
சென்னையில் நான் இருந்த பெசன்ட் நகரை அண்டிய ஒரு கடற்கரை மைதானம், நண்பர்கள் பட்டாளம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பெருகிவிட்டதனால், திடீர் என்று காற்பந்து விளையாடுவதாக உத்தேசிக்கப்படுகின்றது. உடனடியாக 'கப் கலக்ஸன்' போட்டு காற்பந்து ஒன்றும் வாங்கிவரப்படுகின்றது அந்த கடற்கரைக்கு..
இச்சம்பவம் நடக்கும்போதே பதிவராக இருந்த சமுத்திரன், பின்னர் என்போல பதிவர்களாகி தவறணைபோட்டு அனைவரையும் வெறியாடவைத்த டிலான், ஒன்று இரண்டு பதிவு எழுதினாலும், மிக மிக ஆழமாக எழுதியதுடன் சிறுகதைப்போட்டியிலும் வெற்றிபெற்ற சஜந்தன் ஆகியோரும் விளையாடுவதற்கு தயாராகவே இருந்தனர்.
மிக உச்சாகமாக விளையாட்டு தொடங்கியது, கிட்டத்தட்ட 18 பேர் ஒன்பது பேர் ஒரு அணிக்கு என பிரிந்து விளையாடுகின்றோம். எம் அணி இரண்டு கோல்கள் போட்டு முன் நிலையில் இருக்கு...திடீர் என மற்ற பக்கம் கோல் போஸ்ட்டுக்கு கிட்ட பந்து கொண்டு செல்லப்படுகின்றது.
வயது 31 ஆகிவிட்டாலும், மனசு 19 இல் நின்றபடியால், உற்சாகமிகுதியில் ஓடிச்சென்று கோல் போஸ்ரின் நேர் எதிர்ப்பக்கம் பந்தை ஓங்கி அடிக்கும் நோக்கில் முன்னேறி, ஓடுகின்றேன், அதேவேகம், அதே உதை ஆனால் தவறுதலாக பந்தின் உச்சிமேல் என்கால் ஊன்றப்படுகின்றது, ஓட்டவேகம் மறுபக்கம், கால் அப்படியே சரிகின்றது. ஓடியவேகத்திற்கும், பந்து காலை திருப்பிய திசைக்கும் இடையில் தடுமாறி விழுகின்றேன்.
வலி தாங்கமுடியாமல், காலை பார்க்கின்றேன். இடதுமுழங்காலுக்கு கீழே கால் திரும்பியிருந்தது. பின்னர் ஆஸ்பத்திரி, எஸ்ரேக்கள், கட்டுக்கள், என்று எழுந்து நடக்கமுடியாமல் இருந்தேன். இந்த நேரத்தில் நிகழ்த்தப்பட்டதுதான் என் வலையுலகப்பிரவேசம்.
சத்தியமாக ஒரு வலையினை எப்படி உருவாக்குவது என்பதுகூட தெரியாது.
ஏதோ கூகுல் தெய்வத்துக்கிட்ட கேட்டு கேட்டு ஒருமாதிரி, ஒப்பேத்தி 'என்னை நானே செதுக்கும் போது' என்று தலையங்கம்போட்டு செம்மஞ்சள் கலரிலை ஒரு எனக்கான புளக்கரை தொடங்கினேன்.
சோ... என் வலைப்பிரவேசம் ஒரு விபத்து அல்ல விபத்தினால் உருவானது.
அப்ப எப்படி டைப்பிங், ஆரம்பத்திலேயே உலக விடையங்கள், காத்திரமான விடையங்களை எழுதக்கூடியதாக இருந்தது என்று நண்பர்களுக்கு கேள்வி எழலாம். உண்மையில் என் இணையப்பிரவேசம், இணைய எழுத்து என்பன 2002ஆம் ஆண்டு ஆரம்பமாயிருந்தது.(எழுதுவது மட்டும்தான் அதை இணையேற்றுவது இன்னும் ஒரு நண்பன்) அந்த காலத்தில் இருந்து அனேகமாக அரசியல் கட்டுரைகள், ஆய்வுகள், முக்கிமான உலக அரசியல் அசைவுகள் என்பவற்றை எழுதிவந்தேன்.
