Sunday, June 26, 2011

வேற்றுமொழிக்கதைகள்>>>>மந்திர வயலின்.

மாபெரும் வயலின் மேதையும் இசையமைப்பாளருமான பகாநினி ஒரு மந்திர வயலினை பெறுவதற்காக பிசாசிடம் தனது ஆன்மாவை விற்ற கதையினை அறியாதவர்கள் யாராவது இருக்கமுடியுமா? பெரும் நாத்திகரான, சமய பற்றற்ற நல்தொரு கவிஞருமான ஹென்ரிச் ஹைனே இந்த கதையில் ஒன்றிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தார். இந்த புனிதமற்ற செலும், அதன் விபரீதமும் எப்படி முடிவுக்கு வந்தது, இறுதியில் வென்றது யார்? மனிதனா அல்லது மனித குலத்தின் நிரந்தரப்பகைவனான பிசாசா என்பதை ஒரு சிலரே அறிந்திருப்பார்கள்.
ஹங்கேரிய நாடோடிகள் மத்தியில் இம்மாதிரியேயான ஒரு பழமையான கதை நிலவிவருகின்றது. நீங்களும் நம்பினால் நம்புங்கள், அந்தக்கதை தான் இது...
இதோ அந்தக்கதை...

இளம் நிகோஷோவுக்கு அந்த ஆண்டு தனது வாழ்க்கை மிகவும், கடுமையானதாகவும், கசப்பானதாகவும் இருந்தது. கடன் சுமையும் துரதிஸ்டமும், சின்னஞ்சிறு நிராசைகளும், அவரை வெனிஸ் நகரில் இருந்து வியன்னாவுக்கு விரட்டி அடித்தன. அங்கே அவர், அங்குமிங்கும், இசைக்கருவி வாசித்து தன் வயிற்றுப்பாட்டை கவனித்துக்கொண்டார். கல்யாண நிகழ்வுகளில் வாசித்தார், அல்லது தனது மலிவாகன வயலினைக்கொண்டு கீழ்த்தரமான மதுபானக்கடைகளில் வாசித்து வந்தார். அவர் கந்தலாடை உடுத்தியிருந்தபடியால், உயர்தரமான உணவு விடுதிகளில் அவர் அனுமதிக்கப்படவில்லை.

அக்டோபர் 21 ஆம் நாள் அவரது வாழ்வில் ஒரு மோசமான, சபிக்கப்பட்ட நாள் எனலாம். அன்று அதிகாலையில் இருந்தே, ஆலங்கட்டி மழைபோல் பெருமழை, இடைவிடாது, பெய்துகொண்டிருந்தது. இளைஞனது, பாழாய்ப்போன செருப்புகள், பனிச்சேற்றிலும், நீரிலும் மூழ்கி நனைந்தன. ஓவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அவரைச்சுற்றிலும் சேறும் சகதியும், ஊற்று நீர்போல், பீரிட்டு அடிக்கும். பகாநினியும் நனைந்துவிட்டார். உடலெல்லாம் ஒரே சகதரி.
சதுப்பு நிலத்தில் புரண்டெழுந்த ஒரு சின்னஞ்சிறு சுருட்டை முடிநாய்போல் அவர் தோற்றம் இருந்தது.

மங்கலான ஒரு மாலைநேரம், அரிதாகத்தோன்றிய வெளிச்சமும், கடும் மழையினூடே பாதையை அவருக்கு காண்பிக்கவில்லை, இதுமாதிரியான ஒரு மாலை நேரத்தில் எவரேனும் ஒருவரின், துயரத்தையோ, வறுமையையோ கண்டதும் மனம் தானாக, இரக்கத்தை தேடும். அதேவேளை குளிரையும், தனிமையையும், இருமடங்கு இருப்பதாகவே நினைப்பான் ஒரு ஏழை.

அன்று நாள் முழுக்க பகாநினி ஒரு காசுகூட சம்பாதிக்கவில்லை, மாலைநேரத்தில்தான், குடிகார தகரவேலைக்காரன் ஒருவன், புகைபிடிக்கும் குழாயின் சாம்பலை மதுக்கோப்பைக்குள் கொட்டி அரைக்கோப்பை பீர் கொடுத்தான்.

