Saturday, November 14, 2009

உபாலியின் விமானவிபத்தும், தொடரும் மர்மமும்!!


சிறி லங்கா என்ற பெயரினை உலகம்முழுவதும் முதன்முறையாக உச்சரித்த தினம், 1983ஆம் ஆண்டு பெப்ரவரிமாதம் 13ஆம் திகதி.
அன்றைய தினம்தான் மலேசியாவில் இருந்து, தனது சொந்த லியர்ஜெட் விமானத்தில் கொழும்புநோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கையின் மாபெரும் வர்த்தக காந்தமாக திகழ்ந்த, உபாலி விஜேவத்தன அவர்கள் விமான விபத்தில் இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.
இந்த சம்பவம் இலங்கையில் மட்டும் இன்றி உலகம்பூராகவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இருந்தபோதிலும், அந்த விமானத்தில் இருந்து அவரது உடல் கண்டு எடுக்கப்படவில்லை. இது இலங்கை மக்களிடையே பெரும் பரபரப்பையும் சர்ச்சையினையும் ஏற்படுத்தியிருந்தது. இன்றுவரை உபாலிக்கு என்ன நடந்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக பலரும் பேசிக்கொள்வதை அறியக்கூடியதாகவே உள்ளது. உண்மையில் அந்த விமானத்தில் உபாலி பயணம் செய்தாரா? அப்படி என்றால் அவரது உடல் ஏன் கண்டுபிடிக்கமுடியாமல்போனது போன்ற பல கேள்விகளுக்கு விடை இன்றும் மர்மமாகவே உள்ளது.

கோலாலம்பூரில் இருந்து கொழும்பு நோக்கி வந்த அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் கொழும்பை வந்தடையவில்லை என்றதும், அனைவருக்கும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. விமான கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து குறித்த லியர்ஜெட் விமானத்திற்கான தொடர்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், குறித்த விமானம் ஏதோ ஒரு அசம்பாவிதத்தில் மாட்டிக்கொண்டுவிட்டதை அதிகாரிகள் உணர்ந்து கொண்டார்கள்.
இந்த நேரத்தில் இந்தோனேசியாவின் “மெடன்” என்ற கடற்பிரதேசத்தில் இந்த விமானத்தின் சக்கரம் ஒன்று மீனவர்களால் அடையாளம் காணப்பட்டு, இந்தோனேசிய காவற்துறையினருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பணிப்பின்பேரில், அமைச்சராக இருந்த லலித் அத்துலக்முதலியும், டொக்ரர் ரத்வத்தையும், உடனடியாக இந்தோனேசியா விரைந்து இந்தோனேசிய ஜனாதிபதியினை விமானத்தை மீட்க உதவி வழங்கக்கோரிக்கை விடுத்தனர்.
அதன் பிரகாரம் இந்தோனேசிய அரசாங்கத்தின் பணிப்பின்பேரில் உடனடித்தேடுதல் நடவடிக்கையில் விமானம் கடலினுள் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டது.
ஆனால் அந்த விமானத்திலோ அருகில் உள்ள இடங்களிலோ உபாலி விஜேவத்தனவின் உடல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் உபாலியின் குடும்பத்தினரும், அவரின் சகோதரிகள் இருவரும் உபாலி உயிருடன்தான் உள்ளதாக நம்பிக்கை வெளியிட்டு, அவர் எந்தவித அசம்பாவிதங்களையும் சந்திக்காமல் வீடு திரும்ப வேண்டும் என சர்வமத பிரார்த்தனைகளில் ஈடுபட்டுவந்தனர்.

