2001 செப்ரெம்பர் 11ஆம் நாள், நியூயோர்க்கின் “உலக வர்த்தக மையத்தின் மீது” அல்-ஹொய்தா இயக்கம் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களுடன், இந்த உலகம் மாறிவிட்டது என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ் அடிக்கடி கூறிக்கொண்டது சகிக்கமுடியாமல் இருந்தாலும் கூட அந்தக்கூற்றில் அணித்தரமான பல உண்மைகள் உள்ளதையும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.
அந்த நாளின் பின்னால் நடந்தவிடயங்கள் ஒவ்வொன்றையும் எண்ணிப்பாருங்கள். உலகம் இதுவரை கண்டிராத வித்தியாசமான யாருமே கணிக்காத நிகழ்வுகள் பல நடந்துவிட்டிருப்பதை காணலாம்.
குறிப்பாக இந்த தாக்குதல்களின் பின்னால் ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்கமும் “தேசிய பாதுகாப்பு” என்ற பதத்தை தூக்கிபிடித்து தமது பல தவறுகளை மறைத்ததையும், உலகின் பல உரிமைகளுக்காக போராடிய மக்கள் குழுக்கள், மக்கள் இயக்கங்களை பயங்கரவாத பட்டியலில் இலகுவாக இணைத்து அவற்றை ஒழித்து தம்மை நியாயப்படுத்திக்கொள்ளவும் உலகிலுள்ள அரசாங்கங்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்துவிட்டதையும் நாம் ஆராய்ந்துபார்க்கலாம்.
இந்த தாக்குதலின் பின்னர் அதன் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் இடம்பெற்ற தாக்குதல்கள் அக்கிரமங்களை சொல்லித்தான் விளங்கவைக்கவேண்டும் என்ற தேவை இல்லை. கிட்டத்தட்ட இரண்டு சகாப்தகாலம் ஈராக்கினை ஆண்ட ஒரு ஜனாதிபதியை அவர் நாட்டினுள்ளேயே அத்துமீறி நுளைந்து காரணங்கள் தேடிக்கண்டுபிடித்து தூக்கில்போட்ட மிக (அ)நாகரிகமான செயல்கள் எல்லாம் நடந்துமுடிந்தவிட்டன.
ஈராக்கினுன் நுளையும்போது அமெரிக்கா வைத்த குற்றச்சாட்டுக்கள், ஈராக்கில் பேரழிவுகளை விளைவிக்கும் ஆயுதங்கள் இருக்கின்றன, அல் -ஹொய்தா போன்ற அமைப்புக்களுக்கு ஈராக் ஆதரவாக உள்ளது, செப்ரெம்பர் 11 தாக்குதலுடன் ஈராக்கிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பவையே. ஆனால் இறுதியில் இந்தக்குற்றச்சாட்டுக்கள் எவையும் நிரூபிக்கப்படவும் இல்லை, அதற்கான ஒரு சிறு ஆதாரங்களும் இல்லாமல், ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹ_சைனை பிடித்து அவரை கொலை செய்ய பல காரணங்களைத்தேடி அதற்கு தாமே நீதிவழங்குவதாக அவருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றி 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தனது நாகரிகத்தின் உச்சத்தினை காட்டியது அமெரிக்கா.
இறுதியாக “எமது புலனாய்வுத்துறையின் தவறான தகவலால்த்தான் ஈராக் மீது நடவடிக்கை எடுக்கும்படியாகிவிட்டது” என சர்வசாதாரணமாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியால் சொல்லமுடிகின்றது என்றால், கையாலாகாத ஒரு அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை தேவையற்று இருப்பதும், உலக நாடுகள் அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பதும்தான் காரணம். இதுவே பின்னால் ஒரு இனத்தின்மீது பாரிய மனித படுகொலைகளை புரிந்துவிட்டு சில உலக நாட்டுத்தலைவர்கள் தம்மால்; அழிக்கப்படும் அந்த இனத்தின் மொழியிலேயே தைரியமாக ஐக்கிய நாடுகள் சபையில்பேச ஏதுவாக அமைந்துவிட்டது.
ஒரு அரசாங்கம், அந்த நாட்டு மக்களின் பொருளாதாரம், மருத்துவம், கல்வி, சுகாதாரம் என்பவற்றிற்கு வகை சொல்லும் முக்கிய பொறுப்பாளி என்பதில் இருந்து மேற்படி செப்ரெம்பர் 11, 2001இன் பின்னர் பல நாடுகள் களன்றுகொண்டு, தேசிய பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கை அமுல்ப்படுத்துவதே அரசாங்கத்தின் பணி, மற்றவைகளை பொதுமக்கள் தாங்களாகவே பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதுபோல பட்டும் படாமலும் பேசிவருவதையும் நாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும்.
எமக்கு தெரிந்த விடயங்களாக இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கைளை எடுத்துக்கொண்டால், பாரிய மனிதப்பேரவலம் ஒன்று அப்பட்டமாக நிகழ்ந்தபோதும் ஐக்கிய நாடுகள் சபை மௌனமாக இருந்ததையும், இலங்கை அரசாங்கம் கூட பல பிடிகளை உலக நாடுகளுக்கு கொடுத்திருந்தாலும் கூட எவரும் தட்டிக்கேட்கமுன்வரவில்லை என்பதையும், இந்தச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமது தேச வல்லாதிக்க மற்றும் மனதில் வஞ்சம் தீர்க்கும் பகையினை தீர்த்துக்கொள்ள சீனா, இந்தியா போன்ற நாடுகள் படு கேவலமாக நடந்துகொண்டவற்றையும் உலகமும், ஐக்கிய நாடுகள் சபையும் மௌனமாக பார்த்துக்கொண்டே இருந்தன.
