பொதுவாகவே நான் எதனையும் தர்க்க ரீதியாக சிந்திக்கும் ப(வ)ழக்கம் உடையவன். சில வெளிப்படை உண்மைகளைக்கூட தர்க்க ரீதியாக சிந்தித்து, பார்க்கும் குணம் எனக்கு உண்டு. எனது தர்க்க ரீதியான சிந்தனைகளின்போது கூட என்னை மிஞ்சி, எப்போதும் ஜெயித்து நிற்பது இசை என்னும் அமிர்தம் மட்டுமே. இசை மட்டும்தான் தர்க்கங்களையும், இந்த உலகில் என்னென்ன விதிகள் உள்ளதோ அத்தனையினையும் தகர்தெறிற்து கரையாத நெஞ்சத்தையும் கரைக்கும் சக்தி கொண்டது என்பதை நான் பல இடங்களில் கண்டுள்ளேன், அனுபவித்தும் உள்ளேன்.
எந்த துறையில் விமர்சனங்களை எழுதவும் நான் தயார். நெஞ்சை நிமிர்த்தி பேரிடி விழுந்தாலும், உண்மைகளையும் உணர்வுகளையும் வெளிப்படையாக எழுத்த எனக்கு எந்த தடங்கலும் இல்லை, அச்சமும் இல்லை.
ஆனால் நல்ல இசையின் விமர்சனத்தை மட்டும் என்னால் எழுதவே முடியாது.
அந்த இசையில் கரைந்து, கண்ணீர் சிந்தி, இருக்கும் இடம்தெரியாமல் ஒன்றிப்போபவன் நான், இந்த உணர்வை இந்த இசை நன்றாக இருக்கின்றது என்ற ஒற்றைச்சொல்லில் சொல்லிவிட முடியுமா என்ன?
என் ஏழு வயதுமுதல் கர்நாடக சங்கீதத்தை முறையாக கற்றவன் என்ற ரீதியில், இசைகளில் முதலில் என்னை கவர்ந்தவை கர்நாடக சங்கீத உருப்படிகளே.
அதன் பின்னர் இந்துஸ்தானி, கஷல் இசைகள் பிடிக்கும்.
இசையினை இரசிக்காதவர்கள் என்று எவருமே இருந்ததில்லை, இருக்கின்றதும் இல்லை, இருக்கப்போவதும் இல்லை. இசை என்பது மனங்களை நெகிழச்செய்யவும், மனதுகளின் சந்தோசங்களை ஏற்படச்செய்யவும், மனதுக்கு மருந்து தடவும் மார்க்கமாகவும் உள்ளது.
இசையினை கொண்டு “மியூசிக் தெரபி” என்ன பெயரில் புகழ்பெற்ற மருத்துவச்சிகிற்சையே உள்ளது. மன அழுத்தம் என்னும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிகிற்சைமூலமே நிவாரம் பெற்றுத்தரப்படுகின்றது.
இசையினைக்கேட்பது என்பது வெறுமனே பொழுதுபோக்கு என்று மட்டும் நினைத்துக்கொள்ளாதீர்கள், இன்பமான, அருமையான ஒரு இசையினை நீங்கள் இலகித்துக்கேட்டுக்கொண்டிருக்கும்போதே உங்கள் ஒவ்வொரு செல்லும் புத்துயிர் பெறுவதாக விஞ்ஞானம் சொல்லுகின்றது.
நெடுந்தூரப்பயணங்களிலும், தனிமை வாட்டும் இராக்காலங்களிலும், உங்களுடன் கூட இருந்து தோழ்கொடுக்கும் இசையின் சுகத்தில் இலகித்திருக்கின்றீர்களா?
வாசிக்கும்போதே மனதை குழையும் கவிதை வரிகள் தேர்ந்த இசையாகி ஒலிக்கும்போது அது இன்னும் பொலிவுபெற்று, உங்கள் நெஞ்சத்தை கரைத்த சுவையினை அனுபவித்துள்ளீர்களா?
