Saturday, September 19, 2009

திருடர்கள் பல விதம்….


ஓவ்வொருவருக்குமே களவு கொடுத்த அனுபவங்கள், அல்லது களவுகொடுத்தவர்களின் கதைகள், அயல் வீடுகளில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவங்கள், என கண்டிப்பாக களவு பற்றிய சம்பவங்கள் மனதில் இருக்கும்.
சிறுகச்சிறுக பார்த்துப்பார்த்து, குருவி சேரிப்பதுபோல பணத்தை சேகரித்து வைத்திருக்கும்போது அதை கயவர்கள் கவர்ந்துசென்றால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதையும், வயிறு எப்படி பற்றி எரியும் என்பதையும் அனைவராலும் புரிந்துகொள்ளமுடியும்.
சில ஆயிரம் பெறுமதியான பணம் மற்றும் நகைகளுக்காக விலை மதிக்கமுடியாத உயிர்கள் காவு கொள்ளப்பட்ட சம்பவங்களும் உண்டு. அத்தோடு அப்போது ஆபத்தாக இருந்தாலும் கள்வர்களின் களவில் உள்ள நகைச்சுவைகளும்கூட அதன் பிறகு சிரிக்கவைத்த சம்பவங்களும் நிறைய உண்டு.
அந்த விதத்தில் நான் அனுபவித்த, நேரில் கண்ட, கேள்விப்பட்ட சில கள்வர்கள், மற்றும் களவு, கொள்ளைச்சம்பவங்களை நண்பர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைகின்றேன்.

01. 1988 ஆம் ஆண்டு கால கட்டங்கள், அப்போது என் வயது பத்து. இந்திய அமைதிப்படை என்ற பெயரில் என் மண்ணில் வானரக்கூட்டங்கள் நிறைந்திருந்த கால கட்டம். அவர்களின் ஆதரவுடன் அட்டூளியங்களும், களவு கொள்ளைகளும் தலைவிரித்தாடிய பயங்கரமான ஒரு கால கட்டம் அது.
அந்த நேரங்களில் பெரிதும் இராக்காலங்களில், கொள்ளைகள், களவுகள் என்பன அப்போது இந்தியப்படைகளுடன் சேர்ந்தியங்கிய சில துணை இராணுவ குழுக்களால் வெளிப்படையாகவே மேற்கொள்ளப்பட்டன. கூக்குரலிடும் வீட்டின் ஆபத்தை அறிந்து அயலவர்கள் அங்கு அவர்களுக்கு உதவியாக வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் அப்போதைய ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி இராணுவத்தினர் வீதிகளில் நிற்பார்கள். வீட்டை விட்டு வீதிக்கு வந்தால் சுடப்படுவோம் என்ற அச்சத்தின்காரணமாக எவரும் வீதிக்கு வரமாட்டார்கள் என்ற நிலை எற்பட்டிருந்தது.


இப்படியே தொடர் கொள்ளைகளையும், களவு போகும் வீட்டுக்காரர்களின் கூக்குரலினையும், சில வேளைகளில் அந்தக்கொள்ளையர்களின் துப்பாக்கிப்பிரயோகத்தையும், கள்வர்களுக்கு காவலாக நிற்கும் இந்திய அமைதி காக்கும் படைகளின் ஹிந்தி மொழிகளையும், நான் அப்போது அச்சத்துடன் பல நாட்களாக கேட்டிக்கின்றேன்.
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இந்த அநியாயங்கள் இடம்பெற்ற போது இதையும் தடுப்பதற்கு எனது சொந்த இடமான யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் திட்டமிட்டு செயற்பட்டனர். இந்த திட்டங்கள் வெற்றியடைந்து பல கொள்ளைகள் தடுக்கப்பட்டன.
அந்த திட்டங்கள் இவைதான், கள்வர்கள், கொள்ளையர்களின் நடமாட்டங்கள் தெரிவதாக உறுதிப்படுத்தும் சம்பவங்கள் ஏற்பட்டவுடன் அனைத்து மக்களையும் உசாரடையச்செய்யும் விதமாக தகரங்கள், சட்டி பானைகளை தட்டி ஒலியெழுப்புதல், ஒவ்வொரு வீட்டிலும் எழுப்பப்படும் அந்த ஒலி அந்த பிரதேசம் முழுவதும் ஒலித்து அனைவரையும் உசாரடையச்செய்யும். அத்தோடு பக்கத்துவீடுகள், பின், முன் வீடுகளுடன் தொடர்புகளை ஒவ்வொரு வீட்டினரும் பேணிவருவார்கள், குறிப்பிட்ட ஒரு வீட்டில்த்தான் கொள்ளையர்கள் புக முற்படுகின்றார்கள் என்று அறிந்தவுடன், வேலிகள், மதில்கள் ஊடாக வீடுகளைத்தாண்டி ஊர்மக்கள் குறிப்பிட்ட அந்த வீட்டினை அடைந்து கொள்ளை இடம்பெறாமல் தடுப்பது என்ற அந்த நடைமுறை முழு வெற்றி அளித்ததுடன் இந்திய இராணுவத்தினரையும் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு கொண்டுசென்றது.

02. இன்னும் ஒரு சம்பவம் மட்டக்களப்பில் நடந்ததாக என் உறவினர் ஒருவர் கூறியது கொஞ்சம் நகைச்சுவையான திருட்டுச்சம்பவம் இது. மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த திருடர்கள் கத்தி முனையில் கணவனை வைத்துவிட்டு, வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடியும் பெறுமதியான பணமோ, அல்லது நகைகளோ அவர்களுக்கு கிடைக்கவில்லையாம், எனவே கணவனை கத்திமுனையில் வைத்திருந்த திருடர்கள், எதையும் காட்டிக்கொள்ளாமல் பக்கத்து வீட்டிற்கு சென்று கணவருக்கு திடீர் இருதய நோய் வந்துவிட்டது அவசரமாக 5000 ரூபா தாருங்கள் என கடன்வாங்கிவந்து தரும்படி மனைவியை மிரட்டி தொடர்ந்தும் கணவரை கத்திமுனையில் வைத்திருந்து பக்கத்துவீட்டில் அந்தப்பெண் பணம் கடன்வாங்கி வந்து கொடுத்ததும் அங்கிருந்து தப்பித்து சென்றதாக கூறியிருந்தார்.


03. அடுத்து கடந்த மார்ச் மாதம் நான் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோது எனக்கு நடந்த சம்பவம். நீண்ட நாட்களின் பின்னர் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அங்கு எங்கு செல்வதென்றாலும் என் நண்பர்கள் தமது வேலைத்தள வேலைகள் முடிந்தபின்னர் வந்து என்னை காரிலோ, மோட்டார் வண்டியிலோ அழைத்து செல்வது வழமை. அன்று கிழமை நாள் என்பதனால் நண்பர்கள் வேலைத்தளத்திற்கு சென்றிருந்தமையால் ஓர் அலுவல் காரணமாக எனது புகுந்த ஊராகிய மானிப்பாயில் இருந்து சண்டிலிப்பாயிற்கு செல்லவேண்டி இருந்தமையினால் நான் பஸ்ஸில் செல்லவேண்டிய நிலை வந்தது. ரோசா ரக மினி பஸ்களே அதிகம் செல்வதனால் நேரத்தின் நிமித்தம் நான் மிக நெருக்கமாக பயணிகளை ஏற்றிவந்த அந்தவகை மினி பஸ் ஒன்றில் ஏறி பயணமானேன். காலைக் கீழே வைக்கக்கூட இடம் இருக்கவில்லை. ஒருவாறு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து இறங்கிவிட்டு, ஜீன்ஸ் பொக்கட்டை தட்டிப்பார்த்தால் எனது கைப்பேசி இலாபகமாக களவாடப்பட்டிருந்தது.
உடனடியாக அருகில் இருந்த தொலைத்தொடர்பகத்தில் இருந்து எனது இலகத்துடன் தொடர்புகொண்டால் ரிங்கிங் போய் பின்னர் நிறுத்தப்பட்டு. பின்னர் நிரந்தரமாகவே போன் நிறுத்தப்பட்டிருந்தது. அட அதில் என்ன பெரிய விடயம் என்றால் என்னை சூழநின்றவர்கள் முழுப்பேரும் பெண்கள் என்பதுதான்.

04. எனது நிறுவனத்தின் வேலை நிமித்தம் நான் கொள்ளுப்பிட்டியில் இருந்து பறக்கோட்டை செல்வதற்காக கொள்ளுப்பிட்டி சந்தியில் உள்ள, கோப்பியின் மணத்தை சுவாசித்தபடியே பஸ்ஸை பிடிக்கும் பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்தேன். அப்போது மிக நேர்த்தியாக உடையணிந்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர்போல். மிக அழகான உயரமான ஒரு நபர் என் அருகில் வந்து ஆங்கிலத்தில் உரையாடினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு நான் பதிலளித்துகொண்டிருந்தேன். இலக்கண பிழை எதுவும் இன்றி மிக நேர்தியான உச்சரிப்பும், பேசும்போது அவரது முகபாவனைகளும் அவரை மதிக்கும்படியாகவே இருந்தது. தாம் கண்டியில் அரசாங்க பணிமனை ஒன்றில் பணி புரிவதாகவும், இங்கு வந்ததும் தனது பேர்ஸ் பறிபோய்விட்டதாகவும், தனக்கு தேவைப்படுவது அங்கிருந்து புறக்கோட்டை செல்லவும், பின்னர் கண்டிக்கு செல்லும் வரையிலான பணமே எனவும், தனக்கு 180 ரூபா தந்தால் போதும் எனவும் அதை தான் எப்படியாவது உங்களுக்கு திருப்பி அனுப்புவேன் எனவும் தெரிவித்து முடிப்பதற்குள் நான் அவருக்கு 200 ரூபாவை நீட்டினேன். பல முறை நன்றி சொல்லி எனது பணிபுரியும் நிறுவனம், பற்றி கேட்டு அங்கு வந்து நான் கண்டிப்பாக அந்தப்பணத்தினை தருவேன் என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.
அதன் பின்னர் என் நண்பர்கள் பலர் தமக்கும் இதேபோல நடந்த அனுபவங்களைக்கூறினார்கள். பின்னர் ஒருநாள் பம்பலப்பிட்டியில் தான் அனுராதபுரத்தில் இருந்து வந்ததாக கூறிக்கொண்டு முன்னர் என்னை ஏமாற்றியதை மறந்துவிட்டு ஆங்கிலத்தில் மீண்டும் வந்துபேசினார் அந்த நாகரீக திருடன். என்ன செய்வது திருடன் பெரும்பான்மை இனமாச்சே பேசாமல்த்தான் போகணும்.

