Tuesday, March 16, 2010

பங்குனித்திங்களும் பண்டித்தளச்சியும்


யாழ்ப்பாண சைவத்தமிழ் மரபில் சில தினங்களில் சில தலங்கள் மிகப்பிரசித்தமானதாகவும் குறிப்பிட்ட சில நாட்களில் யாழ்ப்பாணமே திரண்டு ஒரு இடத்தில் ஒன்றுகூடி விழா எடுப்பதும் ஒரு சிறப்பான அம்சமாகும்.தெய்வபக்தி, ஆன்மிகம் என்பவற்றைத்தாண்டி, காலகாலமாக ஒரு சமுதாய மரபு பல பரம்பரையினரிடையே கொண்டு செல்லப்பட்டு இன்றும் தொடர்ந்து கைக்கொள்ளப்படுவது இங்கு மிகச்சிறப்பான ஒரு அம்சமாகும்.

அந்த வகையில், யாழ்ப்பாண நகரில் இருந்து வட கிழக்காக தென்மராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமமே மட்டுவில் என்னும் மருதநிலம் சார் ஊராகும். அங்கு சிறப்பம்சம் பொருந்திய ஒரு தலமாக உள்ளது மட்டுவில் பண்டித்தளச்சி கண்ணகை அம்மன் தேவஸ்தானமாகும்.
தமிழில் பங்குனி மாதம் தொடங்கியவுடன், வரும் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும், யாழ்ப்பாணத்தின் மற்ற அனைத்து ஊர்களில் இருந்து ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் பெருந்தொகையான மக்கள் இங்கு வந்து குவிவது சிறப்பான ஒரு அம்சமாகும்.

பெரும்பாலும் உற்றாரும் சுற்றத்தாரும் தமது ஊர்களில் இருந்து பெரிய பொங்கல்பானைகள், பாளைகள் என்பவற்றை வாகனத்தில் எடுத்துவந்து, காலைவேளையே இங்குவந்து ஒன்றுகூடி இங்குள்ள தேவஸ்தான கேணியில் நிராடிவிட்டு, அம்பாள் தரிசத்தை முடித்துவிட்டு, பொங்கல்வைத்து, மடைவைத்து வணங்கி அனைவருடனும் பகிர்ந்து உண்டு மகிழ்வது சிறப்பான ஒரு அம்சமாக இன்றும் தொடர்ந்து இடம்பெற்றுவருவது சிறப்பம்சமாகும்.

இங்கு முக்கிமானதாக ஒன்றினை குறிப்பிடவேண்டும், ஆம் அதுதான் இந்த ஊரான மட்டுவில் என்ற ஊரினையே அடைமொழியாக வைத்து இங்கு மட்டுமே பயிரடப்பட்டு, சந்தைக்கு வரும் மட்டுவில் கத்தரிக்காய். நல்ல உறுண்டையாக வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்தக்கத்தரிக்கயை, தேங்காய்ப்பால் நிறையவிட்டு, கறிசமைத்து, வெண்பொங்கல் பொங்கி இங்கு உண்பதே பெரும்பான்மையான மக்களின் வழக்கமாக இருந்தது. இருந்தபோதிலும், இந்த இன கத்தரிக்காய்கள் இப்போது அறவே அழிந்துபோய்விட்டமை மிக மிக வேதனையான ஒரு விடயமே.

யாழ்ப்பாணத்தில் அருகிவரும், அழிந்து சென்ற பயிரினங்கள், மரங்கள்!! என்பவை பற்றி முன்னர் ஒருதடவை எழுதிய சக பதிவர் நண்பர் தங்கமுகுந்தன் அவர்கள் இது குறித்து அப்போது தகவல்களை தந்திருந்தமையினை இங்கு நினைவு படுத்துகின்றேன்.

