வரலாற்றில் நியாயமான உணர்வுகள் ஒவ்வொன்றுக்கும் மாறான தீர்வுகள் கிடைத்ததில்லை. ஒரு வகையில் உலகமும், நியதியும், இயற்கையும் நியாயத்தின் பக்கங்களே நிற்றுபோனதாகவே உலக வரலாறுகளும், அதன் சுவடுகளும் குறிகாட்டிச்சென்றுள்ளன.
ஈழத்தில் தமிழர்களின் வலிகள், ரணங்களுக்கான வலிநிவாரணியாக ஒரு தீர்மானமான முடிவு கிடைத்துவிடும், முக்கிமாக மதத்தாலும், உணர்வாலும், சம்பிரதாய கலாசார விழுமியங்களாலும் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா எம் விடயத்தில் ஒரு போதும் எந்தவித விட்டுக்கொடுப்பையும் செய்துவிடாது, நிச்சயம் பாரதம் நமக்கொரு மகுடம் வழங்கும் என்ற பேதலிப்புடனேயே விடியல் நோக்கிய விழிகளாக ஈழத்தில் ஒவ்வொரு தமிழனும் வடக்குநோக்கிய தமது பார்வைகளாக வடக்கிருந்தனர்.
வழமைபோலவே அகாஷவானியின் செய்திகள் குறித்த நேரத்தில் ஒலிபரப்பாகின்றன. டில்லியில் இடம்பெற்ற இந்திய அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான உயர்மட்ட பேச்சுக்களில் பல முக்கிய விடங்களில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும், கூடியவிரைவில் இந்த இரண்டு தரப்புக்கும் இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும் அந்த செய்திகள் தெரிவித்தன.
ஆனால் அழைத்துச்செல்லப்பட்ட போராளிக்குழப்பிரதிநிதிகள், அங்கே சுதந்திரமாக கருத்துக்கள் வெளியிட முடியாதபடி தங்கக்கூண்டில் அடைக்கப்பட்டதற்கு ஒப்பான ஒரு தோற்றப்பாட்டை தாய் நாட்டு மக்கள் ஏதோ ஒரு உணர்வில் நன்றாக அறிந்தே வைத்திருந்தனர்.
இந்தக்கட்டத்தில்த்தான் ஈழ மக்களுக்கு முதன்முறையாக இந்தியாமீது சிறு சந்தேகக்கண் விழத்தொடங்கிய கட்டமாகும்.
'ஏன் இவை வேண்டும் என்றால் எங்கட பிள்ளைகளை எங்கட இடத்தில், எங்களுக்கு மத்தியில் வைத்து பேசி இணக்கப்பாட்டுக்கு கொண்டுவரலாம்தானே' அதென்ன கௌரவமாக பேசப்போவதாக சொல்லி கொண்டுபோய் அடைத்துவைப்பது' என்ற கேள்விகள் ஒவ்வொரு சாதாரண பொதுமகனிடம் இருந்தும் அந்த சூழ்நிலையில் வந்துகொண்டே இருந்தது.
ஆகாஷவானியின் செய்திகளின் போக்கும், இந்தவிடயத்தில் இந்திய அரசாங்கத்தின் தொனியும் செய்தி நேரத்திற்கு நேரம் கொஞ்சம் கொஞ்சமாக தொளி மாறிக்கொண்டே சென்றுகொண்டிருப்பதை அவதானிக்கமுடியாத முட்டாள்களாக இல்லை அன்றைய நிலையில் ஈழத்தமிழர்கள்.
எனக்கு நன்றாக நினைவில் உள்ளது, இந்த நேரத்தில் தமிழ் மக்களின் நியாயமான தீர்வுக்காகவும், நிரந்தர அமைதிக்காவும், பல கோவில்களில் வரிசையாக விசேட வழியாடுகள் ஆராதனைகளை பல அமைப்புக்கள் முன்னின்று நடத்திக்கொண்டிருந்தன. திக்கற்றுப்போன இந்த காலகட்டத்தில் தெய்வந்தான் துணை என்று அந்த மக்கள் நினைத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லைத்தானே!