இன்னொரு இடத்தில் இனிமேல் நீ எங்கேயும் வயிலின் வாசிக்கக்கூடாது அதற்காக உனக்கு, மூன்று க்ரைட்ஜெஸ் தருகின்றேன் என்று கூறிய மாணவன் ஒருவன், குடிபோதையில் அம்மூன்று நாணையங்களை பகாநினியின் மீது சுண்டி எறிந்தான்.

இருக்கட்டும் நான் பணக்காரன் ஆகும்போது உன்னை ஒரு கை பார்க்கின்றேன் என்று பற்களை கடித்துக்கொண்டு கறுவினார் பகாநினி. உண்மையில் எத்தகைய துரதிஸ்டங்கள் இருப்பினும், பகாநினி தனது இசைஞானத்தில் ஐயமே இல்லாதிருந்தார்.
'எனக்கு நாகரீகமான ஆடைகளும் சரியான சந்தர்ப்பமும், அருமையான ஒரு வயலினும் கிடைத்தால், இந்த உலகத்தையே வியப்பில் ஆழ்த்திவிடுவேன்' என்று நினைத்துக்கொண்டார்.
மதுபானக்கடையின் தரையினை பகாநினி சேறும் சகதியும் கொண்டு அசுத்தப்படுத்திவிட்டதனால், அவர்கள் அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

மூன்று க்ரைட்ஜஸ்களைக்கொண்டு ஒரு சிறிய கோதுமை ரொட்டியை வாங்கி மென்று தின்னவாறே நடந்துவந்த அவர், ஒருவழியாக மாடியிருந்த தனது சிறிய அறைக்கு சோர்வுடன் வந்து சேர்ந்தார். நம்பிக்கை இழந்து பித்துப்பிடித்த மனநிiயில் இருந்தார். பரிதாபத்திற்குரிய, ஈரமான தன் வயலினை ஒரு மூலைக்கு உதைந்து தள்ளினார். புலம்பி அழுதார்.
தன் மார்பில் அறைந்துகொண்டு அழுதார்.
கடவுளே... நீ இல்லை. என்னை நீ ஏன் படைத்தாய் அதிலும் இசைஞானம் உள்ளவனாக ஏன் படைத்தாய். இத்தனை துயரங்களை நான் அடைந்தபோதும் உனக்கு என்மீது கருணை இல்லை. நீ இல்லை..இல்லை இல்லவே இல்லை என்று கத்தியவன் திடீர் என்று...

ஓ... பிசாசே நீ உண்மையிலேயே நீயாவது இருக்கின்றாய் என்றால், இப்போதே என் முன்னால் வா.. ஒரு பெருமிதத்திற்குரிய மனித ஆன்மாவை அதன் படைப்பாக்கத்திறமையுடன் மலிவாக விலைக்கு வாங்கிக்கொள்ளலாம் சீக்கிரமாக வந்துவிடு.
இல்லாவிட்டால், இந்த பரிதாப்பத்திற்குரிய ஜென்மத்திடமிருந்து எதையும் நீயாவது பெறமுடியாது போய்விடும். பிசாசு உடனடியாகவே அவர் முன்னால் தோன்றியது.

இளைஞனே..நான் சொல்வதைக்கேள் என்றது அமைதியாக அந்தப்பிசாசு. உன்னுடைய ஆன்மாவுக்கு பதிலாக வேறென்ன பெற விரும்புகின்றாய் என்று அது கேட்டது.
பணம், தங்கம்...
ஒரு பிசாசிடமிருந்து பணம் கேட்பதைவிடவும், சுலபமானது எதுவும் இல்லை. புகழ் வேண்டாமா உனக்கு? என மறுபடியும் அது வினவியது.
முட்டாள்தனம்..பணம் கொடுத்தால், புகழைக்கூட விலைக்கு வாங்கிவிடலாம்.. என்றார் பகாநினி.
அப்படியல்ல நண்பனே... நீ அவ்வாறு நினைப்பதும் சரியல்ல. உன்னைப்புகழ்பாடித் துதிப்பவர்களைத்தான் நீ தங்கத்தை கொடுத்து விலைக்கு வாதங்கமுடியும். காசுக்காக உன்னை சுற்றித்திரியும் கூட்டத்தை தாண்டி உன் புகழ் ஒரு நாளும் பரவாது. காதலைப்போன்று வேறு ஏதாவது வேண்டுமென்றால் கேள்...

