Thursday, September 3, 2009

திடீரென இலங்கையில் காட்சி கொடுக்கும் தெய்வங்கள்!


ஒரு பிரளயமே இடம்பெற்று முடிந்துள்ள இந்த நேரத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தெய்வங்கள் பரவலாக காட்சி கொடுப்பதாகவும் செலவுக்கு பணம் கூட கொடுப்பதாகவும் செய்திகள் வெளியாகி அந்த செய்திகள் பேச்சுவழக்கில் இன்றி ஊடகங்களிலும் இணைய தளங்களிலும் உலாவந்துகொண்டிருப்பது சிரிப்பதா? அழுவதா? என்ற நிலையினை தோற்றுவித்துள்ளது.
கடவுளே எங்களைக்காப்பாற்று என்று தொழுதுநின்ற மக்கள் சதை பிண்டங்களாக சிதறி செத்தபோதும், மொத்த உலகமே கைவிட்ட நிலையில் கடவுளே துணை என்று ஒரு இனமே அழுதுநின்றபோதும் காக்கமறந்த இந்த தெய்வங்கள், இப்போது மட்டும் பிணம் தின்னவா இறங்கிவருகின்றன? தற்போது வந்து காட்சிகள் வேறு கொடுக்கின்றனவா?

கடவுள் மற்றும் அமானுச சக்திகள் பற்றிய செய்திகள் மிகச்சுவாரசியமானவை என்பதுடன் பலராலும் ஆர்வத்துடன் கேட்கப்பட்டு அதன் பின்னர் அந்த கதைகள் காதுகள், மூக்குகள் என சொல்பவர்கள் ஒவ்வொருவராலும் வைக்கப்பட்டு பூதாகரமான ஒரு செய்தியாகவே மெருகேறிவருகின்றன. நான் யாழ்ப்பாணத்தில் எமது முன்னோருக்கு நடந்த இத்தகைய அமானுச சத்திகள், மற்றும் கடவுள்கள் சம்பந்தப்பட்ட கதைகள் அப்படியே இந்தியக்கிராமங்களிலும் நடந்துள்ளதாக அறிந்துள்ளேன். இதில் இருந்தே இந்த கதைகளின் உண்மைத்தன்மைகளை நாம் அறிந்துகொள்ளலாம். அது எப்படி தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள், அதேபோல நடக்கமுடியும்?


2004ஆம் ஆண்டு சபரிமலைக்கு சென்ற அடியவர்கள் கூட்டத்தில் இருந்து காட்டுவழியே பயணிக்கும்போது ஒரு அடியவர் தனிமைப்பட்டுவிட்டாராம், அவருக்கு தகிக்கமுடியாத தண்ணீர்தாகமும், களைப்பும் எற்பட்டவேளை அவருக்கு ஐயப்பன் காட்சிகொடுத்து அவருக்கு நீராகரம் கொடுத்து, ஒரு பணமுடிப்பும் கொடுத்ததாக அப்போது சில செய்திகள் வந்திருந்தன. இது நடந்து ஐந்து வருடங்களின் பின்னர் அதேபாணியில் கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொண்டிருந்த பெண் ஒருவருக்கு முருகன் காட்சி கொடுத்து பணமுடிப்பு ஒன்றை கொடுத்திருக்கின்றாராம்.
அதுவும் இலங்கை மத்திய வங்கியினால் அச்சடிக்கப்பட்ட ஐந்து (ஆயிரம் ரூபா) தாள்கள்!

அடுத்தது வெள்ளவத்தையில் இருந்து முதற்தடவையாக மட்டக்களப்பிற்கு சென்ற ஒரு பெண், புனைச்சோலை அம்மன் ஆலயத்திற்கு சென்றாராம் ஆலயத்திற்கு அருகில் அவர் பிடித்த புகைப்படத்தில் வானில் ஒரு உருவம் தோன்றுவதுபோல படம் வந்துள்ளதாகவும், அந்தப்படம் நிச்சயமாக புனைச்சோலை அம்பாளுடையதுதான் என்று தெரிவித்து இலங்கையின் முன்னணி பத்திரிகை ஒன்றிலேயே செய்தி வெளியாகியுள்ளது, பல இணையத்தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் இது குறித்து பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.


சாதாரணமாகவே நீங்கள் ஒரு சுற்றுலாவுக்கோ அல்லது வேறு எங்கோ செல்லும்போது பல படங்களை எடுக்கும்போது ஏதாவது ஒருபடத்தில் சற்றுவித்தியாசமான தோற்றங்கள் தென்படுவது இயல்புதான். புகைப்பட கமராவை கிளிக் செய்யமுதல் அதில் பதிவான காட்சிகள் சில ஒளிமுறிப்பு விதிகளுக்கு அமைய சட்டென எடுக்கப்படும் படத்தில் தென்பட்டுவிடுவது இயற்கையானதே.
இவ்வாறான படங்கள்; பல, வானத்தில் பறக்கும் தட்டுக்கள் தோன்வதுபோல உள்ளது என மேலை நாடுகளில் தெரிவிக்கப்பட்டபோது விஞ்ஞான ரீதியாகவே ஆராயப்பட்டு ஒளிமுறிப்பு என்ற காரணம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற அனுபவங்கள் எனது சொந்த புகைப்படப்பிடிப்பு அனுபவத்திலேயே நடந்துள்ளது.

