கை காலை அலம்பிவிட்டு வாருங்கள்… களி சமைத்துவைத்திருக்கின்றேன் என்றவாறே கொல்லைப்புறம் இருந்த சிறுகுடிலுக்குள் வாழைக்குலையை இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தாள் அவள்.
அவன் கை கால் நினைக்க அவளும் வந்து முகம் நனைத்துவிட்டு அவனுக்கு களி படைத்துவிட்டு…மெல்ல கதையை ஆரம்பித்தாள்..
என்னங்க…பறங்கியன் எங்களை அடிமைப்படுத்த எண்ணியுள்ளானாம்…மாதோட்டை, தொண்டை எல்லாம் அவர்கள் ஆளுமைதானாமே? சைவர் கோவில் எல்லாம் இடித்து பறங்கிமதக் கடவுளரைத்தான் இனித் தொழுக என்று அணைபிறப்பித்தனராம்.
எம்மன்னன் சங்கிலி.. ஒரு படையுடன் சென்று மாதோட்டையில் பறங்கியர், பறங்கி குருமார் பலரை தலையறுத்து வந்ததாக குந்தவை சொன்னாள் என்றாள். குந்தவையின் கணவனும் ஒரு படைவீரன் என்பது பவுணனுக்குத்தெரியும்.
பறவாய் இல்லை…எனக்கும் வெள்ளைக்கும் தெரியாத பல தகவல்கள் இவளுக்கு கிடைத்துள்ளதே என எண்ணியவாறே…பாவுணன் சொன்னான்
ஓம்…தையல்...அதுதான் நிலைமை. பறங்கியர் எந்த நேரமும் போர் தொடுக்கலாம்…மாமந்திரியும் நேற்று நல்லையில் வணிகர் மத்தியில் தகவல் சொன்னதாக வெள்ளை சொன்னான். அவர்கள் ஏதோ பெரும் இடியோசை போடும் ஆயுதங்கள் எல்லாம் கைவசம் வைத்துள்ளனராம்.. ஒன்று நுர்றுபேரைக் கொல்லும் வல்லமை கொண்டது என்று மக்கள் பேசுகின்றனர். அதுதான் எனக்கும் பயமாக உள்ளது என்றான்.
அவன் உண்டபின் அவளும் தானும் சிறிது உண்டுவிட்டு, தொழுவத்தில் நின்ற ஆடு, மாடுகளுக்கு இலை,குழைகள் பறித்துப்போட்டுவிட்டு இருவரும் சிறிது இளைப்பாறினர்.
பின்னர் சரி பிள்ளை….. நீ உலையை வை…நான் வயல்வரை போய் களைகள் பிடிங்கிவிட்டு வாறேன்…மாலை திருநெல்வேலியில் அங்காடியாம் வண்டிகட்டி போய்விட்டுவருவோம். வெள்ளையும் வருவதாக சொல்லி இருக்கின்றான் என்று தலையில் துணியை சுற்றிக்கொண்டு வயலுக்கு புறப்பட்டான் பவுணன்.
நெல் பிஞ்சுபிடித்து தலைகுனிந்த பெண்போல் இருந்த நெற்பயிர்களைக்கண்டு பேரானந்தம் கொண்டான் பவுணன். சின்னக்குழந்தையை அள்ளி அணைப்பதுபோல சில நெற்கதிர்களை கண்மூடியபடியே…அணைத்துக்கொண்டான்…
தான் சிறுவனாய்…வாழை மடலை இருபக்கம் சீவி…ஆட்டி ஆட்டி பட பட என்று சத்தம் கேட்க இதேவயலில் ஓடித்திரிந்ததும், அவன் ஐயனும், சின்னையன்மார்களும் வயலில் வேலை செய்த காலங்கள் அவன் மனதில் சிறிதுநேரம் வந்துவிட்டுப்போனது.
வயலில் இறங்கி நெல்லுடன் பிடுங்கப்பிடுங்க முளைத்துவரும் களைகளை பிடுங்கி வெளியில் ஒரு இடத்தில் குவித்துக்கட்டி… உடைப்பெடுத்த பாத்திகளை சரிக்கட்டிவிட்டு சிறிதுநேரம் வயல்கரையோரம் நின்ற பூவரசம் மரத்தின்கீழ் இளைப்பாறிவிட்டு. மீண்டும் களைகளை தூக்கி தான் கொண்டுவந்த வாழைநாரினால் இறுக்கக்கட்டி தோளில்ப்போட்டுக்கொண்டு வீடுநோக்கி நடக்கத்தொடங்கினான் பவுணன்.
