Thursday, September 24, 2009

காலச்சக்கரம். 02


தனது மோட்டர் சைக்கிளை ஏமாற்றும் விதத்திலே வெளியாலே தொங்கிய ரியூப்பின் ஊடாக பெற்றோல் 2 துளியை விட்டு ஊதிவிட்டு, கிக்கரை உதைந்தான் பிரசாந்தன்..என்ன அதிசயம் உடனடியாக ஸ்டார்ட் ஆகியது இன்று அது.
மெயின் ரோட்டில் இருந்த காண்டீபன் வீட்டில் மோட்டச்சைக்கிளை நிறுத்தாமலே நின்றான் அவன். மச்சான் உள்ள வாவன் தேத்தண்ணி குடிச்சிட்டு வெளிக்கிடுவோம் என்றான் காண்டீபன்…இல்லை மச்சான் நான் குடித்திட்டேன் நீ குடித்திட்டு கெதியா வா என்றான் பிரசாந்தன். ஒரு நிமிடத்துக்குள்ள காண்டீபன் வர புறப்பட்டார்கள் இருவரும்.

மச்சான் அளவெட்டி, தெல்லிப்பளை, நீர்வேலி எண்டு சனம் எல்லாம் எழும்பி கள்ளியங்காடு, நல்லூரடிப்பக்கம் போகுதளாமடா….ஒரே ஷெல் அடியும்…பொம்பர் அடியுமாமடா…என்று அன்றைய தகவல்களை சொல்ல தொடங்கினான் காண்டீபன்.
ஓமடா காண்டீ….சனங்கள் பாவம்தான் மச்சான் நாங்களும் நினைவு தெரிந்த நாளில இருந்து ஓடிக்கொண்டுதானே இருக்கிறம். இப்ப களியாணம் கட்டி எங்களுக்கும் பிள்ளைகள் பிறந்து…அதுகளும்….பேச்சை நிறுத்திக்கொண்டு மேல்மூச்சுவிட்டான் பிரசாந்தன்.
ஓமடா மச்சான்…எங்கட சந்ததிக்கே இது என்ன சாபக்கேடோ தெரியவில்லை…சரி இருந்து பார்ப்பமன்.

பேசிக்கொண்டே அவர்கள் வந்ததில்…தூரம் தெரியவில்லை. கோவில்வீதியில் காண்டீபன் இறங்கிக்கொள்ள நேரே கச்சேரிக்கு வந்து. வாகனத்தை நிறுத்திவிட்டு தனது பணிமனை அறைக்கு வந்து வாசலில் ஓ.ஏ. நிற்க இந்தாளிடம் பேச்சுக்கொடுத்தா நாளைக்கு காலையிலதான் முடிக்கும் என நினைத்து பின்பக்க ஓடையால் ஏறி வந்து தனது நாற்காலியில் அமர்ந்து கொண்டான் பிரசாந்தன்.


என்ன? எங்கள் மில்க்ரோவுக்கு அடுத்த கலக்ஸியில் இருந்து நான் தயாரித்த Long planet Communication (தூரகோள் தொடர்பாடல்) ற்கு நீல நிறத்தில் சமிக்கை கிடைத்தது கனவா? அல்லது நினைவா? என முழுக்குழப்பத்துடனும், பதட்டத்துடனுமே கண்விழித்தான் மாதவ்.
ஐயோ….எவ்வளவு பெரிய விசயம்…ஏன் மனம் இவ்வளவு இலகுவாக சிந்திக்கிறது? என தனக்குள்ளே வினாவிக்கொண்டே. சுவர்த்திரையில் அவன் வைத்திருந்த அந்த கருவியை கட்டிலில் இருந்தவாறே இயக்கினான் மாதவ்.
யாழ்ப்பாணம்….வடமாகாணம்….தமிழீழம்…இலங்கை…தெற்காசியா..பூமி…
வானவெளி…பால்வீதி..எனக்கடந்து அருகில் இருக்கும் அக்ரோ…தொகுதியை மையப்படுத்தி மீண்டும் தூரகோள் செயற்பாட்டு தொடர்பாடல் முறையை திறந்து நேற்றைய திரட்டு 16.05.2505ஐப் பார்த்தான்…இல்லை…அக்ரோ வீதியின் தொகுதியில் இல்லை…கொழும்புத்துறையில் இருந்துகூட எந்தவொரு சமிக்கையும் அதில் பதிவாகியிருக்கவில்லை.

