Sunday, July 25, 2010

ஞாயிறு ஹொக்ரெயில் (25.07.2010)

மறக்கமுடியாத கறுப்பு ஜூலை

ஈழத்தமிழர்களின் வாழ்வில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் இறுதி வாரம் என்றும் மறக்கப்படமுடியாதவாறான பாரிய தாக்கம் ஒன்றையும், பல முடிவுகளை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஒன்றையும் அவர்கள்மேல் திணித்துவிட்டுப்போனது என்பதுதான் உண்மை.

முதன் முதலாக இந்தியாவின் பார்வை மட்டும் இன்றி, உலகநாடுகளின் பார்வையும் அவர்கள்மீது பட ஆரம்பித்த கட்டம் அது. அந்த வடுவின் தொடக்கமாக தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
போராட்டத்தின் காரணத்தை புரிந்து அதை நிவர்த்திசெய்யாத, எப்போதுமே செய்யப்போகாத ஒரு இனத்தின் அரசு, அந்தப்போராட்டத்தையும், வன்முறையால் அடக்க பெரும்பாடு பட்டுப்போராடி, கடந்த வருடம் தமிழர்களின் போராட்ட வலுவினை மொத்தமாக நசுக்கிவிட்ட இறுமாப்பில் இன்று நிற்கின்றது.

கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டு என்றாலும் அதன் பின்னர் வந்த ஒவ்வொரு ஆண்டுகளும் மாதங்களும் வடக்கு கிழக்கு தமிழர்களின் கறுப்பு ஆண்டுகளாகவும், கறுப்பு மாதங்களுமாகவே இருந்துவந்தன.
தமிழர்களின் போராட்டவலுவை எப்படியாவது நசுக்கவேண்டும் என்பதில் முனைப்புடன் செயற்பட்ட மாறும் அரசாங்கங்கள், அவர்களுக்கான தீர்வை வைப்பதில் இழுத்தடிப்பினையே மேற்கொள்கின்றன, இது ஒரு தொடர்ச்சி மாயம்.
இனவாதம் கழையப்படும்வரை அது என்றும் நடக்கப்போவதில்லை என்பதே யதார்த்தமும் கூட. சரி.. இதற்கு முடிவுதான் என்ன? விடை தெரியாத புதிருடன் ஒவ்வொரு தமிழனும் பயணித்துக்கொண்டிருக்கின்றான்..
“எளியதை வலியது கொன்றால்! வலியதை தெய்வம் கொல்லும்!!” பார்ப்போம்.

சுஜாதாவின் பேசும் பொம்மைகள்

நீண்ட நாட்களின் பின்னர் இரண்டாவது தடவையாக சுஜாதாவின் “பேசும் பொம்மைகள்” படித்தேன். டாக்டர். சாரங்கபாணியும், டாக்டர்.நரேந்திரநாத்தும் மாயாவை மட்டும் அல்ல வாசிக்கும் என்னையும் மிரட்டிக்கொண்டிருந்தார்கள்.
ஒரு மனித மனத்தின் நினைவு தெரியும் நாளில் இருந்து உருவான அத்தனை எண்ணங்களையும், ஒரு இயந்திரத்திற்கு மாற்றி புகட்டும் கருவில் பிரமிக்க வைத்த ஒரு கதை.
நாவலை முழுமையாக படித்து முடித்தபின்னர் மீண்டும் சுஜாதாவின் முன்னுரையை படிக்கும்போது அதன் யதார்த்தம் புரிந்தது.
“நீண்ட பல ஆண்டுகாலம் கழித்து மீண்டும் படித்தாலும் இதன் சுவாரஸ்யம் குன்றாமைக்கு காரணம் இதில் கூறப்பட்டுள்ள அறிவியல் சாத்திரியங்கள் இன்னும் நடைமுறைக்கு வராமல் உள்ளமையே. சைன்ஸ்ஃபிக்ஷன் என்னும் அறிவியல் புனைகதையில் இந்த சௌகரியம் முக்கியமானது. விருப்பப்படி எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கலாம். ஒரே ஒரு தேவை அதன் ஆரம்பங்கள் நிகழ்காலத்தில் இருந்தாகவேண்டும்”

The Nightshifters


திருஷ்டி முகமும், கமல் முகமும்.

கடவுளின் தரிசனத்திற்காக
தவமிருக்கும் மனிதர்கள்போல
உன்னைத் தரிசிப்பதற்காக
ஒரே இடத்தில் உட்கார்ந்து
தவமெல்லாம் இருக்கமாட்டேன்
நீ எந்த மலையின் உச்சியில்
இருக்கின்றாய் என்று சொல்
ஒரு மலையேறும் வீரனைப் போல்
உன்னைத்தேடி வருகின்றேன் நான்.

