Thursday, June 9, 2011

இலை துளிர்காலத்து உதிர்வுகள்.......07

உலக வரைபடத்தில் இலங்கையை உற்று நோக்கினால், அது அழகான ஒரு தேசம்தான், சகல வளங்களையும், இயற்கை அழகையும் உடைய வாழ்வதற்கு சிறப்பான சீதோஷ்ண, உகந்த காலநிலைகளைக்கொண்ட வலையத்தில் அமைந்த சிறப்பு கொண்ட நாடுதான்.
ஆனால் வெள்ளைத்தோலர்களின் வெளியேற்றத்தின் பின்னர், குறிப்பிட்ட இனம்மட்டும் சிந்தி முடித்த கண்ணீர் முழுவதையும் சேர்த்தால் இந்த இலங்கையே இந்து மா சமுத்திரத்தினுள் மூழ்கிவிடும் அளவுக்கு அந்த கண்ணீரின் கனதியும், உவப்பும் மிக மிக ஆழமானது.

ஓவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சோகங்கள் உள்ளுக்குள் மறைந்திருக்கும் என்பதற்கு அன்று என்வீடும் விதிவிலக்கில்லை என்றானது.
இந்தியா சென்று மேற்கல்வி மற்றும் பயிற்சிகளை பெற்ற ஒரு சிறந்த ஓவியரும், ஆசிரியருமான எனது தாய் மாமனார் 'சிங்கோ மாஸ்ரர்' என்று மட்டு நகர் மாணவர்களாலும், சுற்றத்தாலும் அன்போடு அழைக்கப்பட்ட பகவத்சிங்.
அவர் வரையும் ஓவியங்கள் வண்ணமயமாக இருந்தாலும், அவர் உடுக்கும் உடை என்றுமே வயிட் அன்ட் வயிட்தான். நெடிய உருவம், சிவத்த தேகம், நீளமான தலைமுடி, அடர்த்தியான தாடி, கிட்டத்தட்ட கே.ஜே.ஜேசுதாஸ் போன்றதொரு கொளரவமான உருவம் அவருடையது.
தாய்வீட்டு தொடர்பாக எனக்கிருந்த ஒரே ஒரு தாய்மாமன் அவர் மட்டுமே.
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற அசம்பாவிதமொன்றில் அவர் தன்னுயிரை விடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.
நெஞ்சுக்குள் கல்லொன்றை போட்டதுபோன்ற ஒரு உணர்வு, ஆசிரியையான என் மாமியாரையும், மைத்துனர்களையும் நினைத்துப்பார்க்கின்றேன்.

அதே மட்டக்களப்பு நகரில்த்தான் நான் பிறந்திருந்தேன், அன்றைய தினத்திலே அதே மட்டு நகரில்த்தான் எப்போதுமே எனக்கு முகம்தெரியாத அவரின் தங்கையான என் தாயாரை என் பிறந்த தினத்திலேயே இழந்திருந்தேன்.
நான் பிறந்தபோது தன் அருமை தங்கையை இழந்த பரிதவிப்புடன், அவளது மகவை, மருமகன் என்று முதன்முதல் கைகளில் ஏந்திய அன்று, அந்த மனது எப்படி பரிதவித்திருக்கும்?
கரைபுரண்டோடும் கண்ணீரை நிறுத்திக்கொள்ளமுடியவில்லை.. மனது மாமா..மாமா என்று பரிதவித்துக்கொண்டிருந்தது, வாஞ்சையான நான் ஆசையுடன் உக்காரும் அந்த வெள்ளை டவுசர் அணிந்த மடியையும், என் மாமாவின் உடல் சூட்டின் அரவணைப்பையும் ஏங்கி மனது பரிதவித்துக்கொண்டிருந்தது.
வீடு மட்டுமன்றி மனதும் சுடுகாடாகிவிட்டிருந்தது அன்று.

அன்பாக முத்தம் கொடுக்கும்போது குத்திக்கொள்ளும் அந்த தாடியும், தூரத்தில் அவர் உருவம் தெரிந்தாலே குதூகலத்தில் துள்ளிக்கொள்ளும் என் உருவத்தின் நிழல்களும், இலாவகமாக, ஸ்ரைலாக அவர் பிடிக்கும் சிகரட்டும், மனதுக்குள் வந்துகொண்டே இருந்தன...

