Sunday, June 21, 2009

கச்சதீவு???


இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் மாட்டிக்கொண்ட மின் கொயர்ஸ் தீவுப்பிரச்சினையே உலகின் தீவுகளால் ஏற்பட்ட பிரச்சினைகளில் மிகவும் பெரிதும், சிக்கல் மிகுந்ததாகவும் காணப்பட்டு, பின்னர் சர்வதேச சட்டங்கள் வாயிலாக தீர்வு காணப்பட்டது.தென்னமெரிக்காவில் போக்லன்ட் தீவுகளுக்காக பிரித்தானியாவுக்கும். ஆஜென்ரீனாவுக்கும் இடையில் பெரும் யுத்தமே இடம்பெற்றுள்ளது.இவை மட்டுமல்ல, நோர்வேக்கும், டென்மார்க்குக்குமான கிறீன்லான்ட் பிரச்சினை கூட சர்வதேச சட்டங்களின் பிரகாரம் தீர்த்து வைக்கப்பட்டது,


ஆனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கச்சதீவு விடயமோ, இன்று அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றது. 1974 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப்பிரதமரான திருமதி. இந்திராகாந்தி, இலங்கையின் பிரதமர் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து அப்போது தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி, மற்றும் தி.மு.கவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. கச்சதீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதி: “”இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சதீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் இலங்கை அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை” என்பதே ஆகும்.


கச்சதீவின் நீளம் ஒரு கல்; அகலம் அரை கல். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ., ராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ. கச்சத்தீவில் “டார்குயின்’ எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை என்பர். எனவே பச்சைத் தீவு நாளடைவில் கச்சத்தீவு ஆயிற்று. 1882ஆம் ஆண்டிலிருந்து எட்டுத் தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் கச்சதீவும் ஒன்று.கிழக்கிந்திய கம்பெனியினர் ராமநாதபுரம் சேதுபதியிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குத்தகை நிலமாக கச்சத்தீவைப் பெற்றனர். இலங்கையின் அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பீரிஸ், “விக்டோரியா மகாராணியின் அரசறிக்கைப்படி கச்சதீவு இலங்கையைச் சேர்ந்ததன்று அது ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தம்” என உறுதிப்படுத்தினார். என்றாலும், இலங்கை அரசு 1955, 56 இல் தன்னுடைய கடற்படைப் பயிற்சிக்குத் தகுந்த இடமாகக் கச்சத்தீவைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய பணியையும் அங்கு தொடங்கியது என இந்தியத் தரப்பினரால் திரும்பத் திரும்ப சொல்லிவரப்படுகின்றது.


முன்னர், இலட்சத்தீவுகள், அந்தமான், நிக்கோபர் தீவுகள் என்பவற்றைப்போலவே கச்சதீவும் இந்தியாவுக்கே சொந்தமானதாக இருந்தது. எனினும் 1974 ஆம் ஆண்டு அதை இலங்கைக்கு தாரைவார்த்துக்கொடுக்க இந்தியா எப்படி முன்வந்தது? எப்போதும் குள்ளநரிபோல, நாகலாந்து. காஸ்மீர் போன்ற தனி நிலரங்களையே கபடமாக தன்னகத்தே அபகரித்த இந்தியா எப்படி இந்த தீவை மட்டும் இலங்கைக்கு கொடுத்தது? உள்நோக்கம் இல்லாமலா இருக்கும்? என சாதாரணமாகவே ஆய்வாளர்கள் கணக்குப்போட்டுவிடலாம்.

1974ஆம் ஆண்டு இந்தியா அணுகுண்டை வெடித்தது. அதனால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மீது கண்டனக் கணைகள் வீசப்பட்டன.ஐ.நா. அவையில் இருந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட தாற்காலிகக் குழு மூலமாக, இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் முயன்றது. அப்போது அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு, இந்தியா அந்த முயற்சியை முறியடித்தது. இச் சூழ்நிலையில் இலங்கை அரசு கேட்டவுடன், நன்றிக்கடனாக இந்தியா கச்சதீவைக் கை கழுவ இசைந்தது.


இப்போது அதேகாலம் திரும்பியுள்ளது. இலங்கையிலுல் தமிழர்கள் சிங்கள இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டதாக அதே ஐ.நாவில் தீர்மானத்திற்கு விடப்பட்டது. இதிலும் இந்தியா, தனது சக்தியை பாவித்து, மற்ற நாடுகளையும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி நிர்பந்தித்து இலங்கையினை காப்பாற்றியுள்ளது. ஆனால் இப்போது இந்தியா கேட்டாலும் கச்சதீவை திரும்பத்தர இலங்கை ஒருபோதும் தயாராக இருக்கப்போவதில்லை. அப்படி இந்தியா கோரினாலும், இல்லை இங்குதான் ஞானம் பெற்றதன் பின்னர் புத்தபகவான் சிங்களவர்களுக்கு நேரில் வந்துபோதனை நடத்தினார் என்று புதிய வரலாறு ஒன்றைச் சொல்லவும் அங்குள்ள பொளத்த மத பிக்குகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தயாராகவே இருப்பார்கள்.