அய்யோ..
நீ கொடுத்த
பறக்கும் முத்தங்களைக்
காற்று தூக்கிக்கொண்டு ஓடிவிட்டதே!

உங்கள் எதிர் வீட்டு வாசலின்
திருஷ்டிப் பூசணிக்காய்க்கு
உன்மேல் ஒரு கண்போல!
உன்னைப் பார்க்கும்போது
அது தன்மீது வரைந்திருக்கும்
கர்ணகொரூரமான முகத்தை
கமல்ஹாசன் முகம்போல் மாற்றிக்கொள்கின்றதே!
-தபு.சங்கரின் தேவதைகளின் தேவதையில் இருந்து

கவனிக்க மறந்த நல்லபாடல்..

புகைப்படம் திரைப்படத்தில் வந்த ஒரு ரம்மியமான பாடல் இது. ஆனால் ஏனோ தெரியவில்லை கவனிக்கப்படவில்லை.
வெங்கட்பிரபுவின் குரல் இதில் மதுபாலகிருஸ்ணனை ஞாபகப்படுத்துகின்றது.


ஷர்தாஜி ஜோக்.
குடியியல் பற்றிய ஒரு கலந்துரையாடலுக்கு நம்ம ஷர்தாஜி சென்றிருந்தார்.
அங்கே உலக சனத்தொகை பற்றியதொரு கலந்துரையாடல் நடந்துகொண்டிருந்தது.
அங்கு கருத்து வெளியிட்டுக்கொண்டிருந்த ஒரு பேராசிரியர் இன்னும் 10 வருடங்களில் இந்தியா சீனாவை உலக சனத்தொகை கூடிய நாடு என்ற பெருமையில் இருந்து முந்திவிடும் என்றார்.
தொடர்ந்தும் அவர், இந்தியாவில் ஒவ்வொரு 10 செக்கனிலும் ஒரு தாய் ஒரு குழந்தையினை பெற்றெடுக்கின்றாள் என்றார்.
உடனே எழுந்து நின்ற ஷர்தாஜி
அட அப்படியா? நாங்கள் இங்கிருந்து பேசிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு உடனடியாக அந்த தாயை கண்டுபிடித்து அவரது செயற்பாட்டை நிறுத்தவேண்டும் என்றார்.

19 comments:

சயந்தன் said...

ஆஹா அந்தப்பாடல் எனக்கு பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியும் இல்லையா அண்ணா? சர்தாஜி ஒவ்வொருவாரமும் கலக்கிறார். இந்த வாரம் ஹொக்ரையில் கலவை பதமாக உள்ளது.

டிலான் said...

அண்ணை நான் வாறதிற்குள்ள இன்னுமொரு கனடாக்காரன் முந்திட்டான். பறவாய் இல்லை எங்கட அள்த்தானே.

வலியது கொல்லவேண்டும் என்டுதானண்ணை ஆசையாக்கிடக்கு, சுயாத்தாட இந்த கதையை கேட்கவே நமக்கு சம்மந்தமில்லாத நாவல் என்று புரியுது, என்றாலும் அந்நாரின் "ஆ" நாவல் மற்றும் ஜே.கே போன்றன எனக்கு பிடிக்கும்.
அப்புறம் அந்த இரவுக்காவலாளி..சின்ன வயசில படித்த கீரி, அம்மா, பாம்பு கதை நினைவுக்கு வருது. த.பு.ச படித்திருக்கின்றேன். பாடல் பறவாய் இல்லை. நம்மட ஆள்ட ஜோக் சுப்பர் ஜனா அண்ணா.
ஸியேஸ்

மருதமூரான். said...

/////எளியதை வலியது கொன்றால்! வலியதை தெய்வம் கொல்லும்!!/////

அநேகரிடம் இருக்கிற நம்பிக்கை இது. பார்க்கலாம்.

Subankan said...

//அண்ணை நான் வாறதிற்குள்ள இன்னுமொரு கனடாக்காரன் முந்திட்டான். பறவாய் இல்லை எங்கட அள்த்தானே.
//

அவ்வவ், அதுக்கு முதல்லயே நான் ஒருத்தன் வந்து போட்டனே, அந்தக் கொமன்ட் எங்கே? காக்கா தூக்கிட்டுப் போயிட்டுதா?

Balavasakan said...

அப்படியா அடுத்த புத்தகம் இதுதான் ஓகே..

யோ வொய்ஸ் (யோகா) said...

ஹொக்டயில் நல்லாயிருக்கு.

