Saturday, July 2, 2011

எனக்கு நடந்த அமானுஸ்ய, தெய்வீக அனுபவங்கள்.

மனதில் எப்போதும் ஒரு அதிசயமாக தொக்கி நிற்கும் சில விடையங்கள் வரையறைக்குள் அடங்கும் சிந்தனைக்கு அப்பாற்பட்ட விடையங்களாகவே இருக்கின்றன. எப்போதும் நினைத்து அதிசயிக்கும் ஒருவிடையங்களாகவும் விடைதெரியாத ஒரு புதிர்களாகவுமே அவை உள்ளன.
எப்போதும் பகுத்தறிவு சிந்தனையை முதன்மைப்படுத்தி சிந்திப்பது எனது வழமை என்றாலும்கூட இவற்றின் அர்த்தங்கள் என்ன என்ற கேள்வி எப்போதும் மனதை குடைந்தவண்ணமே உள்ளன.
இது பற்றி எழுத வேண்டும் என பல முறை முயன்றும், பகுத்தறிவு சிந்தனையும், நான் சொல்வது சித்தரிக்கப்பட்டது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிடுமோ என்ற பயத்தின் காரணமாக அப்பப்போ என் கைகளை கட்டிப்போட்டுக்கொண்ட விடையங்கள் இவை.
இருந்தபோதிலும் விடை தெரியாத இந்த புதிர்களை ஆயிரக்கணக்கானவர்களுடனும், பதிவுலக நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்வது என்ற முடிவுடன் அவற்றை ஒரு பதிவாகவே இங்கே இடுகின்றேன்.
எனக்கு நடந்த இந்த அமானுஸ்யங்கள், தெய்வீக நிகழ்வுகள்! உங்களில் சிலருக்கு புதிராகவும், சிலருக்கு ஒரு ஆர்வமாகவும், சிலருக்கு ஒரு தகவலாகவும், ஏன் சிரிப்பாகவும்கூட இருக்கும் என்பது எனக்கு தெரியும்.

1991 களில் நடந்த ஒரு சம்பவம். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலம். மார்கழி மாதம் சோ... என்று மழை கொட்டிக்கொண்டிருக்கும் பொழுதுகள் அவை.
அந்த வேளையில்தான் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் பெருங்கதை அல்லது விநாயகர் சஸ்டி பூஜைகள் 21 நாட்களுக்கு நடப்பது வழக்கம்.
அந்தக்காலங்களில் என் செயற்பாடுகள், பாடசாலை, தனியார் வகுப்புக்கள், அவையை அடுத்து அந்த விநாயகர் ஆலயம் என்ற வட்டத்திற்குள்ளேயே சுழன்றுகொண்டிருந்தது. காரணம் நாட்டு சூழ்நிலை அப்படி.
வானத்தில் இருந்து நாள் தவறாது குண்டுகள் உருவத்தில் உயிர்ப்பலி நடந்துகொண்டிருந்த காலங்கள் அவை.

அன்றும் அப்படியே, ஒரு வியாழக்கிழமை அது என்பது நினைவில் உள்ளது. பிற்பகல் மூன்று மணி இருக்கும், இலட்சார்ச்சனைக்கு தேவையான இலைகளை ஒடித்துவந்து ஆலயத்தில் வைப்பது அப்போது என் வழமை. அதுபோலவே மழை கொட்டிக்கொண்டிருந்த அந்தநாளும் ஐந்துவகை இலைகளை மழையில் ஒடித்துக்கொண்டு கோவிலுக்கு சென்றேன்.
அங்கே பூசகர் மட்டுமே இருந்தார். மூலஸ்தானத்திற்கு சற்று முன்பாக உச்சியில் இருந்த முகட்டு ஓடு உடைந்து மழைநீர் அருவி கொட்டுவதுபோல வீழ்ந்துகொண்டிருப்பதை பூசகர் எனக்கு காட்னார். பெரியவர்கள் யாரையாவது அழைத்துவந்து புதிய ஓடு போட சொல்லும்படி என்னிடம் தெரிவித்தார்.
அதைப்பார்த்த நான், மனதில் ஏதோ ஒரு உணர்வு உந்துதலில், புதிய முகட்டோடு ஒன்றை எடுத்து ஒரு கயிற்றினால் கட்டி என் முதுகுப்பக்கம் நிற்குமாறு வைத்துக்கொண்டு கொட்டும் மழையில் நனையாமல் இருக்க தலையில் ஒரு ரபர் சீட்டை போட்டுக்கொண்டு, பூசகருக்கும் தெரியாமல் கோவில் ஓட்டில் ஏறத்தொடங்கினேன்.

