பயந்த அரசு இது. அவர்களை முற்றாக அடிமைகளாக வைத்திருக்க மிக மிக அதிக பலம் கொண்ட இராணுவம். தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள், தம் மீது படை எடுத்துவிடும் என்று ஒரு பூச்சாண்டி காட்டியே இராணுவ செலவை குறைக்க மறுக்கும் அரசு.
வடகொரியாவின் ஏவுகணைப்பரிசோதனைகள்.
வட கொரியா அணு ஆயுதங்களை கொண்டள்ளது என்று அறிந்தகொண்ட மேலை நாடகளும் ஜப்பானும் மிகந்த எச்சரிக்கை அடைந்தன. எனினும் அவற்றைச் செலுத்த வல்ல ஏவுகணைகள் அதனிடம் இல்லை எனவும், விமானங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை ஓரளவிற்கு முன்னதாகக் கண்டறிந்துவிட முடியும். ஆனால் இந்தத் தொழில் நுட்பத்தையும் ஆயுதங்களையும் வடகொரியா யாருக்கும் வழங்கலாம் என்னும் அச்சம் பல நாடுகளுக்கும் இருந்தது. அதுவே ஐ.நா.வின் தண்டனைத் தடைகளுக்குக் காரணமாகவும் இருந்தது. சர்வதேச சமுகம் இந்த நிலைப்பாட்டில் இருந்து நேரத்தில்த்தான் வட கொரியா அடுத்தடுத்து கடலின் அடியில் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையினையினையும், அமெரிக்காவின் அலாஸ்காவரை பாயக்கூடிய ஏவுகணைகளையும் வெற்றிகரமாக ஏவி அனைவரின் வயிற்றிலும் புளியை கரைத்தது.
அணுகுண்டுப்பரிசோதனைகளும் தடைகளும்.
வடகொரியா பூமிக்கடியில் நிகழ்த்திய அணு ஆயுதச் சோதனை எழுப்பிய அதிர்வு ரிக்டர் அளவீட்டில் 4.2ஆக இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது அமெரிக்காவின் நில அமைப்பியல் துறை. இதை வைத்து வடகொரியா சோதித்த அணுகுண்டு, 1945இல் ஹிரோஷிமாவில் வெடித்த அணுகுண்டைவிட 20 மடங்கு சிறியதாக இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இது ஒப்பீட்டளவில் பலவீனமானதுதான்.
ஆனால் இந்தச் சோதனை வடகிழக்காசியாவின் பாதுகாப்பிலும் அமெரிக்காவின் செல்வாக்கிலும் சர்வதேச அணு ஆயுதக் கொள்கைகளிலும் உண்டாக்கிய பாதிப்புகள் பலமானவை. வோஷிங்டனில், பெய்ஜிங்கில், அதற்கப்பால் உலகெங்கிலும் அது உண்டாக்கிய அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை. இதை ஒரு 'வரலாற்று நிகழ்வு' என்று வர்ணித்த வடகொரியா, 'கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்புக்காக நடத்தப்பட்ட சோதனை இது' என்றும் கூறியது. ஆனால் இந்தச் சோதனையால் உலக நாடுகள் கடும் அதிருப்தியடைந்தன.
வடகொரியாவின் ஒரே சகாவான சீனாவிற்கும் இது உவக்கவில்லை போலும். மனித குலத்தைப் பெருந்திரளாய் அழிக்க வல்ல ஆயுதம் இரகசியமான ஆட்சியாளர்களிடம் இருக்குமானால், அது பேரழிவிற்கு வழிவகுக்கும் எனும் கவலை எல்லோருக்கும் இருக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு மன்றம் ஒருமனதாகவும் உடனடியாகவும் வடகொரியாவின் மீது பல தண்டனைத் தடைகளை நிறைவேற்றியது. 'ரகசிய தேசம்', 'ரவுடி ராஜ்ஜியம்' என்றெல்லாம் வர்ணிக்கப்படும் வடகொரியாவை, அதன் அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடச் செய்வதுதான் தடைகளின் நோக்கம். ஆனால் அது அத்தனை சுலபமில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது. இதற்கு முன்பும் இப்போதும் வடகொரியா எதிர்கொண்டுவரும் சர்வதேசத் தடைகளால் அதைப் பணியவைக்க முடியவில்லை. வட கொரியா மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகள்.1985இலேயே அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் (Nuclear Non-Proliferation Treaty - NPT) ஒப்பமிட்டது வடகொரியா. ஆனால் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வுகளுக்கு 1992 இல் தான் இணங்கியது. காரணம், அதுவரை அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் தென்கொரியாவில் இருந்தன.
