மிகப்பிரமாண்டமாக அதிக பொருட் செலவுகளை கொண்டு தயாரிக்கப்படும் வர்த்தக படங்களைவிட ஒரு சிறிய உணர்வோட்டத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் அதிசயிக்கவைக்கும் கதைகள் கூட மக்களின் மனதில் நிலைத்துநின்று வெற்றியினை இலகுவாக அடைந்துவிடுவதை நாம் பார்த்துள்ளோம்.
குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து 80களின் மையப்பகுதிகளில் இருந்து பல தரமான ஈரானிய, சீன திரைப்படங்கள் வெளிவந்து பார்ப்பவர்களின் உணர்வுகளை உறையவைத்துள்ளன.
இந்தப்பாதையில் தற்போது தமிழும் வர தயாராக இருப்பதை “பசங்க” திரைப்படம் உணர்த்தியுள்ளதாலும், ஈரானிய, சீன குழந்தைகள் திரைப்படத்தின் போக்கில் இருந்து மாறுபட்டு தமிழ்த்திரைப்பட நெடியில் இருந்து வெளிவரவில்லை என்றே கூறவேண்டும்.
பொதுவாகவே இன்று இளைஞர்களாகவும், முதியவர்களாகவும் இருக்கும் ஒவ்வொருவருமே, குழந்தைப்பருவத்தில் இருந்தவர்களே, அந்தப்பருவத்தின் சுகங்கள் மீண்டும் கிடைக்காத ஏக்கத்தில் தகிப்பவர்களே. எனவே குழந்தைகளின் உணர்கள், அவர்களின் எண்ணங்களின் வெளிப்பாடுகள் என்பவற்றை ஆழமாக உணர்வோடு ஊடுருவிப்பார்க்கும் திரைப்படங்கள், பார்ப்பவர்களை எழிதில் உறையவைத்து அவர்களின் மனங்களில் நின்றுவிடுகின்றன.
உதாராணங்களாக இத்தகய திரைப்படங்கக்களுக்காகவே எனது முன்னைய ஒரு பதிவில் (http://janavin.blogspot.com/2009/07/blog-post_13.html) விரிவாக சுட்டிக்காட்டியிருந்த, த பாதர், கலர் ஒவ் பரடைஸ், சில்ரன்ஸ் ஒவ் ஹவின் போன்ற திரைப்படங்களைக்கூறலாம்.
அந்த வகையில் சிறுவன் ஒருவனை மையப்படுத்தி அவனுடன் பாசம்காட்டும் அதிசய நாய் ஒன்றின் கதையே சீ.ஜே.7 திரைப்படத்தின் கதையாகும். சென்றவாரம் குமுதம் இதழிலும் “அரசு” அவர்கள் தமது கேள்வி பதில் பகுதியில் இந்த திரைப்படம் பற்றி குறிப்பட்டிருந்ததும், ஏதேட்சையாக இந்த திரைப்படத்தின் டி.வி.டி எனது கண்ணில் பட்டதும் இந்த பதிவினையே உருவாக்கியுள்ளது என்பதை கூறிக்கொள்கின்றேன்.
கொலம்பியா பிக்ஸர்ஸ் ஏசியா, பீஜிங் பிலிம்ஸ் ஸ்ரூடியோ என்பவற்றின் கூட்டுத்தயாரிப்பில், வோய் ஷிங் ரென்னின் நெறியாள்கையில் உருவாகி, 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட திரைப்படம் இதுவாகும்.
