Monday, November 30, 2009

ஒரு கரு நான்கு கதைகள்!



முன்கதைச்சுருக்கம்:

[அழகான மாலையொன்றில் கடற்கரையில் நண்பர்கள் நால்வர்(நிலாரசிகன்,அடலேறு,ஜனா,
அதிபிராதபன்) சந்தித்தோம். அப்போது ஜனா ஒரு சிறுகதைக்கான மிகச்சிறந்த கருவை எடுத்துரைத்தார். அம்மா அப்பா குழந்தை மற்றும் ஓர் இராணுவ வீரன் - இவர்கள்தான் கதையில் நடமாடும்
பாத்திரங்கள். நாங்கள் நால்வரும் ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி இருக்கிறோம்.
குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக நிலாரசிகனும்,
அம்மாவின் பார்வையாக அதிபிரதாபனும்,அப்பாவின் பார்வையாக அடலேறுவும்,இராணுவ வீரனின்
பார்வையாக ஜனாவும் எழுதி இருக்கிறோம். நான்கு கதைகளும் ஒரே நேரத்தில் வலையேற்றம் செய்யப்படுகின்றன.
மற்ற மூவர்களுக்கான சுட்டி கதையின் முடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாசித்து உங்களது பின்னூட்டத்தை
பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.]

“புத்தம் சரணம் கச்சாமி”

நான் கோப்ரல் லயந்த கர்ணாகொட.
சொந்த இடம் நொச்சியாகம அனுராதபுரம்.

யுத்தம் முடிந்துவிட்டது என சக இராணுவ வீரர்களின் (“ஜெய வேவா”) வெற்றிக்கோசங்கள் என் காதுகளை வந்தடைந்த நாள். உண்மையில் நான் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். என் நினைவுகளில் சிறுகச்சிறுக நான் என் கிராமத்தில் கட்டிக்கொண்டிருக்கும் வீடும், என் மனைவி சாமிலியும், ஐந்துவயதை தொட்ட என் செல்ல மகள் காமலியும் நினைவுகளில் வந்துபோனார்கள். இவை எல்லாவற்றையும் மேலாக என் உயிருக்கு 90 சதவீதமான ஆபத்து தவிர்கப்பட்டுவிட்டது என்பதே அப்போது என் சந்தோசத்திற்கு முக்கியமான காரணமாக இருந்தது.
அடுத்து தெய்வ புண்ணியத்தாலோ என்னமோ நான் கடந்த ஆறுமாத காலத்திற்கு முன்னதாக வன்னி பெருநிலப்பரப்பில் உள்ள உயிலங்குளம் மோதல்களில் தலையில் காயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் சிகிற்சை பெற்று, கடந்த மாதம்தான் பணிக்கு திரும்பியதால், இறுதி யுத்தத்திற்காக அனுப்படவில்லை.

இறுதி யுத்த களத்திற்கு செல்லவில்லை என்றாலும், வவுனியா பிரதான முகாமில் பணியில் இருந்த என்னால், இறுதி நாட்களில் நடந்த யுத்தத்தின் கோரங்களை ஊகிக்க முடிந்தது. மரணமடைந்தும், காயமடைந்தும் வரும் இராணுவ வீரர்களின் தொகை உச்சத்தில் வந்துகொண்டிருந்தபோதே அங்கே நடப்பது ஒரு பூகம்பம் என்பதை அப்போதே புரிந்துகொண்டிருந்தேன். இறந்த நிலையில் வந்து குவிந்த ஒவ்வொரு இராணுவ வீரனின் உடலை கடக்கும்போதும், பெருங்கவலைகளுக்கு மத்தியிலும் என்னை காப்பாற்றியதற்காக புத்த பகவானுக்கு மானசீகமாக நன்றிகளை கூறிக்கொண்டிருந்தேன்.

அடடா..இந்தியாவின் நேரடி நெறியாள்கையில், சீனாவின் முழு ஆசீர்வாதத்துடனும் தேவையான வளத்துடனும், பாகிஸ்தானின் நவீன ரக ஆயுதங்களின் அணிவகுப்புடனும், ரஷ்யாவின் ராங்கிகளுடனும், இன்னும் பல பிறநாடுகளின் பின் பலத்துடன், இந்திய செய்மதி தகவல் வழங்கலுடன் என பெரும் உலக பலம் கொண்டு நின்ற எம்முடன், தனித்து நின்று மோதி இத்தனை இராணுவ வீரர்களுக்கு சேதம் விளைவித்த எதிரணியினரை நினைத்தால் அப்போது எனக்கு மலைப்பாவே இருந்தது.