ஆமா அந்த தாயை கண்டு பிடிச்சிட்டாங்களாமா?

Cool Boy கிருத்திகன். said...

சூப்பர்...
கருப்பு யூலையை நினைவு கூர மட்டுந்தான் முடியும்

Cable Sankar said...

oru maathiriyana கலவையான உணர்வை கொடுத்தது.. ஹெக்ரெயில்.. அந்த பாட்டு.. வெங்கட் பிரபுவா பாடியது..?

தர்ஷன் said...

cocktail இல் மிக்சிங் எல்லாம் சரியாக இருக்கிறது. அந்தப் பாடல் வெங்கட்பிரபு பாடியதுதானா?

Jana said...

@சயந்தன்
//ஆஹா அந்தப்பாடல் எனக்கு பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியும் இல்லையா அண்ணா?//

கண்டிப்பாக இந்தப்பாடல் விசேடமாக உங்களுக்காகத்தான் சயந்தன்.

Jana said...

@டிலான்
கனடிய மண்ணிலும் யாழின் மண் மணம் பரப்புங்கள்.

ஒரு ஊரில் பெண் ஒருத்தி கீரி ஒன்றை அதன் சிறுபராயத்தில் இருந்தே வளர்த்துவந்தாள். அவளுடனேயே அதுவும் வளர்ந்துவந்தது. ஒரு கட்டத்தில் அவளுக்கு திருமணம் ஆகியபோதும் தாய் வீட்டு சீதனத்துடன் அந்த கீரியும் அவளுடன் சென்றது. அவளுக்காகவே வாழ்ந்துவந்தது. அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைமேலும் கீரி தாயை விட அன்பு காட்டியது. ஒரு நாள் தண்ணீர் பிடிப்பதற்காக குழந்தையை வீட்டில் பாய்போட்டு கிடத்திவிட்டு, சற்றுத்தூரத்தில் உள்ள ஆற்றுக்குச்சென்றாள் பெண். கீரி பிள்ளையை பாதுகாத்தது. திடீர் என ஒரு பெரிய கருநாகம் ஒன்று அந்தக்குழந்தையை தீண்ட வந்தது. பாய்ந்து சென்ற கீரி குழந்தையை அது நெருங்கவிடாது பாம்புடன் போராடி அதை கொன்றுவிட்டு, தனது அன்பானவள் வரும்வரை ஆவலுடன் வாசலில் எதிர்பார்த்து நன்றது. கீரியின் வாயில் குருதியைக்கண்ட பெண். தன் குழந்தையை கீரி கொன்றுவிட்டதாக எண்ணி. தண்ணீர்க்குடத்தாலேயே அடித்துக்கொன்றாள். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோதுதான் விபரம் அவளுக்கு புரிந்தது.
குழந்தை அவளைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது.

அதைத்தானே சொல்றீங்க டிலான்...அந்தக்காலத்தில் நெஞ்சை "டச்" பண்ணிய கதை அது.

Jana said...

@ மருதமூரான்.
அனேகரின் ஒருமித்த நம்பிக்கைகள் பலிக்காமல் போவதும் இல்லை என பல மகான்களும் சொல்லியிருக்காங்கதானே?

Jana said...

@Subankan
இணையக்காக்கா அதை திரையில் விழுத்தமுதல் கொண்டு போய்டிச்சு போல!!!

Jana said...

@Balavasakan
நான் நினைத்தேன் தம்பி பாலவாசகன் இதைத்தான் சொல்லப்போறாரு என்று..சொல்லிட்டார்...டபிள் OK

Jana said...

@யோ வொய்ஸ் (யோகா)
சீக்கிரம் கண்டுபிச்சுடுவார் போலதான் இருக்கு யோகோ

Jana said...

@Cool Boy கிருத்திகன்
அதுதானே கூல்போய்

Jana said...

@Cable Sankar
ஆமா தலை..என்னாலையும் ஆரம்பத்தில நம்ப முடியலை. அனால் வெங்கட்பிரபு, பிரசாந்தி ஆகியோர் பாடியதாகத்தான் பல தரவுகளிலும், சி.டிகளிலும் உள்ளன.

Jana said...

@தர்ஷன்
அதே. இருந்தபோதிலும் சிலவேளை அது வேறு வெங்கட் பிரபுவாகக்கூட இருக்கலாம்..எதுக்கும் எங்கள் சி.டி.ஜொக்கிகளிடம் இந்த விடயத்தை விடுவோம்

டிலான் said...

கீரி, அம்மா, பாம்பு -ஆங். அந்த கதை தான்.

LinkWithin

Related Posts with Thumbnails