Friday, May 27, 2011

தங்கச்சிக்கு கண்ணாளம்…

தங்கச்சிக்கு கண்ணாளம்..

தங்கச்சிக்கு கண்ணாளம்..

தாலியறுத்த தங்கச்சிக்கு

தடல்புடலாய் கண்ணாளம்..

என்றுதொடங்கும் நகைச்சுவையான கவிதை ஒன்றை நடிகர் ராதாரவி சொல்வதுபோல “லக்கிமேன்” என்ற திரைப்படத்தில் வரும் காட்சியை நீங்கள் பலர் பார்த்திருப்பீர்கள்.

அதில் முக்கிமான விடயம் என்னவென்றால், அந்த திரைப்படத்தில் ராதாரவி ஒரு பெரிய தாதாவாக இருப்பார், திடீர் என்று அவருக்கு கவிதை எழுதி புகழ் பெறவேண்டும் என்ற ஆசை வந்திருக்கும் அதன் பிரகாரமே அவர், மேற்படி தொடங்கும் கவிதையை ஒரு சஞ்சினை ஆபிஸில்போய் சொல்லியிருப்பார்.


நான் இன்றைக்கு சொல்லவரும் விடையமும், அது சம்பந்தப்பட்டதாக இருப்பதனாலேயே அந்த கவிதையே ஆரம்பத்தில் போட்டிருக்கின்றேன்.


ஒரு இசையினை கேட்டு எவ்வாறு இரசிக்கின்றோமோ அதுபோன்றதே கவிதைகளும், “கவிதைகளை காதலிக்கத்தெரிந்தவன் உலகத்தை காதலிக்க தொடங்கிவிட்டான்” என்பதுவும் அதனாலேயே.

செய்யுள், வெண்பா, விறுத்தங்கள், தொகைகள், மரபுக்கவிதைகள் என்ற இறுக்கங்களில் (யாப்பு) இருந்து புதுக்கவிதை பிறந்தபின்னர்தான், புலமைத்தனத்தில் இருந்த ஒருவிடயம் சாதரணமானது.

எழுத்து, சீர், அணி, மன்னிக்கவும்… அப்படியெல்லாம் வரையறைகளை சொல்லி உங்களை நான் குழப்பவிரும்பவில்லை. இருந்தபோதிலும் கவிதைகளை இரசிக்கத்தெரிவதற்கும், எழுத தொடங்குவதற்கு முன்னரும், தேர்ந்த செய்யுள்கள், வெண்பாக்கள், மரபுக்கவிதைகள் என்பவை சிலவற்றையும், அவற்றின் யாப்புக்களையும், தெளிவாக அறிந்துகொண்டால், கவிதைகளை இரசிப்பது அலாதியான இன்ப அனுபவங்களாக மாறிவிடும்.


இந்த இடத்தில் எழுத்தாளர் சுஜாதா சொன்ன ஒரு உதாரணம் நினைவுக்கு வருகின்றது. “சங்கீதத்தை இரசிக்க பாடவேண்டிய தேவை யாருக்கும் இல்லைத்தான், என்றாலும், இது என்ன இராகம், என்ன தாளம் என்பவற்றை அறியும் ஒரு அறிவிருந்தால், சிறப்பாக இரசிக்கலாம் அல்லவா?”


அடுத்த விடையம் மரபுக்கவிதைகள். மரபுக்கவிதைகளைப்பொறுத்தவரையில் இன்று அது மரணப்படுக்கைக்குப்போய்விட்டது என்றுகூட சொல்லிவிடலாம்.

புதுக்கவிதைகள் படைக்கும் படைப்பாளிகளின் தொகை பாரிய வீதத்தில் பெருகிவரும் நிலையில் மரபுக்கவிதைகள் முழுமையாக அழிந்துவிடும் நிலையினை எதிர்நோக்கவேண்டிநிலை ஏற்பட்டுவிட்டது.

ஆனால் உண்மையில் மரபுக்கவிதைகளை இரசிக்கும் நெஞ்சங்கள், இன்னும் பலர் உள்ளனர்.