வெற்றிக்கழிப்பிலும், கொண்டாட்டங்களிலும் ஒருவாரம் போனது. இந்த நிலையில்த்தான் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து அரசாங்கத்தினால் அமைத்துக்கொடுக்கப்பட்ட கொட்டகைகளில் அடைக்கப்பட்ட மக்களை காவல்காக்கும் கடமைக்கு என்னையும் நியமித்து அங்கு செல்லும்படி பணிப்பும் வந்திருந்தது. அங்கிருந்து வந்தவர்களை பார்க்க என ஒரு ஏழனத்துடனும், ஒருவித சந்தோசத்துடனும்தான் நான் அங்கே சென்றிருந்தேன்.
பாரிய முள்வேலியால் சுற்றிவர அடைக்கப்பட்ட பெரியதொரு நிலப்பரப்பில் சிறு சிறு கூடாரங்களுக்குள் மக்கள் கூட்டம் அடைக்கப்பட்டிருந்தார்கள். கிளர்ச்சியாளர்களும் மக்கள் மத்தியில் இருக்கலாம் என்றும் எனவே கடுமையாகவே அவர்களுடன் நடந்துகொள்ளவேண்டும் என மேலிடத்தினரால் நாம் அறிவுறுத்தப்பட்டிருந்தோம்.

அங்கு நான் இதுவரை பார்த்திராத வித்தியாசமான பல காட்சிகளையும், வேதனையான பல முகங்களையும், காயமடைந்த நிலையில் முனகும் பலரையும் பார்த்தேன். என்னமோ தெரியவில்லை இவர்களும் எங்கள் நாட்டவர்கள்தான் என்ற எண்ணம் எனக்கு கடுகளவும் வரவில்லை என்பதே உண்மை.
என் காவல் நிலையத்திற்கு முன்னால் இருந்த கூடாரத்தினுள்; உள்ளே நடப்பது அனைத்தும் எனக்கு தெளிவாக தெரியும்படி இருந்தது.
அங்கே மூன்று முதிய பெண்களும், இரண்டு முதிய ஆண்களும், எப்போதும் சிணுங்கலுடன் ஒரு அழகான சிறுமியும் தெரிந்தார்கள். ஏதோ ஒரு உந்துதலின் காரணமாக நான் அந்த இடத்தில் அருகில் சென்று கவனித்தேன்.
அங்கிருந்த மூதாட்டி ஒருவருக்கு சிங்களம் தெரியும் என்பதால் என்னிடம் சிங்களத்தில் பேசினார்;.

மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து வரும் வழியில் இந்த சிறுமி பெற்றோர்களை தொலைத்துவிட்டு, பரிதவித்து நின்றதாகவும், கடும் குண்டு வீச்சுக்கு மத்தியில் அங்கே நின்றால் ஆபத்து என, தாம்தான் இந்த குழந்தையினை தூக்கி வந்ததாகவும், வரும் வழியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பிணங்களை கடந்தே வந்ததாகவும், இந்த சிறுமியின் பெற்றொரும் இறந்துபோயிருக்கலாம் என்று சொல்லி, இத்தனை கோரங்கள் கொடுமைகளையும் பார்த்துவிட்டோம், இறைவா இந்த பிறப்பில் நீ எங்களுக்கு செய்த அற்புதங்கள் போதுமய்யா, மீண்டும் ஒரு பிறப்பை மட்டும் தந்துவிடாதே, தந்தாலும் மனிதராக, அதுவும் தமிழனாக பிறவியை தந்துவிடாதே என அந்த மூதாட்டி சொல்லி அழுதாள்.
கைகளில் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டே அடுத்த மூதாட்டியின் பின்னால் ஒட்டிக்கொண்டு அச்சத்துடன் என்னை சரிந்தபடி பார்த்தாள் அந்த சிறுமி.

மிகத்தெளிவான அவளது கண்களும், ஒழுங்காகச்சீவாமல், பிசிறு பிசிறாக இருந்த அவள் தலைமுடியும், களையான முகமும் முதல் முதலாக என் இதயத்தில் இரக்கம் கொள்ளவைத்தது.
அவளது கைகளில் இருக்கும் பொம்மை மிகவும் அழுக்காக இருந்தது. ஆனால் அவள் அந்த பொம்மையினை ஒருபோதும் கைவிடுவதற்கு தயாரானதாக தெரியவில்லை. அவளது கண்களில் மட்டும் ஏதோ ஒரு செய்தி காத்திருந்ததுபோல எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது. என்னவென புரிந்துகொள்ளமுடியாத ஒரு பார்வை அது. அந்த பார்வைக்கு அர்த்தம், ஏக்கமா?, கோபமா?, வெறுப்பா?, பயமா? என புரிந்துகொள்ளமுடியவில்லை.

மாலை மங்கி இருள் சூழ ஆரம்பித்தது. அங்கிருக்கும் முதியவர்களுடன் அந்த சிறுமி எதற்கோ அடம்பிடித்துக்கொண்டிருப்பது புரிந்தது. அருகில் சென்று பார்த்தேன். அவள் அந்த அழுக்கான பொம்மையினை வைத்திருப்பதை தவிர்க்க அந்த முதியவர்கள் எடுத்த முயற்சியினாலத்தான்; அவள் சிணுங்கினாள் என்பது புரிந்தது.
ஆனால் அந்த பொம்மைக்குள் அந்த சிறுமியின் எத்தனை அழகிய நினைவுகள் ஒழிந்திருக்குமோ என்ற எண்ணம் எனக்கு பொறிதட்டியது. இந்த பொம்மையை எப்படியாவது சிறுமியிடமிருந்து பெற்று. அதை சுத்தம் செய்து கொடுக்கவேண்டும் என்று மனதுக்கு பட்டது. அந்தச்சிறுமியை வெருட்டுவதுபோல பயம்காட்டி, அந்த பொம்மையை பிடுங்கிவந்து எந்தன் காவலரனில் வைத்தேன். நாளை அதை சுத்தம் செய்து அவளுக்கு கொடுக்கலாம் என்று. சத்தம் இல்லாமல் அவள் தேம்பித்தேம்பி அழுவது எனக்கு தெரிந்தது, மனதில் பெரும் வேதனை சூழ்ந்துகொண்டது.

இரவு 9 மணி இருக்கும் வெளியில் ஒரு மணிநேர சுற்றுக்காவலுக்கு நான் போய்வரவேண்டி இருந்தது. என் இடத்திற்கு வேறு பிரிவு இராணுவத்தினர் அந்த ஒரு மணிநேரத்திற்கு நிற்பார்கள். ஒரு மணி நேர சுற்றுக்காவல் நடவடிக்கையினை முடித்துக்கொண்டு திரும்பும் வேளையில் ஆவலாக, வந்து பொம்மையை பார்த்தேன் பொம்மையை காணவில்லை. சிறுமியை நினைத்து, அவள் நித்திரையாகியிருப்பாள் என முடிவெடுத்துக்கொண்டேன். கூடாரத்தின் பின்னால் தூரத்தில் ஒரு இராணுவ வீரன் சிறுமியை கூடாரத்தை நோக்கி அழைத்து வருவதை கண்டேன். அவன் அந்த சிறுமியை கூடாரத்தில் விட்டுவிட்டு, வெளியேறிவிட்டான்.
உடனடியாக சிறுமியை அவன் அழைத்துவந்த திசைநோக்கி சென்று பார்த்தேன் சற்று தொலைவில் முள்வேலியில் அந்த பொம்மை துண்டுதுண்டாக பிய்க்கப்பட்டிருந்தது.

மனதில் ஏதோ எல்லாம் செய்ய. வந்து என் காவல் நிலையத்தில் உக்கார்ந்துகொண்டேன். சற்று முன் எனக்கு சிங்களத்தில் கடைசியாக அந்தக்கிழவி சொன்ன கடைசி வசனத்தின் அர்த்தம் தெளிவாக புரியமுடிந்தது.
முதல் முதலாக என்னில் எனக்கே வெறுப்பு வந்தது.
இங்கேயே இந்தளவு கேவலாமாக நடப்பவர்கள், யுத்தமுனையில் இந்த மக்களை எப்படி எல்லாம் சீரழித்திருப்பார்கள் என மனம் நினைத்துப்பார்த்துமே உடல் நடுங்கியது. முதல் முதலாக நெஞ்சம் உண்மையின் பக்கம் நின்று பதை பதைத்தது. இருட்டுக்குள் கிடந்தவன் முகத்தில் பிரகாசமான ஒளி திடீரென ஒளிர்ந்தால் எப்படி கூசுமோ அப்படி மனதும், உடலும் கூசியது.

எப்படியோ அன்றிரவை கழித்தேன். மறுநாள் அவசரமாகச்சென்று காலைக்கடன்களை முடித்து விட்டு, அவசர அவசரமாக என் நிலைக்கு ஓடிவந்தேன்.
காரணம் என் கண்முன்னால் நடக்கும் அநியாயங்களையாவது முடிந்தவரை தடுத்துவிடலாம் என்ற துணிவுடன்.
அங்கே அந்த மக்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்றார்கள், ஏனெனில் தொண்டு நிறுவன அமைப்பு ஒன்று அவர்களுக்கு உணவாக ரொட்டிகளை கொடுத்துக்கொண்டிருந்தது. அந்தச்சிறுமி எங்கே என்று என் கண்கள் தேடின. அவளை அந்த வரிசையில் காணவில்லை. முளங்காலுக்குக்கீழே சொறண்டப்பட்டு, மாமா.. என்ற மழலை மொழியுடன், தன் கையில் இருந்த பண்ணை எனக்கு நீட்டியபடி, வஞ்சகம் இல்லாமல் என் முகத்தைப்பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தாள் அவள்.

புத்தன் போதிமர நிழலில் ஞானம் பெற்றபோது என்ன நிலை அடைந்தான் என நான் படித்ததுண்டு, அந்த நிலையினை அந்தக்கணம் நான் அடைந்தேன். என்னையும் அறியாமல் தாரை தாரையாக என் கண்களில் நீர் வழிந்தோடிக்கொண்டிருந்தன. என் கையில் இருந்த ஆயுதம் கையை விட்டு நழுவிய அதேகணம், நான் வாஞ்சையுடன் அவள் கன்னங்களை தொட்டபோது…
“புத்தம் சரணம் கச்சாமி” என்ற ஒலி என் காதுகளில் மட்டும் கேட்டது.
- ஜனா

மற்ற மூன்று கதைகள்:
வேலியோர பொம்மை மனம் -நிலாரசிகன்
சுடர் - அதி பிரதாபன்
மரப்பாச்சி பொம்மை- அடலேறு

24 comments:

பெசொவி said...

கதை மிக மிக அருமை, வாழ்த்துகள்!

பெசொவி said...

கதை நெகிழ்ச்சியை உண்டு பண்ணியது, உண்மையாக இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கியது.

சயந்தன் said...

அந்த இராணுவத்தின் கண்களில் மட்டும் அல்ல. எந்தன் கண்களையும் நனைத்துவிட்டது இந்தக்கதை.

thamizhparavai said...

வித்தியாசமான முயற்சி...
நான்கு கதைகளையும் படித்தேன்...
நிலா ரசிகனின் கதை மட்டும் இணைப்பிலிருந்து வெளிபட்டது போல் தெரிகிறது...
எனினும் உண்மையும், தாக்கிய சோகமும் ஒன்றே...
அதிபிரதாபனின் அம்மா பார்வையின் முடிவும், அடலேறுவின் அப்பா பார்வையில் வ்ந்த அதிர்ச்சியும்...(//இந்த ”அடுத்தடுத்து” எனும் வார்த்தை எவ்வளவு ரணங்களும் வலிகளும் கொண்டது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.//---உணரமுடிந்தது),
ஜனாவின் இராணுவவீரன் பார்வையில் நெகிழ்வும், நிலாரசிகனின் கதையும் சொல்லியவை கதை அல்ல உண்மைதான் எனச் சொல்லத் தேவையில்லை...
நிலா ரசிகனின் கதையில் மட்டும் குழந்தைப் பார்வை இல்லை.. பொதுவான ஒரு கதைசொல்லித் தனமே தெரிகிறது..

Pradeep said...

சொல்ல வேறு வார்த்தைகள் வரவில்லை ஜனா. உண்மையில் மனதிற்குள் என்னமோ செய்கின்றது. மற்ற மூன்று கதைகளையும் படித்துவிட்டு மீண்டும் வருகின்றேன்.

Unknown said...

உண்மையில் மிக நெகிழ்ச்சியான கதை ஜனா. மற்ற மூவரும் தங்கள் பங்குக்கு நெகிழ வைத்துவிட்டார்கள். உண்மையாக அழுதுவிட்டேன்.

டிலான் said...

நிலாரசிகனின் கதை ஏங்கவைத்தது,
பிரதாபனின் கதை இரங்க வைத்தது
அடலேறுவின் கதை நெகிழ வைத்தது
ஜனாவின் கதை அழ வைத்தது.

கவிஞர்.எதுகைமோனையான் said...

நம்ம தோழர்கள் நால்வரும் நெஞ்சை பிழிந்துவிட்டீர்கள்.நிண்ட நாட்களின் பின்னர் வாசித்து அழுகின்றேன்.

Unknown said...

கண் கலங்க வைக்கின்றன நான்கு கதைகளும். மனதுக்கள் ஒரு இனம்புரியாத வலி!!!
முதலில் உங்கள் நால்வரின் இன உணர்வுக்கு ஒரு சலூட்.

shortfilmindia.com said...

ஜனா..இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது.. ஒரு சிங்கள சிப்பாயின் பார்வையில் ஒரு தமிழ்னின் மனநிலையில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படி இல்லாமல் ஒரு சிங்களின் பார்வையில் எழுத ஆரம்பித்து, அந்த சிறு பெண்ணின் செய்கையால் அவனின் மனிதம் தட்டி எழுப்பபட்டிருந்தால் ஒரு மிக சிறந்த கதையாகியிருக்கும் என்பது என் கருத்து.

CS. Mohan Kumar said...

ரொம்ப புதுமையான முயற்சி. இதற்காகவே உங்களை பாராட்டுகிரேன். வலி படிக்கும் அனைவர் மனதிலும் தோன்றுகிறது.

Marimuthu Murugan said...

கதை நன்றாக இருந்தது..[எழுத்து பிழைகளைத் தவிர்த்து விட்டு]

Jana said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை//

அந்த இராணுவத்தின் கண்களில் மட்டும் அல்ல. எந்தன் கண்களையும் நனைத்துவிட்டது இந்தக்கதை.//

கதையின் கடடைசி பகுதி உண்மையாக நடக்கவே நடக்காது நண்பரே. கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

Jana said...

உண்மையில் என் கதைக்கருவைக்கேட்டு முதலில் எழுதியவர் நிலா ரசிகனே.
இந்த வகையில் அவர் ஏற்ற
பாத்திரமே பிரதான பாத்திரம், இந்த கதையின் நாயகி என்றபடியால் அவர் ஒரு கதை சொல்லியாகவும் இருந்தே ஆகவேண்டிய நிலைமை. அதுவே அப்படியான ஒரு தோற்ற்ப்பாடு உள்ளதுபோல தெரிகின்றது.

Jana said...

நன்றி பிரதீப்

Jana said...

நன்றி Vinoth ,டிலான், சமுத்திரன்

Jana said...

நன்றி கவிஞர்.எதுகைமோனையான்

Jana said...

ஒரு சிங்களச்சிப்பாயின் உண்மையான பார்வையிலேயே எழுதியிருந்தால் நன்றாகத்தான் இருக்கும் கேபிள் சங்கர் ஜி. ஆனால் நான் சிறி லங்காவு
க்கு செல்லமுடியாமல் போயிருக்கும். இந்த கதையில் நடப்பதுபோன்று குழந்தையின் செயல்களால் திருந்தக்கூடியவர்களோ உண்மையான பௌத்தர்களோ இல்லை அவர்கள்.

Jana said...

நன்றிகள் மோகன் குமார்.

Jana said...

நன்றி முத்து. திருத்திக்கொள்கின்றேன்.

நரேஷ் said...

நால்வருடைய முயற்சியும் மிக அருமை!!!

அனைவரும் நெகிழ வைத்து விட்டீர்கள்!!!

ஊர்சுற்றி said...

அருமையான முயற்சி. இவ்வளவு தாமதமாகக் கண்டது எனக்கு வருத்தமே!

நால்வருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

Mugilan said...

அற்புதமான படைப்பு நண்பரே! மனதை நெகிழச் செய்துவிட்டீர்கள்!

ஈரோடு கதிர் said...

முகாம்களையும், சிங்கள் ஆமியையும் நேரில் பார்த்த வகையில் கதை மனதைப் பிசைகிறது

LinkWithin

Related Posts with Thumbnails