Wednesday, October 5, 2011

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகின்றான்....


'வல்லகுரு நாதன் எம்மை வாட்டுவது கொல்லவல்ல கொல்லவல்ல கொடுப்பதற்கே'

இந்தவாசகம் குழந்தையாக கல்வி என்ற ஒன்றைத்தேடிப்போகும்போதே ஒவ்வொரு மாணவனின் மனங்களிலும் இருந்துவிட்டால் அவனால் அந்த வல்லகுருநாதன் கொடுப்பவைகள் அத்தனையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
வுல்லமை தாரோயோ இந்த மானிலம் பயனுற்று வாழ்வதற்கே என்று தெய்வத்தைக்கூட கேட்கவேண்டிய தேவைகளை நீக்கிவிடுகின்றார் ஒரு உண்மையான ஆசிரியன்.
ஓவ்வொரு துறையிலும் மேன்மையானவர்களை அந்த துறைகளை சார்ந்தவர்கள் உருவாக்கிவருகின்றனர் ஆனால் அந்த ஒவ்வொரு துறைநிலையாளர்களையும் உருவாக்கவிடுவது இந்த ஆசிரியன் அல்லவா?
இதனாலேதானோ என்னமோ தாய், தந்தையருக்கு அடுத்த நிலையில், தெய்வத்திற்கு முன்னதாக உயர்வில் வைக்கப்படுகின்றனர் இவர்கள்.

ஒரு தேசத்தின் எதிர்காலம், நாளைய தலைவர்களின் வரவுகள், ஆளுமையான ஒரு எதிர்காலம், என அத்தனையினதும் ஆணிவேர் இந்த அசிரியர்கள்தானே!
கண்களை மூடி ஒருமுறை நீங்கள் பள்ளி சென்ற முதன்நாள் முதல், பள்ளிவிட்டு செல்லும் இறுதிநாள்வரை அல்லது பல்கலைக்கழகத்தின் கோயிங் டவுண் நிகழ்வுகள் வரை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், எத்தனை ஆசிரியர்களின் கைகள் உங்களை அரவணைத்துள்ளன, கல்விகள் மடடுமன்றி அவர்கள் வாழ்வதற்கு தந்த அறிவுரைகள் எத்தனை! அவை இன்றும் உங்கள் காதுகளில் எதிரொலிக்கின்றதல்லவா?
எங்கே.... எங்கே... மீண்டும் ஒருமுறை அந்தக்காலத்திற்கே ஓடிச்சென்று அந்த ஆசிரியர்களின் பாதங்களை தொட்டுவிட மனம் துடிக்கின்றது அல்லவா!
இன்று கனவிலாவது அந்த பள்ளிக்காலங்கள் வந்துவிடாதா என்ற ஏக்கங்கள் கொண்டவர்கள் அல்லவா நாம் அனைவரும்!

விடலை வாலிபகால மிடுக்குகளில் அந்த புனிதமானவர்களை நண்பர்கள் வட்டாரத்தில் எப்படியெல்லாம் பட்டப்பெயர்கள் வைத்து சிரித்து மகிழ்ந்திருப்போம். அந்த ஒவ்வொரு கட்டத்திலும் குரு நிந்தனைகள் கூடாது என்று எத்தனைமுறை நம்மை நம் மனமே எச்சரித்திருக்கும்.
தம்மாணவர்கள் தமக்கு வைத்த பட்டப்பெயர்களை அறியும்போது கோபங்கள் இன்றி ஒருவித இரசிப்புடன் அந்த ஆசிரியர்கள் நாசுக்காக சிரித்துவிட்டு போகும் தன்மைகள் எப்படி ஆசிரியர்களிடம் மட்டுமே உள்ள பண்பாக உள்ளது!

எமக்குள் எமக்கு தெரியாமலே மிழிரும் திறமைகளை கண்டுகொண்டு அந்த திறமைகள் சிகரம் தொடுவதற்கு எடுத்துவைக்கும் முதல் அத்திவாரக்கற்கள் அவர்கள் கைகளால் வைக்கப்பட்டதல்லவா?
எத்தனை முறை தோல்விகண்டு சிறுபிள்ளையாக அழும்போது, முதுகுதடவி, கண்களில் சிந்தும் நீரைத்துடைத்து, மீண்டும் முயற்சிக்கும் பண்புகளை கொடுத்தது அவர்கள் அல்லவா!
எதை எம்மிடமிருந்து எதிர்பார்த்து அவர்கள் இவற்றை எமக்காக செய்தனர்? தாய் தந்தையருக்கு சில குழந்தைகள்தானே அனால் ஒரு ஆசிரியருக்கு எத்தனை குழந்தைகள். ஓவ்வொரு குழந்தையும் பூத்து குலுங்கவேண்டும் என்ற எண்ணத்துடனேயே சிரமமங்கள் பாராது, அறிவு என்னும் நீரூற்றி, பண்பு என்னும் வாய்க்கால்களை கட்டி, திறமைகள் என்னும் பசளைகளை இட்டு எம்மை அளாக்கிவிடுகின்றனர்.
அந்த குழந்தைகள் ஒவ்வொன்றும் சமுக மட்டத்தில் பூத்துகுலங்கும்போது ஏதோ ஒரு ஓரத்தில் இருந்து மனதிற்குள் சந்தோசப்படும் அந்த உன்னதமானவர்களை இறைவனைவிட ஒருபடி மேலே வைத்தல் தகுமல்லவா!

உங்களுக்கு சில நினைவுகள் வருகின்றதா... ஏதாவத ஒரு போட்டிக்கு உங்கள் ஆசிரியர் உங்களை தயார்ப்படுத்தி அந்தப்போட்டியில் கலந்துகொள்ளும் தருணம் மட்டும் உங்கள் வெற்றிக்கான வழிவகைகளை சொல்லித்தந்து, மேடையிலோ. போட்டியிலோ பெருவெற்றிபெற்று அந்த மேடையில் நீங்கள் நிமிர்ந்து நிற்கும்போது அந்த ஆசிரியரின் முகத்தை பார்த்திருக்கின்றீர்களா!
அந்த முகத்தில் எத்தனை பெரிய பெருமை, எவ்வளவு சந்தோசம், ஓடிச்சென்று சேர்... இதைபாருங்கள் என்று அந்த வெற்றிக்கோப்பையை அவரிடம் சமாப்பிக்கும்போது எவ்வளவு பாசத்துடன் அந்த கரத்தின் அன்பான தழுவல்....
ஆம்... அசிரியரின் கற்பித்தல் மட்டும் அல்ல ஒவ்வொரு செயற்பாடுகளும் எதிர்கால எங்கள் ஆளுமைகளுக்கு வித்தாகின்றன.

இப்படிப்பட்ட ஆசிரியர்களை நாங்கள் உயர்ந்த இடங்களுக்கு வந்துவிட்டபின்னர் கண்டுகொள்கின்றோமோ? என்றால் பெரும்பாலானவர்கள் தங்கள் மனதைத்தொட்டுச்சொல்லும் பதில் இல்லை என்பதாகவே இருக்கும்.
ஏன்.... குறைந்தபட்சம் அந்த ஆசிரியரின் பிறந்த தினங்களிலாவது அவரது வீட்டிற்கு சென்று சிறு பரிசுப்பொருளை வழங்கி அவரிடம் ஆசீர்வாதம் வாங்கலாமே... ஒருமுறை அப்படி வாங்கிப்பாருங்கள் மனதில் உங்களுக்கு தெரியாமல் உங்களுக்குள்ளேயே இருக்கும் நெருடல் ஒன்று அகன்று மனது இலேசாம்.
பெரும்பாலும் பல ஆயிரம் மாணவர்களுடன் பழகிய அவர்களுக்கு ஒய்வுக்காலங்கள், மனதில் ஒரு விரக்தியாகவே இருக்கும், அந்த நாட்களில் எங்காவது ஒரு இடத்தில் தங்கள் மாணவர்களை கண்டால் அவர்கள் முகம் எப்படி மலர்கின்றது என்பதை அவதானித்துப்பார்த்திருக்கின்றீர்களா?

இன்று இந்த பதிவை எழுதுகின்றேன், உயர்ந்த நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருக்கின்றேன் என்றால் எல்லாமே என் ஆசிரியர்கள் எனக்குப்போட்ட பிச்சை என்றே நான் கருதுகின்றேன்.
யாருக்குமே கிடைக்காத ஒரு பேறு எனக்கு அமைந்தது இந்த ஆசிரியர்கள் விடையத்திலே. எனது முதலாவது ஆசிரியையே எனது தாயாரினுடைய தாயார் (அம்மம்மா – பாட்டி) தான்.
அதேபோல எனக்கு கற்பித்த அசிரியர்கள் நால்வர் எனக்கு கீழே பணிபுரிந்தனர். இதை நான் ஒருபோதும் எனது பெருமையாக கருதவில்லை தம்மாணவனை தமக்கு மேலோனாக ஆக்கிய பெருமைக்குரியவர்கள் அவர்களே.

இந்தவேளையில் எனக்கு அகரம் தொடக்கிய எழுத்தாளர், தமிழ் அறிஞர் சொக்கனில் இருந்து பட்டம் வழங்கிய பேராசியர்கள் வரை ஒவ்வொருவரினதும் பாதங்களுக்கு இந்த பதிவை சமர்ப்பணம் செய்கின்றேன்.

எழுத்தறிவித்தவன் தெய்வத்தைவிட மேலானாவன்.
அனைவருக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.

8 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

ரைட்டர் நட்சத்திரா said...

அவரவர் ஆசிரியரை நினைக்க வைக்கிறது உங்கள் பதிவு.

தர்ஷன் said...

ஆசிரியர் தினத்திற்கு அருமையான பதிவு

//இப்படிப்பட்ட ஆசிரியர்களை நாங்கள் உயர்ந்த இடங்களுக்கு வந்துவிட்டபின்னர் கண்டுகொள்கின்றோமோ? என்றால் பெரும்பாலானவர்கள் தங்கள் மனதைத்தொட்டுச்சொல்லும் பதில் இல்லை என்பதாகவே இருக்கும்.//

அட நீங்க வேற
உயர்ந்த இடத்திற்கு வரத் தேவையில்லை இப்பெல்லாம் மாணவர்கள் உயர்தரம் போனவுடனேயே சாதாரண தரம் கற்பித்த ஆசிரியர்களை கண்டு கொள்வதில்லை

shamini said...

isn't it the quote should read ...kolla alla kolla alla kollah vinai theerpathatkae.....
probably its not fare to to the original script it you want to change like this.
but the essence of what you are trying to put across is good,,,,
Keep it up

முனைவர் இரா.குணசீலன் said...

ஆசிரியர்களைப் பற்றி சில நினைவுகள் மட்டுமல்ல...

பல நினைவுகளை வரவழைப்பதாக தங்கள் சிந்தனைகள் அமைந்தன

அருமை..

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நண்பரே..

ஆசிரியர்களை தினம் கொண்டாடுவோம்..

என்ற எனது இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_8019.html

KANA VARO said...

மனம் திறந்த நல்ல பதிவு அண்ணே!

shanmugavel said...

தலைப்பே அத்தனையும் சொல்லிவிட்டது!

LinkWithin

Related Posts with Thumbnails