என்ன இது குழப்பம்? அப்படி என்றால்…அந்த அக்ரோ தொகுதியில் நீல மெழுகுவிளக்கு சுழல்வதுபோல உள்ள ஒரு கோளத்தில் இருந்து…பிசிறி பிசிறி வந்த அந்த வார்த்தை கனவா?
நெஞ்சம் படபடக்க…யோசித்தபடி அமர்ந்திருந்தான் அவன்.
ஹே…மாதவ்…என்ன காலையிலேயே பலத்த யோசனையில இருக்கின்றாய்??? என்ன எங்கள் வெட்டிங் முடிந்து 720 மணிநேரம்…ஐ மீன்…வன் மந்த் அகிட்டே என்று யோசிக்கின்றாயா? என்று கேட்டவாறே அவன் அருகில் வந்திருந்தாள் அவன் மனைவி ஷமி.

இல்லை ஷமி…இது ஒரு மகப்பேற்று நிபுனரால் புரிந்துகொள்ளமுடியாத பிரச்சினை. விட்டுவிடு..நான் சொன்னால் நீகூட என்னைப் பைத்தியக்காரன் என்றுதான் சொல்வாய் என்றான் மாதவ்.
ஒரு மகப்பேற்று நிபுனராய்…ஒரு அண்டவெளி ஆராட்சியில் முக்கிய நபருடன் பேசமுடியாதுவிட்டாலும்…As a wife ஆக உன் பிரச்சினை பற்றி என்னால் பேசமுடியும்…சொல்லு மாதவ்…என்றாள் ஷமி.

ஷமி…நம்பு நேற்று நான் தூங்கப்போகும் முன்னர் எனது தூரகோள் தொடர்பாடலில் நம்ம மில்க்ரோவுக்கு அடுத்து இருக்கும் அக்ரோ ரோவில் உள்ள ஒரு நீலக் கோளில் இருந்து ஒரு சமிக்கை ஒன்று கிடைத்தது…இது ஒன்றும் கனவில்லை ஷமி...100 வீதம் எனக்கு நம்பிக்கை இருக்கு…பட்…இப்ப அப்படி ஒரு தொடர்பும் கிடைக்கவில்லை என்று அது தெரிவிக்கிறதைத்தான் என்னால நம்ப முடியாமல் இருக்கு….என்றான் மாதவ்.
ஓகே…மாதவ். ஒரு அண்டவெளி முதல்த்தர நிபுனரிடம் 3ஆம் வகுப்பு தரமாக பேசக்கூடாதுதான் என்றாலும்…நான் ஒன்று சொல்லுறேன்…நீ குறிப்பிட்ட அந்தக்கோள் நீலம்…நம்ம பூமிகூட நீலம்தான் என்பதை நீ மறந்துவிட்டாயா மாதவ்? ஸோ…நான் என்ன சொல்ல வாறேன் என்றால்…இந்த நிறத்தில் ஏதும் தொடர்புகள் இருக்கலாம் இல்லையா?

உண்மைதான்…ஷமி…இதையும் நான் கருத்தில்க்கொண்டு அங்கு 60 வீதத்திற்குமேல் நீர்ப்பகுதி இருக்கவேண்டும் ஸோ அங்கே..ஒட்சிசன் உண்டு என்பதை எல்லாம் சிந்தித்துத்தான் இவ்வளவு நம்பிக்கையாகச் சொல்கின்றேன் என்றான் மாதவ்.


ஏன்…மாதவ் இது தொடர்பாக நீ…சௌரத்துடன் பேசலாமே…அவனும் உன்னுடன் இறுதிவரை ஆராட்சியில் இருந்தவன்தானே..என்றாள் ஷமி.
ஜெஸ்…பட் அவன் இப்போ அமெரிக்க நாசாவுடன் தொடர்புடைய ஒரு ஆராட்சியகத்தில் பணிபுரிகின்றமைதான் என்னைத்தடுகின்றது. எனது இந்தக்கண்டுபிடிப்பை அமெரிக்காவோ, இல்லை சீனாவோ…கைப்பற்றுவதை நான் விரும்பவில்லை என்றான் மாதவ்.
ஓகே…மாதவ்…நான் இன்று ஹைதராபாத் போகின்றேன். ஈவினிங் வந்தவிடுவேன் பேசுவோம் என்றுவிட்டு சென்றாள் ஷமி.
ஷமி….இந்த விடயம் தொடர்பாக…..இழுத்தான் மாதவ்…பிலீவ் மீ..மாதவ்…மூச்சுக்கூட விடயமாட்டேன்..வெளியில் சென்றாள் ஷமி.