சரி.. இனி திரைப்படத்தின் கதைக்குவருவோம், கட்டிடம் கட்டும்பணியில் தினக்கூலியாக வேலை பார்க்கும் “ரீ” என்ற ஏழையின் ஒரே ஒரு மகனே இந்த கதையின் நாயகன் டிக்கி. ஆறுவயதுடைய இவன் தாய் இல்லாத பிள்ளை என்ற காரணத்தினால் அந்த ஏழைத்தந்தையால் மிகவும் செல்லமாக வளர்க்கப்படுகின்றான். அதனாலேயே வறுமைக்கோட்டிற்கு மிக அடியில் இருந்தாலும்கூட தனது மகனை பணம் படைத்தவர்கள் கற்கும் தனியார் பாடசாலை ஒன்றில் கற்கவைக்கின்றார். அழுக்கான உடைகள், கிழிந்த சப்பாத்துக்கள், அழுக்கான காலுறைகளுடன் பாடசாலை வரும் டிக்கியை வகுப்பாசிரியர் மிஸ்ரர். சாஓ தீண்டத்தகாத ஒருவனாகவே நடத்துகின்றார். அவன் பக்கத்தில் வருவதையே அவர் அனுமதிப்பது இல்லை. ஒரு கட்டத்தில் கைதவறி விழும் அவரது பாக்கர் பேனாவை மரியாதையாக எடுத்துக்கொடுக்கும் டிக்கியை, திட்டிவிட்டு. விழுந்த இடத்திலேயே பேனாவை போடும்படி கூறிவிட்டு, பேனாவை தனது கைக்குட்டையால் எடுத்து அவன்மேல் உள்ள அருவருப்பினை காட்டி நம்மை அருவருக்க வைக்கின்றார் அந்த ஆசிரியர்.
ஆனால் அந்தப்பாடசாலையில் ஆசிரியர் கேட்கும் வசந்தம் பற்றிய ஒரு கேள்விக்கு “வசந்தங்கள் வழமையானவைதான், ஆனால் ஒவ்வொரு வசந்தங்களிலும் இடம்பெறும் சம்பவங்கள் வேறுபட்டவை” என்று அவன் தெரிவிக்கும் பதிலில் இருந்தும், உடல் பருமன் காரணமாக அனைத்து மாணவர்களாலும் கிண்டல் செய்யப்பட்டு, ஒதுக்கப்படும் மஹ்கி என்ற உடல் பருத்த சக மாணவிக்காக டிக்கி வாதாடுவதில் இருந்தும், அவள்மேல் கருணை காட்டுவதில் இருந்தும் அவனது குண இயல்புகள் உணர்த்தப்படுகின்றது.
அவனுக்கு வில்லன்களாக அவனது வகுப்பைச்சேர்ந்த ஜோன்னி குழுவினர் எப்போதும் அவனை தாக்குவதிலும், அவனை கிண்டலடித்து ஒதுக்குவதிலுமே குறியாக இருக்கின்றனர். அவனுக்கு அந்தப்பாடசாலையில் இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் மிஸ்.யூஆன் என்ற அழகிய ஆசிரியைதான்.
பணக்கார சிறுவனான ஜோன்னி பாடசாலைக்கு சி.ஜே.2 என அழைக்கப்படும் ரோபோ ரக நாய் ஒன்றை கொண்டுவந்து தன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிக்கின்றான். அதை ஒதுங்கியிருந்து, ஆவலுடனும் ஆசையுடனும், கண்களில் ஏக்கத்துடனும் பாhர்க்கின்றான் டிக்கி. அதைக்கவனித்த ஜோன்னி குழுவினர் அவனை விரட்டி அடிக்கின்றனர். அதன் பின்னர் தன் தந்தையுடன் வீதியோரம் அமர்ந்து தொலைக்காட்சி விற்பனை நிலையத்தின் கண்ணாடிச்சாளரத்தினூடாக தொலைக்காட்சியை பார்த்து இரசிக்கின்றான் டிக்கி. திடீரென அருகில் இருக்கும் சுப்பர் மார்க்கட் ஒன்றினுள் நுளைகின்றான். அங்கே அந்த ரோபோ ரக பொம்மையை பார்த்து அதை ஆசையுடன் எடுத்து பார்க்கின்றான். உள்ளே நுளைந்த தந்தை அவனை வெளியே வருமாறு அழைக்கின்றார். அனால் டிக்கி அந்த நாய் ரோபோ பொம்மை வேண்டும் என அடம்பிடிக்கின்றான். தமது நினைமையினை புரியாமலா நீ, இவ்வாறு நடக்கின்றாய், அதன் விலை என்ன தெரியுமா? என தந்தை அதட்டுகின்றார். இருப்பினும் அவன் அந்த பொம்மை வேண்டும் என தொடர்ந்தும் அடம்பிடிக்கின்றான். இறுதியில் தந்தை அவனுக்கு அடிக்கின்றார். அங்கிருந்து ஓடுகின்றான் டிக்கி. வழியில் அவனது ஆசிரியை மிஸ் யூஆனை கண்டு அவரைக்கட்டிப்பிடித்துக்கொண்டு அழுகின்றான் டிக்கி.