(கல்கி, மேகநாதன், நல்லூரான் என்ற பெயர்களில்;) அந்த நேரம் மூன்று நண்பர்கள் சேர்ந்து அந்த இணையத்தை நடத்திவந்தோம், இளையதம்பி தயானந்தா அவர்கள், விமர்சகர் ராஜாஜி, தராக்கி, சிரேஸ்ர ஊடகவிலாளர் மரியதாஸ் மாஸ்டர், போன்றோர் எம் எழுத்துக்களுக்கு பசளையாக இருந்தனர். இதை இதை இப்படி இப்படித்தான் எழுதவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
ஆனால் வலையுலகத்திற்கு நான் வந்ததும், என் எழுத்துப்பாணியை மிக இயல்பானதாக ஆக்க பெருமுயற்சி எடுத்து, இயல்பானதாக்கினேன். எனினும் சில நண்பர்கள் ஆரம்பத்தில் இதை பெரும் ஆச்சரியமாகவே பார்த்தனர். இருந்தாலும் சிறிது நாட்களிலேயே இயல்பான நடைக்கு என் எழுத்துக்களை கொண்டுவந்தேன்.
எத்தனை நாள் கனவு கண்டு கண்ணீரால், தியாகங்களால், இரத்தங்களால் கட்டப்பட்ட ஒரு சாம்ராஜ்யமே வீழ்ந்துபோன மனம் வெடிக்கும் வேதனைகள், அழுகைகள், இத்தனையும் மீறிய ஒரு இயலாமை, சுயவெறுப்பு என்பவற்றோடுதான் வலையில் விழுந்தேன். எழுதுவது எழுதுகின்றோம் எவனுக்காவது எப்போதாவது பிரயோசனையாக எழுதுவோம் என்ற குறிக்கோளுடன் எழுத்துக்கள் ஆரம்பமாகின.
பலர் பயப்படும் விடையங்களைக்கூட பயப்படாமல் எழுதினேன்.

சமுக இணைய தளங்களில் நான் பகிர்வதை என் நண்பர்கள் பார்த்து கருத்துரைப்பது, சென்னையில் நடைபெறும் இலக்கிய கூட்டங்களுக்கு செல்வதால் அறிமுகமான நண்பர்களுக்கு லிங்குகளை கொடுப்பது மட்டுமே அப்போது நடந்தது.
அதேநேரம் குறும்பட தயாரிப்பு பக்கம் மனம் திரும்பியது. அது சம்பந்தமான தேடல்களில் ஈடுபட்டு, அத்துறையில் ஈடுபட்டவர்களின் நட்புகள் கிடைத்தன. அதில் சில வலையுலக நண்பர்களின் அறிமுகம்.
முக்கியமாக கேபிள் சங்கர் அண்ணா, பட்டர்பிளை சூரியா அண்ணா அகியோரின் நட்பு கிடைத்தது. அவர்களின் வலைகளுக்கு செல்ல ஆரம்பித்து, அந்த நேரம் மரீனாவில் இடம்பெற்ற மழைநாள் பதிவர் சந்திப்பிலே பல இனிமையான நண்பர்களை சந்தித்தேன்.
பதிவுலகின் இன்னுமொரு போனஸ் அருமையான நட்பு என்பது அப்போது புரிந்தது, நிலாரசிகன், அடலேறு, எவனோ ஒருவன், மணிஜீ, ஊரோடி...இப்படி அந்த வட்டம் பெருக்கெடுத்தது.

இந்த நட்புகளால் பதிவுலகம், திரட்டி, மற்றய பதிவர்களுக்கு பின்னூட்டம், அப்படி என்று பல விடையங்கள் தெரியவந்தன. பதிவுலகம் மட்டுமின்றி இன்ப தும்பங்களில் பங்கெடுத்து, தேவையான நேரங்களில் உதவிகள் புரியும் உன்னதமான நட்புக்கள் கிடைத்தன.
அதேவேளையில்த்தான் பல்கலைக்கழக முடிவுகள் வெளியாகியிருந்தன, சிறப்பு என்ற அடைமொழியுடன் முடிவுகள் வெளியாகின. நான் அதைபோய் பார்ப்பதற்கு முன்னதாகவே எவனோ ஒருவன், அடலேறு போன்றவர்கள் முடிவுகளை ஏற்கனவே பார்த்துவிட்டு என்னை பாராட்டி அழைப்பெடுத்திருந்தனர்.