இப்படி நிறைய சம்பவங்கள் பலபேருக்கு இடம்பெற்றிருக்கும், கொள்ளைகள் போன்றவை அதில் உச்சம், ஆபத்துக்கள் நிறைந்தவை, வழிப்பறி கொள்ளை மூலம் வெள்ளவத்தையில் எனக்கு தெரிந்த பெண் ஒருவர் இறந்தும் உள்ளார். அதேபோல இன்னும் ஒரு கொள்ளைச்சம்பவத்தில் என் நண்பனின் தந்தையார் கால் நடக்கமுடியாத படி கால் அடித்து முறிக்கப்பட்டு சிறிதுகாலம் நடக்கமுடியாமல் இருந்தார்.
அதேபோல சில வீடுகளில் திருடர்கள், ஆறுதலாக வீட்டில் உள்ளவர்கள்; தூங்க முழுப்பொருட்களையும் களவாடிவிட்டு, அதேவீட்டில் தேனீரும் போட்டு குடித்துவிட்டு போன கதைகளும் உண்டு. எது எப்படியோ, தனது பொருள் ஒன்றை இழந்தவனுக்கு மட்டுமே அதன் வேதனை புரியும். ஒருபொருளை திருடிவிட்டு, திருடப்பட்டவரின் வயிற்றெரிச்சல், திட்டுக்களை வாங்கிக்கொண்டு அந்த திருடனாலும் தான் திருடிய பொருளை அனுபவிக்கமுடியாது என்பதும் உண்மை.
திருடனாய்ப்பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது தானே!

Tuesday, September 15, 2009

11.09.2001 இன் பின் உலகம் மாறிவிட்டதா?


2001 செப்ரெம்பர் 11ஆம் நாள், நியூயோர்க்கின் “உலக வர்த்தக மையத்தின் மீது” அல்-ஹொய்தா இயக்கம் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களுடன், இந்த உலகம் மாறிவிட்டது என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ் அடிக்கடி கூறிக்கொண்டது சகிக்கமுடியாமல் இருந்தாலும் கூட அந்தக்கூற்றில் அணித்தரமான பல உண்மைகள் உள்ளதையும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.
அந்த நாளின் பின்னால் நடந்தவிடயங்கள் ஒவ்வொன்றையும் எண்ணிப்பாருங்கள். உலகம் இதுவரை கண்டிராத வித்தியாசமான யாருமே கணிக்காத நிகழ்வுகள் பல நடந்துவிட்டிருப்பதை காணலாம்.
குறிப்பாக இந்த தாக்குதல்களின் பின்னால் ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்கமும் “தேசிய பாதுகாப்பு” என்ற பதத்தை தூக்கிபிடித்து தமது பல தவறுகளை மறைத்ததையும், உலகின் பல உரிமைகளுக்காக போராடிய மக்கள் குழுக்கள், மக்கள் இயக்கங்களை பயங்கரவாத பட்டியலில் இலகுவாக இணைத்து அவற்றை ஒழித்து தம்மை நியாயப்படுத்திக்கொள்ளவும் உலகிலுள்ள அரசாங்கங்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்துவிட்டதையும் நாம் ஆராய்ந்துபார்க்கலாம்.


இந்த தாக்குதலின் பின்னர் அதன் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் இடம்பெற்ற தாக்குதல்கள் அக்கிரமங்களை சொல்லித்தான் விளங்கவைக்கவேண்டும் என்ற தேவை இல்லை. கிட்டத்தட்ட இரண்டு சகாப்தகாலம் ஈராக்கினை ஆண்ட ஒரு ஜனாதிபதியை அவர் நாட்டினுள்ளேயே அத்துமீறி நுளைந்து காரணங்கள் தேடிக்கண்டுபிடித்து தூக்கில்போட்ட மிக (அ)நாகரிகமான செயல்கள் எல்லாம் நடந்துமுடிந்தவிட்டன.
ஈராக்கினுன் நுளையும்போது அமெரிக்கா வைத்த குற்றச்சாட்டுக்கள், ஈராக்கில் பேரழிவுகளை விளைவிக்கும் ஆயுதங்கள் இருக்கின்றன, அல் -ஹொய்தா போன்ற அமைப்புக்களுக்கு ஈராக் ஆதரவாக உள்ளது, செப்ரெம்பர் 11 தாக்குதலுடன் ஈராக்கிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பவையே. ஆனால் இறுதியில் இந்தக்குற்றச்சாட்டுக்கள் எவையும் நிரூபிக்கப்படவும் இல்லை, அதற்கான ஒரு சிறு ஆதாரங்களும் இல்லாமல், ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹ_சைனை பிடித்து அவரை கொலை செய்ய பல காரணங்களைத்தேடி அதற்கு தாமே நீதிவழங்குவதாக அவருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றி 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தனது நாகரிகத்தின் உச்சத்தினை காட்டியது அமெரிக்கா.
இறுதியாக “எமது புலனாய்வுத்துறையின் தவறான தகவலால்த்தான் ஈராக் மீது நடவடிக்கை எடுக்கும்படியாகிவிட்டது” என சர்வசாதாரணமாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியால் சொல்லமுடிகின்றது என்றால், கையாலாகாத ஒரு அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை தேவையற்று இருப்பதும், உலக நாடுகள் அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பதும்தான் காரணம். இதுவே பின்னால் ஒரு இனத்தின்மீது பாரிய மனித படுகொலைகளை புரிந்துவிட்டு சில உலக நாட்டுத்தலைவர்கள் தம்மால்; அழிக்கப்படும் அந்த இனத்தின் மொழியிலேயே தைரியமாக ஐக்கிய நாடுகள் சபையில்பேச ஏதுவாக அமைந்துவிட்டது.

ஒரு அரசாங்கம், அந்த நாட்டு மக்களின் பொருளாதாரம், மருத்துவம், கல்வி, சுகாதாரம் என்பவற்றிற்கு வகை சொல்லும் முக்கிய பொறுப்பாளி என்பதில் இருந்து மேற்படி செப்ரெம்பர் 11, 2001இன் பின்னர் பல நாடுகள் களன்றுகொண்டு, தேசிய பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கை அமுல்ப்படுத்துவதே அரசாங்கத்தின் பணி, மற்றவைகளை பொதுமக்கள் தாங்களாகவே பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதுபோல பட்டும் படாமலும் பேசிவருவதையும் நாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும்.


எமக்கு தெரிந்த விடயங்களாக இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கைளை எடுத்துக்கொண்டால், பாரிய மனிதப்பேரவலம் ஒன்று அப்பட்டமாக நிகழ்ந்தபோதும் ஐக்கிய நாடுகள் சபை மௌனமாக இருந்ததையும், இலங்கை அரசாங்கம் கூட பல பிடிகளை உலக நாடுகளுக்கு கொடுத்திருந்தாலும் கூட எவரும் தட்டிக்கேட்கமுன்வரவில்லை என்பதையும், இந்தச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமது தேச வல்லாதிக்க மற்றும் மனதில் வஞ்சம் தீர்க்கும் பகையினை தீர்த்துக்கொள்ள சீனா, இந்தியா போன்ற நாடுகள் படு கேவலமாக நடந்துகொண்டவற்றையும் உலகமும், ஐக்கிய நாடுகள் சபையும் மௌனமாக பார்த்துக்கொண்டே இருந்தன.
இதில் மிக வேதனையான சம்பவங்கள் என்னவென்றால், கியூபா, பலஸ்தீனம், வெனிசூலா போன்ற நாடுகள் நியாயங்களை மறுதவலித்து செயற்பட்ட விதங்கள்தான்.

இவை அனைத்தினையும் ஒப்பிட்டு பார்க்கும்போது உலகத்தில் வேறு வெளித்தோன்றாத நிகழ்வு ஒன்று மெல்ல மெல்ல உள்ளுக்குள்ளே நிகழ்ந்துவருவது தெரியகின்றது. முதலாம் உலக யுத்ததின்போது கொல்லப்பட்டவர்களின் தொகையில் சிவிலியன்களின் எண்ணிக்கை 13 வீதம் என்றும் இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது அது 60 வீதத்திற்கும் அதிகமாக சிவிலியன்கள் இறந்ததை காட்டியதாகவும், அனால் இந்த இரண்டு மகா யுத்தங்களுக்கும் பின்னர் இடம்பெற்ற யுத்தங்களில் இலக்குகளே பொதுமக்கள் தான் எனவும் ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகின்றது.
இன்றைய உலக நாடுகளின் போக்கு, நியாமான போராட்டங்கள் கூட்டுச்சதியாக நசுக்கப்படல் என்பவை முக்கியமாக ஒன்றை வெளிக்காட்டுகின்றது “நியாங்களும் தர்மங்களும் இறந்துவிட்டன” என்பவற்றையினையே இவை காட்டிநிற்கின்றது. இத்தகய போக்கு முழு உலகத்திற்குமே பேராபத்தாகவே முடியுமே தவிர ஒருபோதும் சுபீட்சமான சூழ்நிலைகளை உருவாக்கப்போவதில்லை.


