Tuesday, January 1, 2013

உடலினை உறுதி செய்வோம்..........



எமது வாழ்வின் வெற்றிகரமான முன்னேற்றத்திற்கும் மகிழ்ச்சி மிகுந்த வாழ்வாதாரத்திற்கும், மனம் செழுமையாக எப்படி இருக்கவேண்டும் என்று கூறப்படுகின்றதோ அதேபோல உடல் வலு, உடலின் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்றே.
முன்னைய காலங்களில் உடல் வலு உழைப்பு, நடை, பிராயணங்கள் என்பன பெரு வசதி கண்டு இருக்காத காலங்களில் வாழ்ந்தவர்கள், இரசாயனப்பதார்தங்கள் கலக்காத இயற்கையான ஆகாரங்களை உண்டு உடல் உறுதியை பேணி வந்தனர்.

இன்று பரிதாபகரமான நிலை என்னவென்றால், முப்பது வயதை தாண்டு முன்னதாகவே பெரும்பாலானவர்களுக்கு நீரிழிவு, கொலஸ்ரோல், பிரஸர் என அத்தனை நோய்களும் எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டன.
இதற்கெல்லாம் காரணம் என்ன என்றால், உடல் வலு பயிற்சிகள் இன்மையும், பாஸ்பூட் என்ற கண்றாவி பஸன் ஆகி ஆட்கொள்வதையும், இருந்த இடத்தில் இருந்து மணித்தியாலக்கணக்காக வேலை செய்தலையும் முக்கியமாகக்குறிப்பிட்டுக்கொள்ளலாம்.

இன்று சுகாதார அமைச்சும், சில தொண்டு நிறுவனங்களும், நீரிழிவை ஒழிப்போம், கொலஸ்ரோலைக்குறைப்போம் என்று பிரச்சாரங்கள் செய்து துண்டுப்பிரசுரங்களை வீடுவீடாக கொடுக்கவேண்டிய கட்டாய நிலைக்கு இன்று நாட்டில் இளவயதிலேயே 
பாரிய நோய்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதை கவனிக்காமல் இருந்துவிடமுடியாது.
இந்த நோய்கள் கட்டுப்படுத்தப்படாமல் உயர்ந்துகொண்டு சென்றால் நாடு தனது சராசரி உயிர்வாழும் வயதினை 45 இற்கு இறக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையே ஏற்படும் என்று சொன்னாலும் தப்பில்லை.

சிலரை கவனித்திருப்பீர்கள், கோடிகோடியாக பணம் இருக்கும், பணம் என்பதை நாடியே ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருப்பார்கள், ஆனால் வாய்க்கு ருசியாக ஒரு சாக்லட்டையோ, அல்லது விசேட விருந்துகளில் ஒரு மட்டனையோ வாயில் வைத்தால்கூட அவை விசமாகிவிடும் என்ற நிலை. சாப்பாடாக மாத்திரைகளையும், மாத்திரிரையளவு சாப்பாட்டையும் பத்தியமாக சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். 
பணம் இருந்தும், மேலும் மேலும் உழைப்பு இருந்தும் என்ன பிரியோசனம்!

'21 வயது வரை உடல் எம்மை கட்டுப்படுத்தும், 21 வயதில் இருந்து உடலை நாம் கட்டுப்படுத்த தொடங்கிவிடவேண்டும்' என்ற குறிப்பு எவ்வளவு யதார்த்தமானது. ஆனால் எங்களைப்பொறுத்தவரையில் 21 வயது வரை ஏதோ ஒரு வகையில் உடல் வலுப்பயிற்சிகளை மேற்கொண்டிருப்போம் அதன் பின்தான் உயர்கல்வி, தொழில்  என்று உடலை கவனியாது விட்டிருப்போம்.
முறையான உடல்பயிற்சி செய்து 50 களை எட்டியவர்களை பார்த்து உலகமே பொறாமைப்படும் ஏனெனில் அவர்கள் தம் மகன் அல்லது மகளிற்கு தந்தையின் தோற்றத்தில் அல்லாமல் அண்ணனின் தோற்றத்திலேயே இருப்பார்கள்.

