பறவைகளின் பறப்பியல், அவற்றின் பறத்தல் ஒழுங்கு, காலநிலை அறிதல், பறத்தல் முறை என்பன எமக்கு பெரும் ஆச்சரியத்தையும், புதிரையும் ஏற்படுத்தும் ஒரு விடயமாகவே இருக்கின்றது. இது பற்றிய ஆராட்சிகளும், ஆராய்வுகளும் இன்று பல ஆச்சரியங்களையும், புதிர்களையும் ஏற்படுத்துவனவாக உள்ளன.
சில இடங்களில் மனிதனைவிட அறிவு குறைந்தன என்று வரையறைக்குள் உள்வாங்கப்படும் அந்த பறவை இனங்கள், சில விடயங்களில் மனிதனை விஞ்சும் குணாதிசியங்களை கொண்டுள்ளமையும் மூக்கின்மேல் விரல்வைக்க செய்வனவாக உள்ளன.
யாழ்ப்பாண மண்ணில் பல்வேறு இடங்களுக்கு பயணப்படும்போது, இடையில் காணப்படும் வெளிகள், கடலேரிகளை அண்டிய இடங்களில் என் வாழ்க்கையில் காணாத பல புதிய பறவையினங்களை ஒவ்வொருநாளும் காணக்கூடியதாக இருப்பதே இந்த பதிவை எழுத காரணமாக இருந்தன.
பல வர்ணங்களிலும், பல உயர அகலங்களிலும், பல புதிய பறவையினங்களை தற்போது காணக்கூடியதாக உள்ளன.
இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடந்த 30 வருடங்களுக்கு மேலான காலங்களாக இடம்பெற்றுவந்த மோசமான யுத்தங்கள் காரணமாக இந்தப்பக்கம், வந்தொதுங்காத பல பறவையினங்கள், அவை ஓய்ந்ததன் காரணமாக தற்போது இந்தப்பிரதேசங்களுக்கு ஒதுங்குகின்றன என்றே எண்ணுகின்றேன்.
அது என்ன வலசை என்று நீங்கள் தலையங்கத்தை வைத்து யோசிப்பீர்கள் என்பது எனக்கு நன்றாகத்தெரியும், அதாவது பலதரப்பட்ட பறவையினங்கள், பருவநிலை வேறுபாட்டை குறியீடாக வைத்து, தமக்கான தட்பவெட்பத்தை நோக்கி குடியகல்தல் அல்லது இடம்பெயர்தல் என்பதன் சரியான தமிழ் பெயர்தான் வலசை.
இந்த குடியகல்தல் என்பது பல ஆயிரக்கணக்கான மைல்களை தாண்டியதாக இருப்பதும், பெரும் துருவங்கள், மகாசமுத்திரங்கள், பெரும் சிகரங்களைத்தாண்டியே அவை இந்த மாபெரும் குடியல்வுகளை நடத்துவதும் மிகப்பெரும் அதிசமாகவே படுகின்றது.
பருவகாலங்கள், தாம்சார்ந்த இடத்தின் காலநிலைதவிர, தூர இடங்களின் காலநிலைகளை நன்கறிதல், தமக்கு ஒவ்வாமையான காலங்களில், தோதான ஒரு காலநிலையுள்ள மிகத்தூரத்தில் உள்ள இடத்திற்கான பயணத்தை மேற்கொளத்திறமையாக திட்டமிடல், பெருங்குழு ஒன்று சேர்தல், அதற்கான முன்னாயத்தங்களை ஒழுங்காக செய்தல், பெரும் பயறப்பொன்றுக்கு தயாராதல், அதிகளவிலான உணவுகளை உண்டு தமக்கும், இறகுகளுக்கும் சக்தியை உள்வாங்கல், குழுக்களாக இணைந்து அதற்கான ஒத்திகையினை மேற்கொள்ளல், என அதிசயப்படத்தக்க விடையங்களை அவை செய்கின்றன.
தமது இனப்பெருக்க காலங்களையும், தமக்கு தோதான இடமாக ஆர்ட்டிக் வட அரைக்கோளத்திலும், மித வெப்ப வலய இடங்களிலும் இருக்கும் இந்தப்பறவைகள், கூதிர்க்காலங்களில் வெப்ப வலயங்களை நோக்கி பெரும் பறப்பை மேற்கொளத்தொடங்குவதாக கூறப்படுகின்றது.
இவற்றின் பறப்பு அலாதியானது. ஒவ்வொரு குழுவையும் வழிநடத்திச்செல்ல ஒரு கப்டன், துணைக்கப்டன் என்பவர்கள் இந்த பறவைகளில் இருப்பார்கள் என்றும் அந்த பறவைக்கூட்டத்தின் பாதை, காலநிலை, முகில்களின் தன்மை, பறக்கும் கோணம், பறக்கும் வடிவமைப்பு என்பவற்றை இவர்களே தீர்மானிப்பார்கள் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
பொதுவாக எதிர்க்காற்றினை கிழித்து, பறக்கும் சுமை தெரியாமல், இலகுவாக பறந்துவர அவர்கள் V வடிவத்தில் பறப்பதையே பெரும்பாலும் கைக்கொள்வதாக தெரிகின்றது.
ஆர்ட்டிக் வட அரைவட்டம், சைபீரிய, ரஷ்ய குளிர்மேட்டுநிலப்பறவைகளே எமது நாடுபோன்ற இடங்களுக்கு பெரும்பாலாக வருவதாக கூறப்படுகின்றது.
இப்படி வரும் அவர்களுக்கு பெரும்சிரமமாக தடையை ஏற்படுத்துவது எவரெஸ்ட் கிரம் உள்ள இமையமலையை அண்டிய பிரதேசமே.
எனினும் அவை இந்தப்பிரதேசத்தை கடப்பதற்கு அகக்குறைந்தது மூன்று நாட்களாவது தேவைப்படுவதாக கூறப்படுகின்றது.
சைனாவின் எல்லைவழியாக எந்துகுவியும் பறவைகள் குழுக்கள், அந்தப்பகுதியிலேயே அடைக்கலம் அடைந்து, காற்றின் தன்மைகள் குறைந்து, பனிச்சாரல்கள் இல்லாத நேரங்களில், தெளிவான முகில்கள் அவதானிக்கக்கூடிய வேளைகளிலேயே மேலெழுந்து மெதுவாக இந்த சிகரத்தை கடந்து தொடர்ந்து பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தம் நடந்த காலங்களில்க்கூட 'சினெப்' என்ன சைபீரியப்பறவையினை சாதாரணமாக எமது வயல்வெளிகளிலும், நீர்ச்சுனை உள்ள பிரதேசங்களிலும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அந்த நாட்களில் வேட்டைக்காரர்கள் அதை சுட்டு விற்பனை செய்வதையும் கண்டிருக்கின்றேன்.
எனினும் இப்போது பெருமளவிலான பறவைகள் இங்கே வரத்தொடங்கியுள்ள நிலையில், பறவைகள் வேட்டையாடப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை பாராட்டப்படவேண்டிய ஒரு அம்சமே.
அதேபோல வடக்கு பிரதேசத்தில் பறவைகள் தொடர்பான கருத்தரங்குகள், மாநாடுகள் என்பன அண்மையில் இடம்பெற்றுவருவதும், பறவைகள் தொடர்பான ஒரு வழிப்புணர்வு மக்களுக்கு சில ஊடகங்கள் மூலம் கொண்டு செல்லப்படுவதும் மேலும் வரவேற்கத்தக்க அம்சமே.
இன்று இலங்கையின் வடபுலத்தே, முக்கியமாக சுண்டிக்குளம் பிரதேசத்தில் பறவைகள் இயற்கை சரணாலயம் ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதேபோல வல்வை வெளியை அண்டிய நீர்ச்சுனை பிரதேசம், மண்டைதீவு, அராலியை அண்டிய பிரதேசம் என்பனவற்றில் பல பறவைகள் வந்து குவிவதையும், புதிய விதவிதமான பறவைகளையும் அவதானிக்கமுடிகின்றது.
பறவைகள் பல விதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று கண்ணாதாசன் இதை அனுபவித்ததனால்த்தான் சொல்லிச்சென்றானோ தெரியவில்லை. பறவையியல் சம்பந்தமாக Winged Migration என்ற ஆவணப்படம் பல புதிய தகவல்களையும், பறப்பியலின் பரினாமங்களையும் சொல்லிநிற்கின்றது. அறிவுப்பசி உள்ளவர்களுக்கு ஒரு விருந்தாகவும் அந்த ஆவணம் உள்ளது..
சிறிது நேரமெடுத்து இந்த சிறந்த ஆவணப்படத்தையும் கொஞ்சம் பார்த்துப்போங்களேன்...
8 comments:
நல்லதொரு எழுத்து.
நேற்று நீங்கள் அழைப்பெடுத்த தருணம் பறவைகக்காரனோடுதான் இருந்தேன் அவன் மட்டக்களப்பில் ஏன் பறவைகளோடு Eco Tourism ஏற்படுத்த முடியாது என வாதங்களில் இருந்தோம். மிக அருமையான பறவைகளின் தோழன் அவர். என்ன புதுமை இன்று இந்தப்பதிவு வலுச்சேர்க்கிறது.
ஆவணப்படம் பார்க்க இணைத்தள வேகம் இடம் கொடுக்கல இப்பொழுது.
சில விடயங்கள் அறிந்திருந்தாலும் எழுத்துகளில் இயல்பு புதுமையளிக்கிறது.
தலைப்பும் தான்.
யுத்த பயமில்லாததால் பறவைகள் யாழ் குடா நாடு தேடி வந்து நிம்மதியாக பறத்தல் மகிழ்ச்சி. இடம் பெயர்ந்த மக்களும் தங்கள் மண்ணுக்கு வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி. பறவைகள் குறித்த அருமையான பதிவு.
நிறைய வீடியோ என்பதால் லோட் ஆக டைம் எடுக்கிறது.
அருமை
நான் அறிவை வளர்த்து கொள்ள உதவிய இந்த பதிவுக்கு நன்றிகள்!!!
கால நிலைம் மாற்றங்களை உய்த்தறிந்து, அதற்கேற்றாற் போல நம்ம ஊர்களுக்கு வரும் பறவைகள் பற்றிய வித்தியாசமான பகிர்வினைத் தந்திருக்கிறீங்க
//யுத்தம் நடந்த காலங்களில்க்கூட 'சினெப்' என்ன சைபீரியப்பறவையினை சாதாரணமாக எமது வயல்வெளிகளிலும், நீர்ச்சுனை உள்ள பிரதேசங்களிலும் அவதானிக்கக்கூடியதாக //
இதனை அடிப்படையாக வைத்து கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள்
ஊர் திரும்பும் சைபீரிய வாத்தே நில்லு
உன்னோடு எங்கள் மண்ணின் கண்ணீரை எடுத்துச் செல்லு!
என்று பாடல் ஒன்றும் எழுதியிருக்கிறார்.
யுத்தம் நடந்த காலங்களில்க்கூட 'சினெப்' என்ன சைபீரியப்பறவையினை சாதாரணமாக எமது வயல்வெளிகளிலும், நீர்ச்சுனை உள்ள பிரதேசங்களிலும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அந்த நாட்களில் வேட்டைக்காரர்கள் அதை சுட்டு விற்பனை செய்வதையும் கண்டிருக்கின்றேன்.
ம்ம்ம்... சாப்பிட்டிருக்கின்றேன் சரியான வெடுக்கு அண்ணை. அதற்கு இப்போ கவலைப்படுறன். அன்றைய அறியாமையின் விளைவுகள் அவை.
நல்லதொரு பதிவு அண்ணை.
நன்று ஜனா !வீடியோக்க்களும்தான்.
எனக்கு பறவைகளை ரொம்ப புடிக்கும் ... சிறப்பான பதிவு ஆனால்உ படம் பார்க்க நேரமில்லை ஜனா அண்ணா..!
Post a Comment