Tuesday, April 5, 2011

இலை துளிர் காலத்து உதிர்வுகள் …02

" எல்லாச்சாலைகளும் ரோமுக்குத்தான் செல்கின்றதோ என்னமோ" ! அந்தக்கால கட்டத்தில் ஈழத்தமிழர்கள் நாளாந்தம் உயிருக்கஞ்சி ஓடும் பாதைகள் எல்லாம் திடீர் மாற்றத்திற்கு உள்ளாகும் "அகதிமுகாம்களையே " சென்றடைவதாக இருந்தன.

ஓடுவார்கள் ஓடுவார்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள், கைகளில் அகப்பட்ட முக்கிய பொருட்களும், தமது உயிர்களுமே அவர்களுக்கு அப்போது சொந்தமாக இருக்கும். கெட்டதிலும் நன்மைகளாக பல நன்மைகளும் இந்த ஓட்டம்காணும் சமுதாயத்திற்கு அப்போது இல்லாமல் போனதும் இல்லை. எத்தனையோவருடங்களாக முகம்கொடுத்து பேச்சுக்கொடுக்காமல் பகமை உணர்வை மனதுக்குள் வைத்திருக்கும் பல குடும்பங்கள், இந்த அவல ஓட்டங்களில் பகைமை மறப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்ததையும் நான் கண்ணூடே கண்டிருக்கின்றேன்.

பாடசாலைகளில் ஏதிலிகளாக வந்து தங்கும் மக்களுக்கு, அடுத்த ஆபத்து தமக்குதான் என்பதையும் உணர்ந்துகொண்டு முன்னின்று அவர்களைத் தேற்றும் நடவடிக்கைகளில் அயல் ஊர் மக்கள் ஈடுபடுவதையும், அங்கே அவர்கள் தங்குவதற்கு உரிய அத்தியாவசிய உதவிகளை வழங்குவதையும் கண்டு அந்த சிறுவயத்திலேயே என்னையும் அறியாமல் கண்கசிந்துள்ளேன். இயைபாக்கம் அடைவது உலகியலில், விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்ட உண்மை என்பதை நிரூபிப்பதுபோல காலப்போக்கில், தொடர்ந்து முகம்கொடுத்துவரும் துயரங்களும், இழப்புக்களும் அவர்களுக்கு புழக்கமாகிவிட்டிருந்தன. வாழ்க்கையில் விரக்தி, நாளைகள்மீது ஏற்பட்டிருந்த நம்பிக்கையீனம், வெறுப்பு என்பன அவர்களை ஆட்கொண்டிருந்தது மட்டும் இன்றி இவை அனைத்தையும் விட மோசமான தன்மீதே தனக்கான " சுயவெறுப்பு" மனோநிலைக்கும் அவர்கள் ஆளாகியிருந்தனர்.

இந்த மக்கள் இடம்பெயர் தொடர்கள் இடம்பெறும் காலங்களில் மழைவேறு வந்துவிட்டால் இவர்களின்பாடு இன்னும் மோசமானதாகவே வந்துவிடும். இந்தக்கால கட்டங்களில்த்தான் எனக்கும் நிற்சயமற்ற ரீதியில் எப்போது பாடசாலை தொடங்கும் என்ற கேள்வி மனதில் உதித்தது. பாடசாலை இல்லாது விட்டாலும் எங்கள் வயது " அரை ரிக்கட்டுகளின்" பாடு படு சந்தோசமாகவே போய்க்கொண்டிருந்தது. எங்கும் பிள்ளைகளை வெளியில் செல்ல பெற்றோர்கள் அனுமதிப்பது கிடையாது. ஆனால் பாடசாலையில் ஆசியர்களைவிட படுமோசமாக " புத்தகத்தை எடுத்து படி" என்ற வார்த்தைகள் மட்டும் எங்கள் காதுகளுக்கு வேத மந்திரம்போல் எப்போதும் ஓதப்பட்டுக்கொண்டிருக்கும்.

நாங்களும் படித்துக்கொண்டுதான் இருப்போம். ஷெல், மற்றும் துப்பாக்கிச் சூடுகளின் மத்தியிலும், ஓடிவரும் மக்களின் அவலக்குரல்கள், உறவுகளை இழந்த மக்களின் கதறல்களுக்கு மத்தியிலும் நாங்களும் படித்துக்கொண்டுதான் இருந்தோம்.
ஏன் … எனது பெரியம்மா ஒருநாள் வந்து "இன்று காலை விழுந்த ஷெல்லில உன்னோட படிக்கிற சிறாப்பர் தனபாலசிங்கத்தின்ட மகனும் தாயும் செத்திட்டினமாம். என்று சொல்லும்போது கூட நான் படித்துக்கொண்டுதான் இருந்தேன்.

" விமலகாந்தன்"! மனது ஒருமுறை அவனது பேரை உச்சரித்துக்கொண்டது. மனதுக்குள் என்னவென்று சொல்லமடியாத ஒரு உணர்வை அப்போது உணர்ந்துகொண்டேன். " விமலகாந்தன்" என் வாழ்நாளில் குண்டுவீச்சினால் நான் இழந்த முதலாவது நண்பன்.

படிப்பு சுமார்தான், அனால் இன்றும் எனக்கு நல்ல நினைவு இருக்கின்றது அவன் நன்றாகப்பாடுவான். எங்களைப்போல் குழப்படி செய்வதில்லை. அப்போதெல்லாம் எங்களைப்போல் " நீ அவன்ர சைட்டா? எங்கட சைட்டா?" என கேள்விகள் கேட்டு " சைட்" பிரித்து அடிபடுவதில்லை. மாறாக யார் வம்புக்கும் போகாமல் அவன் பாட்டுக்கு பாடிக்கொண்டே இருப்பான் " என்ன சத்தம் இந்த நேரம்" , " தேன் மொழி என்தன் தேவி நீ" என்ற பாடல்கள் அவன் அதிகம் விரும்பி பாடும் பாடல்கள் என்பது மட்டும் இன்னமும் நினைவில் இருக்கின்றது.
ஆசிரியர்கள் வழித்துணையுடன் கைகளில் "நித்திய கல்யாணிப்பூவுடன் " அவனினதும், அவனை ஈன்ற தாயுடையதுமான சாவீட்டில் இருந்து சுடுகாடு மட்டும் சென்று அடிவயிற்றில் தீயிட்டவளுடனேயே அவனும் தீயுடன் சங்கமானது வரையான நிகழ்வுகள் இன்றும் அவ்வப்போது " கறுப்பு வெள்ளை" காட்சிகாக மனத்திரையில் வந்துவிட்டுப்போகும். கிட்டத்தட்ட என் விழிகளில் நின்று தூங்கவிடாமல் திரும்ப திரும்ப நினைவுகளில் வந்துகொண்டிருந்தான் விமலகாந்தன். மனம் அவனது இழப்பை ஏற்க மறுத்துக்கொண்டே இருந்தது. எங்கே அவன் என்னருகில் ஆவி ரூபத்தில் வந்துவிடுவானோ என்ற பயமும் என்னை சில நாட்களாக அலைக்கழிக்கத்தவறவில்லை.

அப்போதெல்லாம் நாம் செய்திகள் கேட்பதென்றால், காலையில் இந்தியச் செய்திகளைத்தான் கேட்போம். ஈழத்தமிழர்கள் படும் அவலங்கள் குறித்தும், அவர்களின் போராட்ட வெற்றிகள் குறித்தும் உணர்வோடு குறிப்பட்டு இந்தியச் செய்திகள் முழங்கிய காலம் அது. யாழ்ப்பாணத்தில் மக்கள் அனுபவித்துவரும், உணவுப்பற்றாக்குறை, மனித அவலங்கள் குறித்து அந்த செய்திகளில் முக்கியமாக செய்திகள் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கும். எங்கள் ஊரிலிருந்தும், அயல் ஊர்களிலிருந்தும் ஓடுவதற்கு இனி இடம் இல்லை என்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் " தமிழ் நாட்டிற்கு" சென்றுகொண்டிருந்தனர்.
உணவுக்கான போராட்டத்திலும் மக்கள் அப்போது ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கூட்டுறவுக் கடைகள் உள்ள வீதிகள் " இப்போது ரஜினியின் படத்திற்கு முதல்நாள் திரையரங்குகளில் கூடிநிற்கும் இரசிகளர்களைவிட" மக்கள் கூட்டம் நிறம்பி இருக்கும்.வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு, நிரம்பல் மிக்க தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய தேவை அப்போது கூட்டுறவு சங்கங்களுக்கு இருந்தன.

