Friday, July 31, 2009

யூதர்கள் - தமிழர்கள்!! (ஆய்வுத்தொடர் -04


சரி இன்றைய நிலையில் ஈழத்தில் தமிழர்களின் நிலையினை எடுத்துப்பார்ப்போமானால், யூதர்களுக்கு கிடைக்காத பல சந்தர்ப்பங்களும், புவியியல் மையங்களும், இனரீதியான அருகாமை தொடர்புகளும் தமிழர்களுக்கு நிறையவே இருந்தன, அனால் இவை அனைத்துமே காலங்காலமாக வந்த தமிழ்த்தலைமைகளின் தவறான எண்ண ஓட்டங்களாலும், தூர நோக்கற்ற சிந்தனை இல்லாத தன்மைகளாலும், சுயநல, புகழ்ச்சி விருப்பங்களாலும் சரிவர கைக்கொள்ளமுடியாத நிலைக்கு போய்விட்டன. அதுவே மறுக்கப்படமுடியாத உண்மையும் கூட. பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்து சுதந்திரம் பெறும்போது ஜின்னாவுக்கு இருந்த தெளிவும், தூரநோக்கும், தமிழ்த்தலைமைகளுக்கு அப்போது இருந்திருக்கவில்லை.

இந்த தொடரை எழுத தொடங்கியதில் இருந்து பல தமிழ் இளைஞர்கள் வெள்ளையரின் ஆட்சியில் இருந்து ஆயுதப்போராட்ட காலங்கள் தொடங்குவதற்குள் ஏன் தமிழ்த்தலைவர்கள் பின்னர் நிகழப்போபவற்றை எதிர்வுகூறவில்லை? தமிழ்த்தலைவர்கள் யார் யார் அப்போது இருந்தனர்? இந்தத்தொடரில் அந்த தலைவர்கள் பற்றியும் அன்றைய சூழ்நிலைகள் பற்றியும் தரும்படி தமது மின்னஞ்சல்களில் குறிப்பிட்டிருந்தனர். குறிப்பாக சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் ஏன் இலங்கை சுதந்திரம் அடையும்போதே தனது செல்வாக்கினையும், வெள்ளையர்கள் அவர் மேல் வைத்திருந்த மரியாதையினையும் பயன்படுத்தி தமிழர்கள் பிரிந்து தனிநாடு அமைக்கும் வண்ணம் செய்யவில்லை எனக்கேட்டிருந்தனர். இவற்றின்மூலம்! சரி இந்த பாகம் இவர்களுக்கு மட்டும் இன்றி இது பற்றி அறியாத பலருக்கும் உபயோகமாக இருக்கும் என எண்ணி இந்த தொடர் நீடித்தாலும் பரவாய் இல்லை என்ற நிலையில் இந்த தொடரின் பாகம் - 04 இனை இந்த ஆர்வமான இளைஞர்களுக்கு சமர்ப்பிக்றேன். (வாசகர் சித்தம்! என் பாக்கியம்!!)


ஈழத்தமிழர்களைப்பொறுத்தவரை இலங்கை சுதந்திரம்பெறும்போது இங்கிலாந்துமற்றும் சிங்களவர்களாலேயே போற்றப்பட்ட சேர்.பொன்.இராமநாதன் தனது செல்வாக்கினையும், சிங்களவர்கள் அவர் மேல் அப்போது வைத்திருந்த நன்மதிப்பையும் பயன்படுத்தி இலகுவாகவே தமிழ் மக்களுக்கு தனியான ஒரு தேசத்தை பெற்றிருக்கலாமே என்று இன்னும் என் காதுபட என் வயதையுடைய சிலர் பேசிக்கேட்டிருக்கின்றேன். 26 ஆம் திகதி, நவம்பர் மாதம், 1930 ஆம் ஆண்டிலேயே சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் காலமாகிவிட்டார். இலங்கை சுதந்திரம் அடைந்தது 1948 என்பது கூட இன்னும் அவர்களுக்கு தெரியாமல் இருந்தது மிக வேதனைப்படவேண்டிய விடயமே.

