Sunday, August 22, 2010

ஞாயிறு ஹொக்ரெயில் (22.08.2010)

விழித்துக்கொண்டுவிட்ட ராட்சதன்.

ஹையாஸ் தியரி எவை எவற்றுக்கு பொருந்திக்கொள்ளுதோ இல்லையோ, பல நாடுகளின் நீண்டநாட்கள் திட்டம், யுத்தம், போராட்ட அமைப்பு ஒன்று இல்லாமற்போதல் போன்றவற்றில் பக்காவாக பிரதிபலிக்கும்.

இந்தியா, மற்றும் படு முட்டாள்த்தனமாக எந்தவித தூரநோக்கும் இல்லாமல் தான் நினைத்த பாட்டுக்கு எதையும் செய்யும் சிறி லங்கா ஆகிவற்றின் இன்றைய போக்கு நாளை தென்னாசியப்பிரதேசத்தையே சூனியமாக்கிவிடக்கூடிய வாய்ப்புக்கள் பெருமளவில் உள்ளன என்பது தெளிவாக தெரிகின்றது.
ஆசியாவில் முக்கியமான சக்திகளாக சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இதில் ஜப்பானை தவிர்த்து வல்லாதிக்கப்போட்டி இந்தியா, சீனாவிடமே அதிகம் உண்டு. இந்த நிலையில் மிகத்தெளிவான ஒரு நீண்டகாலத்திட்டத்துடன் 70களின் ஆரம்பங்களிலிருந்து வகுக்கப்பட்ட ஒரு திட்டத்தில் 40 ஆண்டுகளின் பின்னர் சீனா முழுவெற்றி பெற்றுள்ளது.

ஆம்.. முத்துமாலை நடவடிக்கை. இந்தியாவைச்சுற்றி முத்துமாலையைப்போல தனது வல்லாதிக்கத்தை நிலைநாட்டும் சீனாவின் நீண்டகாலத்திட்டம் 2010 முதற்பாகத்துடன் முழுமையாக வெற்றிபெற்றுள்ளது.
மனிதவலுநிலை, தொழில் முன்னேற்றம், தொழிநுட்ப உச்சம், சர்வதேச சந்தை, சர்வதேச வர்த்தகம், வீட்டோ அதிகாரம் என சீனா இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது. சீனாவின் இந்த எழுச்சியும் தென்னாசியா மீதான பார்வையும் தென்னாசியப்பிரதேசத்தில் வாழும் எமக்கு பெரும் பாதிப்பே. சார்க் நாடுகள் சீனாவின் சாக்குக்குள் போகாதவண்ணம் இராஜதந்திரமாக இனியாவது நடந்துகொண்டால் எதிர்காலத்தில் நன்மை கிடைக்கலாம்.

அருகிவரும் தாளலயம்.
தாளலயம் என்பது நாடகம், கூத்து இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நாடக வடிவம் என்று கூறிக்கொள்ளலாம் என நினைக்கின்றேன். முன்னைய காலங்களில் சொல்லவந்த கருத்துக்களை மிகச்சுவாரகசியமாக சொல்லிவிடவும், பார்வையாளர்களின் முழு கவனத்தையும் ஒருங்கு குவிக்கவும் இவ்வாறான தாளலயங்கள் ஏதுவாக இருந்தன.
அன்றைய நாட்களில் என் காட்சட்டை பருவங்களில் இலங்கைவானொலியில் தாளலயங்கள், நகைச்சுவையுடன் கூடிய தாளலயங்கள் என்பவை ஒலிபரப்பட்டு வந்தன. அவற்றில் சில இன்றும் மனதில் பதிவுகளாக உள்ளன.
பொதுவாக யாழ்ப்பாண, மட்டக்களப்பு பாசை வழக்கிலேயே தாளக்கட்டுக்கள் இயற்கையாக இருப்பதால் இந்தப்பிரதேசத்தவர்களது தாளலயங்கள் பெரிதும் இரசிகப்பட்டன. இன்று இந்தவடிவம் அழிந்துபோகும் நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது என்பது பெரிய வருத்தம் தரும் விடயமாகும்.

நல்லூர் முன்றலில் தினம் கூடும் பதிவர்கள்.