ஒரு ஓரத்தில் உச்சி முகட்டோடை அடையும் வண்ணம் இரும்பு ஏணி சரிவாக இருந்தது. அதை பிடித்து மெல்ல மெல்ல ஏறினேன். சாதாரண விட்டு ஓட்டு சாய்வு போல கோவில் ஓட்டுச்சாய்வு இருக்காது அது சற்று குவிய அமைப்பில் இருக்கும் ஏறுவது மிகக்கடினம், அதுவும் கொட்டும் மழையில் ஏறுவது அதைவிடக்கடினம்.
இளம்கன்று பயமறியாது என்பதுபோல மெல்லமெல்ல ஏறி முகட்டோடை அடைந்து முகட்டோடுகளில் இருந்து, இருபக்கமும் கால்களைப்போட்டுக்கொண்டு உந்தி உந்தி மெதுவாக உடைந்த முகட்டோட்டினை அடைகின்றேன். அந்த முகட்டோட்டை கழற்றி எறிந்துவிட்டு, தலையில் போட்டிருந்த ரபர் சீட்டை அதில் நன்றாக விரித்து அதற்கு மேலாக புதிய முகட்டோட்டை கச்சிதமாக பொருத்தினேன்.

சரி.. இனி இறங்கலாம் என்று, வந்ததுபோலவே மெதுவாக பின்பக்கமாக உந்திச்சென்று அந்த இரும்பு ஏணிமூலம் இறங்கிவிடலாம் என்ற நோக்கோடு அங்காலும் இங்காலும் காலைப்போட்டுக்கொண்டு பின் பக்கமாக மெதுவாகச்சென்று கொண்டிருந்தேன், சரி பின்பக்கமாக ஏணியை பிடிக்கமுடியாது என்று எண்ணி மற்றப்பக்கம் திரும்ப முயற்சித்தபோதுதான் அந்த விபரீதம் நடந்தது.
சமநிலை தவறிய நான் திடீர் எனச்சரிந்து ஓடு வழியே வழுக்கி சென்று கொண்டிருந்தேன். ஓடுகளின் முடிவிடத்தில் இருந்தே தரை தூரமாக தெரிந்துகொண்டிருந்தது. அது மட்டுமின்றி கோவில் வேலைகளுக்காக கொட்டப்பட்டிருந்த பெருங்கற்கள் நான் விழும் தரையில் குவிக்கப்பட்டும் இருந்தன.
இதோ இறுதியோட்டில் இருந்து நான்காவது ஓடுவரை வழுக்கிக்கொண்டு வந்திருப்பேன். இனி கதை சரி என்ற நிலையில், ஒரு அதிசயம்..
ஆம்... வேகமாக சறுக்கிவந்த நான் அந்த நான்காம் அடுக்கு ஓட்டிலேயே நின்றேன் அல்லது நிறுத்தப்பட்டேன்.
மழைக்குளிரிலும், உடலெல்லாம் புல்லரித்துக்கொண்டது. உராய்வு நிறுத்தியிருக்காலம் என்று சிந்தித்தாலும் மழை கொட்டிக்கொண்டிருக்கும்வேளை, உராய்வு நிலை அதிகமான அழவு குறைந்திருக்கும் நேரம், வேகமாக சறுக்கிவந்துகொண்டிருந்த நான், விழும் தறுவாயில் நிறுத்தப்பட்டது எப்படி?
இது தெய்வீகமான செயலா? அல்லது அந்த கணத்தில் ஏற்பட்டதொரு தற்செயலான விடயமா?

