Wednesday, July 28, 2010

யாழ்ப்பாணத்தில் மீண்டும் பரவிவரும் மிருக பலி வேள்வி வழிபாடுகள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பல ஊர்களிலும் இன்று வேள்வி என்று அழைக்கப்படும் ஆடு, கோழிபோன்ற உயிரினங்களை பலியிட்டு வழிபாடு செய்யும் முறை ஒன்று என்றும் இல்லாத அளவுக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது. ஓவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஊர்க்கோவில்கள் என்ற கணக்கில் இவ்வாறான வேள்வி வழிபாடுகள் நடந்துகொண்டு இருக்கின்றன.
இன்று இந்தக்கோவிலில் வேள்வியாம் உங்களுக்கு எத்தனை பங்கு வேண்டும்? என்ற கேள்வியுடன் ஒரு பெரிய கூட்டமே, இறச்சித்தரகர்களாக உலாவிக்கொண்டு திரிகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் புதியதா? என்றால் அதன் விடை இல்லை. ஆனால் தற்போது இந்த நடவடிக்கைகள், பூஜைகள், வேள்விகள் அதிகரித்தவண்ணம் உள்ளன.
இவ்வாறான வழிபாடுகள் யாழ்ப்பாணத்தில் உள்ள கிராமங்களில், உள்ள காட்டுவைரவர் கோவில்கள், வீரபாகு கோவில்கள், முனீஸ்வரர் கோவில்கள், சுடலை வைரவர் கோவில்கள், பிடாரி அம்மன் கோவில்கள், காளி கோவில்கள் போன்றவற்றில் தொன்று தொட்டு இடம்பெற்றுவருகின்றது.
இன்று பெரிய கோவில்களாக ஆகம முறைப்படி வழியாடு நடைபெறும் சில அம்பாள் கோவில்களிலும் இத்தகய நடைமுறைகள் முன்னர் இருந்ததாக வரலாற்றுத்தகவல்கள் உள்ளன.

இருந்தபோதிலும் நல்லை ஆறுமுக நாவலர் அவர்களின் காலத்தில், சைவ சமய விழிப்புணர்வை ஏற்படுத்தி இவ்வாறான பலிபூஜைகள் நிறுத்தப்படவேண்டும் என்று அணித்தரமாக அவர் செயற்பட்டுவந்தமையின் காரணமாக பல கோவில்களில் இத்தகய நடவடிக்கைகள் வழக்கொழிந்துபோயிருந்தன.
இருந்த போதிலும் தற்போது அதிகரித்துள்ள இந்த பூஜை நடவடிக்கைகள் போலல்லாது இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒரு சில இடங்களில் இந்த பலிபூஜைகள் நடந்துகொண்டுதான் இருந்திருக்கின்றன.

எனினும் 1983 ஆம் ஆண்டுகளின் பின்னர் உருவான போராட்டகாலங்களில் மிருகங்களுக்குப்பதிலாக மனிதர்கள் பலியெடுக்கப்பட்டதாலோ, அல்லது மனித பலிகள் சர்வ சாதாரணமாக நிகழத்தொடங்கியதாலோ என்னமோ இத்தகைய நடவடிக்கைகள் பாரிய அளவில் குறைந்துகொண்டு சென்றன. குறிப்பாக 1992 தொடக்கம் 1995 வரை அப்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகையின்கீழ் யாழ்ப்பாணம் இருந்தபோது இவ்வாறான மிருகபலி பூஜை வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டதும் குறிப்படத்தக்க ஒரு விடயமே.
எது எப்படியோ, கடந்த ஆண்டு மே மாதத்துடன் இலங்கையில் யுத்த நடவடிக்கைகள் முற்றுப்பெற்றதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து, இவ்வாறான பூஜை வழியாடுகள் மட்டும் இன்றி யாழ்ப்பாணத்தில் பல பல விடயங்களிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