தமது வக்கிரகங்களை அப்படியே வெளிக்காட்டும் உலகத்தலைவர்கள், பேச்சுக்கள், கூட்டுறவுகள் என்பவற்றின்மேல் நம்பிக்கையில்லாமல் சதி முயற்சிகளையே முதன்மையாக கொண்டுள்ள சர்வதேச திட்டங்கள், ஒரு நாட்டிற்கு இன்னொரு நாடு குழிபறிக்க தருணம் பார்த்திருக்கும் பொழுதுகள், ஆண்டுகள் பல கடந்தாலும் சில வக்கிரகங்களை மனதில் வைத்திருந்து வஞ்சம் தீர்க்கும் செயற்பாடுகள் என்பன ஒரு போதும் மேல் நிலைப்பட்ட உலகத்தினை கட்டியெழுப்பப்போவதில்லை.
ஒவ்வொரு நாட்டு பயங்கரவாதத்தையும் கண்டிப்பாக அந்த நாடோ அல்லது, இன்னுமொரு நாடோதான் வளர்த்துவிடுகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.
பயங்கரவாதம், விடுதலைப்போராட்டம் என்பதை மேற்குறிப்பிட்ட செப்ரெம்பர் 11 தாக்குதலின்பின்னர் உலகம் பிரித்துப்பார்க்கத்தவறிவிட்டது உலகலாவிய ரீதியில் பல ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை உலகமே சேர்ந்து ஒடுக்கிவிட்ட நிலையினை எற்படுத்தியுள்ளது. ஆனால் என்றோ ஒருநாள் உலகம் தான் விட்டபிழைகளை உணரும் தருணம் வரும். ஆனால் காலம்கடந்து, கண் கெட்டபின்னர் சூரிய நமஸ்காரம் யாருக்கும் தேவைப்பட்டிருக்காது. ஆதற்காக சாம்பல்களிலும், சமாதிகளிலும் விழுந்தே உலகம் மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை உருவாகும்.

இப்போது போன்ற நிலையில், கையாலாகாத ஒரு ஐக்கிய நாடுகள் சபையினையும், தேச நலன்களுக்காக தர்மங்களை நீதிகளை ஒடுக்கும்போக்கு கொண்ட வெளியுறவு கொள்கைகளையும், சதிவலைகளையும் சர்வதேசமும், நாடுகளும் ஒருவருக்கொருவர் பின்னிக்கொண்டிருந்தால், மீண்டும் ஒரு ஹிட்டலர் வந்துதான் உலகத்தை திருந்தவேண்டிய நிலை கண்டிப்பாக உருவாகும்.

Thursday, September 10, 2009

அறிவிப்பின் சிகரங்கள் (இருவர்….)


தமிழ் மொழியில் ஒலி ஊடகத்தின் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, நிகழ்ச்சிகள் வழங்குவதிலும், நிகழ்ச்சிகளின் தரத்திலும், குறிப்பாக தென்னிந்திய திரைப்படப்பாடல்கள், திரைப்படங்களுக்கு முதன்முதலில் ஒரு முகவரியினை தந்த ஊடகமாக இலங்கை வானொலியினையே கூறிக்கொள்ளவேண்டும்.
இன்றைய தமிழ் ஒலி, மற்றும் ஒளி ஒலி ஊடகங்களில் இடம்பெறும் சகல நிகழ்ச்சிகளையும் எடுத்துக்கொண்டால் அவற்றின் அத்திவாரமாக இலங்கை வானொலியின் அன்றைய நிகழ்ச்சிகளே உள்ளன என்றே முடிவாகக்கூறிக்கொள்ளலாம். இதை எவரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

இலங்கை என்ற வட்டத்தினை உடைத்து தென்னிந்தியாவிலேயே அன்றைய நாட்களில் வானொலிகளை நோக்கி மக்களை ஒன்றுகூடவைத்தவர்கள் இலங்கை வானொலியின் தயாரிப்பாளர்கள், மற்றும் அறிவிப்பாளர்களே. தமிழ்நாட்டில் 35 வயதினை தற்போது கடந்தவர்கள் எவரை கேட்டாலும் இலங்கை வானொலியினூடான தமது அனுபவங்களை மிக ஆர்வமாக பேசுகின்றார்கள். இலங்கை நேயர்களைவிட பல அரிய நிகழ்ச்சிகள், நாடகங்கள், தாளலயங்களை ஒலிப்பதிவு செய்து இன்றும் பொக்கிசங்களாக பாதுகாத்துவருகின்றனர்.
இத்தகய பெருமைகளையும், வரலாற்று முத்திரையினையும் பதித்து இன்றும் பலரது மனங்களில் அழியாத நினைவு ஓசையாக கேட்டுக்கொண்டிருக்கின்றது இலங்கை வானொலி.

இவ்வாறு தேச எல்லைகளைக்கடந்து பல கோடி நெஞ்சகளை செவி மடுக்கவைத்த இலங்கை வானொலியில் சிகரங்களாக கே.எஸ்.ராஜா மற்றும் பி.ஏச்.அப்துல்ஹமீத் அகியோர் பெரும்பாலானவர்களால் கருதப்படுகின்றார்கள். சிவாஜி – எம்.ஜி.ஆர் என்ற இருவருக்கும், பின்னர் கமல் - ரஜினி என்ற இருவருக்கும் எவ்வாறு தமிழ்நாட்டில் இடம்கொடுத்தார்களோ அதேபோல வானொலி அறிவிப்பில் கே.எஸ்.ராஜா - ஹமீத் அகியோரின் குரல்களுக்கு இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் பெரும்பான்மையான இரசிகர்கள் இடம்கொடுத்திருந்தனர்.

கே.எஸ்.ராஜா அறிவிப்பு செய்த திரைப்பார்வை, இலங்கை வானொலி அறிமுகப்படுத்திய பாடல் தேர்தல், இலங்கை வானொலி அறிமுகப்படுத்திய வானொலிநாடகம், இலங்கை வானொலி அறிமுகப்படுத்திய வானொலி மாமா, இலங்கை வானொலி அறிமுகம் செய்துவைத்த வினோதவேளை, என பல நிகழ்ச்சிகள், இன்று ரொப் 10, பாடல் கவுண்டவுன், மெகா தொடர்கள், என தமிழ்நாட்டில் (தமிழ் தொலைக்காட்சிகளில்???) இடம்பெற்றுவருகின்றன. ஆதார சுருதி இலங்கைவானொலியே என்பதுவும், இன்றும் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான இரசிகர்கள் மதிக்கும், பெருமைகொள்ளும் ஒரு வானொலி இலங்கைவானொலி என்பதுவும், இன்றைய இலங்கை அறிவிப்பாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு புரியாமல், தென்னிந்திய அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சி வழங்குனர்களின் பாணியில் தாம் அறிவிப்பு செய்வதை பார்த்து அழுவதா? சிரிப்பதா? எனத் தெரியாமல் உள்ளது.

தனியார் வானொலிகள் இலங்கையில் முளைக்கத்தொடங்கிய காலத்தில் ஒரு தனியார் வானொலி சுத்தமான தமிழில் உரையாடி மக்களை கஸ்டப்படுத்தியதால்த்தான் அது முதல் இடத்திற்குவரமுடியவில்லை என்று பணிப்பாளர்களையும், அறிவிப்பாளர்களையும் மாற்றிய அதி திறமைசாலிகள் உள்ள இடத்தில் தமிழின் நிலைமையினை எண்ணிப்பாருங்கள். அது இப்படியிருக்க தமிழுக்கு வந்த சோதனையாக சொர்ணமாக ஒலி ஒன்று நாரசுரமாக ஒலித்து கூச்சல் போட்டது, இலங்கை தமிழ் வானொலி நேயர்கள் செய்த புண்ணியமோ? அல்லது ஆரம்பகால அறிவிப்பாளர்கள், தயாரிப்பாளர்களின் நிகழ்சிகள் வந்த அலைவரிசையில் இந்த அவலமோ என இயற்கை எண்ணியதாலோ என்னமோ அந்த வானொலி இடையில் நின்றுவிட்டது. இதனால் நின்மதி பெருமூச்சுவிட்டது தமிழாகத்தான் இருக்கும்.

அறிவிப்பு என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று குன்றின் மேல் விளக்காக நின்றவர்கள் கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீத்துமே. அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி விழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பாணத்தை காதுவழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா. அதேபோல தமிழின் வசனங்களின் ஏற்ற இறக்கம், மொழியின் கம்பீரம், கேட்பன யாவையும் மனதில் நின்று அழியாத சொற்பிரயோகம் என்பவற்றை தனது அறிவிப்பு நடையாக பேசி, தமிழ் என்றால் ஹமீத் பேசுவதுபோல இருக்கவேண்டும் என அனைத்து தமிழர்களையும் சொல்லவைத்தவர் ஹமீத். இந்த இரண்டுபேருமே எடுத்துக்கொண்ட விடயத்தை சில சொல்லாடல்கள் மூலம் மனதில் நிலைத்துநிற்பதாக, பொட்டில் அடித்தால்ப்போல் நேயர்களின் மனதில் பதியவைக்கும் இலாவகம் கொண்டவர்கள் என்றால் அது மிகையாகாது.

கே.எஸ்.ராஜா

கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜா என்ற இயற்பெயர் கொண்ட கோடி உள்ளங்களை கொள்ளை கொண்ட கே.எஸ்.ராஜா அவர்கள் யாழ்ப்பாணம் காரைநகரை பிறப்பிடமாகக்கொண்டவர். அங்கிருந்து பின்னர் யாழ்ப்புறநகர்ப்பகுதியான கொட்டடியில் வசித்துவந்த இவர், இலங்கைவானொலியில் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் அசைக்கமுடியாத ஒரு இடத்தினை கொண்டவராக குறுகிய காலத்தினுள் அனைவரினதும் இதயத்தை கவர்ந்தவர்.
கம்பீரமான, வேகமான மிகத்தெளிவான உச்சரிப்பில் இவரது குரல் ஒலிக்கும்போதே வானொலியை நோக்கி மக்களை செல்லவைத்த வித்தகர் இவர்.