அற்புதங்கள் அவை. நான் கடவுள் மறுப்பு கொள்கை உடையவன்தான், இருந்தபோதிலும், புள்ளாங்குழல் கொடுத்த மூங்கில்களே, என்ற பாடலிலும், ஜெனனி ஜெனனி ஜெயகம் நீ என்ற கீதத்திலும் இன்றும் அந்த இசை என்னும் அமிர்தத்திற்காக கரைந்துபோகும் சந்தர்ப்பங்கள் உண்டு. இசைதான் இறைவன், இசைதான் அத்தனையும், இசையினை மிஞ்சி எதுவும் இல்லை என்று சொல்லுங்கள் மறுபேச்சு பேசாமல் இசை என்னும் இறைவனை முழுமனதுடன் ஏற்றுக்கொள்கின்றன். அதைவிடுத்து இயற்கை தந்த அற்புதமான இந்த இசையினையும் கைப்பற்றிக்கொண்டு இறைவனின் வடிவங்களில் இசையும் ஒன்று என்றீர்களானால். அடப்பாவிகளா இசையினை தயவுசெய்து விட்டுவிடுங்கடா என்றுதான் கூறுவேன்.
மனதின் அழியாத பல முடிச்சுக்களை அவிழ்த்துவிட இசையினால்த்தான் முடியும், ஏன் கடவுள்கள் என்று விழுந்துகும்பிடும் அனைவருக்கும், அந்த கடவுள்கள் செய்யாத பல நன்மைகளை ஒரு கணப்பொழுதில் நல்ல இசை செய்துவிடும்.
நாசாவின் அத்தனை மூளை பிழியப்படும் பணிகளின் இடை நடுவிலும் பெரிய விஞ்ஞானிகள் அமைதியான இசையினை கேட்கவேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனராம், மேலை நாடுகளில், ஸொவ்ட் வெயார் நிறுவனங்களில் வேலை நேரங்களில்க்கூட பணியாளர்கள் இசையினை கேட்க அனுமதிகப்படுகின்றனர்.
இப்படி இருக்கும்போது வானொலி டி.ஜே.க்கள், மியூசிக் ஜொக்கிகள், உங்கள் பாணியில் வானொலி அறிவிப்பாளர்களாக இருப்பவர்கள் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள். ஆனால் அவர்கள் அதை அறிந்து உயிரோட்டமான அந்த இசையினை உணர்கின்றார்களா? தங்கள் மேதாவித்தனங்களைக்காட்ட, அடிக்கும் லூட்டிகளிலேயே இசையினை இரசிக்கவந்தவரை வானொலியினை நிறுத்திவிட்டு போகச்செய்வதாக உள்ளது இன்றைய அறிவிப்பாளர்களது நிலை.
இன்று கர்நாடாக சங்கீதக் கச்சேரிகளில் தமிழிசைப்பாடல்களையும், அதிகமாக பாட பாடகர்கள் முன்வருவது பாராட்டப்படவேண்டிய ஒன்றே. அதேபோல தமிழுக்கே உரிய நாட்டார் பாடல்கள், கும்மிப்பாடல்கள், கிராமிய மணம் செமிழும், கிராமிய இசைகள் ஒரு சில திரைப்பட இசையமைப்பாளர்களால் திரைப்படங்களில் கொண்டுவரப்படுவதும் நல்லவிடயம்தான்.
இயற்கை தந்த பெரும் கொடைகளில் ஒன்று இசையே, எம் தமிழர்களின் பண்பாட்டில், தொட்டிலில் தாலாட்டு முதல் பாடையில் ஒப்பாரிவரை தமிழர்களது வாழ்வில் அவர்களுடன் தொடர்ந்து பயணப்படுவது இசை.
மனதை மலரச்செய்யும் மந்திரச்சாவி எவரிடமும் இல்லை, அது இயற்கையிடம்தான் இசையாக உள்ளது. அந்த மனதுமலரச் செய்யும் மந்திரச்சாவி உள்ளே செல்லும் வழி எம் காதுகளே. என்னைப்பொறுத்தவரை இயற்கை இசையினை தந்துள்ளதால் ஐம்பொறிகளிலும் முதன்மையானது காதுகளே என்பேன்.