பஞ்சமா பாதகங்கள் அற்ற சமுகம், கொல்லாமை, உயிரினங்களின்மேல் அன்பு, அன்பே இறைவன், அன்பே சிவம் என்றும் அன்பு வழியையே இறைவனை அடையும் பக்தி வழியாக கொண்டு, சகல ஜீவராசிகளும் சமனானதே, ஜீவகாருண்யம் சமய கடமை, உண்ணும்போது ஒருபிடி வாயில்லா ஜீவனுக்கு வை, போடும் கோலத்தில்க்கூட அந்த அழகில் உள்ள மா எறும்புக்கு பசிபோக்கட்டும், இறைவன் அனைத்து உயிர்க்கும் பொதுவானவன் அதனாலேயே அவன் மிருகங்களை தனது வாகனங்களாக வைத்திருக்கின்றான் என்றெல்லாம் உன்னதமான அன்பைப்போதிக்கும் மதத்தின் பேரால், கடவுள்களின் பெயரால் இந்த இரத்தப்பூஜைகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் பெரும்வேடிக்கை என்வென்றால், இந்த நடவடிக்கைகளை இந்து காலாசார அமைச்சும், இந்து குருமார் ஒன்றமும், இந்து மகா சபையும், இந்து ஆர்வலர்களும், குருமகா சன்னிதானங்களும் கண்டும் காணாததுபோல இருப்பதே.
அதைவிடப்பெரிய கவலை என்னவென்றால், யாழ்ப்பாணத்தில் எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து எழுதும் ஊடகங்கள் சிலவும் இந்த நடவடிக்கைகளை மௌமாகப்பார்த்துக்கொண்டிருப்பதுதான்.
இலட்சக்கணக்கில சனங்கள் செததுப்போச்சாம் அதைப்பற்றி ஒருவரும் கதைக்கேல்ல! ஆடு, கோழியளுக்கு கதைக்கிறதோ என்ற எண்ணமோ தெரியாது.

இதை எழுதுதாறே இவர் என்ன செய்தார் என்று உங்கள் மனது கேட்கும்..
எனக்கு நடந்த அனுபவம் ஒன்றை அப்படியே தருகின்றேன்.
இந்தவகை பூஜைகளுக்கு மிக விசேடமான இடம் கௌனாவத்தை என்ற இடத்தில் உள்ள கோவில். கீரிமலைக்கு கிட்ட இருக்கின்றது. இங்கு இத்தகய நடவடிக்கைகள் இடம்பெறுவற்கு சற்று முன்னர் இந்த இடத்திற்கு நானும், இன்னும் இந்த வதைகளை நிறுத்தவேண்டும் என்ற பெரியவர்கள் சிலரும், நண்பர்களும் சென்று சேர்ந்திருந்தோம். அங்கே அந்தநேரத்திலேயே காலை 7.30 ஆடுகள் கொண்டுவரப்படத்தொங்கிவிட்டன. அங்கு கோவலில் முக்கிமானவர் என்று ஒரு ஐயாவை தேடிப்பிடித்து எங்களுடன் வந்த பெரியவர்கள், மிருகவதை குறித்தும், சமயம் குறித்து வாதாடினார்கள், நானும்தான்.

என்ன நினைத்தாரோ தெரியாது… அந்தப்பெரிவர்களை எல்லாம் பேசித்துரத்தி விட்ட ஐயா, தம்பி நீர் மட்டும் கொஞ்சம் நில்லும் என்று விட்டு, பக்கத்தில் நின்ற பெரிய மரத்தடிப்பக்கம் என்னை அழைத்து சென்றார்.
“தம்பி உங்களுக்கு சொன்னால் விளங்காது. இது கடவுள் சம்பந்தப்பட்ட விடயம். கடந்த 30 வருடமாக முத்தினதுகள், பிஞ்சுகள் என்று எல்லாத்தையும் நாங்கள் பறி கொடுத்தது காணாதே ஐயா!” சில சடங்குகள் சில விசியங்களுக்காகத்தான் வச்சிருக்கினம் பெரியவ, அதை விளங்காம இதுகளை தடை பண்ணித்தான் எங்களுக்கு பெரிய அழிவுகள், இனியும் அப்படி நடக்கக்கூடாது என்றுதான் இந்த பலிகள் பூசைகள் என்று பெரிய உபதேசமே செய்தார்.
அடடா…ஒரு இலட்சம் பெரியார் இல்லையப்பா… ஆளுக்கு ஒரு பெரியார் வீதம் வந்தாலும் இது சரிவராது என்று விட்டு, மேலதிகமாக நான் பேசினா ஆட்டுக்கு நடப்பது எனக்கும் நடக்கும் என்ற பயத்தில் வந்துவிட்டேன்.