ஆரம்பத்தில் இருந்தே இவர் தனக்கேயான இந்தப்பாணியினை நடைமுறைப்படுத்தியிருந்தாரா? என்ற கேள்வி எனக்குள்ளே பல ஆண்டுகளாக குடியிருந்தது. நீண்டநாள் இந்தக்கேள்வியை தீர்த்துவைத்தவர் திரு.அப்துல் ஹமீத் அவர்களே. ஊடகப் பயிற்சி அரங்கு ஒன்றுக்கு பிரதம அதிதியாக வந்திருந்த ஹமீத் அவர்களிடம் திரு.கே.எஸ்.ராஜாவை பற்றிய சில கேள்விகளை அவரது பக்கத்தில் இருந்து பணிபுரிந்தவர் என்ற ரீதியில் அவரிடம் நான் கேட்டிருந்தேன்.
அதற்கு பதிலளித்த ஹமீத் அவர்கள், கே.எஸ்.ராஜா அவர்கள் ஆரம்பகாலத்தில் அவருக்கு உரியது என்ற பாணியில் அறிவுப்புக்களை செய்யவில்லை எனவும். ஒருநாள் இரவு தாம் இருவரும் நெடு நேரமாக அறிவுப்பு குறித்தும், நிகழ்ச்சிகள் குறித்தும் பேசிவிட்டு சென்றதாகவும். மறுநாள் காலை கே.எஸ்.ராஜா அவர்களுக்கு நிகழ்ச்சிகள் இருந்ததாகவும், அன்று காலை எதேட்சையாக வானொலியை திருப்பியபோது தமக்கு அதிர்ச்சி காத்திருந்ததாகவும், வேகமான தொனியில், அழுத்தம் திருத்தமான உச்சரிப்பில், கம்பீரமாக ஒரு குரல் ஒலித்துக்கொண்டிந்ததாகவும், யாராவது புதிய அறிவிப்பாளர் ஒருவர் வந்துவிட்டாரா? என தான் யோசித்துக்கொண்டிருந்தபோது நிகழ்ச்சி முடிவில் “அன்பு வணக்கத்துடன் விடைபெற்றுக்கொள்வது உங்கள் கே.எஸ்.ராஜா” என்று புதிய தொனியில் அவர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் தான் உட்பட சக அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜாவிடம் இந்த வித்தியாசமான தொனி அறிவிப்பு குறித்து விவாதித்ததாகவும், எனினும் அடுத்து வந்த வாரங்களில் கே.எஸ்.ராஜா அவர்களுக்கு பெருமளவிலான பாராட்டுக்கடிதங்கள் வந்து குவியத்தொடங்கியதாகவும் அப்போதே அவர் சிகரங்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டதை தான் உணர்ந்துகொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.


இன்றும் எனக்கு நினைவு இருக்கின்றது. நீயா திரைப்படம் பற்றிய விளம்பரம் ஒன்றில் அந்த திரைப்படத்தில் இச்சாதாரிப்பாம்பாக சிறீப்பிரியா மற்றும் கணேஸ் தோன்றும் காட்சியில் மனிதரூபம் கொண்ட பாம்பு என்று தெரியாமல் ஆண்பாம்பினை கமல் ஹாசன், வியஜகுமார் குழுவினர் சுட்டுக்கொல்லும் கட்டத்தில், குற்றுயிராக கிடக்கும் தமது ஜோடியை மடியில் தூக்கிவைத்து சிறீப்பிரியா கதறும், “ராஜா என்னை விட்டுப்போயிடாதீங்க ராஜா” என்ற வசனத்தை இறுதியில் ஒலிக்கவைத்துவிட்டு. இல்லை நேயர்களே உங்கள் ராஜா இன்று விடைபெறும் நேரம் வந்துவிட்டது மீண்டும் அடுத்தவாரம் உங்களை சந்திக்கின்றேன் என்று கூறி நேயர்களிடமிருந்து விடைபெறுவது அதிசயிக்கவைத்தது.

அது மட்டுமின்றி அண்மையில் இராமேஸ்வரம் சென்றபோது நான் சந்தித்த ஒரு வயதான இளைப்பாறிய அதிபர் ஒருவர். என்னுடன் நீண்டநேரமாக அளவலாவியபோது கே.எஸ்.ராஜா அவர்களின் குரலுக்கு தான் பரம இரசிகர் என்பது மட்டும் இன்றி அவர் பற்றிய பல தகவல்களையும் உட்சாகத்துடன் தெரிவித்தார். கே.எஸ்.ராஜா அவர்களின் நிகழ்ச்சிகள் பலவற்றை தாம் ஒலிப்பதிவு செய்து தற்போதும் பொக்கிசமாக வைத்திருப்பதாக தெரிவித்தார். 1984ஆம் ஆண்டு சென்னையில் தான் அவரை சந்தித்து பலமணிநேரம் கே.எஸ்.ராஜாவுடன் உரையாடியதாகவும் அந்த நாளை இன்னும் தன்னால் மறக்கமுடியாது என்றும் தெரிவித்ததுடன் எனக்கு தெரியாத பல விடயங்களை என்னிடன் அவர் பேசியது என்னை பிரமிக்கவைத்தது.

கே.எஸ்.ராஜா பற்றியும், கே.எஸ்.ராஜாவுடைய நிகழ்ச்சிகள் சிலவற்றின் ஒலிப்பதிவினையும், விளம்பர ஒலிப்பதிவு சிலவற்றையும் நண்பர் யாழ் சுதாகர் அவர்கள் http://madhurakkural.blogspot.com/ என்ற வலையமைப்பில் பதிந்துவைத்துள்ளார். கே.எஸ்.ராஜா அவர்களைப்பற்றி தெரியாத இன்றைய இளம் அறிவிப்பாளர்கள், இளையவர்கள் இந்த தளத்திற்கு விஜயம் செய்து கே.எஸ்.ராஜாவின் மதுரக்குரலினை செவிமடுத்துக்கேட்டு, பல அரிய தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

1989ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற அசம்பாவித செயல் ஒன்றின்மூலம் கே.எஸ்.ராஜா அவர்கள் இந்த உலகை விட்டு பிரிந்திருந்தாலும், கோடான கோடி தமிழ் வானொலி நேயர்களின் மனதில் இன்றும் அவரது நினைவுகளும், அவரது மதுரக்குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.

பி.எச்.அப்துல் ஹமீத்“

இந்தக்குழந்தை தொட்டிலில் இருந்து கேட்டுக்கொண்டே வளர்ந்தது உங்கள் குரலைத்தான். கண்டிருந்தேன் பல கனவுகள் உங்களிடம் பேசுவதாக…இன்று!
கனவில்லை நிஜமாகவே உங்கள் பகத்தில் நான்”
திரு. அப்துல் ஹமீத் அவர்களை முதல் முதலாக சந்தித்து அவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தபோது அன்று நான் அவரிடம் வாங்கிய ஓட்டோகிராப்பில் நான் எழுதிய வசனம் இதுதான்.
உண்மையில் அந்த அளவுக்கு நான் அவரது குரலுக்கும், தமிழுக்கும் மகுடி ஒலி கேட்ட பாம்பாகவே மாறிவிடுவது என்னமோ உண்மையே.
எந்த வளமில்லாத தமிழ்ச்சொல்லும் அவரது வாயில் இருந்து வரும்போது வயதிற்கு வந்துவிடுவது அச்சரியமே.


உலகத்தமிழ் அறிவிப்பாளர் என்ற சொல் கனகச்சிதமாக அவருக்கு பொருந்திவிட்டது ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒரு வானொலி நாடகக்கலைஞனாக அறிமுகமாகி, வானொலி நாடக நடிகனாக, நாடக நடிகனாக, நாடக தயாரிப்பாளனாக, அறிவிப்பாளராக, வர்த்தக அறிவிப்பாளராக, போட்டி நிகழ்ச்சி அறிவிப்பாளராக, செவ்வி காண்பவராக, திரைப்பட நடிகராக என பல பாத்திரங்களை தனது வாழ்க்கையில் அப்துல் ஹமீத் அவர்கள் வகித்துள்ளார்.
பெரிதாக கல்வி கற்றிராதபோதும் தனது முன்னேற்றத்திற்கு ஏற்றவாறும், அறிவிப்புத்துறைக்கு ஏற்றவாறும் பல தேடல்கள் மூலமாக சிறந்த ஒரு அறிஞனாக தன்னை உருவகித்துக்கொண்டது இவரது தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றி என்றே கூறவேண்டும்.


ஞாபக சக்தி என்ற பதத்திற்கு கண்டிப்பாக ஹமீத் குறிப்பிட்டு காட்டப்படவேண்டிய ஒருவரே. இன்றும் கூட தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து எத்தனை பாடல்கள் என்றாலும் அந்த பாடல் பற்றிய சகல விடயத்தினையும் தனது நினைவாற்றல்மூலம் கொண்டு சிறந்த ஒரு நடமாடும் ஒலிப்பேழை களங்சியமாக அவர் திகழ்ந்துவருகின்றார்.
திரு அப்தல் ஹமீத் அவர்களைப்பற்றி கூறிக்கொண்டேபோகலாம்.
மேலும் இவர் பற்றி பல அரிய தகவல்கள், அவரது செவ்விகள், அவர்பற்றிய தகவல்கள், என்பவற்றை பெற http://www.bhabdulhameed.com என்ற அவரது இணையதளத்திற்கு விஜயம் செய்யுங்கள்.

Sunday, September 6, 2009

C.J.7


மிகப்பிரமாண்டமாக அதிக பொருட் செலவுகளை கொண்டு தயாரிக்கப்படும் வர்த்தக படங்களைவிட ஒரு சிறிய உணர்வோட்டத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் அதிசயிக்கவைக்கும் கதைகள் கூட மக்களின் மனதில் நிலைத்துநின்று வெற்றியினை இலகுவாக அடைந்துவிடுவதை நாம் பார்த்துள்ளோம்.
குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து 80களின் மையப்பகுதிகளில் இருந்து பல தரமான ஈரானிய, சீன திரைப்படங்கள் வெளிவந்து பார்ப்பவர்களின் உணர்வுகளை உறையவைத்துள்ளன.
இந்தப்பாதையில் தற்போது தமிழும் வர தயாராக இருப்பதை “பசங்க” திரைப்படம் உணர்த்தியுள்ளதாலும், ஈரானிய, சீன குழந்தைகள் திரைப்படத்தின் போக்கில் இருந்து மாறுபட்டு தமிழ்த்திரைப்பட நெடியில் இருந்து வெளிவரவில்லை என்றே கூறவேண்டும்.


பொதுவாகவே இன்று இளைஞர்களாகவும், முதியவர்களாகவும் இருக்கும் ஒவ்வொருவருமே, குழந்தைப்பருவத்தில் இருந்தவர்களே, அந்தப்பருவத்தின் சுகங்கள் மீண்டும் கிடைக்காத ஏக்கத்தில் தகிப்பவர்களே. எனவே குழந்தைகளின் உணர்கள், அவர்களின் எண்ணங்களின் வெளிப்பாடுகள் என்பவற்றை ஆழமாக உணர்வோடு ஊடுருவிப்பார்க்கும் திரைப்படங்கள், பார்ப்பவர்களை எழிதில் உறையவைத்து அவர்களின் மனங்களில் நின்றுவிடுகின்றன.
உதாராணங்களாக இத்தகய திரைப்படங்கக்களுக்காகவே எனது முன்னைய ஒரு பதிவில் (http://janavin.blogspot.com/2009/07/blog-post_13.html) விரிவாக சுட்டிக்காட்டியிருந்த, த பாதர், கலர் ஒவ் பரடைஸ், சில்ரன்ஸ் ஒவ் ஹவின் போன்ற திரைப்படங்களைக்கூறலாம்.


