Saturday, May 30, 2009

ஒரு ஜனநாயகத்திற்கான பத்தொன்பது வருட தவம் ஆங் சான் சூ கீ.


இந்த உலகம் நாகரிகம் அடைந்துவிட்டதா? உலகில் எந்த நாட்டிலாவது உண்மையான ஜனநாயகம் காணப்படுகின்றதா? என்ற கேள்விகளை கேட்டால் அதன் உண்மையான பதிலாக இருக்கப்போவது, இல்லை.. என்ற அழுத்தமான குரலே. ஒரு இனத்தின் அழிவு, பல இனங்களின் உரிமைப்போர் என்பவற்றையே தங்கள் சுய இலாபங்களுக்காக மறுதலித்துவிட்டு, மனித உரிமைகள் என்பவற்றையே தங்கள் எண்ணபடி வழைத்துப்போடுவதுமாக உள்ள இந்த உலகம் உண்மையில் நாகரிகத்தை எட்ட ஒருபோதும் முடியாது.

உலகநடப்புக்கள் சில விநோதங்களை உடையதாகவும், ஏன்? எதற்கு? எப்படி? என்ற சிந்தனைகளுக்கு அப்பாலும் சென்று நடந்துவருகின்றன. சில வர்க்கத்திற்கும், சில நாடுகளுக்கும், சில கொள்கைகளுக்கும் ஒத்து ஊதுபவர்கள், உலகமே தலையில் வைத்து கொண்டாடப்படும் நபர்களாக, உலகம் முழுவதும் காட்டப்படுகின்றனர். உண்மையான கதாநாயகர்களோ, பயங்கரவாதி, தீவிரவாதி, கைதி, கிளர்ச்சியாளன், சதிகாரன் என இன்னோரன்ன பெயர்களை சுமந்து நிற்கின்றார்கள்.

ஓரு நாட்டின் ஜனநாயகத்திற்காக பத்தொன்பது வருடங்களாக, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு பெண், அதுவும் ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் பேராதரவு பெற்று பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட பெண், உலகின் அதி கொளரவ முக்கிய விருதான உலகமே திரும்பிப்பார்க்கும் நோபல்பரிசை ஜனநாயகத்திற்காக பெற்ற பெண், இத்தனை இருந்தும் அவளின் விடுதலைக்காகவும், அவள் நாட்டின் ஜனநாயகத்திற்காகவும் இன்றுவரை எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது இந்த உலகம்.சரி…இது பற்றி சற்று ஆழமாகப்பார்ப்போம்…

இரண்டாம் உலகப்போரின் பின்னர் பிரித்தானியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டமைக்கு அமைவாக 1948 ஆம் ஆண்டு பர்மாவுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது. அனால் அந்த நாடு பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம்பெற்று 14 அண்டுகள்தான் அங்கு கொஞ்சமாவது ஜனநாயகம் இருந்ததாக கொள்ளமுடியும். 1962 ஆம் ஆண்டு பர்மாவில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அன்றிலிருந்து இன்றைய தினம் வரை பர்மாவின் தலையெழுத்தே இராணுவத்திடம்தான் இருந்துவருகின்றது.இருந்தபோதிலும் நீண்டகாலத்தின் பின்னர் திடீர் ஞானோதயம் போல, 1990 அம் ஆண்டு ஜனநாயக முறைப்படி ஆட்சி நடக்க தேர்தல் நடத்துவோம் என அறிவித்து, அதன்பிரகாரம், ஆங் சான் சூ கீயின் கட்சி இந்தத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்றது.இருந்தபோதிலும் இந்தத் தேர்தல் செல்லாது என அறிவித்த இராணுவம் தேர்தலையும், ஜனநாயக ஆட்சி முறையினையும் நிராகரித்ததுடன், ஆங் சான் சூ கீயை வீட்டுக்காவலில் வைத்தது.அதே ஆண்டிலேயே பர்மா இராணுவம் தனது நாட்டை மியான்மர் எனப் பெயர்மாற்றியது. நாட்டின் தலைநகர் ரங்கூன் - யாங்கூன் என மாற்றப்பட்டது.

ஆங் சான் சூ கீ.

பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியில் பதவியில் இருந்த ஜெனரல் அங் சானுக்கு மூன்றாவது புதல்வியாக 1945 அம் அண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி பிறந்தவர் ஆங் சான் சூ கீ. இவருக்கு இரண்டு அண்ணன்மார்கள். இவரது பெயரிலேயே அவரது பெற்றோர் மற்றும் பாட்டியின் பெயர் அடங்குவதாகவே இவருக்கு பெயர் சூட்டினார் ஜெனரல் ஆங் சான். ஆங் சான் என்பது அவரது தந்தையின் பெயர், கீ என்பது (கின் கீ) அவரது தயாருடைய பெயர், சூ என்பது அவரது பாட்டியாரின் பெயர். சிறுவயத்தில் தமது ஆரம்பக்கல்வியினை ரங்கூனில் உள்ள ஆங்கில கத்தோலிக்கப் பாடசாலையில் கல்விகற்றார் ஆங் சான் சூ கீ.