ஆனால் அவர்கள் சொல்லவந்த கருத்து முற்றிலும் உண்மையானதே, பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் கீழ் 1879 இல் இலங்கை சட்ட நிரூபண சபையில் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு, 1910 ஆம் ஆண்டு மக்கலம் சீர்திருந்த யாப்பின்கீழ் கல்விகற்ற இலங்கையருக்கான ஆசனத்தின் பிரகாரம் 1911 ஆம் ஆண்டு முழு இலங்கையினரையும் பிரதிநிதிப்படுத்தும் ஒரே முதலாவது சுதேச இலங்கையனாக தெரிவுசெய்யப்பட்டு, இலங்கையின் வரலாற்றிலேயே இலங்கையில் வாழும் இரு இனங்களுக்கிடையில் 1915ஆம் அண்டு இடம்பெற்ற சிங்கள – முஸ்லிம் கலவரத்தின்போது சிங்கள தலைவர்களை கண்டவுடன் சுடும்படி உத்தரவிடப்பட்டபோது கப்பலேறி லண்டன் விரைந்து அவர்களுக்காக வாதிட்டு, திரும்பும்போது சிங்களவர் தோழில் காவிச்செல்லப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டு, தான் சார்ந்த யாழ்ப்பாண மண் எழுச்சிபெறவேண்டும் என பல வழிகளிலும் முயற்சியும் செயற்பாட்டு ரீதியாகவும் செயற்பட்டு, பாடசாலைகள், அமைத்து, கீழைத்தேய மெய்யியல் தத்துவராக அமெரிக்காதேசம் சென்று சொற்பொழிவாற்றி, சிறந்த அறிவாளி, தூரசிந்தனை உடையவர் என்று தெரிவிக்கப்பட்ட அதே சாட்சாத் சேர்.பொன்.இராமநாதன் 1915 ஆம் அண்டு தன் கண்முன்னே முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத எழுச்சியை நிதானமாக யோசித்திருந்தார் என்றால், அன்றைய சூழ்நிலையில் மிக மிக எழிதாக தமிழர்களுக்கான நிரந்தரத்தீர்வு எது என்பதை கண்டுகொண்டிருக்கக்கூடாதா? அவர் மயங்கியது என்னமோ சிங்களவர்களின் புகழ்ச்சிக்கு.