அவன் வீதியால் நடந்துவர உச்சி வெயில் நெற்றிக்கு நேரே நின்றது. மணல் வீதியல் மண் கால்களைச்சுட்டது. வேகநடை நடந்தே வீடுவந்துசேர்ந்தான் பவுணன்.
பிடுங்கிவந்த களைகளை களைந்து ஆடுமாடுகளுக்கு போட்டுவிட்டு, வீட்டின் பின்னால் இருந்த பொதுக்கிணற்றடிக்குச்சென்று நன்றாக குளித்துவிட்டு வந்து வீட்டுத்திண்ணையில் உக்கார்ந்துகொண்டான்.
பின்னர் தையல்முத்துவுடன் மதிய உணவு அருந்திவிட்டு முற்றத்து வேப்பமரத்தின் கீழே பனையோலைப்பாயைப் போட்டுவிட்டு சிறிதுநேரம் தூங்க அயத்தமானான்.
தையல்முத்து சிறுபாத்திகட்டி நனையப்போட்டிருந்த தென்னை ஓலைகளை கிடுகுகள் ஆக்குவதற்காக வெளியில் இழுத்து பின்னிக்கொண்டிருந்தாள்.
“ஐயா…ஐயா…” என தையல்முத்து எழுப்பவும் திடுக்கிட்டெழுந்தான் பவுணன். என்ன பகலிலேயே அப்படி ஒரு அள்ந்த உறக்கம்? பாருங்கள் மாலை சாயப்போகின்றது. அங்காடிக்குப்போகவேண்டும் என்று சொன்னீர்களே?? இந்தாருங்கள் இதைக்குடித்துவிட்டு ஆயத்தமாகுங்கள் என சொல்லி பசும்பாலை பனம்வெல்லத்துடன் கலந்து அவனுக்கு கொடுத்தாள் தையல்முத்து. எழுந்திருந்து குடித்துவிட்டு.
சரி தையல் நான் வண்டியைக்கட்டி ஆயத்தமாகின்றேன். நீயும் தயாராகு என்று விட்டு வந்து. தனது இரண்டு நாம்பன் மாடுகளையும் வண்டியில்ப்பூட்டி விட்டு. பனைமரத்தில் நாண்கயிற்றைக்கட்டிவிட்டு. கை கால் அலம்பி துடைத்து. வேட்டியுடன் உடலைமூடிச் சால்வையும் அணிந்துகொண்டு.
நெற்துணிமுடிச்சக்களை வண்டியில் எற்றிவிட்டு தையல்முத்தையும் எற்றிக்கொண்டு வெள்ளையின் இல்லப்பக்கம் வண்டியை திருப்பினால் பவுணன். அந்த வேளைகளில் அந்த ஊரிலேயே அவனிடம் மட்டுமே மாட்டுவண்டி இருந்து. அவன் எப்போது வண்டிகட்டிப் புறப்பட்டாலும் மாட்டுவண்டியைப் பிடித்துக்கொண்டு அம்மணமாக சில சிறுவர்கள் அதன்பின்னால் சிலதூரம் ஓடிவருவது வாடிக்கை.
வெள்ளையின் வீட்டின் முன்னால் வண்டில் நிற்க…வெள்ளையும் கையைக்காட்டிவிட்டு வந்து அவனது ஒடியல் முடிச்சை வண்டியில் போட்டவிட்டு தானும் ஏறிக்கொண்டான்.
அங்காடி நோக்கிய அவர்கள் பயணம் தொடங்கியது.
அன்றைய நாள் வேலைகளாக முக்கியமாக பலபேரின் சம்பள நிலுவைகளுக்கு செக் எழுதவேண்டி இருந்தது. வந்தவுடன் அந்த வேலைகளில் படபட வென ஈடுபட்டான் பிரசாந்தன்.
அந்தப்பக்கம் ஏதாவது கதை சொல்லவேண்டும் என்ற ஆவலுடன் வந்த ஓ.ஏ.கூட அவன் வேலை செய்யும் பிஸியைப்பார்த்து ஒன்றும் பேசாமல் தனது இருக்கைப்பக்கம் போய்விட்டார்.
