அறுபதுகளின் அந்திம நேரத்தில் ரஷ்யாவின் பிறயஷினோ நகரத்தின் அங்காடித்தொகுதிகள் கழிந்து வரும் குடியிருப்பு பகுதியில் உள்ள தெருக்களில் இராக்காலங்களில் இருளை ஊடறுத்து வரும் ரம்மியமான பாடல்கள்.
அந்தப்பாடல்களில், ரஷ்யதேசத்தின் அன்றைய பொழுதுகள், மக்களின் நாளாந்த வாழ்க்கைச்சுமை, விரத்தி, தகிப்பு, நம்பிக்கை, சோகம், குதூகலம் என வரையறுக்கப்படமுடியாதபடி மாறிமாறி எந்த பாடல்வேண்டுமானாலும் வரும்.
ஆனால் அந்தப்பாடல்கள் பாடுபவனின் குரலில் ஒரு கம்பீரமும், கேக்கத்தூண்டும் ஒரு சுருதியும் கலந்திருக்கும். நள்ளிரவுதாண்டியும் அந்தக்குரல் ஒலித்துக்கொண்டிருக்கும். தனிமையில் இருக்கும் பலருக்கு அந்தக்குரல் ஒரு பாதுகாப்பாளனாகவும், சிலருக்கு தாலாட்டாகவும்கூட அமைந்துவிடுகின்றது.
அப்படி ஒலிக்கும் பாடல்களில் எந்த கணத்திலும் சுருதிமட்டும் எல்லைமீறுவதில்லை என்பதுடன், அந்த பாடல்வரிகளின் தன்மைகளும் ஒருபோதும் எல்லை மீறியதாக இல்லை.
ஹஷிமிர்!! இவன்தான் அந்தக்குரலுக்குச்சொந்தத்காரன். நாற்பதுகளை கடந்துபோய்விட்ட வயது. மழிக்கப்படாத தாடி, சாம்பல்பூத்துப்போன கண்கள், எதையோ எதிர்பார்த்திருக்கும் பாவனை.
இவன் இந்த இடத்தை பூர்வீகமாக்கொண்டவன் இல்லை. சுமார் நான்காண்டுகளுக்கு முன்னர் இந்த இடத்திற்கு வந்தான். காலையில் இருந்து, முன்னிரவு வரை, பிறயஷினோவில் உள்ள அங்காடிகளில், பொருட்களை சுமந்து செல்வது, அடுக்குவது, வாகனங்களில் ஏற்றுவது என அத்தனை வேலைகளையும் அலுப்பில்லாமல் சுறு சுறுப்பாக செய்வான். இவ்வளவுதான் வேண்டும் என்று கேட்பது கிடையாது. அங்காடிக்காரர்கள் கொடுக்கும் ரூபிள்களை எண்ணிக்கூடப்பார்க்கமாட்டான். அப்படியே மடித்து தன் கோர்ட் பையில் போட்டுக்கொள்வான்.
அப்போதைய அவனது தேவைகள் சாப்பாடு, இராத்திரிக்கு கொஞ்சம் வொட்கா, குளிரைப்போக்க பற்றவைக்க சில சுருட்டுக்கள்.
சில பொழுதுகளில் வேலை நிமித்தம் அவனது குரல் அந்த வீதிகளில் கேட்க முடியாதுவிட்டாலும், அங்காடிக்குடியிருப்பாளர்களுக்கு ஒரு வழமைவிரோதம் தலைதூக்கிவிடும். அந்த அளவுக்கு அங்கிருக்கும் ஒவ்வொருவரினதும் இராக்காலங்களுடனும் அவனது குரல் பரீட்சியப்பட்டிருந்தது.
அவனது பாடல்கள் அப்போதைய ஆட்சியினரை சவுக்கால் அடிப்பதுபோல இருக்கும்.
“முதலாளித்துவர்களாக இருந்தோம்
எங்களில் நான்கு வீடுகளில் ஒரு கார் இருந்தது
கொமினிஸ்ட்டுகளாக மாறினோம்
நடப்பதற்கே எங்கள் கால்களுக்கு வலுவில்லை”
“கொமினிசம் என்றது உணர்வுதானே???