உபாலி விஜேவத்தன குறுகிய காலகட்டம் ஒன்றினுள், வர்த்தகத்தில் உச்சத்திற்கு சென்றவர் என்பதுடன், இலங்கையில் மறக்கமுடியாத ஒரு நபராகவும் உருவெடுத்துக்கொண்டவர்.
“உபாலி குரூப்” என்ற அவரது வர்த்தக நிறுவனம், குறுகிய காலத்தில் இலங்கையில் புகழ்பெற்று, முன்னணியில் நின்றது.
1938ஆம் ஆண்டு பிறந்த உபாலி விஜேவர்த்தன இரண்டு மூத்த சகோதரிகளின் பின்னர் பிறந்தவராவார். இவர் தனது 1,1/2 வயதில் தனது தந்தையாரை இழந்து,
தயாரான அனுல கல்யாணவதி விஜேவர்த்தனவின் பாரமரிப்பில் வளர்ந்துவந்தார். தனது கல்வியை கொழும்பு ரோயல் கல்லூரியில் கற்றுவந்த இவர், தனது உயர் கல்வியை இங்கிலாந்து சென்று கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியிருந்தார்.

நாடுதிரும்பியதும், இலங்கையில் லீவர் பிரதர்ஸ் நிறுவனத்தில் முகாமைத்துவ உதவியாராக பணியில் அமர்ந்தார். அதன் பின்னர் தனது சொந்த நிறுவனமாக உபாலி குரூப் நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனத்தின் இலட்சினையாக சூரியனை தெரிவு செய்துகொண்டார்.
பத்திரிகை, சொக்லட்வகைகள், அத்தியாவசியபொருட்கள், என அவரது நிறுவனம் தனது விஸ்தரிப்பினை இட்டுக்கொண்டு சென்றது.
அத்தோடு குதிரை பந்தயத்தை இலங்கையில் சூடுபிடிக்க வைத்த பெருமையும் இவரையே சாரும்.

குறுகிய காலத்தில் தொட்டதெல்லாம் வெற்றி பெற்ற நிலையில், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உள்நாட்டு விமானசேவை நிறுவனமாக உபாலி எயார் என்ற நிறுவதன்தை ஆரம்பித்தார். இது இலங்கை வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். 70 களின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட இந்த விமானசேவையில் 20 ஆசனங்கள் கொண்ட இரண்டு விமானங்களை முதல்முறையாக உள்நாட்டு விமானசேவைக்காக இறக்குமதி செய்து உள்நாட்டு விமான பயணசேவையினை அரம்பித்துவைத்தார்.

இலங்கையில் சுதந்திர வர்த்தக மையம் அமைப்பதில் முக்கியமான பங்கு உபாலிக்கு உண்டு. இலங்கை சுதந்திர வர்த்தக மையங்களை அமைத்து நாட்டின் உற்பத்தினையும், வேலைவாய்ப்பினையும், அன்னியச்செலவாணியினையும் பெற்றுக்கொள்ள, நாட்டினை அபிவிருத்தி செய்ய இவ்வாறான வர்த்தக மையங்கள் அவசியம் என்ற கருத்தில் ஆணித்தரமாக நின்று உழைத்தவர்.

முக்கியமாக சொல்லப்படவேண்டிய விடயம் என்வென்றால் இவரது “உபாலி குரூப்” நிறுவனத்தின் முக்கிய பதவிகளில் தமிழர்களே இருந்துவந்தார்கள். இது தொடர்பாக மூத்த தமிழ் ஊடகவிலாளர் ஒருவர் தமது உபாலி பற்றிய நினைவுக்குறிப்பில். தான் அவரை செவ்விகண்டபோது, தற்போது இலங்கையில் சிறுபான்மையினர் தமிழர்கள் என்றுகூறி பல்துறையிலும் ஒதுக்கப்படுகின்றார்ளே என வினவியபோது, உபாலி விஜேவத்தன சிரித்துக்கொண்டே,
இந்த நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் ராஜூ குமாரசாமி உள்ளார், நிதிச்செயலாளராக சாந்தி சண்முகம் உள்ளார், மேலாளராக ஞானம் உள்ளார்,
சிங்கப்பூருக்கான எமது தூதுவராக சி.ஞானசிங்கம் உள்ளார். இங்கே உண்மையில் நான்தான் சிறுபான்மையினன் என்று சிரித்துக்கொண்டே பதிலளித்திருந்தாராம்.
இது தவிர யாழ்ப்பாத்தவர்களுக்கு தனி மரியாதையே கொடுத்து வந்தாராம் உபாலி என தெரிவித்துள்ளார்.

1975 ஆம் ஆண்டு லக்மனி ரத்தவத்தை என்ற பெண்ணை கரம்பிடித்த உபாலிக்கு, குழந்தைகள் இல்லை. இவரது விமான விபத்தின் பின்னர் 12 வருடங்கள் கடந்து லக்மனி, நிமல் வெல்கம என்பவரை மணம்புரிந்துகொண்டார்.
உபாலியின் சொத்துக்கள் தொடர்பாக கொழும்பு நீதிமன்றத்தில் வழக்குகள் இடம்பெற்றன.
உபாலிக்கு சொந்தமான பல நிறுவனங்களை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என உபாலியின் சகோதரிகளுக்கும், லக்மனிக்கும் இடையில் வழக்குகள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

எது எப்படியோ 26 வருடங்கள் கடந்தோடிவிட்டபோதிலும்கூட உபாலி பயணம் செய்த விமான விபத்தின் உள்ள மர்மம் கலையாத இருட்டாக தொடர்ந்தும் நீடித்துக்கொண்டே உள்ளது.

7 comments:

சயந்தன் said...

சம்பவம் பற்றி மேலோட்டமாக கேள்விப்ப்பட்டிருக்கின்றேன். அனால் விரிவான விடயங்கள் தெரியமுடியவில்லை.
ஆனால் இன்று உபாலி, விமானவிபத்து பற்றி விரிவாக அறிந்துகொண்டேன். பதிவுக்கு நன்றி அண்ணா.

Unknown said...

மீண்டும் ஒரு தேவையான, அறியவேண்டிய சிறந்த ஒரு பதிவு. பதிவுக்கு நன்றிகள்.

தங்க முகுந்தன் said...

Upali Wijewardene - உபாலி விஜேவர்த்தனா - நினைவு கூரப்படுவபர்கள் எதிர்க் கொள்கையாளராக இருப்பினும் அவர்களுடைய பெயரைச் சரியாகக் குறிப்பிட வேண்டும் என்பதற்காக இந்தத் திருத்தம். மன்னிக்கவும்!
இலங்கை வரலாற்றில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த இவரை சதிசெய்து கொன்றார்களா என்ற ஒரு சந்தேகமும் இருக்கிறது!

இந்தியாவில் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடைய மர்மம்தான் இங்கு இவரது மர்மத்திலும்!

சரிதானே ஜனா?

என்.கே.அஷோக்பரன் said...

நல்ல பதிவு.
இலங்கையின் அம்பானி என்று கூட உபாலி விஜேவர்தனவைக் குறிப்பிடலாம்.

அவரது சாதனைகளை எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள் - நன்று - அவற்றோடு உபாலி ஃபியட் கார் தயாரிப்பையும் சேர்த்திருக்கலாம்.

நல்ல பதிவு!

டிலான் said...

அறியவேண்டும் என பலமுறை ஆவலாக நான் தேடிய ஒரு விடயம். உபாலி பற்றி பல தடவைகள் நான் சிறுவனாக இருக்கும்போது
பெரியவர்கள் பேசிக்கொள்வதை கேட்டிருக்கின்றேன். பரவாய் இல்லை தற்போது உங்கள் இந்த பதிவுமூலம் அறிந்துகொள்ளமுடிந்துள்ளது.
பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா.

Unknown said...

ரோஹன, உபாலி என சிங்கள மக்களே மறந்துகொண்டு செல்லும் முக்கியமானவர்களைப்பற்றி ஒரு தமிழானாக இருந்துகொண்டு, அதுவும் தமிழ் உணர்வாளனாக இருந்துகொண்டு நீங்கள், அவர்களின் சிறப்புக்கள் பற்றியும் பதிவிடுவது. உண்மையில் ஆச்சரியமாகவும், மெச்சத்தக்கதாகவும் உள்ளது. இதற்காகவே நீங்கள் பாராட்டப்படவேண்டியவர் ஜனா.

tamilan said...

உங்கள் பதிவுகளை http://www.nilamuttram.com/ எனும் இணையத்தளத்திலும் பதிவு இட்டு எங்கள் முயற்சிக்கு கைகொடுக்கவும்

LinkWithin

Related Posts with Thumbnails