பழைய பொருட்கள் கொட்டப்படும் இடத்தில் இருந்து வீட்டிற்கு ஒரு மின்விசிறியை கொண்டு வருகின்றார் டிக்கியின் தந்தை. ஆவலுடன் இருவரும் அதை இயக்க முற்படுகின்றனர் ஆனால் மின் விசிறி சுழல ஆரம்பித்தவுடனேயே உள்ளே மின் ஒழுக்கு ஏற்பட்ட காரணத்தினால் சுற்றாமல் நின்விடுகின்றது. சோர்வுற்றவர்களாக இருவரும் தூங்குகின்றனர்.
மறுநாளும் அதே பழைய பொருட்கள் கொட்டும் இடத்தில் வந்து பொருட்களை தேடுகின்றார் டிக்கியின் தந்தை. அப்போது அங்கே இருந்து “பறக்கும் தட்டு” ஒன்று மேலெழுந்து செல்கின்றது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவராக அங்கே நிற்கும் அவரின் கண் எதிரில் பச்சை நிறத்தில் பந்து போன்ற ஒரு பொருள் அந்த பறக்கும் தட்டில் இருந்து விழுந்து கிடப்பது தெரிகின்றது. அதை ஒரு விளையாட்டுப்பொருளாக தனது மகனுக்கு கொண்டுவந்து கொடுகின்றார் அவர்.
ஒரு கட்டத்தில் அந்தப்பந்தில் இருந்து நாய் ஒன்று உருவாகின்றது. அந்த நாய் உருவாகும்போது தான் பிரபஞ்சத்தில் மிதப்பதுபோன்றும், பிரபஞ்சத்தின் சக்தி அந்த நாய்க்கு உண்டு எனவும் டிக்கி அறிந்துகொள்கின்றான். அந்த நாய்க் குட்டியை யாருடைய கண்களிலுல் படாதபடி அவன் பாதுகாத்துக்கொள்கின்றான். அதற்கு சீ.ஜே.7 என்று பெயர் சூட்டுகின்றான். வழமையாக அழுகிப்போன அப்பிள் பழங்களை வெட்டி மிஞ்சும் சிறுதுண்டு நல்ல பகுதியை சாப்பிடும் அவன், பழத்தை எடுக்கும்போது அது தவறி கீழே விழுகின்றது, கீழே விழுந்த அந்தப்பழத்தினை சீ.ஜே.7 பார்த்ததும் ஒரு ஒளிதோன்றி மறைய அந்த அழுகிய பழம், புத்தம் புதிய பழமாக மாறுகின்றது. அன்று இரவே தந்தையும் மகனும் புழுக்கத்தில் படுத்திருப்பதை பார்க்கும் சீ.ஜே.7 தனது சக்தியால் மின் ஒழுக்கு ஏற்பட்டு தீர்ந்துபோயுள்ள மின் விசிறியின் வயர்களை சீரமைக்கின்றது உடனே மின்விசிறி சுற்றுகின்றது. அதாவது இறந்த கலங்களை மீண்டும் புதுப்பிக்கும் சக்தி இந்த நாய்க்குட்டிக்கு உள்ளது என்பது பார்வையாளர்களான எமக்கு புரிகின்றது.