ஒருவாறு ஒரே மூச்சாக பக்கத்தில் என்ன நிகழ்கின்றது என்பதுகூடத்தெரியாமல் செக் போடவேண்டிய பலரில் பாதிப்பேரின் செக்களை எழுதிமுடித்துவிட்டான் அவன்…
பிரசாந்தன்…பிரசாந்தன்…என்ற ஓ.ஏயின் அழைப்பு அவனை அவரை நோக்கிப்பார்க்க வைத்தது. என்ன இப்ப என்று அதட்டுவதுபோல இருந்தது அவனது பார்வை “பன்ரெண்டே முக்காலகப்போகுது தம்பி. நாங்கள் சாப்ட்டுவிட்டு வரப்போறம். நீ வந்தநேரத்தில் இருந்து படு பிஸியாக இருக்கின்றாய்…கவனம் பக்கத்தில ஷெல் விழுந்தாலும் உனக்கு இப்ப கேக்காதுபோல” என இழித்துவிட்டு. நீயும் கொண்டுவந்த சாப்பாட்டை எடுத்தச்சாப்பிடு என்றுவிட்டுச்சென்றார் ஓ.ஏ.
கைகளை உதறி….முகத்தை கைகளால் அழுத்தி வருடிக்கொண்டே எழுந்து போய் கைகளுவிட்டு வந்து, சாப்பாட்டு பெட்டியைத்திறந்து சாப்பிடத்தொடங்கினான் அவன். சும்மா சொல்லக்கூடாது துஸ்யந்தியின் கைப்பக்குவம் தனிதான் என்று மனதுக்குள்ளேயே தன் மனைவியை மெச்சினான் பிரசாந்தன்.
ருசியின் சுவையோ…அல்லது பசியின் கிண்டலோ…மழமழவென்று சாப்பிட்டு முடித்துவிட்டு கைகழுவிவிட்டு. கச்சேரிக்கு வெளியில் வந்து பழையபூங்காவுக்கு எதிரில் இருந்த தற்காலிக எரிபொருள் கடையில் ராக்கிகளில் போத்தல்கள் அடுக்கப்பட்டிருந்த விதத்தைப்பார்த்தபடியே..3 அவுண்ஸ் பெற்றோலை கேட்டு தனது சூப்பிப்போத்தலை நீட்டினான். கடைக்காரர் அதை மிகக்கவனமாக வாங்கி 3 அவுண்ஸ் நிறப்பி விட்டு 300 ரூபா வாங்கிக்கொண்டார்.
மீண்டும் பணிமனை வந்து விட்ட இடத்தில் இருந்து மிகுதிப்பாதிப்பேரின் செக்களை எழுத அரம்பித்தான் பிரசாந்தன். இடையில் அலுப்புத்தட்ட ஆரம்பித்ததுதான் என்றாலும் இன்று எப்படியாவது இதை முடித்துவிடுவதுதான் என்ற வைராக்கியத்துடன் எழதிக்கொண்டிருந்தான். இன்னும் ஒரு பத்துபேரின் செக்கள் எழுதி முடிக்க இருந்த நேரத்தில் 4.30 மணியாகி அனைவரும் வீடுசெல்ல பறப்பட்டனர். அவசரமாக ஒரு 05 நிமிடத்திற்குள் அவற்றையும் முடிதது பியோனை அழைத்து ஏ.ஜி.ஏயிடம் கொடுக்கும்படி தெரிவித்துவிட்டு வாகம் நிறுத்தும் இடத்திற்கு வந்து 3அவுன்ஸ் நிறப்பட்ட சூப்பிப்போத்தலில் இரண்டு துளிகளை குளாயில் விட்டுவிட்டு கிக்கரை அடித்தான் பிரசாந்தன். அட புதுப்பெற்றோல் கனக்க இருக்கு என்ற தைரியத்திலோ என்னமோ ஸ்ராட் பண்ணவில்லை மோட்டார்சைக்கிள். மீண்டும் ஒரு துளி விட்டுவிட்டு உதைந்தான். ம்ம்கூம்…முரண்டு பிடித்தது அது.
ஓ….ஊதமறந்தவிட்டனே…தம் கட்டி ஒரு ஊது ஊதிவிட்டு கிக்கரை அடித்தான்..முழு மண்ணெண்ணை புகையையும் கக்கிக்கொண்டு ஸ்ரார்ட் பண்ணியது வாகனம்.
தேவை இல்லாமல் ஒரு எட்டு ஒன்று போட்டுவிட்டு வீதிக்கு வந்து வீட்டை நோக்கி விரைந்தான் அவன். கிழக்கு பக்கத்தைத்தவிர, மற்ற மூன்று பக்கத்திலும் ஷெல் மற்றும் குண்டுச்சத்தங்கள் கேட்டுக்கொண்டுதான் இருந்தன. ஏன் இன்று காலையில் இருந்து வானத்தில் அச்சுறுத்தும் அசுரர்கள் வரவில்லை என மனதுககுள் கேள்வி எழுப்பியபடியே சென்றுகொண்டிருந்தான்.