எது எப்படியோ, பெரும்பாலான மக்கள் இன்றும் தமது மரபு மாறாது பங்குனித் திங்களுக்கு இங்கு வந்து ஒன்று கூடுவது இன்றும் தொடர்வது மனதுக்குள் சந்தோசமே. பல வகையான நேத்திக்கடன்களும் இங்கு நடைபெற்றுவருவது வழமை. காவடி, முடி எடுத்தல், குழந்தைகளுக்கு காது குத்தல், புது வாகனங்களை பூசை செய்தல் என்பவை இந்த தினங்களில் அதிகமாக இடம்பெற்றுவருகின்றன.

கடந்த பல வருடங்களாக யாழ்ப்பாணத்திற்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் இடையிலான தரைவழிப்பாதை தடை செய்யப்பட்டிந்தது. எனினும் இந்த தடவை இந்தப்பாதை 24 மணிநேரமும் திறக்கப்பட்டு, மக்கள் சுதந்திரமாக ஏனைய பிரதேசங்களுக்கும் சென்றுவருவதனால் இம்முறை அதிகமான மக்கள் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கலாம். நேற்றைய தினமே அதிகளவிலான மக்கள் வரத்தொடங்கியுள்ளமையும், தென்னிலங்கை வர்த்தகர்கள் கோவில் சுற்றாடல்களில் தமது வர்த்தக நிலையங்களை கொண்டுவந்து மடை விரித்துள்ளமையினையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

தற்போது புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் வாழ்ந்துவரும் ஈழத்து இதயங்கள் பலவற்றிலும், இந்த பங்குனித்திங்களும், பண்டத்தளச்சி கண்ணகை அம்மன் கோவில் பொங்கலும் பசுமையான ஒரு நினைவாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. நேற்றைய தினம்தான் முலாவது திங்கள் என்பதால், இன்னும் நான்கு பங்குனித்திங்கள் வர இருப்பதனாலும் மேலும் சிறப்பான தகவல்களையும் உங்களுடன் பகிர தயாராக உள்ளேன்.

8 comments:

தங்க முகுந்தன் said...

என்னடா ஆச்சரியமா இருக்கு!
கோயில் பதிவெல்லாம் போட வெளிக்கிட்டுவிட்டான்!
பரவாயில்லை நல்லாயிருக்கு!
என்ன எங்களையும் விட மாட்டியளோ?

Pradeep said...

பழைய நினைவுகள் சில வந்து கண்களை கசியவைக்கின்றது. அப்புறம் ஏன் மட்டுவில் கத்தரிக்காய்க்கு என்ன நடந்தது???

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அருமை...

சயந்தன் said...

ஐனா அண்ணாவா இது. பரவாயில்லை ஊருக்கு போனா மாறித்தானே ஆகனும்.ஆனால் எப்ப இந்த ஆன்மிக ஞானம் வந்ததை மட்டும் சொல்லவில்லையே? பதிவு அருமை அண்ணா;

Jana said...

//தங்க முகுந்தன் ///

நன்றி அண்ணர். சும்மா கோவில் பக்கமும் போவம் எண்டுதான். (விட மாட்டிங்களே)

Jana said...

//Pradeep //

ஆம் மருத்துவர் அண்ணை. இப்போதும் உங்கள் மெடிக்கல் பக்கல்ட்டி குரூப்..இந்தக்கோவிலில் வந்து கலக்கும் காட்சி என் கண்களில் இருக்கு..அப்ப நாங்க O/L படிக்கும் நேரம் அண்ணை.

Jana said...

//ஜகதீஸ்வரன் //

நன்றிகள் நண்பர் ஜகதீஸ்வரன் தொடர்ந்து இந்தப்பக்கம் வாங்கோ

Jana said...

//சயந்தன்//

நன்றி தம்பி சயந்தன். இப்ப ஆன்மீகத்தில நடக்கிற கூத்துக்களை பார்த்துதான் ஞானம் வந்திச்சு..அடடாஇவனுகளை விட கடவுளே இல்லை என்று சொல்லித்திரிந்த நாங்கள் எவ்வளவு மேல என்று

LinkWithin

Related Posts with Thumbnails