ஆனால் அதனிடம் எதையும் செய்யும் சக்தி உள்ளது என்று நம்பும் டிக்கி, தான் பரீட்சை எழுதும் போது சீ.ஜே.7 தயாரித்துக்கொடுத்த கண்ணாடியை அணிந்துகொண்டு பரீட்சை எழுதுவதாகவும், சீ.ஜே.7 தயாரித்துக்கொடுத்த ஒரு சப்பாத்தினை அணிந்து தான் ஒரு சுப்பர் ஹீரோ ஆவதாகவும் கனவு காண்கின்றான். அப்படியே நடக்கவேண்டும் என எண்ணுகின்றான். ஆனால் நிஜத்தில் எல்லாம் தலைகீழாகவே நடக்கின்றன. தான் எதிர்பார்த்த சக்தி சீ.ஜே.7 க்கு இல்லை என்றும் ஆத்திரத்துடன் அந்த நாய்க்குட்டியை அடித்து, சித்திரவதை செய்கின்றான் டிக்கி. ஆத்திரத்தின் உச்சியில் அதை ஒரு பையில்போட்டு குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வீதியில் நடக்கின்றான். அப்போதான் சுய நினைவுக்கு வந்தவனாக தான் கொஞ்சம் மோசமாக நடந்துவிட்டதாக உணரும் அவன் ஓடிச்சென்று குப்பை தொட்டியை பார்க்கின்றான் குப்பைத்தொட்டி காலியாக இருந்தது. தூரத்தில் குப்பைகள் சேகரிக்கும் வாகனம் சென்றுகொண்டிருந்தது.
சோகத்துடன் வீட்டிற்குவரும் அவன். வாசலில் நின்று அழுகின்றான். கதவை திறந்து அவனை உள்ளே இழுத்துச்செல்லும் அவனது தந்தை. உனக்கு ஆச்சரியமான பரிசு ஒன்று உள்ளது என சொல்லி, சீ.ஜே.7ஐ காட்டுகின்றார். அந்த நாய்க்குட்டியும், அவன்மேல் செல்லமாக தாவி தனது அன்பினை அவனுக்கு வெளிப்படுத்துகின்றது. அடுத்து நடந்துமுடிந்த பரீட்சையில் 00 மதிப்பெண்ணை பெற்ற அவன் அதை 100 என ஆக்கி தந்தைக்கு கொடுத்துவிட்டு போகின்றான். ஆனால் அவனது தந்தை அதை நம்பி தான் தொழில் புரியும் இடத்தில் தொழிலாளர்களிடமும், தனது முதலாளியான ஜொன்னியின் தந்தையிடமும் காட்டுகின்றார். ஆனால் முதலாளி உனது மகன் ஒரு ஏமாற்றுக்காரன், எனது மகனுக்குத்தான் அந்த வகுப்பில் முதல் புள்ளிகள் அவனுக்கே 100 வரவில்லை எனத் தெரிவிக்கின்றார். ஆத்திரமும் அவமானமும் உள்ளவராக வீடுவரும் தந்தை டிக்கியை அழைத்து விடயத்தை கேட்கின்றார். தான் புள்ளிகளில் மாற்றம் செய்ததை ஒத்துக்கொண்ட டிக்கி. தந்தையுடன் கோபித்தக்கொண்டு எனக்கு நீங்கள் தேவையில்லை என்று அழுதுகொண்டே ஓடுகின்றான்.
பின்னர் நன்றாக படித்து 65 புள்ளிகளை பெற்றுவிட்டு தந்தைக்கு அதைக்காட்ட ஓடிவருகின்றான் டிக்கி. தொழில் புரியும் இடத்தில், மேல் தளத்தில் இருந்து அசம்பாவிதம் ஒன்றினால் கீழே விழுந்து பலத்த காயத்திற்கு உள்ளாகின்றார் டிக்கியின் தந்தை. மரணத்துடன் போராடும் அவரை அவரது முதலாளி வைத்தியசாலையில் அனுமதித்திருக்கின்றார். டிக்கிக்கு எதுவும் புரியாமல் விழிக்கின்றான். ஆனால் அவனது அன்பு ஆசிரியை யூஆன் அவனுக்கு விடயத்தை புரியவைத்து அவனது வீட்டிற்கு அழைத்து செல்கின்றாள். அவளை தன்னை தனியாக விடும்படி கூறி அழும் டிக்கி, கதவைப்பூட்டிக்கொண்டு தனது தந்தையை நினைத்து அழுகின்றான். தனக்கு தந்தை தேவை என்பதையும், தனக்காக தனது தந்தைபடும் கஷ்டங்களையும் எண்ணி அழுகின்றான்.
