சரி…மற்றவர்களை சொல்லி குத்தமில்லை… இந்தக்கருத்தினை ஏற்று நீயே ஏன், ஒரு சிறுகதையினை எழுதக்கூடாது. உனது கதையினை மட்டும் எழுது அது நல்ல கதையோ, அல்லது கெட்டகதையோ என்பதை வாசிப்பவர்கள் தீர்மானிக்கட்டும், என என் எழுத்துக்களில் தொடர்ந்தும் எனக்கு ஆசானாய் விளங்கும் கலாநிதி.மனோண்மணி அவர்கள் என்னுடன் பேசும்போது தெரிவித்திருந்தார்.
சரி முயற்சி பண்ணித்தான் பார்ப்போமே என நான் எழுத வந்த கதை இது, சற்றுவித்தியாசமான ஒரு கொஞ்சம் பெரிய சிறுகதை, அட… கதையா எழுதப்போறான்? என வேறெங்கும்போய்விடாமல் முழுவதும் வாசித்துப்பாருங்கள், உங்கள் கருத்தினையும் தவறாமல் தாருங்கள். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு நான் எழுதிய ஒரு பெரிய சிறுகதை…….ஐந்நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை யாழ்ப்பாணத்துடன் சம்பந்தப்பட்ட மூவரை காலம் துரத்தும் கதையிது…)
மாசிப்பனி மூசிப்பெய்துகொண்டிருந்தது, பின்னிரவுக்காலம் என்பதால் விடிவெள்ளி கீழ்வானில் முளைத்துவிட்டாலும்கூட மேல்வானத்திற்கு சற்று மேலாக ஐந்துகலை தேய்ந்த சந்திரன் நின்றுகொண்டுதான் இருந்தான்.
தூரத்து பனங்கூடல்கள் கரும்புகார்கள் போல் தெரிந்துகொண்டிருந்தன, சில்வண்டின் ஓசை, பச்சிலைப்பூச்சிகளின் ஓசைகள் என சேவல் விடியலை உணர்வதற்கு முன்னதான அதிகாலைப்பொழுது தான் அது.
பூவரசந்தடியால் வன்னப்பெற்ற சாரளத்தினூடாக கண்விழித்து இத்தனையும் பார்த்து சப்பாணி கட்டிக்கொண்டு சோம்பல் முறித்தான் பவுணன். பக்கத்தில் குளிருக்கு குறண்டிக்கொண்டே கொசுவத்தால் சுற்றிக்கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் அவன் மனையாள் தையல்முத்து.
வாழ்க்கை பந்தத்தில் இருவரும்; இணைந்து முழுதாக ஒருமாதம் முடியவில்லை. அப்படியே அமர்ந்திருந்த பவுணன் ஓசைப்படாமல் தையல்முத்து தூங்கும் அழகை இரசித்துக்கொண்டிருந்தான்.
அந்தநேரத்தில் அந்த காலை அமைதியை குலைக்கும் வண்ணம் புரவிகளின் குளம்பொலி ஓசைகள் வட திசையில் இருந்து கேட்டுக்கொண்டே இவன் காதுகளை நெருங்கி வந்தன. ஓசையின் உச்சத்தால் ஒருகணம் திடுக்கிட்ட தையல்முத்து கண்ணைத் திறக்காதவாறே சுதாகரித்தக்கொண்டு, மீண்டும் தூக்கத்தில் ஆழுகின்றாள்.
ம்ம்ம்ம்ம்….. எங்கள் ஊர்வந்து ஒருமாதத்திலேயே வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் மன்னர் சங்கிலியன் கோயில்ப்பூசைக்கச்செல்வார் என்பதை பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டாளே என வியந்துகொண்டான் பவுணன்.
வீட்டிற்கு வெளியில் வந்து பன்னையை விலக்கிவிட்டு வேப்பம் குச்சி ஒன்றை உடைத்து பல்தேய்தபடியே தன் நெல்வயலை நோக்கி நடந்து சென்றான் பவுணன்.
இராசபாதையில் வழக்கத்தைவிட புரவிகளின் குழம்படையாளங்கள் தொகையாகக்காணப்பட்டன. இதென்ன? என்வாழ்நாளில் நான் எங்கள் மன்னர் இத்தனை படையுடன் கிளம்புவதை காணவில்லையே என மனதுக்குள் விளவியபடியே..சென்றான்….
பவுணன் அம்மான்! திடுக்கிட்டுத்திரும்பினான் பவுணன்…அழைத்தவன் வெள்ளை. விடயம் அறிந்தனையோ…அம்மான் பொருள்படை செய்ய வந்த தூரநாட்டு வெள்ளைத்தோலர், கொடுபடை கொணர்ந்து எம்மை அடிமையாக்கத் திட்டமிட்டுள்ளனராம். அதனால்த்தான் எம் மன்னனும், வீரப்படையினரும் அவர்களை எதிர்கொள்ளப்போகின்றார்கள்…நேற்றிரவு நல்லையில்(நல்லூர்) மாமந்திரி வணிகர்களிடம் தெரிவித்தாக சின்னையன் சொன்னான் என்றான் வெள்ளை.
பார்த்தாயா வெள்ளை…அன்றே உனக்குச் சொன்னேனே…பறங்கியரின் முகம்..நேசம் நாடி வந்ததுபோல் அல்ல.. எம்மைப்பார்த்து அவர்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கின்றது என்று…
ஓம்…நீ சொன்னது என் நினைவில் உள்ளது பவுணன்…ஆனால்…அவர்கள் படைவலுவில் உச்சத்தில் உள்ளார்கள் என்பதுதான் “எங்கே நாம் அவர்களுக்கு அடிமைகள் ஆகிவிடுவோமோ என்று பயமாக உள்ளது” என்றான் வெள்ளையன்.
இல்லை வெள்ளை….எம் மன்னனதும், நம் மற வீரர்களதும் வீரத்தில் உனக்கு எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்…நல்லை முருகனிடமும், நம் மன்னன் சங்கிலியனிடமும் நாம் பாரத்தை போட்டுவிட்டு இருப்போம்…இறுதிவரை பறங்கியரை எதிர்ப்போம்…அடிமை நிலைதான் என்றால் அன்றே இறப்போம்…நாம் வீரவழிவந்த தமிழர் என்பதை மறந்தாயோ..என்றான் பவுணன்.
அன்றைய இக்கட்டுநிலைகள் பற்றி பேசிக்கொண்டே வயல்வரை சென்று வெள்ளையனின் உதவியுடன் துலா மிதித்து வரப்பு கட்டி நெல்லுக்கு நீர்;பாச்சி இருவரும் குளிக்க “யமுனா ஏரிக்கு” வந்தபோது சூரியன் கீழ்வானில் பிரகாசிக்கத்தொடங்கியிருந்தான்.
மண்ணெண்ணை 3 லீட்டர் கிடக்கிறது…அந்த சிங்கர் ஓயில் போத்தலுக்க பெற்றோல் இருக்கோ தெரியாது…முந்தநாள்த்தான் 2 அவுண்ஸ் வாங்கினேன்..சீ…நேற்று என்ன நினைவில் இருந்தனோ தெரியாது என்ற நினைப்புடனேயே எழுந்தான் பிரசாந்தன்.
ஓடிப்போய் அவசர அவசரமாக குளித்துவிட்டு..வந்து நாள்க்களன்டரைக் கிளிக்க அது 17 செப்ரம்பர் 1995 என்று காட்டியது.
சச்சேரியில் எழுதுவினைஞனாக பணிபுரியும் அவன் நவாலியில் இருந்து கச்சேரியடிக்குச் செல்ல சில துளி பெற்றொலிலும்…பல துளிகள் மண்ணெண்ணையிலும் ஓடும் அந்த சீ.டி.125 என்ற ஒன்றைத்தான் நம்பியிருந்தான்.
ம்ம்ம்….அடுத்த நினைவு வந்தது…ஓகஸ்ட் 17 1995ல தான் அவனுக்கும் துஸ்யந்திக்கும் திருமணம் நடந்தது. சண்டிலிப்பாய்ல துஸ்யந்திட வீட்டதான் திருமணம் என்று இருந்து பிறகு அங்க அந்த நாளில் முன்னேறிப்பலபேர் பாய கடைசியாக கலாட்டாக்களியாணம் மாதிரி அங்க மாறி இங்க மாறி…பொம்பிள வரேல்ல, பொம்பிளேட தமையன்மார் இன்னும் வரேல்ல என்ற பல கதைகள் கேட்டு ஒருமாதிரி…கடைசியில நல்லூர் மனோன்மணி அம்மன் கோவில்லதான் கல்யாணம் நடந்திச்சு.
அந்தப்பகிடி முடிஞ்சும் சரியாக ஒரு மாதம் அகியிருந்தது.
வெளிக்கிட்டு வெளியால ஓடிவந்து அந்த சூப்பிப்போத்தில் என்று தான் அன்பாக அழைக்கும் சிங்கர் ஒயில்ப்போத்திலை பார்த்தான் ஒரு 15 துளிக்கு கிட்ட அதுக்குள்ள பெற்றோல் கிடந்தது…அப்பாடா…ஒருமாதிரி கச்சேரியடிக்குப்போகலாம்..அங்க போய் ஒரு 3 அவுண்ஸ் பெற்றோல் வாங்கினாப்போச்சு என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது…
இஞ்சாருங்கோப்பா…சொல்ல மறந்திட்டன் எங்கட காண்டீபன் அண்ணை நீங்கள் போகேக்க ஒருக்கா தன்னையும் கூட்டிக்கொண்டு போகச்சொன்னவர் என்று சொல்லிக்கொண்டே அவனிடம் தேத்தண்ணியை நீட்டினாள் துஸ்யந்தி..
பிறகு கெதியா வேளைக்கே போங்கோ…பிறகு வானத்தில இந்த தாலியறுப்பார் வந்திடுவான்கள் என்று அவள் சொல்லும்போதே சில ஷெல்ச் சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன.
தொடரும்...........
6 comments:
முகஸ்துதிக்காகக்கூறவில்லை உண்மையில் நன்றாக இருக்கின்றது. பாராட்டுக்கள்
வித்தியாசமான முயற்சி. வித்தியாசமான சிறுகதைகள் படிப்பதற்கு மிகச்சுவாரசியமாக இருக்கும். 500 ஆண்டுகளுக்கு ஒருமுறை யாழ்ப்பாணத்துடன் சம்பந்தப்பட்ட மூவரை காலம் துரத்தும் கதையிது என தாங்கள் தெரிவித்துள்ளமை ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச்செய்துள்ளது. தொடர்களை உடனுக்குடன் பதிவேற்றுங்கள்.
ohh..1505,1995 next 2495?????
VITHTHIYASAMAANA PAARVAI. GOOD ONE
நல்லகதையோட்டம். நல்லதொரு முயற்சி. வாழ்த்துக்கள், முழுக்கதையினையும் படித்துவிட்டு முழுமையான விமர்சனம் தருகின்றேன்.
உங்கலுடைய யூதர்கள் தொடர் போல் எமது யாழ் மண்ணின் தொடர் மிக சிறப்பக உள்ளது ஏலேலு ஜென்மம் எடுத்தலும் யாழ் மண்ணை சுவாசிக்கும் வரம் வருமா பாடல் நினைவுக்கு வருகுது.
Post a Comment