பின்னர் தனது பட்டப்படிப்பை இந்தியாவின் தலைநகர் டில்லியில் உள்ள லேடி சிறி ராம் கல்லூரியில் கற்ற அவர், பட்டமேற்படிப்பை ஹக்ஸ் கல்லூரி ஒக்ஸ்போர்ட்டிலும், பின்னர் தமது கலாநிதி ஆய்வினை லண்டன் பல்கலைக்கழகத்திலும் முடித்துக்கொண்டார்.
1972ஆம் அண்டு பிரித்தானியரான டொக்ரர்.மைக்கல்; எரிஸ் என்பரை மணந்த ஆங் சான் சூ கீ. சிறிது காலம் லண்டனில் வசித்து வந்தார். அதே சமயம் இரண்டு அண் குழந்தைகளுக்கும் தாயாராக அவர் வாழ்க்கையினை நடத்தினார்.இந்த வேளையில் 1988 அம் ஆண்டு ஆங் சான் சூ கீ பர்மாவுக்கு திரும்பியிருந்தார்.சிறுவயதில் இருந்தே ஜனநாயகத்தின் மீது அதீத பற்றுக்கொண்டவராக இருந்த ஆங் சான் சூ கீ, தனது தாய் நாட்டில் ஜனநாயகம் ஏற்படவேண்டும். அதற்கு தம்மாலான எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ண ஓட்டத்திலேயே இருந்தார். 1988 ஆம் அண்டு பர்மா வந்த அவர் அங்கு பல மக்கள் பிரதிநிதிகள், ஜனநாயக பிரதிநிதிகள் என்பவர்களை சந்தித்து ஜனநாயக அவசியம் பற்றி விவாதித்து வந்தார். இதன்காரணமாக ஆரம்பம் முதலே இராணுவ ஆட்சியாளர்கள் இவரை நாட்டில் வைத்திருக்க விரும்பவில்லை. அவரை நாட்டில் இருந்து வெளியேற்ற பல நடவடிக்கைகளையும் எடுத்தார்கள். குறிப்பாக வெளிநாட்டு நபர்களை மணந்தவர்கள் இந்த நாட்டின் சொந்தமானவர்கள் அல்ல, பர்மா நாட்டினர் வெளிநாட்டினரை மணப்பதற்கு எதிரான சட்டம் என அவரை மையப்படுத்தி சட்டங்களை அவர்கள் பிறப்பித்து வந்தனர்.


இந்த நிலையிலேயே 1990 ஆம் அண்டு தேர்தல் என இராணுவ அட்சியாhளர்கள் அறிவித்தபோது, ஆங் சான் சூ கீ தலைமையில் ஜனநாயகத்திற்கான தேசிய அமைப்பு அந்தத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. பிரதமராக ஜனநாயக ரீதியாக ஆங் சான் சூ கீ தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆனால் அங்கு நடந்ததுவோ ஆங் சான் சூ கீயே எதிர்பார்க்காத வகையில், இந்தத் தேர்தல் செல்லாது எனத்தெரிவித்த இராணுவம், தேர்தலை நிராகரித்ததுடன், ஆங் சான் சூ கீயையும் வீட்டுக்காவலில் வைத்தது.


1990 இல் ராஃப்டோ பரிசு, சாகரோவ் பரிசு, மற்றும் நோபல் பரிசு (1991) ஆகியவற்றைப் ஆங் சான் சூ கீ பெற்றார். 1992 இல் இந்திய அரசின் ஜவகர்லால் நேரு அமைதிப் பரிசைப் பெற்றார்.


ஆங் சான் சூ கீயின் கணவர் மைக்கல் எரிஸ் அவர்கள் 1999 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இறுதியில் அவரைக்கூடக்காணமுடியாது, தன் மகன்களையும் பிரிந்து அந்த நாட்டின் ஜனநாயக சுதந்திரத்திற்காக 1990 இல் இருந்து இன்றுவரை தவம் இருக்கின்றார் ஆங் சான் சூ கீ.


சரி, மியான்மரில் ஜனநாயகத்தை குழிதோண்டிப்புதைத்துவிட்டு இத்தனை வருடங்கள் தைரியமாக இராணுவ ஆட்சி அமைக்க உலகம் கைகட்டி வேடிக்கை பார்க்க யார் காரணம்? மியான்மருக்கு சுற்ற உள்ள நாடுகளை உற்று நோக்கினால் அது தெளிவாக புரிகின்றது. ஆம் மியான்மரிலும், ஒரு வீடு, இரண்டு திருடர்கள்தான், சீனா மற்றும் இந்தியாவே அந்த திருடர்கள்.


சீனாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அங்கு நடப்பது ஒரு கட்சியின் ஆட்சி. அவர்களுக்கும் குடியாட்சி முறைக்கும் சம்பந்தமே இல்லை. நேபாளம் மன்னராட்சியிலிருந்து குடியாட்சி முறைக்கான நிலையில் உள்ளது.இந்தியா ஒன்றுதான் மியான்மாரை அடுத்துள்ள ஒரே குடியாட்சி நாடு - இப்பொழுதைக்கு.இப்பொழுதைய மியான்மார் இராணுவ ஆட்சிக்கு முழு ஆதரவு தருவது சீனா. மியான்மாரின் இராணுவ ஆட்சியைக் குறைகூறினால், மியான்மார் முழுவதுமாக சீனாவின் பக்கம் சென்றுவிடும் என்று இந்தியா பயப்படுகிறது. மியான்மாரின் எண்ணெய் வளங்கள், பிற கனிம வளங்களுக்கு ஆசைப்பட்டு இந்தியா இவ்வாறு எண்ணுகிறது. அதேபோல சீனா, மியான்மாருடன் முழுவதுமாக ஒப்பந்தம் செய்துகொண்டால் இந்தியாவின் எல்லையை ஒட்டி கடல் முழுவதும் சீனாவின் ஆதிக்கம் இருக்கும் என்றும் இந்தியா பயப்படுகிறது.ஆனால் இராணுவ ஆட்சி மியான்மாரின் என்றுமே இருக்கும் என்று சொல்லமுடியாது. அனைத்து நாடுகளிலும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சர்வாதிகாரம் ஒழிந்து குடியாட்சி முறை வந்துதான் தீரும். மியான்மாரின் அந்தத் தருணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.நமது அண்டை நாடுகளில் நடக்கும் பிரச்னைகளில் மூக்கை நுழைக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் அடுத்த நாட்டு மக்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, எனக்குக் கொஞ்சம் பெட்ரோல் கிடைக்கிறது என்று நடந்துகொள்பவர்கள் கேவலமானவர்களே.

இருந்தபோதிலும் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா, ஆங் சான் சூ கீ விடுதலை செய்யப்படவேண்டும் என நேரடியாகவே தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கதொருவிடயமாகும். தென்னாபிரிக்காவில் இடம்பெற்றதைப்போல இனிவரும் நாட்களில் பர்மாவிலும் மாற்றங்கள் உருவாகலாம், நெல்சன் மண்டேலா போல ஆங் சான் சூ கீயும் மியான்மரில் உண்மையான மக்களாட்சியினை மலரச்செய்யலாம்.அதர்மம் நீண்டநாட்களாக ஊழிக்கூத்தாடும் அந்த தேசத்தில் ஜனநாயகத்தை எற்படுத்த, ஜனநாயக மணம் பரப்பும் உன்னத பூவான ஆங் சான் சூ கீயின் தியாங்களும். உறுதிகளும் வெற்றிபெற்று மியான்மரில் மக்களாட்சி மலரும் என நாங்களும் எதிர்பார்ப்போம்.

7 comments:

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

உங்களை Facebook இல் தமிழ்வட்டம் வாயிலாக நான் அறிவேன். உங்களுக்கு எழுத்து நடை கைவரப்பெற்றுள்ளது. எமது இனம், எமது விடுதலைப்போராட்டம் என்று எங்கள் சோகங்களை மட்டும் சுமக்கும் எமக்கு, பிற இனத்தவர்களின், வித்தியாசமான போராட்டங்களையும் தந்ததுக்கு நன்றி. உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.
நட்புடன்
மே.நாதன்.

Jana said...

தங்கள் கருததுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நாதன்.
தாங்கள் முதலில் அனுப்பியிருந்த கருத்தினை பதிவில் ஏற்றமுடியாது. அதற்காக நான் மனம்வருந்துகின்றேன்.

Unknown said...

அங்கும் இந்த கேடுகெட்ட இந்தியாவும், கிழ்தரமான சீனாவும் சேர்ந்துதான் அதர்மத்தின் பக்கம் நிற்கிறாங்களோ?

Unknown said...

ஒபாமா நேரடியாகவே அவர் விடுவிக்கப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளது கொஞ்சம் ஆறுதல் தருகின்றது. விரைவில் இவர் விடுதலை செய்யப்பட்டு அங்கு ஜனநாயகம் மலரவேண்டும்.

balavasakan said...
This comment has been removed by the author.
தர்ஷன் said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்
ஆனால் ஜனா மேற்கத்தைய நாடுகள் சூ கியை தூக்கிப் பிடிக்க காரணம் அவரூடாக ம்யன்மாரில் கால் பதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி பின் அங்குள்ள இயற்கை வளங்களை சூறையாடும் பொருளாதார நோக்கத்துக்காகவே. இதனாலேயே ராணுவ அரசு பெருமளவில் சீனா போன்ற ஆசிய நாடுகளைச் சார்ந்திருக்கிறது.
எனினும் அடக்கு முறைக்கெதிராக போராடி பதினைந்து வருடங்களை வீட்டுக் காவலில் கழித்தவர் என்ற வகையில் ஆங் சாங் சூ கி பாராட்டுக்குரியவரே

sorry ஜனா நீங்கள் மீண்டு வந்ததன் பின்தான் நீங்கள் சுகவீனமுற்று இருந்ததை அறிந்தேன் இப்போது நலமா?

LinkWithin

Related Posts with Thumbnails