அந்த நேரம் எனக்கு ஒரு அழகான மகள் உதயமானபோதுகூட குடும்பத்தில் ஒருவர்களாக மருத்துவமனைவந்தே என்னை வாழ்த்தி அணைத்து நட்பில் திக்குமுக்காடச்செய்தனர்.
ஒரு கட்டத்தில் வயதான விதண்டாவாதம் செய்யும் பதிவர் ஒருவர், ஈழப்பிரச்சினை தொடர்பில் என்னுடன் வேண்டுமென்றே மல்லுக்கு நின்றார். நான் அவரை நேருக்கு நேர் நின்று காதுகூச பேசும் அளவுக்கு அவரது செயற்பாடுகள் இருந்தன.
அந்த வேளைகளில்க்கூட இலங்கை, தமிழ்நாடு என்று பிரித்து பாராமல் நியாயத்தின் வழி நின்று எனக்காக அவருடன் வாதிட்டவர்கள் அவர்கள்.
அப்படி இருந்தும்கூட சில நண்பர்கள் இலங்கை பதிவுலகம், பதிவர்கள் பற்றி மென்மையாக சில செயல்பாடுகளை சொன்னாலும் அவர்களிடத்தில்க்கூட நான் எப்போதும் இலங்கை பதிவர்களை விட்டுக்கொடுத்து பேசியது கிடையாது.
இந்த கட்டங்களில் இலங்கை பதிவர் என எனக்கு முதல் முதல் அறிமுகமானவர் தங்க முகுந்தன் அண்ணா. அவருடனும் வாதங்களில் தொடங்கியே இன்றுவரை இணைபிரியாத நட்பாக அது தொடர்கின்றது. தனது பதிவு ஒன்றிலே பதிவர் டிலான் சுட்டிக்காட்டியதுபோல நேர் எதிர் கருத்துக்களை உடைய அவரும் நானும் இன்றுவரை உற்ற நண்பர்களாக இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றுதான்.
தங்கமுகுந்தன் அண்ணா மூலம் இலங்கை சம்பந்தமான திரட்டி ஒன்று எனக்கு அறிமுகமாகின்றது. இலங்கை பதிவர்கள் பக்கம் பார்க்கின்றேன். படிக்கின்றேன்.
உண்மையை சொல்லப்போனால், அந்த நேரத்தில் ரமணன், அசோக்பரன், லோஷன் ஆகியோரின் பதிவுகளை நான் அதிகம் படிப்பதுண்டு. முக்கிமாக அசோக்கின் எழுத்துக்கள்மேல் அப்படி ஒரு ஈர்ப்பு எனக்கு வந்தது. மூவருக்கும் சிறப்பான பதிவுகளுக்கு அடிக்கடி பின்னூட்டங்களை அவ்வப்போது இட்டுவந்தேன். ஆனால் ரமணனை தவிர நான் ஒரு இலங்கைப்பதிவாளன் என்பதை யாரும் அப்போது அறிந்திருக்க நிஜாயம் இல்லைத்தான்.
பின்னர் இலங்கையில் முதலாவது பதிவர் சந்திப்பு நடக்கின்றது என்ற அறிவிப்பை தொடர்ந்து பல பதிவர்களின் பெயர்கள் அறிமுகமானது. அவர்களின் பதிவுகளையும் படிக்க ஆரம்பித்தேன், அந்த தேடல்களின் மூலம் வந்தியத்தேவன், மருதமூரான் ஆகிய இருவரினதும் தளங்கள் நான் அடிக்கடி செல்லும் தளங்கள் ஆகின.
உண்மையை சொல்லவேண்டும் என்றால் நான் அவர்களின் பதிவுகளை அப்போது வாசித்தாலும்கூட சிலவற்றுக்கு பின்னூட்டம் இட்டால்க்கூட அவர்கள் நம்மை கவனிக்கவில்லையே என்ற ஈகோவில் நானும் பின்னூட்டம் இடுவதில்லை. (இப்ப அந்த ஈகோ இல்லை என்று இல்லை இப்பவும் இருக்கு)
ஆனால் சில ஆணித்தரமான பதிவுகள் அவர்களிடமிருந்து வரும்போது அந்த ஈகோ எல்லாம் சுக்குநூறாக உடைந்து மூந்திப்போய் பின்னூட்டம் இடுவதும் உண்டு.
ஆனால் அனைவருக்குமே ஒரு விடையம் தெரியும் பொறாமை என்பது என்னிடம் துளியளவும் இல்லை. எனது எழுததுக்கள் மீது எனக்கு அசைக்கமுடியாத கர்வம் இருக்கும்போது எப்படி மற்றவர்கள்மீது பொறாமை வருவது?
இந்த நிலையில் மீண்டும் தாயகம் வருகின்றேன். இங்குவந்து உடனடியாக பதிவுகளை ஆரம்பிக்கவில்லை. வேலைதேடும் படலத்தில் மும்மரமாக இருந்ததால், அதை விட்டுவிடுவோம் என்றே நினைத்திருந்தேன்.
தங்கமுகுந்தன் அண்ணா அழைப்பெடுக்கின்றார், என்னடாப்பா பதிவுகளை விட்டுவிட்டாயோ, அப்படி இப்படி கேட்கின்றார்.
எனக்கு இங்கை யாரையும் தெரியாதுண்ணை என்றேன்! டேய்.. மருதமூரான் யாழ்ப்பாணம் வந்திருக்கின்றான், நம்பர் அனுப்பிறன் கதை என்று ஒரு நம்பரை அனுப்புகின்றார். மருதமூரானுக்கு அழைப்பு எடுக்கின்றேன்.
ஹலோ... நான் ஜனா கதைக்கின்றேன், யாழ்ப்பாணத்தில் இருந்து
எந்த ஜனா?
ஸியேஸ் வித் ஜனா..
ஆ... எப்ப வந்தனீங்கள்? யாழ்ப்பாணம் எங்க? நல்லூரா? நான் பருத்தித்துறை ஐயா.. இன்டைக்கு வெளிக்கிடுறன் கோல் எடுத்தது சந்தோசம்.
என்கின்றார்.
இலங்கை பதிவர்களை இலங்கையில் முதல் அறிமுகம் அது?
எனக்கான நேர்முகத்தேர்வு ஒன்றுக்கு கொழும்பு சென்றபோது நேரடியாக மருதமூரானை சந்தித்து பேசுகின்றேன். பின்னர் யாழ்ப்பாணத்தில் யாழ்தேவி நடத்திய யாத்திரா ஏற்பாடுகளை மருதமூரான், சேரன், நான் சேர்ந்து செய்கின்றோம்.
யாத்திராவுக்கு முதல்நாள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மண்டபம் ஒழுங்கு செய்து சோடினை வேலைகளில் ஈடுபட செல்வதன் முன்னர், ரியோவுக்கு போகின்றோம், அங்கே பாலவாசகன் என்ற மூன்றாவது பதிவர் (இப்போ தம்பி) அறிமுகம். பின்னர் மதியம் அங்கு வந்திருந்த கோபி, இலங்கன், பிரசாத், ஆகியோர் அறிமுகமாகின்றனர். மாலை நேரம் எனக்கு ஒரு அழைப்பு,
ஹலோ யாத்திராவா! நாங்களும் பதிவர்கள்தான், பதிவுகளை எழுதுகின்றோம் இந்த மாநாட்டிற்கு வரலாமோ? இப்ப எங்க மத்திய கல்லூரியில்த்தான் நிற்கின்றீர்களா? ஆ..இந்த இரண்டு நிமிசத்திலை வாறன் என்றது அந்தக் குரல்...
அதற்கு சொந்தக்காரர் பதிவர்களின் கலகல கூல்போய்.
ஆனால் இரண்டு மணித்தியாலம் கழித்து ஒரு ஆள் சிரித்துக்கொண்டு வந்து நின்றது. ஆ..ஊ.. என்று கதைகள் சொல்லி அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
மறுநாள்.. புல்லட் அறிமுகம், இப்படி என் பதிவுலக நட்பு நீண்டுகொண்டிருந்தது.