அடுத்துவந்த முக்கிமான தமிழ்தலைவர் கணபதி காங்கேசர் பொன்னம்பலம் (ஜீ.ஜீ.பொன்னம்பலம்) கேம்பிரிட்ஜ் சென்று இயற்கை அறிவியல் துறையிலும் சட்டத்துறையிலும் பட்டம் பெற்றார். இலங்கை திரும்பிய அவர் கொழும்பில் வழக்கறிஞராகத் தொழில் புரிந்தார். நல்ல வாதத் திறமை கொண்ட பொன்னம்பலம் சிறந்த குற்றவியல் வழக்கறிஞராகப் புகழ் பெற்றார். 1948 ஆம் ஆண்டில் அரச வழக்கறிஞர் (முiபெ’ள ஊழரளெநட) என்னும் தகுதியைப் பெற்றுக்கொண்டார்.
1944, ஆகஸ்ட் 29 இல் இலங்கையில் தமிழர் நலன்களைப் பேணும் நோக்கில் அகில இலங்கைத் தமிழ்க் கொங்கிரஸ் என்னும் அரசியல் கட்சியை இவர் தொடக்கினார். இக்கால கட்டத்தில் இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பிரித்தானிய அரசினால் ஏற்படுத்தப்பட்ட சோல்பரி ஆணைக்குழு முன் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக சமபல பிரதிநிதித்துவ முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என வாதிட்டார். இதன் மூலம் பொதுவாக இலங்கை அரசியலிலும், சிறப்பாக இலங்கைத் தமிழர் அரசியலிலும் பெரும் செல்வாக்குப் பெற்றார். அக்காலத்தில் ஐம்பதுக்கு ஐம்பது என்று பரவலாக அறியப்பட்ட இச்சமபல பிரதிநிதித்துவக் கொள்கையை அடிப்படையில் 1947 இல் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றது.
1948 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்கப்பட்ட முதலாவது அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டதும், மலையகத் தமிழரின் பிரஜா உரிமை பற்றிய பிரச்சினைகளில் பொன்னம்பலத்தின் அணுகு முறைகளையும் ஏற்றுக்கொள்ளாத சில தலைவர்கள் கொங்கிரசிலிருந்து வெளியேறினர். இதனால் கட்சி பிளவுபட்டது. எனினும் பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் தொழில் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சுமார் ஐந்தாண்டு காலம் அமைச்சராகப் பதவியில் இருந்த இவர், பல பாரிய தொழிற்சாலைகளைத் தமிழர் பகுதிகளில் நிறுவினார். வடக்கில், காங்கேசன்துறையில் நிறுவப்பட்ட சீமெந்துத் தொழிற்சாலையும், வன்னிப் பகுதிக்கு அண்மையில் பரந்தன் என்னுமிடத்தில் நிறுவப்பட்ட இரசாயனத் தொழிற்சாலையும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கு அண்மையில் வாழைச்சேனையில் ஏற்படுத்தப்பட்ட காகித ஆலையும் இவற்றுள் முக்கியமானவை.
தமிழர்களின் எதிர்காலம் பற்றி மிகத்துல்லியமாக இவர் அறிந்திருந்தபோதிலும், பின்நாட்களில் தேர்தல்களின்போது இவருக்கு கிடைத்த தொடர் தோல்விகளும், இவரை மிகவும் பாதித்தது என்றே சொல்லவேண்டும்.


1970 இல் பதவிக்கு வந்த சிறி லங்கா சுதந்திரக் கட்சி அரசு பல தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தது. தமிழர் மிதவாதக் கட்சிகளின் தலைவர்கள் இனியும் பிரிந்து நின்று எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்தனர். தமிழரசு, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், மலையகத் தமிழர்களின் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும் சேர்த்துக்கொண்டு தமிழர் கூட்டணி என்னும் புதிய அமைப்பை உருவாக்கினர். இதன் தலைவர்களாக, எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், எஸ். தொண்டமான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இதன் மூலம் அரசியலில் இருந்து ஓரளவுக்கு ஒதுங்கி இருந்த பொன்னம்பலம் மீண்டும் அரசியலுக்கு வந்தார். எனினும் தீவிர அரசியல் இவர் நேரடியாக இறங்கவில்லை. தமிழர் கூட்டணியினர் தமிழீழம் என்னும் தனி நாட்டை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைத்துத் தீர்மானம் நிறைவேற்றினர்
அத்தீர்மானத்தை அச்சிட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கிய அமிர்தலிங்கம் முதலிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு ட்ரையல் அட் பார் எனப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணை நடத்த ஏற்பாடாகியது. செல்வநாயகம் தலைமையில் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் குழுவில் பொன்னம்பலம் பங்குபற்றி வாதாடினார். இதில் பொன்னம்பலத்தின் வாதத்திறமையினால் கூட்டணித் தலைவர்கள் விடுதலையாயினர். இவ் வழக்கின் மூலம் தமிழர் மத்தியில் பொன்னம்பலத்தின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்தது எனலாம்.
இவ் வழக்கில் ஏற்பட்ட புகழ் காரணமாகத் தமிழ்நாட்டில் மு. கருணாநிதி மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கொன்றிலும் கருணாநிதிக்காகப் பொன்னம்பலம் வாதாடினார். எனினும் வழக்கு முடியுமுன்னரே மலேசியாவில் 9, பெப்ரவரி மாதம் 1977 ஆம் ஆண்டு அவர் காலமானார்.
அவரது உடல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுக் கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபின்னர் யாழ்ப்பாணத்தில் அவரது சொந்த ஊரான அல்வாயில் மக்கள் திரளின் மத்தியில் எரியூட்டப்பட்டது.
50 ற்கு 50 என்ற ஒரு ஆழுத்தமான கொள்கையினை வலியுறுத்தியபோதிலும், சமயோசிதமில்லாத இவரது நடவடிக்கைகள் கட்சிக்குள் பிரிவினையை ஏற்படுத்தி உறுதியாக நிற்கமுடியாத நிலையொன்றினைத் தோற்றுவித்துவிட்டது.