வீட்டை அடைந்ததும்…வாசல் பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டு அக்காவிடம் துஸ்யந்தி எங்கே போயிருக்கின்றாள் எனக் கேட்டான்.
தம்பி…அங்க சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் கனக்க சனம் இடம்பெயர்ந்து வந்திருக்குதுகளாம். அதுதான் உங்கட பெரியக்கா விதானை, கணக்கெடுக்க துஸ்யந்தியைக் கூட்டிக்கொண்டு போயிருக்கின்றா என்றா அந்த அக்கா.
ம்ம்ம்…பாவங்கள் எப்பத்தான் அந்தச்சனங்களுக்கு ஒரு நின்மதி கிடைக்கப்போகுதோ தெரியாது என்று சொல்லிக்கொண்டு அவனும் பறப்பட்டான் தேவாலயத்தை நோக்கி.
போகும் வழியில் யாரோ பின்னால் இருந்து கைதட்டி அழைக்கவே திரும்பிப்பார்தான்…வேறு யாரும் அல்ல சாத்யாத் காண்டீபன்தான்..மச்சான் எங்க போறாய்? என்ற படியே வந்தான்…
இல்லை மச்சான் துஸ்யந்தி, அக்காவுடன் பீற்றர்ஸ் சேர்ச்சில வந்திருக்கின்ற சனங்களை கணக்கெடுக்க போய்ட்டாளாம்…அதுதான் நானுமத் அங்கபோய் சனங்களை பார்ப்பம் என்று வெளிக்கிடுறன்.. அப்படியே ஏதாவது சாப்பாட்டு சாமான்களும் வாங்கிக்கொண்டு போவம் எணடு என்றான் அவன்.
அதுக்கென்ன மச்சான்…நானும் வாறன் வா…முத்தண்ணையிட்ட ஒரு 50 றாத்தல் பாணும் சொஞ்ச பணிசும் வாங்கிக்கொண்டு போவம் என்ற படியே அவன் பின்னால் ஏறினான் காண்டீபன்.
முத்தண்ணையின்ட பேக்கரியில் நிறுத்தி பாண் கேட்டனர்.. தம்பி ஒரு பெட்டில அடுக்கித்தாறன் கொண்டுபோங்கோ என்று முத்தண்ணை பாண்களை அடுக்கியும் அதுக்குமேல் பணிஸ்களை வைத்தும் கொடுத்தார். வாங்கிக்கொண்டு இவர்கள் சேர்ச் வாசலில் போய் நிற்க எதேட்சையாக துஸ்யந்தியும் வெளியில் வந்தாள்.
அந்தநாள் மாலையே..மீண்டும் மீண்டும் அந்த அக்ரோ தொகுதிக்குள்ளேயே செய்திகளை அனுப்பி அனுப்பிப்பார்த்துக்கொண்டிருந்தான் மாதவ். எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவனுக்கு பைத்தியமே பிடிக்கும்போல இருந்தது.
அவன் மனதில் மட்டும் அந்த நீல நிறத்தில் சுழன்றுகொண்டிருந்த அந்தக்கோளில் இருந்து பிசிறிப் பிசிறி வந்த சமிக்கை அலை மட்டும் திரும்பித் திரும்பி வந்துகொண்டிருந்தது.
புதிய நுட்பங்கள் பலவற்றையும் பிரயோகித்து பார்த்தான் எதற்கும் சாதகமான சமிக்கை தெரியவில்லை. இது பற்றி மேலும் அறியவேண்டும் என்றால் சீன ஆராட்சி மையத்துடனோ அல்லது அமெரிக்க மையங்களுடனோ தொடர்புகொள்ளவேண்டும்…ஆனால் அது கண்டிப்பாக ஆபத்தில்த்தான் முடியும். அதைவிட இப்படியே இருப்பது மேல் என நினைத்துக்கொண்டிருந்தான்.
தொடரும்...
3 comments:
எனக்கு விடயம் ஓரளவுக்கு புரிகின்றது இப்போ..கதையோட்டம் அருமையப்பா...வாழ்த்துக்கள்.
வித்தியாசமான நடை, வித்தியாசமான கற்பனை, வித்தியாசமான வலைப்பதிவுக்கு புதிய கதை. நன்றாக உள்ளது.
பாராட்டவேண்டியதை பாராட்டியே ஆகவேண்டும். நன்றாக உள்ளது நண்பரே. வாழ்த்துக்கள்.
Post a Comment