Tuesday, September 14, 2010

காற்றினிலே வந்த கீதம்…(மீண்டும் ஒரு தடவை)


அரிவரி தொடங்கி, கைதேய மண்மீது அகரம் எழுதத்தொடங்கிய காலங்களின் முன்னேயே இசை என்னும் நாத வெள்ளம் மனதிற்குள் புகுந்துவிடுகின்றது.
கருவினில் இருக்கும்போதே இசையை இரசிக்கும் பண்பு வந்துவிடுவதாக விஞ்ஞானிகள்கூட ஒப்புக்கொண்டுள்ளனர்.
நேர்தியான கருத்துக்கள் இசையுடன் கரைந்துவரும்போது, என் இயல்புகள் அத்தனையும் தொலைத்துவிட்டு, காதின் கீழ் உள்ள பகுதியில் இருந்து மூளைக்கு இரத்தஓட்டம் அதிகம்பாய சிலிர்துப்போய் கண்ணீர் சொரிந்து அந்த இசையுடன் இலகித்த சம்பவங்கள் பல…

என் கண்கண்ட தெய்வங்கள், வித்தாக உறங்குமிடத்தில் கார்த்திகைப்பூவின் மாதத்தில் ஒளிவெள்ளமெழுப்பி இசைபாடும் அந்த “எங்கே எங்கே ஒருதரம் உங்கள் திருமுகம் காட்டுங்கள்” என்ற அந்த இசையினால் எத்தனை தரம் தேம்பித்தேம்பி அழுதிருப்பேன்.
காதல் உணர்வுகளில் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன என்கின்றனரே??
அதைவிட ஆயிரம்மடங்கு பட்டாம்பூச்சிகளை இசையினால் பரப்பிவிடமுடியும்.
இதை இசைமூலம் நிரூபித்தவர்கள் பலர், பீத்தோவானில் இருந்து, இளையராஜாவரை என்னை சிலிர்க்கவைத்த இசை ஸ்ரிங்காரர்கள் பலர்.

நிகழ்கால எதிர்நீச்சல்களிலும், எதிர்கால சவால்களுக்கும் மத்தியில் மனதிற்கு அப்பப்போ ஆறுதல் தருவது இறந்தகால வசந்தங்களே. அவை எப்போதும் இனி திரும்பி வந்துவிடப்போவதில்லை.
அகரம் கிறுக்கத்தொடங்கிய காலங்கள் அது! அம்மம்மா எங்கே என்று கேட்க, அம்மம்மா சாமியிட்ட போட்டாங்க, என்று பதில் வந்தவுடன். கோவிலுக்கு செல்லும்போதெல்லாம் அம்மம்மாவை தேடிய காலங்கள் அது.


அந்தக்காலங்களில்த்தான், என் வீட்டில் அருகில் இருக்கும் அதே நல்லூர் கந்தசுசாமி கோவிலில்த்தான் அந்த இசை என்னும் நாத வெள்ளம், நாதஸ்வரமாகி என் காதுகளில் தேன்பாச்சி சுவாமியை விட்டுவிட்டு, என்னை அந்த ஸ்வர வித்தைகளால் கவர்ந்தவர் லயஞான பூபதி பத்மநாதன் அவர்கள்.
அந்த நாளில் இருந்து உயர்தரம் கற்கும்வரை நான் அந்த நாதஸ்வர இசையினை இரசித்தேன், ஓலங்களாக காற்றில்வரும் பிசிறுகள் எல்லாவற்றாலும், தான் இழுத்து ஊதும் காற்றுக்களால் கீதங்களாக மாற்றிய வித்தகர் அவர்.

மாநிறம், கூர்மையான கண்கள், கலைக்கான முகம், அகன்ற நெற்றி, நிமிர்ந்த தேகம், எட்டுமூலை வேட்டி, அதன்மேல் இடையில் பட்டுத்துணி நாதஸ்வர துளைகளைத்தடவும் விரல்களில் மோதிரங்கள். என் கண்களில் இன்றும் நிலைத்திருக்கும் அந்த இசை வித்தகரின்தோற்றம் இதுதான். அப்பப்பா இந்தமனிதரால் கோவிலுக்கு வந்த அத்தனைபேரையும் எப்படி அந்த கான இசையினால் கட்டிப்போட முடிகின்றது என என்முகம் ஆச்சரியக்குறியாகிய சந்தர்ப்பங்கள் பல.


இவன் கோவிலுக்கு வந்து சாமியையா கும்பிடுகின்றான், பீப்பி, மேளத்தைத்தான் பார்த்துக்கொண்டு அதன் பின்னாலேயே சுற்றுகின்றான் என என் அக்கா தாத்தாவிடம் முறையிட்டதும், அதற்கு என் தாத்தா அளித்த பதிலும் இன்றும் எனக்கு நினைவில் உள்ளது.
என் தாத்தா ஒரு கலாநிதி. பகுத்தறிவாளனும்கூட, கோவிலுக்கு செல்வதில்லை.
அவர் கேட்ட கேள்வி ஒன்றுதான் யார் அங்கே நாதஸ்வரம் வாசிப்பது என்பதுதான்.
என் அக்கா:- பத்மநாதன் என்றதும், அப்படி என்றால் இவன் செய்வது சரிதான். என்றுவிட்டு பத்தமநாதன் பற்றி பல தகவல்களையும் எனக்கு அன்று விரிவாக கூறினார். தன் பேரன் போற்றுதலுக்குரிய ஒரு நாதஸ்வர வித்தகரின் இரசிகனாகிவிட்டானே என்ற பெருமையினை அவர் முகத்தில் அன்று நான் பார்த்தேன்.

யாழ்ப்பாணத்தில் அளவையூர் என்று சிறப்பிக்கப்படும், அளவெட்டி பிரதேசத்தை சொந்த இடமாகக்கொண்டவர் பத்மநாதன் அவர்கள். 1931ஆம் அண்டு பிறந்த இவர், புகழ்பெற்ற கலைஞர்களான வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை, முல்லைவாசன் முத்துவேற்பிள்ளை, அப்புலிங்கம், ஆறுமுகம்பிள்ளை ஆகியோரால் செதுக்கப்பட்டவராவார்.
பின்னர் தமிழகத்தில் புகழ்பெற்றிருந்த சீர்காழி பீ.எம்.திருநாவுக்கரசிடமும், திருச்சி கிரிஸ்ணமுர்திப்பிள்ளையிடமும் நாதஸ்வரக்கலையின் நுட்ப நுணுக்கங்களை கற்றுத்தேர்ச்சிபெற்றார்.


பின்னர் இவரது காலத்தின் பொற்காலம் என்றும், இன்றும் ஈழத்தமிழர்களால் குறிப்பிட்டு சொல்லத்தக்கதான காலமும் இவரும் உலகப்புகழ்பெற்ற தவில்மேதை தெட்சணாமூர்த்தியும் இணைந்து இசைபரப்பிய காலகட்டங்களாகும்.
இது இவரது 25 ஆவது வயதிலிருந்து ஆரம்பித்ததாக அறியமுடிகின்றது.
நான் அறிந்து இவர் வாசிக்கும்போது தவில்மேதை புண்ணியமூர்தி அவர்களும், அதன்பின்னர், அவரது மாணவனும், தவில்மாமேதை தெட்சணாமூர்த்தியின் புத்திரன் உதயசங்கர் அவர்களும் தவில் வாசித்தனர்.

பலபொழுதுகளில் நான் இவரை இரசித்தது நல்லூர் தேவஸ்தானத்திலேயே மற்றும்படி யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இசை விழாக்களிலும், பிற கோவில் மஹோட்சவங்களிலும் இவரது கச்சேரிகளை பாhத்திருக்கின்றேன். இவர் வாசிக்கும் மல்லாரியை கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒருதடவை இசை விழா ஒன்றில் இவர் வாசித்த தில்லானாவை நேரில் பார்த்து நான் இருக்கும் இடமே தெரியாமல் இலகித்து அந்த இடத்தில் நான் இல்லை என்ற உணர்வு நிலைக்கே சென்றிருக்கின்றேன்.

என் இரசிப்பு வெறியாகிய சந்தர்ப்பத்தில் என் தாத்தா ஓர் நாள் இவரது இல்லத்திற்கு என்னை அழைத்துசென்று சந்திக்கவைத்தார். அன்றுதான் நான் அவரது வாயினால் வரும் பேச்சினையும் கேட்டேன். அட எவ்வளவு அன்பான மனிதர்! என் தாத்தா அவரின் இரசிகன் நான் என்றதும் என்னை தன் மடியில் இருந்தி கதைபேசினார். என் தாத்தா பற்றி நான் அறியாத பல விடயங்களை என்னிடம் சொன்னார். அந்த பொழுதுகளை இன்று நினைத்தாலும் மனம் பெருமை கொள்கின்றது.

அடுத்து 91 அல்லது 92 ஆம் ஆண்டு கட்டத்திலே அவருக்கு நடந்த மணிவிழாவை என்னால் மறக்கமுடியாது. நல்லை ஆதீன மண்டபத்தில் நடந்த அந்த விழா மிகவும்; சிறப்பாக நடைபெற்றது. பெரிய பெரிய கல்விமான்கள், இசை வித்தகர்கள் எல்லோரும் இவரை புகழ்ந்துபேசினார்கள், தாங்களும் இவரின் இரசிகர் என்றார்கள். அப்பா…! அந்த விழாவே இன்றும் என்மனக்கண்ணில் முழுப்பதிவாக இருக்கின்றது.

அதைதொடர்ந்து நான் மிருதங்கம் கற்ற இசைமன்றத்தினரால் இவருக்கு அளிக்கப்பட்ட கௌரவம் மற்றும் பாராட்டு விழாவில் இவரை புகழ்ந்து கவிதை சொல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதற்கு என் தமிழாசிரியரிடம் உதவி கேட்டேன், உண்மையான கலைஞன் ஒரு 13 வயது சிறுவனின் மனதில் என்ன உள்ளதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வான், எனவே நீயே எழுதவேண்டும் என அவர் சொல்லிவிட்டார். அன்று ஒரு கவிதை எழுதினேன், வாசித்தேன்..பலர் கைகள்கூட தட்டினார்கள். அது கவிதையா இல்லையா என்று எனக்கு இன்றுவரை தெரியாது.


2003ஆம் ஆண்டு இவர் இயற்கையெய்திய செய்தி அறிந்தேன். அந்த ஆண்டு நல்லூர் திருவிழா பற்றிய ஊடகம் ஒன்றுக்கான ஒளித்தொகுப்பு பெட்டகம் ஒன்றுக்கு இந்த ஆண்டு வழமைபோல் நல்லூரில் எல்லாம் இருக்கும், ஆனால் அந்த தெய்வீக நாதம் இருக்காது என்று உண்மையான கவிதை ஒன்று வாசித்தேன்.
தற்போதும் கூட நல்லூர் வாசலில் நான் போய் நிற்கும்போதும் நான் இரசித்த அந்த நாதஸ்வர இராகம் தேவாமிர்தமாக என்காதுகளில் கேட்கும். சுவாமி வீதிவலம் வந்தால் அங்கு நாதஸ்வரம் இசைப்பவரை ஏக்கத்துடன் மனம் பார்க்கும்.
காற்றில் வந்த அந்த கீதம், அந்தச்சூழலில் இன்றும் காற்றில் வந்து கலந்துகொண்டுதான் இக்கின்றது.

நாதஸ்வர கச்சேரி ஒன்றில் இருந்து

7 comments:

Pradeep said...

மீள் பதிவு என்றாலும் திரும்ப படிக்க விடைத்தமை சந்தோசமே. தங்கள் கடைசி வரியின் ஏக்கம் எனக்கும் உண்டு ஜனா.

ஜாவா கணேஷ் said...

மிகத் தேர்ந்த எழுத்து நடை அண்ணா. அத்தனை சம்பவங்களையும் மனக்கண்முன் கொண்டு வருகின்றீர்கள்.

Anonymous said...

மிக மூத்த தலைமுறை கலைஞர்களை இன்றைய தலைமுறை நினைவு வைத்து தன் அனுபவத்தால் பகிர்வது வரவேற்கவேண்டியது தோழரே. அத்தோடு தங்கள் எழுத்து நடை அப்பா...என்ன அபாராம். அது தங்கள் தாத்தாவிடமிருந்து வந்ததாக இருக்கவேண்டும். வாழ்த்துக்கள்.

Unknown said...

excellent writing Man. I am also very big fan for Alavai.Pathmanathan.
Thanks for this Post.

KANA VARO said...

தவில், நாதஸ்வரம் வித்துவான்கள் பலர் இணுவிலில் இருந்து தோற்றம் பெற்றவர்கள். உ-ம் : தவில் மேதை தட்சணாமூர்த்தி. இன்றும் இணுவிலில் புகழ் பூத்த கலைஞர்கள் இருக்கிறார்கள், எங்கள் பாரம்பரியமிக்க இந்த துறை அழிவடைந்து விடாமல் பாதுகாக்கணும். பகிர்வுக்கு நன்றி தல,

ம.தி.சுதா said...

கலைகளும் கலைஞர்களும் என்றும் போற்றுதலுக்குரியவர்கள் என்பதை தங்கள் ஆக்கம் உலகிற்கு வெளிச்சம் காட்டியிருக்கிறத அண்ணா வாழ்த்துக்கள்...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

முதல் முறை பதிவிலேயே பின்னூட்டமிட்டுள்ளேன். இன்றைய புதிய பதிவர்களுக்காகவும் இதை மீள இட்டது நன்றே!
போர் முடிவுக்குப் பின் மீண்டும் திருவிழாக்கள் களைகட்டியதை , யூருயூப்பில் பார்க்கக் கூடியதாக உள்ளது.
எனினும் நம் கலைஞர்கள்- திரு. பத்மநாதன் போல் ஞானம் மிக்கவர்களாக மாற கடும் முயற்சி எடுக்கவேண்டும்.
எடுப்பார்கள் என நம்புவோம்; இக்கலை மீண்டும் ஓங்கி வளரவேண்டும்.
இத்தடவை நல்லூர் தேருக்கு , அன்றைய நாட்களில் திரு. பத்மநாதனுடன் உடன் வாசித்த , திரு.கேதீஸ்வரன் அவர்கள்
வாசித்ததைப் படங்களில் பார்த்தேன்.
பதமநாதனால் பயிற்றப்பட்ட திறமைமிக்க கலைஞர் இவர்.

LinkWithin

Related Posts with Thumbnails