நாசமாய்போக. காதல்தான் காசு கொடுத்தால் மிகச்சுலபமாக கிடைக்கக்கூடியது.

எந்தவொரு காதலும் அப்படித்தான் என்று உண்மையிலேயே நீ நினைக்கின்றாயா?
என்னருமை இளம் நிக்கோலோ.. எந்தவொரு காதலும் விற்பனைக்குரியதாக இருக்குமானால் இந்த உலகமும், பிரபஞ்சமும், பிசாசினுடைய எல்லையற்ற அதிகார வரம்புக்குள் வந்திருக்கும். ஒரு பங்கரமான இரகிசயத்தை உனக்கு கூறட்டுமா?
பிசாசு ஏன் அவ்வளவு துரதிஸ்டசாலியாக இருக்கின்றது என்று நீ அறிய விரும்புகின்றாயா? ஏனென்றால், பிசாசு நீண்ட காலமாக காதலுக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றது ஆனால் அதனால், காதலிக்கவே முடியாது.

இளைஞனே.. நாம் இருவருக்கும் இலாபம் தரக்கூடிய நேர்மையான விசயத்தை என்னோடு பேசிமுடிக்க நீ விரும்பினால், நீ ஆரம்பத்தில் ஆசைப்பட்டாயே நாகரிகமான ஆடைகள், சரியன சந்தர்ப்பம், அருமையான வயலின் இவற்றை தவிர வேறு எதையும் கேட்காதே.

சில நிமிடங்கள் யோசித்துபார்த்த பகாநினி பின்னர் முடியாவாக இவ்வாறு கூறினார்.
நான் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளப்போவதில்லை.
அந்தப்பிசாசு அமைதியாக அவருக்கு முன்னே குனிந்து ஒரு பெரிய பழைய பெட்டியை எடுத்து மேசைமீது வைத்தது, பின்னர் அதை மிகவும் கவனத்துடன், பகாநினியிடம் ஒப்படைத்தது. இதோ இந்த வயிலினைப்பார்... இலவசமாக இதை நீ வாசித்துப்பார்க்கலாம்.

வயலினை எடுத்து வாசிக்கத்தொடங்கியபோதுதான், அவர் தன்னிடமிருந்த மிகப்பெரிய திறமையினை முதன்முறையாக உணர்ந்தார் எனலாம்.
எஜமானரே உங்கள் சேவைக்கு காத்திருக்கின்றேன். உங்கள் அறிவார்ந்த ஆலோசனைக்கு நன்றி உடையவனாக இருப்பேன் ஆனால் நீங ;கள் திடீர் என்று என்மீது ஒரு சோகப்பார்வை வீசியது ஏன் என்று சொல்லுங்கள். நான் உங்கள் மனதை புண்படுத்திவிட்டேனா என்று கேட்டார் பகாநினி.

வெளிப்படையாகச்சொன்னால், என்று கூறி தனது ஆசனத்தில் இருந்து எழுந்த பிசாசு, நான் எதிர்பார்த்ததைவிடவும், மிக அதிக அளவில் வரம்பெற்ற திறமை, உன்னிடமிருப்பது கண்டுதான் சற்று கலக்கம் அடைந்தேன். இருப்பினும் நான் இப்போதே சொல்லிவிடுகின்றேன். இது உன் வயலின். இந்த சிறிய பை நிறைய தங்கக்காசுகள் உள்ளன. இப்போதைக்கு உனக்கு இது போதுமானது நாளைக்கு தையல்காரர் உனக்கு நல்லாடை தருவார். சிறப்பாக முடி திருத்தும் ஒருவர் வியன்னாவில் இருந்து வந்துசேர்வார். சீக்கிரம் நீ ஓர் இசைப்போட்டியில் கலந்துகொள்ளப்போகிறாய் என்று கூறிய பிசாசு, இப்போது இங்கே கையெழுத்திடு.
சரி.. உனக்கு என் நல்லாசி இளைஞனே வரட்டுமா!
நாம் மீண்டும் சந்திப்போமா என்று கேட்டார் பகாநினி. அது எனக்கு தெரியாது என்றது அந்த பிசாசு.