ஏற்கனவே எழுத்துக்களால் அறிமுகமான பலர் நேரடியாக அறிமுகமானது மனதுக்கு இனிமையாக இருந்தது.
இந்த மாநாட்டுடன் இலங்கைப்பதிவர்கள் பலபேரின் கணிசமான அறிமுகமும், நட்பும் கிடைத்தது. மீண்டும் தனியா இல்லை என்ற உணர்வுடன் பதிவுகளை எழுத தொடங்கினேன்.
இந்த வேளைகளில் தம்பி பாலவாசகனிடமிருந்து அழைப்பு அண்ணை உங்களுக்கு 5 மணிக்கு வேலை முடிந்துவிடும்தானே ஒரு 5.30 மணிபோல நல்லூர் கோவிலுக்கு வாறிங்களா சுபாங்கன் வந்திருக்கின்றார் சந்திக்கலாம் என்றார்.
சுரி..என்று விட்டுப்போனேன்... அங்கே சுபாங்கனும் பாலவாசகனும் நின்றார்கள். கூல்போயையும் கூப்பிட்டிரந்தார்கள் அனால் ஆள் இன்னும் வரலை.
ஒரு ஆள் கொஞ்சம் அவிச்ச வெள்ளையாக என்னைப்பார்த்து மௌனபுன்னகை பண்ணிச்சு. ஸியேஸ் என்று சொல்லிக்கொண்டதாக நினைவு.
முதல் சந்திப்பிலேயே சுபாங்கனிடமிருந்த வேகம், தேடல், இரசிப்பு, துடிப்பு அத்தனையும் என்னை கவர்ந்தது. பாலவாசகனுடன் சுபாங்கனுடனான என் பிடிப்பு இறுகியது. அதை நட்பு என்று சொல்லமுடியாது இந்த இருவரையும், டிலான், மற்றும் சஜந்தனையும் என் சகோதரர்களாகவே எப்போதும் நான் கருதுவது உண்டு.
மீண்டும் சுபாங்கனுக்கு என் அழைப்பு வித்தியாசமாக இருந்தது. குடைஸ்பீக் ரூ மிஸ்ரர் சட்டோ? என்று கேட்டேன். புயபுள்ளை ஆரம்ப இங்கிலீஸ் புத்தகத்தை மறக்காது என்ற நினைவுடன். ஆனால் பயபுள்ளை தடுமாறி, அப்படி யாரும் கிடையாது, சொரி ரோங் நம்பர் எண்டிச்சு! பின்னர் நான் ஜனா என்றேன்.
பின்னர் அடிக்கடி சந்திப்பு, சிந்திப்பு.... மற்றவர்களைவிட சுபாங்கனிடம் அதிக உரிமையை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு என் சொந்த தம்பிபோலவே பாராட்டியும், சில இடங்களில் அதட்டியும் வந்தேன். ஏன் பதிவுகளை சீரியஸான மற்றர்களில் இருந்து ஜனரஞ்சகத்தன்மைக்கு கொண்டுவந்ததில் சுபாங்கனின் பங்கே பிரதானமானது. நான் விபத்து ஒன்றில் சிக்கி ரென்ஸனாக நின்ற போதும் என்னை சுதாகரிக்க வைத்தது சாத்ஜாத் பிறதர்தான்.
அடுத்தது மதிசுதா.. என் நினைவு சரியானது என்றால், மதிசுதாவை, நான், சுபாங்கன், கூல்போய் மூவரும் ஒன்றாகவே முதல் முதல் சந்தித்தோம்.
மதிசுதாவின் ஆற்றலை பல தடவைகள் கண்டு நான் பிரமித்ததுண்டு, அதேவேளை அதற்காகவே மதிசுதாவை கண்டித்ததும் உண்டு.
அடுத்த சந்திப்பு வரோ... யாழ்ப்பாணம் வந்து வரோ கோல் பண்ணியிருந்தார். சந்தித்தேன். முதலிலேயே ஒன்றை சொல்லியிருக்க வேண்டும் எனக்கு இலங்கையில் இருந்து முதல் முதல் பின்னூட்டம் போட்டது வரோதான்.
வரோ..சம்பந்தமான சர்ச்சைகள் முழுமையாக இல்லாதுவிடினும் பகுதியாக சிலர் என்னிடம் சொல்லியிருந்தனர்.