சட்டம்போட்டு பிள்ளை பெற்றுவிடுவாயா?”
என்பதுபோன்ற அன்றைய கட்டாயக் கொமினிசியத்திற்கு எதிரான பாடல்களும் இவனது வாயிலிருந்துவந்து கொண்டிருந்தது. இவன் அமெரிக்க உளவாளியோ என்ற சந்தேகத்தையும் ஊட்டிக்கொண்டிருந்தது.
இத்தனைக்கும் அவன் பாடல்களை இரசிப்பவர்கள், அவனது குரலை தமது பெட்ரூம்வரை வர அனுமதிப்பவர்கள் எவருக்கும் அவனுடன், பேசவேண்டும் என்றோ, அவனுக்கு ஏதாவது உதவவேண்டும் என்றோ என்றைக்கும் எண்ணம் வந்ததில்லை.
அவனும் அப்படி நினைத்ததும் இல்லை, எதிர்பார்த்ததும் இல்லை.
காலைவேளையில் அந்த தெருவில் உள்ள அத்தனைபேருக்கும் மனது நிறைந்த புன்னகையினை பரிசளித்துவிட்டுப்போவான், பதில்புன்கைக்கு அவன் காத்திருப்பதில்லை. குழந்தைகளை கண்டால் வாஞ்சையுடன் பார்ப்பான், அந்தப்பூக்களுக்கு பூக்களையே பரிசளித்துவிட்டுப்போவான்.
பசி என்று எவன் முகம் சுருங்கின்றாலும், தன் பணத்தை சுருக்கி, அவர்களின் முகச்சுருக்கத்தை நீக்குவான். ஒருமுறை பிறயஷினோ நகரையே பிளேக் நோய் தாக்கியபோது, பாரமரிப்பற்ற முதியவர்களை தன் பெற்றவர்கள்போல் பராமரித்துக்காப்பாற்றினான். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக ஒரு குறிப்பட்டதொகையினை சங்கம் ஒன்றுக்கு மாதம் மாதம் தன் உழைப்பினால் மிச்சம்பிடித்துக்கொடுத்தான்.
முதியவர்களுக்கோ தம்மை காப்பாற்றியது இவன் என்று தெரியாது, குழந்தைகளுக்கோ தம் கல்வியில் இவன் பங்கும் உள்ளதெனத்தெரியாது, பசித்தவனுக்கும் தனக்கு உணவு வழங்கியவன் இவன் என்று தெரியாது அனால், இராக்காலங்களில் தெருப்பாடகனாகத்தெரியும் இவன், பகல்காலங்களில், வாடல்கள் கண்டு, மலர்ச்சி கொடுக்கும் கண்ணுக்குத்தெரியாதவனாகவே இவன் வாழ்ந்துவந்தான்.
ஒருநாள் இராத்திரிநேரம், நள்ளிரவு தாண்டும் வேளை, வழமைபோல பிறயஷினோ அங்காடித்தெருமக்கள் இவனின் அடக்குமுறைக் கொமினீசியத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்ட இனிய பாடல்களை கேட்டவண்ணமே கண்ணயர்ந்துகொண்டு இருந்தார்கள்..
திடீர் என்று வாகன இரைச்சல் ஒன்று கேட்டது. சப்பாத்து ஓசைகள் ஒலித்துக்கொண்டிருந்தன. தொடர்சியாக இருளின் நிசப்தத்தை கிழிக்கும் நான்கு வெடியோசைகள் கேட்டன. மீளவும் சப்பாத்து ஒலிகள் கேட்டு அடங்கி, வாகன சப்தம் கேட்டு… எங்கோ தூரமாக தொலைந்துபோகும் சத்தம் போய் மறைந்தது.
வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும், வீதிக்கு வந்து பார்த்தார்கள், வீதி ஓரம்…
இரத்த வெள்ளத்தில் அவன் துடித்தக்கொண்டு கிடந்தான்.