இசையாலே வந்தோம், இசையுடன் வாழ்கின்றோம், இசையோடு போவாம்…
10 comments:
இசையால் வசமாகா இதயம் எது? அடுத்த வசனத்தை சொன்னால் உங்களுக்கு பிடிக்காதே தலைவா! என்றாலும் இசையினை இறைவன் என சொன்ன உங்களுக்கு பாராட்டுக்கள்.
அருமை. உங்கள் ஆதங்கமும் புரிகிறது.. நீங்கள் சொன்னது போல கர்நாடக சங்கீதத்தில் தமிழிசை பாடல்கள் இப்போது பாடபடுகின்றன். மகிழ்ச்சியே..
அருணா சாய்ராம் நிறைய பாடுவார்.
வரும சங்கீத சீசன் உங்களுக்கு விருந்தாக இருக்கும்..
Don't miss it..
மனிதனின் அனைத்து நிலைகளிலும் கூட வருவது இசையே
//நெடுந்தூரப்பயணங்களிலும், தனிமை வாட்டும் இராக்காலங்களிலும், உங்களுடன் கூட இருந்து தோழ்கொடுக்கும் இசையின் சுகத்தில் இலகித்திருக்கின்றீர்களா?//
நெடுந்தொலைவிலுள்ள - சுவிஸ்நாட்டில் தனிமையில் எந்நேரமும் வாழும் நான் இலங்கையிலிருந்து கொண்டு வந்த ஒரு இசைத் தொகுப்பையும்,
இங்குள்ள முருகன் கோவில் பாடல்களையும்( Hemambika, Unnikrishnan, Anuradha Sriram, Krishnaraj, Saam, Malahi, Manicka Vinayagam, Roshini பாடியிருக்கிறார்கள்)
தற்போது சபரிமலை விரதம் அனுட்டிப்பதால் ஐயப்பன் மீது கே.ஜே.ஜே பாடிய பாடல்களையும்தான் கேட்டபடி இருக்கிறேன்!
இதைவிட இளையராஜாவின் திருவாசகம் -ஜனனி பாடல்,
சீர்காழி, கே.பி.சுந்தராம்பாள், பித்துக்குளி முருகதாஸ், பெங்களுர் ரமணியம்மா, சூலமங்கலம் சகோதரிகள் போன்றோரது பாடல்களையும் கேட்பேன்!
இசைத் தொகுப்பில் நாதஸ்வரமும் -வயலின் - saxophone - வீணை - வேய்ங்குழலும் ரொம்பப் பிடிக்கும்!
(தோழ் - தோள் என்று வரணும்!)
பசியை தீர்க்கும் இசை இங்கு உண்டோ இருந்தால் அகதிமுகாமுக்கு அனுபிவைக்கவும்
// சயந்தன்:அடுத்த வசனத்தை சொன்னால் உங்களுக்கு பிடிக்காதே தலைவா! //
அடப்போங்கப்பா! ஏதோ நான் கடவுள் இல்லை என்று சொல்வதுபோலல்லவா, நினைக்கின்றீர்கள். கடவுள் இல்லை என்று நான் சொல்லவரவில்லை. அவர் இருந்தால் நல்லா இருக்கும் என்றே நானும் சொல்ல வருகின்றேன்.
//butterfly Surya: வரும சங்கீத சீசன் உங்களுக்கு விருந்தாக இருக்கும்..
Don't miss it..//
Yes Friend.. I never Miss
//கிறுக்கல் கிறுக்கன் :மனிதனின் அனைத்து நிலைகளிலும் கூட வருவது இசையே//
உண்மையும் அதுதானே???
//தங்க முகுந்தன் // தாங்களும் இசைக்கும் அடியவர் என்பது எனக்கு தெரியும் முகுந்தன் அண்ணா.
//கவிக்கிழவன்: பசியை தீர்க்கும் இசை இங்கு உண்டோ இருந்தால் அகதிமுகாமுக்கு அனுபிவைக்கவும்//
இசை பசியத்தீர்க்மோ என்னமோ எனக்கு தெரியாது. நிச்சயமாக அவர்களின் வலியை தீர்க்கும் சக்தி அதற்கு உண்டு என்பது மட்டும் உண்மை.
Post a Comment