தற்போது நல்லூர் பெருந்திருவிழா இடம்பெற்று வருவதாலும், திருவிழாக்காலம் வெளிவீதிக்கு 5-45ற்கே வருவதாலும், இந்த நேரத்திற்கு பொதுவாகவே எந்த நாழும் அனைவரும் கூடுவது சாத்தியமான ஒருவிடயமாக போய்விட்டது.
எனது வீடு நல்லூரிலேயே உள்ளதனால் எனக்கு சாதகங்கள் அதிகமாகவே போய்விட்டன. இந்த வகையில் நீண்டதொரு விடுப்பில் யாழ்ப்பாணம் வந்திருக்கும் பதிவர் சுபாங்கன், எப்போதுமே சந்தித்துக்கொள்ளும் பதிவர் பாலவாசகன், இடத்தையே கலகலக்கவைக்கும் “கொக்குவில் சிகரம்” என்று அவரது நண்பர்களால் அழைக்கப்படும் கூல்போய், ஆர்வம் வலையைத் தொடங்கி இப்போது எழுத ஆர்வமின்றி இருக்கும் பதிவர் மகேஸ் பிரசாத், புதிதாக இந்த வட்டத்திற்குள் இணைந்துகொண்டுள்ள பதிவர் மதிசுதா என்று பதிவர்களின் அட்டகாசம் நல்லைச்சூழலில் கூடித்தான் போய்விட்டது.
இருந்தாலும் ஒவ்வொருநாளும் ஆன்மீகம், இலக்கியம், கலாசாரம், சிறுகதை ஆராட்சிகள், சுஜாதாவின் புத்தகங்கள் பரிமாற்றம், அனுபங்கள் என்று கதைகளும் படு சுவாரகசியமாகத்தான் போகின்றது.
வெகுவிரைவில் வந்து இணைந்துகொள்வதாக பதிவர் மருதமூரானும், பதிவர் பிரேமும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை

இன்று குறும்படம் இல்லை. ஆனால் சாதனைகளுக்கும், மகிழ்ச்சிக்கும் எதுவுமே தடையாக இல்லை என்பதற்கு உதாரணமாக வாழ்ந்துகாட்டும் நிக் மனதில் நிற்கின்றார்.

கூல்போய் கிருத்திகனின் பிறந்தநாள்.

கடந்த திங்கட்கிழமை அதுதாங்க 16ஆம் திகதி. தமது வீட்டிற்கு வரச்சொல்லி கூல்போய் அழைத்திருந்தார். விசாரித்தால் பிறந்தநாள் என்று சொன்னார்.
கூல் போய் 7ஆம் நம்பர் என்று சுபாங்கனுக்கு சந்தோசம் இரண்டுபேருக்கும் நல்லா ஒத்துப்போகுமாம். ரைமிங் ஜோக்குகளால் கூல்போய் சுபாங்கனை திணறடித்துக்கொண்டிருக்கின்றார் என்பது வேறுகதை.
மருத்துவர் பிஸி, சுதா வருவது தூரம் என்பதால், மாலை 7.30 மணியளவில் நானும் பதிவர் சுபாங்கனுமே கூல் வீடு சென்றிருந்தோம்.
அங்கே வீட்டு மேல் சீலிங்கில் இருந்து கொக்காகோலாக்கள் வழிந்துகொண்டிருந்தன. கூல்போய் பூனைக்குட்டிக்கு கேக் ஊட்டிக்கொண்டிருந்தார்.
நல்லூர் மஹோட்சவம் என்பதால் எல்லாமே “வெஜ்”தான். கூல்போயின் வீடு என்பதால் சுபாங்கனும் கூல்போயும் பேசிக்கொண்டவையும் “வெஜ்”தான்.

இதயம் இராத்திரியில் இசையால் அமைதிபெறும்.

என் குளத்தில் கல் எறிந்தவர்கள் நூலில் வைரமுத்து கூறியிருப்பது எத்தனை உண்மை என்பதை இராக்காலங்களில் இந்தப்பாடலை கேட்டுக்கொண்டே படுக்கையில் இருக்கும்போது புரிந்துகொள்ளலாம்.
வைரமுத்துவுக்கு மட்டும் அல்ல, எப்போதெல்லாம் தூக்கம் தள்ளிப்போகின்றதோ, மனம் அமைதிகொள்ள மறுகின்றதோ, துன்பங்கள் மனதை வருத்துகின்றதோ, அப்போதெல்லாம், எனக்கும் தேவை ஒரு காற்றோட்டமான படுக்கை, ஜன்னல்களின் ஊடே முழுமையானதோ, குறையானதோ என்றில்லாமல் நிலா, ஒரு ஐப்பொட், அதில் ஜேசுதாஸின் பாடல்கள்.