என்ன செய்வது…சௌரத்தைத்தவிர நம்பிக்கையானவர்கள் எவருமே கிடையாது..நம்பிக்கையான பிறருக்கோ..இதுபற்றித்தெரியாது…யோசித்துக்குழம்பிய மாதவ். இறுதி முடிவெடுத்தவனாக…சுவர்த்திரையில் சௌரத்தின் அன்றைய நிகழ்ச்சிக்குறிப்பைப்பார்த்தான்…ஜெஸ் தற்போது அவன் இரவு உணவு அருந்தும் நேரம்தான்…தன் கைக்கடிகாரத்தில் உள்ள அதிநுட்ப தொடர்பாடல் கருவிமூலம் சௌரத்தை அழைத்தான். மறு முனையில்…ஜெஸ் மாதவ்…பேசலாமா? நான் திரையில் வரவா? என்றான் சௌரத்.
நானே அதுக்காகத்தான் காத்திருக்கின்றேன் சீக்கிரம் வா என்றான் மாதவ்.
மறுவினாடி மாதவ்வின் சுவர்த்திரையில் சிரித்துக்கொண்டே இருந்தான் சௌரவ்.
அத்தனை விடயத்தையும் சௌரத்திடம் விளக்கினான் மாதவ். நீ..என்னை நம்புகின்றாயா சௌரத்? நம்பகின்றேன்…ஏன் என்றால் நீ சொன்ன வகையில் சாத்தியங்கள் பல உள்ளன.
எது எப்படியோ…உன் தொடர்பாடல் வலையமைப்புப்பற்றி அமெரிக்காவிலும் எந்த விதத்திலோ தெரிந்துவிட்டது. முதலில் அவர்கள் இந்த வலையமைப்பு தமிழ்நாட்டில்த்தான் உள்ளதாக கணித்தார்கள் அனால் இப்போது ஈழத்தில் என்பது தெரிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விடயம் உண்மை என்றால் இதை நீ மிக மிக அவதானமாகவே கையாளவேண்டும்.
நம்பிக்கையை தளரவிடாதே… பயப்படாதே நாளை நான் அங்கிருப்பேன்…நேரில் பேசுவோம்…இந்த தொடர்பாடலைக்கூட அவர்கள் அவதானிக்கக்கூடும் என்றுவிட்டு மறைந்தான் சௌரவ்.


குளித்துவிட்டு கரையேறி…உடைகளை பிழிந்து உடுத்திக்கொண்டே அருகில் இருந்த வைரவர் சூலத்தில் இருந்த திருநீற்றைப்பூசிக்கொண்டு கும்பிட்டுவிட்டு பவணனும், வெள்ளையும் தமது வீடுகளை நோக்கி நடக்கத்தொடங்கினர்.
அம்மான்…இன்று திருநெல்வேலியில் இரவு அங்காடி. எங்கள் குலசேகரன் தலைமையில் நடக்கிறதாம், உன்னிடமும் அரைப்புசல் நெல் இருக்குத்தானே..அப்படியே மாலை தங்காளையும் கூட்டிவா..என்னிடமும் கொஞ்சம் ஒடியல் உண்டு. பண்டம் மாற்றிவிட்டு வரலாம். என் அக்காளுக்கு துணிகள் வாங்கவேண்டியும் உள்ளது என்றான் வெள்ளை.
அங்காடி என்று வெள்ளையன் சொன்னதும் மனதுக்குள் பவுணனுக்கும் ஒரு சிறு சந்தோசம். ம்ம்ம்ம் ஆகட்டும் வெள்ளை…நான் வண்டி கட்டுகின்றேன், போகும்போது உன் இல்லம் வந்து அழைக்கின்றேன் என்ற வண்ணம் திரும்பி தன் வீட்டுப்பாதையில் சென்று வீட்டை அடைந்தான்;.
குலைதள்ளி பழுத்திருந்த வாழைமரத்தை சாய்த்து குலையை பிரித்துக்கொண்டிருந்தாள் தையல்முத்து. காலையிலேயே மஞ்சள்பூசிக் குளித்திருந்தாள் என்பது அவள் முகத்திலும் உடம்பிலும் தெரிந்தது.
தொடரும்....

2 comments:

Unknown said...

sabaash...Vazhukal...

சசிகுமார் said...

வரலாறு, கடந்தகால கண்ணோட்டம், வானவெளி ஆய்வு, விஞ்ஞானம், மனித உணர்வுகள், காலமாற்றம், காலமாற்'றத்திலும் சில ஒத்த இயல்புகள் என கோர்வையாக பின்னுறிங்க தலைவா...வாழ்த்துக்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails