Wednesday, September 21, 2011

இலைதுளிர் காலத்து உதிர்வுகள்........09

விடை தெரியாத பகீரதத்தனமான விடிவை நோக்கிய பயணத்தில் மருட்சியான நாட்கள் பல, நாம் எப்படி போகப்பொகின்றோம் என்ற மலைப்பே அப்போது ஈழத்தமிழர்களிடம் கலக்கமாக இருந்ததே தவிர சென்றடைவேண்டிய இடம் பற்றிய தெளிவு அனைவரிடமும் இருந்தது.

இருட்டாக இருந்த அந்த நாட்கள் அவ்வளவு சீக்கிரம் விடிவுக்கு வரவில்லை.
எமக்காக தாம் கதைப்பதாகத்தானே இந்தியா சொன்னது அப்படி இருந்தும் டில்லியில் ஏன் இந்த இறுக்கத்தை அது கொண்டிருக்கின்றது இதன் பின்னிணியில் இருக்கும் மர்ம முடிச்சுக்கள் என்ன? அவை சிலவேளைகளில் பாராதூரமாக இருந்துவிடுமோ? நாம் தாழிக்கு பயந்து நெருப்பினுள் விழுந்துவிடுவோமோ என்ற பதை பதைப்பை அப்போது ஒவ்வொருவரினதும் முகங்களில் நன்றாக அவதானிக்ககூடியதாகவே இருந்தது.

இந்த நிலையில்தான் அழைத்து செல்லப்பட்ட போராளிக்குழுத்தலைவர் உட்பட அவர்களின் உயர்மட்ட குழுவினர் ஒருநாள் மதியம் அவசரமாக கொண்டுவந்து தரையிறக்கிவிடப்படுகின்றனர்.
இந்த நிலையில் அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஈழமுரசு விசேட செய்தி ஒன்றை மாலை வெளியிடுகின்றது.
அதில் விடுதலைப்புலிகளின் தலைவரை இந்திய உயர் மட்டத்தினர் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுமாறு பகிரங்கமாக வற்புறுத்தியமையும், இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒன்று விரைவில் கைச்சாத்தாகி இந்தியாவிலிருந்து தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு இந்திய இராணுவத்தினர் அமைதிப்படையாக வரும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் அந்த செய்தி தெரிவித்திருந்தது.

இந்திய - இலங்கை ஒப்பந்தமும் ராஜீவ் காந்தியின் கொழும்பு வருகையுடன் கைச்சாத்திடப்பட்டது....
(இந்த ஒப்பந்தம் இடம்பெற்ற பொழுது இடம்பெற்ற சம்பவங்கள், அந்தநேரத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வுகள், இந்திய அமைதிகாக்கும் படையின் வருகை தமிழர் தாயகத்தில் எப்படி பார்க்கப்பட்டது என்பன பற்றி விரிவாக அடுத்த பாகத்தில் பார்க்க இருப்பதால் இப்போது அந்த ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின்னர் யாழ்;பாணத்தில் நடந்த சம்பவத்திற்கு போகின்றேன்)

இந்த நிலையில் அப்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலை என்ன? என்ற பெரிய கேள்வி தமிழ் மக்கள் மனதில் பெரும் கேள்வியாக எழுந்தது.
அந்தவேளையில்தான் யாழ்ப்பாணம் சுதுமலையில் உள்ள சுதுமலை அம்மன் கோவில் சுற்றாடலில் 1987 ஆகஸ்ட் மாதம் 04 ஆம் நாள் மாபெரும் கூட்டம் ஒன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
மாலை நேரம் கூட்டம் இடம்பெறவுள்ளதென்றபோதிலும் காலையே இந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ள மக்கள் பெரும் ஆர்வம் கொண்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது.
இந்த கூட்டத்தில் தூர இடங்களில் இருந்தும் வந்து கலந்துகொள்ளும் மக்களுக்காக வாகன ஒழுங்குகள் எல்லாம் முறையாக அவர்களால் செய்யப்பட்டிருந்தன.

அவ்வாறான ஒரு வாகனத்தில் என் வீட்டு நபர்களுடன் நானும் அந்த சுதுமலையினை அடைந்தேன். அப்போது யாழ்ப்பாண மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த திலீபன் தலைமையில் அந்தக்கூட்டம் ஆரம்பமாகியது, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட அவர்களின் மிக முக்கிய உயர் மட்டத்தினர் பலர் இந்தக்கூட்டத்திற்கு வந்திருந்தனர்.... ஒருவரை தவிர.
கூட்டம் தொடங்கி ஒவ்வொருவராக பேசிக்கொண்டிருந்தனர், அவர்களின் பேச்சுகளில் சில வரிகள் இப்போதும் என் இதயத்தில் உள்ளன, அப்போது விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட தளபதியாக இருந்த குமரப்பா பேசும்போது,
' எனக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் பந்தம் இன்றுவந்த ஒன்றல்ல, அது எங்கள் உயிரோடும் ஊணோடும் ஒன்றாக கலந்திருக்கும் பந்தம்'
இன்றும் சாதாரணமாக ஒரு கிரிக்கட் மச்சிலேலே கூட ஏன் நாம் அத்தனை நாடுகளையும் தள்ளிவைத்துவிட்டு இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கின்றோம், ஏன் என்றால் அதுவும் ஒருவகையில் எங்கள் தாய்நாடு என்ற எண்ணத்தில்தான் என்றார்.