1997 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைகளுக்காக விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்த காலம். எனது இரவு நேர கற்றல் நேரசுசி கொஞ்சம் வித்தியாசமானது பொதுவாகவே நான் மாலை 7 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை படிப்பேன், பின்னர் 12 மணிவரை தூங்கிவிட்டு அலாரம் வைத்து 12 மணிக்கு படிக்கத்தொடங்கி அதிகாலை 3 மணிவரை படிப்பேன், பின்னர் அதிகாலை 5 மணிக்கு அலாரம் வைத்து ஐந்திலிருந்து 8 மணிவரை படிப்பதே அந்தநேர என் கற்றல் நேரசுசி.
அந்தநேரத்தில் மாலை 7 மணிதொடக்கம் இரவு 10 மணிவரை வரையறுக்கப்பட்ட மின்சாரமே எமக்கு கிடைத்தது. அதன் பின்னர் சிமினி விளக்கில்த்தான் படிப்பு.
இப்படி ஒரு நாள் நடந்த அதிசயமான சம்பத்தையே நான் சொல்லவருகின்றேன்.

ஒரு நாள் அதிகாலை மூன்றுமணிவரை படித்துவிட்டு, வழக்கப்படி ஐந்து மணிக்கு அலாரம் வைத்துவிட்டு, விளக்கை அணைத்துவிட்டு படுத்து தூங்கிவிட்டேன்.
அன்று அந்த இரண்டு மணித்தியலாலத்திற்குள் ஆழ்ந்த ஒரு உறக்கம் என்னை ஆழ்க்கொண்டது என நினைக்கின்றேன்.
திடீர் என அலாரம் அடிக்கவே வழித்து எழுந்த நான் இருளில் அன்றாடம் பழக்கப்பட்ட மேசைமீது வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டியை எடுத்து பற்ற வைக்கின்றேன், தீப்பெட்டி தட்டப்படும் சத்தம், தீக்குச்சி எரியும் சத்தம் என அனைத்தும் கேட்கின்றது. ஆனால் கையில் தீக்குச்சி எரிவதை உணரமுடிந்தபோதிலும் எவ்வளவு முயற்சி செய்தும் ஒரு சிறு வெளிச்சத்தினைக்கூட என்னால் பார்க்கமுடியவில்லை. இறுதியில் தீக்குச்சி எரிந்து அடிப்பகுதி எரிவதால் என் கை சுட்டு என் கையினை உதறுகின்றேன்.
அடுத்த கணம் நான் படுக்கையில் படுத்திருப்பதை உணர்ந்து திடுக்கிட்டேன்.
பின்னர் எழுந்து இருளில் தீப்பெட்டி இருந்த இடத்தை தேடுகின்றேன் அது அங்கே இல்லை.இருளில் தடவித்தடவித்தேடி கீழே கிடந்த தீப்பெட்டியை எடுத்து, விளக்கை ஏற்றிப்பார்த்தால், ஒரு தீக்குச்சி முழுமையாக எரிந்து வீசப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தது.
அன்று எனக்கு நடந்த அந்த விநோதமான சம்பவம் என்ன? இதுவரை அதற்கு விடை இல்லை.