இந்த நேரத்தில் 'சோல்ட்' எனப்படும் மாணவர்களைக்கொண்ட அமைப்பு பொதுமக்களை அசுவாசப்படுத்தும் நோக்கில் இன்றைய காலகட்டத்தில் எம் வரலாற்றுக்கடமையும், எமது பாதையும் என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து மக்களுக்கு நிலை விளக்கங்களையும், அசுவாசப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
அதேவேளை சிறிது சிறிதாக பொதுமக்களுக்கான கூட்டங்களும் இடம்பெற்றுக்கொண்டிருந்தன.
வரலாறு ஒன்று எதர்பாராதவிதமாக புரள்வாகும் ஆரம்ப நிலைகள், அல்லது திசைமாறி பயணிக்கப்போகும் திருப்பமாக இந்த சூழ்நிலை ஈழத்தில் ஒரு இனந்தெரியாத இறுக்கத்தை வலுக்கட்டாயமாக கொண்டு வந்திருந்தது.
மாலை மங்கும்நேரம் மேகம்முழுவதும் கடுமையான கருமுகில்களாக காணும் ஒரு நிலை அந்தநேரத்தில் காணப்பட்டது.
இந்த கருமுகில்கள் தரப்போவது பூமழையா, அல்லது பெரும் அனர்த்தமா என்பது அற்றைப்பொழுதுகளில் ஈழவர் ஒவ்வொருவர் முகத்திலும் தொற்றிக்கொண்ட கேள்விக்குறிகளாக தொக்கி நின்றது.
- இலைகள் உதிரும் -
8 comments:
வடையா?
//////
திக்கற்றுப்போன இந்த காலகட்டத்தில் தெய்வந்தான் துணை என்று அந்த மக்கள் நினைத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லைத்தானே!///////
வேறு என்னதான் செய்ய முடியும் அவர்களால்...
நம்பினோர் கைவிடப்படுவார்
மாப்ள...தமிழன் முதுகில் குத்தப்பட்டதை எடுத்துரைக்கும் பதிவு நன்றி!
ம்ம்ம்ம்....தொடர்கிறேன்!
இந்த ஆகாசவானி செய்திகள் கேட்பதற்காக எங்களை சத்தம் போட்டு குழப்படி செய்யாதீர்கள் என்ற தாத்தாமார்கள் எத்தனை ஆர்வமாக இருந்தார்கள் ம் எல்லாம் தலைவிதி என்பதா பின்னர் அறிமுகமான சோல்ட் எத்தனை பிரசூரங்கள் மறந்தவை ஞாபகம் வரக்கூடிய நாட்கள் உங்கள் பதிவு தொடருங்கள்!
தீராநதி விமர்சனம் தனிமரத்தில்!
வணக்கம் பாஸ்,
நம்ப வைத்துக் கழுத்தறுக்கப்பட்ட எம் கடந்த கால வரலாறுகளை மீட்டியபடி தொடர் நகர்கிறது. அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்.
ஈழத்தில் தமிழர்களின் வலிகள், ரணங்களுக்கான வலிநிவாரணியாக ஒரு தீர்மானமான முடிவு கிடைத்துவிடும், முக்கிமாக மதத்தாலும், உணர்வாலும், சம்பிரதாய கலாசார விழுமியங்களாலும் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா எம் விடயத்தில் ஒரு போதும் எந்தவித விட்டுக்கொடுப்பையும் செய்துவிடாது, நிச்சயம் பாரதம் நமக்கொரு மகுடம் வழங்கும் என்ற பேதலிப்புடனேயே விடியல் நோக்கிய விழிகளாக ஈழத்தில் ஒவ்வொரு தமிழனும் வடக்குநோக்கிய தமது பார்வைகளாக வடக்கிருந்தனர்.
உண்மை வரிகள் .எம் ஈழத்து மக்களின் உணர்வுகளையும்
காத்திருந்து ஏமாந்த எம் நிலமைதனை மிகவும் சுருக்கமாக
சிந்திக்கும் வகையில் நீங்கள் தொடரும் இந்த ஆக்கம் பிடித்திருக்கிறது
தொடர வாழ்த்துக்கள் ....
Post a Comment