அடுத்தவர், ஈழத்தமிழர்களின் வாழ்வில் மிக முக்கியமானவர், ஈழத்தமிழர்களால் தந்தை என்ற ஸ்தானம் கொடுத்து அழைக்கப்பட்டவர், ஈழத்து காந்தி என பாராட்டப்பட்டவர், சாமுவெல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் என்ற இயற்பெயர் கொண்ட தந்தை செல்வா அவர்கள்.
கொழும்பில் புகழ்பெற்ற வழக்கறிஞர்களுள் ஒருவர், பிரிட்டிஷ் இராணியின் வழக்கறிஞர் எனப் பட்டம் பெற்றவர், இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் திரு. ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் அழைப்பின்பேரில் கட்சியல் சேர்ந்து காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில் 1947 இல் பாராளுமன்ற உறுப்பினராகத் திரு. செல்வநாயகம் தேர்வாகி அரசியலில் நுழைந்தார்.
1948 மார்கழியில் இலங்கையின் மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தை அரசு, பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பொழுது திரு. செல்வநாயகம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து பிரிந்தார். குடியுரிமையைப் பறிக்கும் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தார். அவரும் திரு. வன்னியசிங்கமும் திரு. நாகநாதனும் பிறருமாக, 1948 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியை நிறுவினர். 1949 மார்கழி 19 ஆம் நாள், கொழும்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில்
"சிறியதான தமிழ் நாட்டினம் அழிந்து போகாமலும், பெரிதான சிங்கள நாட்டினத்தால் விழுங்கப்படாமலும் இருப்பதற்குரிய ஆகக் குறைந்த ஏற்பாடு கூட்டாட்சி அரசியலமைப்புத் தீர்வு எனத் தெரிவித்து பேசினார்.