கச்சதீவினால் ஏற்படக்கூடிய நன்மைகளைச் சிந்தித்துப் பார்த்தால், கச்சத்தீவின் நடுவிலுள்ள கல்லுமலை அருகேயுள்ள ஆழ்கிணற்றின் குடிநீரால், இராமேஸ்வரத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். சித்தமருத்துவத்திற்குத் தேவையான “உமிரி’ போன்ற மூலிகைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கச்சத்தீவுக் கடலில் கிடைக்கும் இறால் மீன்கள் உலகத்தரம் வாய்ந்தவை. கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நூறாண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் இருப்பதாக சோவியத் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் 1983 ஆம் ஆண்ட கூறியுள்ளனர். கச்சத்தீவு – குமரிமுனைக்கு இடைப்பட்ட கடலுக்கடியில் யுரேனியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த கனிமக்கூறுகள் கிடைப்பதாக நிலத்தடி ஆய்வாளர்கள் அறிக்கை தந்துள்ளனர். நீர்மூழ்கிக் கப்பல்களையும் போர்ப்படகுகளையும் செப்பனிடும் தளம் அமைப்பதற்கும், நீர்மூழ்கிக் கப்பல் படையினருக்குப் பயிற்சிக்களம் அமைப்பதற்கும், தகுதி வாய்ந்த இடமாகக் கச்சத்தீவு விளங்குகின்றது. அணுப்படைத்தளம் அமைப்பதற்கேற்ற சூழலைக் கொண்டதாகவும், போர் விமானங்கள் தாற்காலிகமாக இறங்குவதற்குரிய திட்டாகவும் கச்சத்தீவு இருக்கிறது. ஏவுகணைத் தளமாகவும் இத்தீவைப் பயன்படுத்தலாம்.


கடலின் எச்சரிப்புக் கருவிகளாகப் பயன்படும் மிதவைகளுக்கு இங்கொரு மையம் அமைக்கலாம். இராணுவத்திற்குத் தேவையான தகவல்-தொடர்பு மையங்களையும், “ராடார்’ போன்றவற்றையும் நிர்மாணிக்கலாம். பாக் சந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கப்பற்படை அரண் அமையும்போது கச்சத்தீவும் அதன் மையங்களில் ஒன்றாக அமையலாம் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.இந்தவிதமான அறிக்கைகளும் சுட்டிக்காட்டுக்களும் இந்தியாவை இப்போது கச்சதீவை நோக்கி திரம்பிப்பார்க்கவைத்துள்ளன.


அடுத்து கச்சதீவில் முக்கிமானது அங்கு உள்ள புனித. அந்தோனியார் கோவிலாகும். இங்கு அண்டுதோறும் மார்ச் மாதம் முதலாவது வாரத்தில் பெருவிழா நடைபெறுவது வழக்கமாக இருந்தது. இந்த பெருவிழாக்காலங்களில், தமிழகத்தில் இருந்தும், யாழ்ப்பாணத்தில் இருந்தும் பெருவாரியான மக்கள் இங்கு கூடி இந்த திருவிழாவை கொண்டாடுவதுடன், தாங்கள் எடுத்துவந்த பண்டங்களையும் பரிமாறிக்கொள்வார்கள். ஒருவகையில் ஈழ, தமிழக தமிழர்களின் சந்திப்பு இடமாக கச்சதீவு இருந்தது என்பது மறுக்கப்படமுடியாத உண்மை.

சிந்தித்துப்பார்த்தால் தமிழனுக்கு இடையில், தமிழனுக்கு சொந்தமான இந்த நிலத்தை, இந்தி, தமிழனிடம் இருந்து பிடுங்கி சிங்களவன் கையில் கொடுத்துள்ளதையும், இந்த கச்சதீவு இலங்கைக்கா? இந்தியாவுக்கா? சொந்தமானது என்பதை ஒருபக்கம் வைத்துவிட்டு இது தமிழனுககே சொந்தமானது என்ற உண்மையினை நாம் மறக்காமல் இருப்பதே இப்போதைய தேவை. (உசாத்துணை - தாகூர் -Katcha Theevu – Issue & History: Indian Naval Strategy" )

5 comments:

Pradeep said...

கச்சதீவை இலங்கை எந்த மாவட்டத்துடன் இணைத்துள்ளது? அனேமாக யாழ்ப்பாணத்துடன்தான் என்று நினைக்கின்றேன். அப்படி என்றால் யாழ்ப்பாண நகரில் இருந்து 70 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள அதன் ஒரு பகுதியாக கச்சதீவே இருக்கம்.

Anonymous said...

நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்

Anonymous said...

plz. contact me.. jaani.n@gmail.com

IRSHATH said...

கச்ச தீவு இலங்கைக்கே சொந்தமாக இருக்க வேண்டும்.. இலங்கையின் மீன் வளம் இந்தியர்களால் சுரண்டப்படுவதை தடுக்க அவசியமாகும். எது எப்படியோ அந்தப்பகுதியில் மீன் பிடிக்கப்போவது வாடா புலத்து மீனவர்களே.. மற்றும் இவ்வளவு பெரிய நாடான இந்தியா, மற்றும் இலங்கையை விட பெரிய தமிழ நாடு இந்த சிறிய கச்ச தீவை விட்டு கொடுக்க முன்வராவிட்டால், சிறிய நாடான இலங்கை அதில் ஒரு பகுதியை ஈழமாக எப்படி பிரித்து கொடுக்கும்?

//1882ஆம் ஆண்டிலிருந்து எட்டுத் தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தன.//
அப்படி பழைய வரலாறு பார்க்கப்போனால் இந்தியாவை பாகிஸ்தானுக்கு (முகலாயர்கட்கு) திருப்பி வழங்க வேண்டுமே?

//இதிலும் இந்தியா, தனது சக்தியை பாவித்து, மற்ற நாடுகளையும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி நிர்பந்தித்து இலங்கையினை காப்பாற்றியுள்ளது//

அதி இந்தியா அல்ல, சீனாவும் ரசியாவுமே

mathu said...

உங்கள் கட்டுரையை இன்று (04.04.2011) தான் வாசித்தேன் மிக்க நன்று இப்படி இன்னும என்னும் எழுதுங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails