Friday, December 28, 2012

அது.........கணம் தப்பித்துப்போகும் மாயங்களும், சில நொடி ஒரு நிகழ்தகவின் அடிப்படையில் போட்டுப்போகும் புதிர்களுக்குள்ளும் புரிதல்கள் சிக்கித்தவிக்கின்றமையே வாழ்க்கையோட்டமாக சென்றுகொண்டிருக்கின்றது போன்ற ஒரு பிரமை. 
அவன், அவள், அவர், அவர்கள், என்பவையே உயர்திணை என்பது கண்டிப்பாக முட்டாள் மனித மனத்தின் ஆரம்பநிலை பண்புகளாகவே இருக்கவேண்டும். 
இவை தாண்டி  அது புரியும் ஜாலங்களும், ஆச்சரியங்களும், பிரமாண்டங்களும் அதையும் தாண்டி ஏன் அவற்றின் விஸ்வரூபங்களும் அவன், அவள், அவர்களை தூசிலும் சிறியர் ஆக்கிவிடும்.

மனங்களில் ஏற்படும் அவன், அவள், அவர்களுக்குள்ளான முரண்பாட்டுச்சுழற்சிகளில், அது தன்பாட்டிற்கு ஏதோ செய்துகொண்டுதான் இருக்கின்றது. இவர்களின் முரண்பாட்டு உச்சத்தில் அது தன்னைப்பற்றி இவர்களை சிறிதுநேரம் சிந்திக்கத்தூண்டுவதும் உண்டு, அச்சமூட்டுவதும் உண்டு, மகிழ்வூட்டுவதும் உண்டு.
ஆனால் என்ன உயர்திணை எண்ணங்கள் அதை அகிறிணையாக்கி தமக்குத்தாங்களே மகுடம் சூட்டிக்கொண்டிருக்கின்றனர்.
'பிரமித்துப்போபவனே பாக்கியசாலி' என்ற மனநிலையில் ஆதியில் அவன், அவள் அவர், அவர்கள் இருந்தனர். 
இன்று 'பிரமாண்டங்களே எமைக்கண்டு பிரமிக்கவேண்டும்' என்ற எண்ணத்தில் அவர்தம், உயர்திணை வீரிய எச்சங்கள் கொக்கரிக்கின்றனர்.

பிரபஞ்சமையத்தின் திசை கெட்டு நிற்கும் ஏதோ ஒரு புள்ளியில் எங்களின் வாழ்விடம். மனித வெற்றுக்கண்ணிற்கும் புலப்படும் பிரபஞ்சவெளியின் தென்படும் அத்தனை வெள்ளொளிகளிலும் ஏதோ ஒரு ரகசியம் பொதிந்திருக்கத்தான் வேண்டும். இல்லை அத்தனையும் காட்சிப்பிழை என்ற ஒற்றைவரி வியாக்கியானங்களும் உயர்திணையாகிவிடுவதும் உண்டு.
'காரணங்கள் இன்றி எந்த காரியங்களும் இல்லை' என்பதை அது பல தடவைகளில் உயர்திணையாருக்கு உபதேசிப்பதும் உண்டு.

அவன், அவள், அவர், அவர்கள், ஒழுங்காக்கப்பட்டது! நாகரிகம் எனப்பட்டது.
அது ஓழுங்காகவே இருந்தது, ஒழுங்காகவே இருக்கின்றது, ஒழுங்காகவே இருக்கும் இதில் பெரும்பாலும் மாற்றங்கள் இருந்ததில்லை. 
ஆனால் அதுவின் சிறு ஒழுங்கீனமே அவன், அவள், அவர், அவர்களை ஒழுங்கீனமான ஓலங்களாக்கிவிடமுடியும்.

அது பற்றிய அச்சம் குறித்த ஒரு ஒழுங்கீனத்தாலும், அதன் பின்னும் உயர்திணைக்கு வரும். அது வல்லது என்ற பேருண்மையும் ஆழ்மனதிற்கு அடிப்படையாகப்புரியும், இருந்தாலும் அவன், அவள், அவர், அவர்கள், உயர்ந்தவராகவே...

ஆனால் அந்த அது.....
பிரபஞ்சம், அகிலம், இயற்கை, நியதி, விதி, கடவுள்... எதுவானாலும்
அது அஃறிணையாகவே இருக்கட்டும்.

8 comments:

ramesh sivagnanam said...

அது உயிர்ப்புள்ளதாய் உள்ள அஃறிணை. மீண்ட எழுத்துக்கு வித்தான "அது" க்கு நன்றி.

மைந்தன் சிவா said...

வரவேற்கிறோம் மீண்டும்!! கலக்குங்க

தனிமரம் said...

நீண்டநாட்களின் பின் அதுபோலவே அழகாய் வாருங்கள் தொடர்ந்து ஒளியோடு அதுவுடன்!:)))

♔ம.தி.சுதா♔ said...

இப்படி ஒரு ஆசான் அன்றே உயர்திணை அஃறிணையை விளக்கியிருந்தால் நான் எங்கேயோ போயிருப்பேன் அண்ணா

Jana said...

@ramesh sivagnanam
நன்றி தாமஸ்.
அது உயிர்ப்புள்ளதாய் உள்ள அஃறிணை ம்ம்ம் நல்லாத்தான் இருக்கு

Jana said...

@ மைந்தன் சிவா
நன்றி மைந்தன்

Jana said...

@தனிமரம்
நன்றி நேசன்
நன்றி

Jana said...

@ ♔ம.தி.சுதா♔
நன்றி சுதா.....
ம்ம்ம்......... குசும்பு :)

LinkWithin

Related Posts with Thumbnails