அந்த வகையில் சிறுவன் ஒருவனை மையப்படுத்தி அவனுடன் பாசம்காட்டும் அதிசய நாய் ஒன்றின் கதையே சீ.ஜே.7 திரைப்படத்தின் கதையாகும். சென்றவாரம் குமுதம் இதழிலும் “அரசு” அவர்கள் தமது கேள்வி பதில் பகுதியில் இந்த திரைப்படம் பற்றி குறிப்பட்டிருந்ததும், ஏதேட்சையாக இந்த திரைப்படத்தின் டி.வி.டி எனது கண்ணில் பட்டதும் இந்த பதிவினையே உருவாக்கியுள்ளது என்பதை கூறிக்கொள்கின்றேன்.
கொலம்பியா பிக்ஸர்ஸ் ஏசியா, பீஜிங் பிலிம்ஸ் ஸ்ரூடியோ என்பவற்றின் கூட்டுத்தயாரிப்பில், வோய் ஷிங் ரென்னின் நெறியாள்கையில் உருவாகி, 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட திரைப்படம் இதுவாகும்.

சரி.. இனி திரைப்படத்தின் கதைக்குவருவோம், கட்டிடம் கட்டும்பணியில் தினக்கூலியாக வேலை பார்க்கும் “ரீ” என்ற ஏழையின் ஒரே ஒரு மகனே இந்த கதையின் நாயகன் டிக்கி. ஆறுவயதுடைய இவன் தாய் இல்லாத பிள்ளை என்ற காரணத்தினால் அந்த ஏழைத்தந்தையால் மிகவும் செல்லமாக வளர்க்கப்படுகின்றான். அதனாலேயே வறுமைக்கோட்டிற்கு மிக அடியில் இருந்தாலும்கூட தனது மகனை பணம் படைத்தவர்கள் கற்கும் தனியார் பாடசாலை ஒன்றில் கற்கவைக்கின்றார். அழுக்கான உடைகள், கிழிந்த சப்பாத்துக்கள், அழுக்கான காலுறைகளுடன் பாடசாலை வரும் டிக்கியை வகுப்பாசிரியர் மிஸ்ரர். சாஓ தீண்டத்தகாத ஒருவனாகவே நடத்துகின்றார். அவன் பக்கத்தில் வருவதையே அவர் அனுமதிப்பது இல்லை. ஒரு கட்டத்தில் கைதவறி விழும் அவரது பாக்கர் பேனாவை மரியாதையாக எடுத்துக்கொடுக்கும் டிக்கியை, திட்டிவிட்டு. விழுந்த இடத்திலேயே பேனாவை போடும்படி கூறிவிட்டு, பேனாவை தனது கைக்குட்டையால் எடுத்து அவன்மேல் உள்ள அருவருப்பினை காட்டி நம்மை அருவருக்க வைக்கின்றார் அந்த ஆசிரியர்.


ஆனால் அந்தப்பாடசாலையில் ஆசிரியர் கேட்கும் வசந்தம் பற்றிய ஒரு கேள்விக்கு “வசந்தங்கள் வழமையானவைதான், ஆனால் ஒவ்வொரு வசந்தங்களிலும் இடம்பெறும் சம்பவங்கள் வேறுபட்டவை” என்று அவன் தெரிவிக்கும் பதிலில் இருந்தும், உடல் பருமன் காரணமாக அனைத்து மாணவர்களாலும் கிண்டல் செய்யப்பட்டு, ஒதுக்கப்படும் மஹ்கி என்ற உடல் பருத்த சக மாணவிக்காக டிக்கி வாதாடுவதில் இருந்தும், அவள்மேல் கருணை காட்டுவதில் இருந்தும் அவனது குண இயல்புகள் உணர்த்தப்படுகின்றது.
அவனுக்கு வில்லன்களாக அவனது வகுப்பைச்சேர்ந்த ஜோன்னி குழுவினர் எப்போதும் அவனை தாக்குவதிலும், அவனை கிண்டலடித்து ஒதுக்குவதிலுமே குறியாக இருக்கின்றனர். அவனுக்கு அந்தப்பாடசாலையில் இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் மிஸ்.யூஆன் என்ற அழகிய ஆசிரியைதான்.


பணக்கார சிறுவனான ஜோன்னி பாடசாலைக்கு சி.ஜே.2 என அழைக்கப்படும் ரோபோ ரக நாய் ஒன்றை கொண்டுவந்து தன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிக்கின்றான். அதை ஒதுங்கியிருந்து, ஆவலுடனும் ஆசையுடனும், கண்களில் ஏக்கத்துடனும் பாhர்க்கின்றான் டிக்கி. அதைக்கவனித்த ஜோன்னி குழுவினர் அவனை விரட்டி அடிக்கின்றனர். அதன் பின்னர் தன் தந்தையுடன் வீதியோரம் அமர்ந்து தொலைக்காட்சி விற்பனை நிலையத்தின் கண்ணாடிச்சாளரத்தினூடாக தொலைக்காட்சியை பார்த்து இரசிக்கின்றான் டிக்கி. திடீரென அருகில் இருக்கும் சுப்பர் மார்க்கட் ஒன்றினுள் நுளைகின்றான். அங்கே அந்த ரோபோ ரக பொம்மையை பார்த்து அதை ஆசையுடன் எடுத்து பார்க்கின்றான். உள்ளே நுளைந்த தந்தை அவனை வெளியே வருமாறு அழைக்கின்றார். அனால் டிக்கி அந்த நாய் ரோபோ பொம்மை வேண்டும் என அடம்பிடிக்கின்றான். தமது நினைமையினை புரியாமலா நீ, இவ்வாறு நடக்கின்றாய், அதன் விலை என்ன தெரியுமா? என தந்தை அதட்டுகின்றார். இருப்பினும் அவன் அந்த பொம்மை வேண்டும் என தொடர்ந்தும் அடம்பிடிக்கின்றான். இறுதியில் தந்தை அவனுக்கு அடிக்கின்றார். அங்கிருந்து ஓடுகின்றான் டிக்கி. வழியில் அவனது ஆசிரியை மிஸ் யூஆனை கண்டு அவரைக்கட்டிப்பிடித்துக்கொண்டு அழுகின்றான் டிக்கி.


பழைய பொருட்கள் கொட்டப்படும் இடத்தில் இருந்து வீட்டிற்கு ஒரு மின்விசிறியை கொண்டு வருகின்றார் டிக்கியின் தந்தை. ஆவலுடன் இருவரும் அதை இயக்க முற்படுகின்றனர் ஆனால் மின் விசிறி சுழல ஆரம்பித்தவுடனேயே உள்ளே மின் ஒழுக்கு ஏற்பட்ட காரணத்தினால் சுற்றாமல் நின்விடுகின்றது. சோர்வுற்றவர்களாக இருவரும் தூங்குகின்றனர்.
மறுநாளும் அதே பழைய பொருட்கள் கொட்டும் இடத்தில் வந்து பொருட்களை தேடுகின்றார் டிக்கியின் தந்தை. அப்போது அங்கே இருந்து “பறக்கும் தட்டு” ஒன்று மேலெழுந்து செல்கின்றது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவராக அங்கே நிற்கும் அவரின் கண் எதிரில் பச்சை நிறத்தில் பந்து போன்ற ஒரு பொருள் அந்த பறக்கும் தட்டில் இருந்து விழுந்து கிடப்பது தெரிகின்றது. அதை ஒரு விளையாட்டுப்பொருளாக தனது மகனுக்கு கொண்டுவந்து கொடுகின்றார் அவர்.


ஒரு கட்டத்தில் அந்தப்பந்தில் இருந்து நாய் ஒன்று உருவாகின்றது. அந்த நாய் உருவாகும்போது தான் பிரபஞ்சத்தில் மிதப்பதுபோன்றும், பிரபஞ்சத்தின் சக்தி அந்த நாய்க்கு உண்டு எனவும் டிக்கி அறிந்துகொள்கின்றான். அந்த நாய்க் குட்டியை யாருடைய கண்களிலுல் படாதபடி அவன் பாதுகாத்துக்கொள்கின்றான். அதற்கு சீ.ஜே.7 என்று பெயர் சூட்டுகின்றான். வழமையாக அழுகிப்போன அப்பிள் பழங்களை வெட்டி மிஞ்சும் சிறுதுண்டு நல்ல பகுதியை சாப்பிடும் அவன், பழத்தை எடுக்கும்போது அது தவறி கீழே விழுகின்றது, கீழே விழுந்த அந்தப்பழத்தினை சீ.ஜே.7 பார்த்ததும் ஒரு ஒளிதோன்றி மறைய அந்த அழுகிய பழம், புத்தம் புதிய பழமாக மாறுகின்றது. அன்று இரவே தந்தையும் மகனும் புழுக்கத்தில் படுத்திருப்பதை பார்க்கும் சீ.ஜே.7 தனது சக்தியால் மின் ஒழுக்கு ஏற்பட்டு தீர்ந்துபோயுள்ள மின் விசிறியின் வயர்களை சீரமைக்கின்றது உடனே மின்விசிறி சுற்றுகின்றது. அதாவது இறந்த கலங்களை மீண்டும் புதுப்பிக்கும் சக்தி இந்த நாய்க்குட்டிக்கு உள்ளது என்பது பார்வையாளர்களான எமக்கு புரிகின்றது.