நல்லூரில் இருந்து பதிவுகள், தனது ஊடகவியல் என பலவற்றை என்னுடன் பகிர்ந்துகொண்டார். நான்தான் அவரை ஆசுவாசப்படுத்தி உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டேன். கண்கள் பனிக்க சில விடையங்களை கூறினார்.
பதிவு என்பது எங்களின் சகலதும் கிடையாது ஜஸ்ட் அது ஒரு டைம் பாஸிங்தான், நீங்கள் அதை பெரிய விடயமாக எடுப்பதுதான் பிரச்சினை என்று கொஞ்சம் ரிலாக்ஸாக கதைத்தேன். சில விடையங்களை அவரும் ஏற்றுக்கொண்டிருந்தார். உண்மையில் கூர்ந்து கவனித்தால் அதன் பிறகு அவரிலும், அவரது பதிவிலும் பாரிய மாற்றங்கள் இருந்தன.
அடுத்து ஒரு பிழையில் உண்டான அன்னியோன்னியம். எப்போதுமே என்னில் பிழை இருந்தால் அதை ஏற்கவேண்டும் என்பதே என் பழக்கம், அதற்கு அமைவாக அந்த பிழையை ஏற்றுக்கொண்டு அந்த சுட்டிக்காட்டிய நெஞ்சத்துடன் உண்டான சொந்தம் வலையுலகில் கொஞ்சம் வித்தியாசமானதுதான்.
அன்றிலிருந்து நெஞ்சங்கள் சிதறவில்லை ஒன்றல்வா ஆகியிருக்கு ரமேஸ்?
பின்னர் ஜீ... ஆரம்பத்தில் நான் கூட, ஜீயை இந்தியப்பதிவர் என்றே கணித்திருந்தேன். ஆனால் ஜீ..தான் யாழ்ப்பாணம் என்று பல இடங்களில் பிடிகொடுத்திருந்தார். அவரை தொடர்பு கொள்ள வழியின்றி இது பின்னூட்டம் இல்லை என்று சொல்லி தொடர்பை ஏற்படுத்தியிருந்தேன். ஜீ...எதையும் பொஸிட்டிவாக எடுத்துக்கொள்ளும் ஒருவர். போடா குரங்கு என்று பேசினாலும் விழுந்து விழுந்து சிரிக்கும் ஒருவர் (ஹி...ஹி..ஹி..)
அடுத்து பதிவர் சந்திப்பு, அதன் முன்னால் கிரிக்கட் என்று அடுக்கடுக்காக நான் ஆவலுடன் சந்தித்துக்கொண்ட நெஞ்சங்கள்.
முக்கியமாக லோஷன். இலங்கை பதிவர்களில் என் வயதை உடையவர், என்பதால் நான் அதிகம் நோக்கும் ஒருவர். நான் எப்போதுமே ஒரு பதிவரை அவரது தனிப்பட்ட தொழிலுடன் சேர்த்து பார்பது கிடையாது.
எனக்கு தனிப்பட்ட ரீதியில் லோஷன் தகுதியான அதேநேரம் சிறப்பானதொரு அறிவிப்பார்தான். ஆனால் பதிவுலகத்தில் லோஷன், வாமலோஷன் என்ற வலைப்பதிவை எழுதும் லோஷன்தான்.
நான் நினைக்கின்றேன் அவர் அறிவிப்பாளராக இருப்பது பதிவுலகத்தில் அவருக்கு நன்மைகளைவிட, சாபங்களைத்தான் அதிகம் கொடுத்திருக்கின்றது என்று.
நான் நடந்துமுடிந்த பதிவர் சந்திப்பிலே லோஷனின் பதிவை மேற்கோள்காட்டி பதிவுலகம் என்பது வேறு, உங்கள் தனிப்பட்ட விடையங்கள், உங்கள் உயர்வுகள், கல்வி, தொழில் என்பதுவே முக்கியம் என்று பேசியிருந்தேன்.
இப்போது எழுந்துள்ள தேவையற்ற சச்சரவுகளுக்கும் தீர்வாக லோஷன், ஜனா உட்பட அனைவரும் மீண்டும் படிக்கவேண்டிய பதிவாக அது இருக்கின்றது.