ஈகோ வரமா சாபமா?

"Get the EGO Advantage" என்ற அஞ்சனா சென்னின் ஆங்கில நூலின் தமிழ் வடிவமே இந்த ஈகோ வரமா சாபமா என்ற இந்த நூல். தமிழில் ஐஷ்வர்யன் மிக அழகாக இலகுவான தமிழில் புரியும்படி எழுதியிருக்கின்றார்.
நெகட்டிவ்வான விசியங்களை எப்படி பொஷிட்டிவ்வாக மாற்றி வெற்றி பெறுவது?
என்பதை ஈகோவை வைத்தே விளங்கப்படுத்துவது சிறப்பு.
அருமையான ஒரு நூல். எனக்கே தெரியாமல் எனக்குள் இருந்த ஈகோக்களைக்கூட கண்டுபிடிக்க ஏதுவாக இருந்தது. கண்டிப்பாக அனைவரும் படிக்கவேண்டிய நூல்.

கருத்துப்படம்

அனேகமாக மணல்களில் சிறுவர்கள், வீடுகட்டி விளையாடுவார்கள் அல்லது கோவில் கட்டி விளையாடுவார்கள் ஆனால் நல்லூர் முன்றலில் இந்த சிறுவர்கள் கட்டி விளையாடுவது விகாரை.
நல்லூரிலும் சங்கமித்திரை வந்து ஓய்வெடுத்த இடம் என்று இந்த இடத்திலும் ஒரு விகாரை கட்டப்படலாம் என்ற தூரநோக்கத்துடன்தான் சிறுவர்கள் முதலே கட்டிவிளையாடுகின்றார்களோ என்னவோ?

ஷர்தாஜி ஜோக்.
உலகிலேயே அதிக வாடிக்கையாளர்களைக்கொண்ட கையடக்க தொலைபேசிச்சேவை எயார்ரெல் என்ற ஒரு அறிக்கை நம்ம ஷர்தாஜியின் ஆர்வத்தை கிளப்பிடிச்சு.
எப்படியாவது அந்த கொம்பனியில தானும் சேர்ந்திடனும் என்ற அவாவுடன், எயார்டெல் நிறுவன வேலையாட்கள் விண்ணப்பப்படிவம் ஒன்றை வாங்கிவந்து ஒரு இரவு முழுவதும் நித்திரை விழித்து அந்த விண்ணப்பத்தை நிரப்பிக்கொண்டிருந்தார் நம்ம ஷர்தாஜி.
"Salary Expected". என்ற கொலம் மட்டும் ஷர்தாஜிக்கு எப்படி நிரப்புவது என்று புரியவில்லை. இறுதியில் ஒரு முடிவெடுத்தவராக நம்மாள் நிரப்பிய விதம் Salary Expected – Yes

8 comments:

மருதமூரான். said...

////நல்லூர் மஹோட்சவம் என்பதால் எல்லாமே “வெஜ்”தான். கூல்போயின் வீடு என்பதால் சுபாங்கனும் கூல்போயும் பேசிக்கொண்டவையும் “வெஜ்”தான்.////

superb

Cherankrish said...

காலத்தால் அல்லது மக்களால் புறந்தள்ளப்பட்டவை அழிந்துகொண்டுதான் போகிறது.அழிந்து போகிறதே என்ற கவலையோடு வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது.
தாளலயத்தை விடுவோம்.(சைவமங்கயர் கழகத்தில் மாத்திரம் அது சிலநேரங்களில் நடைபெறுகிறது) கூத்து?.யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய கலையென்றுசொல்லக்கேள்வி.
யார்கூத்தாடுகிறார்கள் இன்று? சாதுவாக தண்ணிபோட்டுவிட்டு கூத்தை நடாத்தும் அன்றய மத்திய வயதுக்காரர்கள் இன்று இல்லை.அல்லது அது அடுத்த சந்ததிக்கு மாற்றப்படவில்லை.
அழியவிடாமல் தடுப்பதற்று எனக்கு எட்டியவரை சில யோசனைகள்.