எங்களுக்கான உணவுகளை தந்துவிட்டு தமது பகல்கால, இராக்கால உணவுகளாக வெறும் தண்ணீரையே அகாரமாக எடுத்துக்கொண்ட பெற்றோர்கள் நிறையப்பேர் இருந்தனர்.

ஒருநாள் மதியம் எதேட்சையாக "லங்கா புவத் " என அழைக்கப்பட்ட இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் செய்திகள் காதில் விழுகின்றன. " இலங்கையின் இறையாண்மைக்கு விரோதமாக, இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுளைய முயன்ற இந்திய கடற்படையினரின் கப்பல்கள், எமது சிறி லங்கா கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டன என்பதே அந்த செய்தி.

அவசரமாக எனது பெரிய தந்தையார் ஆர்வம் மேலோங்க இந்திய செய்திகளை கேட்பதற்காக அந்த வானொலியுடன் பிரச்சினைப்பட்டுக்கொண்டிருந்தார். ஆலிந்தியா ரேடியோ ….( All India Radio) என்ற சொல்லுடன் ஆரம்பமான அந்த இந்தியச் செய்தியை அப்போது சீத்தாராம் வாசித்துக்கொண்டிருந்தார், யாழ்ப்பாணத்தில் உணவின்றி இலங்கை அரசின் இனவாத நோக்கத்திலான பொருளாதார தடையினால் அல்லலுற்றுக்கொண்டிருக்கும் மக்களின் உணவுத்தேவையினை தீர்க்கும் பொருட்டு, இந்திய கடலோர ரோந்துப்படையினரும், இந்திய கடற்படையினரும் கொண்டு சென்ற உணவுப்பொருட்களை, யாழ்ப்பாணம் கொண்டு செல்ல முடியாதென சிறி லங்கா கடற்படையினர் வழிமறிப்பு செய்து தடுத்துள்ளனர் என்பதே அந்த செய்தி. இந்த செய்தி கேட்டு (லங்கா புவத்) தென்னிலங்கையில் பட்டாசு கொழுத்தி சிங்கள மக்கள் ஆரவாரம் செய்ததாகவும் அறியமுடிந்தது.

அதே நாள் மாலை சுமாராக 4.30 மணியிருக்கும் என நினைக்கின்றேன். காதைப்பிளக்கும் ஓசைகளுடன், நாங்கள் இதுவரை கேட்டிராத சத்தத்துடன் எமது வான் பிராந்தியங்கள் மேலாக பேரோசை எழும்பியது … வழமைக்கு விரோதமான இந்த சத்தங்களும், நிலம் அதிர்வதைப்போன்ற பேரிரைச்சலும், மக்களை மேலும் பயமுறுத்தியன!
-இலைகள் உதிரும்-

18 comments:

ம.தி.சுதா said...

hot rise..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

நிரூபன் said...

பேச்சுக்கொடுக்காமல் பகமை உணர்வை மனதுக்குள் வைத்திருக்கும் பல குடும்பங்கள், இந்த அவல ஓட்டங்களில் பகைமை மறப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்ததையும் நான் கண்ணூடே கண்டிருக்கின்றேன்.//

வணக்கம் சகோ,
இதனை நானும் கண்டிருக்கிறேன் சகோ. அதுவும் இடம் பெயர்ந்து ஓடும் போது நகைகளை பொலித்தீன் பைகளுக்குள் போட்டு நிலத்தை வெட்டித் தாட்டுப் போட்டும் ஓடுவார்கள். அவசர அவசரமாக இடம் பெயர வேண்டி வந்தால் நகை, பணம், பின்னர் தான் உணவுப் பொருட்கள் என எம்மவ்ர்களின் பட்டியலே இருந்தது.

நிரூபன் said...