வயலின் கலைஞரை அது ஒரு நாளும் வஞ்சிக்கவில்லை. அந்தப்பிசாசு சொன்னதுபோலவே யாவும் நடந்தன. மன்னரின் வாரிசு, நடத்திய இசைப்போட்டியில் அவரது புகழ் மேலோங்கியது. அது இறுதிவரை மங்காமல் பிரகாசித்தது. ஆனாலும் நிக்கலோ பகாநினி, இவ்வுலகில் மிகவும் துரதிஸ்ட சாhலியாகவே இருந்தார். திருப்தி தராத உணாச்சிகள் தற்பெருமை, பணத்தாசை, ஆகியன யாவும் கீழ்தரமான மட்டுமீறிய கஞ்சத்தனத்துடன் சேர்ந்துகொண்டன. அவர் தமது இசைக்குறிப்புக்களை மிகக்கடினமான முறையில் எழுதுவார், அவற்றை அவர் மட்டுமே புரிந்துகொண்டு வாசிக்கமுடியும். பிறரால் முடியாத அளவுக்கு அவை கடினமானதாக இருக்கும் ஆனால் எல்லையில்லாத கலையானது எதிர்காலத்தில் அவரைவிடத்திறமையான, அவரைவிடச்சிறப்பான வாசிக்கக்கூடிய ஒரு இசைக்கலைஞரை உருவாக்கும் என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார். எனவே எதிர்காலத்தில் உருவாகப்போகும் அந்த புதிதான இளைஞனை அவர் வெறுத்தார். அவர் இலட்சாதிபதியானார். ஆனாலும் தெருவில் கிடக்கும் துண்டுத்தாள்களையும், வேண்டாத பொருட்களையும் பொறுக்கிக்ககொண்டே இருந்ததார் அவரது அன்றாட உணவுச்செலவு மிகக்குறைவே

அவரது அற்புதமான இசைத்திறனால் கவர்ந்து ஈர்க்கப்பட்ட அழகிய பெண்கள் பலர், தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவர்வசம் ஒப்படைக்க முன்வந்தனர். ஆனால் அவரோ அவர்களை வெறுத்து விலக்கினார். ஏன் எனில் தன்னிடமுள்ள தங்கத்திற்காகவே அவர்கள் தன்னை நாடுவதாக கருதினார். ஓர் உயர் குடிமாது, நகர கவுன்ஸில் மேஜரின் மனைவி தனது , புகழ், செல்வம், காதலை அவருடன் பகிர விரும்பி, தன் கணவனை விவாகரத்து செய்யவும், அதனால் ஏற்படப்போகும் பழியை தாங்கவும் தயாராகவே இருந்தாள். அவளிடம் சில காசுகளை விட்டெறிந்த பகாநினி உன்னுடைய கணவன் இந்த மூன்று க்ரைட்ஜெஸ்களை ஒருநாள் எனக்கு கொடுத்தான், எதற்கு தெரியுமா? நான் வயலினை வாசிக்காது இருக்க. இவற்றினை அவனிடம் கொடுத்துவிடு, நீயும் இங்கிருந்து செல், எனக்கு வேறு வேலை உள்ளது என்றார்.

நீங்கள் எல்லாம் என் பணத்தினையே நாடுகின்றீர்கள், அல்லது எனது புகழின் நிழலில் குளிர் காய விரும்புகின்றீர்கள் என முரட்டுத்தனமாகக்கூறி பல உண்மையான நண்பர்களைனயும் இரசிகர்களையும் அவர் இழந்தார். அவர் உண்மையிலேயே துயரில் மூழ்கியிருந்தார். பெரிதும் துன்பத்தில் மிதந்தார்.
மன நின்மதி மட்டும் அவருக்கு கிட்டவே இல்லை. அவரால் யாரையும் நம்ப முடியவில்லை. அவரது ஆயுள் முடிவு நெருங்கியபோது பிசாசும் அவரிடம் வந்து சேர்ந்தது.