இதில் மிக வேதனையான சம்பவங்கள் என்னவென்றால், கியூபா, பலஸ்தீனம், வெனிசூலா போன்ற நாடுகள் நியாயங்களை மறுதவலித்து செயற்பட்ட விதங்கள்தான்.
இவை அனைத்தினையும் ஒப்பிட்டு பார்க்கும்போது உலகத்தில் வேறு வெளித்தோன்றாத நிகழ்வு ஒன்று மெல்ல மெல்ல உள்ளுக்குள்ளே நிகழ்ந்துவருவது தெரியகின்றது. முதலாம் உலக யுத்ததின்போது கொல்லப்பட்டவர்களின் தொகையில் சிவிலியன்களின் எண்ணிக்கை 13 வீதம் என்றும் இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது அது 60 வீதத்திற்கும் அதிகமாக சிவிலியன்கள் இறந்ததை காட்டியதாகவும், அனால் இந்த இரண்டு மகா யுத்தங்களுக்கும் பின்னர் இடம்பெற்ற யுத்தங்களில் இலக்குகளே பொதுமக்கள் தான் எனவும் ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகின்றது.
இன்றைய உலக நாடுகளின் போக்கு, நியாமான போராட்டங்கள் கூட்டுச்சதியாக நசுக்கப்படல் என்பவை முக்கியமாக ஒன்றை வெளிக்காட்டுகின்றது “நியாங்களும் தர்மங்களும் இறந்துவிட்டன” என்பவற்றையினையே இவை காட்டிநிற்கின்றது. இத்தகய போக்கு முழு உலகத்திற்குமே பேராபத்தாகவே முடியுமே தவிர ஒருபோதும் சுபீட்சமான சூழ்நிலைகளை உருவாக்கப்போவதில்லை.
தமது வக்கிரகங்களை அப்படியே வெளிக்காட்டும் உலகத்தலைவர்கள், பேச்சுக்கள், கூட்டுறவுகள் என்பவற்றின்மேல் நம்பிக்கையில்லாமல் சதி முயற்சிகளையே முதன்மையாக கொண்டுள்ள சர்வதேச திட்டங்கள், ஒரு நாட்டிற்கு இன்னொரு நாடு குழிபறிக்க தருணம் பார்த்திருக்கும் பொழுதுகள், ஆண்டுகள் பல கடந்தாலும் சில வக்கிரகங்களை மனதில் வைத்திருந்து வஞ்சம் தீர்க்கும் செயற்பாடுகள் என்பன ஒரு போதும் மேல் நிலைப்பட்ட உலகத்தினை கட்டியெழுப்பப்போவதில்லை.
ஒவ்வொரு நாட்டு பயங்கரவாதத்தையும் கண்டிப்பாக அந்த நாடோ அல்லது, இன்னுமொரு நாடோதான் வளர்த்துவிடுகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.
பயங்கரவாதம், விடுதலைப்போராட்டம் என்பதை மேற்குறிப்பிட்ட செப்ரெம்பர் 11 தாக்குதலின்பின்னர் உலகம் பிரித்துப்பார்க்கத்தவறிவிட்டது உலகலாவிய ரீதியில் பல ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை உலகமே சேர்ந்து ஒடுக்கிவிட்ட நிலையினை எற்படுத்தியுள்ளது. ஆனால் என்றோ ஒருநாள் உலகம் தான் விட்டபிழைகளை உணரும் தருணம் வரும். ஆனால் காலம்கடந்து, கண் கெட்டபின்னர் சூரிய நமஸ்காரம் யாருக்கும் தேவைப்பட்டிருக்காது. ஆதற்காக சாம்பல்களிலும், சமாதிகளிலும் விழுந்தே உலகம் மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை உருவாகும்.
இப்போது போன்ற நிலையில், கையாலாகாத ஒரு ஐக்கிய நாடுகள் சபையினையும், தேச நலன்களுக்காக தர்மங்களை நீதிகளை ஒடுக்கும்போக்கு கொண்ட வெளியுறவு கொள்கைகளையும், சதிவலைகளையும் சர்வதேசமும், நாடுகளும் ஒருவருக்கொருவர் பின்னிக்கொண்டிருந்தால், மீண்டும் ஒரு ஹிட்டலர் வந்துதான் உலகத்தை திருந்தவேண்டிய நிலை கண்டிப்பாக உருவாகும்.
4 comments:
உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக உள்ளது.வாழ்த்துகள்
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குதுபோங்க...நியாங்கள் தூங்கி ரொம்ப நாளாச்சு...
தேவதூதர்கள், மற்றும் அரசியல் கதாநாயக கவர்ச்சிகள் எல்லாம் 2000ஆம் அண்டுடன் முடிந்விட்டது. பயங்கரவாதங்களை அழிக்கவேண்டும் என்று அழித்தொழிக்கும் அரசாங்கங்கள், அந்தப்பயங்கரவாதம் தோற்றம்பெற்றதற்கான காரணங்களை இனங்கண்டு அதை திருத்திக்கொள்வதாக தெரியவில்லையே...கொடுமையான உலகமப்பா நாம் வாழ்வது...
நல்ல கட்டுரை ஜனா வாழ்த்துக்கள்.
Post a Comment