அந்தநேரம் அவர்களின் உயர் மட்டத்தில் காணமல் இருந்த ஒருவர் மேடையை நோக்கி வந்துகொண்டிருந்தார். கூடியிருந்த அத்தனை மக்களும் எழுந்துநின்று கரவோசை எழுப்பி அவருக்கு மரியாதை செலுத்தியதை மிகப்பெரும் பூரிப்புடன் என் இரண்டு கண்களாலும் பெருமையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
கால்கள் நடக்கமுடியாமல், ஊன்றுகோல்தடியுடன் மேடையை நோக்கி ஏறிய அவரது கம்பீரம் இன்றும் எனக்கு தைரியம் என்ற வார்த்தைக்கு அகராதி சொல்லிக்கொண்டிருக்கின்றது.
மேடையில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் அதை அவதானித்த மறுகணமே ஓடிச்சென்று அவரை வாஞ்சையுடன் அணைத்து மேடையில் ஏற உதவிசெய்து வந்து தன் பக்கத்திலே உட்கார வைக்கிறார்...
ஆம்..... அவர்தான் அப்போது மட்டுமல்ல எப்போதுமே யாழ்ப்பாண தளபதி கிட்டு.

பலரது பேச்சுகளின் பின் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் முக்கிய நாளான அன்று வரலாற்றில் சுதுமலைப்பிரகடனம் என்று எழுதப்பட்ட அந்த உரையை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மக்கள் முன் ஆற்றினார்.

அவர் அங்கே ஆற்றிய உரையினை பார்வையிட

அந்த பேச்சின் அவர் அரம்பத்திலேயே கூறிய விடயம்போல எமக்கு அப்பால் பட்டு நிகழும் இந்த நிகழ்வு எமக்கு சாதகமாக இருக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்துடனே மக்கள் கலைந்து சென்றனர்.
அப்போது எங்கள் ஊரில் பைத்தியமாக பிச்சை எடுத்து திரியும் செட்டி என்ற மனிதன் சுற்றி திரிவான், அவன் அன்று வீதியால் செல்லும்போது தீர்க்கதரிசனமாக ஒரு எதிர்வுகூறலை சொல்லிக்கொண்டுபோனான்,

'வயித்து குத்தை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பாதே
சிங்களவனைவிட எங்களை இவன் சில்லெடுக்காட்டி இருந்து பாரு.....!!'

அந்த பைத்தியக்காரனுக்கு புரிந்த விடயம் எங்கள் மக்களுக்கு அப்போ புரிந்திருக்கவில்லை..........

இலைகள் உதிரும்.........

(குறிப்பு – புதிதாக ஆர்வத்துடன் இந்த தொடரை படிப்பவர்கள் தயவு செய்து இந்த இலை துளிர் காலத்து உதிர்வுகள் என்ற தொடரை ஆரம்பம் முதல் சிரமம் பார்க்காமல் படிக்க வேண்டுகின்றேன்)


11 comments:

KANA VARO said...

present sir

கந்தசாமி. said...

///இருட்டாக இருந்த அந்த நாட்கள் அவ்வளவு சீக்கிரம் விடிவுக்கு வரவில்லை. //// இன்று வரை ..((

கந்தசாமி. said...

////அவ்வாறான ஒரு வாகனத்தில் என் வீட்டு நபர்களுடன் நானும் அந்த சுதுமலையினை அடைந்தேன்.// நமக்கு தான் உப்பிடியான சந்தர்ப்பம் எல்லாம் கிடைக்கவில்லையே ...பிந்தி பிறந்தது என் குற்றமா )))

கந்தசாமி. said...

////இன்றும் சாதாரணமாக ஒரு கிரிக்கட் மச்சிலேலே கூட ஏன் நாம் அத்தனை நாடுகளையும் தள்ளிவைத்துவிட்டு இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கின்றோம், ஏன் என்றால் அதுவும் ஒருவகையில் எங்கள் தாய்நாடு என்ற எண்ணத்தில்தான் என்றார்.///ம்ம் இன்று வரை இது மறுக்க முடியாத உண்மையாக தான் தொடர்கிறது..

கந்தசாமி. said...

////அந்த பைத்தியக்காரனுக்கு புரிந்த விடயம் எங்கள் மக்களுக்கு அப்போ புரிந்திருக்கவில்லை..........///// உண்மை தான் ஆனால் புரிந்தும் என்ன பலன் ..அதிகாரம் ஆட்பலம் எல்லாவற்றிலும் அவர்களை காட்டிலும் நாம் சிறு மண் திட்டிகள் தானே ((

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

புதிதாக ஆர்வத்துடன் இந்த தொடரை படிப்பவர்கள் தயவு செய்து இந்த இலை துளிர் காலத்து உதிர்வுகள் என்ற தொடரை ஆரம்பம் முதல் சிரமம் பார்க்காமல் படிக்க வேண்டுகின்றேன்//

நான் ஆரம்பத்துல இருந்து படிக்கறேன்..

தமிழ் உதயம் said...

இந்த தொடரை வாசிக்கும் போதெல்லாம் மனம் படும் வேதனை சொல்லி மாளாது.

shanmugavel said...

//அந்த பைத்தியக்காரனுக்கு புரிந்த விடயம் எங்கள் மக்களுக்கு அப்போ புரிந்திருக்கவில்லை..........//

சங்கடமாக இருக்கிறது.

நிரூபன் said...

இந்திய புலிகள் உறவினைச் சொல்லியவாறு,
நாம் எப்படி நம்பிக் கெட்டோம் என்பதற்குச் சான்றாக ஒரு பழமொழியினை நினைவுபடுத்திச் சுவாரஸ்யமாகத் தொடர் நகர்கிறது.

அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்.

Agape Tamil Writer said...

அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்நன்றி

ரெவெரி said...

நான் முதல்ல இருந்து தொடங்குகிறேன் நண்பரே...

LinkWithin

Related Posts with Thumbnails