அமெரிக்கா - வடகொரியா இடையே பரஸ்பர அவநம்பிக்கை தொடர்ந்தது. 1999 இல் பில் கிளின்டனின் அரசு ஒரு இணக்கமான சூழலுக்கு முயற்சித்தது. பொருளாதாரத் தடைகள் சிலவற்றை விலக்கிக்கொண்டது மின் உற்பத்திக்கு வழிவகுக்கும் மென்னீர் அணு உலைகள் அமைத்துத் தரவும் முன்வந்தது.
ஆனால் 2001இல் ஜோர்ஜ் புஷ் பதவியேற்றதும் அணுகுமுறை மாறியது. ஜனவரி 2002இல், வடகொரியா, ஈரான், ஈராக் ஆகியவை 'தீமையின் அச்சில் சுழலும்' நாடுகள் என்று சாடினார் புஷ். வடகொரியாவுடனான எல்லா நேரடிப் பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டன. அவ்வாண்டு இறுதியில் போங்பியான் என்னுமிடத்திலுள்ள அணு உலையில் உற்பத்தி நடப்பது தெரியவந்தது. வடகொரியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அதிகரித்தபோது, அது சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வாளர்களை வெளியேற்றியது.
அடுத்த கட்டமாக 2003 இல் வெளியேறியது. இதே ஆண்டு தென்கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடற்பரப்பில் இரண்டு ஏவுகணைகளைச் செலுத்தியது. இந்தச் சூழலில்தான் சீனாவின் முன் முயற்சியில் 2003 ஆகஸ்டில் ஆறு நாடுகளின் முதல் சுற்றுப் பேச்சு வார்த்தை பெய்ஜிங்கில் நடந்தது. இடைவெளிகள் நீடித்தபோதும் இது புதிய தொடக்கத்தைக் குறித்தது. 2004 பிப்ரவரியில் இரண்டாம் சுற்றும் ஜூனில் மூன்றாம் சுற்றும் 2005 ஜூலையில் நான்காம் சுற்றும் செப்டம்பரில் ஐந்தாம் சுற்றும் தொடர்ந்தன. ஐந்தாம் சுற்றின் முடிவில் அணு ஆயுதங்களைக் கைவிட வட கொரியா ஒப்புக்கொண்டது. ஆனால் அடுத்த சில தினங்களிலேயே கிளின்டன் அரசு வாக்களித்த மென்னீர் உலைகள் நிறுவப்பட வேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக வைத்தது. 2005 நவம்பரில் வடகொரியாவின் சில வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை அமெரிக்கா முடக்கியபோது பேச்சுவார்த்தைகள் முறிந்தன.
ஓபாமா நிர்வாகம்?
எதையும் காலமறிந்து நிதானமாக அனால் ஆழமாக இறங்கவேண்டும் என்பதில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பாரக் ஒபாமா உறுதியாக உள்ளவர் என்பது அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளின்மூலமும் வெளிப்படுகின்றது.இந்த நிலையிலேயே வடகொரியாவின் அண்மைய பரிசோதனைகள் குறித்தும், சற்று காரசாரமாகவே அவரும் விமர்ச்சித்துள்ளார். இதற்கான முழுப்பொறுப்பினையும் அவர் சி.ஐ.ஏயிடம் ஒப்படைப்பார் என அமெரிக்க வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் தடைகள், உலகநாடுகளின் தடைகள் அனைத்தும் வடகொரியா விடயத்தில் வீணான நிலையில், வடகொரியாவினுள்ளே அந்த நாட்டு மக்களின் வறுமை, வெறுப்புக்களை வைத்து ஒரு கிளர்ச்சியை ஆரம்பிக்க சி.ஐ.ஏ செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பல தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன. எது எப்படியோ. இங்கேயும் வட கொரியாவுக்கு பின்னாலே மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவிகளையும், ஆதரவையும் வழங்குவது சீனாவே என்பதை யாராலும் மறுக்கமுடியாது. தற்போதைய நிலையில் அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக எந்தவித அச்சமும் இன்றி சீனா சில நடவடிக்கைகளை தொடங்கியுள்ளமையினை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் அமெரிக்கா இதை கவனித்தாலும் கவனிக்காததுபோலவே காட்டிவருகின்றது. அனால் எதிர்வரும் காலங்களிலும் இப்படியே நடந்துகொள்ள அமெரிக்காவாலும் முடியாமற்போய்விடும். உண்மையை சொல்லப்போனால் நேரடியாகத் தெரிவது வட கொரியா என்றாலும் அங்கே உள்ளே இருப்பது சீனா தான் என பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதும் யோசிக்கவேண்டியதே.
2 comments:
Well done man....
Good article....
நானும் அவதானிக்கின்றேன். இனிவரும் உலகப்போரில் ஜெர்மனியின் பாத்திரத்தை வகிக்கப்போவது சீனாவாகத்தான் இருக்கும்.
Post a Comment