இதுபோன்று இந்த யுத்தம் எத்தனை இளம்குருத்துக்களின் மாமன்களை கருவறுத்திருக்கும், எத்தனை ஆசைகளை, எத்தனை கற்பனைகளை கருவிலேயே கருக்கலைப்பு செய்திருக்கும். அப்பா.. இந்த யுத்தம் எத்தனை கொடுமையானது என்பதற்கு எனக்கு நேரடிப்பதிலாக கிடைத்த கொடுமையான விளக்கமாக அது இருந்தது.

சில இரவுகளும் சில பகல்களும் கழிந்துபோன நாள் ஒன்றிலே யாழ் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராளிகளின் வாகனங்களை வழமைக்கு மாறாக அதிகமாக அங்கும் இங்கும் ஓடும் அவசரத்தனைத்தை அவதானிக்கமுடிந்தது.
அவற்றுக்கான விடைகள் மக்களுக்கு கிடைக்க அதிக நேரம் ஆகியிருக்கவில்லை.
இந்திய உலங்கு வானூர்த்திகள் திடீர் என வந்திறங்கியதாகவும், போராளிக்குழுத்தலைவர் உட்பட்ட குழுவினரை ஏற்றிக்கொண்டு விரைவாக அந்த வானூர்திகள் இந்தியா நோக்கி கிளம்பிவிட்டதாகவும் பெருசுகள் மத்தியில் கதைகள் அடிபடத்தொடங்கியிருந்தன.

ஏன் பாருங்கோ கொண்டுபோட்டாங்கள் ஏதும் வில்லங்கமே?
சீச்சீ.. நீர் ஏனும்காணும் சும்மா பயப்படுறீர்? எங்கட சோகங்களுக்கு ஒரு விடிவுகாலம் வரப்போகுது என்று மனதை தேற்றுற வழியைப்பாரும் காணும், ஒன்றுக்கும் யோசியாதையும், எங்கட பிள்ளைகள் பத்திரமாக வந்திடுவாங்கள், இந்தியாதானே கூட்டிக்கொண்டுபோகுது, அவங்கள் எண்டைக்கும் எங்கட பக்கம்தான் காணும்..
என்று பென்ஷன் வாங்கிய பொலிஸ்காரரான மார்க்கண்டருக்கு தெளிவுபடுத்திக்கொண்டிருந்தார், ஸ்ரேஷன் மாஸ்டராக இருந்து பென்ஷன் எடுத்த திருநாவுக்கரசர்.
இந்த சம்பாசனையினை வீட்டுமதிலில் இருந்து கொண்டு, ஒரு புழுகத்துடன் கேட்டுக்கொண்டிருந்தது என் மனது.

வழமைபோல மாலை நேரம் இந்தியச்செய்திகளை கேட்க ஆர்வம் வீட்டாருக்கு அதிகமாகவே கூடியிருந்தது. செய்திகள் கொண்டு செல்லப்பட்டவர்கள் டெல்லி அசோகா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் அவர்களுக்கும், இந்திய உயர்மட்டத்தினருக்கும் நடைபெற்று வருவதாகவும் அந்த செய்திகள் தெரிவித்தன...

இலைகள் உதிரும்....

18 comments:

றமேஸ்-Ramesh said...

//இதுபோன்று இந்த யுத்தம் எத்தனை இளம்குருத்துக்களின் மாமன்களை கருவறுத்திருக்கும், எத்தனை ஆசைகளை, எத்தனை கற்பனைகளை கருவிலேயே கருக்கலைப்பு செய்திருக்கும். அப்பா.. இந்த யுத்தம் எத்தனை கொடுமையானது என்பதற்கு எனக்கு நேரடிப்பதிலாக கிடைத்த கொடுமையான விளக்கமாக அது இருந்தது.///

அழுகின்ற பதிவு.. அழுதே விடுகிறேன். வேறென்ன என்னால் முடியும்..

மைந்தன் சிவா said...

எழுத்து சோகத்தை கண்முன்னே கொண்டுவருகிறது

கார்த்தி said...
This comment has been removed by the author.
கார்த்தி said...