அதேநேரம் தந்தையின் பையில் இருக்கும் சீ.ஜே.7 எழுந்து அவரது நிலையினை உணர்ந்து, தனது சக்தியால் அவரது கலங்களை புதுப்பித்து அவரை காப்பாற்ற முயற்சிக்கின்றது. அனால் இதற்கு தனது சக்தி முழுவதும் தேவை என்பதை உணர்ந்து, தனது உயிரின் சக்திகள் அனைத்தினையும் கொடுத்து அவரை காப்பாற்றுக்கின்றது.
மறுநாள் கண்விழிக்கும் டிக்கிக்கு அருகில் அவனது தந்தை படுத்திருக்கின்றார் சந்தோச மிகுதியால் அவரை கட்டிப்பிடித்து அழும் டிக்கி, தந்தையிடம் மன்னிப்பு கேட்டு, அவர் இல்லாமல் தன்னால் வாழமுடியாது என்று தனது அன்பை தெரிவிக்கின்றான். இறக்கும் தறுவாயில் இதை ஆனந்தக்கண்ணீருடன் பார்க்கின்றது சீ.ஜே.7. தனது எஜமானர்கள் தன்னை பார்க்கின்றனர் தனது அன்பினை அவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும் என துள்ளி எழுந்து அவர்களிடம் ஓட முற்படுகின்றது அது. ஆனால் முடியவில்லை. டிக்கியை பார்த்தவாறே தனது இறுதி பொழுதுகளை நெருங்கி மரணிக்கின்றது. அதன்பின்னர் சீ.ஜே.7 ஒரு பொம்மையாக மாறிவிடுகின்றது. அதை தனது கழுத்தில் அணிந்துகொண்டே அதன் நினைவுடனேயே திரிகின்றான் டிக்கி. ஏதாவது அதிசயம் நிகழ்ந்து தன் சீ.ஜே.7 தன்னிடம் திரும்பாதா? என ஆவலுடன் மைதானத்தில் படுத்திருக்கின்றான். அவனுக்கு நேரே பறக்கும் தட்டு ஒன்று பறந்து சற்றுத்தள்ளி இறங்குகின்றது. ஓடிச்சென்று ஆவலுடன் பார்க்கின்றான். அங்கே அவனும் சீ.ஜே.7ம் விருப்பத்துடன் ஆடும் பொனியம் இசைப்பாடலுடன் சீ.ஜே.7 முன்னால் ஓடிவர அதன்பின்னால் நிறைய அதை ஒத்த நாய்க்குட்டிகள் ஓடிவருகின்றன. இந்தக்காட்சியுடன் திரைப்படம் முடிவடைகின்றது.
இது உண்மையான நிகழ்வா அல்லது அவனது நினைவா? எனத் தெரியாமலேயே அந்த திரைப்படம் முற்றுப்பெறுகின்றது. ஆனால் பார்வையாளர்கள் நிச்சயம் டிக்கி சீ.ஜே.7ஐ மறுபடியும் அடைந்துவிட்டான் என்றே எண்ணுவார்கள்.
6 comments:
Good, keep it up mate!
யப்பா....அருமையப்பா. படத்தை முழுமையாக பார்த்த திருப்தி கிடைத்தது. படத்தை விசுவலாக பார்க்கவேண்டும் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது. அருமையான எழுத்து நடை. பாராட்டுக்கள்.
நல்லதொரு பதிவு. வேற்றுக்கிரகத்தை நேசர்ந்ததாக இருந்தாலும் நாய் எப்போதும் நன்றியுள்ளதாகவே இருக்கின்றது.
தங்கள் எழுத்துநடை நன்றாக உள்ளது. உண்மையில் சீன ஈரானிய திரைப்படங்களின் போக்கு உயர்ந்துகொண்டு செல்கின்றது என்பது உண்மை. இந்திய சினிமா பற்றி ????? வேண்டாமே...அதைப்பற்றி பேசுவதே என்னைப்பொறுத்தவரையில் வேஸ்ட்.
சென்ற மாதம் இந்தப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.. அந்த சிறுவன் கிடைத்த சக்திகளை உபயோகிப்பதாக கனவு காணுவது யதார்தம்
Post a Comment