சில சில தவறான நம்பிக்கைகள், சில தொழில்கள், சிலரின் கொண்டாட்டங்களுக்கான கேழிக்கைகளுக்காக ஒரு மதத்தின் கோட்பாட்டையே மிதித்தல், அறியாமை, ஜீவகாருண்யம் இன்மை, சிறந்த சமய வழிகாட்டிகள் இன்மை, மதத்தின் பெருமைகள் அற்றிருத்தல், இன்ன பிற காரணிகளே இவ்வாறான நடவடிக்கைகளுக்கு காரணமாக இருக்கின்றன.
உண்மையில் மிருக வதை என்பது முற்றுமுழுதாக தடைசெய்யப்படவேண்டும்.
ஒரு சமய கோட்பாட்டிற்கு சேறுபூசும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக எடுக்கவேண்டியது கட்டாயமாகும்.

19 comments:

Subankan said...

//யாழ்ப்பாணத்தில் எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து எழுதும் ஊடகங்கள் சிலவும் இந்த நடவடிக்கைகளை மௌமாகப்பார்த்துக்கொண்டிருப்பதுதான்//

இது மட்டுமா? இன்னும் எத்தனையோ முக்கிய விடயங்கள் பத்திரிகைகளால் கவனிக்கப்படுவதில்லை என்ற ஆதங்கம் எனக்கும் இருக்கிறது.

balavasakan said...

பஞ்சமா பாதகங்கள் என்று துவங்கும் பத்தி நெத்தியடி ஜனா அண்ணா ...கேட்டால் கண்ணப்பநாயனார் சிவனுக்கு என்னபடைத்தார் என்று கதையளப்பார்கள் ...???

Pradeep said...

இந்த விடயத்தை தாங்கள் இப்போ இலகுவாக ஐக்கிய நாடுகள் சபைவரை கொண்டுபோகலாமே? (ஜோக்)
சிந்திக்கவேண்டிய விசியம். சமுக மத அக்கறையான பதிவு.

maruthamooran said...

ஜனா!

மிருகவதை தவிர்க்கப்பட வேண்டும். அந்தக்கருத்துடன் நான் முற்றுமுழுதாக ஒத்துப்போகிறேன். ஆனால், கடவுள் மற்றும் மதத்தின் பெயரினால் இதைவிட அதிகமான விடயங்கள் எம்மிடையே நடைபெற்று வருகின்றன.

இன்றும் சாதி அடிப்படையில் கோவில்களுக்குள் மக்கள் அணுகப்படுவதை யாழ்ப்பாணத்தில் காணலாம். இது சிறு உதாரணமொன்று.

தற்போது அதிகரித்துச் செல்லும் சில முறையற்ற அல்லது சமூக அபிவிருத்திக்கு பொருந்தாக விடயங்களைப் பற்றி உண்மையாக (வெளிப்படையாக) கருத்துரைக்க எத்தனைபேர் தயாராக இருக்கிறோம் என்றால் அதற்கு கிடைக்கும் பதில் மன வருத்ததினையே தரும்.

இன்று அநேகர் சில காரணங்களுக்காகவும், சில அரசியல்களுக்காகவும் ஏதோவொரு வகையில் விலை போய்க்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

நீங்கள் எழுதியிருக்கும் இந்த விடயத்திலிருந்தோ ஆயிரம் விடயங்களை நாம் கையாள முடியும். ஆனாலும், காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் ஒரு தருணம் நாம் சமூக அபிவிருத்தியிலும் மற்றைய நிலையிலும் உச்சத்திற்கு வருவோம் என்பதில் நம்பிக்கையுண்டு.

anuthinan said...

