Wednesday, June 3, 2009

மகிழ்ச்சிக்காய் ஏழு மணிமுத்துக்கள்.

பூமியில், மனிதனின் பரிமாணம் என்பது கூர்ப்படைந்துகொண்டு செல்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பரிமாணம் என்பது வளர்ச்சியடைகின்றது என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கின்ற போதிலும், மனிதன் பரிணமிக்கப்பட்ட நோக்கமான – பிறத்தல், இருத்தல், மகிழ்தல்;, மரணம்………..என்பதில் முக்கியமான மகிழ்தல் என்பது மறைந்துபோய்க்கொண்டிருக்கின்றது என்பது உலகலாவிய உளவியல் கணிப்பு.

உலகமெங்கிலும், மகிழ்சியை வழங்குவதற்கான மகிழ்வகங்களும், ஆடம்பர உல்லாசபுரிகளும், பிறக்கின்ற வேளையிலும், மகிழ்ச்சி என்பது பெரும்பாலனவர்களுக்கு எட்டாக்கனியாக ஏக்கத்தை வரவழைத்துக்கொண்டுதான் இருக்கின்றது. உளவியலின் தந்தை எனப்போற்றப்படும் ஷிக்மென் பிரைட்டும் - மகிழ்ச்சியை மையமாகவைத்தே காரண காரியங்கள் பிறப்பிலிருந்து இறப்புவரை, சுழன்றுகொண்டிருக்கின்றது என வாதத்தை முன்வைத்தாலும், இன்று பல காரியங்களில் ஈடுபடுகின்ற மனிதன் மகிழ்ச்சியை தொலைத்த கதை புதுமையதானதுதான். மகிழ்ச்சியை தொலைத்த மனங்களுக்கு மருந்தாக மாறாது விட்டாலும், சிறு கைவைத்தியமாக இருக்கின்ற மகிழ்சிக்காய் ஏழு மணிமுத்துக்கள் என்கின்ற இவ்வாக்கம் சாதாரண வாழ்வியலில் மனிதன் கடைப்பிடித்து மகிழ்ச்சியின் பக்கத்திலேனும் குடியேறுவதற்கு குடிசை போட்டுத்தரும் என்ற நம்பிக்கையுடன் குறிப்புக்களை ஆரம்பிக்கின்றேன்.
குறிப்பு -1
வாழ்க்கை எப்போது நேர்த்தியானது என்கின்ற எண்ணத்தை தவிருங்கள்.
எங்களில் உள்ள பெரிய குறைபாடு, எல்லா விடயங்களும், எல்லாக்காரியங்களும், நேர்த்தியாக இருக்கவேண்டும், வெற்றி மட்டுமே காரியங்களின் இறுதிப்படி என்று கணிப்பிட்டுக்கொள்வதாகும். தோல்விகளும், வெற்றியை நோக்கிய படிக்கற்கள் என்பது பல இடங்களில் மறந்துபோனதாகவே நினைக்கத்தோன்றுகின்றது. மின்குமிழை உலகத்திற்கு படைத்த தொமஸ் அல்வா எடிசனை ஒருபத்திரிகையாளர் பேட்டிகாணும் போது "நீங்கள் தங்குதன் இளையின் மூலமாக சரியான மின்குமிழை படைப்பதற்கு முன்னர் 3000 முறை பிழையான மூலகங்களை ஆராய்து தோல்வி கண்டுள்ளீர்களே?" -இது சலிப்பை தரவில்லையா? எனக்கேட்டபோது, "இல்லை…3000முறையும் நான் வெற்றியடைந்திருக்கின்றேன். எப்டி எல்லாம் ஒரு மின்குமிழ் செய்யக்கூடாது என்பதை கற்றுக்கொள்வதில். என தோல்விப்படிகளைக்கூட வெற்றியாக்கியகதையினை சுருங்கச்சொன்னார். இந்தப்பக்குவம் எம்மத்தியில் எத்தனைபேருக்கு இருக்கின்றது?

நாளாந்த வாழ்க்கையில், நாம் காண்கின்ற சாதாரண மனிதர்கள் தொடக்கம், சமுகம் வரை நேர்த்தியாக இருக்கவேண்டும் என்பதும், எப்போதும் எம் சிந்தனையோட்டத்துடன் ஒத்துப்போக வேண்டும் என்பதும் எல்லோரதும் விருப்பமாக இருக்கின்ற போதிலும் யதார்த்தம் என்னவோ, எதிர்மாறானதாகவே இருக்கின்றது. மனிதன் பல்வகைமை உடையவன் தனிமனித ஆளுமை குடும்பப்பின்னணி, கல்வி, இயல்பூக்கம், என்பன மனிதர்ளை ஒருவரிடமிருந்து இன்னொருவரை வேறுபட்டவர்களாக படைத்திருக்கின்றது. இதுதான் மனிதனின் அழகும், தனித்துவமும் எனலாம். இருந்தபோதிலும் இந்த உண்மையினை ஜீரணிக்க மறந்து நாளந்த அலுவல்களில் முரன்பாடுகளுக்குள் மூழ்கிப்போய் மகிழ்ச்சியை மறக்கவேண்டிய அவலநிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
"கிரேக்க தத்துவம் ஒன்று இந்த உண்மையினை அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கின்றது". வாழ்க்கை என்பது உண்மையில் பொய்மையே - இருந்தபோதிலும்இந்த உண்மை தெரியாததுபோல வாழ்ந்துகொண்டு போவதுதான் வாழ்க்கையை சந்திக்க எதனிலும் சிறந்த வழி. மனித வேறுபாடுகளை அங்கிகரிப்போம்! மனங்களின் மகிழ்சியை கொண்டாடுவோம்.

குறிப்பு -2
மற்றயவர்களுடனான தேவையற்ற ஒப்பீட்டை தவிர்தல்.

இன்று பலரது சந்தோசத்தை சாப்பிடும் விடயமாக மற்றவர்களுடனான ஒப்பீடு அமைந்துவிடுகின்றது. அண்மையில் நண்பர் ஒருவரை சந்தித்தபோது, அவர் மகிழ்ச்சி தொலைந்த முகம் என் கேள்விக்குறிகளுக்கு வழியமைத்துக்கொடுத்தது.நீண்ட நேர சம்பாசனையின் பின்னர், விடயம்.... அவர் அலுவலகத்தில் அவர் பின்னால் உத்தியோகம் பெற்றவர்கள் நல்ல நிலையில் இருப்பதும், அவர்கள் வசதிபடைத்தவர்களாக மாறியிருந்தமையும் இவரது கவலைக்கான அடிப்படை வித்துக்களாக அமைந்திருந்தன.
நண்பரை நீண்டநாள் அறிந்தவர் என்ற முறையில் அவர்கூட, நல்ல உத்தியோகத்திலும், நல்ல பொருளாதார நிலையில் இருந்தும்கூட, தேவையற்ற ஒப்பீடுகள் அவரது சந்தோசத்தை அவருக்கு காட்டமறுத்த இருண்ட கண்ணாடியாகியது.

குறிப்பு -3
அன்பு செலுத்துங்கள்.
அன்பு என்பது கண்ணாடிபோன்றது. அன்பைக்காட்டித்தான் அன்பைப்பார்க்கமுடியும். அன்பு விதைக்கப்பட்டால்த்தான் அன்பின் அறுபடை பற்றி நாம் அக்கறைப்படுவதில் நியாயமும் இருக்கும். இன்று எம்மில் பலரில் இனங்காணப்பட்ட குறைபாடுகளில் ஒன்று அன்பை எதிர்பார்க்கின்ற நாம் கொடுப்பதில் மட்டும் குறைப்பட்டுக்கொள்கின்றோம்.
பல குடும்பப்பிணக்குளுக்கும் அடிப்படைக்காரணமாக அமைவது இதுவேதான்.இது இரண்டு பிச்சைக்காரர்கள் ஒருவரிடம் மற்றயவர் பிச்சை கேட்பதற்கு ஒப்பானது. சிலரிடம் இருக்கின்ற பொதுவானதொரு தவறு அன்பை வெளிக்காட்டத்தயங்குவதாகும். அன்பை வெளிப்படுத்துதல் என்றால் என்ன? என சில புருவங்கள் உயர்வது புரிகின்றது. இது நாளாந்தப்பணிகளில் மற்றயவர்களுக்கு உதவி செய்தல் ஒத்துணர்தல் செவிமடுத்தல், மதிப்பளித்தல், என்கின்ற கருமங்ளோடு காவிச்செல்லப்படக்கூடியதாகும்.
குறிப்பு -4
மகிழ்ச்சியான வேலைநேரம்.

எங்களில் பலர் உயிரோட்டமான நேரத்தை வேலைத்தளங்களிலேயே செலவுசெய்யவேண்டிய நிர்பந்தத்தில் நீந்துபவர்கள்தான்.இந்த வேலைத்தளங்கள் எம் மகிழ்ச்சியின் பகுதியான விடயம் என்பது யதார்தபூர்வமான உண்மை. மேலைத்தேசங்களில் "Quality work life [QWL] policy" என அலுவலக வாழ்க்கையினை வழப்படுத்துவது பற்றி சிந்தித்துக்கொண்டு இருக்கின்ற இக்காலகட்டத்தில் ஆகக்குறைந்தது எம் அலுவலகத்தை நாம் மகிழ்ச்சியாக்க ஈடுபாட்டுடன் வேலை செய்தல் நட்புறவை வழர்த்தல் முரண்பாடுகளை தவிர்த்தல் எம்சூழலை நாமே உருவாக்குதல் என நாம் செய்யக்கூடிய மாற்றங்களை ஆரம்பித்துவைப்பது எம் சந்தோசத்திற்கு நாம் அத்திவாரமிடுவது போன்றதாகும்.


குறிப்பு -5
உடல் நலம்.

மகிழ்ச்சி என்பது மனத்துடனும், உடலுடனும் இரண்டறக்கலந்த விடயம் என்பது அனைவரும் அறிந்ததே. மகிச்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு நாளந்த உடல் ஆரோக்கயத்தில் கவனம் செலுத்துதல் அவசியமாகின்றது. நித்திரை விழித்தல், உளநெருக்கத்தை ஏற்படுத்தும் நீண்ட வேலைநேரம், உணவுப்பழக்கவழக்கம், என்பன இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சம்களாகும்.

குறிப்பு -6
எனக்கே எனக்காய்


எங்களில் பலருக்கு நாளாந்தம் எழுகின்ற சின்னச்சின்ன ஆசைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்வதில் தடைகள் இருக்கத்தான் செய்கின்றது. குளிர்ந்த மழைநாளில் வீதியில் நடக்கவேண்டும் என்று நினைப்பதும், மலையோரத்து குடிலில் வசிக்கவேண்டும் என்பதும் கூட இதில் அடங்கும். இருந்தபோதிலும் வாழ்க்கை சீரோட்டத்தில் இவை நிறைவேறாத பட்டியலில் அடங்கிவிடுகின்றது. இதற்கு காரணங்கள் என்ற வகையில் நேரம், பணம், வசதி, பாதுகாப்பு என்பன விபரிக்கப்படலாம். இருந்தபோதிலும் உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்ய முனைவது உங்கள் மகிழ்ச்சியை தூண்டும் வழியாக அமையும் என்பதை மறந்துவிடவேண்டாம். இந்த விருப்பக்கள் உங்களையோ, மற்றவர்களையோ இன்றும் என்றும் பாதிக்காதவகையில் பாhர்த்துக்கொள்ளுதல் விரும்பத்தக்கது.
குறிப்பு -7
திட்டமிடல்
நம்வாழ்க்கைப் பயணத்தில் எல்லோரும் ஏந்திச்செல்லவேண்டிய துடுப்பு திட்டமிடல். இன்னும் இரண்டு வருடத்தில் என்ன தொழில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பது தொடக்கம் தனிமனித வழர்ச்சிக்கான பண்புகளையும் பாதைகளையும் திட்டமிடல் என்பது எம்வாழ்க்கையை தொடர்ச்சியாக மகிழ்ச்சி என்கின்ற பாதையில் நடத்தி செயல்வலதற்கு எதனிலும் சிறந்த வழி.
உளவியல் ரீதியாகச்சொல்வதானால்க்கூட நாமொன்றைத்திட்டமிட்டு அதை அடையும்போதுதான் மகிழ்ச்சி என்கின்ற உணர்ச்சி பிரசவம் எடுகின்றது. Mc Cleland Achievement teary உம் இதை ஆமோதிக்கின்றது.திட்டமிடல் என்பதும் கூட மகிழ்ச்சியான விடயம்தான்

"தத்துவம் அஸி – நீ அதுவாகின்றாய்- அதாவது நீ எதை நினைத்துக்கொண்டிருக்கின்றாயோ நீ அதுவே ஆகின்றாய் என்கின்றது உபநிடதம். இதைத்தான் இந்தியாவின் அணுசக்தியின் தந்தை எனப்போற்றப்படும் டொக்ரர். அப்துல்கலாமும் கனவு காணுங்கள் என்று வாழ்க்கையின் எதிர்காலத்தை பார்வைப்புலப்படுத்தும் முயற்சியின் உந்துதல் கொடுத்தார். நேற்று முடிந்துபோன விடயத்திற்கான விமர்சனத்தில் அக்கறை காட்டுவதை விட நாளை நடக்கப்போகும் விடயத்திற்கு ஆலோசனை கேட்பது நல்லது என்பது இந்திய வர்த்தகத்தின் வெற்றியாளர் அம்பானியின் கருத்து. "Pleasure on your Hand" என்பது மேற்கத்தேயச் சிந்தனை அதாவது, "உங்கள் மகிழ்ச்சி உங்கள் கையில்த்தான் இருக்கின்றது";. மனத்திற்கு மருந்திடும் மகிழ்ச்சியை காத்திட இந்த மணிமுத்துக்கள் உதவின அதுவும் மகிழ்ச்சியே.
(நண்பன் நிசாந்தனுக்கு நன்றிகள்.)

2 comments:

Unknown said...

மனத்திற்கு மருந்திடும் மகிழ்ச்சியை காத்திட இந்த மணிமுத்துக்கள் உதவின அதுவும் மகிழ்ச்சியே.

Unknown said...

You Are Doing Good Job Brother.
"Pleasure on your Hand" -This is absolutely right.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"

LinkWithin

Related Posts with Thumbnails