ஆனால் அதனிடம் எதையும் செய்யும் சக்தி உள்ளது என்று நம்பும் டிக்கி, தான் பரீட்சை எழுதும் போது சீ.ஜே.7 தயாரித்துக்கொடுத்த கண்ணாடியை அணிந்துகொண்டு பரீட்சை எழுதுவதாகவும், சீ.ஜே.7 தயாரித்துக்கொடுத்த ஒரு சப்பாத்தினை அணிந்து தான் ஒரு சுப்பர் ஹீரோ ஆவதாகவும் கனவு காண்கின்றான். அப்படியே நடக்கவேண்டும் என எண்ணுகின்றான். ஆனால் நிஜத்தில் எல்லாம் தலைகீழாகவே நடக்கின்றன. தான் எதிர்பார்த்த சக்தி சீ.ஜே.7 க்கு இல்லை என்றும் ஆத்திரத்துடன் அந்த நாய்க்குட்டியை அடித்து, சித்திரவதை செய்கின்றான் டிக்கி. ஆத்திரத்தின் உச்சியில் அதை ஒரு பையில்போட்டு குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வீதியில் நடக்கின்றான். அப்போதான் சுய நினைவுக்கு வந்தவனாக தான் கொஞ்சம் மோசமாக நடந்துவிட்டதாக உணரும் அவன் ஓடிச்சென்று குப்பை தொட்டியை பார்க்கின்றான் குப்பைத்தொட்டி காலியாக இருந்தது. தூரத்தில் குப்பைகள் சேகரிக்கும் வாகனம் சென்றுகொண்டிருந்தது.


சோகத்துடன் வீட்டிற்குவரும் அவன். வாசலில் நின்று அழுகின்றான். கதவை திறந்து அவனை உள்ளே இழுத்துச்செல்லும் அவனது தந்தை. உனக்கு ஆச்சரியமான பரிசு ஒன்று உள்ளது என சொல்லி, சீ.ஜே.7ஐ காட்டுகின்றார். அந்த நாய்க்குட்டியும், அவன்மேல் செல்லமாக தாவி தனது அன்பினை அவனுக்கு வெளிப்படுத்துகின்றது. அடுத்து நடந்துமுடிந்த பரீட்சையில் 00 மதிப்பெண்ணை பெற்ற அவன் அதை 100 என ஆக்கி தந்தைக்கு கொடுத்துவிட்டு போகின்றான். ஆனால் அவனது தந்தை அதை நம்பி தான் தொழில் புரியும் இடத்தில் தொழிலாளர்களிடமும், தனது முதலாளியான ஜொன்னியின் தந்தையிடமும் காட்டுகின்றார். ஆனால் முதலாளி உனது மகன் ஒரு ஏமாற்றுக்காரன், எனது மகனுக்குத்தான் அந்த வகுப்பில் முதல் புள்ளிகள் அவனுக்கே 100 வரவில்லை எனத் தெரிவிக்கின்றார். ஆத்திரமும் அவமானமும் உள்ளவராக வீடுவரும் தந்தை டிக்கியை அழைத்து விடயத்தை கேட்கின்றார். தான் புள்ளிகளில் மாற்றம் செய்ததை ஒத்துக்கொண்ட டிக்கி. தந்தையுடன் கோபித்தக்கொண்டு எனக்கு நீங்கள் தேவையில்லை என்று அழுதுகொண்டே ஓடுகின்றான்.


பின்னர் நன்றாக படித்து 65 புள்ளிகளை பெற்றுவிட்டு தந்தைக்கு அதைக்காட்ட ஓடிவருகின்றான் டிக்கி. தொழில் புரியும் இடத்தில், மேல் தளத்தில் இருந்து அசம்பாவிதம் ஒன்றினால் கீழே விழுந்து பலத்த காயத்திற்கு உள்ளாகின்றார் டிக்கியின் தந்தை. மரணத்துடன் போராடும் அவரை அவரது முதலாளி வைத்தியசாலையில் அனுமதித்திருக்கின்றார். டிக்கிக்கு எதுவும் புரியாமல் விழிக்கின்றான். ஆனால் அவனது அன்பு ஆசிரியை யூஆன் அவனுக்கு விடயத்தை புரியவைத்து அவனது வீட்டிற்கு அழைத்து செல்கின்றாள். அவளை தன்னை தனியாக விடும்படி கூறி அழும் டிக்கி, கதவைப்பூட்டிக்கொண்டு தனது தந்தையை நினைத்து அழுகின்றான். தனக்கு தந்தை தேவை என்பதையும், தனக்காக தனது தந்தைபடும் கஷ்டங்களையும் எண்ணி அழுகின்றான்.
அதேநேரம் தந்தையின் பையில் இருக்கும் சீ.ஜே.7 எழுந்து அவரது நிலையினை உணர்ந்து, தனது சக்தியால் அவரது கலங்களை புதுப்பித்து அவரை காப்பாற்ற முயற்சிக்கின்றது. அனால் இதற்கு தனது சக்தி முழுவதும் தேவை என்பதை உணர்ந்து, தனது உயிரின் சக்திகள் அனைத்தினையும் கொடுத்து அவரை காப்பாற்றுக்கின்றது.


மறுநாள் கண்விழிக்கும் டிக்கிக்கு அருகில் அவனது தந்தை படுத்திருக்கின்றார் சந்தோச மிகுதியால் அவரை கட்டிப்பிடித்து அழும் டிக்கி, தந்தையிடம் மன்னிப்பு கேட்டு, அவர் இல்லாமல் தன்னால் வாழமுடியாது என்று தனது அன்பை தெரிவிக்கின்றான். இறக்கும் தறுவாயில் இதை ஆனந்தக்கண்ணீருடன் பார்க்கின்றது சீ.ஜே.7. தனது எஜமானர்கள் தன்னை பார்க்கின்றனர் தனது அன்பினை அவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும் என துள்ளி எழுந்து அவர்களிடம் ஓட முற்படுகின்றது அது. ஆனால் முடியவில்லை. டிக்கியை பார்த்தவாறே தனது இறுதி பொழுதுகளை நெருங்கி மரணிக்கின்றது. அதன்பின்னர் சீ.ஜே.7 ஒரு பொம்மையாக மாறிவிடுகின்றது. அதை தனது கழுத்தில் அணிந்துகொண்டே அதன் நினைவுடனேயே திரிகின்றான் டிக்கி. ஏதாவது அதிசயம் நிகழ்ந்து தன் சீ.ஜே.7 தன்னிடம் திரும்பாதா? என ஆவலுடன் மைதானத்தில் படுத்திருக்கின்றான். அவனுக்கு நேரே பறக்கும் தட்டு ஒன்று பறந்து சற்றுத்தள்ளி இறங்குகின்றது. ஓடிச்சென்று ஆவலுடன் பார்க்கின்றான். அங்கே அவனும் சீ.ஜே.7ம் விருப்பத்துடன் ஆடும் பொனியம் இசைப்பாடலுடன் சீ.ஜே.7 முன்னால் ஓடிவர அதன்பின்னால் நிறைய அதை ஒத்த நாய்க்குட்டிகள் ஓடிவருகின்றன. இந்தக்காட்சியுடன் திரைப்படம் முடிவடைகின்றது.
இது உண்மையான நிகழ்வா அல்லது அவனது நினைவா? எனத் தெரியாமலேயே அந்த திரைப்படம் முற்றுப்பெறுகின்றது. ஆனால் பார்வையாளர்கள் நிச்சயம் டிக்கி சீ.ஜே.7ஐ மறுபடியும் அடைந்துவிட்டான் என்றே எண்ணுவார்கள்.

Saturday, September 5, 2009

அன்னையே உம்மை ஆராதிக்கின்றேன்….


பிறப்பினால் ஒரு றோமன் கத்தோலிக்க பெண்ணாகவும், பின்னர் ஒரு கன்னியாஸ்திரியாகவும் தன்னை உருவாக்கிக்கொண்ட அல்பேனிய நாட்டினை பூர்வீமாகக்கொண்ட ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற இயற்பெயரைக்கொண்ட “அன்னை தெரேசா” (16.08.1910 - 05.09.1997)என உலக மக்கள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டு, நாம் வாழும் காலத்தில் நமது தாய்மாரை தவிர்த்து உலகில் உள்ள அனைவரும் முதலில் விரும்பும் ஒரு தாயாக இருந்தவர் அன்னை தெரேசா.
மதத்தினையும், அவர் ஒரு கன்னியாஸ்திரி என்பதையும் விட்டுவிட்டு பார்த்தோமானால் மனிதநேயத்திற்காக உறுதியாக அவர் வாழ்ந்ததும் அவரது அர்ப்பணிப்பும் தெரியவரும்.


மதத்தினை புறந்தள்ளிவிட்டு ஒரு தாய்மை உள்ளம் உடைய தாயாராக அவர் இருந்தமையினையும், மனித நேயத்தின்மேல் உறுதிகொண்டு பல அவமானங்களைச்சந்தித்தும் தைரியமாக மன உறுதியாக தனது மனிநேய கொள்கையில் வாழ்ந்து காட்டியதற்காகவும் அந்த உன்னதமான அன்னையினை ஆராதிப்பதில் தவறில்லை.


அன்னையைப்பற்றி திரும்ப திருப்ப அவரது வரலாற்றினை சொல்வது திராட்சைத்தோட்டத்திற்கு அருகில் நின்று திராட்சைப்பழம் விற்பதுபோன்றதாகும்.
எனினும் மதக்கட்டுக்குள் நின்றுவிடாது மனித நேயத்திற்காகவும், ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும், நோயாளர்களுக்காகவும் அன்னை ஆற்றிய பணிகளின் போது ஏற்பட்ட சம்பவங்கைளைக்கூறினாலே அவரைப்பற்றி அனைவரும் ஒரு மனக்கணக்கு போட்டுக்கொள்ளலாம்.


ஆதரவற்று கைவிடப்பட்ட குழந்தைகள், சாக்கடையில் இருந்த குழந்தைகள், நோய்வாய்ப்பட்ட, ஊனமான குழந்தைகளை, அன்புள்ளம் கொண்டு அன்னை காப்பகம் அமைத்து பராமரித்து வந்தநேரம் அதிகாலைநேரத்திலேயே கண்விழித்து பணம் படைத்தவர்களிடம் யாசகம் கேட்டு அந்த குழந்தைகளுக்கு நிதி திரட்டிவந்தார். அப்படி ஒரு சமயம் ஒரு செல்வந்தரிடம் அவரது விற்பனை நிலையத்தின் முன்னால் சென்று அவரிடம் அன்னை கையேந்தியபோது. ஆத்திரத்துடன் அவர் அன்னையில் கையில் எச்சிலை துப்பினார். அப்போதும் முகத்தில் தமது சாந்த ரூபம் மாறாத அன்னை, “நன்றி கனவானே! எனக்கான இந்த பரிசை நிறைந்த மனதுடன் நான் எற்றுக்கொள்கின்றேன், என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள்” என்று அன்புடன் கூறினராம். உடனடியாக மனம் தெளிந்த அந்த செல்வந்தர் அன்னையிடம் மன்னிப்பு கேட்டு தன்னிடம் அப்போதிருந்த பணம் முழுவதையும் கொடுத்தாரம்.


