எனக்குள் திடீர் என்று என்ன இது மாற்றம்! முதன்முதலாக திகைத்துப்போகின்றேன். என்னை அறியாமலேயே என் கைகால்களை அடித்து, ஏதோ முன்னர் அனுபவப்பட்ட இடத்திற்கு வரவேண்டும் என்று உள்ளுக்குள் எந்த மொழி என்று தெரியாத ஒரு உத்வேகம்.
வழிஎங்கும் சிகப்பு நிறம். மெல்லிய இளஞ்சிகப்பில் ஒரு வெளி வெளிச்சம்.
ஏதோ ஒன்றால் எங்கோ இழுக்கப்படுவதுபோன்ற ஒரு உணர்வு. பலநேர அவஸ்தை, உடல்நோவுவேறு.. ஒன்றும் புரியவில்லை சில மணித்தியாலங்களாய்…
மீண்டும் திடீர் என்று ஒரு உந்துதல். அடடா.. இதுவா என் குரல்? என்னை அறியாமல் என் வாயல் ஓவென்று குழறுகின்றேன். கண்ணை இலேசாகத்திறக்கின்றேன்..முன்னர் பார்த்திராத அதிக வெளிச்சம் கண்ணை கூசவைக்கின்றது.. யார்யாரே என்னை ஸ்பரிசிக்கின்றார்கள்.
மீண்டும் எனக்குள் ஒரு வேதனை. எனக்கும் நான் என் பிரபஞ்சம் என்று நினைத்திருந்த இடத்திற்குமிடையேயான, அப்போதுகளில் எனக்கு சகலதும் ஆகவிருந்த என் ஜீபனோபாயக் கயிறு அறுபடும் உணர்வு.
மெல்ல மெல்ல..கண்கள் கூச திறந்து பார்க்கின்றேன்.. மிகை ஒளியுடன், ஒரு பிரபஞ்சம் வியாபித்திருந்தது. குறிப்பிட்ட இத்தை மட்டும் என்னால் பார்க்கமுடிகின்றது. அதற்கு அங்கால் ஏதோ பரந்த ஒன்று வியாபித்து இருந்தது.
அடடே..முதன் முதலில் நான் அனுபவித்த உணர்வே இது..இத்தனைநாளாக இந்த உணர்வு எனக்குள்த்தானா? மறைந்திருந்தது? உணர்வுகளை நினைத்து பிரமித்துப்போகின்றேன்.
அந்த உணர்வின் பின்னரான… தாயவளின் கதகதப்பு, தந்தையின் இனிய அரவணைப்பு, சொந்தங்களின் பாசங்கள், உணவு உண்ணும்போது வேடிக்கை காட்டிய பறவை விலங்குகள், பள்ளிபோன முதலாம் நாள், விளையாடிய விளையாட்டுக்கள், பாடப்புத்தகங்களில் இருந்த பாடங்கள், முதன்முதல் பார்த்தமழை, பரீட்சை ஒன்றில் தோற்ற துயர்உணர்வு, முதல் முதல் இழந்த பாட்டனாரின் துயரம், மீசை அரும்பியபோது ஏற்பட்ட கிளர்ச்சி, மனது இலகித்த கன்னியர், முதற்காதல், கல்லூரிவாழ்வு, வேலைக்குப்போனது, திருமணம்கண்ட காட்சி, தாம்பத்தியசுகம், முதற்குழந்தை, இடமாற்றம், அடுத்த குழந்தை, குழந்தைகள் வளர்ப்பு, குழந்தைகள் கல்வி, அவர்களின் வாழ்வு, பாட்டனார் ஆனமை, மனைவியின் இழப்பு.. என அனைத்தும், கோர்வையாக வந்து வந்து போகின..
மூச்சுவிட மிகச்சிரமமாக இருக்கின்றது. என் பேர் சொல்லி மருத்துவர் அழைப்பதும் தூரத்தில் கேட்பதுபோல் தோன்றுகின்றது…
ஆ..மீண்டும் அதே உணர்வு…
எனக்குள் திடீர் என்று என்ன இது மாற்றம்! முதன்முதலாக திகைத்துப்போகின்றேன். என்னை அறியாமலேயே என் கைகால்களை அடித்து, ஏதோ முன்னர் அனுபவப்பட்ட இடத்திற்கு வரவேண்டும் என்று உள்ளுக்குள் எந்த மொழி என்று தெரியாத ஒரு உத்வேகம்.
வழிஎங்கும் சிகப்பு நிறம். மெல்லிய இளஞ்சிகப்பில் ஒரு வெளி வெளிச்சம்.
ஏதோ ஒன்றால் எங்கோ இழுக்கப்படுவதுபோன்ற ஒரு உணர்வு. பலநேர அவஸ்தை, உடல்நோவுவேறு.. ஒன்றும் புரியவில்லை சில மணித்தியாலங்களாய்…
மீண்டும் திடீர் என்று ஒரு உந்துதல். அடடா.. இதுவா என் குரல்? என்னை அறியாமல் என் வாயல் ஓவென்று குழறுகின்றேன். கண்ணை இலேசாகத்திறக்கின்றேன்..முன்னர் பார்த்திராத அதிக வெளிச்சம் கண்ணை கூசவைக்கின்றது.. யார்யாரே என்னை ஸ்பரிசிக்கின்றார்கள்.
மீண்டும் எனக்குள் ஒரு வேதனை. எனக்கும் நான் என் பிரபஞ்சம் என்று நினைத்திருந்த இடத்திற்குமிடையேயான, அப்போதுகளில் எனக்கு சகலதும் ஆகவிருந்த என் ஜீபனோபாயக் கயிறு அறுபடும் உணர்வு.
(மீள் பதிவு)
1 comment:
உண்மையில் பிரபஞ்ச ரகசியம் ஓர் அருமையான உணர்வுதான் ஜனா அண்ணா.
வீட்டில் இருந்தபடி வருமானம் பெறுவதற்கு இலகுவான ஓர் வழி.
Post a Comment