Saturday, September 19, 2009

திருடர்கள் பல விதம்….


ஓவ்வொருவருக்குமே களவு கொடுத்த அனுபவங்கள், அல்லது களவுகொடுத்தவர்களின் கதைகள், அயல் வீடுகளில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவங்கள், என கண்டிப்பாக களவு பற்றிய சம்பவங்கள் மனதில் இருக்கும்.
சிறுகச்சிறுக பார்த்துப்பார்த்து, குருவி சேரிப்பதுபோல பணத்தை சேகரித்து வைத்திருக்கும்போது அதை கயவர்கள் கவர்ந்துசென்றால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதையும், வயிறு எப்படி பற்றி எரியும் என்பதையும் அனைவராலும் புரிந்துகொள்ளமுடியும்.
சில ஆயிரம் பெறுமதியான பணம் மற்றும் நகைகளுக்காக விலை மதிக்கமுடியாத உயிர்கள் காவு கொள்ளப்பட்ட சம்பவங்களும் உண்டு. அத்தோடு அப்போது ஆபத்தாக இருந்தாலும் கள்வர்களின் களவில் உள்ள நகைச்சுவைகளும்கூட அதன் பிறகு சிரிக்கவைத்த சம்பவங்களும் நிறைய உண்டு.
அந்த விதத்தில் நான் அனுபவித்த, நேரில் கண்ட, கேள்விப்பட்ட சில கள்வர்கள், மற்றும் களவு, கொள்ளைச்சம்பவங்களை நண்பர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைகின்றேன்.

01. 1988 ஆம் ஆண்டு கால கட்டங்கள், அப்போது என் வயது பத்து. இந்திய அமைதிப்படை என்ற பெயரில் என் மண்ணில் வானரக்கூட்டங்கள் நிறைந்திருந்த கால கட்டம். அவர்களின் ஆதரவுடன் அட்டூளியங்களும், களவு கொள்ளைகளும் தலைவிரித்தாடிய பயங்கரமான ஒரு கால கட்டம் அது.
அந்த நேரங்களில் பெரிதும் இராக்காலங்களில், கொள்ளைகள், களவுகள் என்பன அப்போது இந்தியப்படைகளுடன் சேர்ந்தியங்கிய சில துணை இராணுவ குழுக்களால் வெளிப்படையாகவே மேற்கொள்ளப்பட்டன. கூக்குரலிடும் வீட்டின் ஆபத்தை அறிந்து அயலவர்கள் அங்கு அவர்களுக்கு உதவியாக வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் அப்போதைய ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி இராணுவத்தினர் வீதிகளில் நிற்பார்கள். வீட்டை விட்டு வீதிக்கு வந்தால் சுடப்படுவோம் என்ற அச்சத்தின்காரணமாக எவரும் வீதிக்கு வரமாட்டார்கள் என்ற நிலை எற்பட்டிருந்தது.


இப்படியே தொடர் கொள்ளைகளையும், களவு போகும் வீட்டுக்காரர்களின் கூக்குரலினையும், சில வேளைகளில் அந்தக்கொள்ளையர்களின் துப்பாக்கிப்பிரயோகத்தையும், கள்வர்களுக்கு காவலாக நிற்கும் இந்திய அமைதி காக்கும் படைகளின் ஹிந்தி மொழிகளையும், நான் அப்போது அச்சத்துடன் பல நாட்களாக கேட்டிக்கின்றேன்.
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இந்த அநியாயங்கள் இடம்பெற்ற போது இதையும் தடுப்பதற்கு எனது சொந்த இடமான யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் திட்டமிட்டு செயற்பட்டனர். இந்த திட்டங்கள் வெற்றியடைந்து பல கொள்ளைகள் தடுக்கப்பட்டன.
அந்த திட்டங்கள் இவைதான், கள்வர்கள், கொள்ளையர்களின் நடமாட்டங்கள் தெரிவதாக உறுதிப்படுத்தும் சம்பவங்கள் ஏற்பட்டவுடன் அனைத்து மக்களையும் உசாரடையச்செய்யும் விதமாக தகரங்கள், சட்டி பானைகளை தட்டி ஒலியெழுப்புதல், ஒவ்வொரு வீட்டிலும் எழுப்பப்படும் அந்த ஒலி அந்த பிரதேசம் முழுவதும் ஒலித்து அனைவரையும் உசாரடையச்செய்யும். அத்தோடு பக்கத்துவீடுகள், பின், முன் வீடுகளுடன் தொடர்புகளை ஒவ்வொரு வீட்டினரும் பேணிவருவார்கள், குறிப்பிட்ட ஒரு வீட்டில்த்தான் கொள்ளையர்கள் புக முற்படுகின்றார்கள் என்று அறிந்தவுடன், வேலிகள், மதில்கள் ஊடாக வீடுகளைத்தாண்டி ஊர்மக்கள் குறிப்பிட்ட அந்த வீட்டினை அடைந்து கொள்ளை இடம்பெறாமல் தடுப்பது என்ற அந்த நடைமுறை முழு வெற்றி அளித்ததுடன் இந்திய இராணுவத்தினரையும் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு கொண்டுசென்றது.

02. இன்னும் ஒரு சம்பவம் மட்டக்களப்பில் நடந்ததாக என் உறவினர் ஒருவர் கூறியது கொஞ்சம் நகைச்சுவையான திருட்டுச்சம்பவம் இது. மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த திருடர்கள் கத்தி முனையில் கணவனை வைத்துவிட்டு, வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடியும் பெறுமதியான பணமோ, அல்லது நகைகளோ அவர்களுக்கு கிடைக்கவில்லையாம், எனவே கணவனை கத்திமுனையில் வைத்திருந்த திருடர்கள், எதையும் காட்டிக்கொள்ளாமல் பக்கத்து வீட்டிற்கு சென்று கணவருக்கு திடீர் இருதய நோய் வந்துவிட்டது அவசரமாக 5000 ரூபா தாருங்கள் என கடன்வாங்கிவந்து தரும்படி மனைவியை மிரட்டி தொடர்ந்தும் கணவரை கத்திமுனையில் வைத்திருந்து பக்கத்துவீட்டில் அந்தப்பெண் பணம் கடன்வாங்கி வந்து கொடுத்ததும் அங்கிருந்து தப்பித்து சென்றதாக கூறியிருந்தார்.


03. அடுத்து கடந்த மார்ச் மாதம் நான் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோது எனக்கு நடந்த சம்பவம். நீண்ட நாட்களின் பின்னர் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அங்கு எங்கு செல்வதென்றாலும் என் நண்பர்கள் தமது வேலைத்தள வேலைகள் முடிந்தபின்னர் வந்து என்னை காரிலோ, மோட்டார் வண்டியிலோ அழைத்து செல்வது வழமை. அன்று கிழமை நாள் என்பதனால் நண்பர்கள் வேலைத்தளத்திற்கு சென்றிருந்தமையால் ஓர் அலுவல் காரணமாக எனது புகுந்த ஊராகிய மானிப்பாயில் இருந்து சண்டிலிப்பாயிற்கு செல்லவேண்டி இருந்தமையினால் நான் பஸ்ஸில் செல்லவேண்டிய நிலை வந்தது. ரோசா ரக மினி பஸ்களே அதிகம் செல்வதனால் நேரத்தின் நிமித்தம் நான் மிக நெருக்கமாக பயணிகளை ஏற்றிவந்த அந்தவகை மினி பஸ் ஒன்றில் ஏறி பயணமானேன். காலைக் கீழே வைக்கக்கூட இடம் இருக்கவில்லை. ஒருவாறு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து இறங்கிவிட்டு, ஜீன்ஸ் பொக்கட்டை தட்டிப்பார்த்தால் எனது கைப்பேசி இலாபகமாக களவாடப்பட்டிருந்தது.
உடனடியாக அருகில் இருந்த தொலைத்தொடர்பகத்தில் இருந்து எனது இலகத்துடன் தொடர்புகொண்டால் ரிங்கிங் போய் பின்னர் நிறுத்தப்பட்டு. பின்னர் நிரந்தரமாகவே போன் நிறுத்தப்பட்டிருந்தது. அட அதில் என்ன பெரிய விடயம் என்றால் என்னை சூழநின்றவர்கள் முழுப்பேரும் பெண்கள் என்பதுதான்.

04. எனது நிறுவனத்தின் வேலை நிமித்தம் நான் கொள்ளுப்பிட்டியில் இருந்து பறக்கோட்டை செல்வதற்காக கொள்ளுப்பிட்டி சந்தியில் உள்ள, கோப்பியின் மணத்தை சுவாசித்தபடியே பஸ்ஸை பிடிக்கும் பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்தேன். அப்போது மிக நேர்த்தியாக உடையணிந்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர்போல். மிக அழகான உயரமான ஒரு நபர் என் அருகில் வந்து ஆங்கிலத்தில் உரையாடினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு நான் பதிலளித்துகொண்டிருந்தேன். இலக்கண பிழை எதுவும் இன்றி மிக நேர்தியான உச்சரிப்பும், பேசும்போது அவரது முகபாவனைகளும் அவரை மதிக்கும்படியாகவே இருந்தது. தாம் கண்டியில் அரசாங்க பணிமனை ஒன்றில் பணி புரிவதாகவும், இங்கு வந்ததும் தனது பேர்ஸ் பறிபோய்விட்டதாகவும், தனக்கு தேவைப்படுவது அங்கிருந்து புறக்கோட்டை செல்லவும், பின்னர் கண்டிக்கு செல்லும் வரையிலான பணமே எனவும், தனக்கு 180 ரூபா தந்தால் போதும் எனவும் அதை தான் எப்படியாவது உங்களுக்கு திருப்பி அனுப்புவேன் எனவும் தெரிவித்து முடிப்பதற்குள் நான் அவருக்கு 200 ரூபாவை நீட்டினேன். பல முறை நன்றி சொல்லி எனது பணிபுரியும் நிறுவனம், பற்றி கேட்டு அங்கு வந்து நான் கண்டிப்பாக அந்தப்பணத்தினை தருவேன் என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.
அதன் பின்னர் என் நண்பர்கள் பலர் தமக்கும் இதேபோல நடந்த அனுபவங்களைக்கூறினார்கள். பின்னர் ஒருநாள் பம்பலப்பிட்டியில் தான் அனுராதபுரத்தில் இருந்து வந்ததாக கூறிக்கொண்டு முன்னர் என்னை ஏமாற்றியதை மறந்துவிட்டு ஆங்கிலத்தில் மீண்டும் வந்துபேசினார் அந்த நாகரீக திருடன். என்ன செய்வது திருடன் பெரும்பான்மை இனமாச்சே பேசாமல்த்தான் போகணும்.

இப்படி நிறைய சம்பவங்கள் பலபேருக்கு இடம்பெற்றிருக்கும், கொள்ளைகள் போன்றவை அதில் உச்சம், ஆபத்துக்கள் நிறைந்தவை, வழிப்பறி கொள்ளை மூலம் வெள்ளவத்தையில் எனக்கு தெரிந்த பெண் ஒருவர் இறந்தும் உள்ளார். அதேபோல இன்னும் ஒரு கொள்ளைச்சம்பவத்தில் என் நண்பனின் தந்தையார் கால் நடக்கமுடியாத படி கால் அடித்து முறிக்கப்பட்டு சிறிதுகாலம் நடக்கமுடியாமல் இருந்தார்.
அதேபோல சில வீடுகளில் திருடர்கள், ஆறுதலாக வீட்டில் உள்ளவர்கள்; தூங்க முழுப்பொருட்களையும் களவாடிவிட்டு, அதேவீட்டில் தேனீரும் போட்டு குடித்துவிட்டு போன கதைகளும் உண்டு. எது எப்படியோ, தனது பொருள் ஒன்றை இழந்தவனுக்கு மட்டுமே அதன் வேதனை புரியும். ஒருபொருளை திருடிவிட்டு, திருடப்பட்டவரின் வயிற்றெரிச்சல், திட்டுக்களை வாங்கிக்கொண்டு அந்த திருடனாலும் தான் திருடிய பொருளை அனுபவிக்கமுடியாது என்பதும் உண்மை.
திருடனாய்ப்பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது தானே!

5 comments:

மனோண்மணி said...

நீங்கள் குறிப்பட்ட 88ஆம் ஆண்டு கால பயங்கர அனுபவங்கள், மிகக்கொடுமையானவை. மன்னிக்கமுடியாதவையும்கூட.

Unknown said...

வீட்டில் எந்த பொருளும் இல்லை என்றவுடன் பக்கத்து வீட்டில் கடன்வாங்கித்தா...என்ற கள்வர்களின் களவு விழுந்து விழுந்து சிரிக்க வைத்ததது.

Unknown said...

அடடா..புறக்கோட்டையில் வைத்து தான் கதிர்காமம் போகவேண்டும் என்று என்னையும் ஒருவர் இளித்தவாயன் ஆக்கினார். அப்ப இங்க நிறையப்பேருக்கு இந்த அனுபவங்கள் இருக்கபோல..எப்படி எல்லாம் திருடலாம், ஏமாற்றலாம் என உக்காந்திருந்து யோசிப்பாங்க போல

Pradeep said...

எந்தக்காலத்திலும் திருடர்களின் கைவரிசை ஓயாது.. ஒன்றை யோசித்துப்பாருங்கள், யுத்தத்திற்கு பெருமளவு செலவு செய்து, வேலைவாய்ப்புக்களை இல்லாது செய்து. மக்களின் வாழ்க்கைச்சுமையினை தாங்கமுடியாத அளவுக்கு உயர்த்தினால் களவுகள், கொள்ளைகள் என்பன ஏற்படும், பார்க்கப்போனால் உண்மையான கயவர்கள், கள்வர்கள், கொள்ளைக்காரர்கள், அரசாங்கமும், அதை நிர்வகிப்பவர்களுமே.

Anonymous said...

நீங்கள் குறிப்பிட்ட 88-89 காலங்கள் கறுத்தநாட்களாகவே எனக்கு நான் கருதும் நாட்கள். எத்தனை அக்கிரமங்களை அந்த மண்ணில் இந்திய படைகள் செய்திருந்தன. இன்றுவரை ஈழத்தமிழர்களிடம் அதற்காக மன்னிப்புக்கூட கேட்கவில்லை. மாறாக மீண்டும் மீண்டும் அவர்களின் ஆத்திரத்தையே சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர் அவர்கள். நீங்கள் இறுதியாக சொன்ன வயிறெரிந்த திட்டுக்கள் கள்வர்களுக்கு மட்டும் அல்ல இவர்களையும் ஒருநாள் பழிகொள்ளும்.

LinkWithin

Related Posts with Thumbnails