Friday, September 16, 2011

நான் எனும் நீ....

இந்த "விருட்சமுனி" பற்றிப்பேசவேண்டும் என்றால் கொஞ்சம், அரசியல், மத, பிரதேச, இன அடையாளங்களை அப்பால் வைத்துவிட்டு முழுமையான ஆளுமையினை பற்றி பேசவேண்டும். இவரைப்பற்றி பேசுவதே ஒரு ஆளுமையினைப் பற்றி முழுமையாக பேசியதற்கு ஒப்பாகும் என்பதில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது.
தலைவன் ஒருவன் பிறக்கின்றானா அல்லது உருவாக்கப்படுகின்றானா? என்ற கேள்வி தள்ளாடி நிற்கும் இடங்களில் கண்டிப்பாக இவரது பிம்பமும் இருக்கும்.

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் என்றால் அரசியல் கடந்த ஒரு தூரநோக்குடைய சிந்தனாவாதியுடைய ஆளுமை என்று பொருள் படுமோ என்ற அளவுக்கு ஆற்றலுடையவராக, இருந்து காட்டிய ஒரு மனிதர்.
இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இலக்கணம் பிசாகமல் பேசிய ஒருவராக அவரை பார்க்கலாம்.
அவரது தமிழ் உச்சரிப்புக்களே கேட்கும்போது அவ்வளவு சுருதி சுத்தமான தொனியாக ஆவலாக கேட்கும் விதத்தில் கணீர் என்று ஒலிக்கும்.
தமிழை அடைமொழியாக கொண்டு பாராளுமன்றம் சென்ற எந்த உறுப்பினரும் தமிழை இவ்வளவு சுத்தமாக அந்த பாராளுமன்றத்தில் பேசியதாக நான் இதுவரை அறியவில்லை.
இது அவருக்கு சாத்தியப்பட்டது அவர் தமிழ்மொழியின் காதலனாக தன்னை கருதியதும் ஒரு கவிஞனாக இருந்ததும்தான் என்று நினைக்கின்றேன்.

இலங்கை சட்டக்கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்று சட்டவல்லுனராக மடடுமன்றி, ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் இருந்த அஸ்ரப் அவர்கள், குறிப்பாக தமிழ் வாசிப்பு பிரியர் என்றும் கவிதை, கட்டுரைகள், சிறுகதைகள் எழுதுவதில் அவருக்கு பெரும் ஆர்வமும் ஆரம்பமும் சிறுவயது முதலே அவருக்கு இருந்தது என்கின்றனர் அவரது நட்பு வட்டத்தினர்.
விருட்சமனி என்ற பெயரில் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் அருமையானவை என்பது மட்டுமன்றி ஆளமானவையாகவும் சிந்திக்கத்தாண்டுவனவாகவும் உள்ளன.

2000 ஆம் ஆண்டு செப்ரம்பர் 16 ஆகிய இதே நாள் உலங்குவானூர்தி விபத்தில் இவர் இந்த உலகைவிட்டு நீங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது கவிதை தொகுப்பான நான் என்னும் நீ என்ற கவிதை தொகுப்பிலிருந்து முக்கியமான ஒரு கவிதையினை படித்துப்பாருங்கள்.

"போராளிகளே புறப்படுங்கள்"

ஒரு துப்பாக்கியின் ரவைகளினால் எனது இரைச்சல் அடங்கி விட்டதுக்காய் நமது எதிரி வென்றுவிட்டான் என்று நீ குழம்பிவிடக் கூடாது

அன்றுதான் போராட்டம் எனும் நமது இருண்ட குகைக்குள் வெற்றிச் சூரியனின் வெண்கதிர்கள் நுழைகின்றன என்பதை நீ மறந்து விடவும் கூடாது

உனது தலைவனுக்கு ஒன்றுமே நடக்கவில்லை என்பதனை நீ எப்போதும் மறந்திடாதே! தலைவர்கள் ஒரு போதும் மரணிப்பதில்லை என்பதனை நான் சொல்லித்தரவில்லையா? என்னை அதற்காய் நீ மன்னித்து விடுவாயாக.

நாம் அல்லாஹ்வின் பாதையில் நடந்து வந்தவர்கள் நீங்களெல்லாம் தொடர்ந்து அப்பாதையில் நடக்க இருப்பவர்கள்

இந்தப் போராட்டத்தில் சூடுண்டாலும், வெட்டுண்டாலும் சுகமெல்லாம் ஒன்றேதான் நமது போராளிகள் யாரும் மரணிக்கப்போவதில்லை!

போராளிகளே புறப்படுங்கள் ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வேடுக்க நேரமில்லை

இந்த மையத்தைக் குளிப்பாட்டுவதில் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்

தண்ணீரும் தேவையில்லை பன்னீரும் தேவையில்லை

உங்கள் தலைவனின் உடலில் இரத்தத்தால் சந்தனம் பூசப்பட்டுள்ளதா?

அது அவனின் மண்ணறையில் சதா மணம் வீச வேண்டுமெனில் தூக்கி விரைவில் எடுத்துச் சென்று தொழுது விட்டு அடக்குங்கள்

இந்த மையித்தைக் குளிப்பாட்டுவதால் கடைசி நேரத்தில் தலைமைத்துவக் கட்டுப்பாட்டை மீறாதீர்கள்

கண்ணீர் அஞ்சலிகள் போதும் கவலைகளை கொஞ்சம் மறந்து தூக்குங்கள்

இரத்தத்தால் தோய்ந்திருக்கும் எனது ஆடைகளை எடுத்து வீசாதீர்கள் வேண்டுமெனில் எனது “இஹ்ராம்” துண்டுகளை அவற்றுக்கு மேலே எடுத்துப் போடுங்கள்

எனது உடலில் இருந்து பொசிந்து வரும் இரத்தச் சொட்டுக்கள், அவற்றை தழுவும் பசியுடன் இருப்பதைப் பாருங்கள்

எனது மூக்குக்குள்ளும் எனது காதுகளுக்குள்ளும் பஞ்சுத் துண்டங்களை வைத்தென் முகத் தோற்றத்தை பழுதாக்கி விடாதீர்கள்

சில வேலைகளில் உங்களை நான் சுவாசிக்காமலும் சில வேலைகளில் உங்களை நான் கேட்காமலும் சில வேலைகளில் உங்களை நான் பேசாமலும் இருந்திருக்கின்றேன்

குருடர்களாகவும் செவிடர்களாகவும் ஊமையர்களாகவும் இல்லாதவர்களால் இப்போராட்டத்தில் நின்று பிடிக்க முடியாது

கபுறுக் குழிக்குள்ளாவது என்னை சுவாசிக்க அனுமதியுங்கள் ஹூர்லீன்களின் மெல்லிசைகளை கேட்டு ரசிக்கும் பாக்கியத்தைத் தாருங்கள்

தூக்குங்கள் இந்த மையித்தை இன்னும் சுணக்கவும் தேவையில்லை. தூக்கி விரைவில் எடுத்துச் சென்று தொழுது விட்டு அடக்குங்கள் ஓரத்தில் நின்றுகொண்டு ஓயாமல் தர்க்கம் செய்யும்

வீரத்திற்கு வையுங்கள் முற்றுப் புள்ளி

கருத்து வேறுபாடென்னும் கறையான்கள் வந்துங்கள் புரிந்துணர்வை சீரழிக்கும்! மிகவும் புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள்

வேகத்தைக் குறைக்காமல் வெற்றியுடன் முன்னே செல்லுங்கள்

ஆலமரமாய் ஆயிரம் விழுதுகளுடன் நமது மரம் வாழவேண்டும் – அதை வாழ்விற்கப் புறப்படுங்கள்

எனது பணி இனிது மடிந்தது உங்கள் பணிகளைச் செய்வதற்காய்ப் புறப்படுங்கள்

அவனின் நாட்டத்தை இவனின் துப்பாக்கி ரவைகள் பணிந்து தலைசாய்ந்து நிறைவேற்றியுள்ளன.

விக்கி அழுது வீணாக நேரத்தை ஓட்ட வேண்டாம் தூக்கி விரைவில் எடுத்துச் சென்று தொழுது விட்டு அடக்குங்கள்

16 comments:

maruthamooran said...

எம்.எச்.எம். அஷ்ரப் முன்னுாதாரணமான மனிதராக- தலைவராக இருக்கிறார்.

சுதா SJ said...

தெரியாத விடயங்கள் நிறைய தெரிந்து கொண்டேன் அழகாக எழுதுகின்றீர்கள் அண்ணா. வாழ்த்துக்கள்

K said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்கோ! இனிய வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்!

இலங்கையில் இப்படி ஒரு அரசியல்வாதியா? ரொம்ப ஆச்சரியமாக இருக்குதே!

தகவலுக்கு நன்றி சார்!

shanmugavel said...

அருமையான கவிதை சார்,வரிகள் ஆழமாக ஊடுருவுகின்றன.பகிர்வுக்கு நன்றி

sinmajan said...

எம்.எச்.எம். அஷ்ரபின் இந்தப் பக்கத்தைப் பற்றி நான் அதிகம் அறிந்திருக்கவில்லை.. ”நான் என்னும் நீ” இனித் தான் வாசிக்க வேண்டும்.

Anonymous said...

அறிமுகம் மற்றும் வீரிய வரிகளுக்கு நன்றி...சீர்ஸ்...

Anonymous said...

நான் கொஞ்சம் அறிந்திருக்கிறேன், சிறந்த தலைவர் அஸ்ரப்

Unknown said...

நல்ல பதிவு.

நேரடி ரிப்போர்ட்

இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6

கார்த்தி said...

அஷ்ரப் தனது சமூகத்துக்காக உழைத்த போற்றப்படவேண்டிய தலைவர்

Unknown said...

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஆளுமைக்கு எம் வந்தனங்கள்.

உண்மையில் அவரின் இழப்பு பேரிழப்பு தான்.. ஆனால் அவரின் இந்த வார்த்தைகளே தீர்வாக தெரிகிறது.
//கண்ணீர் அஞ்சலிகள் போதும் கவலைகளை கொஞ்சம் மறந்து தூக்குங்கள்//

குறையொன்றுமில்லை. said...

ஒரு புதியவரைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி

Riyas said...

வாழ்ந்து மறைந்து ஒரு மாமனிதரை பற்றி கூறியிருக்கிறீர்கள்.. நன்றி,

balavasakan said...

எங்கள் நாட்டில் தங்களது சமூகத்திறகாக உண்மையாக உழைத்தவர்கள் ஏதோ ஒரு வகையில் இந்த உலகை விட்டு அகற்றப்பட்டிருக்கிறார்கள் அந்த வரிசையில் அஷ்ரப்பும் ஒரு உதாரணம்..

தனிமரம் said...

மக்களுக்கு மிகுந்த சேவை செய்தவர் கொள்கையில் பிடிப்பு மிக்க மக்கள் தலைவர் அஸ்ரப் தொலைநோக்குப் பார்வையுள்ள அவரின் இழப்பு முஸ்லிம் மக்களின் பேரிலப்பு மிகுந்த வேலைகளுக்கிடையிலும் இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்தார் பலகலைஞர்களை ஊக்கிவித்தவர்!

சி.பி.செந்தில்குமார் said...

இந்த மேட்டர் எல்லாம் எனக்குப்புதுசுங்கோ

நிரூபன் said...

கவிதைப் பகிர்விற்கு நன்றி பாஸ்..

ஒரு வேளை இக் கவிதையினை அஷ்ரப் அவர்கள் தீர்க்க தரிசனத்துடன் எழுதியிருப்பாரோ...

சும்மா ஒரு டவுட்டு.

LinkWithin

Related Posts with Thumbnails