இன்றையநிலையில், அந்தியேட்டி கிரிகையின்போது அடிக்கும் கல்வெட்டுக்களில் வெண்பாக்களாகவும், சில மரபுக்கவிதைகளாகவும் சில துதிப்பாக்களை மட்டும் பார்க்கமுடிகின்றது. அது தவிர மரபுக்கவிதைக்கான ஒரு இடத்தை பார்க்க கொடுத்துவைக்க வேண்டியதாகியுள்ளது.


புதுக்கவிதைகளை உணர்வோட்டமாக நேரிசை வெண்பாக்கள் தொடும் அளவுக்கு வார்த்தை ஜாலங்களாக சில புதுக்கவிதை கவிஞர்கள் எழுதுகின்றனர், ஏன் சில வலைப்பதிவர்கள்கூட நேரிசை வெண்பாவை தொடும் அளவுக்கு (அது நேரிசை வெண்பா எனத் தெரியாமலேயே) எழுதுகின்றனர்.

அவர்கள் சில யாப்புக்களையும், அணி அலங்காரங்களையும் கொஞ்சம் ஊன்றிக்கவனித்தால், கண்டிப்பாக மரபுக்கவிதையை தூக்கிநிறுத்திவிடலாம்.

வார்த்தை வித்தகங்களையும், சொல்நயங்களையும், எதுகை மோனை கூட்டி எழுதக்கூடியதாக இருக்கும் அவர்கள், இது பற்றிய சிறிய யாப்பு கட்டுக்களை அறிந்து மனதின் ஓரத்தில் வைத்தாலே மரபுக்கவிதைகள் புதிதாக பிரவாகம் எடுத்துவிடமுடியாதா?


ஃபுல் அடித்தும் போதையில்லை

பீர் அடித்தும் ஹிக்கு இல்லை

கள்ளு குடித்தும் தூக்கமில்லை

கண்ணைமூடி தூங்கினா

கனவில வருவது நீதானே!


இதுவும் ஒரு திரைப்படத்தில் வந்த புதுக்கவிதையின் இன்றைய நிலைதான். இதைக்கூட கவிதை என்று ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டி இருக்கின்றது. காரணம் இதில்க்கூட அணி, சீர் சிறப்பாகவே உள்ளது.

மரபுக்கவிதைகளானாலும் சரி, புதுக்கவிதைகளானாலும் சரி, உணர்வுகளை தொடும் கவிதைகள், செய்யுள்களே மனதில் எப்போதும் ஒட்டிக்கொள்கின்றன.

உண்மையான கவிஞன் ஒருவன் தன்னைச்சூழ நடக்கும் அத்தனை விடையங்களையும், சிறு பூவின் அசைவைக்கூட ஆழமாக பார்க்கக்கூடியவனாக இருந்தால் அவனால் தன் பக்கம் உலகை திரும்பி பார்க்கவைக்கமுடியும்.

இதற்கு உதாரணம் பலர், ஷில்பி அப்படிப்பட்ட ஒரு கவிஞன்.

ஒரு படைப்பிலேயே அங்கு நிகழும் சகல விடையங்களையும், சத்தங்களையும்கூட (ஒலி) வாசிப்பவர்களின் மனங்களில் கொண்டுவந்துவிடுகின்றான் அல்லவா?


அதேபோல சிறப்பான உவமைகள் அப்படியே மெய் சிலிர்க்கும் அனுபவங்களாக வாசிப்போனுக்கு இருந்துவிடும்.

சிறுபூவை நீ அசைத்தால் எங்கேயோ ஒரு கிரகம் அழிந்துபோயிருக்கக்கூடும் என்று ஷெல்பியால் கூறமுடிகின்றது என்றால், அவன் எத்தனை தூரம் சிந்திக்கின்றான் என்று கொஞ்சம் பாருங்கள்…

ஒரு மரத்தில் இருந்து சாதாரணமாக பூ உதிர்ந்துவிழும் நிகழ்வை,

“உறங்கும் குழந்தையின் கைகளில் இருந்து பொம்மை பிரிந்துவிழுவதுபோல, மரத்திலிருந்து பூக்கள்…” என்று சாகாவரம் பெற்ற ஒரு தமிழ் கவிஞனால் எழுத முடிகின்றதென்றால், கண்டிப்பாக அவன் கவிதைகளாக எழுதுவது மட்டும் அன்றி, கவிதைகளாக பேசுவது மட்டுமன்றி, கவிதைகளாகவே அத்தனையையும் பார்க்கின்றான், அதையும் தாண்டி கவிதைகளாகவே சுவாசிக்கின்றான்!


