
உலக அரங்கிலே சிறுவர்கள் கற்கும் இடங்கள், தங்கியிருக்கும் இடங்கள், பாடசாலைகள் என பல இடங்களிலும் கடந்த சில வருடங்களாக தீயாபத்து ஏற்பட்டு பல சிறுவர்கள் பலியாவதைப்பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.நாளைய எதிர்கால தலைவர்களான அவர்கள் பெரிவர்களின் அசண்டையீனம் காரணமாக இவ்வாறு தீயிற்கு தீனியாகும் சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டே வருகின்றது. சிறுவர் உரிமைகள், சிறுவர் நலங்களைக் கவனித்துக்கொள்வது, யுனிசெவ்வினதும், சேவ் தி சில்ரன் அமைப்பினதும் கடமை என்று மற்றவர்கள் இருந்துவிடக்கூடாது, சிறுவர் என்போரை பாதுகாத்து அவர்களுக்கு உகந்த ஒரு உன்னதமான சூழலை உருவாக்கிக்கொடுக்கவேண்டிய கடமைப்பாடு உலகில் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கும்பகோணத்தில் நடந்த சம்பவத்தை தமிழகத்தில் உள்ள தமிழர்கள் இன்னும் மறந்திருக்கமுடியாது. அதேபோல் ஈழத்தில், செஞ்சோலை என்ற சிறுவர் பராமரிப்பு நிலையஙத்தின்மீது நடத்தப்பட்ட விமானக்குண்டு வீச்சில் 90 ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் இரத்தம் கொப்பளிக்க வெளியெடுக்கப்பட்ட காட்சிகளையும் உலகத் தமிழர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

குழந்தைகள் விடயத்தில் உலக மட்டத்தில், சமுகத்தினதும் அரசாங்கங்களினதும், பொறுப்பணர்வு போதாது என்றே எணத்தோன்றுகின்றது.சிறுவர்கள் வந்துபோகும் இடங்கள். சிறுவர் பாடசாலைகள், சிறுவர் நிலையங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் நடத்தப்படும் இடங்களை வாரத்திற்கு ஒருமறையாவது அரசாங்க பிரதிநிதிகள் நேரில் சென்று அங்குள்ள ஆபத்துக்கள், பாதுகாப்புக்கள் குறித்து ஆராயவேண்டும். அதேபோல சிறுவர் தொடர்பான தொண்டர் அமைப்புக்களும் இதற்கான தங்களது உதவிகளை நல்கவேண்டும்.
இது அரசாங்கத்தினதும், தொண்டர் அமைப்புக்களினதும் கடமை என்று நின்றுவிடாது, சிறுவர்களின் பெற்றோர்களும், சமுகத்தினரும் சிறுவர்கள் கூடுமிடங்கள், தங்குமிடங்கள், நிலையங்கள் என்பவற்றில் தீவிர அக்கறை எடுக்கவேண்டும்.இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாகவே மலரினும் மெல்லிய உடலையும, உள்ளங்களையும் உடைய நம் செல்வங்களுக்கு பாதுகாப்பான ஒரு பூமியை எம்மால் வழங்க முடியும்.
No comments:
Post a Comment