கடவுள் இருக்கின்றார், இல்லை என்ற வாதத்திற்கு நான் வரவில்லை. அனால் கடவுள் இருக்கின்றார் என்ற நம்பிக்கை எமது பகுத்தறிவு கண்களை மூடிவிடும் அளவுக்கு இருக்கக்கூடாது என்பதையே சொல்லவருகின்றேன். இந்த வகையில் ஊடகங்கள் இவ்வாறான மனித சக்திக்கு அப்பாற்பட்ட விடங்கள் என மற்றவர்கள் சொல்வதைப்பற்றி ஆராயாது வெறும் சொல்பவர்களின் பேச்சுக்களை வைத்து இவற்றை செய்திகளாக்கி சுவாரகசியங்களை கூட்டுவது ஆரோக்கியமான விடயமாக இருக்காது. இந்த ரீதியான செய்திகளில் ஊடகங்கள் பகுத்தறிவுடனும், ஆராய்வு ரீதியாகவுமே செய்திகளை வெளியிடவேண்டுமே தவிர, பாமர மக்கள்போல கண்களைமூடிக்கொண்டு காவடி எடுக்காதகுறையாக செய்திகளை வெளியிடக்கூடாது. இவ்வாறான செய்திகளை எவ்வாறு கையாளவேண்டும் என்ற ஊடக தர்மம் ஒன்று உள்ளது.

கதைகளை பரப்புபவர்கள், அதை ஊதிப்பெருப்பிப்பவர்கள் காலத்திற்கு காலம், தெய்வங்கள், ஆவி, பேய், போன்றவற்றை வைத்து பலதரப்பட்ட கதைகளை அடுக்கிக்கொண்டே இருப்பார்கள். கேட்பதற்கும் அவை சுவாரகசியமாகவே இருக்கும். ஆனால் நாம்தான் பகுத்தறிவுக்கண்ணோடு அவற்றை நோக்கவேண்டும்.

8 comments:

Unknown said...

சரியாகச்சொன்னீர்கள். எமது பகுத்தறிவை கழற்றி வைத்துவிட்டு எந்த விடயத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது (அது கடவுளேதான் என்றாலும் கூட)

பரா said...

உலகமே கைவிட்ட நிலையில் கடவுளே துணை என்று ஒரு இனமே அழுதுநின்றபோதும் காக்கமறந்த இந்த தெய்வங்கள், இப்போது மட்டும் பிணம் தின்னவா இறங்கிவருகின்றன?சிந்திக்கவும் வேதனைப்படவும் வைத்த கேள்வி இது.

Pradeep said...

பகுத்தறிவு செத்துப்போன ஒரு இனம் ஒருபோதும் முன்னேறமுடியாது. எனக்கென்னமோ கடவுள் பெயர்களைச்சொல்லி எவர்கள் தமிழ்நாட்டு தமிழர்களை எமாற்றி அடிமைகள் ஆக்கினார்களோ, அவர்களின் வேலைகள் இப்போது இலங்கையிலும் ஆரம்பித்துவிட்டதாகவே தோன்றுகின்றது.

Unknown said...

உண்மைகளை சொன்னோமுன்னா நம்மளை நாஸ்திகர் என்றாங்கப்பா...

நிரூபன் said...

இப்படி எல்லாம் பேசாதிங்கப்பா! சாமிக்குத்தமாகப்போகுது!!

திறனாளன் said...

"எப்பொருள் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் கான்ப தறிவு" அதுதான் வள்ளுவரே சொல்லியிருக்காரே பகுத்தறிவால் அது உண்மையாக இருக்குமா? என ஆராயச்சொல்லி. நம்ம ஆட்கள் ஆராய்வார்களா? பெரியாரும் அண்ணாவும் படித்துப்படித்து சொல்லியும் காமகோடிகளின் காமவிளையாட்டுக்கள் பார்ப்பவர்களல்லவா எம் சமுதாயத்தினர்.

Anonymous said...

HOW ABOUT CNN SHOWS ABOUT MICHEL JACTIONS GHOST DURING LARRY KING INTERVIEW ON 3.JULY.2009

EDITOR YOU MEAN CNN IS NOT A MEDIA?

smilzz said...

Ok Jana, let this news be just a story, but what about this "http://janavin.blogspot.com/2011/07/blog-post.html" .
Whether this post is real or just a story?

LinkWithin

Related Posts with Thumbnails