போப்பாண்டவர் ஒரு முறை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தனது பயணங்களுக்காக அவர் பயன்படுத்திய மிகவும் விலையுயர்ந்த காரை, அன்னை தெரேசாவுக்கு பரிசாக வழங்கினாராம். அன்னை எப்போதும் சொகுசுவாழ்வுக்கும், மக்களிடமிருந்து தான் மேல்நிலையில் உள்ளவர் என்பதுபோன்ற எண்ணமும் இல்லாதவர் என்பதனால் அதை விரும்பவில்லை என்றாலும் கொடுத்தவர் பாப்பரசர் என்பதால் அதை ஏற்றுக்கொண்டு, அடுத்த கணமே அந்த காரை ஏலத்தில் விட்டு அதில் கிடைத்த பணத்தினை மனிதநேயத்தின் உச்சமாக சமுக சேவைகளுக்கு பயன்படுத்தும்படி தெரிவித்தார்.


இந்த சிலிர்க்க வைக்கும் ஒரு சில சம்பவங்களே அன்னையின் குண இயல்புகளை காட்டுகின்றது அல்லவா? மதங்களை தூக்கி எறிந்துவிட்டு அந்த அன்னையின் மனித நேயத்திலும், சமுக அக்கறையிலும் மதிப்பு வைத்துபார்ப்பவர்களில் ஒருவன் நான். அந்த அன்னையின் உன்னதமான அர்ப்பணிப்பான வாழ்க்கையினையும், சமுக சேவையினையும்கூட கேவலமாக விமர்சித்தார்கள் சில கிறிஸ்தவர்கள். இந்த அன்னைக்கு புனிதர் பட்டம் கொடுக்கலாமா? என படு மோசமான விமர்சனங்களைக்கூட சில கிறிஸ்தவர்களும், சில கிறிஸ்தவ சபைகளும் தெரிவித்திருந்தன. நான் மேற்குறிப்பட்ட “கார் கொடுத்த சம்பவத்திலேயே” சில விடயங்கள் புரிந்திருக்கும் அல்லவா உங்களுக்கு!


மதங்களையும், கடவுள்களையும் தூக்கி எறிந்துவிட்டு நான் பார்க்கும் பார்வையில்: ஆதரவற்ற, ஊனமான குழைந்தைகளுக்கு காப்பரனாக, நோயாளர்களின் வலிநிவாரணியாக, சமுக சேவையின் சிகரமாக, தாய்மையின் முதன்மையாக, தூய்மையின் உறைவிடமாக
இறுதிவரை இருந்த அன்னையே உம்மை இவர்கள் கூறிக்கொள்ளும் மதங்களைவிட, கடவுளர்களைவிட உயர்ந்தவராக ஆதாரிக்கின்றேன்.
நண்பர்களே நீங்கள் எப்படி????

Thursday, September 3, 2009

திடீரென இலங்கையில் காட்சி கொடுக்கும் தெய்வங்கள்!


ஒரு பிரளயமே இடம்பெற்று முடிந்துள்ள இந்த நேரத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தெய்வங்கள் பரவலாக காட்சி கொடுப்பதாகவும் செலவுக்கு பணம் கூட கொடுப்பதாகவும் செய்திகள் வெளியாகி அந்த செய்திகள் பேச்சுவழக்கில் இன்றி ஊடகங்களிலும் இணைய தளங்களிலும் உலாவந்துகொண்டிருப்பது சிரிப்பதா? அழுவதா? என்ற நிலையினை தோற்றுவித்துள்ளது.
கடவுளே எங்களைக்காப்பாற்று என்று தொழுதுநின்ற மக்கள் சதை பிண்டங்களாக சிதறி செத்தபோதும், மொத்த உலகமே கைவிட்ட நிலையில் கடவுளே துணை என்று ஒரு இனமே அழுதுநின்றபோதும் காக்கமறந்த இந்த தெய்வங்கள், இப்போது மட்டும் பிணம் தின்னவா இறங்கிவருகின்றன? தற்போது வந்து காட்சிகள் வேறு கொடுக்கின்றனவா?

கடவுள் மற்றும் அமானுச சக்திகள் பற்றிய செய்திகள் மிகச்சுவாரசியமானவை என்பதுடன் பலராலும் ஆர்வத்துடன் கேட்கப்பட்டு அதன் பின்னர் அந்த கதைகள் காதுகள், மூக்குகள் என சொல்பவர்கள் ஒவ்வொருவராலும் வைக்கப்பட்டு பூதாகரமான ஒரு செய்தியாகவே மெருகேறிவருகின்றன. நான் யாழ்ப்பாணத்தில் எமது முன்னோருக்கு நடந்த இத்தகைய அமானுச சத்திகள், மற்றும் கடவுள்கள் சம்பந்தப்பட்ட கதைகள் அப்படியே இந்தியக்கிராமங்களிலும் நடந்துள்ளதாக அறிந்துள்ளேன். இதில் இருந்தே இந்த கதைகளின் உண்மைத்தன்மைகளை நாம் அறிந்துகொள்ளலாம். அது எப்படி தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள், அதேபோல நடக்கமுடியும்?


2004ஆம் ஆண்டு சபரிமலைக்கு சென்ற அடியவர்கள் கூட்டத்தில் இருந்து காட்டுவழியே பயணிக்கும்போது ஒரு அடியவர் தனிமைப்பட்டுவிட்டாராம், அவருக்கு தகிக்கமுடியாத தண்ணீர்தாகமும், களைப்பும் எற்பட்டவேளை அவருக்கு ஐயப்பன் காட்சிகொடுத்து அவருக்கு நீராகரம் கொடுத்து, ஒரு பணமுடிப்பும் கொடுத்ததாக அப்போது சில செய்திகள் வந்திருந்தன. இது நடந்து ஐந்து வருடங்களின் பின்னர் அதேபாணியில் கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொண்டிருந்த பெண் ஒருவருக்கு முருகன் காட்சி கொடுத்து பணமுடிப்பு ஒன்றை கொடுத்திருக்கின்றாராம்.
அதுவும் இலங்கை மத்திய வங்கியினால் அச்சடிக்கப்பட்ட ஐந்து (ஆயிரம் ரூபா) தாள்கள்!

அடுத்தது வெள்ளவத்தையில் இருந்து முதற்தடவையாக மட்டக்களப்பிற்கு சென்ற ஒரு பெண், புனைச்சோலை அம்மன் ஆலயத்திற்கு சென்றாராம் ஆலயத்திற்கு அருகில் அவர் பிடித்த புகைப்படத்தில் வானில் ஒரு உருவம் தோன்றுவதுபோல படம் வந்துள்ளதாகவும், அந்தப்படம் நிச்சயமாக புனைச்சோலை அம்பாளுடையதுதான் என்று தெரிவித்து இலங்கையின் முன்னணி பத்திரிகை ஒன்றிலேயே செய்தி வெளியாகியுள்ளது, பல இணையத்தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் இது குறித்து பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.


சாதாரணமாகவே நீங்கள் ஒரு சுற்றுலாவுக்கோ அல்லது வேறு எங்கோ செல்லும்போது பல படங்களை எடுக்கும்போது ஏதாவது ஒருபடத்தில் சற்றுவித்தியாசமான தோற்றங்கள் தென்படுவது இயல்புதான். புகைப்பட கமராவை கிளிக் செய்யமுதல் அதில் பதிவான காட்சிகள் சில ஒளிமுறிப்பு விதிகளுக்கு அமைய சட்டென எடுக்கப்படும் படத்தில் தென்பட்டுவிடுவது இயற்கையானதே.
இவ்வாறான படங்கள்; பல, வானத்தில் பறக்கும் தட்டுக்கள் தோன்வதுபோல உள்ளது என மேலை நாடுகளில் தெரிவிக்கப்பட்டபோது விஞ்ஞான ரீதியாகவே ஆராயப்பட்டு ஒளிமுறிப்பு என்ற காரணம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற அனுபவங்கள் எனது சொந்த புகைப்படப்பிடிப்பு அனுபவத்திலேயே நடந்துள்ளது.

கடவுள் இருக்கின்றார், இல்லை என்ற வாதத்திற்கு நான் வரவில்லை. அனால் கடவுள் இருக்கின்றார் என்ற நம்பிக்கை எமது பகுத்தறிவு கண்களை மூடிவிடும் அளவுக்கு இருக்கக்கூடாது என்பதையே சொல்லவருகின்றேன். இந்த வகையில் ஊடகங்கள் இவ்வாறான மனித சக்திக்கு அப்பாற்பட்ட விடங்கள் என மற்றவர்கள் சொல்வதைப்பற்றி ஆராயாது வெறும் சொல்பவர்களின் பேச்சுக்களை வைத்து இவற்றை செய்திகளாக்கி சுவாரகசியங்களை கூட்டுவது ஆரோக்கியமான விடயமாக இருக்காது. இந்த ரீதியான செய்திகளில் ஊடகங்கள் பகுத்தறிவுடனும், ஆராய்வு ரீதியாகவுமே செய்திகளை வெளியிடவேண்டுமே தவிர, பாமர மக்கள்போல கண்களைமூடிக்கொண்டு காவடி எடுக்காதகுறையாக செய்திகளை வெளியிடக்கூடாது. இவ்வாறான செய்திகளை எவ்வாறு கையாளவேண்டும் என்ற ஊடக தர்மம் ஒன்று உள்ளது.

கதைகளை பரப்புபவர்கள், அதை ஊதிப்பெருப்பிப்பவர்கள் காலத்திற்கு காலம், தெய்வங்கள், ஆவி, பேய், போன்றவற்றை வைத்து பலதரப்பட்ட கதைகளை அடுக்கிக்கொண்டே இருப்பார்கள். கேட்பதற்கும் அவை சுவாரகசியமாகவே இருக்கும். ஆனால் நாம்தான் பகுத்தறிவுக்கண்ணோடு அவற்றை நோக்கவேண்டும்.

Tuesday, September 1, 2009

தவத்திரு தனிநாயகம் அடிகளார் (நினைவு நாள்)


ஈழத்தில் தமிழ் மொழியை உண்மையாக வளர்த்தவர்களின் பெருமைகள் அவர்கள் ஆற்றிய சேவைகள் என்பவற்றை இன்றைய இளைய சமுதாயத்தினர் உணர்ந்துகொள்ளவேண்டியது மிக முக்கிமானதொன்றாகும். இருக்கும் போது பெரியவர்களின் பெருமைகளை பாராட்டாமல் விட்டுவிட்டு அவர்கள் இல்லாத போது அவர்களின் இழப்புக்கள் உணரப்படும் சமுதாயமாக ஈழத்து சமுதாயம் உள்ளமை யாரும் மறுக்கமுடியாத ஒரு உண்மையே. தமிழர்கள் என்றால் யார்? அவர்கள் எவ்வாறு தமிழர்கள் எனப்படுகின்றனர், தமிழ் மொழியின் சீரியங்கள் என்ன என்பவை குறித்து எப்போதோ வரையறைகள் வழங்கப்பட்டுளளன. பல ஈழத்துபெரியவர்களும் இதை சர்வதேச ரீதியில் கொண்டுசென்று மற்ற மொழிக்காரர்களுக்கும் தமிழ் மொழியினை பற்றி ஆராட்சிகளை சமர்ப்பித்து புரியவைத்து, ஏனைய மொழி அறிஞர்கள் தமிழ் மொழி தமிழர்கள் ஆகிய விடயங்கள் பற்றி அறிந்துகொள்ளும் பொருட்டு தமிழ் மொழியின் சீர்மைகளை தொகுத்து தமிழுக்கு பெரும் தொண்டாற்றியுள்ளனர்.

இந்த ஈழத்து தமிழ் அறிஞர்களில் தனிநாயகம் அடிகளார் மறந்துவிடமுடியாத ஒருவர். கண்டதற்கெல்லாம் நினைவு விழா எடுக்கும் ஈழத்து தமிழ் மக்கள் இத்தகைய தமிழ் அறிஞர்களின் நினைவுகளை மறந்துபோயுள்ளது வேதனையானதே. இன்று செப்ரெம்பர் மாதம் முதலாம் நாள் தனிநாயகம் அடிகளாரின் 29ஆம் ஆண்டு நினைவு நாளாகும்.

நெடுந்தீவைச் சேர்ந்த நாகநாதன் கணபதிப்பிள்ளை கென்றி ஸ்ரெனிஸ் லெஸ், கரம்பொன் சிசில் இராசம்மா தம்பதிகளுக்கு 02.08.1913 இல் அடிகளார் பிறந்தார். சேவியர் என்ற திருமுழுக்கு பெயர் கொண்ட இவர் யாழ்ப்பானத்திலுள்ள புனித அந்தோனியார் ஆங்கிலப்பாடசாலை, புனித சம்பத்திரீசியார் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்ப கல்வியை கற்ற இவர் 1931 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் குருத்துவ கல்லூரியில் சேர்ந்து பின்னர் கொழும்பு புனித பேர்;னாட் குருத்துவக் கல்லூரியிலும் குருத்துவக் கல்வியை கற்றார்.பின் உரோம நகரத்து குருத்துவப் பல்கழைக்கழகத்தில் கற்று கலாநிதிப் பட்டம் பெற்றார்.

1938.03.19 இல் உரோமாபுரியில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் தனது சேவியர் என்ற திருமுழுக்குப் பெயருடன் தனது தந்தையாரின் பரம்பரை மரபுப் பெயரான தனிநாயகம் என்பதை இணைத்துக்கொண்டார். பின் 1938.09.29 அன்று நெடுந்தீவில் புனித சவேரியார் ஆலயத்தில் முதல் திருப்பலியை நிறைவேற்றினார்.

1940 - 1945 காலப்பகுதிகளில் தமிழ்நாடு வடக்கன்குளம் புனித குழந்தையேசு திறேசம்மாள் உயர்தர பாடசாலையில் துணை அதிபராக கடைமையாற்றிய இவர் தூத்துக்குடி திருமறை ஆயர் மேதகு கபிரியேல் பிறான்சிஸ் திபூர் சியூஸ் றோச் ஆண்டகையின் திருமறை மாவட்டத்திலும் பணியாற்றினார்.

1945 - 1947 இல் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கழைக்கழகத்தில் முதுமானிப்பட்டம் பெற்ற இவர் பின்னர் அங்கேயே ஆராய்ச்சி புலமையாளராக கல்வி கற்றார். அக்காலப்பகுதியில் “தூத்துக்குடி தமிழ் இலக்கிய கழகம்” அமைத்து பல நூல்களை வெளியிட்ட இவர் 1949 ம் ஆண்டு “Nature in Ancient Tamil Poetry” என்ற ஆராய்ச்சி கட்டுரையை எழுதி அண்ணாமலைப் பல்கழைக்கழகத்தின் இலக்கிய முதுமானிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். பின் தமிழ்த்தூதின் முதல் படியாக வட, தென் அமெரிக்காவிலுள்ள பல்கழைக்கழகங்களிலும் சமூக சபைகளிலும் ஜப்பானிலும் தமிழ்மொழியினதும் தமிழினத்தினதும் பெருமைகளை எடுத்திக்கூறி விரிவுரைகள் நிகழ்த்தினார்.

சென்னைத் தமிழ்வளர்ச்சிக்கழகம் யாழ்ப்பாணத்தில் நடத்திய தமிழ் விழாவில் “சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகள்” என்ற பொருளில் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் தலைமையில் சொற்பொழிவாற்றிய இவர் 1952 ம் ஆண்டு முதல் தமிழர் பண்பாடு - Tamil Culture என்ற ஆங்கில சஞ்சிகையை தனது தூத்துக்குடி தமிழ் இலக்கிய கழகத்தின் சார்பில் ஆரம்பித்தார். இதனால் தொடர்பற்று இருந்த தமிழியல் அறிஞர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும் கருத்துக்களை வெளியிடவும் நல்வாய்ப்பு ஏற்பட்டது.

தமிழர் பண்பாட்டின் பெருமையை உலகம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து “தொல் தமிழ் கவிதையின் இயற்கை, செவ்விய இலக்கிய காலத்தமிழர், மனிதநேயம்” ஆகிய நூல்களை வெளியிட்டார். அதே காலப்பகுதியில் “தமிழ்த்தூது” என்;ற நூலையும் வெளியிட்ட இவர் கத்தோலிக்க தமிழ் எழுத்தாளர் சங்கம் நிறுவி விழா எடுத்தார். இவ்விழாவில் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் பற்றி எழுதும் நூலுக்கு ரூபா 1000 பரிசு வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. இலங்கைப் பல்கழைக்கழகத்து கல்வித்துறை விரிவுரையாளர் பதவியை ஏற்ற இவர் கொழும்பில் தமிழர்பண்பாட்டுக்கழகத்தை உருவாக்கினாhர்.


1954 - 1955 ம் ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் ஜரோப்பிய நாடுகளிலும் தென்கிழக்காசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் தமிழ்த்தூதையும் கல்விச்சுற்றுலாக்களையும் மேற்கொண்டார்.
1955 - 1957 ம் ஆண்டுகளில் லண்டன் பல்கழைக்கழத்தில் கலாநிதிப் பட்டப் படிப்பு மேற்கொண்ட இவர் Ancient European and Indian Systems of Education Compared with Special Reference to Ancient Tamil Education என்ற ஆராய்ச்சிக் கட்டுரையினை எழுதினார்.

பின் பல உலகநாடுகளுக்கும் தமிழ்த்தூது சென்ற இவர் 1961 ம் ஆண்டு மலேசியப் பல்கழைக்கழகத்தில் இந்திய கலைகள் பிரிவின் தலைவராகவும்
பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.

1964 தைத்திங்களில் டில்லியில் நடைபெற்ற கீழ்த்திசை ஆய்வாளர் மாநாட்டில் தமிழகமும் தமிழ்மொழியும் புறக்கணிக்கப்பட்டது இச்சம்பவத்தால் புண்பட்ட தமிழறிஞர்கள் ஒன்றுகூடி தாய்த்தமிழுக்கான உலகளாவிய கருத்தரங்கம் அல்லது மாநாடு ஏன் நடாத்தக்கூடாதென விவாதித்ததன் விளைவாக அங்கிருந்த அறிஞர்களை ஒன்றுதிரட்டி உலகத்தமிழாராச்சிமன்றதை முன்னின்று ஆரம்பித்தார்.

1961 ம் ஆண்டு முதல் தமது இறுதி மூச்சுவரை அடிகளார் மன்றத்தின் செயலாளராகவே இருந்து மாண்புறச் செயற்பட்டார்.
1967 இல் நடைபெற்ற 27 வது கீழ்த்திசை ஆய்வாளர் மாநாட்டின்போது இம்மன்றம் யுனெஸ்கோ ஆதரவுபெற்ற அமைப்பாக மாற்றப்பட்டது.

1966 ம் ஆண்டு சித்திரையில் அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றத்தின் முதலாவது மாநாடு மலேசிய நாட்டு அரசின் முழு ஒத்துழைப்போடு கோலாலம்பூரில் நடைபெற்றது.
1968 தையில் இரண்டாவது மாநாடு சென்னையிலும் 1970 இல் மூன்றாவது மாநாடு பாரிசிலும் நடைபெற்றது. பின் 1974 ம் ஆண்டு அனைத்துலக தமிழாராய்ச்சியின் நான்காவது மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இறுதியாக வேலணையில் இடம்பெற்ற வான்புகழ் வள்ளுவர் விழாவில் "கண்களில் ஒளி மங்குகின்றது கைகளோ நடுக்கம் கொள்கிறது ஆனால் என் நினைவெல்லாம் தமிழின்மீது தவழ்ந்துகொண்டிருக்கிறது" என்று தமிழின்மீதுகொண்டிருந்த பற்றையும் பாசத்தையும் பறைசாற்றிய அடிகளார் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் உள்ள ஞானஒடுக்க இல்லத்தில் 1980 செப்ரெம்பர் முதலாம் நாள் இறையடிசேர்ந்தார்.

LinkWithin

Related Posts with Thumbnails