நான் தயார் எஜமானரே.. ஆனால் ஓர் உண்மையினை சொல்லுகின்றேன். என் வாழ்க்கையில் சந்தோசமே இல்லை.
அந்தப்பிசாசும் சோர்வுடன் எதிர்ப்பு தெரிவித்தது. வெளிப்படையாகச்சொல்லவேண்டுமானால் உன்னால் எனக்கு எந்தவித லாபமும் இல்லை இருவருமே பரஸ்பரம் இலாபம் தராத விவகாரத்தில் ஈடுபட்டு அதன் முடிவை வந்தடைந்துள்ளோம்.
இந்த ஒப்பந்தப்பட்டியலைப்பார் உன் பெயர் இதில் இல்லை. அது அழிந்துபோய்விட்டது. யாரோ ஒருவரால் அது நீங்கப்பட்டது. அவர் பெயரை நாம் வாய்விட்டு கூறவும் உரிமை கிடையாது.
நான் இப்போது என்ன செய்வது மன்றாடினார் பகாநினி.

ஓன்றுமே செய்யமுடியாது என்ற பிசாசு நண்பனே..
இனி ஒன்றுமே செய்யமுடியாது உன்னுடைய எல்லா இசை நிகழ்ச்சிகளின்போதும் நான் கூடவே இருந்து வந்துள்ளேன். அதற்காக என் தலைவர்கள் என்னை ஏசியிருந்தனர். சரி அதுபோகட்டும், நாம் எவரது பெயரை உச்சரிக்க உரிமை இல்லையோ அவருடனும் நீ இருந்துள்ளாய் உண்மையான கலைத்திறன் அவரிமிருந்தே உனக்கு வந்துள்ளது நம்மிடமிருந்து அல்ல.
இந்த கணக்கு வழக்குகளை யார் தீர்த்து வைப்பது? விடைகொடு நான் வருகின்றேன். வயலினை உன்னிடம் விட்டு செல்கின்றேன் என்னைப்பற்றி ஒன்றும் கவலைப்படாதே.. இது என்னுடைய தலைவருக்கும் எனக்கும் ஏற்பட்ட சிறு தொந்தரவு அவ்வளவு தான் விடைபெறுகின்றேன்.

காலையில், மாபெரும் இசை மேதை பகாநினி இறந்து கிடந்தார் அவரது முகத்தில் பெருமிதம் தவழ்ந்து. உதடுகளில் புன்னகை பிரசாகித்தது. அந்த மந்திர வயலின் நிரந்தரமாக மறைந்து போயிருந்தது.

மூலக்கதை ஆசிரியர் - ஆலக்ஸாண்டர் குப்ரின் (1929)

இந்தக்கதையினை பசுமைக்குமார் தமிழக்காக்கம் செய்துள்ளார், எனினும் மூலக்கதையில் விடுபட்ட சில விடையங்களை நான் சேர்த்துள்ளேன்.

8 comments:

Unknown said...

கதை வாசிக்கிறேன்..தமிழ்மணம் வேலை செய்யவில்லை பாஸ்

anuthinan said...

இந்த கதையில் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டிய நிறைய அர்த்தங்கள், விடயங்கள் இருக்கிறது!!! :)

pichaikaaran said...

ரசித்ததை பகிர்ந்தமைக்கு நன்றி . நாங்களும் ரசித்தோம்

Unknown said...

மாப்ள கதை நல்லா இருக்குங்கோ!

vidivelli said...

சகோ நல்ல கதை
வாழ்த்துக்கள்..


!!நம்ம பக்கமும் காத்திருக்கு உங்களுக்காக

சி.பி.செந்தில்குமார் said...

குட் ஒன்

உணவு உலகம் said...

தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன்.

balavasakan said...

அருமையான கதை அதிகம் எழத்து பிழை ஏன்..

LinkWithin

Related Posts with Thumbnails