பொதுவாகவே பவருக்கு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, விளையாட்டுக்கள் என்பவற்றில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்கூட வேலைப்பழு, சோர்வு, பஞ்சி என்பன வர்களின் மனதை கெடுத்துவிடும் என்பதுதான் உண்மை.
அதேநேரம் பிரபல வியாபார நிறுவன தலைவர்கள் நாள் தவறாத உடற்பயிற்சிகளுடன் யோகாவையும் அப்பியாசம் செய்துவருவதை நாம் சிறந்ததொரு முன்னுதாரணமாகக்கொள்ளலாம்.

உடற்பயிற்சி மற்றும் உடற்கட்டமைப்பு பேணல், நோய்களை தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்ற நடவடிக்கைகளை எவ்வாறு எடுத்தல் என்பது குறித்து அண்மையில்கூட யாழ்பாணத்தின் முதற்தர விளையாட்டு பயிற்றுனர் வி.கே.சண்முகலிங்கம் அவர்களிடம் வினவியபோது. 
'உண்மையிலேயே உடற்கட்டமைப்பை நடுத்தர வயது கடந்தும் அப்படியே கச்சிதமாக வைப்பதெனில் 'பார் பயிற்சிகளையும், யோகாவையும் முறைப்படி செய்யலாம், அதேவேளை காலைநேர குறிப்பிட்ட அளவு நடைப்பயிற்சி, சுவாசத்திற்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சியை தரவல்லது என்றார்.
அதேவேளை நீச்சல் பயிற்சிகள் உடலின் பல பாகங்களுக்கும் சக்தியோட்டத்தையும், சகல பாகங்களுக்கும் உரிய பயிற்சிகளையும் வழங்கும்.
அதேவேளை இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் தொப்பையும் கரைக்கவல்லது, சைக்களிங்கும் அதற்கு உதவும் எனத்தெரிவித்திருந்தார்.
உடற்பயிற்சி, விளையாட்டுத்துறை என்பவற்றை அவர் ஒரு ஹபிட்டாக கைக்கொண்டு 60 களை தொட்டு நிற்கும் வயதிலேயும் இரும்பாக இருக்கிறார் என்பது அவரை அறிந்த அனைவருக்கும் நன்கு தெரியும். உடற்பயிற்சி என்ற அடிப்படையில் நேற்றைய இளைஞர்கள், இன்றைய இளைஞர்கள் ஏன் நாளைய இளைஞர்களுக்கும் அவர் ஒரு சிறந்த முன்னுதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவர் இருந்தால்ததானே சித்திரம் வரையலாம்! எமது வாழ்வு என்பது ஒரு சிறந்த சித்திரமாக இருக்க அதற்கு மூலதனமான உடல் முழுத்தகுதியுடையதாக இருக்கவேண்டும் அல்லவா?
அதேவேளை பெரும்பாலும் இனறைய இளைஞர்களை தாக்கும் நோய்களை வராமல்; பாதுகாப்பதற்கு ஏதுவான வழிகள் என்பவற்றில் நூற்றுக்கு நூறுவீத மருத்துவ நிபுணர்களும் குறைந்தது 30 நமிட (நாளொன்றுக்கு) உடற்பயிற்சியையே குறிப்பிட்டுள்ளதையும் காணலாம்.

எனவே இன்றைய புதுவருட உங்கள் சிமார்ட் கோல் வரைபுகளில் கண்டிப்பாக ஏதோ ஒரு உடற்பயிற்சி அல்லது விளையாட்டுக்களை தெரிவு செய்து எமது உடலினை உறுதி செய்வோம்.

1 comment:

Unknown said...

Nice Post.
i have to start the exercises bcoz of my stomach :)
"V.K.Shanmugalingam" Yes He is an Iron Man.

LinkWithin

Related Posts with Thumbnails