அனேகமான திருஞான சம்பந்தர் பாடல்களை தேவாரங்களாக பக்தியோடு படித்திருப்பீர்கள், கொஞ்சம் அதை ஒதுக்கிவிட்டு, இயற்கையின் காதலர்களாக படித்து பாருங்கள்… அருமையான இயற்கை பற்றிய புனைவுகளும், உவமைகளும், பிரமிக்கவைக்கும், உவமேயங்களும் தென்படும்.


“புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட் டைம்மேலுந்தி

அலமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான் அமருங்கோயில்

வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்

சிலமந்தி அலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.”


திருவையாற்றைப்பற்றி சம்பந்தர் பாடியது.

திருவையாறு மழைவளம் மிக்க இடமாகும், இங்கு குரங்குகள் அங்குள்ள சோலை மரங்களில் வசித்துவருகின்றன.

கோவிலை அண்டிய இடங்களிலேயே அவைக்கு உணவுகள் கிடைக்கும். அப்போது அழகிய மங்கையர்கள், ஆனந்தமாக சிரித்தபடி நடனமாடுகின்றனர், அவர்கள் நடனமாட பக்கவாத்தியமாக முழவு முழங்குகின்றது, இந்த நடன, மற்றும் முழவு ஒலிகளைக்கேட்ட குரங்குகள், அவை இடிமுழக்க சத்தமோ என்று அலறி, ஓடிச்சென்று மரத்தின் உச்திக்குப்போய் வான்நோக்குவதாக இந்தப்பாடல் உள்ளது.

ஆழமாக யோசித்துப்பாருங்கள் எத்தனை சிறப்புக்கள் இந்தப்பாடலில் உள்ளது என்பது புரியும்.

எனக்கு நல்ல கவிதைகளை இரசிக்கத்தெரியும், மரபுக்கவிதை எழுதும் சிலர் அவ்வப்போது எனக்கு கவி விருந்து வைத்துவருகின்றனர், ஆனால் பதிவுலகத்தில் மரபுக்கவிதை என்ற கனி புசிக்க நெடுநாள் பசியுடன் காத்திருக்கின்றேன்.

அந்த ஏக்கமே இந்தப்பதிவாகியது.

கவிஞர்களே… கொஞ்சம் மரபுக்கவிதைகள் ப்ளீஸ்…

13 comments:

shanmugavel said...

ரொம்ப வித்தியாசமான ஆசை ஜனா! கவிதை போன்ற படைப்புகளுக்கு அவ்வளவாக பதிவுலகில் இடம் இருப்பதாக தெரியவில்லை.தவிர புதுக்கவிதை எழுத வருபவர்கள் அவசியம் மரபை படித்திருக்க வேண்டும்.சிறப்பான அலசல்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சினிக்கவிதை அருமை..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பொதுவாக கணினியில் அமர்பவர்கள் இக்கால நாகரீக இளைஞர்கள் தான் இவர்களிடம் புதுகவிதை கொண்டு சேர்ப்பதே மிக கடுமையாக இருக்கிறது....

அதனால்தான் மரபுக்கவிதை புத்தகத்தோடு சென்று விடுகிறது...

தங்களின் ஆசை பூர்த்தியாக நான் ஏதாவது மரபுக்கவிதை முயற்ச்சிக்கிறேன்...
நன்றி

Anonymous said...

///மரபுக்கவிதைகளானாலும் சரி, புதுக்கவிதைகளானாலும் சரி, உணர்வுகளை தொடும் கவிதைகள், செய்யுள்களே மனதில் எப்போதும் ஒட்டிக்கொள்கின்றன./// உண்மை தான்....


நல்ல விடயத்தை அலசியுள்ளீர்கள்..

தமிழ் உதயம் said...

அருமை. கவிதை ஆய்வு. நன்றாக உள்ளது

Unknown said...

மரபுக்கவிதையா ??அப்பிடீன்னா??

Unknown said...

அப்பிடீன்னு கேக்குற காலம் பாஸ்...
ம்ம் கவிஞர்களே??முயலுங்கள்!!

கார்த்தி said...

வைச்சுக்கொண்டா வஞ்சகம் செய்யுறம்! இருந்தா தருவம் தானே! ஏலும்னாதானே தரலாம்!!

நிரூபன் said...

உங்களின் ஆதங்கம் நியாயமானது.
தமிழ் மீதான தீராக் காதல், மரபுக் கவிதை எனும் முதிர் கன்னி மீதான விருப்பம்!
முதலியவற்றுக்கு முதலில் தலை தாழ்த்துகிறேன்.

மரபுக் கவிதையினை எழுதும் போது ஒரு சில வாசகர்கள் தம்மால் இக் கவிதைகளை ரசிக்க முடியவில்லையே. இவை கடின நடையில் இருப்பதால் தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லையே எனவும் வருத்தப்படுக்கிறார்கள்.

இத்தைய அன்பர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம் வலையில் இலகு நடையில் புரிந்து கொள்ளக் கூடிய சிந்து கவிகளை, விருத்துக்களை எழுதியுள்ளேன் சகோ.

இங்கே எனது சுட்டிகளைத் தந்தால் விளம்பரப்படுத்துவது போல ஆகிவிடும்.
ஆனாலும் நானும் மரபின் மீது தீராக் காதல் கொண்ட, உங்களைப் போன்ற ஆதங்கமுள்ள ஓர் ரசிகன் தான்.
இச் சுட்டிகளில் எல்லாமே மரபுக் கவிதைகள் அல்ல. மரபும், புதுமையும் இரண்டறக கலந்தே இருக்கின்றன.

உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவு கிடைக்குமாக இருந்தால், நிச்சயம் நானும் மரபுகளைத் தொடர்கிறேன் சகோ.

http://www.thamilnattu.com/2011/04/18_28.html
இவ் இணைப்பில் ஒரே ஒரு சிந்து கவி இருக்கிறது.


ஆச்சி வீட்டு நாய்க்கு
அன்று நாங்கள் வைத்த பெயர் ரொம்மி-
பேச்சு மொழி மாறி, இப்போ இங்கிபீசில்
எம் பிள்ளைகட்கு வைக்கும் பெயர் சொம்மி!
http://www.thamilnattu.com/2011/05/blog-post_05.html


முத்துமாரி அம்மன் கோவில் பின்னாலே
முதன் முதலில் பார்த்த குட்டி ஊரு ’துன்னாலே’
பேசிப் பேசி காதலித்தோம் இரு கண்ணாலே,
போன மாசம், அவள் ஓடிப் போனாள் கனடாவே!
http://www.thamilnattu.com/2011/05/blog-post_05.html

நிரூபன் said...

http://www.thamilnattu.com/2011/02/blog-post_02.html

இவ் இணைப்பில் இறுதி இரு வரிகளை,
கோர்ப்பதில் சோம்பல் இருந்த காரணத்தால், மரபில் இருந்து புதுமைக்கு இறுதி வரிகளில் மட்டும் தாவி விட்டேன்.

நிரூபன் said...

அண்ணலே உமக்கு மரபின் மீதான
ஆதங்கம் இருப்பது புரிந்து கொண்டேன்
இன்னலை ஈழத்தின் இனிமையினை நான்
மண்ணிலே உள்ள பல விடயங்களை
மகத்தான மரபினுள்ளடக்கி, இனிமேல் கவி(ப்)
பண்ணென ஆக்கி உம் பசியினைத் தீர்த்து
பாவாலே நனைக்கிறேன், பார்த்திரும், காத்திரும்!

சி.பி.செந்தில்குமார் said...

>>>மரபுக்கவிதைகளைப்பொறுத்தவரையில் இன்று அது மரணப்படுக்கைக்குப்போய்விட்டது என்றுகூட சொல்லிவிடலாம்.

m m no other exist

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மரபு கவிதை எழுதலாம்தான்! யார் வாசிக்கிறது? இதுதான் ஜனா பிரச்சனை!

LinkWithin

Related Posts with Thumbnails