அண்ணா என் கண்களிலும் ஈரலிப்பு கூடியதாக உணர்கின்றேன்!! :'(

FOOD said...

சோகத்தின் உச்சம். சொந்தங்களை இழந்த தருணம். சொல்லித் தேற்ற வார்த்தை இல்லை எம்மிடம்.

தமிழ் உதயம் said...

யுத்தம் என்றொரு வார்த்தையில் படிக்கிறோம். ஆனால் அதனோடு வாழ்ந்தவர் நிலைமை. றமேஸ் சொன்னது போல அழ வைக்கிற பதிவு

Ashwin-WIN said...

ஒவ்வொரு எழுத்துக்களை விட்டும் அகல மனம் மறுக்கிறது. அத்துணை வலி ஒவ்வொரு எழுத்திலும். வலியை உணர்ந்தவர்கள் வாசிப்பதால் இன்னும் அந்த வலி கூடிவிடுகிறது. அந்த நாள் ஞாபகங்கள் கண்முன்....... தொடர்க..

Anonymous said...

வலிகளோடு வார்த்தைகளை நிரப்பியுள்ளீர்கள்.....

Anonymous said...

////அதே மட்டக்களப்பு நகரில்த்தான் நான் பிறந்திருந்தேன், அன்றைய தினத்திலே அதே மட்டு நகரில்த்தான் எப்போதுமே எனக்கு முகம்தெரியாத அவரின் தங்கையான என் தாயாரை என் பிறந்த தினத்திலேயே இழந்திருந்தேன்.
நான் பிறந்தபோது தன் அருமை தங்கையை இழந்த பரிதவிப்புடன், அவளது மகவை, மருமகன் என்று முதன்முதல் கைகளில் ஏந்திய அன்று, அந்த மனது எப்படி பரிதவித்திருக்கும்?//// மனசு கனத்துப்போச்சு :-(

Anonymous said...

///இந்தியாதானே கூட்டிக்கொண்டுபோகுது, அவங்கள் எண்டைக்கும் எங்கட பக்கம்தான் காணும்../// வெள்ளந்தி மனசுக்காரர்கள் :-(

நிரூபன் said...

வழமைக்கு மாறாக இந்த இடுகையில் சோகம் அதிகமாகவே இழையோடிக் காணப்படுகிறது.
இது தானே எங்களின் வாழ்க்கையும் சகோ.

வரலாற்றுத் திருப்பங்களுக்கான சம்பவங்கள் அடுத்த பாகத்தில் வரும் என எதிர்பார்க்கிறேன்.

வடலியூரான் said...

நெஞ்சு கனக்கிறது, பதிவினூடு பயணிக்கும் போது... என்ன செய்வது ,எமது தலைவிதியோ ? என்று எண்ணத் தலைப்பட்டாலும், இதையும் தாண்டிச் செல்லவேண்டியவர்கள் நாங்கள்

Nesan said...

எத்தனை தரம் ஒப்பாரி வைப்பது ஜனா இப்படி எத்தனை சோகம் எங்கள் உறவுகளின் மனக்கிடங்கில் தேங்கிக்கிடக்கிறது எல்லாரும் உங்கள் போல் எங்கள் இழப்பை பதிவு செய்யனும் அப்பத்தான் நாம் இழந்தவை எவ்வளவு பெறுமதியற்றது என்று புரியும்!கனத்த இதையத்துடந்தான் இதை பதிவு செய்கின்றேன்!

shanmugavel said...

முதல் பத்தியிலேயே மனசை பிழிய ஆரம்பித்துவிடுகிரீர்கள் ஜனா!

sinmajan said...

:-(

Anuthinan S said...

//இலை துளிர் காலத்து உதிர்வுகள்//

இப்பொழுது என்னுள் துளிர் விட ஆரம்பித்து இருக்கிறது!!! அடுத்த அடுத்த பதிவுகளுக்காக காத்திருப்பு

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

Riyas said...

ஜனா அண்ணா நீண்ட நாளுக்குப்பிறகு வருகிறேன்... பதிவு மனதோடு ஒட்டி விடுகிறது..

LinkWithin

Related Posts with Thumbnails