“சே.. இவர்கள் எல்லாம் ஒரு மனிதர்களா?”, அநியாயம்…அநியாம்…, போன்ற அந்த மக்களின் பரிதாபச்சொற்களை கேட்டுக்கொண்டே அவன் செத்துக்கொண்டிருந்தான்.
அவன் கிடந்த இடத்திலிருந்து சற்று தொலைவாக இருந்த ஒரு இடத்தில் கம்பத்தில், ஏற்றிவைக்கப்பட்டிருந்த கொம்மினீசிய செங்கொடி ஒன்று பெருங்காற்றில் கம்பத்தில் இருந்து அகன்று பறந்துவந்து, மரணித்துக்கொண்டிருக்கும் அவன்மீது படர்கின்றது..
14 comments:
என்ற கேள்விக்கு இந்த கதை சரியான பதிலை சொல்லிச் செல்கின்றது. வேற்று மொழிமாற்றக்கதைகள் வரவேற்கப்படவேண்டியவை. பாராட்டுக்கள்
மன்னிக்கவும் எழுத்து Missing
Who's the real Communist?
என்ற கேள்விக்கு இந்த கதை சரியான பதிலை சொல்லிச் செல்கின்றது. வேற்று மொழிமாற்றக்கதைகள் வரவேற்கப்படவேண்டியவை. பாராட்டுக்கள்
மிகவும் புதிதாக இருந்தது நன்றி ஜனா அண்ணா ..
அருமை ஜனா அண்ணா, தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன் :)
இவன் அமெரிக்க உளவாளியோ என்ற சந்தேகம் கூட பலருக்கு வந்துவிட்டது என்று கதையில் ஒரு இடத்தில் வந்தபோதே அவனது முடிவை அனுமானித்துவிட்டேன்.
கொமினிசம் என்பது உணர்வுதான், கடும் சட்டத்தின்மூலம் அதை அமுல்ப்படுத்தமுடியாது
அதேவேளை கொமினீச வாதிகள் எனப் பீத்திக்கொள்வோர் செய்யும் முரண்களையும், எந்த கூட்டமும் கட்சியும் இல்லாமலே யாருக்கும் தெரியாமல் பல உண்மையான கொமினீசியர்கள் வாழ்ந்து காட்டுகின்றார்கள் என்பதுக்கு இந்தக்கதை புடம்போடுகின்றது.
பிறமொழிக்கதைகளை தமிழாக்கம் செய்வதன் சிரமம் தெரியும்..தாங்கள் எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு முதலில் தலைவணங்குகின்றேன். மனமார்ந்த பாராட்டுக்கள்...
வேற்றுமொழிக்கதைகளை தொடர்ந்து எழுதுங்கள். அதை படிக்க ஆர்வமாக என்னைப்போல் பலர் உள்ளனர்.
கதை அருமை ஜனா அண்ணா..
ஜனா அண்ணா உங்களிடம் ஒரு கேள்வி!
நீங்கள் கொமினிஸ்டா? முதாளித்துவனா? (டின்ட டின்ட டின்ரடிங் -நாயகன் ரியூன்)
மூலத்தை எழுதியவர் தொடர்பான தகவல்களை தந்திருக்கலாம் ஜனா
@டிலான்
நன்றி டிலான்
@ Balavasakan
நன்றி பாலவாசகன்.
@ Subankan
நன்றி சுபாங்கன். தொடர்ந்தும் முயற்சிக்கின்றேன்.
@Pradeep
நன்றி அண்ணா. தங்களுக்கும் இந்த கதைகளில் ஆர்வம் உள்ளமை மகிழ்ச்சியை தருகின்றது.
@சயந்தன்
ஆ....ஆ.....ஆஹ்.....தெரியலையேப்பா...
@தர்ஷன்
வருகைக்கு நன்றி தர்ஷன்
நான் தற்போது தெரிவு செய்து மொழிபெயர்க்கும் கதைகள் ரஷ்யதேசத்தவை. அந்த மொழியில் இருந்து ஆங்கிலத்தில் பிரீட்டா ஜோன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.
இந்த கதையின் (பிறயஷினோ நைட்ஸ்) மூல கதாசிரியர் அன்ஸ்ரே.எவ் என்பவர்
Post a Comment