1.இலங்கையில் இருக்கும் ஒரேயொரு உருப்படியான கலாமன்றமான திருமறைக்கலாமன்றத்தினூடக கூத்தை அல்லது தாளக்கட்டை, மறைந்து வரும் கலைகளுக்கு புதுமெருகுகொடுப்பது.

2.கூத்தென்றதும நாடகமென்றதும் வெளிப்படும் ராமாயணத்தையும் மாகாபாரதத்தையும் தூக்கி ஓரமாகப்போட்டுவிட்டு நிகழ்காலத்திற்கேற்ப கதைக்களங்களை தேர்ந்தெடுத்தல் அவற்றில் அதிகம் நகைச்சுவை கலந்துவிடுவது

3.பாடசாலைகளில் பல்கலைக்கழகங்களில் கூத்தையும் பாரம்பரிய கலைகளையும் ஆராய்வுக்குரியனவாக மாற்றுவது.

யாழ்ப்பாணத்தில் நீங்களே ஒரு கூட்டத்தைசேர்த்துவிட்டதாக கேள்விப்பட்டேன்? சின்னக்கூத்தாக ஒன்றைப்போட்டுப்பார்ப்பது?

டிலான் said...

அண்ணே..நல்லூர் படங்கள் சந்திப்புக்கள் என்று போட்டு எங்களுக்கு குடுப்பை உண்டாக்குகின்றீர்கள். எப்போதாவது ஒருநாள் நாங்களும் வருவோம்.
சீனா - தலைக்கு மேல் ஆபத்து உள்ளதை இந்தியா, இலங்கை உணரவேண்டும் என்பது உண்மை.

நிக் தைரியம் வர வைத்துவிட்டார்.

வானமழைபோல பாடல் ஒரு ஹசல். அற்புதம்.

ஈகோ ம்ம்ம்..கனக்க பதிவர்கள் படிக்கவேண்டிய புத்தகம்.

அப்ப அங்கை சுபாங்கனும், கூல்போயும்தான் ஹீரோக்கள் போல?

கருத்துப்படம் -ஆச்சரியப்படுவதற்கில்லை.

டிலான் said...

முக்கியமானதை மறந்துபோட்டன். சர்தாஜி ஜோசித்ததுபோலத்தான் நானும் முந்தி யோசித்தனான். சலறி எக்ஸ்பெக்டிங் என்று கேட்டால் சம்பளத்தை வதிர்பார்க்கின்றீர்களா என்றுதான் நானும் முதல் நினைத்துக்கொண்டேன்.
பிறகுதான் தெளிவுவந்தது எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கின்றீர்கள் என்பதே அந்த கேள்வி என்று.

Pradeep said...

ஹொக்ரெயில் வழமைபோல நன்றாகத்தான் உள்ளது.
விசேடமாக அந்த ராட்சதனும், கருத்து படமும்.

தர்ஷன் said...

ஹொக்ரெயில் வழமைபோல அருமை
சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்தியாவின் காய்நகர்த்தல்கள் சாதுருயமானதாயில்லை என்பது உண்மை.
இங்கு மலையகத்திலும் பள்ளி விழாக்களில் தாளலயம் நிகழ்வுகள் ஏனோ எனக்கு அதில் பெரிதாய் ஈர்ப்பில்லை.

சமுத்திரன். said...

உறக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளும் இராட்சதன் விடயத்தில் தென்னாசிய நாடுகளிடம் போதிய தெளிவு இல்லை என்பது உண்மையே தோழரே.
உலக அரசியல் நகர்வுகளை பல பதிவுகளில் அசத்தலாக ஆராய்ந்து பதிவிட்டுவந்தீர்கள் தோழா.
இப்போது நெடுநாட்களாக உலக நடப்புக்கள் தங்கள் பதிவுகளில் வரவில்லை என்பது கவலை. அதற்கு கொங்சம் நேரம் ஒதுக்குங்கள் தோழா.

சயந்தன் said...

நல்ல ஒரு பதிவு,

LinkWithin

Related Posts with Thumbnails