இந்த மூன்றுவருட பதிவுலக வாழ்க்கை பல நன்மைகளை தந்திருக்கின்றது. பலதரப்பட்டவர்களின் பாராட்டுக்களை, அனுமதிவாங்கிய மீள் பிரசுரங்களை, ஒலிவடிவங்களை அத்தோடு அனுமதியற்ற பிரசுரங்களை, நன்றி இணையம் என்ற ஒற்றை வரிகளை எல்லாம் வாங்கியிருக்கின்றது.
அதேவேளை பதிவுலகத்தில் தேவையற்ற சர்ச்சைகளும், குரோதங்களும் ஏற்பட்டிருப்பதும் மறைக்கமுடியாத உண்மைகளே. பதிலுக்கு பதில் பேசுவதும், நீ பெரிதா நான் பெரிதா என்று ஆளாளுக்கு குத்திக்காட்டும் இடுகைகளை போடுவதும் இவற்றிற்கு தீர்வாக ஒருபோதும் இருக்கமுடியாது.

நான் பெரியவன், நாங்கள் பெரியவர்கள், நாங்கள்தான் பதிவுலகமே என்ற எண்ணங்கள் களையப்படவேண்டும். உண்மையில் இங்கு யாரும் பெரியவர்களும் கிடையாது, சிறியவர்களும் கிடையாது.
பதிவுலகத்தில் யாரும் தனித்திருக்கமுடியாது. தானே எழுதி தானே வாசிக்கும் நிலைமையோ, அல்லது குறிப்பிட்ட தாங்களே எழுதி தங்களுக்குள்ளேயே வாசிக்கும் ஒரு நிலைமைகளே ஏற்படும்.
தமிழர்களுக்கு கிடைக்காத ஒன்று 'ஒற்றுமை' அதற்கு பதிவுலகம் என்ற விதிவிலக்கா என்று மற்றவர்கள் பரிகாசனை செய்யாமல் இருக்க பொறுப்பாளிகள் நாங்கள்தானே?
ஓவ்வொரு மனிதனும் சுதந்திரமானவன், என், அல்லது எங்களின் எண்ணப்படிதான் ஒவ்வொருவனும் இருக்கவேண்டும் என்றும், எனக்கு அல்லது எங்களுக்கு எதிரி அனைவருக்கும் எதிரியாகவே இருக்கவேண்டும் என எவரும் எதிர்பார்க்கமுடியாது. அப்படி எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமே ஆகும்.
எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படக்கூடியதே ஆகும். அது அவரவர் புரிந்துணர்வுக்கு உட்பட்ட விடையமாகும்.
அதேவேளை பதிவுலகத்தில் கருத்து பகிர்வுகள் வரலாம் ஆனால் தனி மனிதன் ஒருவனை குறிவைத்து குவிக்கப்படும் கருத்துக்களுக்கு எப்போதும் நான் எதிரானவன்தான். இதில் நக்கல்களும் நையாண்டிகளும் அவரவர் தரங்களையே குறைக்கும்.
சில சச்சரவுகள் இடம்பெறுகின்றன என்பதை மணந்து தெரிந்துகொண்டே சில மூன்றாம் தரப்புக்கள் இவற்றுக்குள் தாங்களும் புகுந்துவிடலாம் என்று எண்ணுகின்றன அப்படியானவர்களுக்கு என் மின் அஞ்சல் தவறான முகவரிகளாகவே இருக்கும் என்பதை மீண்டும் அறிவித்துக்கொள்கின்றேன்.
இறுதியாகச்சொல்லிக்கொள்வது என்னவென்றால், நல்ல கருத்தை யார் சொன்னாலும் என்ன! உங்கள் ஒவ்வொருவரையும் நீங்களே சுயவிமர்சனம் செய்து உங்களை நீங்களே கேள்விகளை கேளுங்கள்!! என்று இன்று ஒருவர் சொல்லியிருக்கின்றார். கொஞ்சம் முயற்சி செய்துதான் பார்க்கலாமே (நானும் உட்பட)
***இன்றைய நாள் (29.05.2009) மாலை 5.00 மணிக்கு சென்னையில் என் வலைப்பிரவேசம் ***