ஒருநாள் மதியம் எதேட்சையாக "லங்கா புவத் "//

சகோ லங்கா புவத் you mean லங்கா புளுகு:-))

நிரூபன் said...

கதை சொல்லும் பாங்கும், அதனை எழுத்துருவில் நீங்கள் எங்களோடு பகிர்ந்து கொள்ளும் விதமும் நிஜமாகவே இந்த நினைவுகளை மீண்டும் எம் மனக் கண் முன்னே கொண்டு வந்து விட்டன.

தமிழ் உதயம் said...

படிக்க படிக்க வலிக்கிறது.

ம.தி.சுதா said...

அண்ணா இது பலர் அவசியம் பார்க்க வேண்டிய பதிவு...

shanmugavel said...

முக்கியமான பதிவு ஜனா,தொடருங்கள்

சக்தி கல்வி மையம் said...

வலிகள் மிகுந்த பதிவு..

உணவு உலகம் said...

//எத்தனையோவருடங்களாக முகம்கொடுத்து பேச்சுக்கொடுக்காமல் பகமை உணர்வை மனதுக்குள் வைத்திருக்கும் பல குடும்பங்கள், இந்த அவல ஓட்டங்களில் பகைமை மறப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்ததையும் நான் கண்ணூடே கண்டிருக்கின்றேன்.//
எத்தனை ஆழமான கருத்து பதிவு. உங்கள் வலிகள் வடுக்களாகி போயின.

Chitra said...

இந்த தொடரை, நீங்கள் புத்தகமாக கொண்டு வர முயல வேண்டும்.

நிரூபன் said...

Chitra said...
இந்த தொடரை, நீங்கள் புத்தகமாக கொண்டு வர முயல வேண்டும்.//

சகோதரி சித்திராவின் இக் கருத்துக்களை நான் வழி மொழிகிறேன்.

கார்த்தி said...

எமது வரலாற்றை எல்லோருக்கும் அறிய செய்யும் தொடர்பதிவு. அழகிய எழுத்து நடை. பலரின் உணர்வுகள் இப்பதிவுடன் ஒத்துப்போகிறது..

Anonymous said...

87 களில் நான் பிறக்கவில்லை ஆனால் 96 கள் இன்றும் நினைவில் நிற்கிறது..ம்ம் 87 என்ன! 96 என்ன! வடுக்களும் வலிகளும் ஒரே மாதிரி தானே (((((

Anonymous said...

///Chitra said...
இந்த தொடரை, நீங்கள் புத்தகமாக கொண்டு வர முயல வேண்டும்.//

சகோதரி சித்திராவின் இக் கருத்துக்களை நான் வழி மொழிகிறேன்.//// நல்ல விடயம் ..

நிரூஜா said...

இந்த காலத்தில் நான் பிறந்துவிட்டேன். ஆனால் என்னை சுற்றி நடப்பவை எனக்கு வெறும் வேடிக்கையாகவே தெரிந்த காலம். சில ஞாபகம் இருக்கிறது. கண்டிப்பாக தொடர்ந்து வாசிப்பேன்.

Unknown said...

தொடர்கிறேன்..

Kaipillai said...

அருமைன பதிவு.சம்பவம் நடைபெற்ற மாதம்,ஆண்டு என்பனவற்றையும் முடிந்தால் உள்ளடக்கினால் நன்றாக இருக்கும்.

Unknown said...

//அதே நாள் மாலை சுமாராக 4.30 மணியிருக்கும் என நினைக்கின்றேன். காதைப்பிளக்கும் ஓசைகளுடன், நாங்கள் இதுவரை கேட்டிராத சத்தத்துடன் எமது வான் பிராந்தியங்கள் மேலாக பேரோசை எழும்பியது … வழமைக்கு விரோதமான இந்த சத்தங்களும், நிலம் அதிர்வதைப்போன்ற பேரிரைச்சலும், மக்களை மேலும் பயமுறுத்தியன!//

நல்லா ஞாபகம் இருக்கு பாஸ்! முதலில் பயந்து, உண்மை தெரிந்ததும் மகிழ்ந்து, எதிர்பார்த்து.... இதெல்லாம் மறக்குமா?

LinkWithin

Related Posts with Thumbnails