திருந்தவே மாட்டோம் என்கிறோம்!!! திருந்த சொல்லுரின்களே!!!


அண்ணே நாம் மட்டுமல்ல பலரும் சிந்திக்க வேண்டிய விடயம்!!!

தர்ஷன் said...

மிருக வதை மாத்திரமின்றி மதத்தின் பெயரால் நிகழும் அனைத்துக் கொடுமைகளும் களையப்பட வேண்டுமென்பதே என் அவா

Kiruthigan said...

கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்க ரண்டு கொடும டிங்கு டிங்குனு ஆடிச்சாம்..
வேள்வில ஒரே நாள்ள 450 ஆடு வெட்டுறத பாத்திட்டு காய்ச்சல்ல கிடந்தத மறப்போமோ...!!!
அதன் வீடியோ விரைவில் வெளியிடுகிறேன்..
காலத்தின் தேவையான பதிவு..

சயந்தன் said...

யாழ்ப்பாணத்திற்கும் ஒரு மேனகா காந்தி தேவைதான் போல கிடக்கு!! (அரசியலுக்கு அல்ல மருகவதைகளை பற்றி பேச)

thokuppu said...

இந்த கட்டுரையினை ஒரு சமூக நோக்கத்திற்காக பயன்படுத்திக்கொள்ள உங்கள் அனுமதிதேவை
please Contact this E-Mail address
- thokuppu@gmail.com

Jana said...

@ Subankan
நன்றி சுபாங்கன். ம்ம்ம்...உங்கள் ஆதங்கங்களும் உண்மைதான்.

Jana said...

@Balavasakan
நன்றி பாலவாசகன். அடடா நீங்களும் எங்கேயோ...கேட்கப்போய்..கண்ணப்ப நாயனார் பதிலாக வந்துள்ளார் போல!

Jana said...

@Pradeep
நன்றி ஐயா..நன்றி.

Jana said...

@மருதமூரான்.
//காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் ஒரு தருணம் நாம் சமூக அபிவிருத்தியிலும் மற்றைய நிலையிலும் உச்சத்திற்கு வருவோம் என்பதில் நம்பிக்கையுண்டு.//
அதே...

Jana said...

@Anuthinan S
உண்மைதான் அனுதினன். எல்லோருமே திருந்தி. நல்லாருப்போம்..நல்லாருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம்.

Jana said...

@தர்ஷன்
உண்மைதான் தர்ஷன். மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் கடவுளுக்கு எதிரான நடவடிக்கைகளே எடுக்கப்படுகின்றனவே..

Jana said...

@Cool Boy
450 ஆ...என்ர ராவணா..

Jana said...

@சயந்தன்
நியம்தான் சயந்தன். ப்ளு குரஸை இங்கயும் கொண்டுவரவேண்டும்.

Jana said...

@thokuppu
தாங்கள் தந்த மின் அஞ்சலுக்கு பதில் அனுப்பியுள்ளேன்.

முத்துக்கவுண்டர் PONDHEEPANKAR said...

பலி பூசைகள் சிவ ஆகமங்களிலேயே சிவனால் கூறப்பட்டன. திருமூலரும் கூறியுள்ளார். வேதம், புராணம், இதிகாசங்கள், பிரம்ம சூத்திரம் எல்லாவற்றிலும் பலி உண்டு.

ஹோட்டலில், கசாயில் வாங்கி தின்பது, வீட்டில் சமைப்பது எல்லாம் செய்யும் நீங்கள், சாக்த ஆகமங்களுக்கு விரோதம் செய்வது வேடிக்கை.

பைபிளை தமிழில் பெயர்த்த ஞானசூனியம் ஆறுமுக நாவலர்.

ஈழத்தமிழர்களை வைதாகம சைவத்தை விட்டு புதிதான ஒரு மதத்தில் இவர் தள்ளியது மிஷனரி உந்துதலில்தான்

LinkWithin

Related Posts with Thumbnails