அதே 1997 ஆம் ஆண்டு, உயர்தரப்பரீட்சைகளை வெற்றிகரமாக எழுதி முடித்துவிட்டு, முழுநேரமும் கிரிக்கட் விளையாடிக்கொண்டு திரிந்த பொழுதுகள் அவை. இந்த சம்பவம் நடந்தது நள்ளிரவோ, பெரும் இருளிலோ அல்ல.
மாலை சுமாராக ஒரு 6.30 மணியிருக்கும்,
காலையில் படிக்காதுவிட்ட, தினப்பத்திரிகை ஒன்றை வீட்டு ஹோலில் இருந்து அந்தநேரம் படித்துக்கொண்டிருந்தேன். அந்தநேரம் வாசலால் உள்ளே வந்து வீட்டின் உள்பக்கமாக எனது அண்ணா சென்றுகொண்டிருந்தார்.
ஆனால் அவர் பின்னால் யாரோ வந்தது போல எனக்கு உள் உணர்வு உந்தவே பத்திரிகையில் நிலைத்திருந்த என் கண்கள், வாசலை நோக்கின.
ஈரக்குலை நடுங்கும் என்று சொல்வார்களே அதை சத்தியமாக அன்றுதான் நான் முழுமையாக உணர்ந்தேன்.
வாசலில் இடையில் இருந்த பகுதியால் உற்றுப்பார்த்தேன், அங்கே தந்தையாக இருந்து என்னை உருவாக்கிய எனது பெரிய தந்தையார் நின்றுகொண்டிருந்தார்.
என்னையறியாமல் என் உடல் நடுங்கத்தொடங்கியது, மனது என்றும் இல்லாத உணர்வையும், உடல் சமநிலை குழம்புவதுபோல ஒரு உணர்வும் ஏற்பட்டது.
ஏன் என்றால் எனது பெரிய தந்தையார் 1991ஆம் ஆண்டு காலமாகியிருந்தார்.
குறிப்பிட்ட நேரம்வரை அவரை என்னால் பார்க்கமுடிந்தது. அவரது பார்வையில், என்றுமில்லாத ஒரு பரிதாப உணர்வும், அன்பும் இருந்ததை அவதானித்தேன்.

சரி... சாவு நெருங்கியவர்களுக்குத்தான் இறந்தவர்கள் கண்ணில் தெரிவார்களாம் என்ற கதை அப்போது திரும்ப திரும்ப மனதுக்குள் வந்தது. சீக்கிரமே நான் இறந்துபோய்விவேன் என்று நான் முடிவே கட்டியிருந்தேன் அப்போது.
என்ன நடந்தாலும் அடுத்த இரண்டு நாட்கள் நான் வீட்டை விட்டு எங்கும் கிழம்பவில்லை. அனைவருடனும் தீடீர் என்று பெரும் பாசத்துடனும், அன்போடும் பழகினேன். நண்பர்கள் என்னை பார்த்து ஆச்சரியப்பட்டாலும் பயத்தில் அவர்களுக்குக்கூட நான் இந்த சம்பவத்தை கூறவில்லை. ஆனால் நான் நினைத்ததுபோல பிறகு ஒன்றும் நடக்கவில்லை.

அடுத்ததும் அதே ஆண்டுதான் 1997ஆம் ஆண்டு. கந்தர் சஷ்டி ஆறுநாளும் நல்லூர் ஆலயத்திற்கு சென்று வந்துகொண்டிருந்தேன். ஏன் என்றால் உயர்தரப்பரீட்சையில் நல்ல ரிசல்ட் வரவேண்டும் என்றுதான்.
ஏன் என்றால் சாதாரணதரப்பரீட்சையில் எனக்கு நல்ல பாடமாக இருந்தது.
அந்த பரீட்சையில் எனக்கு 4 டி மற்றும் 4 சீ வரும் என்று உறுதியுடன் நான் நம்பினாலும், யாரும் எடுக்காத ஒரு புதிரான ரிஸல்ட்டே எனக்கு கிடைத்தது.
எட்டு பாடமும் சீ.
ஆகவே என்னதான் படிச்சு ஒழுங்காக எழுதினாலும் எங்களுக்கு அப்பால் செயற்பாடுகள் உள்ளன என்ற நோக்கோடு உயர்தரப்பரீட்சை மிக முக்கிமானது என்பதால் கடவுளே நான் செய்திருக்கிறதுபோல, என் நம்பிக்கைபோல எனக்கு ரிஷல்ட் வரணும் குறைத்துவிட்டுடாதையப்பா என்ற கனவான் ஒப்பந்தத்தோடைதான் கந்தர் சஷ்டிக்கு கோவிலுக்கு போய் வந்தேன்.

அங்கே புதுமையான ஒருவரை இரண்டுநாட்களாக அவதானித்துவந்தேன். நோத் இன்டியன் சாயலில் இதற்கு முன் நான் அவரை கண்டுகொண்டதே இல்லை. பட்டு வேட்டியும், தங்க செயினும் போட்டு, நல்ல ரிச்சான லுக்கில்த்தான் இருந்தார்.
சுவாமி வலம்வரும்போது அனைவரும் சுவாமியுடன் வலம் வந்தாலும் இவர், சுவாமிக்கு நேரெதிராக சுவாமியை தியானித்தபடி பின்னாலேயே காலை வைத்து செல்வதை வித்தியாசமாக அவதானித்தேன்.
பொதுவாக சுவாமிவலம் வந்து பூசை முடிந்தபின்னர், நல்லூர் கேணிப்படியில் இருந்து கந்தர் சஷ்டி கவசம் படிப்பது அப்போதைய என் வழமை.
அப்படி படித்துக்கொண்டிருந்து படித்துமுடித்த நான் திடுக்கிட்டேன் ஏன் என்றால் அந்த நபர் எனக்கு முன்னால் இருந்து என்னை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார்.

'வித் யுவர் பர்மிஸன்.. ஐ வோன் ரூ ஸ்பீக் வித் யு சம்திங்' இந்த வசனம்தான் அவர் என்னுடன் முதன்முதல்பேசியது. அவரது நோத் இன்டியன் ரிச் லுக்கும், ஸ்ரைலான ஆங்கில உச்சரிப்பும் என்னை ஆச்சரியப்படுத்தின.
என்ன பேசவேண்டும் என்று கேட்டேன்.
அந்தநேரம் எனக்கு நடந்துகொண்டிருந்த சம்பவம் ஒன்றைச்சொல்லி மனிதர் என்னை திக்குமுக்காடச்செய்தார். மடை திறந்த வெள்ளம்போல பல விடையங்களைப்பேசினார். என் வாழ்வு எப்படி இருக்கும் என்று கட்டம் கட்டமாக சொன்னார். (இன்றுவரைக்கும் அவை சத்தியமான உண்மைகளாகவே உள்ளன.)
முற்பிறவியில் நான் ஒரு பிரித்தானிய வெள்ளை இனத்தவன் என்றார். (மனதுக்குள் விழுந்து விழுந்து சிரித்தேன்) ஆள்த்தான் ரிச்லுக், கிறம்மட்டிக்கல் இங்கிலீஸிலை தெரியிறார் மறை கழண்ட கேஸோ? என்றுகூட சந்தேகப்பட்டேன்.
நீ அப்படித்தானே நினைக்கிறாய் என்று அதையும் கேட்டார் அந்த ஆள்.

அப்படியே போராட்டம் அரசியல், என்று என்ன என்ன நடக்கும் என்று சொன்னார்.
எனது வலைப்பதிவு சத்தியமாக அத்தனையும் அப்படியே நடந்துவிட்டது.
அவர் சொன்னவகையறாக்கள் முடிய சில கட்டங்களே உள்ளதை என்னால் புரிந்துகொள்ளமுடிகின்றது.
இறுதியாக அவர் சொன்ன வசனம், 'இத்தனையும் நடந்த பின்னர் போனவன் திரும்பி வருவான், அதன் மூலமே நிரந்தரமான அமைதி திரும்பும்'
1948 களில போன வெள்ளையனா? 1990களில போன இந்தியனா? என்பதே இப்போது அது சம்பந்தமாக என் மனதில் உள்ள கேள்வி.
இறுதியாக அவர் எனக்கு சொன்னவைகள், நீ இன்றின் பின் என்னைக்காணமாட்டாய், எல்லாமே ஒரு கணிப்பில் நடப்பதுவே, இன்னும் பதினோர் வருடம் கழித்து என்போல் ஒருவர் உன்னிடம் பேசுவார் என்றார்.

ஜென்ரில்மனாக இருக்கும் ஒரு லூசிடம் மாட்டிக்கொண்டேனோ என்ற சந்தேகத்திலேதான் நான் கோவிலிலிருந்து புறப்பட்டேன். இது குறித்து மாலை என் நண்பர்களிடம் சொல்லி சிரித்தும் கொண்டேன். ஆனால் உண்மையாகவே அதன் பின்னால் அவரைக்காணவில்லை. ஆனையிறவு, கட்டுநாயக்கா, சமாதான பேச்சு, ஒருவரின் திடீர் மாற்றம், என்று அவர் சொன்னது ஒவ்வொன்றாக நடக்கும்போது இருதயம் படபடத்தது. பல நடந்துமுடிந்துவிட்டன சில நடக்க இருக்கின்றன.

2008 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், என் மனைவியின் தயாரின் கிருத்தியம் செய்வதற்காக இராமேஸ்வரம் சென்றிருந்தேன். இராமேஸ்வரம் கோவில் வீதியை தனிமையில் ஏதேட்சையாக சுற்றி வருகையில் ஒரு பெண், என்னைப்பார்த்து சிரித்து, அம்மாக்கு பசிக்குதையா ஒரு சாப்பாடு பார்சல் வாங்கிவா.. அடுத்த வருசம் உனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்குமய்யா என்றார்.
ஒரு பார்சலை வாங்கி வந்து கொடுத்தேன். சாப்பிட்டுக்கொண்டே பக்கத்தில் இரு ஐயா என்றார். புரியாமல் அவரைப்பார்த்து குழம்பினேன்.
ஆமா ராஜா..நல்லூர் ஐயா சொன்னது நெசந்தான் என்றார்.

25 comments:

maruthamooran said...

பாஸ்........! உங்களோட எவ்வளவு நெருக்கமாக பழகினாலும், நீங்கள் இவ்வளவு வில்லங்கமுள்ள ஆள் என்டு எப்பவாவது சொல்லியிருக்கிறீரா?

மற்றப்படி, அவரவர் அனுபவங்களைப் பொறுத்த்து. அமானுஸ்யங்கள்.

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

Riyas said...

முழுமையாக படித்துவிட்டு வருகிறேன்

Anonymous said...

ஆகா என்ன என்னங்க... உண்மையிலே இப்படியெல்லாம் நடக்குமா .!!!

Anonymous said...

///ஏன் என்றால் எனது பெரிய தந்தையார் 1991ஆம் ஆண்டு காலமாகியிருந்தார்.
குறிப்பிட்ட நேரம்வரை அவரை என்னால் பார்க்கமுடிந்தது. அவரது பார்வையில், என்றுமில்லாத ஒரு பரிதாப உணர்வும், அன்பும் இருந்ததை அவதானித்தேன்///ஒருவேளை மனப்பிரம்மையா இருக்குமோ ?

Anonymous said...

///1948 களில போன வெள்ளையனா? 1990களில போன இந்தியனா? என்பதே இப்போது அது சம்பந்தமாக என் மனதில் உள்ள கேள்வி./// அப்புறம் 2009 இல் ...இன்னொருவரை விட்டுட்டிங்களே...

Anonymous said...

நம்பவம் முடியல நம்பாமல் இருக்கவும் முடியல்ல ...

சொன்ன விதம் அருமை ,திகிலா இருந்தது...

குலவுசனப்பிரியன் said...

தேர்வுகளுக்கு கண் விழித்து படிக்கும் போது, நினைவுகள் தடுமாறுவது இயல்புதான்.

மற்ற நிகழ்வுகளை நம்புவது அவரவர் மன நிலையைப் பொருத்தது.

என் அனுபவத்தில், நாடி சோதிடன், சாமியார் சொன்னார், இதுவரை சொன்னதெல்லாம் நடந்தது. நமக்கு நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே சொந்த முயற்சியில் செய்யவேண்டிய காரியங்களை செய்யாமல் காலம் கடந்தபின் வருந்துபவர்களை கண்டிருக்கிறேன்.

balavasakan said...

நீங்கள் ஒரு அபூர்வமான ஆசாமி ஜனா அண்ணா...

உணவு உலகம் said...

ஆச்சரியமாக இருக்கிறது.

anuthinan said...

ரொம்பவே சுவாரசியமான அனுபவங்கள்!!!!

இப்படி வாழ்க்கை இருந்தால்தான் ஜனா அண்ணா!!! வாழ்க்கையில் ஒரு சுவாரசியமே இருக்கும்!!!!

THOPPITHOPPI said...

எல்லோர் வாழ்க்கையிலும் இதுப்போன்று நடப்பதுண்டு. ஆனால் உங்களுக்கு விசித்திரமாக இருக்கு.

நிரூபன் said...

பாஸ், எல்லாம் நல்லாத் தானே போய்க் கிட்டிருந்திச்சு,
படிச்சு முடிந்ததும் மயிர்க் கூச்செறிகிறது பாஸ்.
புல்லரிக்கிறது, மனதினுள் இனம் புரியாத ஓர் பய உணர்வு ஏற்பட்டுக் கொள்கிறது.

அடுத்த பகுதியினைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.

நல்லூர் ஐயா சொல்லிய விடயங்களில் நடக்கவிருப்பவை பற்றி ஏதாவது சொல்லுங்களேன். எதிர்காலத்தில் அவை நடக்கின்றனவா என்று பார்ப்போம்.

Ashwin-WIN said...

ரொம்பவே சுவாரசியமான அனுபவங்கள்!!!!

இப்படி வாழ்க்கை இருந்தால்தான் ஜனா அண்ணா!!! வாழ்க்கையில் ஒரு சுவாரசியமே இருக்கும்!!!!

அனுதிணன் சொன்னதைத்தான் நானும் ரிப்பீட் பண்றன்..

கார்த்தி said...

பலர் இப்பவும் இவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!

Unknown said...

மாப்ள ஆச்சர்யமான விஷயங்கள் தான்யா!

sharma.aps said...

நீங்கள் சொன்ன விடயங்களை நான் முழுமையாக நம்புகிறேன். சில சித்த புருஷர்கள் இது போல ஈஅந்த ரிச் லுக் ஆசாமி, அந்த ராமேஸ்வரம் பெண்) நடமாடுவதுண்டு. ஆனால் ஏன், எதற்கு என்ற சூட்சுமம் நமக்குத் தெரியாது. நண்பரின் இந்த வலைப்பூ உங்களுக்கு சுவாரஸ்யமானதாக இருக்கக் கூடும்.

http://ramanans.wordpress.com/

சர்மா

சித்தாரா மகேஷ். said...

ஆமாம் இது அமானுஸ்ய, தெய்வீக அனுபவங்கள் தான்.மெய் சிலிர்க்க வைக்கிறது தங்கள் கதை.

சிந்திக்க வேண்டிய சில விடயங்கள்.I

Anonymous said...

ஸ்வாரஸ்யமா எழுதியிருக்கீங்க

Paneerchelvan arjunan said...

very interesting.Is there anything else?

திவ்யா செந்தமிழ் செல்வன் said...

பஸ் மூலம் உங்கள் தளத்தை பார்க்க முடிந்தது..

நீங்கள் கூறுவது உண்மை என்று நான் நம்புகிறேன்..

இங்கே பகுத்தறிவு பேசும் பலரை விட அதிகமாக கேள்வி கேட்டு கொண்டிருந்தவள் நான். எனது அண்ணன் இதைவிட அதிகமான நாத்திகவாதியாக இருந்தான் ....

ஆனால் அவனுக்கும் அவன் மூலம் எனக்கும் ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் நாம் பகுத்தறிவு என்று சொல்வதை தாண்டி பல விடயங்கள் இருப்பது உண்மை என்றே நம்புகிறேன்.

உங்கள் பதிவில் பிடித்த அம்சம் - இனி நடப்பது பற்றி சொல்லாமல் இருந்தது......

ஆயினும் பொதுவாக இது போன்ற தெய்வீக அனுபவங்களை பொதுவில் பகிர்வது நல்லததல்ல .. ஏனெனில் இதை உண்மையான நோக்கோடு பார்பவர்கள் குறைவாகவே இருப்பார். மற்றும் கேள்வி கேட்டு அதை உண்மையான சாரம் புரிந்து கொள்ளாதவர்கள் அதிகமாக இருப்பார்கள் ..... அவர்கள் இது போன்று பேசுவதற்கும் நாமே காரணமாக இருப்போம் .........

bhy said...

wow its amazing

இராஜராஜேஸ்வரி said...

ஆச்சரியமான பகிர்வு.

MANGESHCAR said...

How can I contact you jana

yaalavantone said...

வணக்கம்
நீங்க என் ஒரு புரட்சி தொடர்
எழுத படாது
மிண்டும் சிந்திப்போம்
யாழவன்

LinkWithin

Related Posts with Thumbnails