1948 இலிருந்து 1976 வரையாக அவர் சார்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியினரும் இலங்கைத் தீவில் இரு இனங்களும் அமைதியாக வாழக் கூட்டாட்சி முறையில் அரசு ஏற்படுத்தப் பல வழிகளில் முயன்றார்கள். 1949 இலிருந்து 1976 வரை திரு. செல்வநாயகமும், அவர் சார்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியினரும் இலங்கைத் தீவில் இரு இனங்களும் அமைதியாக வாழக் கூட்டாட்சி முறையில் அரசு ஏற்படுத்தப் பல வழிகளில் முயன்றார்கள்.
1958 இன் பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தம், 1965 இன் டட்லி செல்வநாயகம் ஒப்பந்தம் என்பன, சிங்களவரும் தமிழரும் ஒரே ஆட்சியின் கீழ், கூட்டாட்சி அரசு அமைப்பதை நோக்கிச் செல்லும் படிக்கட்டுக்களே. எனினும், இந்த ஒப்பந்தங்களைச் சிங்கள அரசுகள் ஒரு தலைப்பட்சமாகக் கைவிட்டன.
1972 மே 22 ஆம் நாள் சிங்களவர் சேர்ந்து இயற்றிய புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. அந்த அரசியலமைப்பின் பிரதி ஒன்றை, 1972 மே 25 ஆம் நாள், யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையாரின் நாவலர் மண்டபத்தில் பலர் முன்னிலையில் திரு. செல்வநாயகம் தீயிட்டுக் கொளுத்தித் தமிழ் மக்கள் அந்த அரசியலமைப்பை ஏற்கவில்லை எனப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு வருமாறு சகல தமிழ் அரசியல் கட்சிகட்கும் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் வந்திருந்தன. அங்கு அவர்கள் தமிழர் கூட்டணி என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.
1972 அக்டோபர் 3 ஆம் நாள் தனது பாராளுமன்றப் பதவியைத் திரு .செல்வநாயகம் உதறித் தள்ளினார். விலகுமுன் அவர் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றினார்."....தமிழர் கூட்டணியின் தலைவர் என்ற வகையில் இச்சபையில் எனது உறுப்புரிமையை நான் துறந்து, எனது கொள்கையை முன்வைத்து நான் மீண்டும் போட்டியிடும் பொழுது, அரசாங்கம் தனது கொள்கையை முன்வைத்து என்னோடு போட்டியிட வேண்டும் என்று கேட்கிறேன்' அத்தேர்தல் முடிவு தமிழ் மக்களது தீர்ப்பாகவே இருக்கும்.
"....தமது வருங்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை தமிழர்களுக்கு வேண்டும் என்பதே எனது கொள்கையாக இருக்கும். விடுதலை பெற்ற மக்களாக வாழவேண்டும் என்ற கொள்கைக்கு வாக்களிக்குமாறு மக்களை நான் கேட்பேன்.'
1972 இல் இடைத் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்திய அரசு 1975 பெப்ரவரி 6 ஆம் நாள் தேர்தலை நடத்தியது. அத்தேர்தலில் திரு. செல்வநாயகம் மிக அதிகமான வாக்குகளால் வெற்றி பெற்றார். பாராளுமன்றம் சென்றார். தமிழர்களின் விடுதலை முயற்சியை அங்கு அறிவித்தார். 1976 பெப்ரவரி 4 ஆம் நாள் "தமிழீழம் விடுதலைபெற்ற இறைமையுடைய நாடாகப்' பாராளுமன்றம் ஏற்றுக் கொள்கிறது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்."....இடைத் தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை விடுதலைபெற்ற இறைமையுடைய மதச்சார்பற்ற சமதர்ம நாடான தமிழீழத்தை அமைப்பதற்குரிய ஆற்றலுரிமையாக ஏற்றுக்கொள்வதென இப்பேரவை தீர்மானிக்கிறது'. இத்தீர்மானம் இலங்கைப் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.


1976 மே 14 ஆம் நாள் தமிழர் கூட்டணி தனது பெயரைத் தமிழர் விடுதலைக் கூட்டணி என மாற்றிக் கொண்டது. திரு. செல்வநாயகம், திரு. பொன்னம்பலம், திரு. தொண்டமான் ஆகிய மூவரையும் கூட்டுத் தலைவர்களாகத் தெரிவு செய்தது.
அந்நாளில் வட்டுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் இறைமையும் தன்னாட்சியும் சுதந்திரமும் உடைய சுதந்திர நாடாகத் தன்னைத் தமிழீழம் அமைத்துக்கொள்ளும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். தனது வாழ்நாளில் இறுதிவரை செல்வநாயகம் எந்த அரசுப் பதவியையும் வகிக்கவில்லை. எந்தத் தனிப்பட்ட சலுகையையும் பெறவில்லை. செல்வந்தராக அரசியலில் நுழைந்த அவர், சில காலங்கள் தனது செலவுக்குக் கூடச் சக பாராளுமன்ற உறுப்பினர்களின் நன்கொடையை எதிர்பார்த்து வாழவேண்டி வந்தது.
1949 இல் இரு வழிகளைப் பற்றிக் கூறிய அவர், 1972 வரை கூட்டாட்சி அரசியலமைப்பைச் சிங்களவர் ஏற்றுக்கொள்ளப் பலவாறு முயன்று தோல்வியடைந்தார். அந்த வழியில் சென்று உரிமை பெறாத மக்கள், மற்ற வழியில் செல்லும் காலம் வந்துவிட்டதை உணர்ந்து அதற்காகத் தமிழ் மக்களைப் படிப்படியாக 1972 இல் இருந்தே தயார் செய்து 1976 இல் தீர்மானமாகக் கொண்டுவந்தார்.
தனது 30 ஆண்டுகால அரசியல் வாழ்வில் பல அரசியல் போராட்டங்களை நடத்தினார். அவை அனைத்தும் அறவழிப் போராட்டங்களாகவே அமைந்தன. அவரின் நேர்மையும் உறுதிகுன்றாக் கொள்கைத் தெளிவும் தமிழ்மக்களைக் கவர்ந்தன. அதனால், அவர்கள் அவரைத் தந்தை செல்வநாயகம் என அழைத்தனர். அவர் காட்டிய வழிகளைச் சரியான வழிகள் எனக் கைக்கொண்டனர்.
அவர் சமயத்தால் கிறிஸ்தவரானாலும், சைவர்களான பெரும்பான்மையான தமிழர்கள் அவர் தலைமையை ஏற்று அவர் நடத்திய போராட்டங்களுக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர்.
"தமிழீழம் அமைப்பது வில்லங்கமான ஒரு காரியம்' என்று அவர் கூறினார். எனினும், அதைத் தவிர வேறுவழிகள் மூலம் தமிழ் மக்கள் அடிமைத் தளையை அகற்ற முடியாது என அவர் திரும்பத் திரும்பக் கூறினார்.
(உசாத்துணை -50 க்கு 50, தந்தை செல்வா தந்த கொள்கை, விக்கிபீடியா)
அடுத்த பதிவில் இஸ்ரேலின் உதயம்….
தொடரும்…

7 comments:

Anonymous said...

Thanks for this Article Anna. Thank you very much –J. Sowmiya (Canada)

கவிஞர் எதுகைமோனையான் said...

வெக்கத்தை விட்டுச்சொல்கின்றேன். மெய்யாலுமே நான் கூட இலங்கை சுதந்திரமடைந்தபோது சேர்.பொன்.இராமநாதன் உயிருடன் இருந்தார் என்றே நினைத்துக்கொண்டிருக்கின்றேன்.

Navam said...

சிறந்த முயற்சி, அருமையான தேர்ந்த எழுத்தாளர்களுக்குரிய வசனநடை, மிகப்பொறுப்பான பதிவுகள்...தொடருங்கள் வாழ்த்துக்கள்.

விஷ்வா said...

எனது மின்னஞ்சலினையும் ஏற்று யூதர்கள் - தமிழர்கள் என்ற இந்த தொடரில் தமிழ்தலைவர்கள் பற்றி அறிமுகம் தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். இந்த தொடருக்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் சிரத்தை எனக்கு புரிகின்றது.
மீண்டும் மீண்டும் எனது நன்றிகள்.

Anonymous said...

Unnmail Thanthai Selva Thannalam illaatha oru thalaivar, Tamilarkalukkaaka mudinthamaddum than vazhila poraadinaar. Iruthyil tamilarkalai Aandavan thaan kaappaadra veendum ena Veethanaikaludaneye Iranthaar.(mannikkavum enakku Tamil thaddachcu Theriyaathu)- Mukilan

Parthy said...

பிரியோசனமான மிக நல்ல பதிவு

தங்கதுரை said...

தமிழ்நாட்டில் பெரியாரும், அண்ணாவும் பட்ட கஸ்டங்களும் சிந்தனைகளும். அதன்பின்னர் வந்து இன்றும் இருக்கும் வீணாப்போனவர்களால் வீணாகப்போனதுபோல், தந்தை செல்வாவும் அதன்பின்னர் ஆயுதப்போராளிகளின் தியாகங்களும், இலட்சியங்களும் வீணாகிப்போய்விடக்கூடாது. சிறந்ததொரு பதிவு, பாராட்டப்படவேண்டிய எழுத்தாளர் நீங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails